சாகித்ய அகாடமி விருதுபெற்ற சோ. தர்மனின் ஒரு சிறுகதை

தன்னை வளப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொண்டு, சுற்றியிருக்கும் இயற்கைவெளியை நாளெல்லாம் சிதைத்துக்கொண்டிருக்கும், அதன்மூலம் தன் இனத்தின் இறுதி அழிவிற்கே முட்டாள்தனமாக முனையும் மனிதனின் செயல்பாடுகள், அவனது இனத்தோடு நின்றுவிடுகின்றனவா என்ன?

எழுத்தாளர் சோ. தர்மனின்  கைவண்ணத்தில் ஒரு சிறுகதையைப் பார்ப்போம் :

 

சோகவனம் 

 

கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண்நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில், தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று, தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்னும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும், வனங்களின் ஏகாந்த மௌனத்திலும், இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும், நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின்   மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிளை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள். உடற்சூட்டின் கதகதப்பில் திரவம் உறைந்து அணுக்கள் இறுகிக் கெட்டியாகி உயிர் பெற்று அசைந்து, மண் நீக்கி முளைவிடும் விதையெனத் தோடுடைத்து, சூரியனின் இயற்கைச் சூட்டைப் பெறும் வேட்கையிலும், தாயின் மூச்சே காற்றென இருந்த கணம் மாறி, உள்காற்றை உந்தித் தள்ளி வெளிக்காற்றில் தலை நீட்டும் முதல் ஸ்பரிசத்திற்காய் காலுதைக்கும் குஞ்சுகள் பொரிக்க, இடம் தேடிப் புறப்பட்டன ஜோடிக் கிளிகள்.

தன் வம்சத்தின் பாரம்பரிய நியதியை மீற முடியாமல், கிளைகளின் மேல் கூடு கட்டி வாழும் பறவைகளையும், கிளைகளிலிருந்து தொங்கும் கூடு கட்டி வாழும் பறவைகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, மரப்பொந்துகள் தேடி வனங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் அலைந்தன. மலைக் குகைகளின் கல் பொந்துகள் மாறித்தான், மரப்பொந்துகள் உண்டாயிற்று போலும். தான் ஜனித்த தாய் வீட்டை நினைத்து,  காற்றில் அடையாளமிட்டிருந்த திசையில் பறந்து, இடந்தேடியடைந்தன. தன் தாய் வீட்டை அந்த இடத்தில் காணாமல் விக்கித்து நின்றன. தன் வீடு இருந்ததற்கான அடையாளத்தையே காணவில்லை. திசைமாறி விட்டோமோ என்று திகைத்து அடையாளங்கள் தேடினால், அடையாளங்களாக நின்ற மரங்களையும் காணவில்லை. “ஆகா… எவ்வளவு பெரிய இலவ மரம் தன் தாய்வீடாயிருந்தது. எவ்வளவு உயரம், எத்தனை பொந்துகள். பக்கத்திலேயே கூடாரமாய் கிளை பரப்பி,  வெய்யில் முகமே காணாமல் எந்நேரமும் நீருக்குள் இருக்கிற மாதிரியான குளிர்ச்சியில் அசைந்தாடி, பறவைகள் எல்லாவற்றையும் ‘வா, வா’ என்று கையசைத்துக் கூப்பிடும் நிலவாகை மரத்தையும் காணவில்லை. சந்தன வாசனை எங்கே போயிற்று? அடர்ந்த மட்டியும், கோங்கும், பிள்ளை மருதும் இருந்த இடம் எது? ஆயிரம் கைகள் விரித்தாற்போல் நின்ற தேக்கு எங்கே போயிற்று? தன் தாய்வீட்டில் வாசற்படிபோல் பொந்தின் அடியில் இருந்த பெரிய கணுவில் நின்றுகொண்டு இரையூட்டிய தன் தாயின் அலகும் , தங்களின் அலகும் எவ்வளவு கச்சிதமாய் பொருந்தி மூடும்.. இரைகளை அலகு மாற்றிய பின் விருட்டெனப் பறந்து காற்றில் கலக்க எத்தனை தோதாயிருந்தது. அம்மரத்தின் கணு முற்றிப் பழுத்து வெடித்த பலாவின் மணத்தை, இந்த நாசி உணரவே வழியில்லையே. உயிர்ப்பித்த பூமியா,  அத்தனை மரங்களையும் உள் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டது? கடுகளவு விதையையும் பெரிய மரமாக்கி வனமாக்கும் மண், நிச்சயமாய் விழுங்கியிருக்காது. மண் விழுங்கும் சருகுகள் கூட உரமாகி உயிர் பெற்று மரமாய்த்தானே வெளிவருகிறாது. அப்படியெனில் இந்த மரங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன?  பெரு நெருப்பில் கருகியிருந்தால் தடயம் எங்கே?  சாம்பலையும்கூட உரமாக்கி செடிகளுக்கு அளித்து பூ பிஞ்சு காய் பழம் விதையென சக்கரச் சுழற்சியின் விதிக்கு, மண் தானே ஆதாரம். அப்படியிருக்க மண் நிச்சயமாய் விழுங்கியிருக்க முடியாது.”

கனிந்து காம்பறுந்து தரையில் விழும் விதை சுமந்த பழங்களை கையேந்தி வாங்கிக் கொள்ளும் மண்போல், தன் உடலுக்குள் சூல் கொண்ட பழங்களைப் பத்திரமாய் இறக்கி வைக்க இடம் தேடியலைந்தன கிளிகள். மழை மேகங்களைச் சுமந்துகொண்டு வனமெல்லாம் அலையும் காற்றைப் போல், அலைந்தன கிளிகள். வயசாகி கிழடு தட்டி, நரை திரண்டு, முடியுதிர்ந்து, வழுக்கையாகி, சுருக்கங்கள் கண்டு பொந்துகளாகிப் போன மரங்கள் வனமெங்கும் தேடியும், கண்ணில் படவே இல்லை. நாகங்கள் உலா வரும் தரையில், தன் விதையை விதைக்க முடியாது. மென் பழங்களை மட்டுமே கொத்தும் செவ்வலகினால், மரப்பட்டைகளைக் குடைந்து பொந்துகள் உண்டாக்க முடியாது. கிளிகளின் அலகுகளும் பழுத்துத் தொங்கும் பழங்களும் வெவ்வேறல்ல. வாய்விட்டுக் கதறாமல் ,ஊமையாய்ச் சுற்றி வனங்களை வட்டமிட்டே காலங்கடந்து போனது. இனிமேல் ஒரு நாள் தாமதித்தால் கூட, தன் வம்சம் தரையில் விழுந்து மடிந்து போகும். விதையைப் புஷ்பிக்கும் பூமிக்கு, முட்டையைப் புஷ்பிக்கும் கலை மறந்து போனது. விதைவேறு, முட்டை வேறா? விதைக்குப் பூமி,  முட்டைக்குப் பறவை. அப்படியானால்,  பூமியும் பறவையும் ஒன்றுதானே.

கனத்த வயிற்றின் சூல் விரட்ட வனத்தை மறந்த பெண் கிளி , சிறகடித்துப் பறந்தது வெகு தூரம். சோகத்தில் முகஞ்சுளித்த ஆண் கிளியின் இயலாமை.  மரப்பொந்து கண்ணில் படவேயில்லை. கிழடு தட்டி வைரம் பாய்ந்த பொந்துகள் உள்ள மூத்த மரங்களைக் காணவேயில்லை. மரங்களற்று செடிகளாகிப் போன வனங்கள். பல்வேறு மலர்களின் சௌந்தர்ய  நிறங்களும், மணங்களும் அற்ற வனம். பழங்களின் வாசனைகள் இல்லாத வனம். கூட்டங்கூட்டமாய்த் திரியும் காட்டு மிருகங்களற்ற  வனம். வெகு நேரம் பறந்து இறக்கை ஓய்ந்து, வெட்ட வெளியில் ஒற்றையாய் நின்ற மொட்டைப் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து எட்டிப் பார்த்தன. செத்த பனஞ்சிராய்கள் உள் விழுந்த ஆழப் பொந்து.  பெண் கிளி உள்ளே போய் முடங்கிக் கொண்டது. மொட்டைப் பனையின் உச்சியிலிருந்து ஆண் கிளி கழுத்துருட்டிப் பார்த்தது. கண்ணெட்டும் தூரம்வரை வெட்டவெளி.

மொட்டைப் பனையை ஒட்டிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. ஓயாமல் கேட்கும் வாகன இரைச்சலும் ஹாரன் சத்தமும். பக்கத்திலேயே சாலையோரக் கேண்டீன், இரவு பகல் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்க சத்தமாய்க் கூச்சலிடும் ஸ்டீரியோ சினிமாப் பாடல்களும், புகை கக்கும் உயர்ந்த குழாயும்.  காற்றில் பரவி வரும் விசித்திரமான பிரியாணி வாசனையையும், வாகனங்கள் கக்கிச் செல்லும் டீஸல் பெட்ரோல் புகை நாற்றத்தையும்  சுவாசித்து முகஞ் சுளித்தது ஆண்கிளி. பறந்து வந்த களைப்புத் தீர தாகம் தணிக்கப் பறந்து வெளியில் சென்றது . மலையருவிகள் கொட்ட, சிற்றோடைகளில் பாம்பின் நெளிவாய், சுவை கொண்டு பாய்ந்து வரும் கண்ணாடித் தண்ணீர் தேடி அலைந்தது. தூரத்தில் தெரிந்த குளத்தில் தாழப் பறந்து உற்றுப் பார்த்தது. ஒர்க்ஷாப் கழிவுகள் சேர்ந்து எண்ணெய்ப் படலம் மிதக்கும் கருமை நிறத் தண்ணீரின் நாற்றம் பிடிக்காமல் பறந்து போனது. சாலையோரக் கேண்டீனிலிருந்து வெளியேறி கிடங்கில் பெருகிக் கிடந்த மீன் செதில்கள் மிதக்கும் தண்ணீரில் ஒரு கொக்கு தவமிருக்கக் கண்டதும், கிளி பறந்து போனது. தூரத்தில் நடுக்காட்டில் பம்புசெட் கிணற்றின் உப்புத் தண்ணீர் வாய்க்காலில் தொண்டை நனைத்து,  பறந்து வந்தது.

மொட்டைப் பனையின் உச்சியில் உட்கார்ந்து எட்டிப் பார்த்த பெண் கிளியின் முகத்தில் இளஞ்சூட்டின் வெக்கை படிந்தது. ஆண் கிளி புரிந்து கொண்டது. சாலையோரக் கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸின் ஜன்னல் வழியே எறிந்த பொட்டலங்களில் ஒட்டியிருந்த பிரியாணித் துகள்களையும், புளியோதரைப் பருக்கைகளையும் கொண்டுபோய் இரையாகக் கொடுத்தது. சில நேரம் ஆண் கிளி முட்டைகளுக்குக் காவல் காக்க, பெண்கிளி வந்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு போனது. ஒருநாள் யாரோ எச்சிலையில் சிவப்பாய் பழங்கள் கிடக்க, கிளி சந்தோஷத்துடன் ஆவலாய் கொத்தித் தின்னப் போனபோதுதான் தெரிந்தது. அந்தப் பழம் வேறெந்த உயிர்ப்பிராணிகளுமே தின்னாத, மனிதர்கள் மட்டுமே தின்கிற தக்காளிப் பழமென்று. ஏமாற்றமடைந்த கிளி ஒரு குழந்தை கோபத்தில் விட்டெறிந்த, காய்ந்த ரொட்டித் துண்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. ஒருநாள் பாலிதீன் பையின் கொஞ்சம் மீதம் இருந்த தண்ணீரை யாரோ தூக்கி எறிய, தொண்டை நனையக் குடித்து தாகம் தீர்த்தது. ஒரு வேளை, அண்ணாந்து குடிக்கும் போதோ, அல்லது பிளாஸ்ட்டிக் பையை பல்லால் கடித்துக் கிழிக்கும் போதோ, கை தவறி விழுந்திருக்கலாம் இல்லையெனில் எந்தக் குழந்தையாவது கோபத்தில் தன் அப்பா அம்மா மீது எறிந்து, குறி தவறிக் கீழே விழுந்திருக்கலாம்.

இரவில் எந்நேரமும் கண்களைக் கூச வைக்கும் வாகனங்களில் வெளிச்சங்களும், இடைவிடாது கேட்கும் இரைச்சல்களும், பேயாய் அலறும் ஹாரன் சத்தங்களும், கேண்டீன்களில் அலறும் ஸ்பீக்கரின் ஓலங்களும், தூக்கத்தை மறக்கடித்தன. காய்ந்த பணஞ் சிராய்களின் உறுத்தல் வேறு. ஆனாலும் ரொம்பவும் பயமுறுத்தியது, ஓயாமல் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம்தான். வனத்தில் எப்போதாவது யானையோ சிங்கமோ புலியோ, அல்லது இடியோ மின்னலோ, பெரிய சத்தத்தையும்  பயத்தையும் உண்டுபண்ணும். அந்த பயம், சமயத்தில் இரண்டுநாள் கூட மறக்க முடியாமல் அடிவயிற்றைக் கலக்கும். ஆனால் இங்கேயோ ஒரு நிமிஷம் தவறாமல் பயங்கர சத்தம். சத்தமே வாழ்க்கையென்றாகிப் போயிற்று கிளிகளுக்கு. ஒரு நாள் சில வித்தியாசமான சத்தங்கள் கேட்கவும், இரு கிளிகளும் ஆவலாய் பனைமேல் நின்று எட்டிப் பார்த்தன. தூரத்தில் சில மயில்களும், இன்னும் சில குயில்களும், ஒரு புறாக் கூட்டமும் இருக்கக் கண்டு, சந்தோஷமாய் பொந்துக்குள் போய் முடங்கிக் கொண்டன. படை படையாய்ச் சென்ற சிட்டுக் குருவிக் கூட்டம் மொட்டைப் பனையை ஒட்டிப் பறந்தது.

ஒவ்வொரு தடவையும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும்போது, அதன் தாய் பாஷையான கிகீகீ சத்தத்தைக் குஞ்சுகள் கேட்கவிடாமல், வாகனங்களின் ஹாரன் சத்தம் மேலெழும்பி அமுக்கியது. தொண்டை வலிக்கக் கத்தியும், தன் தாய் பாஷையை குஞ்சுகளின் காதுகளில் கேட்கவைக்க முடியாமல், கிளிகள் இரண்டும் தொண்டை வறண்டு ஓய்ந்து போயின. தன் வம்சத்தின் பாரம்பரிய நிறம் மாறி, குஞ்சுகள் கிளிப்பச்சை நிறமிழந்து செம்பச்சையாய் வளர்ந்தது கண்டு,  தாய்க்கிளிகள் இரண்டும் ஒன்றையொன்று ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டன. தன் குஞ்சுகள் எழுப்பும் சத்தம்,  வாகனங்களின் ஹாரன் சத்தம் மாதிரி ஒலிக்கக் கண்டு,  இரு கிளிகளும் பதறித் துடித்தன. பஸ்ஸின் ஜன்னல் வழி விட்டெறிந்த அரைக் கொய்யாப் பழத்தை ஆசையாய் கொண்டு வந்து ஊட்டியது தாய்க்கிளி. பழங்களின் வாசனையறியாத ருசியறியாத குஞ்சுக்கிளி தூ.. வென்று துப்பி,  உமிழ்ந்தபோது தாய்க்கிளிகள் இரண்டும் கண்ணீர் விட்டு அழுதன.

கொஞ்ச நாள் கழித்து வாகனங்களே வராத நிமிஷ நேர இடைவெளியில், மொட்டைப் பனையிலிருந்து ஹாரன் சத்தம் கேட்கவும், சில பேர் பேய் என்றார்கள். சில வருடங்களுக்கு முன் ஒன்றோடொன்று மோதி நொறுங்கிச் செத்த டிரைவர்களின் ஆவி, பனையில் குடியேறிவிட்டது என்றார்கள். பேய்கள் வாசஞ் செய்யும் மொட்டைப் பனையை தூரோடு வெட்டிச் சாய்த்து, பேய்களின் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதற்கப்புறம் ஜனங்கள் பயமற்று நடமாடினார்கள். காற்றில் சிறகசைத்துப் பறந்து குஞ்சுக் கிளிகளைக் கூட்டிக் கொண்டு வனம் சேர்ந்தன தாய்க்கிளிகள். மரங்கள் குறைந்து செடிகள் நிறைந்திருந்த வனம், இப்போது செடிகள் குறைந்து கொடிகள் நிறைந்த வனமாய்க் காட்சியளித்தது. கிளிகளின் வித்தியாசமான ஹாரன் அலறலில் வனம் நடுங்கியது. அருகருகே வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சிங்கங்களும் புலிகளும் சிலிர்த்துக் கொண்டன. ஒன்றிரெண்டாய் உயிர் வாழும் யானைகள், தும்பிக்கைகள் தூக்கி மிரண்டு நின்றன. வானத்திலிருந்து ஓயாமல் கேட்கும் ஹாரன் சத்தம் வனமெங்கும் எதிரொலித்தது. தன் வம்சத்தின் சாபம் என்றெண்ணிய தாய்க்கிளிகளும், ஓடிப் பதுங்கிக் கொண்டன.

குஞ்சுக்கிளிகள் இரண்டும் வித்தியாசமான மணம், சூழல், இரைகள் கண்டு முகஞ்சுளித்துக் கவலையோடிருந்தன. பழம் கொத்தித் தின்னவும், எதிரியின் கண் முன்னாலேயே மரத்தின் இலையாக மாறி தப்பிக்கவும் தெரியாமல், ஓயாமல் ஹாரன் சத்தத்தை ஒலித்துத் திரிந்தன. ஒருநாள், இச்சி மரத்தின் உச்சியில் நின்று இரண்டு கிளிகளும் பலமாய்க் கத்தின. நடுக்காட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு போவதைப் போல், விடாமல் ஹாரன் சத்தம் கேட்டது. திடீரென்று எதிர்திசையிலிருந்து பக்கத்திலேயே ரயில் வண்டியெழுப்பும் பயங்கரமான ஹாரன் சத்தம் கேட்கவும், கிளிகள் இரண்டும் மௌனியாய் நின்று கவனித்தன. ரயில் வண்டியின் ஹாரன் சத்தம் தங்களை நோக்கி மிக அருகே நெருங்கி வந்தது. மீண்டும் கிளிகள் உற்றுப் பார்த்தன. தங்களை நோக்கி இரண்டு மயில் குஞ்சுகள் கூவிக் கொண்டே வருவதைக் கண்ணுற்றன.

வனமெங்கும் பஸ் ஹாரன் சத்தமும், ரயில் ஹாரன் சத்தமும் விடாமல் கேட்கத் தொடங்கின. சில நாள் கழித்து, நடுவனத்தில் ஆலைச் சங்கின் பயங்கரச் சத்தம் கேட்டது. எல்லாப் பிராணிகளும் உற்றுப் பார்த்தன. குயிலொன்று கூவிக் கொண்டு போன சத்தமது. சில நேரம் மிஷின்கள் ஓடும் ஃபாக்டரிச் சத்தங்கூட கேட்கத் தொடங்கியது. பல்வேறு வாகனங்களின் ஃபாக்டரிகளின் விதவிதமான பயங்கரச் சத்தங்கள் வனமெங்கும் ஒலிக்க, வனம் சுருங்கிக் கொண்டே வந்தது. வரவர வனத்தின் சௌந்தர்யம் குறைந்து, விகாரம் குடி கொண்டது. கடைசியாய், படைபடையாய்ப் பறந்துவந்த சிட்டுக்குருவிகள், ஊசிப் பட்டாசுகளாய் வெடித்துச் சிதறிச் சத்தமெழுப்பி மரக்கிளைகளுக்குள் மறைந்து கொண்டன. தன் செவிப்பறைகள் கிழிந்து ஊமையாகிப் போன வனம், நாளாவட்டத்தில் சுண்ணாம்புக் காளவாசலாய் மாறி, அக்னியாய் தகித்தது. வனத்தைத் தேடியலையும் எஞ்சிய பறவைகள் எழுப்பும் பலவிதமான ஹாரன் சத்தங்கள் மட்டும், விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன,  வனங்களையும் கடந்து.

***

நன்றி : எழுத்தாளர் சோ. தர்மன் / அழியாச்சுடர்கள் இணையதளம்/ராம்பிரசாத்

தவிர்க்க முடியாக் கவிதை !

நடிகையை மணந்த அடுத்தநாளே

ஆஸ்பத்திரியில் அனுமதி

காலையில் கதறியது செய்தி..

சினிமாக்காரியின் சிங்காரத்தை

சின்னத்திரையிலோ பெரியதிரையிலோ

ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்

என்றால் கேட்கிறீர்களா?

அருகில்போய்ப் பார்த்தால்தான்

ஆச்சு என்றால்

ஆம்புலன்சை புக் பண்ணிவிட்டு

அந்தப்பக்கம் போகவேண்டியதுதானே..

**

சாகித்ய அகாடமி : சோ. தர்மன்

”வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்?’ என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய, இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும் ..”

இப்படி ஒரு நேர்காணலில் சொன்னவர் எழுத்தாளர்  சோ. தர்மன். சாஹித்ய அகாடமியின் 2019-க்கான விருது, அவருடைய படைப்பிற்குக் கிடைத்திருப்பது, தமிழின் இலக்கிய வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாழ்க்கைச் சூழலைக் கனிவோடும், பரிவோடும், உள்ளார்ந்த கவலை, அக்கறையோடும்  எழுத்தில் கொண்டுவரும் படைப்பாளி. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியவெளியில் இருப்பவர் .  வணிகநோக்கம் கருதி விவஸ்தையில்லாமல், வேகவேகமாக எழுதித் தள்ளும் இனம் அல்ல . வாசகனின் மனதில் இறங்கும் விதமாக, ஆழமாக , கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு ஒரு நாவல் என்பதாய் வெளிவருபவை  அவரது  புதினங்கள். அவசர உலகில் அடிபட்டுவிடாது தன் சுயம் காக்கும் படைப்பாளி போலிருக்கிறது. நவீனத் தமிழின் ஆரோக்யத்துக்கு  இத்தகைய இலக்கிய செயல்பாடு நல்லது.

நான்குதான் நாவல்கள் இதுவரை. ’கூகை’, ’சூல்’ (2015), ’தூர்வை’ (2017) மற்றும் புதிதாக, ‘பதிமூனாவது மையவாடி’ (2020, அடையாளம் பதிப்பகம், CommonFolks-இல் ஆன்லைனில் வாங்கலாம்). மேலும், கவனம்பெற்ற சில சிறுகதைகளையடங்கிய தொகுப்புகள் – ’சோகவனம்’, ’வனக்குமாரன்’, ’ஈரம்’,  ’நீர்ப்பழி’ போன்றவை.

தமிழ்  இலக்கியச்  சூழலில், ஏன்,  பொதுவாக இந்திய இலக்கியப் பரப்பிலும், எந்தவித முத்திரையும் தன் மீது  குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் இந்தப் படைப்பாளி . டெல்லியில் நடந்த சாகித்ய  அகாடமி விழா ஒன்றில் -’The story of my stories’ என்கிற தலைப்பில் பிறமொழி எழுத்தாளர் முன் ஆங்கிலத்தில் பேசுகையில், இப்படிக் குறித்திருக்கிறார் தர்மன்:   

”(இலக்கியத்தில்) ’தலித் எழுத்து’ என்பதாக ஒன்று கிடையாது. பிறப்பால் நான் ஒரு தலித் என்பதற்காக,  என் எழுத்தை அப்படி வகைப்படுத்திவிடாதீர்கள்”.

கதைகேட்டல் மனித மனதில், எத்தகைய தாக்கத்தை நிகழ்த்துகிறது என்பதை, சொந்த அனுபவம் ஒன்றின் வழி விவரிக்கிறார் தர்மன்: ” சிறுவயதில் தினம் தூங்குவதற்குமுன், என் இரண்டு மகன்களுக்கும் நான் கதை சொல்வது வழக்கம். நானில்லாதபோது என் மனைவி சொல்வாள். ஒருநாள் எங்கள் இளைய மகன் விபத்துக்குள்ளானான். மருத்துவமனையில் ‘கோமா’விற்குப் போய்விட்டான். மூன்றாம் நாள், டாக்டர்கள் கைவிரித்த கையறுநிலை. அப்போது என் பாட்டி, பையனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். படுக்கையருகே நின்று பார்த்துவிட்டு, என்னை தைர்யப்படுத்தும்விதமாய் சொன்னார்: ’கவலைப்படாதே.. 50-60 வருடங்களுக்கு முன்பாக ஒருநாள், நானும் உன் தாத்தாவும் வயலில் உழுதுகொண்டிருந்தோம்.  திடீரென இடி, மின்னல், புயல் தாக்கியது. மின்னல், உருக்கிய தங்கப்பாகென கீழ் நோக்கிப் பாய, நாங்கள் இரண்டு மாடுகளையும் இழுத்துக்கொண்டு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினோம். ஆனால் ஒரு பயங்கர மின்னல், இரண்டு காளைகளையும் வீழ்த்திவிட்டது. நாங்கள் இருவரும் மயக்கமுற்று சரிந்துவிட்டோம்…” அவர் பேசிக்கொண்டிருக்கையில் என் மகன் கண்விழித்தான். நான் ஆச்சரியப்பட்டு மேலும் கதையைத் தொடரச் சொன்னேன். இறுதியில், படுக்கையில் எழுந்து உட்கார்ந்துவிட்ட என் மகன், ’இன்னொரு கதை சொல்லு’ என்றான்!”

தர்மனின் கூகை நாவல், ’The Owl’ என்கிற தலைப்பில் ‘ஆக்ஸ்ஃபர்டு இந்தியா’-வினால் (Oxford University Press, India)  ஆங்கில மொழியாக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்திலும் வந்திருக்கிறது, ‘மூங்கா’ என்ற தலைப்பில்.

2015-ல் வந்த ‘சூல்’ நாவல்தான் இவருக்கு சாஹித்ய அகாடமியை இப்போது வென்று தந்து, நாட்டில் ‘மற்றவர்களையும்’ கொஞ்சம் கவனிக்கவைத்திருக்கிறது. ஏற்கனவே ‘சுஜாதா விருது’ வாங்கிய புதினம்.  சூல் நாவலின் பின்னணிபற்றி ஒரு நேர்காணலில் தர்மன் இவ்வாறு கூறுகிறார்:

”நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் நிலத்தினை தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போட்டுவிட்டு, கோவில்பட்டியில் வந்து உட்கார்ந்துள்ளேன். இது தான் இந்த நாவலை எழுதத் தூண்டுதலாக இருந்தது. இந்த நாவலுக்கு ‘சூல்’என்று பெயர் வைத்தேன். இதற்கு அர்த்தம், நிறைசூலி.  ஒரு உயிரை உற்பத்தி பண்ணக்கூடியது. ஒரு கண்மாய்,  நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளைகள் என ஏராளமான உயிர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். இவை அத்தனையும் சேர்த்தது தான் சூல். ஒரு தாய் பிரசவிக்கும் வலியாகத்தான், அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளேன்.  இந்த நூலில் எட்டயபுரம் ’எட்டப்ப மகாராஜா’ குறித்து எழுதியுள்ளேன். அந்தக் காலத்தில் கண்மாய்களை உருவாக்கிக் கொடுத்தது அவர்தான். அவரைப்போல் கண்மாய்களை உருவாக்கியதும், விவசாயிகளைப் பாதுகாத்ததும் யாருமில்லை. ஆய்வு செய்தவர்களுக்குத்தான் இது தெரியும். சூல் நாவலுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்தனர். அதே போல் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. தற்போது மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதினை எனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.”

மேலும் சொல்கிறார்: “தமிழகம் அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் கோவில்பட்டியில் உள்ளனர். சர்வதேச விருது, சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களும் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் எங்களது குரு கி.ரா தான். நாங்கள் எழுத்தாளர்களாக ஆனதும், எங்களை தட்டிக்கொடுத்து வளர்த்ததும், எழுத்தை சொல்லிக்கொடுத்ததும் எங்களது ஆசான் கி.ராஜநாராயணன் தான். அதனால் தான் கோவில்பட்டியை மையமாக வைத்து விருதுகள் கிடைக்கக் காரணம்.”

புதிதாக வந்திருக்கும் தர்மனினின் ‘பதிமூனாவது மையவாடி’ நாவல்பற்றிக் குறிப்பிடுகையில், எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: ’சோ.தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ’வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்னைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன், கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்’. தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில், இந்த நாவலின் கதைக்களன் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையை உண்டுபண்ணாதிருக்கவேண்டுமே எனும் கவலையும், பக்கவாட்டிலிருந்து எழுகிறது.

சோ. தர்மனின்  சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போமா?

தகவல்களுக்கு நன்றி: இந்துதமிழ், விகடன்.காம், நியூஸ்18.காம்(தமிழ்).

**

BCCI Contracts – பெண் என்றால் இளப்பந்தானா ?

 

இந்திய கிரிக்கெட் போர்டு,  இந்திய வீராங்கனைகளுக்கான  ஒப்பந்தங்களை, பெரிய மனசு பண்ணி அறிவித்திருக்கிறது. (நேற்றைய பதிவில் ஆண்வீரர்களுக்கான ஒப்பந்தங்கள்பற்றிப் பார்த்தோம்). பெண்களுக்கான காண்ட்ராக்ட் தொகைகளைப் பார்த்தால்…  ’ஆணா, பெண்ணா.. சரித்திரம் ?’  என  எல்.ஆர்.ஈஸ்வரிபோல் கேட்கத் தோன்றுகிறது…

Smriti Mandhana, Indian Women’s ODI Captain

மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஸ்ம்ருதி மாந்தனா, ஹர்மன்ப்ரீத் கௌர், பூனம் யாதவ் போன்ற சர்வதேச ஸ்டார்களைக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள் அணி, உலகின் மதிக்கப்படும் ஓரிரண்டு அணிகளில் ஒன்று. இந்திய வீராங்கனைகளில் சிறந்தவர்களை, கிரிக்கெட் போர்டு 2020 – க்காக ஒப்பந்தம் செய்துள்ளது. :

Grade A : ஸ்ம்ருதி மாந்தனா, ஹர்மன்ப்ரீத் கௌர், பூனம் யாதவ் (இதில் ஸ்ம்ருதி இந்திய பெண்கள் அணியின் ஒரு-நாள் கேப்டன், ஹர்மன்ப்ரீத், இந்திய டி-20 அணியின் கேப்டன். பூனம் டாப் பௌலர்.)

Grade B : மித்தாலி ராஜ் (இந்திய டெஸ்ட் கேப்டன்), ஜூலன் கோஸ்வாமி, ஏக்தா பிஷ்த், ஷிகா பாண்டே, ராதா யாதவ், தனியா பாட்டியா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்.

Grade C : வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹேமலதா, மான்ஸி ஜோஷி, பூஜா வஸ்த்ராகர், ராஜேஷ்வரி காய்க்வாட், ஹர்லீன் தியோல், பூனம் ரௌத், ப்ரியா பூனியா, ஷெஃபாலி வர்மா (வயது 15, இந்தியாவின் புதிய அதிரடி பேட்ஸ்மன்), அனுஜா பாட்டீல், அருந்ததி ரெட்டி.

Grade A – தலா ரூ.50 லட்சம். Grade B – தலா ரூ. 30 லட்சம்.  Grade C – தலா ரூ.10 லட்சம்.

ஹேமலதா, இன்னொரு
தமிழ் முகம்

ஆண்களின் விஷயத்தில்  மேற்கண்ட தொகைகள் முறையே, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ. 1 கோடி ! இப்படியெல்லாம் ஒப்பிடுவது தவறு என எடுத்த எடுப்பிலேயே பலர் சொல்லிவிடுவார்கள். அதற்குக் காரணமும் உண்டு. ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளின் சர்வதேசத் தரம் வேறு, ஒரு வருடத்தில் விளையாடுகிற போட்டிகளின் எண்ணிக்கை, ஐசிசி டூர்னமெண்ட்கள் எனக் கடுமையான நிகழ்ச்சி நிரல், சவாலான பயணங்கள் என்றெல்லாம் நெருக்கடியான சூழலில்தான் ஆண்வீரர்கள் ஆடுகிறார்கள். இருந்தும் ஆணுக்கு 5 கோடி, பெண்ணுக்கு 50 லட்சம் என்பது அபத்தமாகத் தெரிகிறது. அதுவும் Group C வீராங்கனைகளுக்கு வருஷத்துக்கு வெறும் 10 லட்சம் ரூபாய்தான் என்பது மிகமிகக் குறைவு. அவர்கள் சர்வதேசத் தரத்திற்கு வெகு அருகில் இருப்பவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அடுத்த வருடத்தில் இருந்தாவது வீராங்கனைகளுக்கான ஒப்பந்தத் தொகைகளை BCCI கணிசமாக உயர்த்தவேண்டும். கங்குலி & கோ கவனிக்கலாம்..

**

BCCI – புதிய ஒப்பந்த வீரர்கள்

 

வருடம் 2020-சீசன்களில் வெவ்வேறு வகை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) இன்று (16/01/2020) அறிவித்தது. Grade A+, Grade A, Grade B, Grade C என வீரர்களை அவர்களின் திறன், முந்தைய சாதனை, தற்போது காட்டிவரும் ‘ஃபார்ம்’ போன்றவற்றின் அடிப்படையில், வகைமைப்படுத்துவது வழக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் :

Grade A+ வீரர்கள் : விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா -மூன்றே மூன்று!

Grade A : பேட்ஸ்மன்கள்: (ச்)செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த்.  

பௌலர்கள்: ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா

Grade B : பேட்ஸ்மன்கள்: வ்ரித்திமான் சாஹா, ஹர்தீக் பாண்ட்யா, மயங்க் அகர்வால். பௌலர்கள் : உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல்.

Grade C : பேட்ஸ்மன்கள் : ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே. கேதார் ஜாதவ். பௌலர்கள்: வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, தீபக் சாஹர், ஷர்துல் டாக்குர்

இவர்களில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு முதன் முறையாக இந்த வருடம் BCCI Central Contract கிடைத்துள்ளது. Grade A-ல் காணப்படும் ரிஷப் பந்த்,  Grade B -க்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும்.  மாறாக, Grade C  -ல் இருக்கும் ஹனுமா விஹாரிக்கு  Grade B தரப்பட்டிருக்கலாம். 

மேற்கண்ட வருடாந்திர காண்ட்ராக்ட்களின்படி,  யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கும் BCCI ? இதோ:

’A+’ : ஒவ்வொருவருக்கும் ரூ. 7 கோடி

‘A’  :  தலா ரூ. 5 கோடி

‘B’  :  தலா ரூ. 3 கோடி  

‘C’  :  தலா ரூ. 1 கோடி

கடந்த வருடம்வரை Grade ‘A’ -ல் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, இந்த வருட Central Contract List-லிருந்து தூக்கிவிட்டது BCCI.  உலகக்கோப்பைக்கு அப்புறமாக அவர் எந்த மேட்ச்சிலும் விளையாடவில்லை. விதம்விதமான விளம்பரப்படங்களுக்கான ஷூட்டிங்குகளின் கால அட்டவணைப்படி அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார் மனுஷன்! இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கவிருக்கும் 2020 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மஞ்சளாய்  இறங்கி ஆடுவார். கவலை வேண்டாம் ’தல’ ரசிகர்களே!

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா ?

வந்திருப்பது வெஸ்ட் இண்டீஸோ, ஸ்ரீலங்காவோ அல்ல என்பது முதல் சில ஓவர்களிலேயே விராட் கோஹ்லியின் இந்திய அணிக்குத் தெரியவரும்! சதமடிப்பது, ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்துவது, சிக்ஸர்களில் ரெகார்ட், ஐசிசி டாப்-ரேங்கிங் என்பதெல்லாம் பழையகதையாகிவிடும். கவனமாக ஆடாவிட்டால், கந்தல்தான் இந்தியா என்கிற நிதர்சனம் எதிரே…

ஒருநாள் தொடர் ஆடுவதற்காக ஆரோன் ஃபின்ச்சின் (Aaron Finch) தலைமையில் இந்தியா வந்து, இன்று முதல் போட்டியை மும்பையில் ஆடும் ஆஸ்திரேலிய அணி முழுபலத்துடன் இருக்கிறது. வெகுநாட்களுக்குப்பின் அவர்களுக்கு வேண்டிய காம்பினேஷன் அமைந்திருக்கிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், லபுஷான் (Marnus Labuschagne), ஸ்மித் போன்ற சிங்கங்கள். பௌலிங்கில் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற வேகப்புயல்களோடு ஆஷ்டன் ஏகார் (Ashton Agar), ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa) போன்ற திறன்காட்டும் ஸ்பின்னர்களும்.  இந்திய மீடியா சில மாதங்களாக ஆஹா.. ஓஹோ.. எனக் கொண்டாடிவரும் இந்திய பேட்டிங்கின் முதுகைப் பிரிக்க ஆஸ்திரேலிய பௌலர்களால் முடியும். இந்தியா கவனித்து சரியாக ஆடாவிட்டால் தொடர் ஆஸ்திரேலியாவுக்குப் போய்விடும்.

இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்களில் ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த் ஆகியோர் பெரும் அழுத்தத்துடன் விளையாடவேண்டியிருக்கும். இளம் வீரர்களான ஷ்ரேயஸும், ரிஷப்பும் இங்கே நிரூபித்தே ஆகவேண்டும் தாங்கள் யார் என்பதை. ஆஸ்திரேலிய வேகத்தில், ஆரம்ப விக்கெட்டுகள் எளிதில் சரியும் வாய்ப்பு அடிக்கடி வரும் என்பதால், பின் வரிசையில், ஜடேஜாவுக்கு நிறைய வேலை இருக்கிறது. பௌலர்களில் பும்ரா, ஷமி, டாக்குர், குல்தீப் யாதவ் எப்படி ஆஸ்திரேலியர்களை சமாளிப்பார்கள் எனப் பார்க்க ரசிககர்கள் ஆவலாகிறார்கள். பும்ரா காயத்திலிருந்து மீண்டதற்குப்பின்,  முதல் கடினமான தொடரை ஆடவிருக்கிறார். ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா இல்லாத நிலையில், ஷிவம் துபே (Shivam Dube) ஆஸ்திரேலிய தாக்குதலைத் தாக்குப்பிடிப்பாரா? சாதித்தால் புகழ். இல்லையேல் வாசல்தான்.

An exciting one-day series is here. பட்டாசுகள் வெடிக்கும். எந்தப் பக்கத்திலிருந்து என்பதைத்தான் பார்க்கவேண்டும்!

**

பாரசீகம்: வரப்போகும் யுத்தத்தின் முன்னுரை ?

எண்ணெய் வளமிக்க பாரசீகப் பிரதேசம் புகைந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் ஈரானிய ஜெனரல் சுலைமானி அமெரிக்கர்களால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, 7 ஜனவரியின் அதிகாலை  ஈரான், ஈராக்கில் நிலைகொண்டுள்ள இரண்டு அமெரிக்க வான்படை தளங்களை ஏவுகணைகளால் தாக்கியிருக்கிறது. தாக்கிவிட்டு சும்மா இருந்ததா? வாயை உடனே பெரிசாகத் திறந்து தெரியப்படுத்தியது: ’சுலைமானியின் வீரமரணத்திற்கு, எதிரியைக் கடுமையாகப் பழிவாங்கிவிட்டோம். சுமார் 80 அமெரிக்கத் தீவிரவாதிகள் (அமெரிக்கப் படைகளை இனி அப்படித்தான் ஈரான் அழைக்குமாம்!) தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.’ கூடவே ஈரானிய ’ஸுப்ரீம் லீடர் ’அலி கமேனியின் அறிவிப்பும்: ’அமெரிக்காவின் கன்னத்தில் விழுந்தது அறை! ..’ Supreme ‘Cat and Mouse’ game!

அமெரிக்கா, இதுபோன்ற ஒரு எதிர்விளைவை, எதிர்பார்த்தே இருந்தது. தாக்குதலோ ஈராக்கின் மண்ணில் நிகழ்ந்துள்ளது. ஈராக் என்ன சொல்கிறது? தங்களுக்கு ஏவுகணைத் தாக்குதல்பற்றி  ஈரான் முன்னறிவிப்பு செய்ததாகவும், தானும் அதை ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் வான்படைத் தலைமைக்கு, தாக்குதலுக்கு முன்னேயே தெரியப்படுத்தியதாகவும் இப்போது கூறியிருக்கிறது. அங்கிருந்த தனது முக்கிய அதிகாரிகள்/ வீரர்களை வேறுபகுதிக்கு அமெரிக்கா உடனே மாற்றியிருக்கும். சாவு எண்ணிக்கை/சேதம் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கலாம். ஈரானிய தாக்குதலுக்கு பதிலாக, ‘All is well ..!’ என்று ’கூல்’-ஆக ட்வீட்டியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.  ‘கூலாக’ இருப்பது அவரது சுபாவமில்லை என்பது உலகறிந்ததே. பின்னணியில், ஏதாவது ரகசிய ராணுவ/உளவு ஏற்பாடுகள் பென்ட்டகனில் (Pentagon) நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். எல்லாமும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டியதில்லையே.

ஈரானிய வெளியுறவு மந்திரி ஜாவத் ஜரீஃப் (Javad Zarif) தன் அறிக்கையில் : ’எங்கள் (ராணுவ) உயர் அதிகாரிகள், வீரர்கள் மீதான கோழைத்தனமான தாக்குதலுக்கு பதிலாக, எங்களின் தற்காப்பிற்காக,  ’போதிய அளவில்’ எதிரிகளைப் பழிவாங்கிவிட்டோம். மேற்கொண்டு, போராக இது உருவெடுப்பதை ஈரான் விரும்பவில்லை’ என்றிருக்கிறார்.   எதிரியைத் திருப்பி உதைத்துவிட்டதாக எங்கள் மக்களுக்கும், இனக்குழுக்களுக்கும் காண்பித்துவிட்டோம். போருக்கு நாங்கள் தயாரில்லை’. ஈரானின் ராணுவ நிலைப்பாடு இது என்பதே ராஜீய வெளியில் இதன் மறைமுகப் பொருள்.

அமெரிக்காவும் இந்த ‘அளவான எதிர்த்தாக்குதலில்’ ஒருவேளை, திருப்தியுற்றிருக்குமோ? மேற்கொண்டு நிலைமை மோசமாகாதிருப்பதே இப்போதைக்கு நல்லது என நினைத்திருக்குமோ?  சற்றுமுன் கிடைத்த அமெரிக்கத் தரப்பு ஆய்வின்படி, ஈரானிய ஏவுகணைகள் (மொத்தம் 22) அமெரிக்க தளங்களுக்கு சற்றே வெளியேயுள்ள நிலப்பரப்பைத்தான் தாக்கியிருக்கின்றன. ஈரானால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு ,மிகக்குறைவான இழப்பை அமெரிக்காவுக்கு விளைவிக்கும் வகையில், இது நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறது நிபுணர் குழாம். ஏன் இப்படி? ஈரான் பதிலடி கொடுத்ததாகக் காண்பிக்க விரும்பியதே தவிர, போராக இது மாறுவதை அது நினைத்தும் பார்க்கமுடியாத நிலை, அதன் ’வாய்ச்சவடால்’ வழக்கம்போல் உச்சத்தில் இருந்தபோதிலும். அமெரிக்காவும் ‘நாம் எதிரியின் முக்கியமான ஆளைப் போட்டுத் தள்ளிவிட்டோம். இவன்க  ஏதோ ரெண்டு ஏவுகணைகளை வீசிவிட்டுப்  போய்த் தொலையட்டும். இதுவே இப்போதைக்கு சரி’ என நிலைப்பாடு எடுத்திருக்க வாய்ப்புண்டு.  

புதிதாகப் பதவியேற்றிருக்கும், சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் வலதுகையான,  (ஜான்சனின்) பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு என்ன? ‘சுலைமானி கொல்லப்பட்ட பின்னணியில் நாங்கள், எங்களது கூட்டாளி அமெரிக்காவோடு ‘ஒரே பக்கத்தில்’ இருக்கிறோம்’ என்றது முதலில். ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின், ‘தேவைப்பட்டால் நொடியில் பாரசீக வளைகுடாவில் போய் இறங்க எங்களது படைகள் தயார்’ என்கிறது பிரிட்டன். இத்தகு சூழலில், ஈரானின் ஜென்ம விரோதியான இஸ்ரேல், இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறது. ‘நாங்கள் தாக்கப்பட்டால், எதிர்விளைவுகள் கடுமையாயிருக்கும்.’ தினம்தினம் முஷ்டி உயர்த்துதல், சூடான வார்த்தைப் பிரயோகங்கள்..

ஒரு பக்கம் ’போரை நாங்கள் விரும்பவில்லை’ என அதிகாரபூர்வ அறிக்கைகளை, கூட்டுசேரா நாடுகள் மற்றும் ஐநா-போன்ற அப்பாவி அமைப்புகளுக்குப் போக்குக்காண்பிப்பதற்காக விடுவதும், இன்னொரு பக்கம் – ‘வரட்டும்; விடமாட்டோம். அழித்துவிட்டுத்தான் மறுவேலை!’ என்பதுமாய் ராணுவ வலிமை மிக்க நாடுகள் உறுமிப் பார்ப்பதும் – நல்லதற்கில்லை. பதற்றம் அதிகரிக்கவே வழிகோலும். ஏற்கனவே மத்திய கிழக்கில், சில வருடங்களாக நடந்துவந்த போர்களினால் சுமார் 2 1/2 கோடி ஏமன் நாட்டவரும், 1 1/4 கோடி சிரிய மக்களும், சிதறி வெளியேறி, வாழவழியின்றி தவித்தலைகிறார்கள். ஒரு பக்கம் செல்வக்கொழிப்பைக் காண்பிக்கும் மத்திய கிழக்கு, மறுபக்கத்தில் அகதிகளின் பெரும் கூடாரமாக வேகமாக மாறிவருகிறது. கச்சா எண்ணெயை வைத்தோ,  ஏகாபத்திய ஆசைகளினாலோ அல்லது எதிரும் புதிருமான இஸ்லாமிய இனக்குழுக்களின் ஆதிக்க முயற்சிகளினாலோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ அங்கே ஒரு யுத்தம் வெடிக்கலாம். அப்படி நிகழ்ந்தால் அது, பாரசீக வளைகுடா மக்களின் நீண்டகால அமைதிக்கும், வாழ்விற்கும் கடும் குந்தகம் விளைவிப்பதிலேதான் போய் முடியும். அத்தகைய போர் மேலும் பரவாது, வளைகுடாப் பிரதேசத்துடன் அமுங்கிவிடும் என்கிற உத்தரவாதம் ஏதும் அதில் இருக்கமுடியாது.

**

பாரசீக வளைகுடாவில் பதற்றம்

சர்வதேச அமைதி இந்த புத்தாண்டில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது பெரியதொரு கேள்விக்குறியாகி உலகின் எதிரே நிற்கிறது. புத்தாண்டு நல்லபடியாக கடக்கவேண்டுமே எனப் பிரார்த்தித்து, உலகின் பலபகுதிகளில் இன்னும் கொண்டாட்டம் தொடரும் வேளையில், 2020-ன் மூன்றாவது நாளிலேயே புதிய போருக்கான அச்சாரம் வைக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

Persian Gulf Region

 ராஜீய, ராணுவ சிக்கல்கள் நிறைந்த பாரசீக வளைகுடாப் பகுதியில்  (ஈரான், ஈராக், சவூதி அரேபியா மற்றும் சுற்றுப்புறம்-Persian Gulf,) போருக்கான முஸ்தீபுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. 29 டிசம்பர், 19 அன்று ஈராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகம், ஈரானின் ஷியா ஆதரவுபெற்ற வன்முறையாளர்களால், உள்நாட்டு இயக்கத்தினர் உதவியுடன் தாக்கப்பட்டது. தாக்குதல் என்றால் கல்லெடுத்து வீசுதல் அல்ல. கட்டுக்குள் வராத திட்டமிட்ட வன்முறைச் செயல்கள். தூதரக சுற்றுச்சுவர் அதன் மின்பாதுகாப்பு அமைப்புடன் வன்முறைக் கும்பலால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. உள்ளே இருந்த அமெரிக்க படைவீரர்களில் சிலரும், தூதரக அலுவலர்களும்  கடுமையாகக் காயப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஈராக்கிய போலீஸார், துணைராணுவம் அப்போது எங்கே இருந்தனர்? தன் நாட்டில் அதிகாரபூர்வமாக இயங்கும், அந்நிய தூதரகத்தினரின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பல்லவா? ஒரு நாட்டின் தூதரகம் திட்டமிட்டுத் தாக்கப்பட்டால், அப்போது சம்பந்தப்பட்ட அரசு போதிய பாதுகாப்பு அளிக்காது ஆனந்தித்துக்கொண்டிருந்தால், அது அந்த நாட்டை நேரிடையாக வம்புக்கிழுப்பதற்கு, அதாவது போருக்கு அழைத்ததற்கு ஒப்பாகும். அதுவும் அமெரிக்கா போன்ற வல்லரசின் தூதர் அலுவலகத்தை, ஆயுதம் தாங்கிய குழுக்களை பயன்படுத்தித் தாக்கினால், தாக்கிய மக்களைக்கொண்ட நாடு அல்லது இயக்கம் தன் தலையில் தானே தீவைத்துக்கொண்டதிற்கு சமம்.  அத்தகைய ராஜீய, ராணுவ முட்டாள்தனம்தான் அந்தப் பகுதியில் இப்போது நடந்தேறியிருக்கிறது. ட்ரம்ப் போன்ற ஒரு சண்டைக்கோழியை ஜனாதிபதியாகக் கொண்ட ஒரு வல்லரசு, நகம் கடித்துக்கொண்டு ரோட்டோரமாய்  உட்கார்ந்திருக்கும் அல்லது ஸெல்ஃபோனில் டிக்-டாக் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் என எதிர்பார்த்ததா ஈரானும், ஈராக்கும் ? அதுவும் ஏற்கனவே ஈரான்-அமெரிக்க ராஜீய உறவுகள் சீரழிந்துகொண்டிருக்கும் இக்கட்டான ஒரு சூழலில்?

ஜனவரி 3 அதிகாலையில் ஈரானிய புரட்சிப் படையின் (Iranian Revolutionary Guard Corps) குத்ஸ் பிரிவின் (Quds Force)  தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி (Qassem Suleimani), ஈராக்கில் அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.   கூடவே ஐந்து சிறப்புப்படை வீரர்களும், ஈராக்கிய ஷியா-சார்பு துணைராணுவத் துணைதளபதியும். அவர்கள் பாக்தாத் விமானநிலையத்தில் அந்த அதிகாலையில் விமானத்திலிருந்து இறங்கி நடக்கையில், அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் (Drone) விமானத்தினால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர் என்கின்றன செய்திகள். அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில், அமெரிக்கா தன் தற்காப்பிற்காக, இதனை நிகழ்த்தியதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  இதற்கு ராஜீயவெளியில்  என்ன அர்த்தம்? ஈரானுக்கான மெஸேஜ் இது: ’சீண்டாதே.. ஒழித்துவிடுவேன்..!’ 

அமெரிக்கா இப்படித் திட்டமிட்டு, தன் எதிரியின் ஒரு பேர்போன மிலிட்டரி ஜெனரலைக் குறிவைத்து அழித்திருப்பதின் பின்னணியில் நிறைய கதை இருக்கிறது – மத்திய கிழக்கின் பயங்கர அரசியல், ராணுவ முஸ்தீபுகள், வல்லரசுகளின் ஆதிக்க முயற்சி என எழுத ஆரம்பித்தால் இது ஏதோ ஒரு ரிஸர்ச் பேப்பர் அளவுக்குப் போய்விடும்! சுருக்கமாகச் சொல்ல முயற்சிப்போம் இங்கே.

ஈரான் எனப்படும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ’Supreme Leader of the Iranian Revolution’  எனப்படும் அலி கமேனி (Ali Khamenei).  (1979-இல் இதற்குமுன் மன்னராட்சியில் இருந்த இரான் நாட்டை இஸ்லாமியக் குடியரசாக மாற்றிப் பதவியேற்ற இஸ்லாமிய மதகுரு அயத்தொல்லா கொமேனியின் வழி வந்தவர்). அலி கமேனி 1989-லிருந்து இரானிய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேலுடன், ஈரான் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்குமான மூலகாரணிகளில் ஒருவர் எனலாம். ஏற்கனவே உள்நாட்டுக் கலகம், ஷியா-சன்னிப்பிரிவுகளிடையே சண்டைகள், தீவிரவாதம் என சிதைந்துபோயிருக்கும் ஈராக், சிரியா நாட்டின் அமைதியற்ற பகுதிகளில், ஈரானிய செல்வாக்கை அதிகப்படுத்தவும், அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக அந்தப் பகுதி மக்களைத் தூண்டவும் என ஈரானியத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்தான் ஜெனரல் சுலைமானி. ஈரானின் ’சுப்ரீம் லீட’ருக்கு அடுத்தபடியாக, நாட்டின் ஜனாதிபதியைக் காட்டிலும், செல்வாக்கும் மதிப்பும் பெற்றிருந்தவர்.

மத்தியகிழக்கில் அமெரிக்கர்களுக்கு எதிரான அரசியல் வன்முறைப் போராட்டங்கள், அமெரிக்க இலக்குகளின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் மையப்புள்ளி இந்த சுலைமானிதான் என அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. சுலைமானின் ஏற்பாட்டின்படிதான் ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது என்றும்,  லண்டன், டெல்லி போன்ற நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுலைமானின் ரத்தக்கறைபட்ட கை இருந்தது என்றும் விளக்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர். சுலைமானி சில மாதங்களாகவே அமெரிக்கர்களால் குறிவைக்கப்பட்டிருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. 

’அமெரிக்க நலன்’ என்கிற பெயரில், அமெரிக்க தளபதிகளுடன் ராணுவ கணக்குகளை சரிபார்த்து வேகமாக முடிவெடுக்கும் இயல்புடையவர் அதிபர் ட்ரம்ப். அதன் நேரடி ராணுவ விளைவுதான் இப்போது மத்தியகிழக்கில் வெடித்திருக்கும் புதிய பதற்றம். பதிலுக்கு, ஈரானும் கடுமையாகப் பழிவாங்கப்போவதாக அறிவித்துள்ளது. சொன்னபடி அதுவும் ஏதாவது செய்யும். தற்கொலைப்படைத் தாக்குதல்கள், நேரிடையான தாக்குதல் என ஷியா-சார்பு ஆயுதந்தாங்கிய குழுக்கள் மூலம் தீவிரமாக முனையும். அவற்றை ஒடுக்குகிறேன் பேர்வழி என சொல்லிக்கொண்டு, அமெரிக்கத் தரப்பிலிருந்து ’ட்ரோன்’, விமானப்படை தாக்குதல்கள் என வேகவேகமாக அரங்கேறும். Crossfire-ல் சிக்கிய வளைகுடாப் பகுதியின் அப்பாவி மக்கள் பலரும் பரிதாபமாக அழிவைச் சந்திப்பார்கள்.  ஏற்கனவே ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் ராணுவ ஈடுபாடுகளோடு,  மேலும், மேலும் அழிவிற்கான பாதையிலேயே சம்பந்தப்பட்ட நாடுகளை இப்போது உருவாகிவரும் நெருக்கடிநிலமை இட்டுச்செல்லும்.

சமீபகால ஈரான்-அமெரிக்க பகைமை, மூலைக்குமூலை பரவி பயமுறுத்தும் பயங்கரவாதம் என பர்ஷிய வளைகுடாப் பகுதியின் யுத்தவிளையாட்டில் புட்டினின்(Vladimir Putin) ரஷ்யா,  ஒரு முக்கியமான ப்ளேயர். கடந்த சில நாட்களாக வாயைத் திறக்கவில்லை. காரியம் செய்யும் நிச்சயம்! இந்தியாவும், சீனாவும் நேற்று (3-1-2020) ஈரானையும், அமெரிக்காவையும் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொண்டிருக்கின்றன. சீனா, குறிப்பாக பதற்றமான வளைகுடாப் பகுதியில், அமெரிக்கா நிதானமாக செயல்படவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவுக்கு, சீனாவின் புத்திமதியா தேவை? ட்ரம்ப் மேலும் அதிகப்படியான அமெரிக்க வான்படைகளை வளைகுடாவுக்குள்  அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அந்த ஆபத்தான பிரதேசத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சுற்றுப்புற நாடுகள் மேலும் ராணுவரீதியாக நெருக்கப்பட்டு, பதற்ற  நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் பெருமளவு தாக்குதல்கள் இருதரப்பிலும் நிகழலாம். கட்டுக்கடங்காமல் போகலாம் –  ’நாங்கள் போரை விரும்பவில்லை’ என அமெரிக்க அதிபர் சொன்னபோதிலும்.

முழு ஆண்டை விடுங்கள், இந்த ஜனவரியே சரியாகப் போகுமா என்று கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது இப்போது பாரசீக வளைகுடாவின் நிலை.

**

சுஜாதாவை மிரட்டிய பூனை!

 

புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரம் முன்பு வரை, அதாவது டிசம்பர் 31 இரவில் சென்னையில் புத்தகக் கடைகள் திறந்திருந்ததோடு, 10%, 20% தள்ளுபடியோடு புத்தகங்கள் விற்கப்பட்டன என்கிறது 2020-ன் முதல் நாள் காலை இதழ் ஒன்று. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து முடிந்த பத்துநாள் புத்தக விழாவில் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் புத்தகங்களை வாசகர்கள் வாங்கிச்சென்றார்கள் எனவும் படித்தேன். எதிர்பார்த்ததைவிட ரூ.10 லட்சம் அதிகமான மதிப்பில், வெவ்வேறு வகைப் புத்தகங்கள் வாசகர்களைக் கவர்ந்ததோடு,  வாங்கவும் வைத்திருக்கின்றன. எப்போதும் ஃபோன் நோண்டி, எதிர்வரும் முகம் பார்க்கா ஒரு விசித்திர காலகட்டத்தில், இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வு. கிட்டத்தட்ட சாதனை. மேன்மேலும் வாசிப்புப் பழக்கம் – அது இணையத்திலோ,  கிண்டிலிலோ, அச்சுவடிவத்திலோ-  தமிழரிடையே வளர்ந்து செழிக்குமாக! சரி, விஷயத்துக்கு வருவோம்:

சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவுக்கு, அவரது எண்ணற்ற வாசகர்களில் சிலரோடு எதிர்பாராத சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அகாலநேரத்தில் வீட்டுக்குவந்து கதவைத் தட்டிய வாசகரும் உண்டு என ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். இது கொஞ்சம் வேறுமாதிரி.  சுஜாதாவின் எழுத்திலேயே பார்ப்போம் :

”ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தை சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னைவரை பிருந்தாவனில் பயணம் செய்தபோது, ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாங்க முடியாமல், அரக்கோணம் தாண்டியதும் கேட்டேவிட்டேன்.

“உங்களுக்கு ஏதாவது பேசணுமா ?”

“இல்லை” என்று தலையாட்டினார்.

ஒருவேளை ஊமையோ என்றால்,  ஜிலேபிகாரரிடம் சில்லறை கேட்டு வாங்கும்போது பேசியிருக்கிறார்.

“ஏன் என்னையே பார்த்துண்டிருக்கீங்க ?”

“நீங்கதானே இந்தக் கதையெல்லாம் எழுதறவர் ?” என்று கையில் மானசீகமாக எழுதிக் காட்டினார்.

“ஆமாம்…” என்றேன்.

“அந்தப் பூனையை அந்தக் கதையில, ஏன் ஸார் சாகடிச்சீங்க ?”

“எந்தப் பூனையை, எந்தக் கதையில ?”

“உங்க கதைகளைப் படிக்கறதையே அதுக்கப்புறம் நிறுத்திட்டேன்.”

“எந்தப் பூனை ?”

“ஒரு படப்பிடிப்பில் கறுப்புப் பூனை…”

எனக்குச் சட்டென்று கதை ஞாபகம் வந்தது. படப்பிடிப்புக்காக எடுத்துச் சென்ற பயிற்சி பெற்ற பூனை, வில்லனைப் பிறாண்டி விடுவதால், அதன் ஓனர் அதை… வேண்டாம், நீங்கள் படித்திருந்தால் you get the idea .

“அந்தப் பூனை உங்களை என்ன பண்ணித்து ? எதுக்காக வாயில்லா ஜீவனைப் போய்க் கொன்னீங்க ?” என்று அவர் கேட்டபோது, அவர் கண்களில் நீர் ததும்பியது.

“பூனையைப் பத்தி என்ன ஸார் தெரியும் உங்களுக்கு ? எத்தனை மில்லியன் வருஷங்களா அது மனிதனோட வாழறது தெரியுமா ? கிளியோபாட்ரா காலத்தில் அதைத் தெய்வமா மதிச்சாங்க. எத்தனை வருஷமானாலும் ஒரு பூனையால மனிதனைச் சாராமல் வாழ முடியும், தெரியுமா ?”

நான் மையமாகப் புன்னகைத்தேன்.

“நீங்க அதைக் கொன்னுருக்கக் கூடாது. அதை அவன் ரோட்டுல விட்டிருந்தாக் கூட, எங்கேயாவது பிழைச்சுப் போயிருக்கும்…”

“வீட்டுக்குத் திரும்பி வந்துடுமே ஸார் ?”

”அதைவிட்டுட்டு சுவத்துல… சொல்லவே கூச்சமா இருக்கு. கிராதகன் ஸார் நீங்க! அஞ்சு மணி நேரமா, உங்களை என்ன பிராயச்சித்தம் பண்ணவைக்கலாம்னு யோசிச்சிண்டிருந்தேன். நீங்க உங்க கதைல பூனையை ஒரு அதிர்ச்சிக்காகக் கொன்னிருக்கீங்க. எங்காத்துல எட்டுப் பூனையை வளர்த்தவன் நான். எவனும் அப்படிச் செய்ய மாட்டான்.”

தனது மஞ்சள் பையில் கைவிட்டு எதையோ ஆராய்ந்தார். எனக்குத் திக்கென்றது. ஆயுதம் தேடுகிறாரா, என்ன?

”ஸாரி..  நான் பல கதைகளில் பல மிருகங்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனக்கு மிருகங்கள்னா பிரியம். இந்தக் கதையில் அவனுடைய ஆத்திரத்தின் வெளிப்பாடு…”

“வெளிப்பாடாவது, உள்பாடாவது.. ” அவர் சமாதானமாகவில்லை.

வண்டி சென்ட்ரலில் வந்து நின்றதும், “நீங்க கொன்ன அந்தப் பூனைக்கு ஒரே ஒரு ப்ரீத்தி பண்ணிடுங்கோ. ஒரு எய்ட் ஹண்ட்ரட் ருபீஸ் செலவழிச்சா, அந்த ஜந்துவைக் கொன்ன பிரம்மஹத்தி உங்களைத் துரத்தாது. ஏற்பாடு பண்ணவா ?”

“என்கிட்டே எய்ட் ஹண்ட்ரட் இல்லை.”

“செக்கா கொடுத்தாலும் பரவாயில்லை…”

எப்படித் தப்பித்தேன் ?

“ஒண்ணு பண்ணுங்கோ… அது என்ன பூஜைன்னு சொல்லுங்கோ.  எனக்குத் தெரிஞ்ச வாத்தியாரை வெச்சிண்டு பண்ணிடறேன்.”

அவர் என்னைக் கடைசிவரை சபித்துக் கொண்டுதான் சென்றார். அதிலிருந்து கதைகளில் நான் பூனைகளைக் கொல்வதில்லை.”

**

சுஜாதா தன்னுடைய கட்டுரை ஒன்றில். நன்றி: சுஜாதா.

**

அன்பான வாசக, வாசகியருக்கு மதுரமான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இறையருளால், இனிதாக நகரட்டும் ஒவ்வொரு நாளும்..

**