இருட்டான விபத்தொன்றில்.. சிறு வெளிச்சம்

அதிகாலையின் டெல்லி – ரூர்கி நெடுஞ்சாலை. இருட்டை விரட்டிக்கொண்டு சீறிய மெர்சிடிஸ் திடீரென தடமிழந்து சாலையின் டிவைடரில் மோதி, இம்பாக்ட்டில் தாறுமாறாகத் திரும்பி உருண்டு உருண்டு 200மீ வரை சென்று நிற்கிறது. பற்றி எரிய ஆரம்பிக்கிறது.  

தீப்பற்றி எரியும் காரில்..

உடம்பெல்லாம் காயம். தீக்காயம். முகத்திலும் ரத்தமாய் விபத்தாளி ஜன்னல்வழி போராடி, பாதி வெளிவந்த நிலை. எதிரில் வந்த பஸ் க்ரீச்சிட்டு  நின்றது. நிறுத்திய டிரைவர் குதிக்கிறார். ஓடி வருகிறார். விபத்தாளியை வெளியே இழுத்து ஆபத்பாந்தவனாகிறார்.

கண்டக்டர், மற்றவர்களோடு சேர்ந்து ஆம்புலன்ஸையும் கூப்பிட்டுவிட்டார்.

வந்தது.

ஏற்றப்பட்டார். முதலுதவிகள்.

ஆம்புலன்ஸின் ஃபார்மஸிஸ்டிடம் விபத்தாளி:

வலி தாங்கமுடியவில்லை. முதலில் ஒரு பெய்ன் கில்லர் இஞ்செக்‌ஷன் கொடுத்துவிடுங்கள்.

கொடுக்கப்பட்டது.

அவசரமாக என்னை ஒரு ப்ரைவேட் ஆஸ்பத்திரியில் தயவுசெய்து சேர்த்துவிடுங்கள்.

ஆம்புலன்ஸில் செல்கையில், விபத்தாளியைக் கேட்கிறார் ஃபார்மஸிஸ்ட்:

யாருக்காவது ஃபோன் செய்யவேண்டுமா? நம்பர் சொல்லமுடியுமா?

மொபைல் நம்பர் ஏதும் ஞாபகம் இல்லை. ம்ஹ்ம்…அ.. அம்மாவின் நம்பர் ஞாபகத்திலிருக்கிறது.

சொன்னார்.

நம்பர் அழைக்கப்பட்டது.

அந்த அதிகாலையில் ஸ்விட்ச் ஆஃபில் மொபைல் இருந்தது தெரியவந்தது.

மேலும் சோர்வு.

இவ்வளவு தூரத்தை (200 கி.மீ.க்கும் மேல்) கடக்க, ஏன் தனியாக காரை ஓட்டி வந்தீர்கள்? கூட யாராவது இருந்திருக்கலாமே – ஃபார்மஸிஸ்ட்.

மெர்சிடிஸை நானே ஓட்ட வெகுநாளாய் ஆசை.. வாய்ப்பே கிடைத்ததில்லை. அதனால்தான்..

விபத்து எப்படி நடந்தது ?

நினைவுக்கு வரவில்லை. அசந்துவிட்டேன்.. தூங்கிவிட்டேன்போல. விழிக்கையில் சுற்றிலும் ஒரே காந்தல்.. நெருப்பு! உடம்பில் தாங்கமுடியா எரிச்சல், வலி…

ஆம்புலன்ஸில் ஏற்றப்படுமுன், காலத்தால் செய்த உதவியோடு நின்ற ஹரியானா அரசு பஸ் டிரைவருக்கு, இந்த பயங்கர விபத்தில் சிக்கிய இந்த ஆள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. கேட்கிறார்:

ஆப் கௌன் ஹோ? நாம் க்யா ஹை? (யார் நீங்கள்? பெயரென்ன?)

ரிஷப் பந்த். இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவன்.

பஸ் டிரைவர் கிரிக்கெட்டெல்லாம் பார்ப்பவரல்ல. புரியவில்லை.

அதற்குள் ஓடிவந்து எட்டிப்பார்த்த பஸ் பயணிகளில் சிலர் :

ஆ.. ஏ (த்)தோ ரிஷப் பந்த் ஹை! கிரிக்கெட் ப்ளேயர்!

**

மேலே: உதவிய பஸ் டிரைவர் சுஷில் குமார்

பிகு: எரிந்து சாம்பலான மெர்சிடிஸ் காரின் படத்தை மீடியாவில், வீடியோவில் பார்க்கையில் இதில் பயணித்தவர் பிழைத்துவிட்டாரா ..அதிர்ச்சியில் ஆச்சர்யப்படுகிறது மனது. முகத்தில் கட்.. முதுகில் தீயில் தோலுரிந்த நிலை. தலையிலும், முட்டியிலும் காயம். இருந்தும் பெரிய ஆபத்தில்லை. ஃப்ராக்ச்சர் இல்லை. முதுகெலும்பில் காயமில்லை. ப்ளாஸ்டிக் சர்ஜரி இஸ் ஆன்..- டேரா டூன் மேக்ஸ் ஹாஸ்பிடல் டாக்டர்கள்.

தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு. யாரோ, எப்போதோ செய்த புண்யம்..

கிரிக்கெட்: ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஆடவிருக்கும் இந்திய டி-20 அணி

இந்திய கிரிக்கெட் போர்டில் நேற்றைய இரவின் (27-12-22) நீண்ட ஆலோசனைகளுக்குப் பின், புத்தாண்டில் இந்தியாவுக்கு வரவிருக்கும் ஆசிய டி-20 சேம்பியன் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஆட என, இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 3-லிருந்து டி-20 தொடர் (3 போட்டிகள்) தொடங்குகிறது. ஜனவரி 10-லிருந்து ஒரு-நாள் போட்டிகள் மூன்று. பங்களாதேஷில் தடுமாறிய இந்திய அணியை ஒரு குலுக்கு குலுக்கிப்போட்டதில், சிலரைக் காணவில்லை! சில புதுமுகங்கள் துள்ளுகின்றன. ரன் ஏதும் எடுக்காமல் பங்களாதேஷ் கேப்டனை வம்புக்கிழுத்த விராட் கோஹ்லி, கே.எல். ராஹுல், அரைகுறை ஃபிட்னெஸ் காண்பித்து ஆடிய தீபக் சாஹர் – காக்கா.. காக்கா.. ஹோஷ்.. ! இரண்டாவது டெஸ்ட்டில் நன்றாக ஆடிய ரிஷப் பந்திற்கு இரு தொடர்களிலும் ஓய்வு. ஷ்ரேயஸ் ஐயர் டி-20 அணியில் இல்லை.

Shivam Mavi, Fast bowler

வேகப்பந்துவீச்சில், பழக்கப்பட்ட வீரர்கள் அகற்றப்பட்டு இந்த ஆண்டில் முஷ்டாக் அலி ட்ராஃபியில் (இந்திய தேசிய டி-20) சிறப்பாக பங்களித்த பௌலர்கள் கவனிக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி (UP/ Gujarat Titans), முகேஷ் குமார் (Bengal/ Delhi Capitals) தேர்வாகி உள்ளனர். கூடவே, வேகப்புயல் உம்ரான் மாலிக் (J&K/ SRH), வேகத்திலும் ஸ்லோ வேலை காண்பித்து பேட்ஸ்மன்களைக் குழப்பும் death-over specialist ஹர்ஷல் பட்டேல் (Haryana/ Royal Challengers Bangalore), Left arm pacer அர்ஷ்தீப் சிங் (Punjab /Punjab Kings) உள்ளே பிரவேசித்திருக்கிறார்கள். இவர்களின் வேகம், ஸ்விங், லங்கர்களை ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கலாம்.  ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில்: பங்களாதேஷ் தொடரில் சிறப்பாக ஆடிய Off-spinner வாஷிங்டன் சுந்தர் (TN/ Sunrisers Hyderabad), 2022-ல் அதிக விக்கெட்டுகள வீழ்த்திய லெக்ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் (Haryana, Rajasthan Royals), பங்களாதேஷுக்கு எதிராக டெஸ்ட்டில் தன் பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர்/ இடதுகை சுழல் அக்ஸர் பட்டேல் (Gujarat/ Delhi Capitals).

ஹார்தீக் பாண்ட்யா கேப்டனாகும் இந்திய டி-20 அணி சுறுசுறுப்பாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. டி-20 உலகின் சூப்பர்ஸ்டாரான சூர்யகுமார் யாதவ் முதன்முதலாக வைஸ்-கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்தின் விக்கெட் கீப்பர் இடத்தில்,  ரசிகர்களிடையே ஏகப்பட்ட ஆதரவுபெற்ற (கத்தார் FIFA கால்பந்து கோப்பையிலும் ரசிகர்களின் பதாகை இவருக்கு – Select Sanju Samson !) சஞ்சு சாம்ஸன் (Kerala/ Rajasthan Royals). இன்னொரு ஆப்ஷனாக சமீபத்தில் பங்களாதேஷை இரட்டை சதத்தால் விரட்டோ விரட்டென்று விரட்டி சித்திரவதை செய்த மும்பை இந்தியன்ஸின் இஷான் கிஷன்! ஒருவேளை ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தால், மிடில் ஆர்டரில் இந்திய ரன் ரேட்டைத் தூக்கிப்பிடிக்க தீபக் ஹூடா (Rajasthan/ Gujarat Titans) பயன்படக்கூடும். இதுவரை டி-20 யில் சேர்க்கப்படாத, ஃபார்மில் உள்ள ஷுப்மன் கில் (Shubman Gill, Punjab/ Gujarat Titans) அணிக்குள் நுழைந்துள்ளார். அநேகமாக இவரும், இஷான் கிஷனும் ஆட்டத்தைத் துவக்குவார்கள். ருதுராஜ் கெய்க்வாட் (Maharashtra/ CSK) இன்னுமொரு ஆப்ஷன். மிடில் ஆர்டர் அல்லது துவக்கம் என எங்கே நுழையச் சொன்னாலும் ஆடவல்ல, இதுவரை இந்தியாவுக்காக ஆட வாய்ப்பு கிட்டாத, ராஹுல் த்ரிபாட்டியும் (Rahul Tripathi-Maharashtra/ SRH) இருக்கிறார்.

ஸ்பின், வேகம், துவக்க மற்றும் மிடில் ஆர்டர்  என சரியான  காம்பினேஷன் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது.வெளியேறவிருக்கும் சேத்தன் ஷர்மாவின் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு இந்திய அணிகளை தேர்வு செய்ய, ரோஜர் பின்னி தலைமையிலான கிரிக்கெட் போர்டு கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பாகும் இது. புதிய சீனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு விரைவில் வரவிருக்கிறது.

India T-20 team: Hardik Pandya (Capt), Suryakumar Yadav (VC), Shubman Gill, Rahul Tripathi, Ruthuraj Gaekwad, Ishan Kishan, Sanju Samson, Deepak Hooda, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Umran Malik, Arshdeep Singh, Harshal Patel, Mukesh Kumar, Shivam Mavi

அடுத்த பதிவில்  இந்திய ஒரு-நாள் அணி (ODI team) தேர்வை கொஞ்சம் அலசிவைப்போம்..!

**  

FIFA 2022: உலகின் உச்சியில் அர்ஜெண்டினா

கத்தாரில் (Qatar) உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை ஒரு தோல்வியில் ஆரம்பித்த அர்ஜெண்டினா, போகிறபோக்கில் தூள்கிளப்பி, முன்னாள் சேம்பியன் ஃப்ரான்ஸை நேற்றைய (18-12-2022) இறுதிப்போட்டியில் போராடிப் போராடி வீழ்த்திவிட்டது. 20 வருட இடைவெளிக்குப்பின் உலகக் கால்பந்து கோப்பையை மெஸ்ஸியின் தலைமையில் வென்று சாதித்திருக்கிறது. அணியின் கோச்-கம்-மேனேஜரின் (Lionel Scaloni) கடும் திட்டமிடல், மாறுபட்ட எதிரிகளுக்கேற்ற வியூகங்கள், அணி வீரர்களின் அயராத உழைப்பு ஆகியவற்றினால் கிடைத்த மாபெரும் வெற்றி இது. உலகக் கால்பந்தில் பாப்புலாரிட்டி, புகழ் என்றெல்லாம் பார்த்தால் அர்ஜெண்டினா, ப்ரேஸில் ஆகிய தென்னமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளைவிட உலகெங்கும் அதிதீவிர ரசிகர்களைக் கொண்டவை. ’கால்பந்து ஆட்டம், உலகை ஒன்று சேர்க்கிறது (Football unites the world)’ என்று கத்தாரில் (Qatar) எதிரொலித்த உற்சாக கோஷம் சாதாரணமானதல்ல. உண்மை இருக்கிறது இதில். ஒரு மாதத்துக்கும் மேலாக உலகையே கட்டிப்போட்டு வைத்திருந்த அபாரமான விளையாட்டுப் போட்டிகள் இவை.

ஏற்கனவே நடந்த சில முக்கிய போட்டிகளைப்போலவே இறுதி ஆட்டமும் எக்ஸ்ட்ரா டைமைத் தாண்டி பெனல்ட்டி ஷூட்-அவுட்டில் போய் முடிவைக் காண்பித்தது. முதல் பாதியில் 2-0 என்று அர்ஜெண்டினா இருக்க, 90 நிமிட நார்மல் ஆட்டகாலத்திலேயே கதையின் முடிவு தெரிந்துவிடும் என்றும், அர்ஜெண்டினா எளிதில் ஜெயிக்கும் எனவும் ரசிகர்களைக் கனவு காணவைத்தது ஆரம்பத்தில்.  பின்னர் 2-2, 3-3 என ஸ்கோரைத் திகிலோடு நகர்த்தி திருப்பங்களைத் தந்தது. அர்ஜெண்டினாவுக்கு 90+ நேரத்திலேயே  4-ஆவது கோலைப் போட்டு விட ஒரு அபூர்வ வாய்ப்பு. ஆனால் மெஸ்ஸியின் ஷாட்டை ஃப்ரென்ச் கோல்கீப்பர் ஹூகோ யோரிஸ் (Hugo Lloris) அபாரமாகத் தடுத்துவிட்டார். ஆட்டத்தில் ஃப்ரான்ஸின் கேப்டன் 23-வயது கிலியன் மபாப்பே (Kylian Mbappe) 3 கோல்களை விளாசியதில் அர்ஜெண்டினாவுக்கு மரணபயம். அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஆல்வரெஸ், டி மாரியா போன்ற சூரர்களும் விடுவதாயில்லை. எதிரணியைப் போட்டுத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

கீழே: மெஸ்ஸியின் அர்ஜெண்டினா உலகக்கோப்பையை உயர்த்திப் பிடிக்கிறது

வேறுவழியில்லை. வந்தது பெனல்ட்டி ஷூட்-அவுட். ரசிகர்களிடையே இதயத்துடிப்பை வேகமாக்கி வேடிக்கை காட்டி,  கடைசியில் இந்தா பிடி என்று அர்ஜெண்டினாவின் கையில் கோப்பையைக் கொடுத்தது 2022-ன் இறுதி ஆட்டம். ஷூட்-அவுட்டில் 4 கோல்களை வரிசையாக அர்ஜெண்டினா போட, ஃப்ரான்ஸ் இரண்டு கோல்கள் மட்டுமே போட்டது. அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் அபார ஆட்டம். சரியான போட்டி. Pure thriller. இதற்குமுன் 1978-லும், 1986-லும் உலகக்கோப்பையை வென்ற நாடு அர்ஜெண்டினா.

கீழே: தோற்ற அதிர்ச்சியில் ப்ரமைபிடித்து உட்கார்ந்துவிட்ட தங்கள் அணிக்கேப்டனைத் தேற்றும் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி எமானுவெல் மாக்ரோன்.

இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஃப்ரெஞ்ச் கேப்டன் கிலியன் மபாப்பே கோல்டன் ஷூ பரிசை வென்றார். உலகக்கோப்பையின் மிகச்சிறந்த வீரராகத் தங்கப்பந்து பரிசை தட்டிச் சென்றார் அர்ஜெண்டினாவின் லியனெல் மெஸ்ஸி. சிறந்த கோல்கீப்பர் பரிசு அர்ஜெண்டினாவின் எமிலியானோ  மார்ட்டினெஸுக்கு (Emiliano Martinez) . அதே அணியின் என்ஸோ ஃபெர்னாண்டஸுக்கு (Enzo Fernandez) உலகக்கோப்பையின் சிறந்த இளம் வீரர் பரிசு.  இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் அதிகமான கோல்கள் (12) அடித்த வீரராக கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான ப்ரேஸிலின் பீலே (Pele) திகழ்ந்தார். அந்த கௌரவம் இந்த உலகக்கோப்பையில் மெஸ்ஸிக்குப் போய்விட்டது. மொத்தம் இதுவரை 13 உலகக்கோப்பை கோல்களை அவர் அடித்துள்ளார்.

FIFA 2022 உலகக்கோப்பையை வென்ற அணிக்கு  ரூ. 344 கோடி பரிசுத்தொகை!  இரண்டாவது இடத்தைப் பிடித்த (முன்னாள் சேம்பியன்) ஃப்ரான்ஸ் அணிக்கு ரூ.245  கோடி. ஆக்ரோஷமாக ஆடி 3-ஆவது, 4-ஆவது இடங்களைக் கைப்பற்றிய க்ரோஷியா, மொராக்கோ அணிகளுக்குப் பரிசுத்தொகையாக முறையே ரூ. 220 கோடி, ரூ.204 கோடி. கொழுத்த பணம் ஆட்டம்போடும் விளையாட்டு இது.

ஏகப்பட்ட சர்ச்சைகள், விமர்சனங்களுக்கிடையே, மத்தியகிழக்கின் சிறு நாடான கத்தார்  முதல்முறையாக FIFA கோப்பைப் போட்டிகளை சிறப்பாக நடத்தி, உலக அரங்கில் புகழ் பெற்றுவிட்டது. கூடவே அந்த நாட்டிற்கு உலக பெருவணிக முதலீடுகள், வெளிநாட்டு ஒத்துழைப்புத் திட்டங்கள், வளரும் சுற்றுலாத்துறை என நிறைய உபரிபலன்கள். இதற்கடுத்த கால்பந்து உலகக்கோப்பை 2026-ல் நிகழவிருக்கிறது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாகச் சேர்ந்து இதை நடத்தவிருக்கின்றன. இப்படி 3 நாடுகள் கூட்டணி உலகக்கோப்பை கால்பந்தை நடத்தவிருப்பது இதுவே முதல்முறை. உலகெங்குமிருந்தும் தேர்வுசெய்யபடவிருக்கும் 48 முக்கிய அணிகள் பங்குகொள்ளும்.

**

fifa 2022: அர்ஜெண்டினா ?!

டிசம்பர் 18, 22. மார்ச் 20, 2015-ல், சுமார் 7 வருடங்களுக்கு முன்னேயே இந்த நாளைக் குறித்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் ஒரு தீவிர கால்பந்து ரசிகர் . என்னவாம்? லியனெல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா , கால்பந்து உலக சேம்பியனாக மீண்டும் ஆகிவிடும்…

யோவ்! ஹோஸே மிகெல் பொலாங்கோ! என்ன சொன்னீர்? அடிச்சுவிட்டதாகத் தோன்றவில்லையே.. நிஜமாகவே மீண்டும் உலக சேம்பியனாகப் போகிறதா இன்று அர்ஜெண்டினா!

பொலாங்கோ! இது நடந்தால், உமது வாயில் ஒரு கிலோ ஆர்கனிக் சர்க்கரையைக் கொட்ட ஏற்பாடு செய்வார்கள் ரசிகர்கள் எனச் செய்தி கிட்டியுள்ளது. எதற்கும் வாயைப் பெரிசாகத் திறந்துவைத்துக்கொள்ளும்!

FIFA – கால்பந்து உலகக்கோப்பை 2022

மத்தியகிழக்கின் கத்தாரில் (Qatar) நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பைக்கான போட்டிகளில் இதுவரை சில அதிர்ச்சி முடிவுகள், ரெஃப்ரீ சர்ச்சைகள். ஆரம்பச்சுற்று போட்டி ஒன்றில் முன்னாள் சேம்பியன் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்த கால்பந்து உலகின் கத்துக்குட்டி சவூதி அரேபியா, மத்திய கிழக்குப்பகுதியில் பெரும் பரவசத்தை ரசிகர்களிடையே விளைவித்தது. சவூதி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் என அந்த நாட்டு அரசு அறிவிப்பில் போய் நின்றது அந்த குதூகலம்! முன்னாள் சேம்பியன்களான ஜெர்மனியையும் ஸ்பெய்னையும் அட்டகாசமாகத் தாக்கி ஆடி வீசியது ஆசிய கால்பந்து ஜாம்பவானான ஜப்பான். காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்களில் சிறப்பாக பங்காற்றிய ஜப்பான், காலிறுதியை நிச்சயம் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறி, தன் வளர்ந்து வரும் ரசிகர் கூட்டத்திற்குப் பெரும் அதிர்ச்சி தந்தது. கால்பந்து உலகின் தாதாக்களில் ஒன்றான ஜெர்மனியைத் தோற்கடித்த முதல் ஆப்பிரிக்க நாடு எனும் பெருமையைப் பெற்ற திருப்தியில் ஆரம்ப நிலையிலே வெளியேறிய காமரூன்! நடப்பு சேம்பியனான ஃப்ரான்ஸை வீழ்த்திய ஆப்பிரிக்க சிறுநாடான டுனீஷியா.. இப்படி சில அதிர், புதிர் முடிவுகள், சுவாரஸ்யங்கள் இந்த உலகக் கோப்பையில்.

ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்து ஆட்டத்தில் பெயரெடுத்த செனகலிடம் மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது இந்த உலகக்கோப்பையில் ரசிகர்களுக்கு. அது சோடைபோனது. ஆனால் இன்னொரு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ தன் சிறப்பான ஆட்டங்களினால் உலகக் கால்பந்து உலகத்தில் அதிர்வுகளை நிகழ்த்தியது. ரசிகர்களை ஆச்சரியத்தில் திணறவைத்தது. அரையிறுதியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க நாடாக ஆட்டம்போட்ட  மொராக்கோ, இறு ( 17-12-2022 ) உலகக்கோப்பையின் மூன்றாவது இடத்தை அடைய,  இதுவரை மிகச் சிறப்பாக ஆடி அர்ஜெண்டினாவிடம் செமிஃபைனலில் தோற்ற ஐரோப்பிய நாடான க்ரோஷியாவுடன் மோதுகிறது. இரு அணிகளும் உலகளாவிய கால்பந்தில் தங்களது இடங்களை நிறுவ முயற்சிக்குமாதலால், போட்டி அதி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Below: France’s Kylian Mbappe , Argentina’s Lionel Messi

ஞாயிறு (18-12-2022)  இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வருகின்றன கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2022 போட்டிகள். அன்று இரவு நடக்கவிருக்கும் மெகா ஃபைனலில் நடப்பு சேம்பியன் ஃப்ரான்ஸ், தென்னமெரிக்க நாடான முன்னாள் உலக சேம்பியன் அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது. உலகக் கால்பந்தில் மிகவும் கவர்ச்சிகரமான அணியான ப்ரேஸில் (Brazil) காலிறுதியிலேயே வெளியேறி அதிர்ச்சி தந்த நிலையில், தென்னமெரிக்க, மற்றும் உலகெங்குமுள்ள கால்பந்து ரசிகர்களின் ஆர்வம், முழுகவனம் அர்ஜெண்டினாவின் பக்கம் திரும்பிவிட்டிருக்கிறது.  ஃபைனல் ஆட்டம் கடுமையானதாக இருக்க வாய்ப்பு. க்ரோஷியாவுக்கெதிரான செமிஃபைனலில் அர்ஜெண்டினாவின் ஜூலியன்  ஆல்வரேஸின் (Julian Alvarez) அபார கோல்கள் ரசிகர்களுக்கு போதையேற்றியிருக்கின்றன. பாலோ தைபெலா (Paulo Dybela), லௌதாரோ மார்டினெஸ்(Lautaro Martinez), அன்ஹெல் தி மாரியா (Angel Di Maria) போன்ற திறனான வீரர்கள் அணியில். அணியின் உலகப் புகழ்பெற்ற கேப்டன் லியனல் மெஸ்ஸி (Lionel Messi) உலகக்கோப்பையில் 11 கோல்கள் அடித்து சாதனை புரிந்திருக்கிறார். தான் விளையாடும் இறுதி உலகக்கோப்பைப் போட்டியாக இது இருக்கும் என்றுவேறு அறிவித்து, உலகெங்குமுள்ள தன் ரசிகர்களின் இதயப் படபடப்பை அதிகரித்துவிட்டிருக்கிறார்!

காமரூன் –அல்ஜீரிய வம்சாவளியில் வந்தவர் ஃப்ரான்ஸின் சூப்பர் ஸ்டாரான கிலியன் மபாப்பே (Kylian Mbappe). ராண்டல் கோலோ முவானி (Randal Kolo Muani),  கரீம் பென்ஸமா (Karim Benzama), அந்தாய்ன் க்ரீஸ்மன் ((Antoine Griezmann)  போன்ற attacker-களையும், , இங்கொலோ காந்தே (Ngolo Kante) போன்ற சிறப்பான, mid-fielder-களையும், லூகாஸ் ஹெர்னாண்தஸ் Lucas Hernandez போன்ற defender களையும் கொண்ட ஃப்ரென்ச் அணி வலிமையாகக் காட்சி தருகிறது.

உலகக்கோப்பையின்ன் இறுதி ஆட்டம் உலகெங்குமுள்ள கால்பந்தின் தீவிர ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப்போகிறது.

FIFA-Qatar 2022 Final : France vs Argentina

18 Sports / Jio Cinema 2030 (IST)

**