உபநிஷதங்கள் – பிரும்மத்தை நோக்கி . .

பிரத்யட்சமாக அல்லது கண்ணெதிரே காட்சியாகத் தெரியும் வடிவங்கள்தான் ஆதிமனிதனுக்கு, பொதுவாக, உண்மையெனத் தோன்றியிருக்கும். அதில் இந்த உலகம் என அழைக்கப்படும் பூமியும், பூமிவாழ் உயிர்களும், பூமியில் காணப்படும் ஆறுகள், நதிகள், மலைகள், கடல்கள் போன்றவைகளும், பகலும், இரவும், மாறும் காலமும், கூடவே அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆகாயமும், ஆகாயஒளிர் சூரிய, சந்திர, நட்சத்திரங்களும், இன்ன பிறவும் அடக்கம். இவை யாவற்றையும் ஆச்சரியமாக அவதானிக்க ஆரம்பித்த மனிதனை, உண்மையில் எப்படி இவை தோன்றியிருக்கின்றன, மறைகின்றன அல்லது தங்கள் இயங்குதளத்தில் தொடர்ந்து எவ்வாறு இயங்குகின்றன, இவற்றிற்கு முன்பும், பின்னாலும், இவற்றையெல்லாம் தாண்டியும்கூட ஏதேனும் இருக்குமோ என்கிற கேள்விகள், ஒன்றன்பின் ஒன்றாக குறுகுறுத்து சீண்ட ஆரம்பித்தன. வெறும் கேள்விகள் காலப்போக்கில் அழுத்தம்பெற்று, ஆழமாக மனதினில் வேரூன்றி வேதாந்தக் கேள்விகளாகின. ஜீவன், உலகம், பிரபஞ்சம், மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட அந்த அதீத சக்தி என மனிதத் தேடல் உயர்ந்து மேலெழுந்தது. முடிவில்லாததுபோல் தோன்றிய இப்பெரும் தேடலுக்கான சாதனாக்களில் அவன் தன்னை வருத்திக்கொண்டு மேலும்மேலும் ஆராய, நல்விளைவாக வேதங்களும், உபநிஷதங்களும் இந்த மண்ணில் வந்துதித்தன.

வேதகாலம் என ஆராய்ச்சியாளர்களாலும், ஆன்மீகத்தினராலும் அறியப்படும் மனித நாகரிகத்தின் ஆரம்பகாலகட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த யோகிகள், மகரிஷிகள் எனப்படும் பெருந்தவமுனிவர்கள், வாழ்நாள் முழுதும் தங்களை வருத்திக்கொண்டு, எரித்துக்கொண்டு இயற்றியக் கடுந்தவத்தினால் பெறநேர்ந்த இறைஅனுபூதியானவற்றைத் தங்கள் சீடர்களுக்கு, அவரவர் ஆன்மிக நிலைகளில் புரியுமாறு சொல்லி அருளினர். இப்படி வாழையடி வாழையாக, நம்மை வந்தடைந்தன வேதங்களும் அவற்றின் உள்ளுறையும், சம்ஹிதைகள், ப்ராமணங்கள் (Brahmanas), ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் ஆகியவைகளும். இவை யாவும் பொதுவாக ஷ்ருதிகள் (Shrutis) (ஷ்ருதி அல்லது ஸ்ருதி – கேட்கப்பட்டு, அனுபூதியாக அறியப்பட்டுத் தரப்பட்ட இறுதிஉண்மைபற்றியவை) என்றழைக்கப்படும் சாஸ்திர வகைமையின் கீழ் வருபவை. இந்து மத சாஸ்திரப்படி உபநிஷதங்கள், பிரும்மசூத்திரம், பகவத்கீதை ஆகிய நூல்கள் ‘ப்ரஸ்தான த்ரயம்’ (அறுதிப்பிரமாணமான மூன்று புனிதநூல்கள்) என்று சான்றோர்களால் புகழப்படுகின்றன.

உபநிஷதங்கள், மனித அறிவினால், முயற்சிகளினால் தேடி அடையமுடியாத, ஆனால் மிகவும் தேடுதற்குரிய ப்ரும்மத்தைப்பற்றி (பரம்பொருள்பற்றி) ஆராய்கின்றன அல்லது, வார்த்தைகளால் வடிக்கமுடியாத ஒரு விஷயத்தைக் கூற முயல்கின்றன. உபநிஷதங்களை, ப்ருஹதாரண்யக உபநிஷதம் ’ஸத்யஸ ஸத்யம்’ (உண்மையின் உண்மை ‘the truth of Truth) எனும் ஒற்றை வாக்கியத்தினால் வர்ணிக்கிறது. இங்கே ’உண்மை’ என்பது, மனிதன் தன் வாழ்நாளில் கண்டறியவேண்டிய ’இறுதி உண்மை’ (the Absolute Truth) எனக்கொள்ளவேண்டும்.

உபநிஷதங்கள் பலவாக இருந்திருக்கவேண்டும். காலவெள்ளத்தில் அவற்றில் சில நம்மை வந்து சேரவில்லையோ என்னவோ? ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களில் 108 உபநிஷதங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பதினான்கு அதிமுக்கியமெனக் கருதப்படுபவை. இவை ஈச உபநிஷதம், கேன உபநிஷதம், கட உபநிஷதம், ப்ரஸ்ன உபநிஷதம், முண்டக உபநிஷதம், மாண்டூக்ய உபநிஷதம், ஐதரேய உபநிஷதம், தைத்ரீய உபநிஷதம், சாந்தோக்ய உபநிஷதம் , ப்ருஹதாரண்யக (Brihadaranyaka) உபநிஷதம் மற்றும், ஸ்வேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்களுமாகும். இந்து மதத்தின் பழம்பெரும் ஆச்சார்யர்களில் ஒருவரும், அத்வைத ஞானியுமான ஆதிசங்கரர், முதல் பத்து உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதி அருளியுள்ளார்.

சமஸ்க்ருதம் எனும் வடமொழியில் மகரிஷிகளால் ஆக்கப்பட்டுள்ள உபநிஷதங்கள், மொழிவல்லுனர்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாதவை. உபநிஷதங்களை அளித்த மகரிஷிகள், தங்களை முன்னிறுத்திக்கொண்டு எதையும் கூற முயற்சிக்கவில்லை. மாறாக, எங்களுக்கு இவற்றை தெரியப்படுத்திய மகான்கள் இவ்வாறு புரிந்துகொள்ளுமாறு தெளிவுபடுத்தினார்கள் எனக் கூறிச்சென்றனர் என ஈஸாவாஸ்ய உபநிஷதம் கூறுகிறது. ஒருவரின் சமஸ்க்ருத பாண்டித்யம், மொழிவல்லமை மட்டும் போதாது, அவற்றில் வரும் ஸ்லோகங்களின் உட்கருத்தை, பேசுபொருளை உள்வாங்கி அறிவதற்கு. அறியவேண்டும் என்கிற உள்ளார்ந்த ஆர்வம், அதற்கான இடையறா முனைப்பு ஆகியவற்றோடு, உளத்தூய்மை, சிரத்தை, நம்பிக்கை, இறையுணர்வு போன்றவற்றையும் தேடுபவரிடம் கடுமையாகக் கோருபவை இவை. இவ்வாறு அணுகுகையில்தான், இவை தங்களில் பொதிந்துகிடக்கும் ஆதிஞானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டத் தொடங்குகின்றன. ஒரு மேம்போக்கான வாசிப்பில், பயிலுதலில் ஒன்றும் நிகழாதாகையால், ஆச்சாரியர்கள் மூலம் சரியான பொருள் தெரிந்துகொண்டு மீண்டும் மீண்டும் வாசித்து, மனதின் ஆழத்தில் லயித்து சிந்திக்க சிந்திக்க, உண்மையின் பல்வேறு பரிமாணங்கள் ஒளிக்கதிர்களை வீசி, நமது அஞ்ஞான இருளைப் போக்க ஆரம்பிக்கும். இத்தகைய சாதனாக்களில் ஒருவன் ஆழ்ந்து திளைக்க, அவன் மேலும் மேலும் அறிபவனாய், இறைஞானத்தில், ஆன்ம அறிவினில் முன்னேறுபவனாய் ஆகிறான் என்கின்றனர் ஆன்மீகச் சான்றோர்.

வேதகாலத்தில், கல்வி என்பது யோகம், யாகம், பல்வேறு வித்யைகள் (கலைகள்) ஆகியவற்றைத் தந்திருப்பினும், அதில் உயர்கல்வி என்பது, பிரும்மம் அல்லது இறுதிஉண்மை பற்றிய இறைஞானத்திற்கு வழிவகுக்கும் கல்வியாகவே அமைந்திருந்தது. ஆச்சார்யன்–சிஷ்யன் என்கிற கட்டமைப்பில் நிலவிய குருகுலக் கல்வியாக, அதற்கான வழிமுறைகளுடன் நியமப்படி இயங்கியது. ஆச்சாரியன் அல்லது ஆன்மீககுருவின் உதவியோடு பாலபருவத்தில் பயில ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது. குருவிடமிருந்து உபதேசம் பெற, உன்னதமானவற்றைக் கற்க, அதற்கான உண்மையான ஆர்வத்தையும், தூய மனநிலையையும் சிஷ்யன் என்று அழைக்கப்பட்ட மாணவன் கொண்டிருப்பது அவசியம். இந்த அடிப்படையில்தான், அதற்கான வாசிப்பும், தேடலும் துவங்கும். இத்தகைய தயார்நிலையை கற்பவனுக்கு, ’தேடுபவனுக்கு’ வழங்கவேண்டி, எல்லா உபநிஷதங்களும் தங்களின் ஆரம்பத்தில் ‘சாந்தி மந்திரங்க’ளைக் கொண்டிருக்கின்றன. ’அறிய’ முனைபவனின் பாதுகாப்பு கருதி, உணர்வுபூர்வமான இறைவேண்டுதலோடு, குருவின் துணையோடு சிஷ்யனை உள்ளே வருமாறு அழைக்கின்றன இவை.

உதாரணமாக ‘கேன உபநிஷத’த்தைப் பார்க்க நேர்கையில், இரண்டு சாந்திமந்திரங்களைத் துவக்கத்தில் அது கொண்டிருக்கிறது. முதலாம் மந்திரம் இப்படிச் சொல்கிறது:

ஓம் . . . குரு, சிஷ்யன் ஆகிய நம் இருவரையும் கடவுள் காப்பாராக.. உயர்ஞானத்தின் சக்தியை நாமிருவரும் முழுதுமாய் அனுபவிக்குமாறு ஊக்குவித்து அருள்வாராக. தளரா ஈடுபாடு, முனைப்புமிக்க ஆற்றலுடன் நாமிருவரும், அதனை அறிய உழைப்போமாக. கற்பவை நமக்குப் பூரண பலன் தரட்டும். எக்காரணம்கொண்டும், நாம் ஒருவரை ஒருவர் வெறுக்காதிருப்போமாக..

அடுத்ததாக, இரண்டாவது சாந்தி மந்திரம் இப்படி வருகிறது:

ஓம் . . . பிராணன், வாக்கு, கண், காது முதலான எனது அங்கங்கள் மிகுந்த சக்தியுடன் விளங்கட்டும். உபநிஷதங்கள் கூறுகின்ற பிரும்மமே (பரம்பொருளே) எல்லாம். அந்த பிரும்மத்தை நான் மறுக்காதிருப்பேனாக. அந்த பிரும்மம் என்னை மறுக்காதிருக்குமாக. உபநிஷதங்களில் சொல்லப்படும் தர்மங்கள், ஆன்மாவை நாடுகின்ற என்னில் குடியேறட்டும்.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

சாந்தி என்கிற வார்த்தை மூன்றுமுறை சொல்லப்படுகின்றது இங்கே. காரணம், மூன்றுவிதமான ஆபத்துக்கள்/ தடைகளிலிலிருந்து நாம் காக்கப்படவேண்டும் என்பதற்காக.
மூன்றுவித ஆபத்துகள்/தடைகள் என்பன எவையெவை எனவும் விளக்குகிறது:

1.ஆத்யாத்மிகம்: நம்மாலேயே நமக்கு ஏற்பட்டுவிடக்கூடிய ஆபத்துகள், தடைகள் (நமக்குள்ளிருந்தே தோன்றும் நோய், மனப் பிராந்தி, சஞ்சலம் போன்றவை)

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் (எதிரிகள், கொடும் விலங்குகள், விஷ ஜந்துக்கள் போன்றவைகளால்) வரக்கூடிய ஆபத்துகள், தடைகள்

3. ஆதி தைவிகம் : இயற்கை சக்திகளால் (புயல், பெருவெள்ளம், இடி, நெருப்பு போன்ற இயற்கை சீற்றங்கள்) நிகழக்கூடிய ஆபத்துகள், தடைகள்

(Picture courtesy: Internet)

– தொடரும்.
*

வா.. கலாப மயிலே !


சின்னவயதில் அடிக்கடி கேட்ட டி எம் எஸ் பாடிய ஸெமி-க்ளாசிகல் பாடல். ஆரம்பத்தில் ரேடியோவில் சரியாகக் கேட்காமல் ’ஓடி வா.. சல்லாப மயிலே!’ என நினைத்து, சிலிர்த்து, மனதுக்குள் பாடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னே சத்தமாகப் பாடி, பெரிசுகள் கேட்டால் பிரச்னையாகிவிடுமே! (இந்த வயசுல இந்த மாதிரிப் பாட்டா கேக்குது ஒனக்கு? போடா, போ! ஒழுங்காப் படி.. உருப்புடற வழியப்பாரு).

பிறகு வார்த்தை சரியாகக் காதில் விழுந்ததும், தலையைச் சொறிய ஆரம்பித்தது கை. கலாப மயிலே..! இது என்ன வார்த்தை? வேறெங்கும் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. அழகு மயில் தெரியும், ஆனந்த மயில் தெரியும், நீல மயில் தெரியும், நீல மயில்மீது ஞாலம் வலம் வந்த கோலாகலனைப்பற்றியும் கொஞ்சம் தெரியும். இதென்ன கலாப மயில்? யார் எழுதியது இந்தப் பாட்டை? ஓ, தஞ்சை ராமையாதாஸா? புரியாத வார்த்தையாப்போட்டுத் திணறடிக்கிறதுதான் இவர் வேல போலருக்கு. குழப்பம் தொடர்ந்தது கொஞ்சகாலம். அதற்குப்பின் மறந்துவிட்டேன்.

சமீபத்தில் ஆன்மிகத்தில் கொஞ்சம் துழாவிக்கொண்டிருந்தபோது, சமஸ்கிருத ஸ்லோகங்கள் சில தென்பட்டன. மேலும் படிக்க நேர்ந்தபோது தலைகாட்டியது ‘கலாபம்’! சமஸ்கிருதத்திலயா வருது ? இந்த வார்த்தையைத் தான் தஞ்சாவூர்க் கவிஞர் எடுத்துவிட்டிருக்காரு.. கலாபம் என்றால் மயில் -சமஸ்கிருதத்தில். அதுவும் வெறும் கானகமயிலல்ல. கார்த்திகேயனின் மயில்! கார்த்திகேயன் ? முருகனா? அவன் தமிழ்க்கடவுள் அல்லவா? வடநாட்டுப்பக்கம் எங்கே போனான்? அப்பனோடு சண்டைபோட்டதாக, ஆண்டியாக நின்றதாக, ஔவையாரோடுகூடப் பேசியதாகவும்தானே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது? வந்த கோபத்தில் வடக்கே போ, தெற்குத் திசையே வேண்டாம் என்று திருப்பிவிட்டுட்டானா மயிலை? கோபம் கடவுளர்களையும் விடுவதில்லை போலிருக்கிறதே.. பாலமுருகனும் பாவந்தானே!

ஒரேயடியாகக் கற்பனைச் சவாரி வேண்டாம். கதை வேறானது. மத்திய, வடக்குப் பிரதேசங்களை ஆண்டுகொண்டிருந்த சாலிவாகன ராஜாவுக்கு சமஸ்கிருதம் தெரியாது. அழகிய இளம் மனைவியோ சமஸ்கிருதத்தில் சரளமாகப் பேசுபவள், புழங்குபவள். முனிவர் ஒருவரிடம் சிறுவயதில் கற்றுக்கொண்டது எல்லாம். அவள் பேசுகிற அழகைக்கண்டு அவனும் சமஸ்கிருத மொழியழகில் மயங்கினான். சமஸ்க்ருதம்தான் அரசுமொழி என அறிவித்தும்விட்டான். இந்த மொழியை நாம் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் வந்துவிட்டது. அரசனின் தர்பாரில் இரண்டு சமஸ்கிருத மேதைகள். இருவரையும் அழைத்தான். ’எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டாகவேண்டும். உங்களில் யார் இதைச் செய்யமுடியும்?’ என்று வினவினான். ஆரம்பமே தெரியாத இவனுக்கு சமஸ்கிருதமா? அதுவும் விரைவிலா? முதலாமவர் சொன்னார்: ’இது ஒரு தேவபாஷை. கற்றுக்கொள்ள எளிதானதல்ல. முறையாகக் கற்றுக்கொள்ள குறைந்தது பன்னிரண்டு வருடங்கள் ஆகும்.’ ஆச்சரியமுற்ற மன்னன் மற்றவரைப் பார்த்தான். அடுத்தவன் சர்வவர்மன். அவன் சாதாரணமாகச் சொன்னான்: ’என்னால் ஆறு மாதத்திலேயே உங்களுக்கு சமஸ்கிருதம் பேச, புழங்கக் கற்றுத்தரமுடியும்!’ மன்னன் சந்தோஷமாகிவிட்டான். ’பலே! அதற்குவேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியும்’ என்று உத்தரவிட்டுப் போனான்.

சர்வவர்மன் உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டானே ஒழிய, விரைவிலேயே பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனைக் கவ்விக்கொண்டது. சமஸ்கிருத இலக்கணங்கள் கடுமையானவை. கற்றுக்கொள்ள, சுருக்குவழி, குறுக்குவழி ஏதுமில்லை. மன்னனுக்கு முறையாக, சரியாகக் கற்றுத்தரவேண்டுமே. அதையும் அவன் புரிந்துகொண்டு, பேச ஆரம்பித்து, புழங்க ஆரம்பித்து.. அதுவும் ஆறே மாதத்தில். ’இந்த இலக்கணத்தையெல்லாம் படித்துப் பார்க்கவே காலம் போறாதே.. ஐயோ! வசமாக மாட்டிக்கொண்டேனே!’ பதறினான் சர்வவர்மன். தான் வணங்கும் தெய்வமான சிவபெருமானிடமே தஞ்சம் புகுந்தான். சன்னிதியில், நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். அழுதான், அரற்றினான். ’அப்பா! ஏதாவது செய். அரசன் மகா கோபக்காரன். அவனே பாய்ந்து என் தலையைக் கொய்துவிடாமல், சிவனே நீ என்னைக் காப்பாற்று..’ பக்தன் துடிதுடித்தால் தாங்கமாட்டாரே சிவபெருமான். இவனைக் காப்பாற்ற வேண்டும். எங்கே நம்ப பையன் முருகன்? பக்கத்தில் எங்கும் தென்படமாட்டானே? மயிலேறி, ஆகாயத்தில் அங்குமிங்குமாக சுற்றிக்கொண்டிருந்த சின்னவனைக் கூப்பிட்டார் சிவபெருமான். வந்தவன் வணங்கினான். கேட்டான் மிருதுவாக:

என்னப்பா!

ஒரு காரியம். உடனே செய். பூமியில் நம் பக்தன் சர்வவர்மன். அழுதுகொண்டிருக்கிறான். பிரச்னையைத் தீர்த்துவை.

என்னவாம் அவனுக்கு?

அட்சரம்கூடத் தெரியாத அரசனுக்கு ஆறுமாதத்தில் சமஸ்கிருதம் கற்றுத் தருகிறேன் என்று உளறிவிட்டு வந்துவிட்டான். உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறான் என்ன செய்வதெனத் தெரியாமல். ராஜாவுக்கு புரியும்படி எளிதாக சமஸ்க்ருதம், அதுவும் ஆறே மாதத்தில் சர்வவர்மன் கற்றுத்தரும்படி, நீ அவனுக்கு அருள்வாய்!

இவ்வளவுதானே அப்பா! இதோ!

மாலின் மருகன் பறந்தான் கலாபத்தின் மீதேறி, பூமியை நோக்கி.

அங்கே அழுதுகளைத்து வீழ்ந்துகிடந்த சர்வவர்மன் முன்- சிவலிங்கத்திலிருந்து ஒளியாகப் புறப்பட்டுப் பிரசன்னமானான் முருகன். சர்வவர்மன் திகைத்தான். அப்பனைக் கூப்பிட்டால் அருகில் வந்து நிற்கிறானே மகன். எல்லாம் அவன் செயல்! நடுங்கும் தேகத்தோடு, எழுந்தான். சாஷ்டாங்கமாக முருகனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். நடந்ததைச் சொல்லி, கலங்கிய கண்களோடு தலைதாழ்த்தி நின்றான் சர்வவர்மன்.

கருணையோடு அவனைப் பார்த்தான் கார்த்திகேயன். ’சாரம் நழுவிடாமல், ஆனால் எளிதில் பயிற்றுவிக்க சுருக்கமாக, புது சமஸ்கிருத இலக்கணம் ஒன்று தருகிறேன். கேள், கவனமாய்..’ என சர்வவர்மனுக்கு ஓதி அருளிவிட்டு, மறைந்தான் முருகன். சர்வவர்மனும் முருகனிடமிருந்து பெற்ற புது இலக்கணத்தினால், ஆறே மாதத்தில் மன்னனுக்கு சமஸ்கிருதத்தை நன்கு கற்பித்துவிட்டான். பிறகு ஒரு நாள், அரசவையில், சமஸ்க்ருதம் கடினமான மொழியெனச் சொன்ன அந்த முதலாவது மேதை மன்னனின் பாண்டித்யத்தை சோதிக்க எண்ணினார். மன்னனின் அனுமதிபெற்று, கடினமான சுலோக ரூபத்தில் சமஸ்கிருதத்தில் ஒரு கேள்வியை அரசனிடம் கேட்டார். சற்றும் சளைக்காமல், சுலோகமாகவே பதிலைத் திருப்பியடித்து அசத்திவிட்டான் சாலிவாகன ராஜா. முருகனை நினைத்து முகமலர்ந்தான் சர்வவர்மன். அந்த முதலாவது மேதையும் அவையோரும் வாயடைத்துப்போயினர். இப்படி பூமிக்கு வந்து சேர்ந்ததுதான் சமஸ்கிருத வியாகரண (இலக்கண) நூலான ’கலாபம்’ அல்லது ’கௌமாரம்’. காதந்திர வியாகரணம் என்னும் பெயரும் இதற்குண்டு.

சமஸ்கிருத மொழியின் ஒன்பது வியாகரண நூல்களான – இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், ஸாகடாயனம், ஸாரஸ்வதம், காஸாக்ருத்ஸ்னம், கலாபம், ஸாகலம், ஆபிஸலம், பாணினீயம் ஆகியவற்றில், தமிழ்க்கடவுள் எனக் கொண்டாடப்படும் முருகப்பெருமான் அருளிய வியாகரண நூலும் சேர்ந்து வீற்றிருக்கிறது.

படம்: இணையம். நன்றி.
*

ப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் ?


ஷா ஒரு Cricket prodigy-யா? அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை இந்த இளைஞனைப்பற்றி கேள்விப்பட்டு வருவதெல்லாமே – 14 வயது பையனாக மும்பையில் ஸ்கூல் கிரிக்கெட்டில் உலக சாதனை, இந்திய தேசிய சேம்பியன்ஷிப்களான ரஞ்சி மற்றும் துலீப் டிராஃபி தொடர்களில் முதல் மேட்ச்சிலேயே சதங்கள், U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்தது, இந்தியா-ஏ அணிக்காக வெளிநாடுகளில் காட்டிய திறன்மிகு ஆட்டம் போன்றவை- அவர் இந்தியாவின் ஒரு வருங்கால நட்சத்திரம் என்றே வெளிச்சக்கீற்றுகளால் கோடிட்டு வந்திருக்கிறது. 04-10-18 அன்று, குஜராத்தின் ராஜ்கோட்டில் ஆரம்பித்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாளே அவர் ஆடிய ஆட்டமும், அந்தவழியில்தான் சென்றுள்ளது – இன்னும் சர்வதேச அரங்கில் பையன் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்ற போதிலும்.

முதலில் இந்தியா பேட் செய்ததால் அன்று காலையிலேயே நிகழ்ந்தது ப்ரித்வி ஷாவின் அரங்கேற்றம். வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel) வீசிய தொடரின் முதல்பந்தை எதிர்கொண்டு ஆடத் துவங்கிய, சிறுவனாகத் தோன்றும் 18 வயதுக்காரரின் மீது அனைவரின் கவனமும் குவிந்திருந்தது. ஒரு பள்ளிப்பையனின் துறுதுறுப்பும், பதின்ம வயதிற்கே உரிய உற்சாகமுமே அவரிடம் மிளிர்ந்தது, பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது. இன்னொரு துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராஹுல் முதல் ஓவரிலேயே கேப்ரியலிடம் விழுந்தது எந்த ஒரு தாக்கத்தையும் ஷாவிடம் ஏற்படுத்தவில்லை. ரன்கள் துள்ளிக்கொண்டு புறப்பட்டன அவருடைய பேட்டிலிருந்து. சிங்கிள், இரண்டு-ரன்கள் என வேக ஓட்டம் (அந்தப்பக்கம் ரன் –அவுட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா இருந்தது நமக்குத்தான் பயத்தைக் கொடுத்தது!). இடையிடையே ஸ்கொயர் கட், லேட்-கட், புல், ஹூக் ஷாட் என வெரெய்ட்டி காண்பித்தார் இந்த இளம் புயல். லன்ச் இடைவேளையின் போது 70+ -ல் இருந்தவர், திரும்பி வந்து 99 பந்துகளில் தன் முதல் சதத்தை விளாசி முத்திரை பதித்தார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரராக ஒரு அதிரடி சதம் என்பது ஒரு பதின்மவயதுக்காரரிடமிருந்து வருகையில், அதைப் பார்ப்பதின் சுகமே தனி.

கூடவே, வெஸ்ட் இண்டீஸின் பௌலிங் தாக்குதல் அவ்வளவு தரமாக இல்லை என்பதையும் கவனித்தே ஆகவேண்டும். அவர்களின் இரண்டு டாப் வேகப்பந்துவீச்சாளர்களான கெமார் ரோச் (Kemar Roach) மற்றும் கேப்டன்/ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) –ஆகியோர் இந்த முதல் போட்டியில் வெவ்வேறு காரணங்களினால் ஆட இயலவில்லை. ஆதலால் பௌலிங்கில் ஆக்ரோஷம், தாக்கம் குறைவுதான். கூடவே ராஜ்கோட் பிட்ச்சும் பேட்டிங்கிற்கு வெகுவாகத் துணைபோகிறது. ஆனால், இதெல்லாம் தன் முதல் டெஸ்ட்டை ஆடுபவரின் தப்பில்லையே! டெஸ்ட் தொடர் என்கிற பெயரில் இந்தியா புலம்பிவிட்டு வந்த இங்கிலாந்து தொடரிலேயே, கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் ப்ரித்வி ஷா சேர்க்கப்பட்டிருந்தார்தான். ஆனால் நம்முடைய சூப்பர்கோச் ரவிசாஸ்திரியும், கேப்டனும் வாய்ப்பளித்தால்தானே விளையாடமுடியும்? ’நான் அப்போதே தயாராகத்தான் இருந்தேன். இப்போதுதான் வந்தது வாய்ப்பு’ என்கிறார் அவர்.

இப்போதிருக்கும் வெஸ்ட் இன்டீஸ் அணி, இந்தியாவின் டெஸ்ட் தரத்திற்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. ஆயினும் உன்னிப்பாகக் கவனித்தோருக்கு, ப்ரித்வி ஷாவின் முதல் டெஸ்ட் இன்னிங்ஸ் அவர் எத்தகைய பேட்ஸ்மன் என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருந்தது தெரியவரும். இயற்கையாகவே அவருக்கு அமைந்திருக்கும், அலட்டிக்கொள்ளாத தன்மையும், அதே சமயத்தில் சரியான பந்தைத் தேர்ந்தெடுத்துத் தாக்கும் லாவகமும் பளிச்சிடுகின்றன. வெஸ்ட் இண்டீஸின் தரமான வேகப்பந்துவீச்சாளரான ஷனன் கேப்ரியல், ராஜ்கோட்டின் வெப்பத்திலும் அவ்வப்போது தன் வேகத்தினாலும் (140-143 கி.மீ), எகிறும் பௌன்ஸர்களாலும் அவரை சீண்டிப் பார்த்தார். ஆனால் ஷா அவரையும், ஸ்பின்னர் தேவேந்திர பிஷுவையும் ஒரு அதிகாரத்துடன் விளையாடியவிதம், ஏதோ இதற்குமுன்னர் ஏகப்பட்ட போட்டிகளின் அனுபவப் பின்னணியில் விளையாடியது போன்றிருந்தது.

ஷாவின் இந்த இன்னிங்ஸைக் கூர்ந்து கவனித்திருப்பார்போலும் வீரேந்திர சேஹ்வாக். தன் ட்விட்டர் பக்கத்தில், அவருக்கே உரிய பாணியில் இப்படி ஹிந்தியில் எழுதியிருக்கிறார்: லட்கே மே(ன்) தம் ஹை(ன்)! (பையனிடம் தெரியுது ஒரு வீரம் ! – என இதைத் தமிழ்ப்படுத்தலாம்). எகிறும் வேகப்பந்துகளை பாய்ண்ட் மற்றும் தேர்ட்-மேன் திசைகளில் அனாயாசமாகத் தூக்கி விளாசிய விதத்தில் சேஹ்வாக் தெரிந்ததாக சில வர்ணனையாளர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலி எச்சரிக்கிறார்: ’சேஹ்வாக் ஒரு ஜீனியஸ். அவரோடு இந்தப் பையனை ஒப்பிட வேண்டாம். ஆனால் பதற்றமின்றி எளிதாக விளையாடிய விதம், சிலவித ஷாட்களை சர்வசாதாரணமாக ஆடிய முறை, லாவகம் இவற்றைப் பார்க்கையில் இவருள்ளிருக்கும் தரம் தெரிகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற மைதானங்களில் ஷா முதலில் ஆடவேண்டும். அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். இப்போதைக்கு, வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ஷா நன்றாக விளையாடுவார் என்றே தோன்றுகிறது’ என்றிருக்கிறார்.

2008-லேயே இவரது ஜூனியர் லெவல் ஆட்டத்தைப் பார்த்த டெண்டுல்கர், ’இவன் ஒரு நாள் இந்தியாவுக்காக ஆடுவான்!’ என்றிருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப கிரிக்கெட்காலத்தோடு ப்ரித்வி ஷா-வின் கிரிக்கெட் ஆரம்பங்களும் ஏனோ கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்பது கொஞ்சம் வியப்பைத் தருகிறது! இருப்பினும், இப்போதே ஒரேயடியாக ஆஹா..ஓஹோ என நமது மீடியாவோடு சேர்ந்து புகழ்ந்து தள்ளாமல், அமைதியாக இவரைக் கவனிப்பதே உகந்தது. வாய்ப்புகள் இவர்முன் வரும்போது, வெவ்வேறு நாடுகளில், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் பிட்ச்சுகளில் ஆவேசமான வேகப்பந்துவீச்சுக்கெதிராக எப்படித் தன்னை நிறுவப்போகிறார் என்பதைக் காலம் நமக்குக் காட்டும். எனினும், இப்போதைக்குச் சொல்லிவைப்போம்: ‘Very well done, தம்பி!’
Picture courtesy: Internet
*

அந்த நாட்டிலெல்லாம் அப்படி ..


Picture courtesy: Internet

ராஜநீதி அல்லது அரசியல் என்பது, உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக இயங்குகிறது. வித்தியாச வடிவங்கள், மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. பின்னே? நம்ப நாட்டுக் குப்பைமாதிரியா இருக்கும்? –என்கிறீர்கள். பாயாதீர்கள். மேலே படியுங்கள்.

வளர்ந்த நாடொன்றின் தென்மேற்குப்பகுதியில் ஒரு நகரம். அதன் முனிசிபல் கார்ப்பரேஷன் அரசியலைக் கொஞ்சம் பார்ப்போமா? என்ன? முனிசிபல் கார்ப்பரேஷனா? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கிறீர்கள். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, நாட்டையே பிய்த்து வாயில்போட்டு, தினம் மென்று தின்னும் ’அரசியல்வாதி’களோடுதானே உங்களின் சகவாசம்! மேயர், கௌன்சிலர் போன்ற அடிநிலை அரசியல்வாதிகளைப்பற்றிப் பேசுவதே உங்களுக்கு கௌரவக் குறைச்சலாக இருக்கும்தான். இருக்கட்டும். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள். நாம் இங்கே பார்ப்பது, உலகின் இன்னொரு மூலையில், அடிமட்டத்தில், அரசியல் நடத்தைகள், ஒழுக்க மதிப்பீடுகள்பற்றி.. அப்படியென்றால்? நம் நாட்டிலும் ஒருகாலத்தில் அரசியல்வாதிகளிடமும், பண்பு, நன்னடத்தை, மரியாதை போன்ற குணங்களெல்லாம் காணப்பட்டதுதான். ஆனால் இப்போது.. சரி, சரி, விடுங்கள். மேலே பாருங்கள்.

அந்த நகரின் ஒரு இளம் பெண் கவுன்சிலர். முனிசிபல் கமிட்டி பெரிசுகளால் சமீபத்தில் விமரிசிக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரால் அதைத் தாங்கிகொள்ள முடியவில்லை. என்ன தவறு செய்துவிட்டார் அந்தப் பெண்மணி? ஊர்ப்பணத்தில் கை வைத்து பிடிபட்டுவிட்டாரா, வேறேதேனும் ஏமாற்றா, மோசடி, பித்தலாட்டமா? இல்லை. பெரிசு யாரையாவது அவதூறாகப் பேசிவிட்டாராக்கும்? அப்படியெல்லாமில்லை. பின் என்னதான் செய்துவிட்டார், ‘தண்டிக்கப்படும்’ அளவுக்கு?

சமீபத்தில், முனிசிபல் கமிட்டியின் முக்கியமான மீட்டிங் ஒன்றில் எழுந்து நின்று, ஒரு பொதுப்பிரச்சனைபற்றி பேச ஆரம்பித்திருக்கிறார், அந்த இளம் பெண் கௌன்சிலர். நகர நிர்வாகத்தின் பெரியவர்கள் -பழம்தின்று கொட்டையும் போட்டவர்கள், அனைவரும் ஆண்கள்- உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இடையே கௌன்சில் சேர்மன் குறுக்கிட்டு ’உங்கள் வாயில் என்ன? எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அந்தப் பெண் கவுன்சிலர் பௌவ்யமாக (அந்த நாட்டின் ஆண்/பெண்கள் மென்மையாகப் பேசுபவர்கள், பௌவ்யத்திற்குப் பேர்போனவர்கள்) அவரைப் பார்த்து மரியாதையாகக் குனிந்துவிட்டு பதில் சொல்லியிருக்கிறார்: ’சாரி..ஆமாம். இருமல் மாத்திரை. ஒரே இருமல் எனக்கு. கமிட்டி மீட்டிங்கில் இடையிடையே இருமி உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்துவிடக்கூடாதே என்றுதான் வாயில்..’ என்று அவர் முடிக்கக்கூட இல்லை. சேர்மன் மற்றும் ஏனைய கௌன்சிலர்களின் கண்களில் அனல். முனிசிபல் கௌன்சிலின் ஒரு அதிகாரபூர்வ மீட்டிங்கில் எப்படிப் பேசுவது, நடந்துகொள்வது என்று இந்தப் பெண்ணுக்குத் தெரியவேண்டாம்? வாயில் எதையாவது போட்டுக்கொண்டா எங்களுக்கு முன் பேசுவது? மதிப்பிற்குரிய இந்த சபையின் பாரம்பரியம், கௌரவத்தை நொடியில் குலைத்துவிட்டாளே இந்தப் பெண்– என்பதே அவர்களின் சீற்றத்துக்கான காரணம்.

என்ன நடந்தது அப்புறம்? அந்த மீட்டிங்கை உடனே நிறுத்தினார் சேர்மன். சீனியர் மெம்பர்கள்கொண்ட ஒரு சிறு கமிட்டியை உடனே அமைத்துத் தனியாக ஒரு மீட்டிங் நடந்தது இன்னொரு அறையில். இந்த அபச்சாரத்தைச் செய்த பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? இறுதியாக வந்தது முடிவு. அந்தப் பெண் கவுன்சிலர், கவுன்சில் சேர்மன் மற்றும் மெம்பர்கள் முன் மன்னிப்புக் கேட்கவேண்டும். வெறுமனே வருத்தம் சொல்லித் தப்பிக்க முடியாது. தன் தவறுக்கு வருந்தி முறையாக எழுதப்பட்ட மன்னிப்புக் கடிதத்தை எல்லோர் முன்னும் பணிந்து அவர் வாசிக்கவேண்டும் என்பதே அது.

தான் நிலைமையை விளக்கியும் தண்டனையா? இது சரியில்லை. மன்னிப்புக் கேட்க முடியாது என மறுத்துவிட்டார் அந்தப் பெண் கௌன்சிலர். அந்த நாட்டில் இதெல்லாம் (பெண் ஒருவர், அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்ட தண்டனையை மறுப்பது என்பது) அபூர்வத்திலும் அபூர்வம். குற்றத்தின்மேல் குற்றம். சேர்மனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். ’சபைநீதி’யையும் அதிகாரத்தையும் நிலைநாட்டவேண்டி, சேர்மன் அந்தப் பெண் கவுன்சிலரை உடனே கௌன்சிலை விட்டு வெளியேற உத்தரவிட்டார். வெளியேறிய அந்தப் பெண் வழக்கத்துக்கு மாறாக, மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த மீடியாவிடம் பேசிவிட்டார். மேற்கொண்டு சில விபரங்களையும் விளக்கினாராம்.

என்ன அது? சில மாதங்கள் முன், தன் 7 மாதக் குழந்தையுடன் கௌன்சிலுக்கு வந்துவிட்டாராம் அந்த பெண் கௌன்சிலர். பெரிசுகள் அதிர்ந்தன. அவரிடம் வந்து ’குழந்தையை இங்கு கொண்டுவர அனுமதியில்லை. வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள்’ என்றிருக்கிறார்கள். அவர் தனக்கு யாருமில்லை.(சிங்கிள் பேரண்ட் போலும்). ’சின்னக்குழந்தை. எங்கும் விட்டுவிட்டு வருவதற்கும் வாய்ப்பில்லை. இந்தக் கௌன்சிலிலேயே என்னை மாதிரி இளம் தாய்மார்களுக்கு (பெண் அலுவலர்களிலும் தாய்மார்கள் இருக்கக்கூடுமே), குழந்தைகளுக்கான daycare –அவர்களை அலுவலக நேரத்தில் பார்த்துக்கொள்ள ஏதாவது ஏற்பாடு செய்யக்கூடாதா? இதுதானே நம் நகரத்தில் ஒவ்வொரு வேலைக்குச் செல்லும் தாயும் எதிர்கொள்ளும் பிரச்னை? நம் மக்களின் பிரச்சினையும் அல்லவா? ஒரு தாயும், கௌன்சிலருமான என்னுடைய கஷ்டத்தை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்றிருக்கிறார் அந்தப் பெண்மணி. கார்ப்பரேஷன் பெரிசுகள் பொங்கிவிட்டன. ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் ஆகாதே! முறைகேடாக, குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்காமல், நமக்கே அறிவுரை வேறா? ’செயலுக்கு வருந்து. கேள், மன்னிப்பு!’ என உறுமினார்கள்.

கேட்கவில்லை. அந்த மன்னிப்பே இன்னும் பெண்டிங்! இப்போது இருமல் மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டு பேசிய பிரச்னை வேறு. நான் பெரியவர்களை மதிக்காதவள் இல்லை. அவர்கள் அதிகாரத்தை அறியாதவளல்ல. இருப்பினும் மக்கள் பிரச்னையை அவர்கள் முன் கொண்டுசெல்லத்தான் அப்படிச் செய்தேன். மக்கள் சேவைக்குத்தானே கார்ப்பரேஷன், கௌன்சில் எல்லாம்? பெண்களின் பிரச்னைகளை அறிந்து களைய வேண்டுமானால், பழைய மதிப்பீடுகளிலிருந்து அவர்கள் கொஞ்சம் வெளியே வரவேண்டாமா? இல்லையென்றால் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? மக்கள் பலன் பெறுவது எப்படி?; என்று பேசியிருக்கிறார் நியூஸ் ஏஜென்சிகளிடம் அந்தப் பெண்மணி. ’ஓ! ப்ரெஸ்ஸுக்கும்வேறு போய்விட்டாளா அவள்.. என்ன ஒரு அகம்பாவம்!’ என்று மேலும் குதிக்கிறார்கள் பெரிசுகள் அங்கே!

என்னதான் மிகவும் முன்னேறிய, நவீன நாடென்றாலும் ஆண்களின் சிந்தனா-ஆதிக்கம்தான் அங்கே இன்னமும். பாரம்பரிய வழிமுறைகள், பழைய மதிப்பீடுகள், சமூக, கலாச்சார ரீதியாக பல நன்மைகளைச் செய்திருக்கின்றன என்பது உண்மை. இருந்தும் அரசியலில் மேற்கூறியபடி சில செயல்பாட்டுத் தடங்கல்களும் உண்டு. குமமோத்தோ நகரம், ஜப்பான். அங்கேதான் இந்த நடப்பு.

இன்னொரு பக்கமும் இருக்கிறது. நான் ஜப்பானில் வசிக்கையில், 2002-ஆம் ஆண்டு என நினைக்கிறேன் – ஒரு நிகழ்வு அவர்களது டிவி-யில் லேசாகக் காண்பிக்கப்பட்டது. ‘லேசாக’ என ஏன் சொல்கிறேன்? அவர்கள் நாட்டில் எப்போதாவது நடக்கும், அல்லது எப்போதாவதுதான் மீடியாக்கள் காண்பிக்கும் அபத்த, அவமான விஷயங்களை 10-15 நிமிட டிவி-நியூஸ் நேரத்தில் எங்காவது ஒரு மூலையில் லேசாக சொல்லிச் சென்றுவிடுவார்கள். Breaking news.. Scoop என்றெல்லாம் அவற்றை ஹைலைட் செய்து, உங்கள் டிராயிங் ரூமில் கூச்சலிடுவது அசிங்கம் எனக் கூச்சப்படும் நாகரிகம் தெரிந்தவர்கள் ஜப்பானிய அவர்கள். அவர்கள் என்றால் ஜப்பானிய ஜனங்கள், அரசாங்கம், அவர்களின் டிவி சேனல்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு அரசியல்வாதி. மந்திரி என்பதாக ஞாபகம். ஏதோ ஒரு மோசடி-முறைகேட்டில் மாட்டிக்கொண்டார். ஜெயிலுக்குப்போகும் அளவுக்கு அவ்வளவு பெரிய குற்றமல்ல. எனினும் முறைகேட்டில் ஆதாரத்தோடு பிடிக்கப்பட்டு, கோர்ட்டில் நிற்கிறார். குற்றப்பத்திரிக்கையை அவர்கள் வாசிக்க, தரையைப் பார்த்து நிற்கிறார். வருத்தம் குரலில் தோய, குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கிறார். அவ்வளவுதான். (நியூஸ் ஐட்டமும் முடிந்தது – மேற்கொண்டு விவாதங்கள், கூச்சல்கள், எதிர்க்கூச்சல்கள் ஏதுமில்லை). மேற்கொண்டு செய்தி பத்திரிக்கைகளிலிருந்து கொஞ்சம் கசிகிறது. அந்த அரசியல்வாதி கட்சி/அரசு பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். அரசியலிலிருந்தே விலகிக்கொள்கிறார். அது மட்டுமா? டோக்கியோவிலிருந்தே விலகி எங்கோ தூரத்தில் கிராமத்தில் போய் தனித்துவாழ நேரிடுகிறது அவருக்கு. அதாவது Social ostracism. அரசியல் ஒதுக்கலோடு, சமூக விலக்கலும். அவர் மேற்கொண்டு எத்தனை நாள் அப்படி வாழ்ந்தார்? ஒருவேளை, கடுமையாக விமரிசிக்கப்பட்டதால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதால் அவமானம் தாங்காது பிற்பாடு ஒரு நாள் தற்கொலையும் செய்துகொண்டாரோ? தெரியாது. பழம் மதிப்பீடுகள் நிறைந்த, உணர்வுபூர்வ ஜப்பானிய சமூக சூழலில் அப்படியும் நடந்திருக்க மிகுந்த வாய்ப்புண்டுதான்.

அங்கேயெல்லாம் பொதுவாழ்வில் இருப்பவர்களும்கூட, சூடு, சொரணை, வெட்கம், அவமான உணர்வு மிக்கவர்களாக இருக்கிறார்கள்..நடந்தும்கொள்கிறார்கள். ஹ்ம்..

*