ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும்போது, சின்ன வயசு நினைவுகள் மனதில் அலைமோதுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
தீபாவளி என்றதும், நல்ல தூக்கத்தைக்கெடுத்து அதிகாலையில் அவசரமாக எழுப்பிவிடப்பட்டு, தலையிலும், உடம்பிலும் எண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பதற்கு நம் முறை எப்போதடா வரும் என்று பொறுமையற்று சிடுசிடுத்த பொற்காலம் நினைவில் நிழலாடுகிறது. அப்போதெல்லாம் நல்லெண்ணெய் போன்ற சங்கதி எல்லாம் கொஞ்சம் நியாயமான விலைக்கு விற்றது. சீயக்காய்ப்பொடி என்கிற, குளிக்கும்போது கண்ணில்பட்டால் தீயாய் எரியும் விஷயம் ஒன்றும் அந்தக்காலப் பொட்டிக் கடைகளில் மலிவான விலையில் கிடைத்தது! தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவென லிட்டர் கணக்கில் குடும்பங்களில் நல்லெண்ணெய் வாங்குவார்கள் நமது ஜனங்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயாவது, ஸ்நானமாவது-. ஏதோ தெண்டத்துக்குக் கொஞ்சம் தலையில் வைத்துக்கொண்டு, (அதுவும் பண்டிகை நாளாயிற்றே என்று- வீட்டிலிருக்கும் பெரிசுகளின் தொந்தரவு தாங்கமுடியாமல்) பாத்ரூமுக்குள் போனேன், எண்ணெய் தேய்த்துக்குளித்தேன் என கணக்குக் காண்பிப்பது நம்மில் பலருக்கு இப்போதெல்லாம் வழக்கமாகப் போனது. எண்ணெய் ஸ்நானம் செய்வதென்பது ஏதோ பொழப்பத்த அசடுகள் செய்கிற வேலை என்றாகிவிட்டது!
மஞ்சள்பொடி, ஓமம், பட்டமிளகாய் போன்ற விஷயங்களைப்போட்டு நன்கு சூடேற்றிய நல்லெண்ணையை அதிகாலை அதிரடிக் குளியலுக்காகத் தயார் செய்வார் அம்மா. ”நீங்களே தேச்சுக்க வேண்டாம்டா! அப்பா வந்து நன்னா தலயில அழுத்தித் தேய்ச்சுவிடுவார்! அப்பத்தான் ஒடம்புல உள்ள உஷ்ணம், கண்ணெரிச்சல் எல்லாம் போகும்” என்பார். வரிசையாகப் பசங்கள் உட்கார்ந்திருக்க, தன் பெரிய கையில் நிறைய எண்ணெயை எடுத்து, சுடச்சுடத்தலையில் எரிச்சல் வர ஒரு அடிஅடித்துக் கரகரவெனத் தேய்த்துவிடுவார் அப்பா. அவர் தேய்க்கத் தேய்க்கக் கண்கள் என்ன, சர்வாங்கமும் திகுதிகுவென எரியும். எப்போதடா இந்த சித்திரவதை முடியும், குளித்துவிட்டு புதுச்சட்டை மாட்டிக்கொள்ளலாம் என்றிருக்கும். எண்ணெயைத் தலையில் உடம்பில் தேய்த்துக்கொண்டபின் உடனே குளிக்க ஓடிவிட முடியாது. ”ஒரு அரை மணி நேரமாவது ஊறுங்கடா! அப்பத்தான் தலயிலயும் ஒடம்பிலயும் எண்ணெய் கொஞ்சமாவது இறங்கும்!” என்கிற அம்மாவின் இலவச எச்சரிக்கை விடாது துரத்தும்.
ஒருவழியாகக் குளியல் முடித்து, புதுச்சட்டை, டிரௌசர் மாட்டிக்கொண்டு வீட்டிலுள்ள சாமிபடங்கள், பெரியவர்கள் முன் விழுந்து எழுந்திருந்து அம்மா ஆசையாக, அக்கறையுடன் செய்த பட்சணங்களை அவசரமாக வாய்க்குள் தள்ளி, பட்டாசுகளை அள்ளிக்கொண்டு தெருவுக்குள் சிட்டாகப் பறப்போம். பட்டாசுகள் – அடடா, அவற்றில் அப்போது காணப்பட்ட வகைகள்தான் என்னே! அந்த முக்கோண வடிவ ஓலைப்பட்டாசு! அது எங்கே போனது இப்போது? ஒரு அஞ்சு ரூபா நோட்டுக்கு 50 ஒலைப்பட்டாசுகள் கிடைத்தது அப்போது. அப்புறம் யானை வெடி, குதிரை வெடி, லெட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கெட்டுகள், இத்தியாதிகள் அந்தக்காலப் பொடிசுகளின் கனவுக்காட்சிகள். மைதானத்தில் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்குச் சென்று செய்யும் வித்தையும் உண்டு இதில். தரையில் யானை வெடி, லெட்சுமி வெடி போன்ற காதைக் கிழித்தெறியும் சமாச்சாரத்தை நிறுத்திவைத்து, அதன் மேல் அடியில் ஓட்டைபோட்ட பழைய டால்டா டின்னைத் தலைகீழாகக் கவிழ்த்துவைத்துத் திரியை ஓட்டைக்குள் நுழைத்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி செய்வார்கள் நம் குட்டிவில்லன்கள். பொடிசுகளில் முன் வரிசையில் சூரர்களும், பின்னிருந்து நோட்டம்விடும் தொடைநடுங்கிகளும் கூட்டமாக பார்த்திருக்க, ஊதுபத்தியினால் திரியைக் கொளுத்திவிட்டு எட்ட ஓடுவார்கள். அதிரடி வெடிச்சத்தம் காதைக்கிழித்தெறிய, டால்டா டின் கிழிந்த காகிதமாய் வானில் எரியப்படும் வேடிக்கையிருக்கிறதே அற்புதம்..அற்புதம் ! இன்னும் என்னென்னவோ வீர, தீர சாகஸங்கள் !
அப்போது நாம் வாழ்ந்திருந்தது சொர்க்கத்தில் என்று இப்போது நன்றாகத் தெரிகிறது. நினைத்துப் பார்க்கையில், கொஞ்சம் சந்தோஷமாகவும், உள்ளூர நிறைய ஏக்கமாகவும் இருக்கிறது.
ம்…தீபாவளி நல்வாழ்த்துகள் !
**
.