காலையில் ஒரு இருபது-நிமிட நடைக்குப்பின் சாலையோரமாக அந்த ரெஸ்ட்டாரண்ட் தலைதூக்கும். நடைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க நினைத்து, அதற்குள்போய் ஒரு கிளாஸ் காஃபி குடிப்பது வழக்கம். கிளாஸ் என்றால் பெங்களூரின் ஷார்ட் கிளாஸ். வேகமாகக் குடித்தால் நொடியில் காலியாகிவிடும். சூடாக வாங்கி, நிதானமாக அனுபவித்துக் குடிப்பதே உசிதம். காலைக் குளிருக்கும் இதம். காஃபியை வாங்கிக்கொண்டு ஓரமாக உட்கார்ந்து வெளியே பார்க்க இடம் தேடுகையில், வாசலோரத்தின் ஒவ்வொரு டேபிளிலும் ஒவ்வொருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சரி என மூலையில் பார்த்தபோது, ஒரு இருக்கை ’அட, வா இந்தப்பக்கம்’என்றது. போய் உட்கார்ந்துகொண்டேன்.
வெளியே சாம்பல்போர்வையாய் வானம். லேசான காற்றில் ஒரு ஜிலுஜிலுப்பு. காஃபி நன்றாக இருந்தது. ஏதோ சிந்தனையில் மனமிருக்க, கண்கள் வானத்தில் நிலைத்திருக்கையில், திடீரென மேகப்போர்வைக் கொஞ்சம் விலகியது. உள்ளிருந்து நிலவைப்போல் மங்கலாக மாயாஜாலங்காட்டி வெளிப்பட்டது சூரியன். அவ்வப்போது காலை அல்லது மாலைப்பொழுதினில், அதை நானே பார்த்துவிடுகிறேன். மேகமூட்ட நாட்களில்தான் காட்சி கிடைப்பதில்லை. சிலசமயம் அதுவே, ’நா இங்கேதான் இருக்கேன் பாரு !’ – எனத் தன்னைத் திரைவிலக்கிக் காட்டிவிட்டு மூடிக்கொண்டுவிடுகிறது. சிந்தனையினூடே மனம் பாடல் ஒன்றை தன் ஆழடுக்கிலிருந்து எடுத்து விசிறியது :
எங்கிருந்தபோதும் உனை மறக்கமுடியுமா
என்னைவிட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
என்று மனம் ஓட்டுகையில், சூரியன் ஒளிந்துவிட்டிருந்தது.
தொடர்ந்து மேலெழுந்து ரீங்கரித்தது சுசீலாவின் குரல் :
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வரும்வரை.. நிம்மதி.. இல்லையே…
இந்த வரிகள் மனதிலே மீண்டும் ரீ-ப்ளேயானபோது அந்தக்கால காட்சிகள் மனக்கண்ணில், கற்பனைத் திரையில் ஓடின. இப்படியெல்லாம் பெண்கள் ஒரு முப்பது-நாற்பது வருடம் முன் உருகியிருக்கிறார்கள் மனங்கவர்ந்தவனை நினைத்து. காதல் என்பது எப்பேர்ப்பட்ட மென் உணர்வாய் மனதில் அழகாய் இறங்கியிருந்திருக்கவேண்டும். மன ஆழத்தில் இதமாக அனுபவிக்கப்பட்டிருக்கவேண்டும். இப்படி இவர்கள் உருகும்படி அல்லவா அந்த ஆண்களும் இருந்திருப்பார்கள். அது ஒரு காலகட்டத்தின் அழகிய கதாபாத்திரங்கள். இளம் மனங்களின் நாசூக்கான உணர்வு வெளிப்பாடு. அது தரும் ஆழ்ந்த சுகம்.. மாறாத சோகம்.
இப்படி சிந்தனை ஓடுகையில், இப்போது நமது யுவர்கள், குறிப்பாக சல்வார்-கமீஸ்களிலும், பேண்ட்-ஷர்ட், சூட் என பிஸினஸ் உலகத்திற்கேற்ப பரபரப்பாய் உலாவருபவர்கள் – பதவி, பணம், அந்தஸ்து என இலக்குகளை நோக்கி பாய்ந்துகொண்டிருக்கும் இளமனுஷிகள் –இவர்களில், இந்த இயந்திர வெளியில், இத்தகைய மென் உணர்வுகள் உண்மையில் தோன்றுமா? காதில் இயர்-ஃபோனும் கையில் நித்திய மொபைலுமாய், அல்லது ப்ளூடூத் புண்ணியத்தில் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு, பேசிக்கொண்டு எந்தக் கவலையையும், பொறுப்பையும் சந்திக்காது, அருகில் மோப்பமிடும் ஆபத்துக்களைக்கூட உணராது, உலாவரும் நகரத்தின் இளசுகளைக் கவலையோடு பார்க்கிறேன். இவர்கள் காதில் தப்பித்தவறி… ’பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீயில்லாத உலகத்திலே சிங்காரமில்லை..’ என்று விழுந்துவைத்தால் என்ன நினைப்பார்கள்? ’நீயில்லாட்டி நான் ஏன் சிங்காரமாய் இருக்கக்கூடாது? இது என்ன பேத்தல்?’ என்றா? இந்த வரி: ‘வரும்வரை நிம்மதி இல்லையே..’ கேட்டால் என்ன சொல்வார்கள்? ‘’ Cool dude..cool ! ஷிவ் வெளிநாட்லேர்ந்து திரும்ப ரெண்டுவருஷம் ஆகுமா? ஸோ வாட்! ஷங்கர் இருக்கான்ல..சீண்டுவோம்.. போக்குவோம் பொழுதை..கமான் டீ! எதுக்கு இப்படி அநியாயத்துக்கும் யோசிக்கிறே ?’’ என்பார்களோ? பெரும்பாலான ஆண்களின் நிலையைத் துருவினால், அது இதைவிட அபத்தமாக இருக்கும்.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை என்றும் சிலசமயம் தோன்றுகிறது. காதல் எனும் ஆழ்மனம் சார்ந்த மென் உணர்வு, அழகியல் ரீதியாக, தற்செயலாகக்கூட இவர்களில் நிகழ்ந்துவிடக்கூடாது எனத் திட்டமிட்டு நாசப்படுத்துவதுபோலல்லவா நிகழ்த்தப்படுகின்றன காட்சிகள் இப்போதெல்லாம் – நமது சினிமாக்களிலும், சீரியல்களிலும், பொதுவெளிகளிலும் ? திரையிசைக்கு எழுதப்படும் பாடல்களும், சினிமா வசனங்களும் எவ்வளவு கேவலமாகப் போய்க்கொண்டிருக்கின்றன நாளுக்குநாள்? எவனாவது கவலைப்படுகிறானா? நவீனம் என்கிற பெயரில் இன்னும் ஏதேதோ அபத்தங்கள் சமூக வாழ்வில் மண்டிக்கிடக்கின்றனவே.
சமூக, பொருளாதார இடைமறித்தல்களையெல்லாம் மிஞ்சி, இளம்வயதினரில் இயற்கை அவ்வப்போது மென்மையாக உணர்வுகளை நிகழ்த்தும்தான். அதனை இவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்களோ, எப்படி வெளிப்படுத்துவார்களோ! ஏதோ சொல்ல நினைத்து, ஏதோ சொல்லி, விதவிதமான சமூகசூழலில் எப்படி எப்படியோ அசைவார்கள். ஏதேதோ பாடுவார்கள். அதற்கேற்ப சிலர் ஆடுவார்கள். பின்னே சிலர் ஓடுவார்கள். காட்சிகள் தினந்தினம் மாறும். விதவிதமான செய்திகளைக் கூறும்.
சம்பந்தாசம்பந்தமில்லாமல் வேறுசிலர், ‘அந்தகன் வரும்போது.. அவனியில் யார் துணை ?’ என்று மனதுக்குள் பாடிக்கொண்டே மெல்ல நடந்துகொண்டிருப்பர். சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் காலம்.
**