ஐதரேய உபநிஷதம் – 1

 

பூமாதேவியை வாழ்நாள் முழுதும் வணங்கி ஞானநிலையடைந்த ஐதரேய மகரிஷியினால் அருளப்பட்டது இந்த உபநிஷதம். ரிக்வேதத்தில் வருகிறது.  33 மந்திரங்களை மூன்று அத்தியாயங்களில் தருகிறது. அனைத்தையும் மிஞ்சும் அதிசயமான சிருஷ்டியின் (படைப்பின்) ரகசியம் பேசுகிறது.

முதல் அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கிறது: ஆதியில் ப்ரும்மம் என அழைக்கப்படும் இறை ஒன்றே இருந்தது’ ’நான் உலகங்களைப் படைப்பேன்!’ என அது ஒருகணம் நினைக்க பல உலகங்கள் தோன்றின. அவற்றில் குறிப்பாக ஐந்து உலகங்கள்பற்றிக் குறிப்பிடுகிறது இந்த உபநிஷதம். அம்பலோகம், சொர்க்கலோகம், மரீசீலோகம், மரலோகம், ஆபலோகம் ஆகியவை இவை. சொர்க்கலோகத்திற்கு மேலிருப்பதாக சொல்லப்படும் ’அம்பலோகம்’ தண்ணீர் உலகம் என அழைக்கப்படுகிறது. மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.  சொர்க்கலோகம் என்பது அடுத்தாற்போல் வருவது. தேவர்கள் வாழும் உலகம் இது. பூமிக்கு மேலிருப்பது ’மரீசீ’ என அழைக்கப்படும் ஒரு உலகம். ஒளியை ’மரீசீ’ என வடமொழியில் அழைப்பார்கள். சூரியன், சந்திரன், நட்சத்திரங்களென கிரகங்களின் ஒளியால் நிரம்பிய உலகம். அனைத்தும் ஒளிமயமாக இருக்கவேண்டும் இந்த உலகில் எனத் தெரிகிறது. மரீசீ லோகத்திற்கு அடுத்து வருவதுதான் ’மரலோகம்’. சமஸ்க்ருதத்தில் ’மர’ என்பதற்கு மரித்தல் என அர்த்தம் உண்டு. மரலோகம் என்பது இறப்பவர்கள், இறப்பவைகள் காணப்படும் உலகம். இதுவே  நாம் வாழும் பூமி. இதற்கடுத்து, ஐந்தாவதாக வருவது ’ஆபலோகம்’ எனச் சொல்லப்படுகிறது. இதுதான் பூமிக்குக் கீழிருப்பதாக கருதப்படும் ‘பாதாளலோகம்’.

உலகங்கள் படைக்கப்பட்ட பின் அவற்றிற்கான காவலர்களை உருவாக்க நினைத்தது பிரும்மம் (பரம்பொருள்). பிரும்மா என அழைக்கப்படும் படைக்கும் தேவனான பிரும்மதேவன் தண்ணீரிலிருந்து திரட்டப்பட்டு படைக்கப்பட்டதாக இது கூறுகிறது. ..

’தம் அப்யதபத்..’ என ஆரம்பிக்கும் முதல் அத்தியாயம்  பிரம்மதேவனைப்பற்றி, பிரும்மம் (அல்லது இறை) சிந்திக்க ஆரம்பித்ததைச் சொல்கிறது. பிரும்மம் சிந்தனை வயப்பட, பிரம்மதேவனின் வாய் பிளந்தது.. முதலில் பேச்சும், பேச்சிலிருந்து நெருப்பும் தோன்றின. பின்னர் மூக்கு, மூக்கிலிருந்து மூச்சு, அதிலிருந்து காற்று எனவும். இவ்வாறே கண்கள், காதுகள், இதயம் ஆகியவைகளும் தோன்ற ஆரம்பித்தன. இதயம் பிளந்தபோது அதிலிருந்து மனமும், மனதிலிருந்து சந்திரனும் உருவாகின என்கிறது. தொப்புளும், தொப்புளிலிருந்து அபானன், அபானத்திலிருந்து மரணம் என உருவாகியது. பின்னர் குறி தோன்றியது.. அதிலிருந்து விந்தும், விந்திலிருந்து நீரும் உண்டாகலாயிற்று. பிரும்மதேவனிடமிருந்து இவ்வாறு, உலகங்களும், இயற்கையும், உயிரினங்களும் உருப்பெற்றன என்றெல்லாம் சொல்லிச் செல்கிறது.

சிருஷ்டிபற்றி உருவகங்களாக, கவித்துவமாக  விவரிக்க முயல்கிறது இந்த உபநிஷதம். பல விஷயங்கள் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருப்பதால்,  பூடகமாக சொல்லப்பட்டிருப்பதால், புரிந்துகொள்வது கடினமாக அமைந்திருக்கிறது. ஏகப்பட்ட உயிரினங்களைப் படைத்த பிரும்மா ஒரு பசுவைப் படைத்தார். ஏற்கனவே படைக்கப்பட்ட மற்ற உயிரினங்கள் ’எங்களோடு சேர்ந்து வாழ இது போதாது. மேலும் பெரிதாக ஏதாவது தாரும்!’ என்றன. குதிரையைத் தோற்றுவித்தார் அவர். அவைகள் திருப்திப்படவில்லை. இந்நிலையில் மனிதனை லாவகமாகப் படைத்து அவைகளின் முன் நிறுத்தினார் பிரும்மதேவன். உயிரினங்கள் மகிழ்ந்தன. ’ஆஹா! அபாரம்! இவன் ஒரு உன்னதம்! ‘ என்று குதூகலித்தன.  இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் உட்பட்ட உயிரினங்கள் யாவும் பிரும்மாவால் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டன. எந்தக் கடல் இது? – என்கிற  பிரமிப்பு உடனே  ஏற்படுகிறது.

ஆதிசங்கரர் இங்கே புகுந்து  விளக்குகிறார்: வாழ்க்கை எனும் நீண்ட, நெடுங்கடல்.  நித்யக்கடல். ஆசை, அறியாமை, செயல் என்பவை விளைவிக்கும் தீராதுக்கமே அந்தக்கடலின் அடங்கா நீர். இனந்தெரியாத் துன்பங்கள், நோய்கள், முதுமை, சாவு எனும் கொடிய ஜந்துக்கள் வாழும் கடலிது. அலைக்கழிக்கும் கவலைகள், உளைச்சல்கள், தீமைகள் என எகிறும் ஆயிரமாயிரம் அலைகள். புற உலகத்தோடு புலன்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளால் விளையும், நீடிக்கா அற்ப இன்பங்கள்தாம் அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச இளைப்பாறல்கள்.  வதைக்கும் முடிவிலா மாயக்கடலில் விழுந்தன உயிர்கள். விழுந்தவைகளை பிரும்மதேவன் உற்றுப் பார்த்தார். எடுத்துக்கொள்ளுங்கள் என பசி, தாகமென அவைகளுக்கு மேலும் வழங்கினார். பிரும்மம் அல்லது இறையிலிருந்து பிரும்மதேவன் (மற்றும் ஏனைய தேவர்கள்), பிரும்மதேவன் மூலமாக உலகங்கள், வெளி, இயற்கை, உயிரினங்கள் எனத் தோற்றம்பெற்றன. கூடவே, மனித ஜீவன், இவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களிலெல்லாம் மேலானது, உயர்ந்தது எனக் கோடிட்டு நகர்கிறது இந்த உபநிஷதம்.

மேலும் கவிதைவடிவில் இந்த உபநிஷதம். படைப்புக்காட்சிகளை விரிக்கிறது. பிரும்மதேவன் மூலமாக எல்லாவற்றையும் படைத்த பிரும்மம் எனும் இறை மேலும் சிந்தித்தது. இவர்களுக்கான உணவு? என நினைத்தது. அதன்முன் தென்பட்ட தண்ணீரை அது பார்க்க, அதிலிருந்து உணவு உருவாகியது .  இந்த இடத்தில் இந்த உபநிஷதத்தை எழுதிய ஐதரேய முனிவரின் கவிநயம் நம்மை ஆட்கொள்கிறது:

அவ்வாறு படைக்கப்பட்ட உணவு ஓடலானது!  எட்டாதது, எளிதில் கிட்டாததாயிற்றே? மனிதன் திகைத்தான். அதனை ‘வாக்கினால்’ துரத்திப்பிடிக்க முயற்சித்தான். நடக்கவில்லை. வாக்கினால் பிடிக்க முடிந்திருந்தால், ‘உணவு’ எனச் சொல்வதாலேயே திருப்தி கிட்டியிருக்குமே அவனுக்கு!

அதனை நுகர்வதால் பிடிக்கமுடியுமா? முயற்சித்தான். முடியவில்லை. நுகர்ந்தே பிடித்துவிட்டால்,  நுகர்வதாலேயே திருப்தி அடைந்திருப்பானே அவன்?

ஓடுகின்ற உணவைத் தன் பார்வையால் பிடிக்க எத்தனித்தான். சிக்கவில்லை. சிக்கியிருந்தால் அதனைப் பார்ப்பதாலேயே மனிதன் பசி தீர்ந்து திருப்தியடைந்திருப்பானே?

ஓடும் உணவைக் கேட்பதன்மூலம் பிடிக்க முயன்றான். நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், உணவைப்பற்றிக் காதால் கேட்பதிலேயே அவனுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்குமே?

அந்த உணவைத் துரத்தித் தொட்டால் திருப்தி கிட்டுமா? முயன்றான். அதுவும் நடக்கவில்லை. தொட்டதனால் பசிதீருமென்றால், உணவைத் தொட்டாலே போதுமே..

இப்படி நிற்காது ஓடும் உணவை மனிதன் சிந்தனையால் கைப்பற்ற நினைத்தான். நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், உணவைப்பற்றி நினைப்பதினாலேயே பசி தீர்ந்திருக்குமே..

உணவைத் துரத்தித் தன் குறியால் அடைய நினைத்தான்  மனிதன்.  முடியவில்லை. குறியின்மூலம் அடைந்திருந்தால், அதனை வெளிப்படுத்துவதிலேயே திருப்தியடைந்திருப்பான் அல்லவா?

இறுதியாக, ஓடும் உணவை அபானன் என்பதால் பிடிக்க முயன்றான் மனிதன். பிடித்துவிட்டான். அபானனே உணவைப் பிடிக்கிறது. பிராண சக்தியின் ஒரு அங்கமான அபானனே, வாய்வழி உள்ளே செல்கின்ற உணவை ஏற்று, ஜீரணித்து, அவயவங்களுக்கு வேண்டிய சக்தியாக உருமாற்றிப் பகிர்ந்து தருவது. எனவே அதுவே உணவின்மூலம் உயிரைத் தாங்க உதவுகிறது.

படம்: இண்டர்நெட்/கூகிள்

(தொடரும்)

 

 

மாண்டூக்ய உபநிஷதம்

வ்வொரு வேதமும் மூன்று முக்கிய பிரிவுகளைக்கொண்டது. ’சம்ஹிதை’ என்பது வெவ்வேறு தேவதைகளிடம் மனிதன் செலுத்தும் பிரார்த்தனைகள்பற்றியது. ’பிராம்மணம்’ என்பது ஒரு குறிக்கோள்கொண்டு செய்யப்படும் யாகங்களின் முறைகள், நியமங்கள் பற்றிச் சொல்வது. மூன்றாவது பகுதியே உபநிஷதங்கள் – சராசரி நிலையிலான பிரார்த்தனைகள், வேண்டுதல்களைத் தாண்டி, மனிதன் ஞானநிலை நோக்கித் திரும்புகையில் இவை வழிநடத்துகின்றன. பிரும்மம் அல்லது இறுதி உண்மை எனும் ஆன்மீகத்தின் உச்சப்புள்ளிபற்றி அவனோடு நின்று ஆய்பவை, அறியாத உன்னதத்தின் பாதையற்ற பாதையில்   அழைத்துச்செல்பவை.. அணுவின் அணுவாக, சூட்சுமத்தின் சூட்சுமமாக, வெளியின் வெளியாக இப்படி ஏதோ ஒரு மர்மம் இந்த பிரபஞ்சமுழுதும் விரவிக்கிடக்கிறது.. அதற்குள் இருக்கிறது எல்லா ரகசியங்களும் . எதனை அறிந்தால் எல்லாவற்றைப்பற்றியும் அறிந்ததாக ஆகிவிடுமோ, அதனை நோக்கி மனிதனை அழைத்துச் செல்வது உபநிஷதம் ‘என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

‘ஓங்காரம்’  என்பது இறைசக்தியின் சாரம் எனச் சொல்கிறது இந்த மாண்டூக்ய உபநிஷதம். அதர்வண வேதத்தின் இறுதியில் வரும் உபநிஷதம்  இது. ஓங்காரம், பிரணவம் என அழைக்கப்படும் ’ஓம்’ எனும் ஒலியே ஆதி ஒலி. ஆதிமந்திரம். அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்று ஒலிநிலைகளை (primordial acoustic forms) தன்னகத்தே கொண்டது. மிகச் சரியாக, உணர்வுபூர்வமாக  உச்சரிக்கப்படவேண்டிய மந்திரம். மேலோட்ட உச்சரிப்பில் பிரயோஜனமில்லை. ‘அ’ எனும் ‘அகரம்’ நாக்கின் அடிப்பகுதியான தொண்டைக்குழியில் ஆரம்பிக்கிறது. அகர சப்தம் பிற சப்தங்களில் இருந்து விலக்கமுடியாமல் ஒன்றியிருப்பதால் அதிமுக்கியமானது, ஆதாரமானது. கீதையில் தன்னைப்பற்றி அர்ஜுனனிடம் சொல்கிறான் கருநீலக்கண்ணன் : ’அக்ஷராணாம் அகாரோஸ்மி’. (அட்சரங்களில் நான் ’அ’  எனும் அகரம்!)  ‘உ’ எனும்  ‘உகரம்’  நாக்கின் மேல் கடக்கிறது. ’ம்’ எனும் ’மகரமாக’ உதட்டு நுனியில் வந்து முடிகிறது ’ஒம்’  எனும்  மந்திரம். அகரத்தில் மென்மையாகத் துவங்கி, உகரத்தில் ஒலி மிகுதியாகி, பின் மென்மையாக   ..ம்.. என முடியும் ஒலிநிலைகள். பிரும்மம், பிரபஞ்சம், மனிதன் என்கிற தத்துவத்தை தன்னுள்ளே கொண்டு,  ’ஓம்’ என ஒலித்து அதிர்வலைகளை உள்ளும் வெளியுமாக  எழுப்பும் உன்னதம்.

யாராலும் எழுப்பப்படாத அனாஹத த்வனி (ஆதியும் அந்தமுமில்லா சப்தம்) ஓங்காரம். இந்தப் பிரபஞ்சத்தில் பூதம் (Bootham) அதாவது கடந்தவை அல்லது மறைந்தவை, பவத் (Bhavath) எனப்படும் இருப்பவை, பவிஷ்யத்  (Bhavishyath) எனப்படும் ‘இனி வரவிருப்பவை’ மற்றும் ஸர்வம்  (அனைத்தும்) ஓங்காரமே  என்கிறது தன் முதலாவது ஸ்லோகத்தில் இந்த உபநிஷதம். பிரபஞ்சத்தில் ஓங்கார சப்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருப்பதாயும், தவயோகிகளால் அதனைக் கேட்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

{சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் ..

–இது திருமூலர். அதாவது கோவிலென இருக்கும்  இந்த நல்லுடம்பில் சிரத்தை, இறையுணர்வோடு இடது வலமாகப் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) நெடுங்காலம் முறையாகச் செய்துவந்தால், பகலிலும் இறைஒலி கேட்கும்  எனச் சொல்லிச்சென்றார்.}

அடுத்த ஸ்லோகத்தில் ’ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரும்ஹ, ஸோயமாத்மா சதுஷ்பாத்…’ என விஷயத்தைத் தெளிவாக்க முயல்கிறது. இந்த ஆன்மா ப்ரும்மம், இப்படி (பிரபஞ்சத்தில் காணப்படுகிற) எல்லாமும் ப்ரும்மமே (பரம்பொருளே) எனச் சொல்கிறது.  எந்த மூலத்திலிருந்து ஒன்று உண்டாக்கப்படுகிறதோ அது, அந்த மூலத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். ஆதலால் இந்தப் பிரபஞ்சம் முழுதும் மனிதன் உட்பட எல்லா உயிர்களும், ஜடப்பொருட்களும்கூட அந்த இறையின் குணக்கூறுகளைக்கொண்டுதானிருக்கும். அதனால்தான் அனைத்தும் ப்ரும்மமே எனச் சொல்லப்படுகிறது இங்கே. இறைசக்தி மனிதனில் பிரகாசிக்கையில் அது ’ஆன்மா’ என அழைக்கப்படுகிறது.

(தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

-திருமூலர் இங்கே சிவவாக்கியர் மொழியில் நறுக்குத்தெறித்தார்போல் பேசுகிறார்)

இந்த மாண்டூக்ய உபநிஷதத்தில் வரும் ’அயமாத்மா ப்ரும்ஹ’ ( ’(எனக்குள்ளிருக்கும்) இந்த ஆன்மா ப்ரும்மம்’) என்பது மஹாவாக்கியம் எனக் கொள்ளப்படுகிறது.

அடுத்த ஸ்லோகம் ஆன்மாவின்  நான்குவித பரிமாணங்களைக் குறிப்பிடுகிறது. ‘ப்ரதம: பாத: வைஸ்வானர.. ‘ – அதாவது ஆன்மா தன் முதல் பரிமாணத்தில் ‘வைஸ்வானரன்’ என அழைக்கப்படுகிறது.. வைஸ்வானரன் என்பது விழிப்புநிலையில் உள்ளவன். இரண்டாவது நிலையை ‘தைஜஸன்’ அதாவது ‘கனவுநிலையில் இருப்பவன்’ என்கிறது. மூன்றாவது பரிமாணமாக ப்ராஜ்ஞன் – ஆன்மா ’ஆழ்ந்த உறக்கநிலை’யில் இருப்பவனாகக் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவின் விழிப்புநிலை உணர்வுபூர்வமாக, புறவயமாக இருக்கிறது.  தான் வாழ நேர்ந்திருக்கிற வெளி உலகை, அதன் சூழ்வெளியான மாபெரும் பிரபஞ்சத்தை ஆன்மா, இந்நிலையில் அனுபவிக்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியுமாகிறது.

இரண்டாவது நிலையான தைஜஸன் (கனவுநிலை), தன் உணர்வுகளை அகமுகமாகத் திருப்பிவிடுகிறது. இங்கே புறவுலகு மறைந்து, மனவுலகு தெரிய,  அதனை அனுபவிக்கிறது ஆன்மா.

மூன்றாவது பரிமாணமாக சொல்லப்படுவது,  ‘ப்ராஜ்ஞன்’ (ஆழ்உறக்கநிலை)- இதனை, புறஅனுபவங்கள் ஒடுங்கி, உணர்வு உட்புறமாகத் திரண்ட நிலை என்கிறது. அனுபவங்கள், உணர்வுகள் ஒடுங்கிய, மறைந்துவிட்ட நிலையில் ஆன்மா ‘ஆனந்தமய:’ –ஆனந்த ரூபமாக, ‘ஆனந்தபுக் ஹி’ – ஆனந்தத்தை அனுபவிப்பதாக இருக்கும் நிலை என்கிறது.

இதன் நான்காவது நிலையாக ஒன்றுள்ளது. ஆழ்ந்த கவனிப்பை, அறிதலை அது வேண்டுகிறது. இதனை இந்த உபநிடதம் இப்படி விளக்குகிறது: நான்காவது நிலை எனப்பட்டாலும், முதல் மூன்று நிலைகளை உள்ளடக்கியதும், அதே சமயம் அவற்றைத் தெளிவாகக் கடந்தநிலையுமாகும். இது புறமுக நிலையல்ல, அகமுகநிலையல்ல, இரண்டும் கலந்த உணர்வுகுவிந்த நிலையுமல்ல. இதனைக் காண இயலாது. புரிந்துகொள்ளமுடியாது. அடையாளங்கள் இல்லாத, விளக்கமுடியாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத நிலை. மங்கலமானது, சாந்தமே வடிவானது, ’த்வைதம் இல்லாதது’, அதாவது ‘இரண்டற்றது’. {‘த்வைதம்’ (state of duaity) என்பது : நல்லது, கெட்டது/ பாவம், புண்ணியம்,/ நிலையான, நிலையற்ற/ போன்ற இரண்டிரண்டாக, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைப் பார்க்கும்/புரிந்துகொள்ளும் மனநிலை}. அத்வைதம் (state of non-duaity) இது . மனிதனின் உண்மையான ‘இயற்கை நிலை’ ஆதி நிலை இதுவே. தனக்குள்ளிருக்கும் ஆன்மாவை இவ்வாறு ‘அறிபவன்’ இந்நிலையில் ஒளிர்கிறான்.. ப்ரும்ஹத்தை உணர்ந்தவனாக ஆகிறான். ..

வர்ணனையை மிஞ்சிய இந்த ஆன்மாவை (ப்ரும்மத்தை) எழுத்துக்களில், சொல்லாகக் குறிப்பிட நேர்ந்தால், அதுவே ’ஓம்’ எனும் அகர, உகர, மகர ஒலி அடுக்குகளைக்கொண்ட ஓங்காரம்.

மேலும் ஓங்காரத்தை விளக்கிச் செல்கிறது:

ஓம் எனும் மந்திரத்தின் முதற்பகுதியாகிய ’அ’ என்கிற அகரம், ஆன்மாவின் முதல்நிலையான விழிப்புநிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அகரம் எல்லா சொற்களிலும் கலந்துள்ளது. அதேபோல, விழிப்புநிலையும் மற்ற இரண்டு நிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. கனவுகளாக வெளிப்படும் ஆழ்மனப்பதிவுகளுக்கு விழிப்புநிலை அனுபவங்களோடு தொடர்புண்டு. ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புநிலை அனுபவங்கள், தனித்தனியாகத் தெரியாமல் உணர்வுத் திரளாக மறைந்திருக்கின்றன. அகரம் ஓங்காரத்தின் ஆரம்பநிலையாக இருப்பதுபோல, விழிப்புநிலை ஆன்மாவின் (பிரும்மத்தின்) ஆரம்பநிலையாக உள்ளது.

ஓங்காரத்தில் இரண்டாவது நிலையாக வரும் ’உ’ எனும் ‘உகரம்’ உரக்க உச்சரிக்கப்படுகிறது. ஆன்மாவின் இரண்டாவது நிலையான கனவுநிலையோடு ஒப்பிடப்பட்டுள்ள இது, உயர்வானதாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில், கனவுநிலையில், உணர்வு மனம் (Conscious mind) ஓய்ந்துவிடுகிறது. ஆழ்மனம் (Subconscious mind) எனும் மனதின் பெரும்பகுதி கனவுநிலையில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் எல்லைகள் மிகப் பரந்தவை. இது விழிப்பு நிலையின் வெளிஉலக அனுபவங்களோடும், மனதின் ஆசைகள், லட்சியங்கள், பயங்கள் என்பதோடு, எதிர்காலம், இறைவன் என்றெல்லாம் விஸ்தாரமாக வெவ்வேறுதளங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. இதைப்போலவே ஓங்காரத்தின் நடுவில் வரும் ’உ’ எனும் உகரம், ’அ’ எனும் ஆரம்ப, மற்றும் ‘ம்’ எனும் இறுதிநிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது.

ஓங்காரத்தின் ‘ம்’ என்பது மூன்றாவது பகுதி. இது , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆன்மாவின் மூன்றாவது நிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஓம் எனும் மந்திரத்தின் ‘அ’வும், ‘உ’வும்,  ‘ம்’-ல் இணைகின்றன. கலக்கின்றன. அதைப்போலவே, ஆன்மாவின் முதல் இரண்டு நிலைகளான விழிப்புநிலை, கனவுநிலை ஆகியவை, மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒடுங்குகின்றன, நிரம்புகின்றன. ஓம் எனும் மந்திரத்தில் ‘ம்’ –ஆனது,  ‘அ’ –வையும், ‘உ’வையும் தனக்குள் அடக்கிக்கொள்கிறது. அதைப்போலவே,  ஆன்மாவின் ஆழ்ந்த உறக்கநிலை – விழிப்பு மற்றும் கனவு நிலைகளை தன்னகத்தே கிரகித்துக்கொண்டு, தனக்குள் நிரப்பி, திரளாக வைத்திருக்கிறது.

இவற்றைத்தாண்டியும் பிரணவ மந்திரத்தின் நான்காவது பகுதி ஒன்றிருக்கிறது. ஒலி இல்லாததாய்த் தெரிவது. ‘பகுதி’ என மற்றவற்றைப்போல் அளவிட, விளக்கிவிடமுடியாது. சொல், செயல், உணர்வு கடந்தது. பிரபஞ்ச உணர்வையும் கடந்ததாக, மங்கலமானதாக இது அறியப்படுகிறது. ’ஓம்’ என மந்திரத்தை உச்சரித்து முடித்தபின் மீண்டும் ’ஓம்’ என ஆரம்பிக்குமுன் வரும் இடைவெளி இது. சாந்தநிலை. ‘ஓம்’ எனும் ஓங்காரம் ‘அ’, ‘உ’, ‘ம்’ மற்றும் நான்காவதான  ‘சாந்திநிலை’ (அமைதிநிலை)யும் கூடியது. இதனை இவ்வாறு அனுபூதியாக அறிபவன், உணர்பவன் ஆன்மாவை ஆன்மாவால் (ப்ரும்மத்தை ப்ரும்மத்தால்) அடைந்தவனாகிறான் என்கிறது இந்த உபநிஷதம்.

Picture courtesy: Internet/ Google

**

கேன உபநிஷதம்

தனால் இந்தப் பயணம்? – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே சாமவேதத்தில் வரும் இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்ளே’ இறக்கிவிட்டுப் பயணிக்கவிடுகிறது.

’ஓம். . கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன:’ என்கிறது ஆரம்பத்திலேயே.’(கேன’ என்பதற்கு ’எதனால்’ (எந்த சக்தியினால்) என்று அர்த்தம். எந்த சக்தியினால் விரும்பப்பட்டு, ஏவப்பட்டு, மனம் இப்படியெல்லாம் செல்கிறது, பயணிக்கிறது? என்கிற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறது. ’இறுதிஉண்மைக்கான தேடுதலில்’ இருப்பவன், தன் மனத்தின் தன்மைகண்டு கூர்மையாகி, தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறான் இப்படி. மேலும் கேள்விகள் வருகின்றன: முக்கியமாக, பிராணன் என்று ஒன்றிருக்கிறதே நமக்குள்.. அதனை இயக்குவது, யாரோ? வாக்கு எனப்படும் சொல், பேச்சு என்பதெல்லாம் நம்மிலிருந்து எப்படிப் புறப்படுகின்றன? புலன்களை செயல்படுத்தும் சக்தி எது? என்கிற ரீதியில் மேலும் மேலும் கேள்விகள் துளைக்கின்றன..

பிராணன் எனப்படும் உயிர்சக்தி சூட்சுமமாக எங்கும் நிறைந்திருக்கிறது. உலகை இயக்குகிற ஆற்றல்படைத்தது. அதன் ஒரு துகள் – துகளினும் துகள் நமக்குள்ளும் இருக்கிறது. அதனாலேயே இயங்குகிறோம். எனச் சிந்திக்கையில், ஜீவனின் (மனிதனின்) ஸ்தூல உடம்பு, மனம் எனும் சூட்சும வடிவம், இவற்றோடு பிராணனும் யாரால் இயங்குகின்றன என்கிற கேள்வியில் வந்து நிற்கிறது. இன்னுமொரு ஸ்லோகம் ’ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரய் மனஸோ மனோ யத்’ என ஆரம்பித்து விஷயத்துக்கு வருகிறது. அதாவது காதின் காதாக.. மனதின் மனமாக.. என்று செல்லும் அது, தெளிவான ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. காதின் காதாக, கண்ணின் கண்ணாக, வாக்கின் வாக்காக, மனதின் மனதாக, பிராணனின் பிராணனாகவும் இருப்பது ஒன்றே. அதுவே அது (பிரும்மம்) என நிற்கிறது இறுதியாக. தன் கடுமையான தவத்தினால், ஆழ்ந்த அக ஆய்தலில் உச்சம்பெற்று, உணர்வுநிலை திறக்கப்பட்டவன் இதனை உணர்கிறான். அவ்வாறு கண்டடைந்தவன் எவனோ அவன், இந்த புலன்களின் உலகிலிருந்து விடுபட்டுவிடுகிறான். பிறப்பு-இறப்பற்ற மேன் நிலையை எய்துகிறான் – என்கிறது.

மனதின் இயக்கத்தை, செயல்பாடுகளை துரத்திச்சென்று ஒரு பயனும் இல்லை என விழிப்புணர்வுபெற்றவன் புரிந்துகொள்கிறான். ஆதலால் அவன் மனதின்பின்னே இருக்கும் ஆன்மாவை அறிய முற்படுகிறான். மேலும் தொடர்கிறது. உடம்பு-மனம் என்கிற அமைப்பின் ஊடே, அழியாத உண்மைப்பொருளாக இருப்பது ஆன்மா. தானாகவே நிற்கும் அது உண்மையில் எத்தகையது என்கிற கேள்விக்கு குரு பதில் சொல்வதாக வருகிறது இந்த ஸ்லோகம்:

ந தத்ர சக்ஷூர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன:
ந வித்மோ ந விஜானீமோ யதைத தனுசிஷ்யாத்

அது கண்ணால் நோக்கப்பட முடியாதது; வாக்கும் (பேச்சு, சொற்களும்) மனமும் (சிந்தனைகளும்) அதனை நெருங்கமுடியாது. எனவே, எத்தகைய குணம்கொண்டது அது எனத் தெரியாது.. சொற்களில் சிக்காத ஒன்றை எப்படிப் புரியவைப்பது என எங்களுக்கும் தெரியாது (ஆனால் அவசியம் புரிந்துகொள்ளவேண்டியது) என்று ஆன்ம அனுபூதிபெற்ற குரு (ரிஷி) தன் சீடனுக்கு சொல்லும் வகையில் இது அமைந்துள்ளது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐம்புலன்கள் வெளிஉலகை அறிவதற்காக, தொடர்புகொள்வதற்காக மட்டுமே. அவற்றால் அகத்தினுள் உறைகின்ற ஒன்றை அறியமுடியாது. புலன்களால் அறியமுடியாததை, புலனைக்கொண்டு எப்படி சொல்வது? அதனால்தான் அதைப்பற்றி வார்த்தைகளில் தன்னால் சொல்லமுடியவில்லை என சீடர்களுக்குப் புரியுமாறு விளக்குகிறார் வேதகால ரிஷி. மேலும் சொல்கையில், அது மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட வித்தியாசமானது. எதையெல்லாம் அவன் இன்னும் அறியவில்லையோ அவற்றைவிடவும் மேலானது. ஞானநிலை அடைந்து அதனை ‘அறிந்த’ எங்களது பூர்வாச்சாரியர்களால் (ரிஷிகள்) இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

’யத் வாசானத்யுதிதம் யேன வாகப்யுத்யதே..’ எனத் தொடங்கும் ஸ்லோகம் இப்படி விளக்க முற்படுகிறது: ’எது சொல்லால் (வாக்கினால்) விளக்கப்படமுடியாதோ, ஆனால் எதனால் சொல்லப்படுகின்ற சொல் விளக்கம், ஒளி பெறுகின்றதோ அதுவே பிரும்மம். எதனைக் கண்கள் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே அது. எதனைக் காதுகள் கேட்கமுடியாதோ, ஆனால் எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுதான் அது.. மேலும், எதனை மூச்சு தீண்டமுடியாதோ, நுகரமுடியாதோ, ஆனால் எதனால் மூச்சுவிடுதல் (மனிதனுக்கு/உயிர்களுக்கு) சாத்தியமாகிறதோ, அதுவே பிரும்மம்’ என அறிவாயாக என்று சீடனுக்கு உபதேசிக்கிறார் குரு. கூடவே ’..அதுதான் பிரும்மம்’ என விளக்கும் ஒவ்வொரு ஸ்லோகதுக்கு அடியிலும் ஒரு வாக்கியம் வருகிறது. அது: இங்கே வணங்கப்படுவது அது அல்ல!’
இங்கே கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது. ஆன்மா என சூட்சுமமாக அறியப்படுவது பிரும்மம், பரம்பொருள், பரப்பிரும்மம். ஆனால் சாமான்யன் எதை வணங்குகிறான்? ஒரு உருவத்தை, பிம்பத்தை – அது விக்ரஹ (சிலை) வடிவிலோ, ஓவிய (பட) வடிவிலோ இருக்கிறது. ஏனெனில், சாதாரண மனிதனால் சூட்சும வடிவில் , அதாவது வடிவில்லா வடிவில் இருக்கும் இறையை வணங்க, தியானிக்க முடியவதில்லை. ஆனால் அவனும் இறைவழி செல்லவேண்டுமே – உய்வதற்கு, கடைத்தேறுவதற்கு. அதற்கான ஒரு எளிய முதற்படியாக, வழிபட ஏதுவாக கோவில்களில் இந்த விக்ரஹங்கள், வீடுகளில், ஆசிரமங்களில், மடங்களில் கடவுள்களின் சித்திரங்கள், படங்கள் ஆகியவை. ஆரம்பப் படிநிலைதான் இது. ஸ்தூல வடிவத்தில் அகப்படாத, ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் இறையை, பிரும்மத்தை மனிதன் தன் புற அங்கங்களைக் கொண்டு காண இயலாது. ஆனால் அதற்காக அவன் தன்னை இயக்கும் தெய்வசக்தியை, பரம்பொருளை விட்டுவிடமுடியுமா? புறத்தே சுற்றித் திரிந்தவன், தன் அகத்துக்குள் பார்க்கிறான். பயணிக்க ஆரம்பிக்கிறான். அதற்கான சாதனாக்களை (தீவிர, தொடர்ந்த இறைசிந்தனை, மனம் ஒருநிலைப்படல், தியானம் போன்றவை) அவன் செய்யவேண்டியிருக்கிறது. கடும் சோதனைகள் நிறைந்த அந்தப் பாதையிலோ செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். தேடுபவன் அதற்காக அந்தப்பாதையை விட்டு விலகுவானா? சைவசமய முதன்மை நாயன்மார்களில் ஒருவரான அப்பர், இறுதியில் தான் அடைந்த அனுபூதி நிலையைப்பற்றி ‘தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்’ எனக் குறிப்பிடுகிறார்.

பிரும்மத்தை (இறுதி உண்மை) நோக்கிய கரடுமுரடான பாதையில் மேலும் முன்னேறுகிறது கேன உபநிஷதம். ஆன்மீகத் தேடலின் ஆரம்பநிலைகளில் சீடனுக்குத் தனக்கு அது தெரிந்துவிட்டது என்பதான மயக்கம் உண்டாகிறது. அதனைத் தன் குருவுக்கு சொல்கிறான். அவர் சொல்கிறார்.: ’அதற்குள் பிரும்மத்தைக் கண்டுவிட்டதாக உனக்குத் தோன்றினால், நீ அறிந்தது மிகக்குறைவுதான். மீண்டும் தொடர்ந்து தியானத்தில், உண்மை வழியில், சாதனாவில் இரு. தேடுதல் தீவிரமாகட்டும்’ என்று ஊக்குவிக்கிறார். மேலும் மேலும் சீடன் சிரத்தைகாட்டி, தியானித்து நாட்கள் கடந்தபின் அவனின் சலசலப்புக்கு குரு (வேதரிஷி) தெளிவுபடுத்துகிறார். ‘ என்னை எனக்குத் தெரியும்.. ஆனால் எனக்குள்ளிருக்கும் பிரும்மத்தை (ஆன்மா) தெரியாது . அதே சமயத்தில், தெரியவில்லை என்றும் உறுதியாகச் சொல்லமுடியாதுபோலிருக்கிறதே’ என்கிற நிலைக்கு நீ வந்திருந்தால், இறை அறிதலில் நெருங்குகிறாய் என அர்த்தம். மேலும் ‘யார் நன்றாகத் தெரிவதாகச் சொல்கிறானோ அவன் அறியாதவன். யார் தனக்குச் சரியாகத் தெரியவில்லை எனும் நிலையிலிருக்கிறானோ, அவனே அறிபவன். மேலும் மேலும் சாதனாக்கள் மூலம் தன்னை ஈடுபடுத்தி உணர்வின் படிப்படியான நிலைகளில் எவனொருவன் முன்னேறுகிறானோ, அவன் அந்த ஆன்மாவிலிருந்தே(பிரும்மத்திலிருந்தே) மேன்மேலும் ஆற்றல் பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வடைகிறான் என்கிறது இந்த உபநிஷதம். மேலும் எச்சரிக்கவும் செய்கிறது: ’இங்கேயே, இந்த பிறவியிலே ஒருவன் பிரும்மத்தை இவ்வாறு அறிந்துகொண்டானேயானால், அவன் எல்லா உயிர்களிலும் பிரும்மத்தின் இருத்தலை உணர்கிறான். ஒருவேளை, இந்த பிறப்பில் அப்படி அறியமுடியாதுபோனால், அது அந்த ஜீவனுக்கு மாபெரும் இழப்பு’ என்கிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் பிரும்மமே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கதையாக விளக்குகிறது இந்த உபநிஷதம்.

அரக்கர்களுடனான ஒரு யுத்தத்தில் வென்றபின் களித்திருந்தனர் தேவர்கள். தங்களைத் தாங்களே மெச்சி மகிழ்ந்திருந்தனர். கர்வம் தலைக்கேறிவிட்டதை பிரும்மம் அறிந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்து, ஒரு யக்ஷனாக உருவெடுத்து அவர்கள் இருக்கும் பகுதியில் உலவியது. தேவர்கள் தங்கள் உள்ளுணர்வினால், ஏதோ ஒரு அதீத சக்தி இங்கு வந்திருக்கிறது என அறிந்தனர். ஆனால் என்ன அது என்று தெரியாது திகைத்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் தேவேந்திரனான இந்திரன் அக்னிதேவனை அழைத்து ’நீர் போய் அது யார், என்ன எனத் தெரிந்துகொண்டுவாரும்..’ என அனுப்பினான்.

அக்னிதேவன் யக்ஷனின் முன் வந்து நின்றான். யக்ஷ உருவிலிருந்த பிரும்மம் அக்னியைப் பார்த்து ’யார் நீ’ என்றது. ’அக்னியே நான்!’ என்றான் அவன். ’உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்றது பிரும்மம். ’எதனையும் நொடியில் எரித்து சாம்பலாக்கிட என்னால் முடியும்!’ என்றான் அக்னிதேவன். ’ஓ.. அப்படியா!’ என்றது பிரும்மம். ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன்னால் போட்டது. ’எரி இதனை!’ என்றது. அக்னி புல்லைப் பார்த்தான். ப்பூ! என்று நினைத்தான். கடும் தனலாக உலர்ந்தபுல்லின் மீது பாய்ந்தான். புல்லுக்கு ஒன்றும் ஆகவில்லை. நிறம்கூட மாறவில்லை. அக்னியால் புல்லை எரிக்க முடியவில்லை.மீண்டும் முயன்றான். தோற்றான். சோர்ந்தான். என்னால் புல்லைக்கூடவா எரிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துக்கொண்டே தேவர்களிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ’அந்த யக்ஷன் யாரென அறியமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் வாயுவை நோக்கினான். ’நீர் போய் அறிந்து வாரும்!’ என்றான். வாயுதேவன் விரைந்து வந்து யக்ஷன் முன் நின்றான். அதே கேள்வி. ‘நான் வாயு!’ என்றான் இவன். ’என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று யக்ஷன் கேட்டதற்கு, ’இங்குள்ள எதனையும் காற்றாக வீசித் தூக்கி எறியும் சக்தி எனக்குண்டு!’ என்றான் சிரித்துக்கொண்டே. ’ஓ! அப்படியா.. எங்கே இந்தப் புல்லைத் தூக்கி வீசு!’ என்றது யக்ஷனாய் நின்ற பிரும்மம். வாயுதேவன் அற்பப் புல்லைப் பார்த்து மனதில் சிரித்துக்கொண்டான். அலட்சியமாக அதன்மீது வீசினான். அசைந்துகொடுக்கவில்லை அது. ஆச்சரியமுற்று, உக்கிரமாக வீசி, அதனைத் தூக்கிவீசப் பார்த்தான். ம்ஹூம்! ஒன்றும் நடக்கவில்லை. புல் அசைவற்று போட்டது போட்டபடிக் கிடந்தது. யக்ஷனைக் குழப்பத்துடன் பார்த்தவன் திரும்பிச் சென்று தேவர்களிடம் நடந்ததைச் சொன்னவன். ’என்னாலும் அந்த சக்தியைப் புரிந்துகொள்ளமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் ஆச்சரியம் மிகக்கொண்டான். இதில் ஏதோ பெரும் சூட்சுமம் இருக்கிறது. நமக்குப் புரியவில்லை. புரிந்துகொள்ளும் சக்தி நமக்கில்லையோ எனக் கலங்கியவாறு அவனே சென்றான். யக்ஷன் மறைந்துவிட்டிருந்தான். அங்கே வானில், பொன்னொளி எங்கும் ஜொலித்து வீச, பேரழகுடன் ஒரு பெண்சக்தி உருவந்தாங்கி காட்சிதந்தது. உமாதேவி! இந்திரனின் கண்கள் பனித்தன. பணிந்து வணங்கினான். மனதில் அவளை முழுதுமாக நிறுத்திப் பிரார்த்தித்தான். ‘எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. யார், எது இந்த மர்மசக்தி? அன்னையே, அருள்வாய்’ என மனதாரத் தாழ்ந்து இறைஞ்சினான். உமாதேவி முகமலர்ந்தாள். ’தேவேந்திரா! தேவர்களான உங்கள் சக்தியினால் உணரமுடியாது அதை எனக் கண்டுகொண்டாய். பிரும்மாண்டம், சூட்சுமத்தின் சூட்சுமம் அது. பிரும்மம். பிரபஞ்சத்தின் எல்லா செயல்களுக்கும், ஏன், உங்கள் வெற்றிகளுக்கும்கூட அதுவே ஆதாரம். அது தன் சக்தியை பின்னிழுத்துக்கொண்டால், நீங்கள் தளர்ந்து வீழ்வீர்கள். நீங்கள் யாரும் எதுவும் இல்லை என்றாகிவிடும் என அறிவாயாக!’ என்றாள் தேவி. தேவேந்திரன் அவளை நோக்கித் தலைதாழ்த்தினான். புத்தி தெளிவாகி, தேவியை வணங்கி நன்றி சமர்ப்பித்து, அங்கிருந்து அகன்றான்.

மேலும், பிரும்மத்தின், பரம்பொருளின் அதீத சக்தியை, எல்லையில்லா இருப்பை உணரவேண்டும். ’மின்னல் மின்னுவதும், இமை இமைப்பதெல்லாமும் அதனால்தான்’ என்கிற இந்த உபநிஷதம், தொடர்கிறது: மனமானது கற்பனை செய்வதும், வெளிஉலகில் பொருள்களை, உணர்வுகளை நாடிச்செல்வதும், ஆன்மா என அறியப்படும் பிரும்மத்தின் காரணமாகவே. ’அத்தகைய பிரும்மமானது எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதாக உணர்ந்து, எவனொருவன் அதை உண்மையாக தியானிக்கிறானோ, அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன’ என்கிறது.

ஆழ்ந்த தேடலில் இப்போது முன்னேறியிருக்கும் சீடன், ’குருவே! அத்தகைய ஞானநிலைக்கான ரகசிய அறிவை அருள்வீராக’ எனப் பிரார்த்திக்கிறான். ’இதுவரை நான் உனக்கு சொன்னதெல்லாம் அதுபற்றியதே’ என்கிறார் குரு. இறை உணர்வோடு புலன்களின் கட்டுப்பாடு, உண்மைவழி செல்லுதல், சிரத்தையுடன் கூடிய கடும் தியானம் (தவம்) ஆகியவைதான் அந்த ரகசிய அறிவிற்கான சாதானாக்கள் எனச் சொல்கிறார். வேதங்கள் அந்த ரகசிய அறிவின் அங்கங்களாய் உள்ளன என சீடனுக்கு அவர் தெளிவுபடுத்துவதாய் இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

இந்த இடத்தில் நினைவு கூரவேண்டிய ஒன்று: ’உண்மைவழி நிற்றல் என்பதில், பேச்சு என்பது, விளைவு எதுவாயினும் பிடிவாதமாக உண்மை சொல்லல் என்றாகாது. பிறர் மனதை கலங்கடிக்காத, புண்ணாக்காத உண்மைகளையே ஒருவன் எப்போதும் பேசவேண்டும். அத்தகைய பேச்சு என்பது, வாக்கினால் செய்யப்படுகிற தவம்’ என்கிறது பகவத் கீதை.

(Picture courtesy: Internet)

**