’நமது பௌலிங் அவ்வளவு சரியாக இல்லை என நான் நினைக்கிறேன்’ என்கிறார் கேப்டன் கோஹ்லி, நேற்று (29/11/20) மேட்ச்சையும், தொடரையும் தோற்றுவிட்டபின்பு. இதைக் கண்டுபிடிக்க இவருக்கு இரண்டு மேட்ச்சுகள் ஆனது. தோற்ற பிறகே, இப்படி அவர் ‘நினைக்கிறார்’! ’ஹெட் கோச்’ என்று ஒருத்தர் இந்திய அணியில் இருக்கிறாரே, 10 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு. அவர் என்ன ’நினைக்கிறாராம்’? தெரியவில்லை. பாத்ரூமிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையோ, என்னவோ?
தோற்ற இரண்டு போட்டிகளிலும் கோஹ்லியின் பௌலர்கள் என்ன செய்தார்கள்?
முதல் ODI: வேகப்பந்துவீச்சாளர்கள்
ஓவர்கள் 30. கொடுத்த ரன்கள் 215. எடுத்த விக்கெட்டுகள் 5.
ஸ்பின்னர்கள்:
ஓவர்கள் 20. கொடுத்த ரன்கள் 152. எடுத்த விக்கெட்டுகள் 1.
இரண்டாவது ODI : வேகப்பந்துவீச்சாளர்கள்
ஓவர்கள் 30. கொடுத்த ரன்கள் 246. எடுத்த விக்கெட்டுகள் 3.
ஸ்பின்னர்கள்:
ஓவர்கள் 20. கொடுத்த ரன்கள் 141. எடுத்த விக்கெட்டுகள் 0.
நமது பௌலர்களின் நம்பர்கள் கண்ணைக்கட்டுகின்றன. ஆனால் கேப்டன் கோஹ்லி/சாஸ்திரிக்கு கண்ணிலேயே படவில்லை! முதல் மேட்ச்சில் ’அடித்த மணி’ – அதன் சத்தம் – காதிலே விழவில்லை. அதனால்தான், ’எந்த மாற்றமும் இன்றி’, இரண்டாவது போட்டியில் அதே அணியை இறக்கி, அதே ரிஸல்ட்டை ஆசையாகப் பெற்றுக்கொண்டார்கள் தெள்ளுமணிகள்.
’சிட்னி ஒரு பேட்டிங் பிட்ச்தான். 305 அதில் ஆவரேஜ் ஸ்கோர்ப்பா.’ சரி. ஆனால் ’அவர்கள்’ விக்கெட்டுகளை சாதாரணமாக எடுக்கிறார்களே, நீங்கள் ஏன் ’எடுக்கவில்லை’? நாங்களும் ரெண்டு மேட்ச்சிலும் 300-க்கு மேல் எடுத்துவிட்டோமே..
ஓ.. ஆமாம், அவர்களது ஸ்கோர் ஒவ்வொரு போட்டியிலும் 370-ஐ எளிதாகத் தாண்டிச் சென்றதே.. அதனால்தானே அவர்கள் ஜெயிக்கமுடிந்தது, அல்லது அவர்களை ஜெயிக்கவிட்டீர்களே.. என்றால், ’அவர்கள் பேட்டிங் அப்படி. ‘they have got a pretty strong batting line-up, and they understand these conditions and pitches and the angles on the field well’ என்பது கோஹ்லி Bhai-யின் சாமர்த்திய பதில். டி-20 தொடரிலும் இதேதானா? இல்லை அதற்காக வேறுவகை சப்பைக்கட்டு தயார்செய்யப்பட்டுள்ளதா?

இந்தத் தொடரில் இதுவரை, கோஹ்லி பௌலர்களைக் கையாண்டவிதம், ஃபீல்ட் ப்ளேஸ்மெண்ட்ஸ் – ஒன்றும் சொல்வதற்கில்லை. ”…that was poor captaincy!” என எரிகிறார் கௌதம் கம்பீர், இந்தியாவின் முன்னாள் வீரர். ’6-ஆவது பௌலர்’/ஆல்ரவுண்டர் வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தரையோ, ஷிவம் துபேயையோ ‘ஒரு-நாள் அணி’யில் சேர்த்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை?” -என்றும் குடைச்சல். ட்விட்டர் தடதடக்கிறது நேற்றிலிருந்து. ”தூக்குங்கடா கோஹ்லியை!’’, “இந்த சாஸ்திரியைக் கோச்சா வச்சிகிட்டு ஜெயிச்சாப்லதான் – ரெண்டுபேரையும் காலிபண்ணலன்னா, சர்வதேசத் தொடர்ல வெற்றிங்கறத மறந்துடுங்க!…” என்றெல்லாம் சூடாகும் ட்விட்டராட்டி!
இனி அவசர அவசரமாக, டிசம்பர் 2-ல் கேன்பர்ராவில் (Canberra) ஆடப்போகும் 3-ஆவது போட்டிக்கான இந்திய அணியில் மாறுதல்கள் வரும். ’மறக்கப்பட்ட’ சிலர் திடீரென நினைவுக்கு வர, உள்ளே அழைக்கப்படுவார்கள் – ‘வாங்கடா.. ஏதாவது செஞ்சு காமிங்க..’ விளைவாக விக்கெட்டுகள் கொஞ்சம் அதிகமாக விழலாம். அல்லது எதிரியின் ரன் விகிதம் கட்டுப்படுத்தப்படலாம். ரிஸல்ட்? தொடரைத் தோற்றாயிற்று. மூன்றாவது மேட்ச் என்னவானால் என்ன? சாஸ்திரி/கோஹ்லி ஜோடிக்குக் கவலையில்லை. இரண்டு பேரின் ‘போஸ்ட்’டுகளுக்கும் இப்போதைக்கு ஆபத்திருப்பதாகத் தெரியவில்லை.
**