வந்திடுமோ அந்த நாளும் ?

விளக்கணைத்த வேளையில்
வேகமாய்ப் பாய்ந்து வருவதாய்
காற்றுக்காக ஜன்னலைத் திறக்க
கணநேரத்தில் படையெடுத்து
கதிகலங்கவைப்பதாய்
கணக்கற்ற குற்றச்சாட்டுகள் உன்மீது
கவலை ஏதும்படாத கண்ணியவானே
காதுகளில் கனிவாக ரீங்கரித்து உன் தீராத
கதை சொல்லத் தேர்ந்தெடுக்கிறாய்
களைப்பாறக் கண்ணயரும் ஒவ்வொரு இரவையும்
சங்கீதக் கதாகாலட்சேபத்தின் மயக்கத்தினூடே
இங்கிதம் மிகத்தெரிந்த நீயோ
ஊசிமூக்கினால் நாசூக்காய்த் துளைபோட்டு
அளவுக்கதிகமானதாக உன்னால் நிச்சயிக்கப்பட்ட
சிவப்புச் சங்கதியை உறிஞ்சிக் குடிக்கிறாய்
இரத்த அழுத்தத்தைச் சீர்செய்து மனித
இனத்தையே காப்பாற்ற முயற்சிக்கும்
இந்த இனிய சேவையை
பாராட்டிப் புகழ்வோர்
அறிந்து அகமகிழ்வோர்
ஐயகோ, மனிதரில் யாரும் இலர்
அதிரடியாக உனக்கு நிகழும் பிரதிஉபகாரம்
அடி, உதை, அவமானக்கொலை
பரிதாபமான உன் வாழ்வுதான்
பரிதவிக்க வைக்கிறதே!
பாழாய்ப்போன இந்த உலகில் இல்லையெனினும்
பேரண்டத்தின் வேறெந்த அதிசய உலகிலாவது
நீயும் நியாயமற்ற இந்த மனிதனும்
நிதம் சேர்ந்து சுகித்து வாழும்
நாளொன்று வராமலா போய்விடும்?

**

வாழ்வுநெறியோ?

ஆயிரமாயிரம் வன்மங்கள்
வெறுப்புகள் வக்கிரங்கள் தோய்ந்து
வெடித்தெழத் தயாராக எப்போதும்
உள்ளே அந்த இனந்தெரியா மிருகம்
வெளிப்பூச்சாக ஒரே வெளிச்சமயமாக
முகத்தில் முட்டும் சிரஞ்சீவிப் புன்னகை
அன்புத் தேனொழுகும் வார்த்தைப்பந்தல்
பாசமின்னல் பண்புமழை
சந்தேகம் ஏதுமில்லை இவனைப்பற்றி
படிப்பது ராமாயணமேதான் – விடாது
இடிப்பதுதான் பெருமாள் கோவில்

**

என்ன சொல்ல வருகிறாய் ?

பொழுது போகவில்லை

என்கிறாய் அடிக்கடி

எப்போதும் போகும் இடத்திற்கு இனி

போகமாட்டேன் என்கிறதா

அல்லது உன்னை மிகவும் பிடித்துப்போய்

பிரிய மனமின்றித் தங்கிவிட்டதா

புரியவில்லை

பொழுதுபோகமாட்டேன்கிறது

என்று அடிக்கடி நீ சொல்வது

**

மரத்தின் கீதம்

அடர்ந்து பரந்த விருக்ஷத்தின்
அடியில் விழுந்து கிடந்தது அந்தக் கிளை
துண்டிக்கப்பட்டு விழுந்தபின்னும் தன்
துணையால்தான் மரம் நிற்கிறது
வாழ்கிறது என நினைத்துவைத்தது
காற்று வெயில் நாளெல்லாம் அலைக்கழிக்க
காய்ந்து காய்ந்து விறகாகிப்போனது
இருந்தும் மரத்தை நோக்கும்போதெல்லாம்
நானிருக்கும் தைரியத்தில்தான் நீ இருக்கிறாய்
என்பதாக நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டது
விறகு பொறுக்கும் சிறுவன் ஒருநாள் தென்பட
விதிர்விதிர்த்தது வியர்த்தது கிளைக்கு
பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல்
மரத்தைப் பார்த்துத் தைரியம் சொல்லலானது
உன்னைவிட்டு அகன்றுவிடுவேன்
இன்றோ நாளையோ எரிந்து விடுவேன்
நான் போய்விட்டால் நடுங்காதே கலங்காதே
நிலைகுலைந்து நாளெல்லாம் வாடாதே
நிமிர்ந்து நில் கோழையாக இராதே
அஞ்சினால் வாழ்க்கையில்
எஞ்சுவது ஏதுமில்லை என்றெல்லாம் சொன்னது
மேற்கொண்டு கதைக்க அவகாசம் தராது
நெருங்கிய சிறுவன் அதனைத் தூக்கினான்
வாகாக முறித்துக் கட்டாகக் கட்டினான்
தலையில் வைத்தான்
நடந்தான் மறைந்தான்
நெடிதுயர்ந்த தாய்மரம்
நிஷ்டையில் ஆழ்ந்திருந்ததோ?
அமைதியை அடியோடு அசைக்க எண்ணி
அடர்ந்திருண்ட கிளையொன்றில்
அமர்ந்திருந்த கருங்குயில்
குக்கூ … என ஆரம்பித்தது மிருதுவாக !
**

காலந்தாண்டிய கோலம்

நான் புதியவனா
இல்லை
முதியவன்
முற்றிலும் முதியவன்
நேற்று இருந்தவன்
இன்று இருப்பவன்
நாளையும் இருக்கப்போகிறவன்
நான் ஒன்றும் புதிதில்லை
புதியது பழையது என்பதெல்லாம்
எனக்குப் புரிவதில்லை

**

தீராப்பசி

செவிக்கு உணவில்லாதபோது சிறிது
வயிற்றுக்கும் தரலாம் என்றான் அவன்
ரொம்பச் சரி
நாக்கின் பசி பற்றி ஏதேனும் நவின்றானா ?
வயிறு ஒன்றும் அடிக்கடிப் பசிப்பதில்லை
எப்போதும் பசி தணியாமல்
ஒரு போதும் அசறாது எதற்காவது
அலைந்துகொண்டே இருக்கும் நாக்கை
எப்படி மடக்குவது
எதைத்தந்து அடக்குவது
நாக்குப் பசிக்குத் தரும் அனைத்தும்
யானைப்பசிக்குச் சோளப்பொறியாகி விட்டதே!

**