ஆரம்பமாகிறது ப்ரிஸ்டல் (Bristol), இங்கிலாந்தில் ஒரு-நாள் மங்கையர் கிரிக்கெட் தொடர் இன்று (27 ஜூன், 21. Sony Ten 1. 1500 IST). மித்தாலி ராஜ் தலைமையில் இந்திய அணி, ஹீதர் நைட் தலைமை தாங்கும் இங்கிலாந்து அணிக்கெதிராக முதல் போட்டியை ஆடுகிறது.

தன் சர்வதேச கிரிக்கெட் ப்ரவேசத்தை டி-20 கிரிக்கெட்டில் ஆரம்பித்து தூள்கிளப்பிய 17-வயது பேட்ஸ்மன் ஷெஃபாலி வர்மா, சமீபத்தில் இந்தியாவுக்காக தன் முதல் டெஸ்ட் மேட்ச்சை, சிறப்பாக ஆடி சர்வதேச கவனம் பெற்றார். தன் முதல் ஒரு-நாள் போட்டியை இன்று அவர் ஆடுவார் எனத் தெரிகிறது. கடந்த இருவருடங்களில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே அதிரடி வீராங்கனை. எதிரணி அஞ்சும் தாக்கும்திறன், உத்வேகம் உடைய ஷெஃபாலியிடம் இந்தியா நிறையவே எதிர்பார்க்கிறது. முதல் பந்திலிருந்தே தூள்கிளப்பப் பார்க்கும் துவக்க ஆட்டக்காரர் இந்தப் பெண் எனச் சொல்வதைவிடவும், இந்தச் சிறுமி என்றாலே பொருந்தும்!
ஸ்ம்ருதி மந்தனாவும், ஷெஃபாலி வர்மாவும் ஆட்டத்தை துவக்கக்கூடும். கடந்த டெஸ்ட் போட்டியில் ஃபார்ம் காட்டாத, கேப்டன் மித்தாலியும், ஹர்மன்ப்ரீத் கவுரும்(Harmanpreet Kaur) இந்தத் தொடரில் ரன் சேர்ப்பார்களா என்பது கவனிக்கப்படவேண்டியது. அவர்களது மிடில் ஆர்டர் பங்களிப்பு இல்லாவிட்டால், குறிப்பாக ஹர்மனின் தாக்குதல் தொடராவிட்டால், தொடரை இந்தியா ஜெயிப்பது கஷ்டம். கடந்த டெஸ்ட்டில் தோற்றிருக்கவேண்டிய இந்தியாவை, தன் சிறப்பான பங்களிப்பினால் காப்பாற்றிய ஆல்ரவுண்டர் ஸ்னேஹ் ரானா ஒரு-நாள் தொடரில் அவசியம் ஆடவேண்டும். மற்றபடி தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆகியோரோடு வேகப்பந்துவீச்சாளர்கள் ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகார், அருந்ததி ரெட்டி ஆகியோர் ஆடுவார்கள் என நம்பலாம். ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ் ஆகிய ஸ்பின்னர்களில் ஒருவர்தான் சேர்க்கப்பட வாய்ப்பு.
இரண்டு வருடமுன்பு நடந்த உலகக்கோப்பை இறுதியில், இந்தியா இங்கிலாந்திடம் 9 ரன் வித்தியாசத்தில் தோற்றது. வலி மிகத் தந்த தோல்வி அது. வலிமை மிக்க இங்கிலாந்து அணியை மீண்டும் சந்திக்கும் இந்திய வீராங்கனைகள் உத்வேகத்துடன் இறங்கி, புத்திசாலித்தனத்துடன் இனி ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இங்கே அவர்கள் காண்பிக்கும் ஆட்டத்திறன், பங்களிப்பு, அணியை பலப்படுத்துவதோடு, நியூஸிலாந்தில் நடக்கவிருக்கும் அடுத்த வருட ஒரு-நாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் சரியான தேர்விற்கும் உதவும்.
**