இந்திராபார்த்தசாரதி சிறுகதை: அவஸ்தைகள்

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களைப்பற்றி நேற்று கொஞ்சம் தெரிந்துகொண்டோம்.  இன்று அவரது எழுத்தினை ரசிப்போமா?   கீழே வாசகர்களுக்காக,  அவரது சிறுகதை ஒன்று:

அவஸ்தைகள்

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரைக் கவனித்தேன்.

பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண்கண்ட வயது ஐம்பது.  நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின்  நிழற்கீற்றாய்ப்  படிந்த ஏளனப்   புன்னகை. கைவிரல் ஒன்பதில், ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள். அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா.

அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களை தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கு உட்கார வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றித் தம் குர்தாப் பையில் வைத்திருப்பவர்போல் அவர் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் காலருகே இரண்டு பேர் பணிவுடன் நின்று கொண்டிருந்தார்கள். தமிழர்கள். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில்  ஒரு வடநாட்டுக்காரருக்குப் பணிவிடை செய்வதுபோல், முறுக்கேறிய மீசையுடன் இரண்டு தமிழர்கள் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

“பழம் எல்லாம் சரியா?” என்று பாதி ஹிந்தியிலும், பாதி ஆங்கிலத்திலும் அவர் கேட்ட கேள்விக்கு, அவர்கள் தலையை ஆட்டி ‘சரிய்யா’ என்றார்கள் தமிழில். ஸீட்டுக்குக் கீழே இரண்டு பழக்கூடைகள் இருந்தன. அவர் எங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

”எங்கே போகிறீர்கள்?” என்றார் ஹிந்தியில்.

”டெல்லிக்கு..” என்றாள் என் மனைவி.

”ஹும்!” அவர் ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினார்.

அது ஏ.ஸி. ஸ்லீப்பர்,  இரண்டாம் வகுப்புப் பெட்டி. இன்னொரு ஸீட்டில் உட்கார வேண்டியவன் – அவன் இளைஞன், இருபத்திரெண்டு வயதிருக்கலாம்.  ஒரு சூட்கேஸ், பை சகிதமாக வந்து அவரருகில் நின்றான்.

”என்ன வேணும்?”  என்றார் ஆங்கிலத்தில்.

”இது என் இடம்! எழுந்திருங்கள், உட்கார வேண்டும்.”

”தம்பி, அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு உட்காரு. ஐயா..  ரயில்வே போர்ட் மெம்பர்!”

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவரா ரயில்வே போர்ட் மெம்பர்? அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முகத்தில் ஒரு தனிக்களை இருக்கும். இவரைப் பார்த்தால், ஜோதிடர் என்று சொல்லாம். இல்லாவிட்டால் ஓர் அரசியல்வாதி என்று  சொல்லலாம்..  ஒரு மந்திரி என்றுகூட வைத்துக் கொள்ளலாம். நிச்சயமாக அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருப்பவர் என்று யாருமே சொல்லமாட்டார்கள்!  மேலும், ‘ரயில்வே போர்ட் மெம்பர்’  இந்த வகுப்பில் ஏன் பயணம் செய்ய வேண்டும்? அவருக்கு ஸலூன் இருக்கக்கூடுமே!

”அவர் யாரா இருந்தா எனக்கு என்னய்யா? என் இடம் எனக்கு வேணும்..!”  என்றான் இளைஞன்.

அவர் அந்தப் பையன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், ஓர் ஆரஞ்சுப் பழத்தை உரித்துக் கொண்டிருந்தார்.

”ப்ளீஸ்..  கெட் அப்!  ஐ வான்ட் டு ஸிட்டெளன்..” என்றான் அவ்விளைஞன், குரலில் சற்று கண்டிப்புத் தோன்ற.

”வேறு இடம் பார்த்துக் கொள். .  நான் கண்டக்டரிடம் சொல்லுகிறேன்!” என்றார் அவர் ஹிந்தியில்.

”ஓகே. நானே சொல்லுகிறேன். நீங்கள் யாராயிருந்தாலும் சரி, என் ஸீட்டை உங்களால் ஆக்ரமிக்க முடியாது. நீங்கள் ரயில்வே போர்ட் மெம்பர் என்று சொல்வதே பொய்… அரசியல்வாதியாக இருக்கலாம்! ”  என்றான் அந்த இளைஞன்,  ஹிந்தியில்.

அவன் ஹிந்தியில் சொன்னது, அவருடைய பணியாளர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் அவனை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர் அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தார்.  பிறகு கால்களை மடக்கிக் கொண்டார்.

”என்னய்யா…  பெரியவரைப் போய் இப்படி..” என்றான் அவருடைய ஆட்களில் ஒருவன்.

”அப்படிச் சொல்லுங்க.. பெரியவர், மரியாதை தரவேண்டியதுதான். ரயில்வே போர்ட் மெம்பர், அது இதுன்னு சொல்லாதீங்க!”

”ரயில்வே போர்ட் மெம்பர்தான்யா!  நாங்களும் ரயில்வேயில்தான் வேலை செய்யறோம்.”

அந்த இளைஞன் அவர்களைப் புன்னகையுடன் நோக்கிவிட்டு உட்கார்ந்தான். அவர்களையும் அவர் இவ்வாறு சொல்லி ஏமாற்றியிருக்கக் கூடுமென்று அந்தப் புன்னகை கூறியது.

அவர் என் மனைவியை நோக்கி ஹிந்தியில் சொன்னார்.  “என் பேர் ரவி ஷங்கர் மிஸ்ரா. இது நான் எழுதிய நூல்.. கவிதைத் தொகுப்பு!”

அவர் தம் பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவர் கவிஞராக இருக்கக் கூடுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. நானும் இலக்கிய ரசிகனாக இருக்க முடியாதென்று அவர் நினைத்த காரணத்தினால்தான், அந்தப் புத்தகத்தை என் மனைவியிடம் கொடுத்தார் என்று எனக்குத் தோன்றியது. என் மனைவி அந்தப் புத்தகத்தைப்  புரட்டினாள். நானும் பார்த்தேன்.

சின்னச் சின்னக் கவிதைகள். மூன்று வரிகளுக்கு மேலில்லை.

”முன்னுரை யார் என்று பாருங்கள்!”  என்றார் அவர்.

ஓர் அரசியல் பெரும்புள்ளி. புத்தகத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அவர் கையை நீட்டினார். கவிதைகளை என் மனைவி படித்தாக வேண்டுமென்று அவர் விரும்பியதாகத் தெரியவில்லை.

”எனக்குப்  பல்கலைக் கழகப் பட்டம் டாக்டர் என்பதோடு, நான் தொழிலிலும் டாக்டர்!” என்றார் அவர்.

கவிஞர், டாக்டர்… இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றனவோ..  என்று எனக்குத் தோன்றிற்று. அவர் இன்னொரு புத்தகத்தை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தார்.

மருத்துவ நூல்.  ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி எல்லாம் கலந்த ஒரு நூல்.

”அல்லோபதி இல்லையா?”  என்று நான் கேட்டேன்.

”எனக்குத் தெரியும். ஆனால் நம் நாட்டுக்கேற்றவை இவைதான் என்பது என் அபிப்பிராயம். புற்றுநோயைக்கூட குணப்படுத்திவிட முடியும். செய்து காட்டியிருக்கிறேன்!”

“நீங்கள் ரயில்வே போர்ட்மெம்பர் என்று இவர்கள் சொல்லுகிறார்களே?” அவர் அதை மறுக்கவுமில்லை, ஆமோதிக்கவுமில்லை. வெறும் புன்னகைதான் பதில்.

”ரயில்வே அட்வைஸரி கவுன்சில் மெம்பரா இருக்கலாம்..”  என்றான் அந்தப் பையன்.

”இரண்டும் ஒண்ணுதானுங்க! ” என்றான் அந்த இருவரில் ஒருவன்.

”எப்படிங்க ஒண்ணா இருக்க முடியும்? ரயில்வேல வேலை செய்யறீங்க, இதுகூடவா தெரியலே? என்னவா இருக்கீங்க?” என்றான் இளைஞன்.

”பழ காண்ட்ராக்டருங்க!”

எனக்குப் புரிந்தது.  வண்டி புறப்படும்போலிருந்தது.

”கோயிங் ஸார்… குட் ஜர்னி ஸார்!”  என்று கைகளைக் கூப்பி அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, அவர்கள் வண்டியைவிட்டு இறங்கினார்கள்.

”என் பேர் மோகன்’ என்று சொல்லிக்கொண்டே கைகளைக் கூப்பினான் அந்த இளைஞன்.

”நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். என் அப்பாவை உங்களுக்குத் தெரியும். ராஜகோபாலன் பிடிஐ ” என்று தொடர்ந்தான்.

”ஓ.. அப்படியா? அவர் எப்படியிருக்கார்?”

”செளக்கியம். நான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். அடுத்த வாரம் அமெரிக்கா  போறேன்.”

”குட்..  கம்ப்யூட்டரா?”

”ஆமாம்.”

”அங்கேயே செட்டில் ஆயிடுவே..”

”நோ நோ..  திரும்பி வந்துடுவேன்!”

அவர் எங்களிருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். அவரையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக,  நான் மோகன் அமெரிக்கா  போகப்போவதைப்பற்றிச் சொன்னேன்.

”கையை நீட்டு!”  என்றார் அவர்,  எழுந்து உட்கார்ந்தவாறு.

“மன்னிக்கவும். எனக்கு நம்பிக்கையில்லை.”

“அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேருக்கு நம்பிக்கையுண்டு .. தெரியுமா?”

”இருக்கலாம்..  எனக்கு இல்லை!”

“நான் பெரிய ஜோதிடன். டில்லியில் மிஸ்ரா என்று நீ கேள்விப்பட்டதேயில்லையா? நன்றாக ஹிந்தி பேசுகிறாய், நீ டில்லயில்தானே இருக்கிறாய்?”

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் டில்லியில்தான். எனக்கு உங்களைப் பற்றித் தெரியாது!”

“மொரார்ஜியிடம் எண்பதில் சொன்னேன், உங்களுக்கு இன்னும் கொஞ்ச காலந்தான் பதவியென்று. இந்திராகாந்தி என்னைத் தேடிக்கொண்டு வந்தார். ’தேர்தலில் ஜெயிப்பீர்கள்’ என்றேன். கைலாஷ் காலனியில் என் வீட்டுக்கு வந்தாயானால், வாசலில் வரிசையாய் கார் நின்று கொண்டிருக்கும், ஜோஸ்யம் கேக்க. உனக்குக் காசு வாங்காமல் சொல்லுகிறேன் என்கிறேன், வேண்டாமென்கிறாய்!”

”மன்னிக்கவும். இறந்த காலத்தைப் பற்றி எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று ஸஸ்பென்ஸ் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிட்டால் வாழ்க்கை போரடிக்கும் !” என்றான் மோகன்.

“என்ன நடக்குமென்று தெரிந்து கொண்டால்,  தவறுகள் செய்யாமல் உன்னைத் திருத்திக் கொள்ள உதவுமல்லவா?”

”விதியில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?”

”நிச்சயமாக!”

”அப்படியானால், நடப்பது நடந்துதானே ஆகவேண்டும்? தவறுகளை எப்படி திருத்திக் கொள்ள இயலும்?”

”குதர்க்கம் பேசுகிறாய். இந்தக் காலத்து இளைஞர்கள் எல்லோருமே இப்படித்தானிருக்கிறார்கள்!”

”உங்கள்  ரீகன் மனைவியும் ஜோஸ்யம் கேட்கிறாள்,  தெரியுமா?”

”எங்கள் ரீகனா? நான் அமெரிக்காவுக்குப் போகப்போகிறேன் என்பதால் அமெரிக்கனாகி விடுவேனா?”  என்று கூறிவிட்டு மோகன் சிரித்தான்.

அப்பொழுது கண்டக்டர் அங்கு வந்தார். ”நீங்கள்தான் மிஸ்டர் மிஸ்ராவா?” என்றார் மிகவும் பவ்யமாக.

அவர்  தலையசைத்தார்.

”எல்லாம் செளகர்யமாக இருக்கிறதா?”

“இருக்கிறது. நான் மிஸ்டர். மிஸ்ரா இல்லை,  டாக்டர்…! “

“மன்னிக்கவும்.  மருத்துவ…”

“ஆமாம்!”

”ஏதாவது வேண்டுமா, உங்களுக்கு?”

”ஒரு தலையணைதான் கொடுத்தான் உங்கள் பையன். போதாது;  இரண்டு வேண்டும்”

”எஸ்.. ஸார்!”

”வண்டி தாமதமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு நாளைக்கு அடுத்த நாள் பதினொன்று மணிக்கு உங்கள் மந்திரி ஸிந்தியாவுடன் அப்பாய்ன்ட்மென்ட்..  புரிந்ததா?”

”எஸ்.. ஸார்!”

”ஏதாவது வேண்டுமானால், பிறகு சொல்லுகிறேன்.”

”எஸ்.. ஸார்!”

இவருக்கு ஏன் இவ்வளவு மரியாதை? ரயில்வே அட்வைஸரி கவுன்ஸிலில் மெம்பர் என்பதாலா, இல்லாவிட்டால் அவர் சொல்வது போல் அரசாங்க ஜோஸ்யர்தானா? அவர் அணிந்திருந்த ஒன்பது மோதிரங்கள் மீது என் கவனம் சென்றது.

”ஒன்று கேட்கலாமா?” என்றேன் நான்.

”கேளுங்கள். ”

”கையில் ஒன்பது மோதிரங்கள் அணிந்திருக்கிறீர்களே.. ”

”அதுவா?” என்று அவர் புன்னகையுடன் கூறினார்: ”நவரத்தினங்கள்.  ஒன்பது என்ற எண்ணின் விசேஷம் தெரியுமா? ”

”தெரியாது!”

”ஒன்பதை இரண்டால் பெருக்கி வரும் தொகையின் எண்களைக் கூட்டிப் பாருங்கள். ஒன்பது. இந்த மாதிரி எந்த எண்ணால் பெருக்கிக் கூட்டிப் பார்த்தாலும் கடைசியில் வருவது ஒன்பதுதான். உதாரணமாக 9 x 102 = 918; 9 + 1 + 8 = 18; 1 + 8 = 9.  இந்த மாதிரி…  இது ஏன் தெரியுமா? ”

”தெரியாது.. ”

”ஒன்பதுதான் இறைவன். எதனாலும் பாதிக்கப் படாதவன். ஒன்பதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டால், எல்லா நன்மைகளும் ஏற்படும். இன்று என்ன தேதி? ”

”பதினெட்டு. ”

”அதாவது, 1 + 8 = 9.  நான் எந்தக் காரியம் செய்தாலும் ஒன்பதில்தான் செய்வேன். நவக்கிரகங்களின் தாத்பர்யம் இப்பொழுது புரிகிறதா? ”

”எல்லோருக்குமே ஒன்பது நல்லதுதானா?” என்று கேட்டாள் மனைவி.

”நிச்சயமாக. ”

என்னை நவரத்தினக் கல் மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று நச்சரிக்கப் போகின்றாளோ என்ற பயம் எனக்கு வந்தது.

‘எல்லாருக்குமில்லை.. ’ என்று நான் இழுத்தேன்.

”இல்லை,  எல்லாருக்குந்தான்!” என்றார் அவர்,  உறுதியான குரலில்.

என் மனைவி அவரிடம் கையை நீட்டினாள்.

”ஒரு கேள்வி கேளுங்கள்..  சொல்லுகிறேன்” என்றார் அவர்.

”எனக்கு ஆஸ்துமா உண்டு. அது எப்பொழுது போகும்? ”

அவர் ஐந்து நிமிஷங்கள் கையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு சொன்னார். ”நவக்கிரக பூஜை செய்யுங்கள். பூஜை ஒன்பது நாள் நடக்க வேண்டும். நவரத்தினக் கல் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். பாதிப் பேர் இதுதான் நீலம்,  இதுதான் மரகதம் என்று பொய்க் கல்லைக் காட்டி ஏமாற்றுவார்கள். உண்மையான கல் வேண்டுமானால், இந்தாருங்கள்..” என்று சொல்லிக் கொண்டே அவர் தம்மருகில் வைத்திருந்த டயரியில் இருந்து ஒரு கார்டை எடுத்துக் கொடுத்தார்.

”இந்த ஆள் நம்பகமானவன். என் பேரைச் சொல்லுங்கள். இந்தாருங்கள், இதுதான் என் முகவரி. ”

”நவகிரக பூஜை நீங்களே வந்து செய்வீர்களா?” என்று கேட்டேன் நான்.

”அது என்னால் முடியாது. நான் ஆட்களை அனுப்பி வைக்கிறேன். ”

அவர் உடனே கண்களை மூடிக்கொண்டார். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து ”மன்னித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு மணிநேரம் தியானம் செய்யவேண்டும்”‘ என்றார்.

”செய்யுங்கள். ”

”இந்த ஆளை நம்பறீங்களா?” என்றான் மோகன்.

”ஏதேனும் சக்தி இருக்கணும்.  இல்லாமலா..  மொரார்ஜி, இந்திராகாந்தி எல்லாரும் இவரைத் தேடிண்டு போறா?” என்றாள் என் மனைவி.

”பதவி வந்துட்டா,  அதுக்கு நாம தகுதியா என்ற சந்தேகம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வந்துடும். அதனால் ஜோஸ்யர்களைத் தேடிண்டு போறாங்க. சக்தியுமில்லே ஒரு மண்ணாங்கட்டியுமில்லே! ”

என் மனைவியும் கண்களை மூடிக்கொண்டதிலிருந்து,  அவள் அவனுடன் வாக்காட விரும்பவில்லை என்று தெரிந்தது.

திடீரென்று கண்விழித்தேன். ஒரே சத்தம். ”டாக்டர்..  டாக்டர் !”

நாலைந்து பேராக மிஸ்ராவை எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அவர் கண்களைத் திறக்கவேயில்லை.

”என்ன அவருக்கு?” என்றேன் நான்.

”எங்களுக்குத் தெரியாது, கண்டக்டர் சொன்னார், இவர் டாக்டர்னு. இங்கேயிருந்து மூணாம் கம்பார்ட்மெண்ட்லே ஒரு குழந்தைக்குத் தூக்கித் தூக்கிப் போடுது. என்னன்னு தெரியலே. இவரைக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்” என்றான் ஒருவன்.

”டாக்டர் மிஸ்ரா, டாக்டர் மிஸ்ரா.. ” என்று நானும் அவரை எழுப்ப முயன்றேன்.

அப்பொழுது என் மனைவி சொன்னாள், ” உங்களுக்குச் சத்தம் கேட்கலியா, அவருக்கே பயங்கர ஆஸ்துமா!  மூச்சு வாங்கறதைப் பாருங்க.. ”

மேலே படுத்துக் கொண்டிருந்த மோகன் கீழே இறங்கினான். அவன் வந்தவர்களிடம் சொன்னான் : ”இவர் டாக்டருமில்லை,  ஒண்ணுமில்லை. குழந்தையைக் காப்பாத்தணும்னா வேற கம்பார்ட்மெண்ட்லே டாக்டர் இருந்தாப் பாருங்க!”

வந்தவர்கள் போய்விட்டார்கள்.

அவரை எழுப்பி, ”என்கிட்டே மருந்து இருக்கு, சாப்பிடறாரா..  கேளுங்கோ.. ‘ என்றாள் என் மனைவி.

மிகவும் கஷ்டப்பட்டு அவரை எழுப்பினேன். கண்களைத் திறந்து சுற்று முற்றும் பார்த்தார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

”டெட்ரால் எஸ்.ஏ. இருக்கு..  வேணுமா?” என்றாள் என் மனைவி.

”வண்டியிலே நவகிரக பூஜை செய்ய முடியுமா?” என்று கேட்டான் மோகன்.

”அது தப்பு. கஷ்டப்படறவாளுக்கு உதவி செய்யணும். கிண்டல் செய்யக் கூடாது. ஆஸ்துமான்னா என்னன்னு கஷ்டப்படறவாளுக்குத்தான்  தெரியும்..”  என்றாள் என் மனைவி.

”ஐயாம் ஸாரி, மாமி..” என்றான் மோகன்.

**

நன்றி: இந்திரா பார்த்தசாரதி, அழியாச்சுடர்கள் இணையதளம்/ராம்பிரசாத்

இந்திரா பார்த்தசாரதி

தமிழ் மொழியின் சமகால இலக்கிய ஆளுமைகளுள் ஒருவர்.  தரமான படைப்புகள் பல தந்தவர். இ.பா. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சென்னையில் பிறந்த கும்பகோணத்துக்காரர். முனைவர் பட்டம் பெற்ற படைப்பாளி. தன் உயர் கல்விப்பின்னணியினால், டெல்லி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், போலந்தின் வார்ஸா பல்கலைக் கழகம் என்றெல்லாம் விஸ்தாரமாகப் பணிபுரிந்த அனுபவமுண்டு. இந்தியக் கலாச்சாரம், தத்துவம் என போலந்தில் அயல்நாட்டு மாணவர்களுக்கு ஐந்தாண்டு காலம் பேராசிரியராகக் கற்பித்திருக்கிறார்.

டெல்லியில் சுமார் 40 வருட வாசம் என்பதால் இவரது கதைகளின் கரு டெல்லி மாநகரத்தில் நிலைகொண்டிருப்பது வழக்கம். இவரது முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது. விகடனில் இலக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பை ஆரம்பித்துவைத்தவர்கள் ஜெயகாந்தனும், இவரும்தான் எனலாம். நடுத்தரவர்க்கத்து மனிதர்களே இவரது கதைமாந்தர்கள். மனிதனின் தனிமை, ஏக்கம், உள்மன உறுத்தல்கள், பொதுவாக வாழ்வின் நிறைவின்மை போன்றவை இவரது படைப்புகளில் மேலெழுந்து காணப்படுகின்றன.  ’தொலைவு’, ‘ஒரு கப் காப்பி’, ‘குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்’ போன்றவை வெகுவாக ஸ்லாகிக்கப்பட்ட இவரது சிறுகதைகளில் சில. மனித தெய்வங்கள், நாசகாரக்கும்பல் என்கிற தலைப்புகளில் சிறுகதைத் தொகுதிகள், வேதபுரத்து வியாபாரிகள், யேசுவின் தோழர்கள், வெந்து தணிந்த காடுகள், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன போன்ற நாவல்கள், நந்தன் கதை, ஔரங்கசீப், ராமானுஜர், கால எந்திரம், கொங்கைத்தீ போன்ற நாடகங்கள், சில  கட்டுரைத்தொகுதிகள், Ashes and Wisdom, Wings in the Void, Into this Heaven of Freedom ஆகிய மொழிபெயர்ப்பு நூல்கள் என, தமிழ் இலக்கியத்தில்  விரிவாக, தீர்க்கமாக அரைநூற்றாண்டு காலமாக இயங்கிவரும் படைப்பாளி.

இ.பா.வின் புதினமான ‘குருதிப்புனல்’ 1977-ல் ’சாஹித்ய அகாடமி’ விருதைத் தமிழுக்குப் பெற்றுத்தந்தது. இந்திய மொழிகளில் தரமான இலக்கியப் படைப்புகளுக்காக K.K. Birla Foundation- நிறுவிய ‘சரஸ்வதி சம்மான்’ (Saraswati Samman) விருதை, இவரது ‘ராமானுஜர்’ நாடகம் தமிழ் மொழிக்காக வென்றது. ’பாஷா பரிஷத்’ விருதும்  கிடைத்துள்ளது. சிறப்புமிகு இலக்கியப் பங்களிப்புக்காக இந்திய அரசு 2010-ல் ’பத்ம ஸ்ரீ’ விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது. ‘தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்’ விருது (The Hindu Lit for Life Award) வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக இந்திரா பார்த்தசாரதிக்கு 2018-ல் வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சரஸ்வதி சம்மான் ஆகிய மூன்று பெரும் தேசியநிலை விருதுகளையும் வென்ற ஒரே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிதான் என்கிறது ‘இந்து தமிழ் இதழ்’!

தமிழ் உலகில், சமகால அரசியல்தாக்கத்தை வெளிப்படுத்தும் இலக்கியப் படைப்புகளைத் தந்த வெகுசில எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதியும் ஒருவராக அறியப்படுகிறார். இ.பா.வின் ‘குருதிப்புனல்’ கீழவெண்மணிப் படுகொலை/அரசியல் பின்னணி  கொண்ட நாவல். இவரது ’உச்சிவெயில்’ எனும் குறுநாவல் ‘மறுபக்கம்’ (இயக்கம்: சேதுமாதவன்) என்கிற திரைப்படமாக 1990-ல் வெளியிடப்பட்டது. இந்திய ஜனாதிபதியின் ‘தங்கத்தாமரை’ விருதை (Golden Lotus Award) தட்டிச்சென்ற முதல் தமிழ்ப்படம் இது.

ஒரு கட்டுரையில் இந்திரா பார்த்தசாரதி சொல்கிறார்: “பிரபஞ்சத்தில் ‘ சூழ்ந்து அகன்று தாழ்ந்து உயர்ந்த முடிவில் வெறும் பாழ் ‘ என்று எதுவுமில்லை. அனைத்தும், ‘சூழ்ந்து அகன்று தாழ்ந்த உயர்ந்த முடிவில் பெரும் ஜோதி’ என்று நம்மாழ்வார் வாக்கில் கூற முடியும்.  இதற்கு ‘உள்பார்வை’ வேண்டும். ‘உள்பார்வையின்’ இன்னொரு பெயர் கற்பனை. இது சிந்திப்பதால் வராது. இதயத்தின் வெளிச்சம். பிரபஞ்சத்தில் எதுவுமே எதேச்சையாக உருவாவதில்லை. அனைத்தும் சத்தியத்தின் வெளிப்பாடுகள்.”

’சிறுகதை’ பற்றி இந்திரா பார்த்தசாரதி  சொல்வதென்ன : “ஒரு நல்ல சிறுகதை, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே நிகழ்கிற உரையாடலாக இருக்க வேண்டும். வாசகன் அந்தக் கதையைப் படித்து முடித்த பிறகு அவன் சிந்தனையைத் தூண்டும் முறையில், அதன் கருத்து எல்லை அதிகரித்துக்கொண்டு போதல் அவசியம். ஒரு பிரச்னையை மையமாக வைத்துக்கொண்டு எழுதப்படும் கதைகளுக்குத்தான் இந்த ஆற்றல் உண்டு. பிரச்னையை நேரடியாகச் சுட்டிக்காட்டுவது தினசரிகளின் வேலை. இலக்கியத்தின் பரிபாஷையின் அழகுணர்ச்சியோடு பிரச்னையைச் சொல்வதுதான், ஒரு சிறந்த படைப்பாளியின் திறமை …. வெறும் ஏமாற்றத்தையும், விரக்தியையும், தோல்வி மனப்பான்மையையும் இலக்கியமாக்கிவிடக் கூடாது” என்கிற கருத்தை முன்வைக்கிறார் இ.பா.

அடுத்த பதிவில் இவரது சிறுகதை ஒன்றை வாசிப்போம்.

**

அரட்டைக் குறிப்பு! : இந்திரா பார்த்தசாரதியும், நா.பார்த்தசாரதியும் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமானவர்கள் எனலாம் . உ.பி.யின் அலிகரில் எனது மனைவின் குடும்பம் வசித்த காலகட்டம். அலிகர் முஸ்லிம் பல்கலையில் (AMU) ‘நவீன இந்திய மொழிகள்’ பிரிவிற்குத் தலைமை தாங்கியிருந்த அடியேனின் மாமனாரைப் பார்க்க என, வீட்டுக்கு சிலமுறை இ.பா. வந்திருக்கிறார் – நட்பு, பல்கலைப்பணி தொடர்பாக இருந்திருக்கும்.

 

**

 

 

ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி

நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்ட ஐக்கியநாடுகள் சபையின் ’நிரந்தர இந்தியப் பிரதிநிதி’யாக (Permanent Representative of India to the UN) (ஐ.நா.வுக்கான இந்திய தூதர்),  இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரியான திரு. டி.எஸ்.திருமூர்த்தி மத்திய அரசினால் நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார். மத்திய அரசில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலரில் ஒருவர். ஏற்கனவே அப்படிப் பணியாற்றிய ஒருவர்தான் இன்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் – டாக்டர் ஜெய்ஷங்கர்!

இந்திய தூதர் திரு. திருமூர்த்தி

பிரதமர் நரசிம்மராவின் ஆட்சியில், மத்தியகிழக்கில் பாலஸ்தீனத்துடனான வெளியுறவு மேம்படுத்தப்பட்டபோது,  இந்திய தூதராலயம் அங்கு 1996-ல் திறக்கப்பட்டது. அதன் முதல் இந்தியப் பிரதிநிதியாக(1996-98) பாலஸ்தீனிய தலைநகர் காஸா (Gaza)வில் பணியாற்றியிருக்கிறார் இவர். டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில், ஆரம்பத்தில் பூடான் தொடர்பாகவும், பின்னர் பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவுகள் சார்ந்த துறைக்குத் தலைமை வகித்தும் பணியாற்றியுள்ளார். மலேஷியாவில் இந்தியாவின் ஹைகமிஷனராக (தூதுவராக) ஐந்து வருடங்கள்(2013-18) சீரிய பணியாற்றிய பெருமையும் உண்டு. பதவிக்காலம் முடிந்து இந்தியா திரும்பியதும் வெளியுறவுத்துறையில் உயர்பொறுப்புகளில் ஒன்றான ‘செயலர்(பொருளியல் உறவுகள்) (Secretary (Economic Relations) -ஆக பணியாற்றியபின், மோதி அரசு ஐநா-வில் இந்தியாவின் தூதராக திரு. திருமூர்த்தியை நியமித்துள்ளது.

உயர் செயல்திறன், நளினம், மேன்மை என்கிற விரும்பத்தகுந்த குணாதிசயங்களோடு, பழகுவதற்கு மிக இனிமையானவராக, மென்மையானவராக அறியப்படுபவர் அம்பாஸடர் திருமூர்த்தி. தனது அலுவலகப் பயணங்கள், பணி நெருக்கடிகளைத் தாண்டியும், இளநிலையில் உள்ளோரின் குறைதீர்க்க அவர்களை அவ்வப்போது சந்தித்துப் பேசியவர். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் துறை ரீதியாகப் பலருக்கும் தகுந்த சமயத்தில் உதவிய உன்னத உள்ளம் கொண்ட மனிதர்.

ஐ.நா.விற்கான இந்திய தூதராகப் பதவி ஏற்றுக்கொண்டபின், ’ஐ.நா.வின் சர்வதேச அமைதிப்படை நாள்’-ஐ (மே 29) முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தியில்,  ஐ.நா.வின் சர்வதேச அமைதிப் படையில் (UN Peacekeeping Force), பலவருடங்களாக இந்தியாவின் மகத்தான பங்கு குறித்துப் பேசியிருக்கிறார். ”இந்திய அமைதிப்படையினர் (Indian Peace Keeping Force (IPKF)) உலகின் பல்வேறு சவாலான, நெருக்கடியான பகுதிகளில் போர்நிறுத்தம்,  அமைதிக்காகக் கடுமையாக உழைப்பவர்கள். வீரத்திற்கும், தன்னலம் கருதாத் தியாகத்திற்கும் பேர்போனவர்கள். உலகின் அமைதிப்படையினரிடையே, மற்றநாடுகளைவிட இந்தியாதான் அதிக உயிர்த்தியாகங்கள் செய்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டார். சர்வதேச அமைதிக்காகப் போரிட்டு, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்திய மாவீரர்களுக்கு அப்போது உருக்கமாக அஞ்சலி செலுத்தினார் இந்திய தூதர் திருமூர்த்தி.

2018-ல் பிரதமர் மோதியின் வருகையின்போது, தென்னாப்பிரிக்காவுடனான ‘விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்’ இந்தியாவின் தரப்பில் கையொப்பம் இடும் திரு. திருமூர்த்தி

சமீபத்தில், ஐ.நா.வின் சர்வதேச ஒத்துழைப்பு, மேம்பாட்டுத் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசுகையில்,  “கொரோனாவைரஸ் பரவலால் உலகெங்கும் பல்வேறு வகை மக்கள், குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பிரச்னை எங்கும் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக விரைந்து உதவுவதில், டிஜிட்டல் தொழில்நுட்பம் வெகுவாகக் கைகொடுத்திருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை கொரோனா நமக்குக் காட்டியிருக்கிறது. மக்கள்நலத் திட்டங்கள் அனைத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போது தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் உலக நாடுகள் பலவற்றிற்கு, சர்வதேசவெளியில் ஒரு பொறுப்புமிகு நாடாக இந்தியா மருத்துவ, உபகரண ஏற்றுமதி மற்றும் கொரோனா-தகவல் பரிமாற்றம் என தக்கநேரத்தில் பல உதவிகளைச் செய்திருக்கிறது” என்று ஐ.நா. சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்து பேசியிருக்கிறார் இந்திய தூதர்.

தாய்நாட்டின் சிறப்பு, பெருமையை நிலைநாட்டும்விதமாக, அதன் மென்னுணர்வுகளை சர்வதேச ராஜீயவெளியில் தகுந்தவிதமாக வெளிக்கொணர்ந்து இந்திய நலனைப் பாதுகாக்கும் வகையில், ஐ.நா.வில் நமது நாட்டின் தூதராக சிறப்பான பங்களிப்பை அவர் அளிப்பார் என்பதில் ஐயமேதுமில்லை

திருமூர்த்தி ஒரு எழுத்தாளரும்கூட. அவருடைய முதல் ஆங்கில நாவல் ‘Clive Avenue’ (2004)  Penguin India-வினால் பிரசுரிக்கப்பட்டது. ’கைலாஷ்-மானசரோவர் யாத்திரை’ பற்றிய பயணக் கட்டுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது மனைவி கௌரி கிருஷ்ணன்-திருமூர்த்தி, புகழ்பெற்ற அந்நாளைய இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ராமனாதன் கிருஷ்ணனின் மகள். 1982-ல் கௌரி கிருஷ்ணன் இந்திய தேசீய ஜூனியர் பேட்மிண்ட்டன் டைட்டிலை வென்றிருக்கிறார்.

ஒரு சிறு காலகட்டத்தில் ஸ்விட்ஸர்லந்தின் ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகத்தில், அவரோடு இளநிலையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததை, கொஞ்சம் பழகநேர்ந்ததை மகிழ்வோடு நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

**

யமனின் சிரிப்பு !

முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு? சங்கீதம் கற்றுக்கொள்ள! சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால் அங்கேயே விழுந்துகிடப்பான். வேறேதும் தேவையில்லை. சங்கீதம் கற்றுக்கொள்ளவேண்டும் எனவும் ஆசை நாளுக்குநாள் அவனுக்குள் பொங்கியது. ஆனால் அப்படிக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டுமேயானால், நாரதமுனியிடம்தான் கற்பேன் என மனதில் சங்கல்பித்து வாழ்ந்துவந்தான். அது நடக்குமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. சங்கீதத்தின் உன்னதத்தைத் தவிர வேறு சிந்தனையின்றி சுற்றித்திரிந்தான். அன்று திடீரென, நாரத முனிவர் எதிர் வரும் பாக்கியம் பெற்றான். அதிர்ந்தான். அவர் முன்னே நடுங்கிப் பணிந்தான். கைகட்டி நின்று, தன் விண்ணப்பத்தை உருக்கத்தோடு வைத்தும் விட்டான். அவரது திருவுள்ளமறிய அவர் முகம் பார்த்து ஏங்கி, தள்ளி நின்றான். நாரத மஹரிஷி அவனை ஒருகணம் பார்த்தார். சம்மதமென்பதாகத் தலையசைத்தார். ஆச்சரியம்தான். அவர் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்.

அவனுக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவனும் மிகுந்த சந்தோஷத்துடன், நாளுக்குநாள் அகலாத சிரத்தை, அதிபக்தியுடன் கற்றுவந்தான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் தேவலோகத்தில் ஒரு விசேஷமான சங்கீதக் கச்சேரி. தேவர்களோடு உட்கார்ந்து நாரதரும் இத்தகைய கேளிக்கைகளை அனுபவிப்பதுண்டு. தேவலோகக் கச்சேரியின் நாள் நெருங்கிக்கொண்டிருக்க, நாரத முனிக்கு, தன் சிஷ்யனையும் அங்கு கூட்டிப்போய் உட்காரவைத்தாலென்ன எனத் தோன்றியது. அத்தகைய கேட்பதற்கரிய உன்னத சங்கீதத்தை இந்தப் பித்தனும் கேட்கட்டும், ஏதாவது தெரிந்துகொள்ளட்டும் என முடிவு செய்தார். தன் யோகசித்தியினால் அவனையும் கூட்டிக்கொண்டுபோய், கச்சேரி நடக்கவிருக்கும் இந்திரசபையில் தனக்கருகிலேயே உட்காரவைத்துக்கொண்டார்.

தேவலோகக் கச்சேரி ஆரம்பித்தது. ‘ஹாஹா’, ‘ஹூஹூ’ என அழைக்கப்படும் கந்தவர்வ ஜோடியின் இசைக்கதம்பம் சபையில் மெல்ல எழுந்து ஏகாந்தமாய்ப் பரவியது. சபை நொடியில் மயங்கியது; உருகிக்கிடந்தது. நாரதமுனியும், சிஷ்யனும் ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த வரிசைக்கு எதிர் வரிசையில் மேலும் தேவர்களோடு, யமதேவனும் அமர்ந்து தேவகானத்தில் லயித்திருந்தான். இடையே அவனது பார்வை, எதிர்த்திசையில் நாரத மஹரிஷிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞனின் மேல்பட்டது. ஆச்சர்யம். இவன் எங்கே இங்கே? – என நினைத்தவனின் முகத்தில் சிந்தனை, லேசான முறுவல். கச்சேரியை ரசிப்பதும், நாரதசிஷ்யனின் பக்கம் அவ்வப்போது கண்களைப் பாயவிட்டு மெல்லப் புன்னகைப்பதுமாக இருந்தான் யமன்.

ஒரு கட்டத்தில் அந்த சிஷ்யன் இதைக் கவனித்துவிட்டான். ஆ.. எதிரே இருப்பவன் யமனல்லவா? அரண்டான். அவனால் மேற்கொண்டு சங்கீதத்தில் லயிக்கமுடியவில்லை. பயம், பீதி கடுமையாகத் தாக்கிவிட்டது. தன் குருவிடம் காதோடு, ’யமன் தன்னை அடிக்கடி திரும்பிப் பார்த்து சிரிப்பதை சொல்லி, தனக்கு இதனால் பிராண ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுவதாக நடுங்கியவாறு தெரிவித்தான். நாரத முனிவர் கவனித்தார். சிஷ்யனின் பயத்தில் நியாயம் இருக்கும்போலிருக்கிறதே என நினைத்தார். ‘பயப்படாதே! என்னோடு வா.. எதற்கும் உன்னை பத்திரப்படுத்திவிடுகிறேன்’ என அவனை அழைத்து வெளியே வந்தார். தன் யோகசாகஸத்தினால் வெகுதூரம் பயணித்து பூமியில் ஒரு மலைத்தொடரில், ஒரு ஆழமான குகையைக் கண்டார். அங்கே அவனே உள்ளே கொண்டுபோய் விட்டார். ‘இரு இங்கேயே! உனக்கு எந்த ஆபத்தும் வராது!’ என்று சொல்லிவிட்டு அகன்றார்.

இந்திரசபையில் தன்னிடத்திற்குத் திரும்பிவந்து உட்கார்ந்து சங்கீதம் கேட்கலானார் நாரதமுனி. இடையே, யமதேவனின் பக்கம் மெல்ல கண்களை உலவவிட்டார். அவன் இவரைப் பார்த்து லேசாகப் புன்னகைப்பபதைக் கண்டு திடுக்கிட்டார். என்ன! யமன் இங்கேயும் தன் வேலையைக் காட்டப் பார்க்கிறானா என நினைத்தபடி, யோகநிஷ்டையில் யாரும் அறியாதவாறு யமதேவனிடம் பேசினார். ”யமதேவரே! முதலில் என் சிஷ்யனைப் பார்த்துச் சிரித்தீர். இப்போது என்னைப் பார்த்தும் நகைக்கிறீர். என்னிடமே உமது சாகஸத்தைக் காட்டும் எண்ணமா?” என்று வினவினார்.

யமதர்மராஜன் சொன்னான்: ‘நாரத மஹரிஷி! உம்மிடம் போயா நான் சாகஸம் காட்ட நினைப்பேன்? நிச்சயம் இல்லை. உமது சிஷ்யனை இங்கே பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாழிகையில் மரணம் ஏற்படும். பாறைகள் இடிந்து அவன் தலையில் விழ, நசுங்கி அவன் பிராணன் போகும் என்றிருக்கிறது. அவனோ இங்கு உட்கார்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டிருக்கிறான்! எப்படி இது சாத்தியமாகப் போகிறது? அவன் லயித்துக்கிடப்பதைப் பார்த்தால் எழுந்துபோவான் என்றே தெரியவில்லை. அப்படியே அவன் போனாலும் இவ்வளவு சொற்பநேரத்தில், அந்திம ஸ்திதியில் அவனிருக்கவேண்டிய பூலோகத்திலிருக்கும் அந்த மலைக்குகைக்கு எப்படிப் போய்ச்சேரப்போகிறான் என நினைக்கையில் ஆச்சரியமாயிருந்தது, சிரிப்பும் வந்தது’ என்றான்.

”ஓ! அதிருக்கட்டும். ஏன் சிரித்தீர் என்னைப் பார்த்து?

”மஹரிஷி! இப்படி அவனைப்பற்றி, ’அவன் இங்கே உட்கார்ந்திருக்கிறானே.. ப்ரும்மம் அவன் முடிவை எப்படி சாத்தியமாக்கும்’ என நினைத்து வியந்திருக்கையில், நீர் திடீரென எழுந்து அவனைக் கூட்டிக்கொண்டுபோய் பூலோகத்தின் அந்த மலையில் அதே குகையின் ஆழத்தில் ஒளித்துவிட்டு, இங்கே திரும்பி வந்து அமர்வதைப் பார்த்தேன். புரிந்தது. ’ஆஹா, ப்ரும்மம் தன் கார்யத்தை இந்த மாமுனிவரின் கையினாலேயே நிறைவேற்றிக்கொள்கிறதே!’ என ஆச்சர்யப்பட்டு உம்மைப் பார்த்தேன். சிரிப்பும் வந்தது…” என யமதேவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவர்களிருவருக்கும், தூரத்து உலகின் பெருமலை ஒன்று அதிர்வதும், குன்றுகள், பாறைகள் இடிந்து நொறுங்கும் சத்தமும் ஹீனமாகக் கேட்டது.

‘கதை முடிந்தது’ என்றான் யமன்.

”ம்..” தலையசைத்த நாரதர், “விதியின் சக்தி அதீதமானது, காலநியமத்தை விட்டுவிடாதது” என்றார்.

**