கோபிகிருஷ்ணன் சிறுகதை

வாசிப்பின்பத்திற்காக கோபிகிருஷ்ணன், இங்கே ஒரு சிறுகதை வடிவில். அவரது ’தூயோன்’ சிறுகதைத் தொகுப்பில் (தமிழினி) வருகிறது, ‘புயல்’ என்கிற சிறுகதை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘கதாவிலாசம்’ நூலில் இதுபற்றிக் குறித்திருக்கிறார்.

**

சிறுகதை :  பு ய ல்

–  கோபிகிருஷ்ணன்

அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம். தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேசஅவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன, பித்தான்கள் என்றைக்கோ  தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில். புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தநௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும், ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி, மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு மெழுகுவர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான்.

ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து, கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.

வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி, சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில் பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும், 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு, சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” – மன்னிப்புக் கோரி, கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.
வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன், கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள், லயித்து. ஏக்நாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான்.

மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா, வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களுக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” – ஸோனா பொரிந்து தள்ளினாள்.

 “ஆனா, இன்னெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்?” – இது ஏக்நாத்.

ஒண்ணுமில்லெ, சொல்றேன்.”

 “என்ன .. வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா?”

 “இல்லெ.”

மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா?”

 “இல்லெ.”

வேறென்ன சொல்லேன்.”

ஸோனாவின் முகத்தில் கலவரமும், பரபரப்பும்,  அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏக்நாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச்  சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம்.

நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.”

ஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏக்நாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஸோனா ஏக்நாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏக்நாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனாதங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ, பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ, அவன்மீது ஏற்படும் கசப்புணர்வை அறவே மறந்து, அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான, ஆரோக்கியமான பெயர்!

குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும், உடனே அவன் நினைவில் நிழலாடியது, நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான்.

ஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே?”

ஒனக்காடா கண்ணா, ஒரு மாத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ? அப்பறம் ஒரு சாக்கலெட்

இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு..  இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா?”

அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள்.

 “இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா?” ஸோனா வெடித்தாள்.

 “என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.”

ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை?”

 வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள்.

 “சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி, ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? சொல்லேன்.”

என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”

புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே?”

என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க.”

நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க? சொன்னாத்தானே தெரியும்?”

இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன், டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ, அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”

இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே?”

, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ?”

நீ இன்னெக்கி  நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”

அந்த டாக்டர் கெழம்பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப்அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்குஅதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”

என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏக்நாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.

ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து, ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான்.. இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி, “மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா?”ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்சினிமாவில் ஸ்ரீகாந்த், லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு, எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு, விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”

ஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே? கொளந்தெ சௌக்கியமா?’ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக்கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷன்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன்அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போவாங்களேன், ’இளமை சுகம்’ சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப்போச்சு. ஸிந்தியாவெத் தூக்கிண்டு, அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் .. நைன்த் படிக்கறதே, அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான். ‘நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா? நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு?’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது, அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம்.”

ஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு, கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு, அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க. ‘குட்டி ஷோக்காயிருக்கில்லெஅப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”

ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏக்நாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏக்நாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். 

 “சமூகம் இன்னெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும்என்றான்.

உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும், சகிக்கல...”  அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏக்நாத்.

ஏக்நாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம், பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாது இருந்திருக்கலாம்..

கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்என்று சற்று உரக்கவே கத்தினான். ஏக்நாத்தால் இயன்றது அவ்வளவே.


***

நன்றி: அழியாச்சுடர்கள்/ராம்பிரசாத்/தமிழினி

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன்

தமிழ் இலக்கியத்தின் நவீன வெளியில், ஏனைய படைப்பாளிகள் சிலரைப்போல் புகழின் வெளிச்சத்துக்கு வராதவர் எனினும்,  ஒரு வித்தியாசமான, தனித்துவப் படைப்பாளியாக, இலக்கிய வாசகர்கள்/ பிரியர்களால் மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். உளவியலில் முதுநிலைப்படிப்பு முடித்தும், சரியான வேலையில் வெகுநாட்கள் இருந்ததில்லை. அநீதியை சகித்துக்கொள்ளமுடியாத மனம், சமரசத்துக்கு உட்படாத அவரது நேர்மை, பிடிவாதம் ஆகிய குணங்களினால் தொடர் வேலைவாய்ப்பின்றி, தகுதிக்கு மிகக் கீழான, குறைந்த சம்பளத்தில், சிறு, சிறு வேலைகளில் அவ்வப்போது இருந்திருக்கிறார். மென்மையான உள்ளம் கொண்டவர். மானஸ்தர்.  வறுமையின் பிடியிலேயே வாழ்நாளின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. காசில்லா வாழ்வு, கடும் வாழ்வன்றோ? ஏழ்மையிலேயே தடுமாறித் தத்தளித்தவரை, உடல் உபாதைகளும் பற்றிக்கொண்டன.  மன உளைச்சலுக்கும் ஆளாக்கி,  மாத்திரைகளை விழுங்கவைத்தன. இறுதிநாட்களில் உடல்நலம்குன்றி, மருந்து மாத்திரைகள் என சில நண்பர்களின் உதவியோடு வாழ்ந்து 2003- ல், தனது 53-ஆவது வயதில் காலமானார் கோபிகிருஷ்ணன்.

கோபிகிருஷ்ணன்

தன் இளம் வயதில் கோபிகிருஷ்ணன் மிகவும் கூச்ச சுபாவமுடையவராக இருந்திருக்கிறார். தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் சிலரை சந்தித்த அனுபவம் உண்டு. கவிஞர் ஞானக்கூத்தன், அப்போது இயங்கிவந்த இலக்கியப் பத்திரிக்கையான ’கசடதபற’-வின் வெளியீட்டாளரான பதியைச் சந்தித்துப் பேசிய நாட்களில், கோபிகிருஷ்ணன் பதியின் அறையில் இருந்திருக்கிறார். வாய்திறவாது, அமைதியாக உட்கார்ந்து அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பாராம். இப்படி சில சந்திப்புகள். ஒருநாள் ஞானக்கூத்தன் ஏதோ பதியிடம் சொல்லிக்கொண்டிருக்கையில், கோபிகிருஷ்ணன் ’நான் ஒன்று சொல்லட்டுமா!’ எனத் திடீரெனக் குறுக்கிட்டு, சென்னையில் சிறுபிராயத்தில் வாழ்ந்த காலத்தில், தன் அப்பா அடிக்கடி வீடு மாற்றுவார்    என்றும், அது நள்ளிரவிலேதான் நிகழும் என்று கூறியிருக்கிறார். ’யேய்.. எழுந்திருடா! வீடு மாத்தறோம்..’ என்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவன் கோபியை அப்பா எழுப்பிக் கூட்டிப்போவாராம். சாமான்கள் இழுத்துச்செல்லும் வண்டியின் பின்னே, சென்னை வீதிகளில் அர்த்தராத்திரியில் தூக்கக்கலக்கத்தோடு நடந்துபோவாராம். அது தனக்கு பெரும் அதிர்ச்சியையும், கலவரத்தையும் உண்டுபண்ணியதை விவரித்திருக்கிறார் கோபி. அதனை ஆவலோடு கேட்ட ஞானக்கூத்தன், கோபியின் மனதில் உறைந்திருக்கும் சோகத்தை உணர்ந்து, ‘இதைக் கதையாக எழுதுங்கள்’ என்றிருக்கிறார். ’எனக்கு எழுதவராது!’ என்று மெல்ல பதில் சொன்னாராம் கோபி. ‘தமிழில் எழுதுங்களேன்’ என்றிருக்கிறார் ஞானக்கூத்தன். ’அதுவும் தெரியாது’ என்றிருக்கிறார் அடக்கமாக. இப்படித்தான் கோபியிடம் பேச ஆரம்பித்திருக்கிறார் ஞானக்கூத்தன். கொஞ்சம், கொஞ்சமாக, பூட்டுப்போட்டதுபோன்ற அவரது மௌனத்தைக் கலைக்க அவரை, கவிதை, சிறுகதை என எழுத ஊக்குவித்ததாக, கோபிகிருஷ்ணனுக்கான அஞ்சலிக்கட்டுரையில் எழுதியிருக்கிறார் ஞானக்கூத்தன்.

கீழ்நிலைத் தொழிலாளர்களின் மாளாவறுமை, தர்மத்திற்கும், பொருளாதாரத்துக்கும் இடையே அவ்வப்போது நிகழும் போராட்டம் என நெருக்கமாக அவர்களோடே பணிபுரிந்து, பயணித்து இக்கட்டான சூழலில் வாழ்வை அனுபவித்தவர், அவதானித்தவர் கோபிகிருஷ்ணன். ஆதலால் வாழ்வின் நிர்தாட்சண்யத்தை, கடுமையை அவரது எழுத்து கூர்மையாக, ஆனால், அங்கதச்சுவையோடு பிரதிபலிக்கிறது. ’புயல்’, ’தூயோன்’, ’ஒரு பேட்டியின் விலை முப்பத்திஐந்து ரூபாய்’ – போன்ற கதைகள் சுவாரஸ்யமானவை. சிந்தனையைத் தூண்டுபவை. .

நவீனத் தமிழில் மனம்பிறழ் மனிதரின் வாழ்க்கை சோகத்தைப் புனைவெழுத்தில் கொண்டுவந்தவர் கோபிகிருஷ்ணன். இவ்வகைமையில், உளவியலை அடிப்படையாகக்கொண்டு,  ஆழமான, நுணுக்கமான படைப்புகளை தமிழுக்கு அளித்தவர் கோபிகிருஷ்ணன் மட்டுமே எனலாம். மனநிலைப்பிறழ்வு ஆய்வுமையத்தில், சமூகக் களப்பணியாளராகப் பணியாற்றிய அனுபவங்கள், அவரது சொந்த முயற்சிகளில் மனநலம் பாதிக்கப்பட்டோரோடு கலந்து பழகி, கண்டறிந்த அத்தகையோரின் மொழி, அவர்களது புரிதல்நிலை, தடுமாற்றம் என்பனவற்றை, சொற்சிக்கனம் காட்டும், நுணுக்கமான கதைகளில் கொண்டுவந்திருக்கிறார் இவர். மனம்பிறழ்ந்தோரின் பிரச்னை ஒருபுறமிருக்க, அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும், அவர்களுக்கு உதவும் முனைப்பு ஏதுமில்லாது, சமூகம் அவர்களிடம் காட்டும் அலட்சியம், வெறுப்பு ஆகியவற்றை விமரிசன தொனியில் புனைவாக்கியிருக்கிறார். ‘வார்த்தை விளையாட்டு’, ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’, ‘ஒவ்வாத உணர்வுகள்’ , ’இடாகினிப் பேய்களும், நடைப்பிணங்களும், சில உதிரி இடைத்தரகர்களும்’ போன்ற இவரது கதைகள், கவனம்கோருபவை.  ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ நாவல்,  தீவிர வாசிப்புக்குரியது. சம்பிரதாய உளவியல், எதிர் உளவியல் போன்ற உளவியல் வகைமைகளைப் பற்றி ஆழமாக இதில்  பதிவுசெய்திருக்கிறார்.  மருத்துவம் என்கிற பெயரில் உளவியல், மனநோயாளிகள்மீது கட்டவிழ்த்துவிடும் ஆதிக்கத்தை, வன்மத்தை நன்கு ஆய்ந்து வெளிக்கொணர்ந்திருக்கிறார் கோபிகிருஷ்ணன்.  இது, இதுகாறும் தமிழ்ப் புனைவெழுத்தில் நிகழ்ந்திராத ஒன்று.

கோபிகிருஷ்ணனின் கதைகள் பற்றி ஞானக்கூத்தன் இப்படிக் குறிப்பிடுகிறார்: ”தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தமக்குள் வேற்றுமைப்பட்டாலும், அவை ஒரு குடையின் கீழ் வருபவைதாம். ஆனால் கோபிகிருஷ்ணனின் படைப்புகள் அப்படி இல்லை. புதுமைப்பித்தன், மௌனி இவர்களுக்குப் பிறகு, தமிழ் கதைக் களத்தை விட்டு நகர்ந்தவர் கோபிகிருஷ்ணன் மட்டும்தான்”.

சுஜாதாவை, இவரது கதைகள் கவர்ந்திருக்கிறன.  ’கோபிகிருஷ்ணனை நான் நேரில் சந்தித்திருக்கவேண்டும்.. எப்படி சந்திக்காது போனேன்..’ எனத் தன் கட்டுரையொன்றில் வருத்தப்பட்டிருக்கிறார், சுஜாதா.

முக்கிய சில படைப்புகள்:  மானுட வாழ்வு தரும் ஆனந்தம், தூயோன் (சிறுகதைத் தொகுதி) ( இரண்டு நூல்களும் தமிழினி பதிப்பகம்), கோபிகிருஷ்ணன் படைப்புகள் (நற்றிணைப் பதிப்பகம்), உள்ளேயிருந்து சில குரல்கள் (நாவல்) (வம்சி புக்ஸ்). அபூர்வமாக நிகழ்ந்த கோபிகிருஷ்ணனின் நேர்காணல் (எடுத்தவர்: யூமா வாசுகி)  ‘டேபிள் டென்னிஸ்’ எனும் சிறுபுத்தகமாகவும்  வெளியாகியுள்ளது, தமிழ்வெளியில் ஒரு அதிசயம்.  (நல்ல நிலம் பதிப்பகம்)

அடுத்தாற்போல், அவரது சிறுகதை ஒன்றைப் பார்க்கலாம்.

**

இங்கும் .. அங்கும் ..

வழக்கம்போல நடைபயில என அந்தக் காலையில், குடியிருப்பு வளாகத்தைவிட்டு வெளியே வருகிறேன். பள்ளிக்குழந்தைகளின் அவசரங்கள், மஞ்சள் பஸ்களின் உறுமல்கள்  எனக் கடமையான பரபரப்புகளை ஒருவாறு கடந்தபின், சாலையில் சற்றே அமைதி. கால்கள் சீராக நடந்துகொண்டிருக்கையில், வழக்கம்போல் புத்தி ஏதோ சொல்லப் பார்த்தது; அதற்கும் பொழுதுபோகவேண்டுமே:  ‘சும்மாதானே நடந்துபோய்க்கொண்டிருக்கிறாய். கொஞ்சம் காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டே நடந்தால் என்ன.. அந்தப் பார்க் வருவதற்குள்….’

புத்தியின் விண்ணப்பத்தைக் கேட்டு அங்கீகரிக்கும் முன், மனம் – அதைப்பற்றி என்ன சொல்ல, அது ஒரு தேவகணம்.. ஆரம்பித்தது, கருமேகம் படர்ந்திருந்த  காலைவேளையில், ஒரு  மெல்லிய ஹம்மிங்குடன்:

ஓ….  ஹோ.. ஹோ…

மயங்கும் கண்ணைப் பாராமல் ..
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..

இது என்னடா புதுக் கஷ்டம் என நினைத்ததோ என்னவோ, மீண்டும் தீவிரமாகக் குறுக்கிட முயற்சி செய்தது புத்தி:  ‘நான் என்ன சொல்றேன்னா.. காயத்ரியைக் காலையில் கொஞ்சம் சொல்லிக்கொண்டே நடந்தால்…’

ம்ஹும். இதற்குள், அண்டம் முழுதும் அந்தப் பெண்குரலாய்ப் பரவி விட்டிருந்தது மனம்:

ஓ…. ஹோ…ஹோ….

மயங்கும் கண்ணைப் பாராமல் ..
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே ..
மழை வந்த வேளை
மனம் தந்த பாதை
அவன் தந்த உறவல்லவா…  ஆ.. ஆ…

நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே… வருவேன்… வருவேன்… வருவேன்…

நான் நடக்க, நடக்க, மனம் மிதந்துகொண்டே வந்தது. பார்க் பெஞ்சில் உட்கார்ந்தபின்னும் விடவில்லை. மொபைலைத் தட்டி, மெல்லக் கேட்கவைத்தது. இயர்ஃபோன் கொண்டுபோகாததால், பெஞ்சில் மொபைலைப் படுக்கவைத்து மெதுவாகப் பாடலைப் பரவவிட்டேன். நான் பெறும் இன்பம், இனிதே பெறுக இவ்வையகம்..

நானே வருவேன்.. இங்கும் அங்கும்…
நானே…வருவேன்… வருவேன்… வருவேன்…

Haunting … நான் லயித்திருக்க, பக்கத்து நடைபாதையில் ஒன்றிரண்டு ஓரப்பார்வைப் பெண்கள், இதழ்களில் முகிழ்க்கப் பார்த்த மென்னகையை அடக்கிக்கொண்டு வேகமாகக் கடந்தார்கள். பாவம், என்னமோ ஆயிடுச்சு இவனுக்கு…

மனம், நாளெல்லாம் இந்தப் பாடலை ரீங்கரித்துக்கொண்டேயிருந்தது. அதை ஒன்றும் சொல்வதற்கில்லை.    ‘…பொல்லாதது.. மனம் பொல்லாதது.. என்ன சொன்னாலும் கேளாதது !’

**
<<<<<<< “நானே வருவேன்… இங்கும் அங்கும்..”
பாடல்:கண்ணதாசன். இசை: வேதா.  குரல்: பி.சுசீலா.
{படம்: யார் நீ? (1966) (ஜெய்சங்கர், ஜெயலலிதா )} >>>>>>>

 

தென்னாப்பிரிக்காவை ‘வெள்ளையடித்த’ இந்தியா

இவ்வளவு பரிதாப டெஸ்ட் தொடர் தோல்வியை, தென்னாப்பிரிக்கா அந்நிய மண்ணில் இதுவரை சந்தித்ததில்லை. உண்மையில், வெளிநாட்டுத் தொடர்களை நன்றாகவே ஆடும் அணி என்கிற நல்லபெயர் கொஞ்சகாலம் அதற்கு இருந்திருக்கிறது. இந்தியா வந்து, ஆடமுடியாமல் தடுமாறி, இப்படித் தலைகுப்புற விழுவோம் என அவர்களே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இந்தத் தொடரில் இந்தியாவிடம் இரண்டாவது ஃபாலோ-ஆன் வாங்கி இறுதியில்,  0-3 whitewash ! இந்த அணி நாடு திரும்பி, தங்களின் கிரிக்கெட் போர்டுக்கு என்ன பதில் சொல்லுமோ?

தென்னாப்பிரிக்க டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், கொஞ்சம் க்ரீஸில் நின்று,, ஓடி, ஆடி ரன் சேர்த்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. இந்திய பௌலர்கள் அப்படி ஒன்றும் சூப்பர் ஸ்டார்களாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்கர்கள் எதிர்பார்த்து மிரண்டது இந்திய ஸ்பின்னர்களை.  ஆனால், விக்கித்திக்கி விளையாடமுடியாமல் நொறுங்கியது வேகப் பந்துவீச்சாளர்களிடம்! குறிப்பாக முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தென்னாப்பிரிக்கர்களை துவைத்துக் காயப்போட்டுவிட்டார்கள். இதை கோஹ்லியே எதிர்பார்த்திருந்திருக்கமாட்டார்! ஏனெனில் இந்தியாவுக்கு ஆடவரும் வெளிநாட்டு அணிகளுக்கு, வேகப்பந்துகள் ஒரு பிரச்னையே கிடையாதே. இந்திய பிட்ச்சுகள் வேகப்பந்துவீச்சுக்குத் தோதானதாக என்றும் இருந்ததில்லையே.

ராஞ்சியில் நான்காவது நாளான இன்று (22/10/19), மிச்சமிருந்த இரண்டு விக்கெட்டுகளுடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் சோகக்கதையை முடிக்க, இந்தியர்களுக்கு இரண்டு ஓவர்களே போதுமானதாக இருந்தது. முதல் ஓவர் ஷமியின் மெய்டன். இரண்டாவது ஓவர் இடதுகை சுழல்வீச்சாளர் ஷாபாஸ் நதீம். அவருடையை கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டும் காலி! தென்னாப்பிரிக்காவிற்கு நேரமே சரியில்லை என்பதைக் கடைசி விக்கெட் விழுந்த விதம் மேலும் உறுதி செய்தது. நதீமின் அந்த ஓவரின் கடைசி பந்து விக்கெட் எடுக்கும் பந்தே இல்லை. அதை அவர்களது கடைசி பேட்ஸ்மன் லுங்கி இங்கிடி ஒரு க்ராஸ்-பேட் ஷாட் அடிக்கிறார். Powerful shot. ஆனால் பந்து என்ன செய்தது? பௌலருக்கு இடது புறமாகப் பாய்ந்த பந்து, நேராக எதிரே நின்ற ஆன்ரிக் நோர்த்யாவின் கையில் பட்டுத் தெறித்துத் திரும்பியது – பௌலர் நதீம் நின்ற திசையில்! கணநேர எதிர்பார்ப்பில் கையேந்த, அந்த rebound நதீமின் கையில் லட்டுபோல் இறங்கியது. Ngidi.. caught and bowled Nadeem ! தென்னாப்பிரிக்கா 133-ல் ஆல் அவுட். அதன் ’டெஸ்ட்’ போராட்டம் அதிரடியாக முடிவுக்கு வந்தது. இன்னிங்ஸின் டாப் ஸ்கோர் 30. நேற்று (21/10/19) எல்கருக்கு (Dean Elgar) உமேஷ் யாதவின் பௌன்ஸரில் காதுக்குமேல் பட்ட அடியினால், அவர் சுருண்டு கீழே விழ, மெடிக்கல் ஸ்டாஃப் அவரை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.  அவருக்கு பதிலாக concussion substitute -ஆக வந்த டி ப்ருய்ன் (T. de Bruyn) எடுத்த ரன்கள், அந்த 30.

சில நிமிடங்களில், ‘Freedom Trophy’ என அழைக்கப்படும் ‘காந்தி-மண்டேலா’ கோப்பை விராட் கோஹ்லியின் கையில் ! கோஹ்லிக்கு அவருடைய ஸ்டாரோ, அல்லது தர்ம பத்தினி அனுஷ்கா ஷர்மாவின் ஸ்டாரோ – ஏதோ ஒன்று வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது, சந்தேகமில்லை. ஆனால் இப்படிச் சொல்லி தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூ ப்ளஸீயைத் தேற்றமுடியாது!

சுருக்கமாக ஸ்கோர்: இந்தியா: 497/9 (ரோஹித் 212, ரஹானே 115, ஜடேஜா 51)

தென்னாப்பிரிக்கா 1st Innings  :   162 (ஹம்ஸா 62, லிண்ட(Linde) 37)

2nd Innings :  133 (டி ப்ருய்ன் 30)

தொடரில் இந்தியாவுக்கு மூன்று இரட்டைச் சதங்கள். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மயங்க் அகர்வால், விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா – விளாசித் தூள்கிளப்பி,  ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்கள்.

இந்த மேட்ச்சில் சொல்லிவைத்தாற்போல் ஆளுக்கு ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள் முகமது ஷமியும், உமேஷ் யாதவும். ஸ்விங் மற்றும் துல்லியம் எதிரிகளைப் புரட்டிப்போட்டது. அஷ்வின், ஜடேஜா, நதீம் ஆகிய ஸ்பின்னர்கள் இவர்களுக்கு second fiddle-தான் வாசித்தார்கள். ( தென்னாப்பிரிக்காவுக்கு டேல் ஸ்டெய்ன் இல்லாததுபோல், இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா  அணியில் இல்லை. ) இருந்தும் ஏன் துவண்டது தென்னாப்பிரிக்கா என்பது இப்போதைய million dollar question.

100-க்கும் மேல் first class matches விளையாடிய அனுபவத்தோடு, தாமதமாக வாய்ப்புப் பெற்றுத் தன் முதல் டெஸ்ட் ஆடிய ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமுக்கு போட்டியில் 4 விக்கெட்டுகள். மனுஷன் நன்றாக சுழற்றினார் பந்தை. இந்திய டீமுக்கு நல்லதொரு சேர்ப்பு. இந்த மேட்ச்சில் 212 அடித்தார் ரோஹித். இரண்டு சதங்களை முதல் மேட்ச்சில் சாத்தியிருந்தார். அவருக்கே இரண்டு விருதுகளும் – ஆட்டநாயகன், தொடர் நாயகன். குறைந்த ஓவர் போட்டிகளில் ‘ஹிட்மேன்’ என ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ரோஹித், டெஸ்ட் அரங்கிலும் நான் சளைத்தவனில்லை எனக் காண்பித்துவிட்டார். ரோஹித்தைக் குறை சொல்லியே பொழுதுபோக்கும் பத்திரிக்கையாளர்கள் /விமரிசகர்கள் இந்தப் புள்ளியில் விலகிக்கொள்ளவும்.. வேறுபக்கமாக ஓடிவிடவும் !

**

ராஞ்சி கிரிக்கெட் டெஸ்ட் : ஷாபாஸ் !

 

இந்தியாவுக்கெதிராக இரண்டு படுதோல்விகளுக்குப்பின் தென்னாப்பிரிக்கா செம கடுப்பில் இருப்பதாகத் தெரிகிறது.  இன்று (19/10/19) துவங்கியிருக்கும் மூன்றாவது டெஸ்ட்டுக்கான அணியில், தடாலடியாக ஐந்து மாற்றங்கள்! ஃபிலாண்டர், கேஷவ் மகராஜ், முத்துசாமி, டி ப்ருய்ன் (de Bruyn), மார்க்ரம் அவுட். உள்ளே வந்திருப்பவர்களில் இருவர் டெஸ்ட்டுக்கே புதியவர்கள். மஹராஜின் இடத்தில் வந்திருக்கும் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லிண்ட்  மற்றும் டி ப்ருய்னின் இடத்தில்  பேட்ஸ்மன் ஹென்ரிக் க்ளாஸன். முத்துசாமியின் இடத்தில் ஆல்ரவுண்டர் டேன் பீட் (Dane Piedt), ஃபிலாண்டரின் இடத்தில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) மற்றும் மார்க்ரமின் இடத்தில் ஜுபேர் ஹம்ஸா (Zubayr Hamza)- பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கக்கூடும். பாதி டீமை மாற்றிவிட்டதே.. தென்னாப்பிரிக்கா ஒரு தீர்மானத்தோடு இறங்கியிருக்கிறதா இந்த டெஸ்ட்டில்?

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு ஆட்டத்தின் முதல் இரண்டு மணிநேரத்தில் அபாரமாக இருந்தது. உழைப்புக்கான பரிசும் கிடைத்தது.  அகர்வால், புஜாரா, கோஹ்லி அவுட். ரபாடாவுக்கு 2, ஆன்ரிச் நோர்த்யா  -வுக்கு 1. லஞ்சுக்கு முன்னான ஸ்கோர் 73/3. ஆரம்பத் தடுமாற்றத்துக்குப்பின் ரோஹித் ஒரு விளாசு விளாசி, சதம் அடித்துவிட்டார் இப்போது (1335 hrs). அவருடன் அரை சதத்தோடு ரஹானே…

ஷாபாஸ் நதீம்..
ஒரு கில்லாடியோ!

இந்திய அணியிலும்  ஒரு மாற்றம். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் இடத்தில் புதிய இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் (Shahbaz Nadeem)! முதல் டெஸ்ட் ஆடப்போகிறார். விஜய் ஹஸாரே (ஒரு-நாள்) சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஜார்க்கண்டுக்காக ஆடிக்கொண்டிருந்தவரை உடனே அழைத்து உள்ளே நுழைத்திருக்கிறார்கள் (கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தூள்பறக்கவிட்டுக்கொண்டிருந்தவர்). குல்தீப் யாதவிற்குத் தோள்வலி..  இந்தக் கடைசி டெஸ்ட்டில்,  அஷ்வின், ஜடேஜா, நதீம் என மூன்று சுழல்வீச்சாளர்களுடன் இந்தியா இறங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்கள் சுழலில் தலைசுற்றிக் கீழே விழுவார்களா, எதிர்த்துத் தாக்குவார்களா?  எம் சுழலுக்கென்ன பதில்?

Picture courtesy: google/news18 creative

**

சிரித்து சிரித்து ..

இன்னல் எதுவும் தீரவில்லை
ஏனெனில் நீ இல்லவே இல்லை
இருப்பதாக நினைத்து
இரவும் பகலுமாய் உனை
இரந்து நின்றேனே
இறப்பதற்கு முன்னாவது
புரிந்ததே உண்மை
ஒருவேளை புரியாமலேயே
நான் போயிருந்தால் ?
ஒரு மண்ணும் ஆகியிருக்காது
இப்போதுமட்டும் என்ன
புரிந்துகொண்டுவிட்டதால்
புவியிலே நான் நிரந்தரமா
சிரிப்பு வந்தது அவனுக்கு
இல்லாத நீயே என்னை
இப்படிச் சிதைத்திருக்கிறாயே
இருந்திருந்தால்.. ஈவுஇரக்கமின்றி
ஒழித்துக் கட்டியிருப்பாய்
உலகம் முழுவதையுமாய்
இல்லை நீ என அறிந்ததில் 
இன்பம் கொஞ்சம் எனக்கும்
வாழ்வில் முதன் முறையாக
வாய்விட்டுச் சிரித்தான் 
மேலும் பொங்கிவர சிரிப்பு
சத்தமாக எழுந்தது உயர்ந்தது
மேலே இருந்தவன்..
நித்திரை கலைந்தான்
எழுந்து உட்கார்ந்தான்
என்ன  இது
இப்படி ஒரு இரைச்சல்
கீழே மேகம் விலக்கிப் பார்க்க
மேல்நோக்கி சிரித்துக்கொண்டு அவன்
இதோ வருகிறேன்.. என்றெழுந்தான்
இதுவரை  புலப்படாதவன்

-ஏகாந்தன்

**



 

கிரிக்கெட் : பூனேயில் இன்னிங்ஸ் வெற்றி

 

வெஸ்ட் இண்டீஸ் மாதிரி விளையாடியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் அரங்கில் அதிர்ச்சி. அந்த அணியில் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் (Dale Steyn), ஹஷிம் ஆம்லா போன்ற ஜாம்பவான்கள் தற்போது இல்லை என்பது பலவீனம்தான். இருந்தும், உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாயிற்றே.. ஒரு பிடி பிடிக்கவேண்டாம்? எதிர்த்து ஒரு முறை, முறைக்கவேண்டாம்? இப்படியா நான்காவது நாளிலேயே சரண்டர் ஆகி வழிவது? எங்க கோஹ்லிக்கு இனி, கால் தரையிலேயே படாதே!

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா சோர்வு தரும்  வகையில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்குத் திரும்பிய உமேஷ் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். மிடில் ஆர்டராவது டீமைத் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். கேப்டன் டூ ப்ளஸீ (64) சமாளிக்கப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் 9, 10 வரிசை-நிலைகளில் வந்த கேஷவ் மஹராஜும், வெர்னன் ஃபிலாண்டரும், நிதானமாக ஆடி நூறு ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்து தென்னாப்பிரிக்கா 250-ஐத் தாண்டவைத்தார்கள். கேஷவ் டாப் ஸ்கோர் 72. இங்கே எழுந்தது கேள்வி. பௌலர்களால் இப்படி ஆடமுடிகிறதென்றால், தென்னாப்பிரிக்க ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள் என்ன செய்தார்கள் ?

நான்காவது நாள் (13/10/19), இந்திய கேப்டன் ’ஃபாலோ ஆன்’ (follow on) கொடுக்க, தென்னாப்பிரிக்கா தன் இரண்டாவது இன்னிங்ஸை சேர்த்து ஆடும்படி ஆனது. இப்போதாவது  தென்னாப்பிரிக்கா, கொஞ்சம் ஆட்டம், கொஞ்சம் கட்டை என்று போக்குக் காண்பித்து, க்ரீஸில் நின்று பொழுதைப் போக்கி, ஆட்டத்தின் முடிவை ஐந்தாவது நாளுக்குக் கொண்டுபோகலாமே? டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் கொஞ்சம் அடித்துத் திறமையைக் காண்பிக்கலாம்.. ம்ஹூம். எல்கர் – 48 தான் டாப் ஸ்கோர். தென்னாப்பிரிக்கர்கள், இந்திய ஸ்பின்னர்களிடம் திணறியதோடு, வேகப்பந்துவீச்சாளர்களிடமும் சிக்கி விழித்தார்கள். வரிசையாக விழுந்து, வீட்டுக்கு ஓடினார்கள். உமேஷ், ஜடேஜா – தலா 3 விக்கெட், அஷ்வின் 2 எனச் சாய்க்க, தென்னாப்பிரிக்கா 189-ல் ஆல்-அவுட். மோசமான இன்னிங்ஸ் தோல்வி.  இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி. 19 அக்டோபரில் ராஞ்சியில் (Ranchi, Capital of Dhoni’s Jharkhand!) துவங்கும்.

இந்தியாவின் தரப்பில், ரசிகர்கள் பார்க்க வந்திருந்த ரோஹித், க்ளிக் ஆகவில்லை. இளம் மயங்க் அகர்வால் சதமடித்துச் சிரித்தார். கேப்டன் கோஹ்லியின் 254 நாட் அவுட் masterclass. இது கோஹ்லியின் 7-ஆவது இரட்டைச்சதம். கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. அன்றிருந்த ஃப்ளோவில் அவர் நினைத்திருந்தால் இன்னும் ஒரு மணிநேரம் இந்திய பேட்டிங்கை நீட்டித்து, தன் தனிப்பட்ட ஸ்கோராக 300-ஐ எட்டி, சாதனை படைத்திருக்கலாம். ’முச்சதம்’ விளாசுவதற்கான வாய்ப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்காது என்பது, கிரிக்கெட்டின் சுமார் 150 வருட சரித்திரத்தைப் பார்த்தால் புரியும். ஆனால்  தன்னோடு ஆடிக்கொண்டிருந்த ஜடேஜாவின் சதத்திற்காக காத்திருந்த கோஹ்லி, ஜடேஜா 91-ல் அசட்டுத்தனமாகத் தூக்கி கேட்ச் கொடுத்து காலியானவுடன், இந்தியாவின் ஸ்கோர் 601 என்கிற நிலையில் உடனே டிக்ளேர் செய்துவிட்டார். கோஹ்லியின் வாய்தான் அகலம் என்று நினைத்துவிடக்கூடாது! மனமும் பெரிசுதான்…

Saha catches one-handed in Pune

பூனே ஆட்டத்தில், வ்ருத்திமான் சாஹா பிரமாதம். குறிப்பாக அவர் இந்திய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்தவிதம் (Saha is a great keeper for spinners: Ashwin), உமேஷ் பௌலிங்கில் லெக்-ஸைடில் பாய்ந்து தூக்கிய கேட்ச்சுகள் – விமரிசகர்களை தாராளமாகப் பாராட்டவைத்திருக்கிறது. ஏற்கனவே ஒரு டெஸ்ட்டில் (Cape Town, 2018) அதிகபட்ச கேட்ச்சுகள்(10) பிடித்த  ரெகார்டு அவரிடம்தான் இருக்கிறது. ஹனுமா விஹாரியின் இடத்தில், அணிக்குத் திரும்பிய உமேஷ் யாதவின் வேகப்பந்து வீச்சும் ஒரு ப்ளஸ்.

இதை எழுதிக்கொண்டிருக்கையில், செய்தி. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் ஆடமாட்டார். ஃபீல்டிங்கின்போது ஏற்பட்ட தோள்ப்பட்டைக் காயத்தினால் திருப்பி அனுப்பப்படுகிறார். அவர் இடத்தில் வருகிறார் 27-வயதான ஜார்ஜ் லிண்ட் (George Linde). ஸ்பின் -ஆல்ரவுண்டர். ராஞ்சியில் ஆடுவாரா? பொறுத்திருங்கள்…

**

 

அஸம்பவா ..

அம்பிகா பிரசாத். ஒரு சராசரி.. இப்படி-அப்படியாகக் கொஞ்சம் நேர்மை, நாணயம், கொஞ்சம் கடவுள் பக்தி, இத்தியாதி. வீட்டில் அடக்கமான பெண்டாட்டி, அருமையான பிள்ளை. தானுண்டு, தன் பிழைப்புண்டு, தன் குடும்பமும் உண்டு என வாழும் ஜீவன். ஒரு நல்லநாளில், அரசாங்கம் பணியிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டது! வீட்டிலேயே அடைந்துகிடப்பது என்னவோ போலாகிவிட்டது. ஆனால், ஒத்த வயதினில், அவருக்கு நெருக்கமான நண்பர் இருந்தார். மதன் கோபால். இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் அடிக்கடி சந்தித்துப் பொழுதுபோக்கினார்கள். கிண்டல், கேலி,  ஊர் வம்பு, தும்புகள் என அரட்டை. மீண்டும் சுவாரஸ்யம் தட்ட ஆரம்பித்திருந்தது வாழ்க்கையில்.

ஒரு இரவு வந்தது. அம்பிகா பிரசாதின் கதையை வேறுமாதிரியாக மாற்றிப்போட்டது. இல்லை.. அதெல்லாம் இல்லை, பிரசாத் தப்புத்தண்டா ஏதும் செய்யவில்லை. ஆனால்,  இந்த உலகில் அப்பாவி மனிதர்களுக்குத்தானே ஆபத்து வீடு தேடி வரும்? அந்த பாழாய்ப்போன இரவில் எல்லோரும் தூங்கிவிட்டிருந்தார்கள். ஊரே அடங்கிவிட்டிருந்தது போலிருந்தது. அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. சில நாட்களில் இப்படித்தான். வயசாகிவிட்டதோ? கொஞ்ச நேரம் ஆகுமே தவிர, தூக்கம் வந்துடும்.. வந்துடும் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார் பிரசாத். புரண்டு புரண்டு படுத்துப்பார்த்ததுதான் மிச்சம். ம்ஹூம்… தூக்கம் நெருங்காத கண்களை வெகுநேரம் மூடி வைத்திருப்பதில் சிரமம் தெரிந்தது. விழித்தார். நல்ல இருட்டு. அறையில் மூலைக்கு மூலை கண்களை உருட்டினார். ஆ.. அங்கே.. அந்த மூலையில்.. என்ன அது?  என்ன.. மங்கலாக..சாம்பல் நிறத்தில்? அசைகிறதே.. முன்னேயா  வருகிறது? ஒரு உருவம்… எப்படி உள்ளே? அவருக்கு பயம். நெஞ்சு படபடத்தது.  உடம்பில் மெல்லிய நடுக்கம். வாயில் வார்த்தை எழவில்லை. எச்சிலை விழுங்க முயற்சித்தார்.  கஷ்டப்பட்டுக் குரலை மேலே கொண்டுவந்தார்.. ”யார்..யார்.. நீ ஏன்.. இங்கே..” தடுமாறினார் ஈனக்குரலில்.

உருவத்திடமிருந்து மெல்லிய சத்தம், ஆனால் தெளிவாக வந்தது:  ”புறப்படு.. என்னுடன்” .

ஐயோ.. யாரிது?  எமனா.. முகம் சரியாகத் தெரியாமல்.. எம தூதனோ? அம்பிகா பிரசாதின் மூளையில் மணி வேகமாக அடித்தது. ”நானா .. நான்.. எதற்கு.  எங்கே….”

அவருடைய குழறலைத் தாண்டி அந்தக் குரல் தீர்க்கமாக வெளிப்பட்டது..

”உன் கதை முடிந்தது. கிளம்பு!” என்றது… என்றான் யமதூதன்.

”ஆ! ஐயோ.. நான் மாட்டேன். இன்னும் கொஞ்சநாள் ..  என்னை இருக்கவிடு..”

”ம்ஹூம். வா!”

இருக்கிற சக்தியையெல்லாம் சேர்த்துக்கொண்டு குழறினார் பிரசாத்: ”இத்தனை நாள் வேலை, வேலை எனப் படாதபாடெல்லாம் பட்டுவிட்டேன். ஒரு சுகம் இல்லை. இப்போதுதான் வீட்டில் கொஞ்சம் ஓய்வாக … இப்போதுபோய் வந்திருக்கிறாயே? உனக்கே இது தர்மமாகத் தெரிகிறதா?”

”பேசிக்கொண்டிருக்க நான் வரவில்லை. ம்…” குரலில் கடுமை.

விடமாட்டான் போலிருக்கிறதே..

”அப்பா!” – கையெடுத்துக் கும்பிட்டார் பிரசாத்.  ”கோபப்படாதே ! கொஞ்சம் பொறுத்துக்கொள். கொஞ்ச காலந்தான்..”

கேலியாக சிரிப்பதுபோல் மெலிதான சத்தம். ”காலமா? அதுதான் முடிந்துவிட்டதே !”

”சரி.. சரி.. அது உன் கணக்கு. ஆனால், என்னைக் கூப்பிடாதே. என்னால் வரமுடியாது.  எனக்கு உன் தயவு வேண்டும். மாட்டேன் என்று மட்டும் சொல்லிவிடாதே. உன்னை வேண்டிக்கொள்கிறேன். மூன்று வருஷம் கழித்து நீ திரும்பி வந்தால்…நான்.. ”

”மூன்று வருஷமா! ”

”கொஞ்சம் நான் சொல்வதைக் கேள். பெரும் சிக்கல் எனக்கு. ஒரே மகன்.  டாக்டருக்குப் படித்துக்கொண்டிருக்கிறான். இன்னும் மூன்று வருஷத்தில் படிப்பு முடிந்துவிடும். அவனை இப்படியே பாதியில் விட்டுவிட்டுப்போகமுடியுமா?  கொஞ்சம் இரக்கம் காட்டு. சரியாக மூன்றே வருஷம். பையன் டாக்டர் என்று ஆகிவிடுவான். அதற்குமேல், அரை நாள்கூட அதிகம் வேண்டாம். உடனே நீ என்னைக் கொண்டுபோகலாம்.  தயைசெய்து இதற்குமட்டும் ஒத்துக்கொண்டு, என்னை இப்போது விட்டுவிடு. போய்விடு..  போய்விடு..”  கைகூப்பி மன்றாடுகிறார் பிரசாத்.

யமதூதன் இதற்கெல்லாம் இணங்குபவனா, என்ன? ஆனால் அன்று, அவனுக்கும் என்ன தோன்றியதோ? இரக்கமா, வேறேதாவதா அது?

”சரி. போனால் போகிறது என்று உன்னை விட்டுவிட்டு, போகிறேன். ஆனால், போகும்போது உனக்கு வேண்டப்பட்டவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டுதான் போவேன்!”

தன் உயிரை எடுக்காதிருந்தால் அதுவே போதும் என்கிற சுயநலம் தாக்க, நெஞ்சு அடித்துக்கொள்ள, ’’சரி..சரி ..உன் இஷ்டம்.. இப்ப போயிடு. அது போதும்!’’ என்றார் நடுங்கும் குரலில் பிரசாத். உருவம் கரைந்தது..மறைந்தது. போய்விட்டது. வியர்த்துவிட்டது பிரசாதுக்கு. அறை மேலும் இருண்டதுபோல் காணப்பட்டது. தூரத்தில் நாய் ஒன்றின் ஊளைச் சத்தம் ஒரேயடியாக உயர்ந்து, ஈனமாகக் கேட்டது. அவரை என்னமோ செய்தது. வெகுநேரம் புரண்டு, புரண்டு படுத்திருந்த மனுஷன் களைப்பாகி,  ஒருவழியாகத் தூங்கிப்போனார்.

மறுநாள் அதிகாலை. விழிப்பு வந்தபோது, முந்தைய ராத்திரியின் கொடூரம் மனத்திரையில் பளிச்சிட்டது. பிரசாத் திடுக்கிட்டு எழுந்துகொண்டார். கதவைத் திறந்தார். வெளிச்சத்தைக் கண்டதும் மனதில் ஒரு மகிழ்ச்சி. நேற்று ராத்திரி வந்த பயங்கரன்…. அப்பாடா..சாமி! எப்படியோ தப்பித்துவிட்டோம்.

கொஞ்ச நேரத்தில் அவருடைய வீட்டிற்கு ஒருவன் சைக்கிளில் வந்து இறங்கினான். செய்தி. அவருடைய ஆத்மார்த்த நண்பர் மதன் கோபால் காலமாகிவிட்டார். ”ஆ! எப்போது? நேற்று மாலை வீட்டுக்கு வந்திருந்தானே.. கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோமே. நன்றாகத்தானே இருந்தான் மதன்.. உடம்புக்கு திடீரென  ஏதாவது..”

”உடம்புக்கெல்லாம் ஒன்றுமில்லை. இரவுச்சாப்பாட்டுக்குப்பின், குடும்பத்தில் எல்லோரிடமும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பேரக்குழந்தைகளுடன் ரொம்ப நேரம் விளையாடியிருக்கிறார். காலையில் இன்னும் எழுந்திருக்கவில்லையே என்று போய்ப் பார்த்தால்.. அசையாமல் கட்டிலில் கிடக்கிறார். ராத்திரியிலேயே உயிர் போயிருக்கவேண்டும்” என்று சொன்னவன், சைக்கிளில் ஏறி வேகம்பிடித்தான்.

அம்பிகா பிரசாதிற்கு வயிற்றை என்னவோ செய்தது. மனம் இருண்டது. நாள் பூராவும் அந்த சிந்தனை : ’தலைக்கு வந்தது.. தலைப்பாகையோடு போயிற்று.’ ஆனால்.. மதன் எத்தனை  நல்ல நண்பன், மனம்விட்டு நான் மணிக்கணக்கில் பேசும் ஒரே ஜீவன். எனக்கிருந்த ஒரே ஒருத்தன்.. போகிறபோக்கில் அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டானே ராத்திரியில் வந்த பாவி. ஹே பகவான்.. எல்லாம் வெறுமையாகிவிட்டது போலிருந்தது அவருக்கு. அடுத்த சில நாட்களில் குற்ற உணர்வில், குட்டிபோட்ட பூனைபோல அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார் பிரசாத். கொஞ்ச நாட்களுக்குப் பின், வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதுபோலிருந்தது. காலம் நகர்ந்துகொண்டிருந்தது.

அம்பிகா பிரசாதின் மகன்  மருத்துவம் முடித்தான். டாக்டர் ஆகிவிட்டான். அவருடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஆனால் சில நாட்களில் அவரே சொல்லியிருந்த மூன்றுவருடக் கெடு முடிந்தது. அடுத்த இரவில் அந்த உருவம் முன்னே வந்து, நிழலாய் ஆடியது. ‘திருப்திதானே.. கிளம்பு !’ என்றது.

சுகமாகச் செல்கிறதே வாழ்க்கை. உயிரைவிட முடியுமா இப்போ? கெஞ்சுகிறார் அம்பிகா பிரசாத், யமதூதனிடம். இந்த முறை அவர் சொல்லும் காரணம்? ”மகனுக்குக் கல்யாணம் ஆகவேண்டும், மருமகள் வீட்டுக்கு வரவேண்டும். ஒரே ஒரு வருஷம் போதும். முடிச்சிடுவேன்.. மேற்கொண்டு ஏதும் கேட்கமாட்டேன்! கைவிட்டு விடாதே..கருணை காட்டு”- என்று காலில் விழுந்து புரளாத குறை. யமதூதனிடம் ஒரு தயக்கம். பின்னர் எச்சரிக்கிறான். ”இதுதான் கடைசி உனக்கு. ஒரே வருஷம். திரும்பிவருவேன். தூக்கிச்செல்வேன்!” மறைந்துவிடுகிறான்.

அடுத்த நாளிலிருந்து, வேகவேகமாகக் காரியங்கள் செய்கிறார் அம்பிகா பிரசாத். மகன் டாக்டராச்சே. சமூகத்தில் நல்லபேர். வசதியான இடத்தில் பெண் கிடைத்து, திருமணம் நடந்துவிட்டது. வீட்டுக்கு வந்த மணமகளும்தான் எவ்வளவு பொருத்தம், என்ன ஒரு பாந்தம்! குடும்பமே கலகல என ஆகிவிட்டது. ’ஆஹா.. இதுவல்லவா வாழ்க்கை.. வாழ்க்கை என்பது ஒரு போதை!’ என்று பாட ஆரம்பித்தது அம்பிகா பிரசாதின் மனம். அதற்காக? காலம் நகராதிருக்குமா? ஓடுகிறது. ஓடிவிட்டது. நாளையோடு முடிகிறது இறுதிக்கெடு. நாளை இரவில் வந்துவிடுவானே அந்தக் கொடூரன்..

அந்த இரவும் வந்தது. தூக்கம் வராமல் பயமும், பதற்றமுமாய்க் கட்டிலில் அமர்ந்திருந்தார் அம்பிகா பிரசாத். பின்னிரவில் திடீரெனத் தெரிந்த உருவம் நெருங்கியது. ‘வார்த்தையைக் காப்பாற்றிக்கொள். வா!’ என்ற கட்டளை. அம்பிகா பிரசாதின் மனம் மூர்க்கமாக அடம்பிடித்தது. ’நான்.. நான்.. வரமாட்டேன்!” எனக் குழறிப் பின்வாங்குகிறார். யமதூதன் அலட்சியமாக நெருங்குகிறான். இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் பிரசாத். பக்கத்தில் வைத்திருந்த ஒரு பெரும் கழியைப் பாய்ந்து எடுத்துச் சுழற்றினார். உருவம் திகைப்பதுபோல் பின் வாங்க, வெறியுடன் தாக்கினார் அம்பிகா பிரசாத். ஓங்கி ஒரே போடு… உருவம் தப்பி மறைந்துவிட்டதோ.. ‘ஆ!.. ஆ!.. ம்..மா ..’ என்று இருட்டில் நொறுங்கியது ஒரு ஈனக்குரல். தடாலென்று ஏதோ கீழே விழும் சத்தம், அம்பிகா பிரசாதை திடுக்கிடவைத்தது. தட்டுத் தடுமாறி விளக்கைப் போட்டார். தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் தரையில் விழுந்துகிடந்தாள், அவரது மனைவி. ‘ஐயோ.. ஐயோ.’ வீரிட்டார் அம்பிகா பிரசாத். ”நீயா!.. நீ.. நீ எப்படி, எப்போது இங்கே வந்தாய்…” எனப் புலம்பியவாறு குனிந்து அவளை அசைத்தார். குலுக்கிப் பார்த்தார். அவளது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.  அங்கேயே உட்கார்ந்துவிட்டார். தலையிலடித்துக்கொண்டார். என்  அருமை மனைவியையும் இழந்துவிட்டேனே.. கதறினார் அம்பிகா பிரசாத். பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தவரின் மனதில் திடீரென்று ஒரு ஆவேசம் கிளம்பியது. ’உன்னால்தான் எல்லாம்.. உன்னால்தான்..’ என்று எங்கோ பார்த்துத் தனக்குத்தானே தீவிரமாக சொல்லிக்கொண்டார். துக்கம் தாளமுடியாமல், தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு இறந்தார் அம்பிகா பிரசாத் – என்று முடிகிறது கதை.

Saeed Jaffrey, Actor

’அசம்பவா’ என்ற பெயரில் 1984-ல் வெளிவந்த ஹிந்திப் படம். எண்பதுகளில், சோதனை முயற்சிகளாகவும், வித்தியாசமான கதைக்களன்கள் கொண்டதாகவும், பாலிவுட்டில் புதிய இயக்குனர்கள், தேர்ந்த நடிக, நடிகைகளைக்கொண்டு பல ‘நியூவேவ்’ அல்லது ‘off-beat films’ -களை எடுத்து வெளியிட்டார்கள்.  அவற்றினிடையேயும், மிக மாறுபட்ட திரைப்படம் இது. மனித மனதில் புதைந்துகிடக்கும் பலவீனங்கள், குள்ளநரித்தனங்கள், அநீதி, பேராசை என ஆழம் பார்க்கமுயல்கிறது இந்தப் படம். ஒரு கலைப்படைப்பு என்பதற்கான சித்திரங்கள் தெறிக்கின்றன இதில்.

கதையின் களமே மரணம் ஆனதால், இந்தப் படம் அதிக நாள் ஓடவில்லைபோலும். திரை விருது எதையும் பெறவில்லை. ஆயினும் விமரிசகர்களால் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஜக்தீஷ் பானர்ஜி எனும் இயக்குனரின் படம் இது. இங்கிலாந்தின் நாடகவெளியில் தாக்கம் ஏற்படுத்திய, இந்தியாவிலும் சில புகழ்பெற்ற டைரக்டர்களின் படங்களில் சிறப்பாக நடித்திருந்த சயீத் ஜாஃப்ரீ (Saeed Jaffrey) முக்கிய பாத்திரத்தில் (அம்பிகா பிரசாத்) நடித்த படம். மனைவியாக மராட்டிய சினிமா/நாடகத் திரை நட்சத்திரங்களில் ஒருவரான ரோஹினி ஹட்டங்காடி. ஆத்ம நண்பனாக மன்மோகன் கிருஷ்ணா. ஆர்ட் படங்களில் தென்படும் முகங்கள்..

”.. கட் கயி உம்ர் மேரி தோ.. முஜே பத்தா ஏ (ச்)சலா…” என்று துவங்கும் புபீந்தர் சிங் (Bhupinder Singh) இனிமையாகப் பாடிய ஒரு பாடல் இந்தப் படத்தில். (”அது முடியும் தருவாயில்தான் தெரியவந்தது – வாழ்க்கையா? நான் அதை எங்கே வாழ்ந்தேன்…” என்கிற அர்த்தத்தில்). இன்னுமொரு பாடல்: ’ஜிந்தகி பி க்யா நஷா ஹை…’ என்று ஆரம்பிக்கும் சுரேஷ் வாட்கர் பாடிய -”வாழ்க்கைதான் எத்தனை போதையானது.. நான் இன்று குடித்திருக்கிறேன்…மரணமே நீயும் சேர்ந்துகொள்.. இந்தா..குடி..” எனச் செல்லும் பாடல். இரண்டு இடங்களிலும் சயீத் ஜாஃப்ரீயின் நடிப்பு அசத்தல். இரண்டையும் எழுதியது விஸ்வனாத் சச்தேவ். மியூசிக்: பினாய் ஹஸீப் (Binoy Hasib). மராட்டிய எழுத்தாளர் எஸ்.என். நாவரே எழுதிய கதை ‘அஸம்பவா’.

இந்தப் படத்தை சோமாலியாவில் பணியிலிருக்கையில், வீடியோவில் பார்த்தேன். அதிர்ச்சியும், சொல்லவொண்ணா அயர்வும் தருவதாக இருந்த படம். சயீத் ஜாஃப்ரீயின் நடிப்போடு, மற்ற நடிக, நடிகர்களின் பங்களிப்பும் அளவாக அமைந்திருக்கிறது. நினைவிலிருந்து, கதையை மேலே கொண்டுவந்திருக்கிறேன்.

அமேஸானிலோ, ஃப்லிப்கார்ட்டிலோ டிவிடி, விசிடி கிடைக்கலாம். வாங்கிப் பாருங்கள் ஒரு முறை..

**

Ind vs SA : முதல் டெஸ்ட் ஆஹா! அடுத்து ..

 

விசாகப்பட்டினத்தில் விராட்டுக்குக் கிடைத்துவிட்டது வெற்றி. கடைசி நாளில் பௌலர்கள் முகமது ஷமியும், ரவீந்திர ஜடேஜாவும் போட்டுத் தாக்கியதில் நிலைகுலைந்து போனது தென்னாப்பிரிக்க பேட்டிங். முதல் இன்னிங்ஸில் திறமைகாட்டிய எல்கர், டி காக் (de Cock), டூ ப்ளஸீ (du Plessis) எளிதில் சரிந்துவிட, மார்க்ரம், பவுமா (Bavuma), டி ப்ருய்ன் போன்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பு இருந்தது. மார்க்ரம் அடித்த 39 போதவில்லை. அவர், ஜடேஜாவின் சுழல் பந்தை பௌலரின் தலைக்குமேல் தூக்க, ஜடேஜா ஒரு எம்பு எம்பி, இடது கையால் கேச்சை லவட்டிய விதம், விசாகப்பட்டினத்தின் மறக்கமுடியாக் காட்சி. (ஜடேஜா சராசரி உயரம்தான் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டியது.) ரசிகர்களும் சீட்டிலிருந்து எம்பிவிட்டார்கள்..

ஷமியின் ஒரு அருமையான பந்தில் பவுமா க்ளீன் -போல்ட். டி ப்ருய்ன் (de Bruyn) அஷ்வினின் வேகமாக உள்ளே திரும்பிய பந்தில் ஏமாந்து போல்டானார். பேட்டிங் வரிசையில் ஏழாவதாக இறங்கிய முத்துசாமியும், பத்தாம் நபராக உள்ளே வந்த டேன் பீட் (Dane Piedt)- உம் கடுமையாகப் போராடி தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 150-ஐக் கடந்து செல்ல உதவினர். பீட் அரைசதம். முத்துசாமி 49 நாட் அவுட். வரவேண்டிய மழையும் காலை வார, அவ்வளவுதான் கதை. 191-ல் ஆல் அவுட். 203 ரன் வித்தியாசத்தில் தோற்றது தென்னாப்பிரிக்கா.

இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர் ஷமி அசத்திவிட்டார். அவருக்குக் கொடுக்கப்பட்ட 11-க்கும் குறைவான ஓவர்களில் 5 விக்கெட். பழைய பந்தைப் பயன்படுத்துகையிலும், துல்லியமும், ஸ்விங்கும் காண்பிக்கமுடிந்தது அவரால். அடுத்த பக்கத்திலிருந்து தாக்கிய இடது கை வீச்சாளர் ஜடேஜாவுக்கு, 4 பேர் பலி. அஷ்வினுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்தான் எனினும், அவர்  350 -ஆவது  டெஸ்ட் விக்கெட் எனும் சாதனை அளவை அடைய,  அதுவே போதுமானதாக இருந்தது.

Ashwin, Jadeja

கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டுதான்.  எனினும், மயங்க் அகர்வால் (முதல் இன்னிங்ஸ் 215), ரோஹித் ஷர்மா ( ஆட்டநாயகன், இரு இன்னிங்ஸிலும் தலா சதம்), அஷ்வின்  டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்கள்,  ஷமியின் இரண்டாவது இன்னிங்ஸ் 5 விக்கெட், ஜடேஜா வேகமாக எட்டிய  200-ஆவது டெஸ்ட் விக்கெட், என தனிப்பட்ட இந்திய மைல்கற்கள் மின்னின இந்த டெஸ்ட்டில். அனேகமாக அடுத்த டெஸ்ட்டுக்கான (பூனே, 10 அக்.), இந்திய அணியில் மாற்றம் இருக்காது.

தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸ் சோகம் அவர்களைத் தடுமாறவைத்தாலும், எழுந்து வருவார்கள் பூனேயில். வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் ஃபிலாண்டர் (Vernon Philander) சரியாக வீசாத நிலையில், லுங்கி இங்கிடி {Lungi Ngidi (IPL-CSK)}, ககிஸோ ரபாடாவுடன் (Kagiso Rabada) ஜோடி சேர்ந்து பூனே பிட்ச்சில் உறுமக்கூடும். அனேகமாக டேன் பீட், ஸெனுரன் முத்துசாமி (Senuran Muthusamy) தொடர்வார்கள் எனத் தோன்றுகிறது. முத்துசாமி இரண்டு இன்னிங்ஸிலும் அவுட் ஆகாமல், ஸ்பின்னர்களின் கடுமைக்கெதிராக அழுத்தமாக நின்று ஆடியவிதம், ’he is technically very sound’ என்று தென்னாப்பிரிக்க கேப்டனைப் புகழவைத்துள்ளது. ஸ்பின் பௌலிங்கில் முத்துசாமி,  நமது ஹனுமா விஹாரி மாதிரி. சில ஓவர்கள் மட்டுமே தரப்படும். விக்கெட் விழுந்தால் சரி. விழாவிட்டாலும் சரி.

பூனேயில் பார்ப்போம் – கோஹ்லியின் சுக்ர தெசை தொடருமா என்று !

**

Ind vs SA : கோஹ்லியின் .. ஆசை நிறைவேறுமா !

 

இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச் சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கிறது.. சீரியஸ்லி! முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பில், 502 ரன் அடித்து டிக்ளேர் செய்து, இரண்டாம் நாளின் இறுதியிலேயே தென்னாப்பிரிக்காவின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்ட குஷியில் இருந்தார் கேப்டன் கோஹ்லி. ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் ஜோடியின் ப்ரமாத துவக்க ஆட்டம், ஒரு மதமதப்பைக் கொடுத்திருக்கவேண்டும், கோஹ்லிக்கும், கோச்சு சாஸ்திரிக்கும் (ரோஹித் 176, மயங்க் 215) !

Virat Kohli

மூன்றாம் நாள், ஸ்க்ரிப்டை மாற்றியது-செமயாகத் திருப்பிக்கொடுத்தது தென்னாப்பிரிக்கா. இன்று (5/10/19 நான்காவது நாள்) காலை 431-ல் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முடிவுக்கு வந்தது (எல்கர் 160, டி காக் 111, டூ ப்ளஸீ 55). தென்னாப்பிரிக்காவின் (தமிழ்நாட்டு) முத்துசாமி, தங்கள் அணி 400-ஐக் கடப்பதில் பெரிதும் துணையாக இருந்தார், இறுதி வரை அவுட் ஆகாமல்(33 ரன்) கட்டைபோட்டு. முதல் இன்னிங்ஸில் கோஹ்லியை caught & bowled – எனக் காலி செய்திருந்தார் மனுஷன்!

கடைசி நாளான நாளை (6-10-19) மழைவரலாம் என வானிலை மையம் முணுமுணுக்கிறது. எவ்வளவு தூரத்துக்கு சரியாக இருக்கும் இது என்பது, வருண பகவானுக்கே வெளிச்சம். இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா வேகமாக அடித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் எக்ஸ்ப்ரெஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி (7 சிக்ஸர்கள்) தூள்கிளப்ப, பாசெஞ்சர் ட்ரெயினான புஜாராவும் கொஞ்சம் வேகமாக ஓட்டி, 81 எடுத்துவிட்டார். பின் வந்தவர்கள் கொஞ்சம் தட்டிவைக்க, ஸ்கோர் 323க்கு 4 விக்கெட்டுகள் என இருக்கையில், பேட்டிங் செய்துகொண்டிருந்த கோஹ்லி திடீர் டிக்ளேர் செய்து பெவிலியனுக்குள் ஓடிவிட்டார்! விசாகப்பட்டின ரசிகர்களிடையே  சலசலப்பு.

நேரம் இருந்ததால், தென்னாப்பிரிக்கா சில ஓவர்களை இன்றே விளையாடவேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு விக்கெட்டைத் தூக்கிவிடலாம் என்றுதான் கோஹ்லியின் அந்த அவசரம்.  வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர், அஷ்வின் இரண்டாவது ஓவர் என ரசிகர்கள் அனுமானித்த நிலையில், அதிர்ச்சி. கையில் புதுப்பந்தோடு முதல் ஓவர் அஷ்வின், இரண்டாவது ஜடேஜா. ஸ்பின்னிலேயே டெஸ்ட் இன்னிங்ஸ் துவக்கம்.  காரணம், வெளிச்சம் போதாமையால்,  இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த அம்பயர்கள் அனுமதிக்கவில்லை.  நல்லதாப் போச்சு. ஸ்பின்னர்கள்தான் எப்படியும் அதிக ஓவர்கள் போடப்போகிறார்கள். அங்கேதான் தென்னாப்பிரிக்காவின் சிக்கலும்.  இப்படியான  ஸ்பின் ஆரம்பத்திற்கு,  பலனும் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஹீரோவான டீன் எல்கரை (Dean Elgar), வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஜடேஜா. இந்த அதிர்ச்சியிலிருந்து  மீண்டு, நாளை ஒழுங்காக மட்டையை சுழற்றினால், தென்னாப்பிரிக்கா தப்பிக்கலாம். இலக்கு 395 ரன்கள். அஷ்வினின் சுழல் ஜாலம்,  ஜடேஜாவின் எரிச்சலூட்டும் துல்லியம் ஆகியவற்றை எதிர்த்து நிறைய கட்டை போடவேண்டியிருக்கும். முத்துசாமி மீண்டும் கைகொடுப்பாரா?  கடைசிநாள் இந்தியப் பிட்ச்சில் எந்த ஒரு வெளிநாட்டு அணிக்குமே அது எளிதல்ல. பெரும்பாலும் எதிரி மண்ணைக் கவ்வுவதுதான் வழக்கம். அப்படி நடந்தால் 40 பாய்ண்ட்டு இந்தியாவுக்கு -உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி என்பதால்.

போன இன்னிங்ஸில் வழிந்த, ஆய்டன் மார்க்ரம் (Aiden Markram), டி ப்ருய்ன் (de Bruyn) க்ரீஸில் இப்போது இருக்கிறார்கள். கேப்டன் டூ ப்ளஸீ (Faf du Plessis) மற்றும்  டி காக் (Quinton de Cock, பவுமா (Tenda Bavuma) ஆகியோர் நிறைய உழைக்கவேண்டியிருக்கும். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அதிரவைத்த அஷ்வின், ஜடேஜாவோடு இணைந்து தென்னாப்பிரிக்கர்களுக்கு சிம்ம சொப்னமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை, விசாகப்பட்டினத்தில் மழைதேவன் நாளைக்கென்று, வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பாரோ?

**