சூப்பர்மேன் சூர்யா !

Mount Maunganui-யில் நேற்றைய (20-11-22) டி-20 ஆட்டத்தில் சூர்யப்புயலில் நியூஸிலாந்து பரிதாபமாக சிக்கி சீர்குலைந்தது. டிம் சௌதீ (Tim Southee) அபாரப் பந்துவீச்சு. இருந்தும், 65 ரன் வித்தியாச அதிரடி வெற்றி இந்தியாவுக்கு

ரோஹித், கோஹ்லி, அஷ்வின், ஜடேஜா, பும்ரா போன்ற பெரிசுகள் இல்லாத இந்திய அணி நியூஸிலாந்து டூரில் தற்போது. துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுலும் இல்லாததால் விக்கெட்கீப்பர் ரிஷப் பந்த், இஷான் கிஷனோடு ஓப்பன் செய்தார். பந்த்திற்கு டி-20 ஆட்டமே புரியவில்லை போலும். வந்தார். திரும்பிப்போ டக்-அவுட்டில் உட்கார்ந்துகொண்டார். சும்மா ஒரு ஃபார்மாலிட்டிதான் மைதானத்தில் இறக்குவதும், வெளியேறுவதும் என்பதாக. அவர் இடத்தில் பாண்ட்யா இறக்கினார் (கேப்டனாயிற்றே!) சூர்யகுமார் யாதவை. பற்றிக்கொண்டது மைதானம்! திரளாக கிரிக்கெட் பார்க்க வந்திருந்த ஹாலிடே கூட்டத்திற்கு டாப் க்ளாஸ் பேட்டிங் விருந்து!

இஷான் கிஷன் வேகமாக ஆரம்பித்து 36-ல் அவுட் ஆக, ஷ்ரேயஸ் ஐயரும் ஹிட்-விக்கெட் ஆகி (பகவானே!) வெளியேற,  மைதானத்தில் ஸ்கிப்பர் ஹார்திக் பாண்ட்யா சேர்கிறார் ’இன்–பார்ம்’  சூர்யகுமார் யாதவுடன். 32 பந்தில் 50-ஐத் தாண்டிப் பறந்த சூர்யா, அவர் ஏன் உலகின் மிகச்சிறந்த டி-20 பேட்டராக, கிரிக்கெட் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறார் என்பதை நியூஸிலாந்து ரசிகர்களுக்கு நிரூபிப்பதுபோல் பேட்டை சுழற்றினார். டெத் ஓவர்ஸ். கவனியுங்கள்: நியூஸிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் லாக்கீ ஃபெர்குஸன், ஆடம் மில்ன், டிம் சௌதீ தங்கள் பணியில் சோடை போகவில்லை. நன்றாகத்தான் பந்துவீசினார்கள். குறிப்பாக சௌதீ). ஃபைன் லெக்கில் அனாயாசமான ஃப்லிக் சிக்ஸ், தேர்ட்மேனின் தலைக்குமேல் விர்ரென்று எழும்பி இறங்கிச் சென்ற பௌண்டரிகள், விக்கெட்கீப்பர் அண்ணாந்து பார்க்க, ஸ்டேடியமே ஆஹா என அலற, பௌண்டரியைக் கிழித்த பந்துகள், போறாக்குறைக்கு லாங்-ஆஃபில் எஃபர்ட்லெஸ் சிக்ஸ் வேற. சூர்யா என்ன சாப்பிட்டு வந்தாரோ! நியூஸிலாந்தின் கேப்டன் வில்லியம்சனுக்குத் தெரிந்துவிட்டது. நான் என்னதான் பௌலிங் மாற்றினாலும், ரிஸல்ட் அதேதான் வரும். போச்சு இந்த மேச்சு!

கடைசி ஓவர்க் கூத்தில் நியூஸி பௌலர் சௌதீ அபாரம். ஸ்ட்ரைக்கில் இருந்த பாண்ட்யா தானும் தன் பங்குக்கு ஒரு  சிக்ஸர் போட்டுவைப்போம் எனத் தூக்க, எளிதான கேட்ச்சில் வெளியேற்றம். அப்போது வந்த ஹிட்டர் ஹூடா தன் முதல் பந்தை நேராக ஷார்ட் ஃபைன்லெக்கில் கைமாற்றிவிட்டு தலையை சிலுப்பிக்கொண்டு வெளியேறல். அடுத்து அனுப்பப்பட்ட வாஷிங்டன் சுந்தர் சுதாரிக்கவேண்டாம்? ஹாட்ரிக் பந்தாயிற்றே.. க்ரவுண்டில் தட்டி ஓடி, சூர்யாவை அடிக்கவிடுவோம் எனத் திட்டம் வேண்டாம்? என்ன செய்ய? கடைசி ஓவர் பரபரப்பில் அவரும் லாங் ஆஃபில் தூக்கிவிட, பௌண்டரியைக் கடக்க மாட்டேன் என அடம் பிடித்த பந்து ஃபீல்டரின் கையில் தஞ்சம்! டி-20 கிரிக்கெட்டில் டிம் சௌதீக்கு இரண்டாவது ஹாட்ரிக். நியூஸிலாந்து முகாமில் சிறிது வெளிச்சம். இத்தகைய ஆக்‌ஷன் –பேக்ட் கடைசி ஓவரில் சூர்யாவுக்கு விளாச வாய்ப்பே வரவில்லை. கடைசி பந்தை புவனேஷ்வர் குமாருக்கு போடப் போகையில், எதிர்த் திசையில் நின்றிருந்த சூர்யாவின் இயலாமையைக் கண்டு சிரித்தவாறு, அவரை அணைத்துத் தட்டிக்கொடுத்துவிட்டு செல்கிறார் சௌதீ! இந்தியா 170-ஐத் தாண்டினால் போதும் என்றிருந்த நிலையில் 191வரை சென்றுவிட்டது. 51 பந்துகளில் 111 நாட்-அவுட் நம்ம ஹீரோ சூர்யா. 11 fours, 7 sixes. இதுவல்லவா இன்னிங்ஸ் என்றிருந்தது மைதானத்திலும், டிவிக்கு முன்னாலும் கண்டுகளித்த ரசிகர்களுக்கு. சூர்யாவிடமிருந்து புயல்போல் வந்த டி-20 இரண்டாவது சதம். ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்சை அவருக்கு பரிசளித்தது.

பதிலளிக்க பேட்டிங் செய்த நியூஸிலாந்து வரிசையாக, குறிப்பாக இந்திய ஸ்பின்னர்களிடம்  தன் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலனும் (Fin Allen) , மிடில் ஆர்டர் க்ளென் ஃபிலிப்ஸும் (Glenn Philipps) க்ளிக் ஆகவில்லை. வில்லியம்ஸனின் போராட்டம் வீணாக பாண்ட்யாவின் இந்தியா வென்றது. பார்ட்-டைம் ஆஃப் ஸ்பின்னர் தீபக் ஹூடாவுக்கு 4 விக்கெட்டுகள். முதல் போட்டி மழையிடம் பறிபோக, இந்தியா இரண்டாவதைப் பறித்துக்கொள்ள, மூன்றாவது போட்டியில் (நேப்பியர், 22-11-22) நியூஸிலாந்து வித்தை காட்டுமா?    

நியூஸிலாந்தின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்நாள் வர்ணனையாளர் ராஸ் டேலர்: பேட்டிங் செய்ய அவ்வளவு தோதான பிட்ச் இல்லை இது. இருந்தும் நியூஸி பௌலர்களோடு இஷ்டத்துக்கும் ‘விளையாடிக்கொண்டிருந்தார்’ சூர்யா. நானும் நியூஸிலாந்தின் கரைகளில் மக்கல்லம், மன்ரோ, மார்ட்டின் கப்ட்டில் என அதிரடி இன்னிங்ஸ் சில பார்த்திருக்கிறேன். சூர்யாவின் இந்த இன்னிங்ஸ் எல்லாவற்றிற்கும் மேலே இருக்கவேண்டியது. நம்ப முடியாதது.

Brief Scores : India 191/6.   New Zealand 126 all out.

**

ஏதோ..  மனிதன் இருந்துவிட்டான்..

இந்த வருடம் முழுதுமே கிட்டத்தட்ட ஒன்றும் எழுதவில்லை! வீட்டில் பிரச்னைகள், பயணங்கள், பயணம் கொண்டுபோய் சேர்த்த இடங்களில் செய்யவேண்டியிருந்த தொடர் காரியங்கள், நேரமின்மை இப்படி காரணங்கள். எழுதுவதற்கான விஷயங்கள் பல அவ்வப்போது முகம் காட்டிக்கொண்டிருந்தனதான்.  இரவின் நடுவில் எழுந்தாடிய கவிதை வரிகள்.. எழுந்து எழுதி வைக்க சோம்பல். தொடர்ந்த கனவு நிலை. அல்லது கண்விழித்து லைட் போட்டு கம்ப்யூட்டர் ஆன் செய்யும் பொறுமை இல்லாத கையாலாகத்தனம். காலையில் காப்பி குடிக்கையில் இரவில் கரைந்தவற்றை மீட்க முயற்சித்த மனம். வீட்டிலுள்ளவர்கள் அவ்வப்போது கேள்வியானார்கள்: என்ன யோசிச்சுகிட்டிருக்கே..  அங்கே  என்னத்த பார்க்கறே..? சுருக்கமாகச் சொன்னால், எங்களோடு நீ இருப்பதாகத் தெரியவில்லையே. ஏன்?  என்னடா இது. அங்கே இங்கே பார்க்காமல், சிந்தனையில் விழாமல், ஆழாமல் என்று வாழ்க்கை நகர்ந்திருக்கிறது? நம்மோடு இருப்பவர்களை, நம் எதிரே உட்கார்ந்திருப்பவர்களையே பார்த்துக்கொண்டு, உற்சாகமாக இருப்பதாக, அவர்கள் பேச்சுகளில் அலாதி ஆர்வம் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, பதில் சொல்லிக்கொண்டு அவர்களது உலகத்திலேயே உலவிக்கொண்டிருக்கவா முடியும்?  நமக்கென ஒரு உலகம் நம்முள் இயங்குகிறதே… அதை யார் கவனிப்பது? எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டும், சுற்றுப்புறத்தை அனுபவித்துக்கொண்டுமிருந்தேன் தான் இந்தக் காலகட்டத்தில். இருந்தும் சில பல காரணங்களால், அல்லது சரியான காரணமின்றியும், எழுதவில்லை. எழுத்து நிகழவில்லை. As simple as that.

இப்ப என்ன அதுக்கு? நீ எழுதாததால் ஒலகம் அஸ்தமிச்சிருச்சா என்ன?- என நீங்கள் கேட்கலாம். சேச்சே.. அப்படில்லாம் ஒன்னும் ஆகல…! இதையெல்லாம் இங்கே சொல்ல, பின் என்னதாம்ப்பா காரணம்? ஏகப்பட்ட பிரச்னைகள், தொல்லைகளுக்கிடையேயும், ஏதோ… மனிதன் இருந்துவிட்டான். இன்னமும் மிச்சமிருக்க, தொடர்கிறான் எனக் காட்டிக்கொள்ளவேண்டாமா. உலகில் என் இருத்தலை, மேலும் நீங்கள் பொறுத்துக்கொண்டு, கொஞ்சம் அனுசரித்துப்போகவேண்டாமா.. அதுக்குத்தான்னு வெச்சுக்குங்க…

**