இந்தியா ஆடிய கிரிக்கெட்: பில்லி சூன்யம் !

36 .

என்ன இது? சுஜாதாவின் வர்ணனை 36-24-36 -ல் வரும் 36-ஆ?

ம்ஹூம்.. 

பின்னே?

அடிலெய்ட் கிரிக்கெட் மேட்ச்சில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர். சும்மா ரெண்டு டிஜிட். பூதக்கண்ணாடியில் பெரிஸ்ஸா தெரியும்.

ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 200-ஐ நெருங்கவிடாமல் அவுட் ஆக்கி, 53 ரன் லீட் கொடுத்த டீம். மூன்றாவது நாள் (19/12/20) காலை. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது. 15/2. யாரு? பும்ரா -நைட் வாட்ச்மேன்- அவுட். பரவாயில்லை. 15/3 : இந்தியாவின் புதிய ‘சுவர்’ இடிய,  பூஜ்யம்.  புஜாராவும் காலியா? 15/4 : அகர்வால் போயாச்சு.. 15/5 : ரஹானே,  நாலு பந்தைப்பார்த்துவிட்டு மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியனை நோக்கி. 19/6 : கேப்டன் கோஹ்லி..  caught in the slips ! என்ன எழவுடா இது. டெஸ்ட் மேட்ச்சா ஆட்றானுங்க.. கண்டவன்லாம் குருட்டுத்தனமா விளாசும் டி-20-லகூட இப்படில்லாம் நடக்காதே..

மேட்ச்சின் முதல் இரண்டு நாள் ஆட்டம், மூன்றாவது நாளின் சுவடைக் காண்பிக்கவில்லை. இரண்டு அணிகளும் சரியான போட்டி உணர்வில் மும்முரம் காட்டி மோதின. அந்தப்பக்கம் ஸ்டார்க், கமின்ஸ்.. இந்தப்பக்கம் அஷ்வின், பும்ரா. அவர்களுக்கு கேப்டன் பெய்ன், நமக்கு நம்ப கேப்டன் கோஹ்லி – டாப் ஸ்கோர். கிட்டத்தட்ட சரிசமமான எதிரிகள் மோதும் அட்டகாச மேட்ச்போல. இரவு-பகல் பிங்க் பால் டெஸ்ட்! இந்திய, ஆஸ்திரேலிய ரசிகர்களைத் தாண்டியும் உலகமே ஆர்வமாக நோக்கிவரும் டெஸ்ட் தொடர்.

மூன்றாவது நாளில், இந்தியாவுக்கு யாரோ பில்லி சூன்யம் வைத்துவிட்டார்கள்!  ஹிப்னடைஸ் ஆனவர்கள் மாதிரி ஒவ்வொருவரும் க்ரீஸுக்கு வருவது,  பந்தைத் தொட்டு விக்கெட் கீப்பருக்கு வார்த்துவிட்டு தலைகவிழ்த்தவாறு வெளியேறுவது. கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இந்திய காமெடி. தமாஷா. நல்லநேரத்தின் முத்தாய்ப்பாக, கடைசியில் வந்த ஷமிக்கு கையில் அடி. எலும்பு முறிவு. இறுதி ஸ்கோர் 36/9. அதாவது 36. கிரிக்கெட் உலகில் வெகுநாளைக்கப்புறம் ஒரு சரித்திர நிகழ்வு. 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளாசிய 42-ஆல் அவுட்- க்கு அப்புறம் இப்போது அடிலெய்டில் கிடைத்தது மகுடம்! Keep it up India.. way to go..

இங்கிலாந்தின் லார்ட்ஸில் 1974-ஆம் வருஷம் இத்தகைய பெருமை சேர்த்த இந்திய அணியிலும் இருந்ததுகள் சிங்கம், புலிகள்: சுனில் காவஸ்கர், ஃபாரூக் எஞ்ஜினீயர், குண்டப்பா விஸ்வனாத், அஜித் வாடேகர், ப்ரிஜேஷ் பட்டேல்,  ஏக்நாத் சோல்கர், சையத் ஆபித் அலி.. அப்போதும் அவர்கள் முதல் இன்னிங்ஸில் அடித்தார்கள் 302. இரண்டாவது இன்னிங்ஸில்தான் 42. சரித்திரம் திரும்பியது 45 வருஷத்திற்கப்புறம் ஆஸ்திரெலியாவில் நேற்று(19-12-20). இந்தியா முதல் இன்னிங்ஸில் 244. அடுத்த இன்னிங்ஸில் 36 !

அடுத்தாற்போல் எப்போது திரும்புமோ இந்தக் குதூகல சரித்திரம்!

**

டி-20 தொடர் கையில்.. இனி டெஸ்ட் அரங்கம் !

மூன்றாவது டி-20 ஐ 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.  மேத்யூ வேடின் (Mathew Wade)அதிரடி பேட்டிங்கிற்கு கொஞ்சம் மேலேயே போய் பதில் தந்தார் கேப்டன் கோஹ்லி. Class act. ஆனால் போதவில்லை. மிடில்-ஆர்டர் நொறுங்க, பாண்ட்யாவும் 20 ரன்னில் விழுந்ததால், இந்தியா வெல்ல இயலவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஆஸ்திரேலிய பௌலர்கள் (குறிப்பாக ஸ்பின்னர் ஸ்வெப்ஸன்) அபாரமாக வீசி இந்தியர்களைத் தடுமாறவைத்தார்கள். அவர்கள் இந்தியாவைவிட ஒரு படி மேலேயே இருந்தார்கள். ஜெயித்ததே நியாயம்!

2-1 என்று தொடர் இந்தியாவின் கையில் வந்தது. தொடர் நாயகன் ஹர்திக் பாண்ட்யா நடராஜனின் கையில் தன் விருதைக் கொடுத்து ’நீ தாம்ப்பா இந்த விருதுக்கேற்ற ஆளு!’ என்று உணர்ச்சி வசப்படுகிறார். தொடர் கோப்பையை கேப்டன் கோஹ்லியும் அவரிடம் கொடுத்து நிற்க, வீரர்கள் வெற்றிமுகம் காட்டிப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நடராஜனுக்குத் தலை சுற்றியிருக்கும்!  Natarajan is the find of the series, no doubt என்கிறார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர். இப்படியே இவர் தொடர்ந்தால், அடுத்த ஆண்டின் டி-20 உலகக்கோப்பைக்கான அணியின் வியூகங்களில் இவர் இடம்பெறலாம் என்கிறார் கோஹ்லி. ஆஸ்திரேலிய மைதானத்தில் ஷமி, பும்ராபோன்ற அனுபவ வீரர்களே தத்தளிக்கையில், எதிரி யார் எனத் தலையைப் பிய்த்துக்கொள்ளாமல், துல்லியம், variations, கடின உழைப்பு என மட்டும் மனதைக் குவியவைத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார் நடராஜன். சாய்த்தபின்பு? கூச்சலோ, கொண்டாட்டமோ ஏதுமில்லை. பந்தை எடுத்துக்கொண்டு அடுத்து வீசப்போவதைப்பற்றி சிந்தித்தவாறே செல்லும் நடராஜன். இதில் கபில்தேவின் சாயல். இந்தியர்கள் புகழ்வது இருக்கட்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் பெரிசுகளும், இந்தக்காலத்தில் காணக்கிடைக்காத அந்த எளிமையை, பண்பை கவனிக்கத் தவறவில்லை.

Mohammed Siraj

டெஸ்ட் மைதானத்திற்கு கதை மாறுகிறது டிசம்பர் 17-லிருந்து. முதல் டெஸ்ட் அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் இரவு-பகல் ஆட்டம். இந்திய பேட்டிங் கோஹ்லி, புஜாரா, ரஹானே, ராஹுல் என மையம் கொள்ளும். துவக்கத்தில் ப்ரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் – இருவரில் ஒருவர் நுழைய வாய்ப்பு. அனேகமாக வ்ருத்திமான் சாஹா விக்கெட்கீப்பராக பங்களிப்புசெய்வார். இந்தியாவின் பௌலிங் ஆஸ்திரேலியாவின் வலிமையான பேட்டிங்கிற்குப் பெரிதாக சவால் விடுக்கும் எனத் தோன்றவில்லை. வேகப்பந்தில் முகமது ஷமி, பும்ராவோடு, உமேஷ் யாதவ் மற்றும் அனுபவம் இல்லாத, ஆனால் சாதிக்க ஆசைப்படும் முகமது சிராஜ் (ஐபிஎல் பெங்களூர் அணி) இருக்க வாய்ப்பு. ஒருவேளை சிராஜ் சேர்க்கப்படவில்லை எனில், நவ்தீப் செய்னி வரலாம். ஒரே ஒரு ஸ்பின்னர்தான் இந்திய அணியில் இருப்பார். அந்த நிலையில் அனுபவ வீரர் அஷ்வினுக்கு வாய்ப்பு. சிட்னி டெஸ்ட்டில் இரண்டு ஸ்பின்னர்கள் ஆடலாம். அப்போது அஷ்வினோடு ஜடேஜா சேர்ந்துகொள்வார். ஜடேஜாவின் வலிமையான பேட்டிங் அணிக்கு உகந்தது. காயத்திலிருப்பதால், முதல் டெஸ்ட்டிற்குள் அவர் நுழைவதற்கான வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.

முதல் டெஸ்ட்டிற்குப் பின் கோஹ்லி விடுவிக்கப்படுவதால், அவரிடத்தில் ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறலாம். கோஹ்லியில்லாத இந்திய அணிக்கு அஜிங்க்யா ரஹானேதான் கேப்டன். இந்தத் டெஸ்ட் தொடர், இந்தியாவுக்கு வேறொரு கதையைச் சொல்லக்கூடும்.

**

T-20 : சிட்னியில் சிரித்த இந்தியா !

இதற்கு முன் இரண்டு ஒரு-நாள் போட்டிகளில் செம்மயா அடிவாங்கிய சிட்னி மைதானத்தில், இந்தியா அபாரமாக டி-20 ஆடியது நேற்று. 194 என்கிற ஆஸ்திரேலிய ஸ்கோர் ப்ரும்மாண்டம்தான் அங்கே. அசரவில்லை இந்தியா. இலக்கைத் துரத்தி வென்றவிதம் ரசிகர்களைக் கூத்தாடவைத்தது.

இந்திய அணியில், தலைக்காயம் ஜடேஜாவை உள்ளே வரவிடவில்லை. சீனியர் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா சேர்க்கப்படவில்லை. மாறாக, தீபக் சாஹர், ஷர்துல் டாக்குர், நடராஜன் ஆடினர். சாஹலும், சுந்தரும் ஸ்பின் பொறுப்பை ஏற்றனர். ஆஸ்திரேலியாவுக்கு காயங்களால் பிரச்னைகள். வார்னர், ஃபின்ச் வெளியே. ஸ்டார் பௌலர்களான ஸ்டார்க், கம்மின்ஸ், ஹாசல்வுட் ஆடாதது ஆஸ்திரேலிய பௌலிங்கை பலவீனமாகக் காட்டியது. ஆனால் ஆஸ்திரேலிய ஸ்பின் (Adam Zampa, Mitch Swepson)  இந்தியர்களை அடக்குவதில் அழகாக வேலை செய்தது.   

தற்காலிகக் கேப்டன் மேத்யூ வேட் (Mathew Wade) ஆட்டத்தைத் துவக்கித் தூள்கிளப்பினார். போன மேட்ச்சில் படு டைட்டாகப் போட்ட வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹலைக் குறிவைத்துத் தாக்கினர் ஆஸ்திரேலியர்கள். வேட் 58, ஸ்மித் 46 என அதகளப்படுத்த, மேக்ஸ்வெல் சாஹலைத் தேடி விளாசினார்! விளைவு ? சாஹல் 1 விக்கெட் எடுக்க 51 ரன் கொடுக்கும்படி ஆயிற்று. சுந்தர் 35 ரன்கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. அல்லது கோஹ்லி எடுக்கவிடவில்லை! கேட்ச்சை நழுவவிட்டுக்கொண்டே இருந்தால் பௌலர் என்ன செய்ய? இருந்தும் அதே பந்தில் கோஹ்லியின் த்ரோவினால் வேட் ரன்-அவுட் ஆனது ஒரு தமாஷ்! அப்படியும் சமாளித்து ஆடி 194-க்குப் போய்விட்டது ஆஸ்திரேலியா. எல்லோரும் ரன்னை வாரி வழங்க, நடராஜன் துல்லியம் காட்டி 20 ரன், அதில் ஒரு பௌண்டரி மட்டுமே கொடுத்தார். 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கதையை முடித்த பாண்ட்யா !

இந்தியா பேட்டிங் ஆரம்பிக்கையில்,  தவன் (52), ராகுல்(30) சிறப்பாக ஆடினர். கோஹ்லியின் 24 பந்தில் 40 ரன் என்பது இந்திய ரன்விகிதத்தைத் தூக்கிவிட்டது. சாம்ஸனும் கோஹ்லியும் அவுட் ஆனபின், ஹர்திக் பாண்ட்யாவும் ஷ்ரேயஸ் ஐயரும் இலக்கை நோக்கிய பயணத்தில் சீரியஸ் ஆகினர்! அப்போதும் 195 என்பது அடையமுடியாத ஸ்கோர் போலவே தோன்றியது. ஜடேஜா இல்லாத நிலையில், டெத்-ஓவர் பேட்டிங்கில் பாண்ட்யா தான் யாரென மேலும் ஒருமுறை நிரூபித்தார். கடைசி ஓவரில் 14 ரன் தேவைப்பட்டது. பாண்ட்யா நாலே பந்தில் 2 சிக்ஸ், இரண்டு ரன் என டேனியல் சாம்ஸைத் தாக்கி,  வெற்றியைப் பறித்தார்.  தொடரும் வெல்லப்பட்டது. ஸ்டேடியம் இந்தியக் கொடிகளுடன் ஆட்டம்போட்டது! பாண்ட்யா Man of the Match.

”ஹர்திக் மைதானத்தில் இறங்கும் வரை எங்களுக்கு ஆனந்தமாக இருந்தது!” என்றார் ஆஸ்திரேலிய கேப்டன் வேட்! கடைசி டி-20 நாளை (8-12-20) அதே சிட்னியில். மேலும் ஒரு high-scoring encounter வருமோ?

**

டி-20 கிரிக்கெட்: விசித்திர வெற்றி

கேன்பர்ராவில் நேற்று (4-12-20) நடந்த முதல் டி-20 போட்டியை 11 ரன்னில் ஆஸ்திரேலியாவைத் தகர்த்தி,  இந்தியா கைப்பற்றியது. அதுவும் எப்படி! Concussion Subtitute-ஆக உள்ளே நுழைந்தார் யஜுவேந்திர சாஹல், லெக்-ப்ரேக் பௌலர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய அணியில் இல்லாது, அதுவரை பெஞ்சிலே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்! அவரது அசத்தலான பௌலிங்கும் ஒரு பிரதான காரணம், இந்திய வெற்றிக்கு. ஆஸ்திரேலியாவின் கொதிப்புக்கு. ஜடேஜாவுக்குப் பதிலாக சாஹல்  உள்ளே வந்ததை ஆட்சேபித்து, மேட்ச் ரெஃப்ரீ டேவிட் பூனோடு (David Boon) உரசிப்பார்த்தார் ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர். ’ரூல் என்றால் ரூல்தான். ஒன்றும் செய்யமுடியாது’ என்பது ரெஃப்ரீயின் கடுமையான பதில்.

Jadeja, Chahal

சென்ற ஆகஸ்டில் ஐசிசி கொண்டுவந்த புதிய நியதிப்படி ஒரு அணியின் வீரர், தலையில் அடிபட்டுக் காயமடைந்து மேற்கொண்டு அந்த ஆட்டத்தைத் தொடரமுடியாமல் போனால்,  அவருடைய இடத்தில் like-for-like substitute-ஐ மேட்ச் ரெஃப்ரீ அனுமதிக்கலாம். அத்தகைய நிலையில் ரெஃப்ரீயின் முடிவே இறுதியானது என்கிறது. அதுதான் நடந்தது. ஜடேஜா வெளியே, சாஹல் உள்ளே. போதாததற்கு, தன் முதல் டி-20 ஆடவந்த நடராஜனும்  ’யார்க்கர்’ சாகஸம் காட்ட,  பௌலிங் தூள்கிளப்பியது.  இந்தியாவுக்கு அடித்தது யோகம், கேட்ச்சுகளை நழுவவிட்டுக்கொண்டு அவ்வப்போது அசடு வழிந்தும்!

முன்னதாக இந்திய பேட்டிங்கில் ராஹுல் மட்டுமே பொறுப்பாக ரன் சேர்த்தார் (51). பாண்ட்யா (16) அவுட் ஆகையில், 17-ஆவது ஓவரில்  ஸ்கோர் 112/6. 135-க்குக் கொண்டுவந்தாலே அதிசயம் என்கிற அவலநிலை.  ஜடேஜாதான் கைகொடுத்தார்.  23 பந்துகளில் 44 நாட்-அவுட் விளாசி மானத்தைக் காப்பாற்றினார். ஆனால் ஸ்டார்க் போட்ட கடைசி ஓவரில் தலையில் அடி. தசைப்பிடிப்பு. இடைவேளையின்போது அவரது தலைக்காயம் (concussion) மேலும் மருத்துவர்களால் சோதிக்கப்பட இருந்ததால், ஆடவாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது. அவரின் இடத்தில், இந்தியா பௌலிங் செய்கையில் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார் லெக்-ஸ்பின்னர் சாஹல்.

55/0 என ஜோராகப் போய்க்கொண்டிருந்தது ஆஸ்திரேலியா. பவர்-ப்ளேயில் பந்துபோட்ட வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுக்கவில்லை எனினும், 4 ஓவர்களில் கஞ்சத்தனமாக வெறும் 16 ரன் கொடுத்துப் பிடியை இறுக்கினார். எதிரியை மடக்கித் தாக்கினர் சாஹலும், நடராஜனும்.  ஃபின்ச், ஸ்மித், வேட் (Mathew Wade) ஆகியோரை சாஹல் பெவிலியனுக்குத் திருப்ப, ஆஸ்திரேலியா அதிர்ந்தது. காட்டிக்கொள்ளவில்லை.  மேக்ஸ்வெல், டார்சி ஷார்ட் (D’Arcy Short), ஸ்டார்க் எனப் பாய்ந்து குதறினார் நடராஜன். ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. 150-ல் தலைசுற்றிக் கீழே விழுந்தது.

இப்போதைய நியூஸ். மிச்சமிருக்கும் இரண்டு  டி-20 போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இல்லை. Concussion under medical observation. மிதவேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் டாக்குர் உள்ளே. அதேபோல் டெஸ்ட் ஆஃப்ஸ்பின்னர் நேதன் லயனை உள்ளே வரச் சொல்லியிருக்கிறது ஆஸ்திரேலியா. சிட்னியின் பெரிய, இந்தியாவுக்கு சிரமம் தரும் மைதானத்தில், ஸ்பின் வேறு வம்புக்கு இழுக்குமோ!

**

Cricket: ஒரு சிறு வெற்றி..

A small, but  significant victory for India. கேன்பர்ராவில் நேற்று (02 டிசம்பர், 20) நடந்த இறுதி ஒரு-நாள் போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கொஞ்சம் ஆச்சரியமான ரிசல்ட்.

அணித்தேர்வு விஷயத்தில் தூக்கத்திலிருந்து மீண்ட இந்தியா,  பாசிட்டிவாக சிந்திக்க நேர்ந்தது. விளைவு 4 மாறுதல்கள், பிரதானமாக பௌலிங்கில். முகமது ஷமியின் இடத்தில் ஷர்துல் டாக்குர் (Shardul Thakur எடுபடலாம் என முன்பு இங்கு சொல்லியிருந்தேன்). நவ்தீப் செய்னியின் இடத்தில் T. நடராஜன். ஃபார்மில் இல்லாத சாஹலின் இடத்திற்கு குல்தீப் யாதவ். அதிகமாக ரன் எடுக்காத மயங்க் அகர்வாலின் ஆரம்ப இடத்தில் ஷுப்மன் கில் (Shubman Gill). (இதையும் முந்தைய கட்டுரையில் பார்க்கலாம். ஏனோ அவர்கள் (கோஹ்லியும் அவருடைய துரோணாச்சாரியரும்) சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு தரத் தயங்குகிறார்கள். ஒருவேளை சாம்ஸன் நன்றாக அடித்து ஆடி, அணியில் ஒட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயமோ!

இந்திய வெற்றியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள். சுருக்கமாக.

32 ஓவரில்  கோஹ்லியையும் இழந்து, 152-க்கு 5 எனப் புலம்பிக்கொண்டிருந்த இந்திய ஸ்கோர், 250 ஐத் தாண்டுவது கடினம் என்கிற நிலை. நம்பர் 6, 7 என்கிற நிலையில் இறங்கி, ஆரம்பத்தில் அதீத ஜாக்ரதை உணர்வுகாட்டி, இறுதியில் சாத்து சாத்து என ஆஸ்திரேலியர்களைச் சாத்திவிட்டார்கள் ஹர்திக் பாண்ட்யாவும், ரவீந்திர ஜடேஜாவும். 2019 உலகக்கோப்பையில்  நியூஸிலாந்துக்கு எதிரான அட்டகாசத்திற்குப் பின் ஜடேஜாவின் மாஸ்டர்-க்ளாஸ். ’ஷான் ஆப்பட்’ (Shaun Abbot) ஓவர் ஒன்றில் 3 பௌண்டரிகள், ஒரு சிக்ஸ் எனக் கிழித்துத் தொங்கவிட்டார் மனுஷன். எடுத்த ரன்கள் அல்ல, அசால்ட்டாக அதை  ஆடியவிதம்தான் எதிரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. பாண்ட்யா அந்தப்பக்கத்திலிருந்து ஜடேஜாவை சூடேற்றிக்கொண்டு, சமயம் வருகையில் தானும் போட்டுத்தாக்க, கடைசி 5 ஓவரில் இந்தியாவுக்கு சேர்ந்தது 76 ரன்கள். இறுதிவரை ஆடிய ஹர்திக் பாண்ட்யா 92, ஜடேஜா 66. நாட்-அவுட். கௌரவமாகத் தோன்றிய இந்தியாவின் 302.

இந்திய இன்னிங்ஸ் முடிந்ததும், சோனி சேனலின் இந்திய வர்ணனையாளர்கள் (ஹர்ஷா போக்லே, முரளி கார்த்திக், அஜய் ஜடேஜா) பாண்ட்யா, ஜடேஜா ஜோடியின் பேட்டிங்கை ஆஹா என்றார்கள். ஓஹோ என்றார்கள். அருகில் உட்கார்ந்திருந்த ஆஸ்திரேலியாவின் க்ளென் மக்ரா (Glenn McGrath, former fastbowler) சொன்னார் அலட்சியமாக:  ’இந்தியா ஒருவேளை போராடலாம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு இந்த டார்கெட்டெல்லாம் ஒன்றுமில்லை’. அவர்மேல் தப்பில்லை. அப்படித்தான் இருந்திருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் 350-க்கு மேல் விளாசி தூள்கிளப்பிய ஆஸ்திரேலியர்களுக்கு.

பாராட்டப்படுகிறார் நடராஜன்

ஆனால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷர்துல், இந்தியாவுக்காகத் தன் முதல் சர்வதேச மேட்ச்சை ஆடவந்த நடராஜன் வேறுவிதமாகக் கணக்குப்போட்டுத் தயாராயிருந்தனர். கடந்த 6 ஒருநாள் மேட்ச்களில், இந்தியா பவர் ப்ளேயில் (1-10 ஓவர்கள்) எதிர் அணியின் விக்கெட்டை வீழ்த்தியதில்லை. நடராஜன் தன் 3-ஆவது ஓவரில் ஓப்பனர் மார்னஸ் லபுஷானேயை (Marnus Labuschagne) 7 ரன்னில் க்ளீன்போல்ட் செய்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடி காட்டி 76 எடுத்தார் எனினும், விக்கெட்டுகள் மெல்லச் சரிய ஆரம்பித்தன. ரன்விகிதம் குறைய,  இடையில் வந்த மேக்ஸ்வெல் 38 பந்தில் 59 அடித்து ஒருகட்டத்தில் இந்தியாவைத் திணறவைத்தார்தான். ஆனால், இந்திய பௌலர்கள் அசரவில்லை. முனைப்போடு தாக்கினார்கள். ஷர்துல் டாக்குர் 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2, நடராஜன் 2 என வேகப்பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு அசத்தலான பங்களிப்பு. குறிப்பாக மிகச் சிறப்பாக வீசினார் பும்ரா. இதுகாறும் குருடனைப்போல் தடவிக்கொண்டிருந்த இந்தியாவை, வெற்றிப்பாதையில் இதுதான் கொண்டுவந்துவிட்டது.

நாளை (4 டிசம்பர் 20) கேன்பர்ராவிலேயே ஆரம்பிக்கிறது டி-20 ஆட்டத் தொடர். நன்றாக வேகப்பந்து வீசிய ஷர்துல் டாக்குர் டி-20 அணியில் இல்லை! பும்ராவை வைத்துக்கொண்டு, நடராஜனை பெஞ்சில் உட்காரவைக்குமோ சாஸ்திரி-கோஹ்லி ஜோடி? Possible. தீபக் சாஹர், ஷமி உள்ளே வருவார்கள் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டு ஸ்பின் புலி வாஷிங்டன் சுந்தர் ஆடலாம், குல்தீப் யாதவின் இடத்தில். சாஹல் கோஹ்லியின் ஃபேவரைட் ஆச்சே.. பேட்டிங்கில் அனேகமாக மாற்றம் செய்யமாட்டார்கள். பார்ப்போம்..

**