தஞ்சாவூருக்கு அருகில், மன்னார்குடிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த ஊர்.. எப்போது இதைப்பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டேன்? என் 17, 18 வயதுகளில் ஜெயகாந்தனுக்குள் நுழைந்திருந்தேன், தற்செயலாக. ’வாழ்க்கை அழைக்கிறது’ வாசித்தபின், என்னது.. வாழ்க்கை குழப்புகிறதே என்றிருந்தது நினைவில் வருகிறது. மேலும் அவ்வப்போது தேடி கதைகளைப் படிக்கையில், தமிழின் நல்ல எழுத்துக்கள் அகஸ்த்மாஸ்தாக என் மீது மோதியிருக்கின்றன. தரமான எழுத்து என்றெல்லாம், இலக்கியவாதிகள், இலக்கிய வாசகர்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதுபற்றிய ப்ரக்ஞை சில வருடங்களிலேயே உருவாகிவிட்டிருந்தது என் அதிர்ஷ்டம். 19-ஆம் நூற்றாண்டு வரை பாடிப்பாடியே பொழுதை ஓட்டிக்கொண்டிருந்த தமிழ் பாஷையில், உரைநடை, நாவல் என்பதெல்லாம் எப்போது பிரவேசித்தன என்று எங்கோ படித்துக்கொண்டிருந்தேன். எதிர்வந்தார், வடுவூர் துரைசாமி ஐயங்கார்! யாருடா இது-ன்னு மேலும் கொஞ்சம் படிக்கையில், நாவல் என்கிற வகைமையை தமிழுக்குள் பிரவேசிக்கவைத்த எழுத்தாளர்களுள் ஒருவர் எனத் தெரியவந்தது – அதிலும் துப்பறியும் நாவல்கள்!

ஐயங்காரைப்பற்றி மேலோட்டமாக அப்போது கேள்விப்பட்டதோடு சரி. அதன் பின் அவர் நினைவிலில்லை. புத்தக ரூபத்தில் எதிர்வரவும் இல்லை. இப்போது சில மாதங்களுக்கு முன், இலக்கிய முன்னோடிகள் பற்றி, கொஞ்சம் எழுதலாம் என ஆரம்பித்தேன். எழுத்து ஓடிக்கொண்டிருக்கையில், புதுமைப்பித்தன், கு.ப.ரா., சி.சு.செல்லப்பா, க.நா.சு. மௌனி என்று கதைகள் நகர்ந்தன. நூலுக்கென, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் உரைநடை வெளி என ஆராய்கையில், எதிரில் வந்தார் வடுவூரார்! ஐயங்காரின் அழகிய நடையில், ஜனரஞ்சக நாவல்கள். கொஞ்சம் வாசித்துப் பார்த்தேன். தமிழ் நாவலின் தோற்றம், வளர்ச்சியில் வடுவூராரின் பங்களிப்பு சரியாக கணிக்கப்படாததுபற்றி க.நா.சு. தனது நூல் ஒன்றில் ஆதங்கப்பட்டதையும் பார்க்க நேர்ந்தது. சரி, ஐயாவையும் சேர்த்திடவேண்டியதுதான் என முடிவு செய்தது மனம். காலக் கிரமப்படி வரிசை வருவதால், வடுவூரார் முதல் இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டார். பெரியவர். அமர்ந்திருக்கட்டும்!
அமேஸானில் வெளிவந்திருக்கும் அடியேனின் புதிய மின்னூல்: ‘தமிழ் இலக்கிய முன்னோடிகள்’. வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், வ.வே.சு ஐயர், கு.ப. ராஜகோபாலன் எனத் தொடங்கி கதை வேகமாகப் பாய்கிறது. ராஜம் கிருஷ்ணன், ஜி. நாகராஜன், சார்வாகன் என வந்து நிற்கிறது இந்தப் புத்தகத்தில். இலக்கியகர்த்தாக்களைப்பற்றிக் கொஞ்சம் எழுதி, அவர்களது படைப்புகள், வாழ்ந்த காலத்தின் கூறுகள் என மேலும் ரஸமாகக் கொண்டுசெல்ல முயற்சித்திருக்கிறேன்.
.அன்ப, அன்பிகள் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு வாசித்துப்பாருங்களேன் ! அமேஸான் கிண்டில் எடிஷன். நூலை வாசிப்பதற்கு உங்களுக்கு அமேஸான் தளத்தில் ஒரு சாதாரண அக்கவுண்ட், கிண்டில் ரீடர் செயலி (லேப்டாப், டேப்லட், மொபைலில் வாசிக்க) அவசியம். (‘Free Kindle App’ downloadable from amazon.in or amazon.com etc) .
மின்னூலை, அமேஸான் தளத்தில் இந்த ‘லிங்க்’கில் கண்டு, வாசியுங்கள்:
ASIN: B095N4Q48P
– ஏ கா ந் த ன்