இந்த கொரோனா சனியன் யார் யாரை எல்லாம் எப்படியெல்லாம் படுத்துகிறது? உயிரை எடுத்துக்கொண்டுபோவது கிடக்கட்டும். சிலரைப் படுத்தவும் செய்கிறதே!
ஆஸ்திரேலியாவின் ஒரு எட்டு வயது பொடியனை கொஞ்ச நாட்களாக ரொம்பத்தான் வம்புக்கிழுத்துவிட்டது. அவனுக்குப் பள்ளிக்கூடம் போகவே, பிடிக்கவில்லை. வகுப்புத்தோழர்களைப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்கிற நிலையில் வந்திருந்தான். என்ன ஆச்சு? அவனது தோழர்கள் அவனை ‘கொரோனாவைரஸ்’ எனக் கொடுமையாக அழைக்க ஆரம்பித்ததுதான் பையனின் எரிச்சலுக்குக் காரணம். என்ன திமிர்? ஏன் இப்படி ஒரு ‘பேர்வைத்து’ அவனைக் கூப்பிட்டதுகள் அதுகள் ? நம்ப பயலின் பெயர் அப்படி: கொரோனா டி வ்ரைஸ் (Corona de Vries)! போச்சே.. அவனது நார்மல் வாழ்க்கையை பாதித்துவிட்டதே இந்த கொரோனா!
சிறுவன் ‘கொரோனா’ !நொந்துபோய் வீட்டில் சுருண்டு கிடந்த பையன் ஒரு நாள் டிவியை உருட்டிக்கொண்டிருந்தான். அந்தச் சேதியைக் கவனித்தான். அவனது ஃபேவரைட் ஆக்டரான டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப்பட்டுக் கிடந்ததுபற்றிய நியூஸ் அது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் (Gold Coast)-ல் உல்லாசப்பயணமாக அவரும் அவரது மனைவியும் வந்து தங்கியிருந்தபோது ஏற்பட்ட கதி. உடனே டாம் ஹாங்க்ஸுக்கு ஒரு கடிதம் எழுதினான். ‘உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் கொரோனா என்று கேள்விப்பட்டேன். நீங்கள் நலமா இப்போது?’ மேலும் தன் பெயர் கொரோனா டி வ்ரைஸ் என்றும், பள்ளியில் நண்பர்கள் தன்னை ’கொரோனாவைரஸ்!’ எனச் சீண்டி பரிகாசம் செய்வதை சகித்துக்கொள்ளமுடியவில்லை என்றும் தன் வேதனையை ஆத்திரத்தோடு வெளிப்படுத்தியிருந்தான் பையன். டாம், ஆஸ்திரேலிய சிறுவனின் கடிதத்தைப் பார்த்தார். கூடவே சிறுவனின் கதையை வெளியிட்ட ஆஸ்திரேலிய ’சேனல் 9’ நிகழ்ச்சிகளை கவனித்தார். அட! ஒரு பொடிப்பயலின் ’கொரோனா’ கதை. நம்மைப்பற்றிவேறு கேட்டு எழுதியிருக்கிறான்.. பதில் சொல்லவேண்டுமே.
டாம் ஹாங்க்ஸ் அனுப்பிய டைப்ரைட்டர் !ஒரு கடிதம், கொரோனா டி வ்ரைஸுக்குத் தன் டைப்ரைட்டரில் எழுதி அனுப்பினார் ஹாங்க்ஸ். ‘அன்பு நண்பனே! உனது கடிதம் என்னையும் என் மனைவியையும் நெகிழவைத்துவிட்டது. எனக்குத் தெரிந்து கொரோனா என்கிற பெயருடைய பையன் நீதான். சூரியனைச் சுற்றியிருக்கும் வாயுக்களால் ஆன வளையத்துக்கும் ’கொரோனா’ என்றுதான் பெயர்!’ எனத் தேற்றியிருந்தார். கடிதத்தில் மேலும் குறிப்பிட்டார்: ’எனக்குப் பிடித்தமான ‘கொரோனா’ டைப்ரைட்டரை உனக்கு அனுப்பியுள்ளேன். அதை எப்படி உபயோகிப்பது என பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதில் எனக்கு ஒரு பதில் ‘டைப்’ செய்து அனுப்பு’ என்றவர் மேலும் சொன்னார்: ’என்னில் ஒரு நண்பனை நீ பெற்றுவிட்டாய்!” ‘You Got A Friend In Me’ – என்பது அவரது புகழ்பெற்ற படமான ’Toy Story’-ன் theme tune.கூடவே தான் ஆசையாக உபயோகப்படுத்திய அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கொரோனா’ ப்ராண்ட் டைப்ரைட்டரை சிறுவனுக்குப் பரிசாக டிவி சேனல் மூலமாக அனுப்பிவிட்டார்.
பார்சல் வந்தது. பார்சலில் ஒரு கருப்பு டைப்ரைட்டர் பளபளவென மின்னியது. தன் பெயர் ‘கொரோனா’ என நெஞ்சை நிமிர்த்தியது. அதிலிருந்த கடிதத்தைப் படித்து அசந்துபோய்விட்டான் சிறுவன் கொரோனா. டாம் ஹாங்க்ஸ் எனக்கு எழுதியிருக்கிறாரா! எல்லோருக்கும் பெருமையுடன் காண்பித்தான். நடந்த கதை சொன்னான். இனி வருமா தைரியம் அவனது வகுப்பு நண்பர்களுக்கு, அவனை சீண்ட!
டாம் ஹாங்க்ஸ் ’Forrest Gump’, ‘Sleepless in Seattle’, ’Saving Private Ryan’, ‘The da Vinci Code’, ‘Toy Story’ (1,2,3,4) – போன்ற சிறந்த படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நட்சத்திரம்.
**
இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948-ல் நிறுவப்பட்ட, ஐ.நா.வுக்குக் கீழ்வரும் சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), சமீப காலமாகக் கடும் விமரிசனத்திற்கு ஆளாகிவருகிறது. சென்ற வருட இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் வெடித்த நிலையிலிருந்து இதுநாள் வரை தன் செயல்பாடுகள், அறிக்கைகளால் குழப்பி, ஏற்கனவே தாங்கமுடியாத நோய்த்தாக்கம், உயிரிழப்பினால் தத்தளிக்கும் நாடுகளுக்கு, குறிப்பாக வல்லரசு நாடுகளுக்குக் கடுப்பை ஏற்றிவருகிறது. 1918 ஸ்பேனிஷ் காய்ச்சலிற்குப் (The Spanish Flu of 1918) பிறகான உலகின் பெரும் உயிர்க்கொல்லியாக மாறிவரும் தொற்றுநோயின் அசுரவேகப் பரவலின்போது, அது சம்பந்தமான தகவல்களை ஆரம்பத்திலிருந்தே சரியாக வெளிப்படுத்தாதிருந்தது, மூடிமறைத்தல், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் சம்பந்தமாக சீனாவுக்கு சாதகமாகப் பேசிவருதல் எனத் தொடர் சர்ச்சைக்குள்ளாகிவருகிறது இந்த உலக நிறுவனம்.
WHO Secretary General Tedrosஇந்தச் சர்ச்சையின் மையப்புள்ளி உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரெயெஸஸ் (Tedros Adhanom Ghebreyesus ). நிறுவனத்தின் செகரெட்டரி-ஜெனரல். மேற்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். 2017-ல் இவர் இந்தப் பொறுப்பிற்கு வந்தபோதே சர்ச்சைகள் தலையைக் காட்டின. ஒரு கொடுங்கோல் ஆட்சியில் மந்திரியாக இருந்த இந்த ஆளுக்கு, உலக சுகாதாரத்தைப்பற்றி என்ன தெரியும் என மேற்கத்திய நாடுகள் முறைத்தன. இந்தப் பதவிக்கான தேர்தலில் இவரை எதிர்த்து நின்றவர் ஒரு தேர்ந்த பிரிட்டிஷ் டாக்டர். இருந்தும், எத்தியோப்பியா-சீனா இடையில் வலுவான இருதரப்பு உறவுகள் ஏற்பட்ட நிலையில், சீனாவின் செல்லப்பிள்ளையான டெட்ரோஸ், சீன ஆதரவுப்பின்னணியில், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஓட்டுகளை வசப்படுத்திக்கொண்டு WHO-வின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். உலகே எரிச்சலுடன் சீனாவைப் பார்க்கும் இந்நிலையில், சீனாவின் பழைய உதவிக்கு விசுவாசம் காட்டவேண்டிய நிலையில் இருக்கிறாரா டெட்ரோஸ்?
நவம்பர் இறுதி-டிசம்பர் 2019 ஆரம்பத்திலிருந்து நடந்த சில நிகழ்வுகள் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கேள்விக்குறியாக்கிவிட்டன. பயங்கரமான ஒரு தொற்றுநோய்பற்றி உலகத்தை சரியான நேரத்தில் எச்சரிப்பதற்கு பதிலாக, WHO சீனாவின் பேச்சைக்கேட்டு, சர்வதேச வெளியில் அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்தது. கொரோனா தாக்குதலை முதலில் வுகான் நகரில் அனுபவித்த சீனா, அதுபற்றிய செய்தியை நைஸாக அமுக்கிவிடப் பார்த்தது. (ஆச்சரியப்பட ஏதுமில்லை. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. கம்யூனிச ஆட்சியில் அரசு சார்ந்த ரகசியம், அதனைப் பாதுகாப்பது, அதற்காக எந்தவழியையும் மேற்கொள்வது என்பதெல்லாம்தான் முக்கியம். கருத்துச் சுதந்திரம் என்று வாயைத் திறந்தால், வாய் கிழிந்துவிடும் சீனாவில். சம்பந்தப்பட்ட அப்பாவிகள் ’காணாமல்’ போய்விடுவார்கள். (தமிழக அரைவேக்காட்டு படிப்பாளிகளுக்கு, அறிவுசீவிகளுக்கு இதெல்லாம் புரியவர நாளாகும்). தன்னுடைய டாக்டர்கள் 8 பேரை-அவர்கள் அதுபற்றி தங்களிடையே(!) பேசிக்கொண்டதை உளவுபார்த்து, பிடித்து உடனே உள்ளே தள்ளியது சீனா. அதில் முதலில் விசில் அடித்தவரை மேலுலகத்திற்கு அனுப்பிவிட்டது சீனா. டிசம்பர் 2019 கடைசி வாரத்தில் சீனாவின் வுஹான் நகரில் ஏதோ பயங்கரம் நடக்கிறது என்கிற தகவல் வெளி உலகிலும் கசிந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் கவனிக்க ஆரம்பித்தன. உலக சுகாதார நிறுவனம் இதுபற்றித் தெரிந்துகொண்டபின், சீனாவுடன் தொடர்பில் வந்தது. வுஹான் நகருக்கு தனது டாக்டர்கள் அணியை அனுப்ப WHO விருப்பம் தெரிவித்தது. இந்தக் கட்டம்வரை WHO-வின் செயல்பாடு, சற்றே தாமதமாகியிருந்தாலும், சரிதான்.
WHO-வின் கோரிக்கையைக் கேட்டு சீனா அரண்டது. வெளி உலகத்துக்கு மணி அடித்துச் சொன்னதாக ஆகிவிடுமே! WHO நிபுணர் குழு வுஹானுக்கு வந்து ’பார்க்க’, சீனா அனுமதி தரவில்லை. வெளி உலகம் அலர்ட் ஆனது. WHO-வின் கோரிக்கை நியாயமானதுதானே. சீனா ஏன் அனுமதிக்கவில்லை? என்ன நடக்கிறது அங்கே? வல்லரசு நாடுகளோடு மற்றவைகளும் முணுமுணுக்க ஆரம்பித்தன.
ஒரு ’ராணுவ ஸ்டைல் லாக்-டவுன்’ வுஹானைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. (அதாவது வாயைத் திறப்பவர்களைக் கிழித்து, அடைக்கவேண்டியவர்களை அடைத்து, ஒழுங்குபடுத்தவேண்டியவர்களை ‘ஒழுங்கு’படுத்தி துரிதமாக காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது சீன அரசு. உலக நாடுகள் சந்தேகிக்க ஆரம்பிக்க, திடுக்கிட்டது. (சீனாவுக்கு விஷமம் செய்வது முக்கியம். கூடவே இப்போதெல்லாம், தன் ‘இமேஜ்’ பற்றியும் கவலை!) மேலை நாடுகளின் வாயைக் கொஞ்சம் அடைக்கத்தான் வேண்டும்.. WHO தலைவர் டெட்ரோஸிடம் டிசம்பர் இறுதியில் பேசியது. ’’டாக்டர்கள்/நிபுணர்கள் அணியெல்லாம் இங்கு வரவேண்டிய அவசியமில்லை. நீங்கள் வந்தால் போதும்’’ என்றது. எங்கே? எங்கே பிரச்னையோ அந்த வுஹானுக்கு அல்ல. ’பெய்ஜிங் (தலைநகர்) வந்து பேசுங்கள்’ என்றது. ஏற்கனவே சீனா என்றால் வாயெல்லாம் பல்லாக இருக்கும் டெட்ரோஸுக்கு குஷி! சென்றார். சீன ஜனாதிபதி தன் முன்னாள் நண்பரை பெய்ஜிங்கில் கவனமாக வரவேற்று விருந்தளித்தார். வுஹானில் வெடித்த கொரோனா வைரஸ்பற்றி ’படம்’ காட்டினார் அதிபர் க்ஸி ஜின்ப்பிங் (Xi Jinping). அதாவது ” பெரிய ஆபத்தெல்லாம் ஒன்றுமில்லை. சாதாரணமானதுதான். கட்டுக்குள் வந்துவிட்டது. பரவமுடியாதபடி தடுத்தாயிற்று. உயிர்ப்பலியா? அதெல்லாம் சும்மா.சொற்பம்தான்..’’ என்பதுபோன்ற பசப்புகள். சீனா சொல்லச்சொன்னதை நன்றாகக் கேட்டுக்கொண்டு ஜெனீவா திரும்பியவுடன் கிளிப்பிள்ளை போல் உலகுக்குப் படித்துக்காட்டினார் டெட்ரோஸ். கூடவே, வைரஸைப் பரவாமல் கட்டுப்படுத்திவிட்டதாக சீனாவை வாயாறப் புகழ்ந்தது உலக சுகாதார நிறுவனம். இதற்குள் சீனாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, தென்கொரியா, ஜப்பான் என விமானத்தில் பயணிகள் இஷ்டத்துக்கும் பயணித்து, ‘அமைதி’யாக நோய்க்கூறுகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தார்கள். உலகின் மோசமான காலகட்டம். இந்தக் காலவெளியில் சுமார் 4,30,000 பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருவதும் போவதுமாய் இருந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 40000 அமெரிக்க தொழில்துறைக்காரர்கள், டூரிஸ்ட்டுகள் சீனாவுக்கு ‘மலிவு சுற்றுலா’ சென்று ‘சுற்றிவிட்டு’ ஆனந்தமாகத் திரும்பினர். வரப்போகும் பேராபத்திற்கான உஷார்நிலையில் யாரும் இல்லை. சீனப்பயணம் குறித்து எந்தத் தடையும் எந்த நாட்டிலிருந்தும் வரவில்லை அப்போது. வைரஸே குதூகலித்திருக்கும் – என்ன ஒரு முட்டாள் உலகம்டா இது!
இங்கே இன்னொரு விஷயம். 2019 டிசம்பரிலேயே, தைவான் (Taiwan – சீனாவுக்கு அருகிலிருக்கும் சிறுநாடு) இந்த வைரஸ்பற்றி, தங்கள் நாட்டில் காணப்பட்ட சில கேஸ்களை ஆராய்ந்து, சரியாக விளக்கி WHO-வை எச்சரித்தது. ” நெருக்கத்தினால், அருகாமையினால் ஒருவருக்கொருவர் பரவக்கூடிய மிகவும் ஆபத்தான உயிர்க்கொல்லி!” என்றது தைவான். சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட துல்லியமான எச்சரிக்கை. ஆனால் டெட்ரோஸுடனான பேச்சுவார்த்தையில் அந்த விஷயம் எடுக்கப்பட்டபோது, சீனா மழுப்பியது. ‘தைவான் ஒரு திமிர்பிடித்த நாடு. அதன் பேச்சையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள்’ எனச் சொல்லி நம்பவைத்தது. சீனாவின் புத்திமதியைக் கேட்டுக்கொண்டு, WHO தைவானின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தது. ஊர், உலகத்துக்கும் அப்படியே ஒப்பித்தது: ‘அப்படியெல்லாம் பரவக்கூடிய தொற்று அல்ல இந்த வைரஸ்..’ என்று உளறியது ஆரம்பத்தில் WHO. இதனை அப்போது நம்பிய அமெரிக்க ஜனாதிபதியும் ‘இது ஒரு ஃப்ளூ போன்றதுதான். பயப்படத் தேவையில்லை!’ எனத் தன் மக்களிடம் அசடுவழிந்தார். முழு ஐரோப்பாவும், தென்கொரியா, ஜப்பானும்கூட ஏமாந்தது. ஆங்காங்கே தென்பட்ட, வளர்ந்த கேஸுகளை சரிவர சோதிக்காமல், கையாளாமல் இருந்தது அப்பாவி உலகம். உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகமாக, நன்றாக அனுபவிக்கிறது இப்போது.
Cartoon courtesy: Satish Acharyaஇந்த கொரோனா தாக்குதலால், அமெரிக்க உயிரிழப்புகள்தான் மிக அதிகம். அடுத்தாற்போல் இத்தாலி, ஸ்பெய்ன், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள். தன் நாட்டில் கட்டுக்கடங்காது பரவி உயிர் பலி வாங்கும் கொரோனாவினால் அமெரிக்கா ஆடிப்போயிருக்கும் நிலையில் அதிபர் ட்ரம்ப் WHO சரியான நேரத்தில் உரிய தகவல்களைத் தராமல், சீனாவைப் புகழ்வதில் மும்முரமாக இருந்ததையும் வெளிப்படையாகக் கூறிக் கடுமையாக விமரிசித்தார். உலக சுகாதார நிறுவனம் சீனாவைச் சார்ந்து இயங்கும் ஒரு நிறுவனமாக ஆகிவிட்டது என்பது அவர் கூற்று. இதே சமயத்தில் ஜப்பானின் துணைப்பிரதமர் தாரோ ஆஸோ, ”WHO ‘சீன சுகாதார நிறுவனம்’ என அழைக்கப்படுவது இப்போது வழக்கமாகிவிட்டிருக்கிறது!” என்றார். டிசம்பர் 2019-இறுதியில் நிகழ்ந்த அந்த தகவல் தாமதம், உலகம் கொடிய வைரஸ் ஒன்றை எதிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்த்துவிட்டது என்றது அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள். பிரிட்டனின் பிரதமரே கோவிட்-19-ல் சிக்கிய நிலையில் அந்த நாடு ’இதற்கெல்லாம் சீனா பதில் சொல்லவேண்டிவரும்’ என எச்சரித்துள்ளது.
பரபரப்பு நிறைந்த சர்வதேச சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், WHO-க்கு அமெரிக்கா தந்துவரும் வருடாந்திர நிதி உதவியை நிறுத்திவிட்டார். ’சரியாக இயங்காத ஒரு நிறுவனத்திற்கு அமெரிக்கப் பணம் எதற்கு?’ என்பது அவரின் கேள்வி. இது பிரிட்டன், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தரும் நிதி உதவிகளை விடப் பலமடங்கு பெரிய தொகை. பெரும் நாடுகளிலிருந்து முதலில் தன் செயல்பாடுகள் குறித்த விமரிசனம், அப்புறம் நிதி நெருக்கடி என வரிசையாக பிரச்னைகளை சந்தித்து வருகிறது உலக சுகாதார நிறுவனம்.
**
மார்க் ட்வெய்ன் (Mark Twain, 1835-1910) ஒரு அமெரிக்க எழுத்தாளர், நகைச்சுவையாளர் – இன்னும் சொல்லப்போனால், ஒரு சீரியஸான தமாஷ் பேர்வழி, அல்லது ஒரு தமாஷான சீரியஸ் ஆசாமி! அவர் எழுதியதில் புகழ்பெற்ற படைப்புகள்: அவரது இளமைக்கால அனுபவங்களின் அடிப்படையிலான The Adventures of Tom Sawyer, சமூகக் காட்சிகளை புழங்குமொழியில் அங்கதச் சுவையோடு வெளிப்படுத்திய, விமரிசகர்களால் ‘the first Great American Novel’ எனப் புகழப்பட்ட The Adventures of Huckleberry Finn மற்றும் Jumping Frog of Calaveras County ஆகியவை. 60 வயதைத் தாண்டிய முதுமையில், அவரின் வாழ்வில் ஒரே துக்கம். முதலில் அவரது பெண், பின்னர் அவர் மனைவி, நான்கு வருடங்கள் கழித்து இன்னொரு மகள் என்று ஒவ்வொருவராக இறக்க, சோகத்தில் ஆழ்ந்திருந்தார் மார்க் ட்வெய்ன். ஒரு கட்டத்தில் அவரது இலக்கிய நண்பர்கள் சிலரின் வாழ்வும் அப்போது நொடித்து துன்பமயமாக மாறியிருப்பதை அறிந்து மேலும் நொந்துபோனார்.
மார்க் ட்வெய்ன்1909-ஆம் ஆண்டு தன் 74-ஆவது வயதில், இப்படிச் சொன்னார் மார்க் ட்வெய்ன்: ”ஹாலியின் வால்நட்சத்திரம் (Halley’s Comet) பூமிக்கு வெகுஅருகில் வந்தபோது (1835) நான் பிறந்தேன். அடுத்த வருடம் (1910) அது பூமியின் அருகில் திரும்பவும் வரும் எனச் சொல்கிறார்கள். கடவுள் நினைத்திருப்பார்: ’என் கணக்கில் சரியாக வராத இரண்டு விசித்திரங்கள் இவை. ஒன்றாக பூமிக்கு வந்தன, ஒன்றாகத் திரும்பும்!’ அப்படி அந்த வால்நட்சத்திரத்துடன் நானும் போகாவிட்டால் என் வாழ்வின் ஏமாற்றமாக அது இருக்கும்.” வானவியலாளர்கள் கணித்தபடியே, 1910-ல் அந்த வால்நட்சத்திரம் பூமியை நெருங்கித் தலைகாட்டியது அல்லது வால்காட்டியது. மறைந்தது – கூடவே மார்க் ட்வெய்னையும் கூட்டிக்கொண்டு! அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் (William Howard Taft) எழுத்தாளரின் மறைவு குறித்துச் சொன்னது: ’மார்க் ட்வெய்ன் வெளிப்படுத்திய நகைச்சுவை அறிவுஜீவித்தனமானது. அவரைத் தெரிந்த, வாசித்த பலர் களித்து மகிழ்ந்தனர். அத்தகைய உயர்ந்த நகைச்சுவையை இனி வருவோரும் சந்தோஷமாக அனுபவிப்பார்கள்”.
மார்க் ட்வெய்ன் பேச்சுவாக்கில் அவ்வப்போது அவிழ்த்துவிட்ட அல்லது போகிறபோக்கில் சொல்லிச்சென்ற வார்த்தைகள் பல இன்றும் நினைவுகூரப்பட்டு ரசிக்கப்படுகின்றன. Pure humour laced with wisdom. இந்தக் கொரொனா காலத்தில் கொஞ்சம் மார்க் ட்வெய்னைக் கிளறி, மனசை லேசுபடுத்திக்கொள்வோம் :
வாரத்தின் இறுதியில், கடவுள் களைத்துப்போயிருந்த வேளையில், மனிதன் படைக்கப்பட்டிருக்கவேண்டும் ..
*
உலகம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது எனச் சொல்லித் திரியாதீர்கள். அது உங்களுக்கு கடமைப்பட்டிருக்கவில்லை. அதுதான் இங்கே முதலில் வந்தது!
*
அடிப்படையில், இரண்டு வகையான மனிதர்களே உண்டு. ஒன்று சாதித்தவர்கள். இன்னொரு வகை சாதித்ததாகச் சொல்லித் திரிபவர்கள். முதல் வகையில் கூட்டம் குறைவு.
*
எந்த ஒரு விஷயத்திலும் உண்மை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்புறம் இஷ்டப்படித் திரித்துக்கொள்ளலாம்.
*
ஒரு காரியத்தை நாளைக்கு ஒத்திப்போடவேண்டாம். அதை நாளை மறுநாள் செய்யலாம் எனில்.
*
கல்வி என்பதென்ன? பள்ளியில் படித்ததெல்லாம் மறந்துபோனபின், மிச்சமிருப்பது.
*
எத்தனை சொல்லி என்னதான் நிரூபித்தாலும், ஒரு முட்டாளை நம்பவைக்கமுடியாது.
*
அவனுடைய இறுதிச் சடங்கிற்கு நான் போகவில்லை. ஆனால் ஒரு கார்டு அனுப்பினேன் – இறுதிச்சடங்கை அப்ரூவ் செய்வதாக!
*
பலவருடங்களாகப் புவியியல் படித்தபிறகு இப்போது மனதில் வந்துவிட்டது: ஆஸ்திரேலியா பக்கம் 23-ல் இருக்கிறது !
*
எவ்வளவு தூரம் மனிதர்களைப் புரிந்துகொள்கிறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு எனது நாயை எனக்குப் பிடிக்கிறது.
*
புகைபிடிப்பதை விட்டுவிடுவது சுலபம். எனக்குத் தெரியும். நானே ஆயிரம் தடவை விட்டிருக்கிறேனே..
*
கோபம் வருகையில் நாலுவரை எண்ணுங்கள். ரொம்பக் கோபம் வந்தால் திட்டித் தீர்த்துவிடுங்கள்.
*
எந்தத் தப்பையும் செய்துவிடாதீர்கள் – மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில்.
*
முட்டாள்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்கள் இல்லாவிடில் நாம் வெற்றிபெற்றிருப்போமா?
*
இரும்புக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததால், அது தங்கமாக மாறிவிடாது. எதற்கும் ஒரு எல்லை உண்டு!
*
எந்த ஒரு வாய்ப்பையும் நான் கவனித்ததில்லை – அது கை நழுவிப்போகும் வரை.
*
ஒரு நல்ல வக்கீல் சட்டம் தெரிந்தவனாக இருப்பான். சாமர்த்தியக்கார வக்கீல், நீதிபதியை லஞ்சுக்குக் கூட்டிச் செல்வான் !
*
வாயை மூடிக்கொண்டிருங்கள். நீங்கள் ஒரு முட்டாள் என அவர்கள் நினைத்துக்கொள்ளட்டும். வாயைத் திறந்து அதை நிரூபிப்பதைவிட அது மேலல்லவா?
*
ஒரு புகழ்ச்சொல்லில் என்னால் இரண்டு மாதம் (உணவின்றி) வாழ்ந்துவிட முடியும்.
**
எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் விளக்குகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது எனக்குப் புரியவில்லை!
*
நீங்கள் எவ்வளவு இளமையோடு இருக்கிறீர்கள் என உங்களது நண்பர்கள் உங்களைப் புகழ ஆரம்பித்தால், உங்களுக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என அர்த்தம்.
*
கேட்கத் தகுதியில்லாதவர்களிடம், ஒருபோதும் உண்மையைச் சொல்லவேண்டாம்.
*
நல்ல காரியத்தையே செய்யுங்கள். சிலருக்கு அது திருப்தி தரும். பலரை அது ஆச்சரியப்படுத்தும்.
*
இந்தியாவில் 2 மில்லியன் தெய்வங்கள். அவற்றையெல்லாம் அவர்கள் வணங்குகிறார்கள். மதம் என்று பார்த்தோமேயானால், மற்ற நாடுகள் பரமஏழைகள். இந்தியாதான் மில்லியனர் !
*
என் மரணம்பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டுவிட்டது..
இன்று (5 ஏப்ரல், ஞாயிறு) இரவு துல்லியமாக ஒன்பது மணி. அணைப்போம் வீட்டின் மின்விளக்குகளைத் தற்காலிகமாக. ஏற்றுவோம் தீபங்களை. நெய், எண்ணெய் விளக்காகவோ அல்லது மெழுகுவர்த்தி ரூபத்திலோ. வாசலிலும், பால்கனிகளிலும். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தள்ளி நின்றுகொண்டு. மற்றவர்களைச் சேர்த்துக் கூட்டமாக நின்றுகொண்டல்ல. இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் சமூகவிலகல் (social distancing) முக்கியம்.
9 நிமிடங்களுக்கு மட்டுந்தான் இந்த தீபம். பிரதமர் சொன்னபடி, இந்த ஒன்பது நிமிடங்களில் -லாக்டவுன் சமயத்தில் நாம் அவரவர் வீட்டில் இருப்பினும்- நம்மில் யாரும் தனியாக இல்லை என உணர்வோம். நம்மோடு எப்போதும் நம் நாட்டு மக்கள். 130 கோடி மக்களைக்கொண்ட வலுவான தேசம். அன்போடு நினைப்போம் நம் நாட்டவர் எல்லோரையும். பெறுவோம் நம் மனதில் பெரும் உற்சாகம். நேர்மறை சக்தி. நமது தேசத்தினரின் நலனுக்காகவும், உலகமக்கள் அனைவரின் நலன் விரும்பியும் மனதில் மென்மையாக, ஆழமாகப் பிரார்த்திப்போம்.
பயங்கரத் தொற்றுநோய் உலகெங்கும் பரப்பியிருக்கும் கொடும் இருளை, தீப ஒளியில் நேருக்கு நேராக சேர்ந்தே சந்திப்போம். மிரளட்டும், திகைத்து ஓடட்டும் தீய சக்திகள் யாவும். ஒளிரட்டும் புத்துயிர் பெற்று, நம் பாரத தேசம். கூடவே, நாம் வாழும் உலகமும்.
சின்னச் சின்னக் கவிதைகளில் ஒரு தனிக்கவர்ச்சி. சின்னதாக இருப்பதால்தான் என்று இதற்குப் பொருளல்ல. எளிய வார்த்தைகளில் சில வலிய கருத்துகள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல!
தன் ’கற்றதும் பெற்றதும்’ நூலின் (விகடன் பிரசுரம்) கட்டுரைகளுக்கிடையில் பெட்டிச் செய்திபோல் ‘எபிக’ எனக் குறிப்பிட்டு கவிஞர்கள் சிலரின் கவிதைகளை அவ்வப்போது சுஜாதா போடுவது வழக்கம். சிலசமயங்களில் சில பெரிசுகளின் கவிதைகளும் தென்படுவதுண்டு. சில சீரியஸ்.. சிலது simply funny! :
வீடுகள் எரிய
வீதிகள் வழியே
விழுந்தோடிய
ஊர்களை மறப்போமா
-பா.சேதுமாதவன்
**
கோடரியுடன்
வெட்ட வந்தவன்
வியர்வை காய
இளைப்பாறினான்
விரிந்த மரத்தின்
பரந்த நிழலில்
-ராஜகுமாரன்
**
உயிர் பிரிந்து ஊர்ந்தோடி
நீர் தேடிக்
கொணர்ந்தது வேர்
பாராட்டும் கண்களில்
பூ மட்டும்
-ஆதவன்
**
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே
-வைரமுத்து
**
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்தான்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவில்லை
-நகுலன்
**
உணவைத் தாண்டி
உயிரும்
உடையைத் தாண்டி
உடலும்
பெரிதல்லவா?
சிறகை விரித்துச்
சிலிர்த்தே செல்லும்
பறவைகள் கூட்டம்
பார்ப்பீர் தினமும்
-வின்செண்ட் சின்னதுரை
**
நான் இல்லாதுபோன பிறகும்
ஒழுங்காகத் தேடிப் பாருங்கள்
இங்குதான் எங்காவது இருப்பேன்
எவ்வளவு பெரியது
பூமி
வானம்
அண்டம்
பேரண்டம்?
-அழகுநிலா
**
குற்ற நெஞ்சு குறுகுறுக்கும்-அதில்
குறைகள் பல உண்டு- எனைப்
பெற்றவள் செய்த சமையல்தான்- அதில்
பிழைகள் கண்டதுண்டு-ருசி
அற்றுப்போன அமெரிக்க வாழ்வில்
பற்றே இல்லையடி- ஒரு
வற்றக்குழம்பு அதுபோதும்- அன்னைக்
கைமணம் அதில் வேணும்