ஜகன்மாதாவான அன்னை மகாலக்ஷ்மியை, பக்திமிகுதியால் புகழ்ந்து பாடல் இயற்றுமுன், கவிஞர் சற்றே தயங்குகிறார். தான் யார், தன்னுடைய தகுதி என்ன என சிந்திக்கிறார். மிகக்குறைந்த திறனுடைய தான், பிராட்டியைப்பற்றி எழுத முனைந்தது சரிதானா என யோசிக்கிறார். இத்தகைய மனநிலையில், அன்னையை நோக்கி சொல்வதாக ’ஸ்ரீலக்ஷ்மி ஸகஸ்ரம்’ கவிதைத் தொகுப்பின் ஆரம்பமாக அவர் எழுதியது:
ஆதிகாலத்தில் தோன்றிய அற்புதங்களானவையும், நித்தியங்களானவையுமான வேதங்களில் காணப்படும் அதிஅழகான அலங்கார வார்த்தைகள்கூட, அம்மா! உன் மாபெரும் சக்தியை, மகோன்னதமான பெருமையை வர்ணிக்கும் முயற்சியில் பரிதாபமாய்த் தோற்றுப்போயின. ’பதபாக்னி’ எனப்படும் பேரழிவுசக்தியுடைய அக்னியாலும்கூட, சமுத்திரத்தைப் பூராவும் உலரவைக்கமுடியாதே. உலகத்தில் மிகச்சிறிய ஒரு ஜீவன்களில் ஒன்றான கொசுவின் குஞ்சினால், ஒரு மகா சமுத்திரத்தின் நீரையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிட முடியுமா ! அதைப்போல அற்பமான திறன் உள்ள நானா, உன் அளவிலாப் பெருமையை முழுமையாய் எழுதிவிடுவேன்? இது சாத்தியமில்லை, என மருள்கிறார்.
மேலும் ஒரு பாடலில், கவிதை எழுதுவதில் தன் மிகக்குறைந்த திறன்பற்றி நினைக்கையில் இப்படி அன்னையிடம் சொல்கிறார் :
ஒரு படைப்பு காவியமாய் விளங்க, எழுத்துக்கலையின் அடிப்படைகளான சக்யம், லட்சியம் போன்ற நவரசங்கள் ஒருவனது எழுத்தில் சீராக, சிறப்பாக வெளிப்படவேண்டும். இத்தகைய ரசங்கள் மீதான ஆளுமை எனக்கில்லை. மொழியின் வண்ணமிகு சொற்களால் வர்ணிக்கும் ஜாலமும் அறிந்திலேன். இப்படி ஏகப்பட்ட குறைபாடுகளுடன்தான், அன்னையே, உன் புகழ் பாடத் துணிந்துவிட்டேன். உன்மீது கொண்ட பக்தியினால்தான் இப்படி. மனிதரின் எத்தனையோ குற்றங்களை மன்னித்துக் காக்கும் மாதாவான நீ, இந்த எளியோனின் குறைபாடுகளையும் மன்னித்துக் கருணைகாட்டவேண்டும் என வேண்டி நிற்கிறார்.
கவிதை எழுத ஆரம்பிக்குமுன்பே, தன் இயலாமை, குறைபாடுகள்பற்றி சிந்தித்து, லக்ஷ்மித் தாயாரிடம் இப்படி அடக்கம்காட்டி வேண்டி நின்றவர், பிற்காலத்தில் ‘கவிதார்க்கிஹ சிம்ஹம்’ (கவிஞர்களில் சிங்கம்) என ஆன்மீக சான்றோர்களால் புகழப்பட்ட வேதாந்த தேசிகன். தமிழ், சமஸ்க்ருதம் என இருபெரும் மொழிகளில் வல்லவர் என அறியப்பட்ட மேதை. பக்தியோகத்தில் சிறந்து விளங்கிய ஞானி. காஞ்சீபுரத்துக்கு அருகிலுள்ள தூப்புல் எனும் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகன், ஸ்வாமி தேசிகன் என்றெல்லாமும் அழைக்கப்படும், ராமானுஜருக்குப் பின்வந்த ஹிந்துமத ஆச்சாரியரும் இவரே, இயற்பெயர் வேங்கடநாதன். தேசிகன் என்கிற வார்த்தைக்கு வடமொழியில் ‘குரு’, ‘ஆச்சார்யர்’ எனும் பொருள்.
இன்னொரு ஸ்லோகத்தில் தேசிகன் தொடர்கிறார்:
தாயே.. உனது புகழைப்போற்றிப் பாடுகையில் அடியேன் படைப்புக்கடவுளான பிரும்மாவுக்கு சமம் என ஆகிவிடுகிறேன்! – என்று எழுதிவிட்டார். எப்படிச் சொன்னார் தேசிகன் இப்படி? அவரே விளக்குகிறார் : இரவில் வரும் சந்திரனின் எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பிரகாசமான குளிர்ந்த ஒளிப் பிரவாகத்தை, அந்த இரவினில் அங்குமிங்குமாகப் பறக்கும் மின்மினிப்பூச்சியின் மினுக்கும் சிறு ஒளித்துகளோடு ஒப்பிடலாகுமா? கூடாதுதான். ஆனால் பகலில், சூரியனின் பிரும்மாண்ட ஒளிவீச்சுக்கு முன்னே, இவை இரண்டுமே காணாமற்போய்விடுமல்லவா? அப்படிப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்றுதானே! அதைப்போலவே, கிட்டத்தட்ட ஒன்றுமில்லை எனும் அளவினதான என்னுடைய மிகக்குறைந்த திறனும், பிரும்மதேவனின் எல்லையில்லா அறிவும், அம்மா, தங்களின் மகிமைக்குமுன் ஒன்றுமே இல்லைதானே.. இந்த வகையில் நானும் பிரும்மாவும் ஒன்றல்லவா ! – எப்படி இருக்கிறது நமது கவிஞரின் ஒப்பீடு !
அன்னை மகாலக்ஷ்மியின் கருணையை நினைந்துருகி, அவர் வடமொழியில் இயற்றிய புகழ்பெற்ற பாடற்தொகுப்பு ’ஸ்ரீஸ்துதி’. அதன் ஒரு பாடலில், தாயாரைப் போற்றிப் பாடல்கள் இயற்ற ஆரம்பித்தபின், தனக்குள் உருவாகியிருக்கும் மனநிலைபற்றி இப்படிக் கூறுகிறார் ஸ்வாமி தேசிகன்:
அம்மா! உன் திருவடியில் என்னை சமர்ப்பித்த பிறகு, என்னில் ஏற்பட்டிருக்கும் புதிய மனநிலைகள்தான் என்னே! கடும் இருளை விரட்டிவிடும் சூரியனைப்போல், தொடர்ந்துவரும் சம்சார பந்தம் விளைவிக்கும் நீங்காத பயத்திலிருந்து என்னை அவை விடுவிக்கின்றன. உனது கருணையினால் ஏற்பட்ட இத்தகு உயர்மனநிலைகள், பல்வேறு கல்யாணகுணங்களை உடைய எம்பெருமானிடம் (மகாவிஷ்ணுவிடம்) எனது பக்தியை மேலும் மிகுதிப்படுத்துகின்றன. அபரிமித சக்தி நிறைந்த உனது கருணையினால், இத்தகைய நன்மைகளையெல்லாம் நீயாகவே எனக்கு வழங்கிவருகிறாய்.
நிலைமை இப்படி இருக்க, அடியேன் உன்னிடம் பிரார்த்தித்துப் பெற்றுக்கொள்ள என்று தனியாக என்ன இருக்கிறது தாயே!
**