யதிகளின் ராஜா-3 (இறுதிப் பகுதி)
ஸ்ரீரங்கத்துக்கோவில் மற்றும் வைஷ்ணவ மடத்தின் நிர்வாகத்தைத் தன் சிஷ்யர்கள் துணையுடன் சிறப்பாக நிர்வகித்தார் ராமானுஜர். சான்றோர் மத்தியில், அவர் புகழ் மேலும் மேலும் பரவியது. ஆனால் அவரைப் பிடிக்காதவர்களும் இருக்கவே செய்தார்கள். அவர்களில் சிலர் அவரைக் கொலை செய்யவும் துணிந்தார்கள்.
மற்ற சன்னியாசிகளைப்போலவே, ஊர் வலம் சென்று பிச்சை எடுத்து உண்பது ராமானுஜரின் வழக்கம். சிஷ்யர்களும் கூடவே செல்வர். அவ்வாறு ஒரு நாள் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். அவரை வெறுத்த அந்த வீட்டுக்காரன், அவர் வரும் நேரமறிந்து உணவில் விஷம் கலந்து வைத்திருந்தான். ராமானுஜர் வாசலில் வந்து நின்றவுடன், தன் மனைவியை அனுப்பி, அந்த விஷ உணவைப் பிச்சையாக இட்டுவரச்சொல்லி , தான் உள்ளிருந்தான். மனைவிக்கு அதில் இஷ்டமில்லை. மாறாக இது பெரும் பாவமாயிற்றே என்று பயந்தாள். இருந்தும் கணவனின் கட்டளையை மீறமுடியாது வாசலுக்குப் பதட்டத்துடன் சென்றாள். வாசலில் நின்றிருந்த, தேஜஸான முகம் கொண்ட அந்த பால சன்னியாசியைப் பார்த்ததும் மனம் பதறியது; கண் கலங்கியது. கால்கள் தடுமாறின. எப்படியோ அருகில் சென்று, அவருடைய பாத்திரத்தில் பிச்சையைப் போட்டுவிட்டாள். ராமானுஜரை நேரிடையாக நோக்கும் தைரியம் இன்றி, தலைகுனிந்து, நடுங்கும் கைகளுடன், கைகூப்பினாள். ராமானுஜர் அந்தப் பெண்ணை ஆசீர்வதித்தார். பயமிகுதியால் தலைசுற்றக் கீழே விழ இருந்தவள், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.
தனக்குப் பிச்சையிட்ட அந்தப் பெண்ணின் நடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் கவனித்திருந்தார் ராமானுஜர். அந்தப் பெண் இட்ட பிச்சையைத் தனியாக வைக்குமாறு கூறினார். சிந்தனையுடன், சிஷ்யர்கள் உடன்வர மடத்துக்குத் திரும்பினார். சிஷ்யர்கள் அந்தப் பெண் போட்ட உணவைச் சோதித்ததில், அதில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. ராமானுஜரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். விஷம் வைத்தவனுக்காகவும், அவனது குடும்ப நலனுக்காகவும் நாராயணனிடம் பிரார்த்தனை செய்துகொண்டார். தன் சிஷ்யர்களிடம், பதற்றமடையவேண்டாம் என்றும், இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.எப்படியோ இந்த விஷயம் திருக்கோட்டியூர் நம்பியின் காதுகளுக்கு எட்டியது. அவர் பதறியடித்துக்கொண்டு தன் சிஷ்யர் ஒருவருடன், ஸ்ரீரங்கம் நோக்கி கால்நடையாக வந்துகொண்டிருந்தார். தன்னைப்பார்க்க திருக்கோட்டியூர் நம்பி வந்துகொண்டிருப்பதை அறிந்த ராமானுஜரும், தன் சிஷ்யர் கிடாம்பி ஆசான் என்கின்ற இளைஞருடன், நம்பியை வழியிலேயே சந்திக்க விரைந்தார்.
இருவரும் காவிரி ஆற்றுப்படுகையில் சந்தித்துக்கொண்டனர். கோடைகாலம் உச்சத்தில் இருந்தது. ஆற்றுமணல் நெருப்பாய்ப் பொரிந்தது. ராமானுஜரைத் தூரத்திலிருந்தே பார்த்த நம்பிக்கு மனதில் நிம்மதி ஏற்பட்டது. தன் குருவான நம்பியை நெருங்கியவுடன், ஆச்சாரியனின் பாதங்களில், அந்த சூடான மணலையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் ராமானுஜர். சம்பிரதாயப்படி, பெரியவர்களைக் காலில் விழுந்து வணங்கும்போது அவர்கள் `போதும்` எனச்சொல்லும் வரையிலும் சிஷ்யர்கள், சிறியவர்கள் தொடர்ந்து காலில் விழுந்து வணங்கிக்கொண்டிருப்பார்கள். அந்த வழிப்படி, ராமானுஜரும் தொடர்ந்து தரையில் விழுந்து வணங்கிக்கொண்டிருக்க, திருக்கோட்டியூர் நம்பி `போதும்` என, ஏனோ சொல்லவில்லை. நெருப்பாய்த் தகிக்கும் ஆற்றுமணலில் ராமானுஜர் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்க, அவரது செந்நிற மேனி, மேலும் சிவந்தது. அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ராமானுஜரின் சிஷ்யரான கிடாம்பி ஆசானுக்கு இது பொறுக்கவில்லை. கோபத்துடன் திருக்கோட்டியூர் நம்பியைப் பார்த்து, “ நன்றாயிருக்கிறது நீர் செய்வது! இவரை இந்த வெயிலிலேவைத்து இப்படியே கொன்றுவிடுவீர் போலிருக்கிறது. உமக்கு, அந்த விஷம் வைத்த பாவி எவ்வளவோ மேல்!’’ என்று படபடத்தார்.
திருக்கோட்டியூர் நம்பி உடனே `போதும்` என்றார் ராமானுஜரிடம். அவரை மனதார ஆசீர்வதித்தார். கிடாம்பி ஆசான் பக்கம் திரும்பி, ‘’என் ராமானுஜனை உண்மையான பக்தியுடன், நன்றாகக் கவனித்துக்கொள்பவர்கள் யாரிருக்கிறார்கள் என்று கவலையோடு இருந்தேன். இப்போது நீ இருக்கிறாய் எனக் கண்டுகொண்டேன். இனி என் கடைசி காலத்தில் நான் நிம்மதியாகக் கண்மூடலாம்!“ என்றார் நம்பி.
வியாசமுனிவரின் `பிரும்மசூத்திர`த்திற்கு சிறப்புமிகு விளக்கவுரை எழுதினார் ராமானுஜர். அதை அவர் சரஸ்வதி மடத்தில் அரங்கேற்றுகையில், தாயார் சரஸ்வதி தேவியே காட்சியளித்து அதனை `ஸ்ரீ பாஷ்யம்` என்று புகழ்ந்து அழைத்தார். அன்னை சரஸ்வதி தேவியே ராமானுஜரை `பாஷ்யகாரர்` என்றும் அழைத்து, அவருக்கு நீங்காத பெருமை சேர்த்தார்.
காவிரியின் ஆற்றுமணலில் ஒரு நாள், சிறுவர்கள், சிறுமிகள் கோவில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிறிய மரப்பாச்சி பொம்மையைப் பெருமாளாக பாவித்து, மண் கோவிலுக்குள் வைத்து வணங்கினர். சின்ன மரத்தட்டில் கொஞ்சம் மணலை வைத்து அதைக் குங்குமப்பிரசாதம் என போவோர் வருவோருக்கு வழங்க முயன்றனர். யாரும் அந்தக் குழந்தைகளை, அவர்களது சாமி விளையாட்டை நின்று பார்க்கவில்லை. பொருட்படுத்தவில்லை. அப்போது ராமானுஜர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். ஒரு 3-4 வயது மதிக்கத்தக்க குழந்தை அந்த மரத்தட்டை எடுத்துக்கொண்டு அவர்முன் ஓடிவந்து மழலை மாறாது சொன்னது: ”ப்ரசாதம்! பெருமாள் ப்ரசாதம்! வாங்கிக்குங்கோ!”
ராமானுஜர் குழந்தையின் கள்ளமற்ற மனதை, பக்தி உணர்வைப் புரிந்து கொண்டார். அதன் முன் குனிந்து, தன் இடதுகைமேல் வலதுகை வைத்து நீட்டினார். குழந்தையும் சிரித்துக்கொண்டே, அவர் கையில் தன் பிஞ்சு விரல்களால் கொஞ்சம் மணலை இட்டது. அதனை பக்தியுடன் `ஓம் நமோ நாராயணாய` என்று கூறியபடி ஏற்றுத் தன் நெற்றியில் குங்குமமாய் இட்டுக்கொண்டு நடந்தார் ராமானுஜர்.
`யதி` என்ற சொல்லுக்கு வீட்டைவிட்டு வெளியேறி, காவி தரித்து வாழும் சாமியார் என்று பொருளல்ல. தன் யோக அனுஷ்டானத்தினால், சாதனாக்களினால், சீரிய தவத்தினால், பரப்பிரும்மத்தை உணர்ந்தநிலையில் வாழும் முனிவர், ரிஷி என்று அர்த்தம். அத்தகைய `யதி`களின் ராஜா என்ற பொருள்பட, ராமானுஜர் `யதிராஜர்` என சாஸ்திரமறிந்தவர்களால் கொண்டாடப்பட்டார். இவருக்கு, எம்பெருமானார், உடையவர், பாஷ்யகாரர் என்கிற பெயர்களும் வழங்கிவந்தன.
கி.பி.1017 தமிழ் பிங்கள வருடத்தில் தோன்றிய ராமானுஜர், 120 வருடங்கள் வாழ்ந்து இந்து மத மறுமலர்ச்சிக்கு, ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய வளர்ச்சிக்கு வித்திட்ட மகானாகக் கருதப்படுகிறார். பௌத்தம், ஜைனம் போன்ற மதங்களாலும், இந்து மத துவேஷிகளாலும் தாக்கப்பட்டு இந்துமதம் பலவீனப்பட்டுக்கிடந்த 11-ஆம் நூற்றாண்டில், தன் சீரிய விஷ்ணுபக்தி, சாஸ்திர மேதமை, தலைமைப்பண்பு, அனைவரிடமும் அளவுகடந்த அன்பு என்கிற சிறப்புப் பண்புகளைத் துணையாகக்கொண்டு, இந்து மதத்தினர்க்கு இறை நம்பிக்கை ஊட்டினார். இந்து மதத்தின் வளர்ச்சிப்பாதையை சீர்ப்படுத்தி, புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றார் அவர். ராமானுஜரின் புகழ் வடநாட்டில் காஷ்மீரம் வரை பரவியிருந்தது. 14-ஆம் நூற்றாண்டில் காசியில் குரு ராமானந்தர், ராமானுஜரின் விசிஷ்ட்டாத்வைதக் கொள்கைகளைப் பின்பற்றி, ஜாதி, மத பேதமின்றி கபீர்தாசர், ரவிதாசர் போன்றோரைத் தன் சிஷ்யராகக்கொண்டு, வைஷ்ணவ நம்பிக்கைகள் பரவச்செய்தார்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்மீதும் உயர்வு, தாழ்வு மனப்பான்மையின்றி கருணையுடன் பழகினார் ராமானுஜர். இதற்காக அவரது சமூகத்திலிருந்தே அவருக்கு மிகுந்த எதிர்ப்பு இருந்தது. அதனைப்பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. தாழ்த்தப்பட்டோரை `திருக்குலத்தார்` என அன்புடன் அழைத்து, ஸ்ரீமன் நாராயணன் எனும் முழுமுதற்கடவுளை வணங்கச் செய்தார். ஸ்ரீமன் நாராயணனின் முன் அனைவரும் சமமே என்றார். அவ்வாறே அனைவரையும் நடத்தவும் செய்தார். இந்துமதத்தின் வைணவ சம்பிரதாயத்தை விளக்கும் வகையில் 6 சிறப்பு வாய்ந்த அடிப்படை நூல்களை இயற்றினார் ராமானுஜர். அவை:
1) மஹாபுருஷ நிர்ணயம்: தாயார் மகாலக்ஷ்மியுடன் கூடிய பெருமாள் நாராயணன் தான் பரப்பிரும்ஹம் அல்லது பரம்பொருள் என நிர்ணயிக்கிறது இந்த நூல்.
2) கீதார்த்த சங்கிரகம்: பகவத் கீதைக்கு ராமானுஜரின் சிறப்புரை
3) வேதாந்த சங்கிரகம்: உபநிடதக் கருத்துக்களை விரிவாக விளக்கும் நூல்
4) சித்தித்ரயம்: விசிஷ்ட்டாத்துவைதக் கொள்கைகளை நிறுவும் நூல்.
5) ஆகம ப்ராமாண்யம்: இந்த நூல் `பாஞ்சராத்ர ஆகமங்களை` விளக்குவது .
6) நித்யக் கிரந்தங்கள்: அன்றாட வைஷ்ணவ சடங்குகள், பூஜை முறைகளை விளக்கும் நூல்
இவரது கடைசிகாலத்தில் ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் எழுப்பப்பட்ட இவரது விக்ரஹத்தில், தன் யோகசக்தி முழுதையும் இவர் இறக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் பரமபதம் எய்திய ராமானுஜருக்கு கோவிலில் தனி சன்னிதி ஒன்று உள்ளது. அதில் பத்மாசன நிலையில், அபூர்வமான மூலிகைத் தைலங்களால் பதப்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக இன்னும் இவரது திருமேனி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சன்னிதியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை, கற்பூர, குங்குமப்பூ காப்புகள் இதற்கு நிகழ்த்தப்படுகின்றன. சன்னிதியில் ராமானுஜருக்கு அபிஷேகம் கிடையாது. தீபாராதனை மட்டுமே உண்டு. அங்கே ராமானுஜர் இருப்பதாகக் கருதப்படுவதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில், அர்ச்சகர், பக்தர்கள், மெல்லிய சன்னமான குரலிலேயே பேசிக்கொள்வது வழக்கம்.
பிங்கள வருடத்தில் தோன்றிய ராமானுஜர், தமிழ் 60-வருடக் கணக்குப்படி இரண்டாவது முறையாக, 120 ஆண்டுகளுக்குப்பின் வரும் பிங்கள வருடத்திலேயே 1137-ல், பங்குனி உத்திர தினத்தன்று ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை அடைந்தார்.
**