கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் நெஞ்சுநிமிர்ந்த வீறுநடை தொடர்கிறது. ‘B’ பிரிவில் மிகவும் வலிமையான டீம் எனவும், உலகக்கோப்பையை வெல்ல மிகவும் தகுதியுள்ளது எனவும் பெரிதாகப் பேசப்படும் தென்னாப்பிரிக்காவை இந்தியா அசுரத்தனமாகத் தாக்கி வீழ்த்திவிட்டது.

ரசிகர்களாலும் கிரிக்கெட் நிபுணர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, சற்றுமுன் மெல்போர்னில் (Melbourne Cricket Grounds (MCG))முடிவடைந்த, இந்த கிரிக்கெட் மல்யுத்தத்தில்தான் இந்தியா தன் வேலையைக் காட்டியது!

சென்ற உலகக்கோப்பையின் போது இந்தியாவின் பயிற்சியாளராக இருந்து புகழ்பெற்ற கேரி கர்ஸ்டன் (Gary Kirsten) தற்போது தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர். இந்திய அணியின் பலம் / பலவீனம் என நுட்பங்களை அறிந்தவர். போதாக்குறைக்கு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸிற்காக(CSK) விளையாடி, அதில் கூட விளையாடிய தோனி, அஷ்வின், ரெய்னா, மோகித் ஷர்மா போன்ற வீரர்களை நன்கறிந்த ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸீ (Mike Hussey) தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் கன்சல்டண்ட். இந்தியாவிற்காகவே இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்ததா தென்னாப்பிரிக்கா! ம்….இறுதியில் விழுந்தது தலையில் இடி!

எப்படித்தான் நிகழ்ந்தது இந்த இந்திய வெற்றி? ஷிகர் தவனிலிருந்து ஆரம்பம் நம் கதை. இவரைப்பற்றி என்ன சொல்வது? கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டிகளில் அச்சுபிச்சென்று விளையாடி அவுட்டானதால் பேர் கெட்டுப்போயிருந்தது. உலகக்கோப்பை என்று வந்தவுடன் எந்த பூதம் வந்து இவருக்குள் நுழைந்துகொண்டதோ தெரியவில்லையே.. சும்மா மாறிவிட்டாரே மனுஷன் ! முதல் மேட்ச்சில் பாகிஸ்தானின் கோட்டைக்குள் புகுந்து ஒரு பரபர இன்னிங்ஸ் விளையாடி தன்னைக் குறைசொன்ன விமர்சகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்தப் போட்டியிலும் தன் சூரத்தனத்தைக் காட்டிவிட்டார் தவன். இந்தியாவின் முதல் விக்கெட் (ரோஹித் ஷர்மா) ரன் அவுட்டில் ’லொடக்’காக, தவன் கோஹ்லியுடன் சேர்ந்து பதவிசாக முதலில் ஆடினார். அரை சதம் கடந்த நிலையில் அவர் தூக்கிய பந்தைக் கேட்ச் பிடித்து பிறகு நழுவ விட்டு அன்பளிப்பு செய்தார் ஆம்லா (Amla). அதற்குப்பின் சூடான தவன், வேகப்பந்துகளை மெல்போர்ன் மைதானத்தின் நாலாபுறமும் விசிறிவிட ஆரம்பித்தார். கடுப்பான தென்னாப்பிரிக்க பௌலர் டேல் ஸ்டேன்(Dale Steyn), ஒரு பந்தை தவனின் நெஞ்சுக்கு நேராக வேகமாக எழும்பவிட்டார். தவன் பின்புறமாகச் சாய்ந்து அதனைத் தவிர்க்க முயல, அது அவரது நெஞ்சில்பட்டு எகிறியது. முறைத்த தவனைப் பார்த்துக் கண்ணடித்தார் ஸ்டேன். ’தம்பி! எங்கிட்ட வச்சுக்காத உன் வெளயாட்ட!’ என்று சொல்லப்பார்த்தாரா. தவன் இதற்கெல்லாம் மசிபவரா என்ன!. அடுத்துவந்த ஸ்டேன் பந்துகளில் அதிரடியைக் காண்பித்தார். ஸ்டேனின் ஒரு பந்தை, வேகமாக முன்னேறி லாங்-ஆன் திசையில் சிக்சர் அடித்து மைதானத்தில் மத்தாப்புக் கொளுத்தினார் தவன். மூவர்ணக்கொடி ரசிகர்களுக்கு ஒரே கிளுகிளுப்பு! (ஆஹா! என்ன பேட்டிங்டா பண்றான் இவன் !)

இந்தியாவின் ரன் விகிதம் உயர ஆரம்பித்த நிலையில் நிதானமாக அடுத்த பக்கத்தில் ஆடிவந்த கோஹ்லி, தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் தாஹிரிடம்(Tahir) விக்கெட் இழந்து 46-ரன்னில் நடையைக் கட்டினார். பின் வந்தவர் ரஹானே. இவர் அடித்தால் பந்து பௌண்டரிக்குப் பக்கத்திலாவது போகுமா எனக் கேட்கவைக்கும் அப்பாவித் தோற்றம். ஆனால் அவருக்குள் இருப்பது வேறொரு சரக்கு! பசுத்தோல் போர்த்திய புலி. டேல் ஸ்டேன், மார்னீ மார்க்கெலின் ஆவேசப் பந்துவீச்சை ரஹானேயும் தவனும் ஒரு பிடி பிடித்தார்கள். பௌலர்கள் திணற, குழம்பிபோனார் கேப்டன் டிவில்லியர்ஸ். ஃபிலாண்டரின்(Philander) பந்துவீச்சும் எடுபடாது போக(காயம் வேறு), நாலாவது வேகப் பந்துவீச்சாளரான வேன் பார்னெல்(Wayne Parnell) பக்கம் திரும்பினார். ரஹானேயும் தவனும் அவரைப் போட்டுத்தாக்கியதில் ரன்விகிதம் ஏறியது. பார்னெல் பந்து வீசுவது எப்படி என்பதையே மறந்து போனவர் போல் விழிக்க ஆரம்பித்தார்.

16 ஓவரில் 125 அதிவேகரன்களைச் சேர்த்தனர் தவன் –ரஹானே ஜோடி. பிரமாதமாக ஆடிய ஷிகர் தவன் 137 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரெய்னா, தோனி, ஜடேஜா ஆகியோர் அதிகம் தாக்குப்பிடிக்கவில்லை. அருமையான அதிரடி ஆட்டத்துக்குப்பின் (60 பந்துகளில் 79 ரன், 3சிக்ஸர்) ரஹானேயும் அவுட்டானார். ஒருசமயம் 320-ஐ இந்திய ஸ்கோர் தொடலாம் என நினைத்திருந்த வேளையில், மார்க்கெல், ஸ்டேன் இருவரும் வேகப்பந்துவீச்சை இறுக்க, இந்திய விக்கெட்டுகள் சரிந்தன. 7 விக்கெட்டுகள் பறிகொடுத்த நிலையில், அஷ்வினும், ஷமியும் ஸ்கோரைப் பிடித்துத் தள்ள, ஸ்கோர் 300-ஐத் தாண்டியது. 307/7 என்கிற நிலையில் இந்திய ஆட்டம் முடிந்தது.

இடைவேளையின்போது தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் கர்ஸ்டனும் மைக் ஹஸ்ஸியும் தென்னாப்பிரிக்க வெற்றி பற்றி ஆலோசனை செய்தனர். வியூகம் அமைத்தனர். 308 அடித்தால் வெற்றி என ஆடவந்தது தென்னாப்பிரிக்கா. துவக்க ஆட்டக்காரரான டி காக்-ஐ (Quinton de Kock) சொற்ப ரன்னிலே இழந்தபின், உஷாராக ஆரம்பித்தனர் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆம்லாவும், டூ ப்ளஸ்ஸீயும்(du Plessis). இந்திய பௌலர்கள் திட்டமிட்டு ஒழுங்கான திசையில், கறாராக பந்துவீசினார்கள். தென்னாப்பிரிக்க ரன்கள் ஏறுவதில் திணறல் ஏற்பட்டது. ஆம்லா (Amla) இந்நிலையில் அவுட் ஆக, கேப்டன் டிவில்லியர்ஸ்(AB de Villiers), போட்டியின் போக்கையே மாற்றி அமைக்கும் வல்லமை உடைய தென்னாப்பிரிக்க வீரர், களத்தில் இறங்கினார். அவர் நினைத்தபடி, இஷ்டப்படி மட்டையைச் சுழற்ற விடவில்லை இந்திய பந்துவீச்சாளர்கள். ஒரு இறுக்கம் உருவானது தென்னாப்பிரிக்காவின் ஆட்டத்தில். இந்நிலையில், இந்தியக் கேப்டன் தோனி சுழல்பந்துவீச்சுக்குத் தாவினார். ரவீந்திர ஜடேஜா பந்துவீச, ஒரு ஓவரில் நான்கு டாட்-பந்துகள்(dot balls) எனப்படும் ரன் எடுக்கமுடியாத, துல்லியமான பந்துகள் வந்து விழுந்தன. டிவில்லியர்ஸ் அழுத்தத்துக்குள்ளானார். அவர் ஆடுகிற விதமா இது. 5-ஆவது பந்தில் எப்படியோ சந்துபொந்தில் தட்டிவிட்டு ரன் ஓடினார். ஒரு ரன்னுடன் நில்லாது, இரண்டாவது ரன்னுக்கு ஓடப்போக மைதானத்தில் ஓடிக்கொண்டிருந்த பந்து இந்திய வீரர் மோஹித் ஷர்மாவிடம் சிக்கியது. அவர் அதை ஆவேசமாக எடுத்து வீச, பந்து துல்லியமாய் விக்கெட்கீப்பர் பக்கமுள்ள ஸ்டம்ப்பை நோக்கி சீறிவந்தது. டிவில்லியர்ஸ் பாய்ந்து கோட்டைத் தொடமுயற்சிக்க, தோனி பந்தை லபக் செய்து ஸ்டம்பில் சேர்த்துவிட்டார். செண்ட்டிமீட்டர் கணக்கில் தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அவர் எடுத்த ரன் 30 மட்டுமே. தென்னாப்பிரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்ச நேரத்தில் நன்றாக ஆடிவந்த டூ ப்ளஸ்ஸீ (55) அவுட்டாக, தென்னாப்பிரிக்காவுடன் குழப்பமும், தடுமாற்றமும் கூட்டணி அமைத்தன. 22 பந்துகளில் 22 ரன் எடுத்து அசத்திவந்த அதிரடி வீரர் டேவிட் மில்லர், உமேஷ் யாதவின் சாமர்த்திய ஃபீல்டிங்கில் ரன் அவுட்டானார். இடையில் அஷ்வின்-ஜடேஜா ஜோடி தங்கள் சுழல்பந்துவீச்சின் திறமையைக் காட்டப்போக தென்னாப்பிரிக்கவுக்கு விழி பிதுங்கியது. அஷ்வினிடம் மூன்று, ஜடேஜாவிடம் ஒன்று என முக்கியமான வீரர்களைப் பறிகொடுத்தது. 44 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த தென்னாப்பிரிக்கா, மொத்தம் 177 ரன்களில் இந்தியாவிடம் ‘போதும் சாமி! போட்டுக் கொல்லாதீங்க!’என்று சரணாகதி அடைந்தது.

இந்தப்போட்டியில் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. பொதுவாக சிறப்பாக காணப்படும் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங், இந்த மேட்ச்சில் வழக்கமாகக் காணப்படும் இந்திய ஃபீல்டிங் போல் இருந்தது. அதாவது பந்தை எடுப்பதில் தடுமாறுதல், குறிதவறி பந்தை எறிதல், கேட்ச்சுகளைக் கோட்டைவிடுதல் போன்றவை இன்று தென்னாப்பிரிக்காவிடம் நிகழ்ந்தன. அவர்களிடம் அவ்வளவு டென்ஷன்! ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் வழக்கம்போல் தடுமாறாமல், இந்த போட்டியில் இந்திய ஃபீல்டிங் சிறப்பாக அமைந்தது. இது குறிப்பிடத்தக்க வரவேற்கத்தக்க மாற்றம்.

உலகக்கோப்பைப் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் வெற்றியை இந்தியா இன்று நிகழ்த்தியுள்ளது. அதுவும் எப்பேர்ப்பட்ட வெற்றி. மைதானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் புன்னகை புரிந்தார். மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 90000 ரசிகர்கள் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்க மூவர்ணக்கொடி மேலும் மேலும் உயர்ந்தது.

இந்தியாவே, உன் அருமையென்ன, பெருமையென்ன ! ஆஸ்திரேலியாவுக்குத்தான் புரிந்ததென்ன !
**

உலகக்கோப்பையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல்

(ஒரு முன்னோட்டம்)

வரும் ஞாயிறன்று (22-02-2015) உலகக்கோப்பையில் வலுவான அணியான தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்தியா(Melbourne, Australia). இந்தப் பிரிவில் (India-Pakistan Classic-ஐத் தவிர்த்து) ரசிகர்களாலும், கிரிக்கெட் பண்டிட்டுகளாலும் மிகவும் ஆர்வத்தோடு கவனிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இது. ஏன், இதுவும் ஒரு ஆட்டம்தானே, என்ன பெரிய விசேஷம் இருக்கிறது இதில் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. விஷயத்துக்கு வருகிறேன்.

எப்படி நாம் பாக்கிஸ்தானுக்கெதிராக உலகக்கோப்பை மேட்ச் எதிலும் தோற்றதில்லையோ, அதைப்போல, தென்னாப்பிரிக்காவும் இந்தியாவுக்கெதிராக உலக்கோப்பையில் தோற்றதில்லை. இல்லை! இதுவரை 3 முறை உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவோடு மோதியிருப்பினும், இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. கிரிக்கெட் உலக சிங்கங்கள் டெண்டுல்கர், கங்குலி, சேவாக், திராவிட் விளையாடிய காலத்திலேயே இந்தியாவுக்கு இந்த கதி. கடந்த உலகக்கோப்பையில்(2011-நாக்பூர்) நாம் தென்னாப்பிரிக்காவைச் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை தோனி இதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு விக்கெட் இழப்பிற்கு 267 என்கிற வலுவான நிலையிலிருந்து திடீரென சரிந்து 296-ல் ஆல்-அவுட்டானது இந்தியா. டெண்டுல்கர் செஞ்ச்சுரி அடித்துவிட்டார். சேவாக் 73. இருந்தும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்க நேர்ந்தது இந்தியாவுக்கு. இப்போது? Barring MS Dhoni, this is an All-New team. Latest version from India ! அனுபவம் புதுமை நமது இளம் வீரர்களுக்கு. விஷயத்தின் கனம் இப்போது ஓரளவு புரிபட்டிருக்கும்.

அப்படி என்ன special talent இருக்கிறது இந்த தென்னாப்பிரிக்க அணியில்? கேட்டுவிட்டீர்கள்! தென்னாப்பிரிக்கா என்றதும் முதலில் மனதில் படுவது இரண்டு பேர். முதலாவது – பேட்ஸ்மன் & கேப்டன் டிவில்லியர்ஸ் (AB deVilliers.). Modern Cricket’s 360 degree batsman என்று வல்லுநர்களாலும், விமர்சகர்களாலும் சிலாகித்துப் பேசப்படும் அசத்தல் மன்னன். சுழல்பந்து இருக்கட்டும் – வேகப்பந்துகளையும் நினைத்தது நினைத்தபடி கண்ட்ரோலுடன் ஸ்பூன் செய்து விக்கெட் கீப்பரின் தலைக்குமேலே லாவகமாகத் தூக்கி அடிப்பது போன்ற, கற்பனைக்கு எட்டாத ஷாட்டுகளை விளையாடக்கூடிய அதிசய பேட்ஸ்மன். பொதுவாக கிரிக்கெட் பயிற்சியில் கற்றபடி, ரொம்பவும் பாதுகாப்பாகத் தடுத்து ஆடும் (defensive strokeplay) பேட்ஸ்மன் ஒருவர், டிவில்லியர்ஸின் ஆட்டத்தை எதிரிலிருந்து பார்க்க நேரிட்டால், அவருக்கு பேட்டிங் செய்வது எப்படி என்பதே மறந்துவிடும். தலை சுற்ற ஆரம்பித்துவிடும். கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டு ஏதாவது பொட்டிக்கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என அவர் ஓடிவிடக்கூடும்! இத்தகைய சூரரான டிவில்லியர்ஸிடம் நமது பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் அதி உஷாராக இருத்தல் நல்லது. இரண்டாவதாக எதிரி அணிகளை உறுத்துவது டேல் ஸ்டேன் (Dale Steyn), தற்போது சர்வதேச அளவில் பயங்கரமாகப் பந்துவீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளர். இந்த இருவரும், குறிப்பாக 50-ஓவர் ஒருநாள் ஆட்டங்களில். வெற்றிக்கனியை எதிரணியின் கையிலிருந்து லபக்கென்று தட்டிப்பறித்துச் செல்லும் நிபுணர்கள். டேல் ஸ்டேனின் துல்லியப் பந்துவீச்சை இந்திய வீரர்கள் மிகக்கவனமாக விளையாட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இவர்கள் இருவர் மட்டும்தானா இப்படி? துவக்க ஆட்டக்காரரான ஹஷீம் ஆம்லா (Hashim Amla) தென்னாப்பிரிக்காவின் சிறப்பு ஆட்டக்காரர்களில் ஒருவர். சமயத்திற்கேற்ப ஆட்டத்தை ஜாக்கிரதையான மந்த கதியிலோ அல்லது அதிரடிவேகத்துக்கோ மாற்றும் திறன் உடையவர். டேவிட் மில்லர் என்னும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் போட்டியின் இறுதிப் பகுதியின் ஓவர்களுக்கு என விசேஷமாக டீமில் பொருத்தப்பட்டிருப்பவர். டூப்ளஸீ (Faf duPlessis) மற்றொரு பிசாசு! ஒருவேளை, ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் வேகமாகச் சரிந்தால், இடையிலே புகுந்து கலக்கும் திறனுடையவர். பௌலர்களில், ஸ்டேனைத்தவிர, (நமது ஐபிஎல்-புகழ்) மார்னீ மார்க்கெல் (Mornie Morkel), வெர்னான் ஃபிலாண்டர் (Vernon Philander), இம்ரான் தாஹிர் (Imran Tahir)(சுழல்பந்துவீச்சு) போன்றவர்களும் இருக்கிறார்கள் எதிரணிக்குத் தொல்லை கொடுக்க. An excellent variety of bowling options for SA Captain deVilliers, no doubt.

இந்த தென்னாப்பிரிக்க முட்டுக்கட்டையை இந்திய அணி தாண்டி உலகக்கோப்பையில் முன்னேறமுடியாதா? பாக்கிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றிக்கல்லை நாட்டியபின், நமது அணி புத்துணர்ச்சியோடு அடுத்த எதிரியை சந்திக்கக் காத்திருக்கிறது. கடும் பயிற்சியில் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கால் காயத்தினால் அவதிப்படும் பௌலர் புவனேஷ்வர் குமார் தேறிவிட்டாரா, இந்த மேட்ச்சில் ஆடுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. பொதுவாக ஏற்கனவே வெற்றிபெற்ற டீம் காம்பினேஷனை இந்திய கேப்டன் மாற்ற விரும்பமாட்டார். யாதவ், ஷமி, மோஹித் ஷர்மா மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. பேட்டிங்கிலும் பெரிய மாறுதல் இருக்காது எனத் தோன்றுகிறது. அஜின்க்யா ரஹானே, பேட்டிங் வரிசையில் சுரேஷ் ரெய்னாவுக்கு முன்பு வருவதற்கு வாய்ப்புண்டு. இந்த மேட்சில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஆகிய இரண்டு துவக்க ஆட்டக்காரர்களும் முதல் 15 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சை எப்படி சமாளிப்பார்கள் என்பதுதான் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கும் விஷயம். ஜடேஜாவும் அஷ்வினும் பாக்கிஸ்தானுக்கெதிராக மிடில் ஓவர்களில் சிறப்பாகப் சுழல்பந்து வீசினார்கள். ஒருநாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்கா சுழல்பந்துக்கெதிராக அவ்வப்போது நாட்டியம் ஆடுவதுண்டு. ஆதலால் இந்தப் போட்டியில் இந்திய சுழல்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சுவாரஸ்யமானதாக இருக்கலாம்.

தெற்கு ஆப்பிரிக்காவும் தன் பங்குக்கு இந்தியாவின் முன்னணி வீரர்களுக்கெதிராக வியூகம் அமைத்துவருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா ஆகிய இந்திய வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தைத் தூளாக்குவதற்காகத்தான் இந்தத் திட்டம். ஞாயிறு போட்டியில், யார்க்கர்களும், பௌன்சர்களும் (yorkers and bouncers) தாராளமாக இந்திய வீரர்களின் மீது ஏவுகணைகளாய்ப் பாயும். எரிச்சலை ஏற்படுத்தும். இந்திய வீரர்கள் பொறுமை, நிதானத்தை இழந்தால் ஸ்டம்ப்புகள் எகிறும். ஷாட்டுகள் தாறுமாறாக உருமாற்றம் பெற்று கேட்ச்சுகளாய் தென்னாப்பிரிக்க வீரர்களின் கைகளில் போய் இறங்கும். அத்தகைய சூழல் தென்னாப்பிரிக்கர்களை வெகுவாகக் குஷிப்படுத்தும்.

ஆதலால், பாக்கிஸ்தானுக்கு எதிராகக் காட்டிய தீவிர முனைப்பு, அணிஒற்றுமை, விளையாட்டுத்திறன், ஆகிய இனிய பண்புகளை நமது வீரர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அரண்போல மெல்போர்ன் மைதானத்தில் நிறுத்த வேண்டும். அவர்களின் வேகத்தைக்கண்டு அஞ்சாது எதிர்த்தாக்குதல் நடத்தி, தென்னாப்பிரிக்காவின் கோட்டையைத் தகர்க்கவேண்டும். இந்திய வீரர்களின் திறமையான பங்களிப்பு, கேப்டன் தோனியின் மதிநுட்ப வியூகங்களுடன் சரியான நேர்க்கோட்டில் இணைந்தால், வெற்றிதேவதை மீண்டும் இந்தியாவைப் பார்த்துப் புன்னகைக்ககூடும். இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

**

இந்தியாவின் சாகச வெற்றி

என்ன ஒரு சந்தோஷமான ஆச்சரியம்! சற்றுமுன் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்துவிட்டது. அதுவும் கொஞ்சம் எளிதாகவே!

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இருக்கிறது. கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளை விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றிருந்தது. உலகக்கோப்பை ஆரம்பிக்குமுன் இந்தத் தொடர் தோல்விகளினால் இந்திய வீரர்கள் உடலாலும், மனதாலும் களைத்திருக்கவேண்டும். பொதுவாகவே மோசமான விளையாட்டினால், இந்திய அணி வெளிநாடுகளில் ஒவ்வொரு தொடராகத் தோற்றுவந்தது. இதனால் இந்தியக் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும்(M.S.Dhoni) அவப்பெயர். போன உலகக்கோப்பை வெற்றியில் இந்தியாவுக்குப் பெரிதும் பங்களித்த டெண்டுல்கர், சேவாக் (Sehwag) போன்ற ஜாம்பவான்கள் இல்லாத இந்த அணி, இந்த உலகக்கோப்பையில் என்ன பெரிதாகக் கிழித்துவிடும் என விமரிசனங்கள் நமது நாட்டிலும் ஆஸ்திரேலியாவிலும் சீறிப்பாய்ந்தன. அதுவும் முதல்போட்டியிலேயே பாகிஸ்தானைச் சந்திக்கும் இக்கட்டான நிலை. High voltage drama. பாகிஸ்தானிடம் அனுபவமிக்க வீரர்களும், சிறந்த புதுமுகங்களும் இருந்தனர். எப்படியிருப்பினும் அவர்களது வேகப்பந்து வீசும் பௌலர்கள் நமது பௌலர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்தவர்களே. வெளிநாட்டு மைதானங்களில் நன்றாகவே ஆடிவருகிறது என்கிற போனஸ்பாயிண்ட்டும் பாகிஸ்தானுக்கு உண்டு. இதனால், இந்த முறை உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களும் கூறிவந்தனர்.

ஆனால் இன்று நடந்ததென்ன? என்ன ! பாகிஸ்தான் அணியின் சீறலை, சவாலைச் சிதறடித்து இந்தியா வெற்றி வாகை சூடிக்கொண்டது. இதுவரையில் ஆஸ்திரேலியாவில் சரியாக விளையாடாமல் அசடு வழிந்துகொண்டிருந்த சில இந்திய வீரர்களும், திடீரென உயிரூட்டப்பெற்றவர்கள் போல், சரியான தருணத்தில் மிகவும் உத்வேகத்துடன் அழகாக விளையாடிவிட்டார்கள் இன்று. இதைத்தான் ஆச்சரியம் என ஆரம்பத்தில் சொன்னேன்.

இந்தியாவின், இதுகாறும் தடுமாறிவந்த துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன்(Shikar Dhawan), தான் மறந்திருந்த தன் பேட்டிங் திறமையை இந்த மேட்ச்சில் வெளிக்கொணர்ந்தார். 76 பந்துகளில் 73 ரன். இவரைப்போலவே இதுவரை ஃபார்மில் இல்லாமல் மோசமாகப் பந்து வீசிவந்த இந்திய பௌலர்கள் உமேஷ் யாதவும், முகமது ஷமியும் பாகிஸ்தானுக்கெதிரான இந்த முக்கியமான உலகக்கோப்பை போட்டியில் விழித்துக்கொண்டார்கள்; திறமையாகப் பந்து வீசி பாகிஸ்தானை அடக்கி, இந்தியாவின் கௌரவத்தைத் தூக்கி நிறுத்தினார்கள். இந்திய ரசிகர்களுக்கு மிகவும் நிம்மதி தந்த விஷயம் இது. ஷமி 4 விக்கெட், யாதவ் 2, மோகித் ஷர்மா 2 என்கிற பட்டியல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசியிருப்பதைக் காட்டுகிறது. This sudden and welcome transformation of the out-of-form Indian players has given India a facile victory today, over her arch-rival Pakistan. இந்திய வீரர்களின் திறமையும், பங்களிப்பும் இனிவரும் போட்டிகளிலும் இவ்வாறே சிறப்பாக வெளிப்படவேண்டும்

எதிர்பார்த்ததைப் போலவே சிறப்பாக ஆடிய விராட் கோலி (Virat Kohli), ஆட்டநாயகனாக திகழ்ந்தார். இந்தியாவின் முதல் மேட்ச்சிலேயே அருமையான சதம். 56 பந்துகளில் 74 ரன்னெடுத்து மைதானத்தைக் கொளுத்திப்போட்ட சுரேஷ் ரெய்னா மறக்கமுடியாத இன்றைய இந்திய கிரிக்கெட் வீரர்.

பாகிஸ்தானிற்கும் இந்தப் போட்டியில் இந்தியாவை எப்படியாகினும் வென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பு. ஒரு படபடப்பு. இன்றைய போட்டியில் அதன் வேகப்பந்து வீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாகவே அமைந்தது. 7அடி 2அங்குல உயரப் பனைமரமான முகமது இர்ஃபான் (Mohammed Irfan) என்கிற வேகப்பந்துவீச்சாளரை வைத்து, அனுபவமற்ற இளம் இந்திய வீரர்களை பயமுறுத்தப் பார்த்தது பாகிஸ்தான். ஆனால், பாச்சா பலிக்கவில்லை. இந்திய வீரர்கள் அவரது பந்துவீச்சைப் பாய்ந்து துவம்சம் செய்தார்கள். ஆயினும், பாகிஸ்தானின் சோஹைல் கான், தன் துல்லியமான பந்துவீச்சினால் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களான தோனி, ஜடேஜா, ரஹானே போன்ற வீரர்களைத் திணற அடித்தார். இறுதி ஓவர்களில் அவருடைய பௌலிங் சிறப்பாக அமையாதிருந்தால், இந்தியாவின் ஸ்கோர் 330 வரை சென்றிருக்கும். கடைசி ஓவர்களில் இந்திய வீரர்களைத் துள்ள விடாது கட்டுபடுத்தியது அவர் பௌலிங். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானின் ஆல்ரவுண்டரான ஷஹீத் அஃப்ரிதி (Shahid Afridi) சோபிக்கவில்லை. அவரது ஸ்பின் பௌலிங்கை சுரேஷ் ரெய்னா தூக்கி அடித்து வானவேடிக்கை நிகழ்த்திவிட்டார். இந்தியாவின் 301 என்கிற இலக்கைத் துரத்துவதில், நிதானமாக ஆரம்பித்த பாகிஸ்தான், அவ்வபோது இந்திய பௌலர்களிடம் விக்கெட்டைப் பறிகொடுத்துவந்தது. திடீரென பாகிஸ்தானின் மிடில்ஆர்டர் விக்கெட்டுகள் இரண்டை உமேஷ் யாதவ் அடுத்தடுத்து வீழ்த்த, பாகிஸ்தானின் மூச்சுத்திணறல் மைதானத்துக்கு வெளியேயும் கேட்டது. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் (Misbah-ul-Haq) சிறப்பாக விளையாடி 76 ரன் எடுத்தார். வேகமாக ரன்னெடுக்கும் முயற்சியில் அவர் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 224 ரன்களில் இந்தியாவின் மிரட்டலுக்குமுன் மரவட்டையாய் சுருண்டது.

கிரிக்கெட் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து ஆறாவது முறையாக வீழ்த்தியுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு இன்றைய தினம் ஒரு பார்ட்டி தினம். கொண்டாடுவோம். இந்திய வீரர்களும் அடுத்த ஞாயிறு வரை கொஞ்சம் இளைப்பாறட்டும். அடுத்துவருவது தெற்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான கனல் பறக்கும் போட்டி. நம்மவர்களின் இளமை வேகமும், இன்றைய அனுபவ விவேகமும் கைகொடுக்கும் என நம்புவோம்.

**

அது வேறொரு உலகம்

கனவுகளை விரித்துக்
கதை சொல்லிய கண்கள்
களிப்பேற்றின
கடகடவென இழுத்துச்சென்றன
கண்காணா உலகிற்கு
பயணிக்கப் பயணிக்கப்
பகலிரவுகள் காணாமல் போயின
இன்பமென்றும் துன்பமென்றும்
உறவென்றும் பிரிவென்றும்
கதைத்துக்கொண்டிருந்த உலகம்
கதிகலங்கிப் பின்வாங்கி மறைந்தது
சிந்தனையையும் தாண்டிய
விந்தை வெளியில்
ஒற்றை நிலவாய்
நித்ய நிதர்சனமாய்த் தெரிந்தது
ஜொலிக்கும் எழில் வதனம்

**
எழுத்து.காம் மின்னிதழில் வெளியாகியிருக்கிறது மேற்கண்ட கவிதை.-ஏகாந்தன்

உலகக் கோப்பை ஆசைகள்.. உள்ளத்திலே ஏதேதோ ஓசைகள் !

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஒரு கனவுலகிற்குள் தள்ளி, பரவசத்தில் ஆழ்த்தவிருக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்க இன்னும் சிலமணிநேரமே உள்ளது.

14 நாடுகள் பங்கேற்கவிருக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்த வருடம் ஆஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் சேர்ந்து நடத்துகின்றன. பெப்ரவரி 14-ஆம் தேதி நியூஸிலாந்து க்ரைஸ்ட்சர்ச்சில் துவங்கும் முதல் போட்டியில் நியூஸிலாந்தும் ஸ்ரீலங்காவும் ஒருவரை ஒருவர் பதம் பார்த்துக்கொள்கின்றன. மகேந்திரசிங் தோனியின்(Mahendra Singh Dhoni) தலைமையிலான இந்திய அணி தனது பரமவைரியான பாகிஸ்தானுடன் 15-ஆம் தேதி அடிலெய்டில் (ஆஸ்திரேலியா) மோதவிருக்கிறது.

இந்தியா தற்போதைய கிரிக்கெட் உலக சாம்ப்பியன். 2011-ல் இந்தக் கோப்பையை இந்தியாவிற்காகப் போராடிப் பறித்துவந்தது மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி. அந்த அணி ஒரு சூப்பர் அணி என்றால் அது மிகையில்லை. கிரிக்கெட் உலக ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர், மேலும் சர்வதேச அளவில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் போன்றவர்கள் விளையாடிய சிறப்புமிக்க டீம் அது. இப்போது தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கும் அணி திறமை மிக்க புதுசுகளையும், உலகக்கோப்பை அனுபவமற்ற கத்துக்குட்டிகளையும் ஒருங்கே கொண்டது. தோனி இந்த அணிக்கு ஒரு அனுபவமிக்க, கேப்டன் கூல். அவரது தலைமையும் திறமையும் போதுமா? கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டாயிற்றே. மீதியுள்ள பத்துப்பேரின் ஒத்துழைப்பும் அணியின் வெற்றிக்கு அவசியமல்லவா?

நமது அணியின் பலம் என்று ஒன்றைக் குறிப்பிடவேண்டுமெனில் அது ஓரளவுக்கு பேட்டிங்தான். அனுபவம் குறைவு எனினும் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் அணியில் இருப்பது விசேஷம். பேட்டிங்கைப் பொறுத்தவரை நமது பெரும் கவலைக்குக் காரணம் ஃபார்மில் இல்லாத துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன்(Shikar Dhawan). இந்தியாவில் சூரப்புலி. ஆஸ்திரேலிய மைதானங்களில் பம்முகின்ற பூனை. வெளிநாட்டுப் பிட்ச்சுகளில் காற்றில் பந்தை துழாவித் திணரும் அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டும். பதிலாக, அதிரடி அரசன் வீரேந்தர் சேவாக்கை களம் இறக்கியிருக்கவேண்டும். சேவாக் ஆஸ்திரேலிய மைதானங்களிலும் தன் அதிரடியைக் காண்பித்தவர். எகிறும் வேகப்பந்துகளை எளிதாகச் சந்திக்க வல்லவர். அவ்வளவு சிறப்பான ஃபார்மில் தற்போது அவர் இல்லையென்று சிலர் சொல்லலாம். இருந்தும் அவர் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால் எதிரி டீமின் பௌலர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். ஓப்பனராக இறங்கி 10-12 ஓவர் சேவாக் நின்றுவிளையாடினால் இந்திய அணிக்கு சிறப்பான ஸ்கோரையும், பின்வரும் வீரர்களுக்கு நல்ல உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தரவல்லவர். தேர்வுக்குழு இவரது சிறப்பு குணாதிசயங்களைக் கருத்தில் கொள்ளாதது இந்தியாவின் துரதிர்ஷ்டம். சேவாக்கை சேர்க்காத நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக விளையாடிய அனுபவம் உடைய துவக்க ஆட்டக்காரரான முரளி விஜயையாவது சேர்த்திருக்கலாம். இளம் வீரர்களான ரோஹித் ஷர்மா அல்லது அஜின்க்யா ரஹானே ஷிகர் தவனுடன் துவக்க ஆட்டக்காரராக இறங்குவார் எனத் தோன்றுகின்றது. தவனின் நிச்சயமற்ற பேட்டிங்கை கருத்தில்கொண்டு எதிரே பேட் செய்யும் ரோஹித்தோ அல்லது ரஹானேயோ அதிஜாக்ரதையாக ஆடவேண்டிய நிர்ப்பந்தம். 4, 5, 6-ஆம் இடங்களில் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் களமிறங்குவர் எனத் தோன்றுகிறது. மிட்டில் ஆர்டரில் இந்த மூவரின் பங்கு மிகமுக்கியமானது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்கையில், அவர்களது துல்லியமான வேகப்பந்து வீச்சில் நமது ஆரம்ப ஆட்டக்காரர்களின் ஸ்டம்ப்புகள் எகிறிப் பறக்க வாய்ப்புகள் அதிகம். ஆதலால் முதல் 10-15 ஓவருக்குள் இந்தியா 2-3 விக்கெட்களைப் பறிகொடுத்துத் திணருகையில் கோஹ்லி, ரெய்னா, தோனி ஆகியோரின் விளையாட்டு மிகவும் சிறப்பானதாக அமையவேண்டும். அவர்கள்தாம் இந்திய அணியின் நெருக்கடிநிலைக்கேற்ப, முதலில் முன்னெச்செரிக்கையாகவும், பிறகு தேவைப்படுகையில் அதிரடி ஆட்டமாகவும் தங்கள் நிலைகளை மாற்றி அமைத்து ஆடவேண்டியிருக்கும்.

பேட்டிங்கில் 7, 8-ஆவது இடத்திற்கு ஆல்ரவுண்டர்களான அஷ்வின், ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி (Stuart Binny) ஆகியோரில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தேர்வில்தான், இந்திய அணியின் நிலை, விளாயாடும் மைதானத்திற்கேற்ப கேப்டன் தோனியின் கணிப்பு, வியூகம் சரியாக இருக்கவேண்டும். 7-ஆவது 8-ஆவது இடத்து பேட்ஸ்மன் விளையாட வருகையில் இந்தியாவுக்குக் குறைந்த பந்துகளில் நிறைய ரன்கள் தேவைப்படும் நிலை ஏற்படக்கூடும். அதிரடி ஆட்டம்தான் அதற்கு ஒரே மருந்து. ஐபிஎல் போட்டிகளின் அனுபவப்படி பார்த்தால், பின்னி (Binny), பட்டேல், ஜடேஜா மூவரும் இந்த ரோலுக்கு பொருத்தமானவர்களே. ஆனால் விளையாடும் மைதானத்திற்கேற்ப ஒரு தரமான ஸ்பின்னர் வேண்டும் என்கிற நிலையில் அஷ்வின் அல்லது பட்டேலுக்கு இடம் கிடைக்கலாம்.

9, 10, 11-ஆவது இடத்திற்கு இந்தியாவுக்காக பேட்டிங் விளையாட வருபவர்கள் பகலிலேகூட பசுமாடு தெரியாத ஜன்மங்கள்! நமது வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், முகமது ஷமி, மற்றும் மோஹித் ஷர்மா. இந்த மூவரில் ஒருவராக புவனேஷ்வர் குமார் இருந்தால் அவருக்குக் கொஞ்சம் பேட்டிங் தெரியும்; ஓரளவு பொறுப்புடன் ரன் சேர்க்க முயற்சிப்பார். மற்ற பௌலர்கள் பேட்டிங் செய்கையில் நாம் பூஜை ரூமுக்குள் உடனே பாய்ந்து நமது இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொள்வது நல்லது. இல்லை, அவர்கள் விளையாட்டைப் பார்த்தே தீருவேன் என சிலர் அடம் பிடிக்கலாம். அவர்களில் ரத்த அழுத்தம் உடையவர்கள் மருந்து, மாத்திரை, டம்ளர் தண்ணீர் இத்யாதிகளை அருகில் வைத்திருப்பது தற்காப்புக்கு உகந்ததாக இருக்கும்.

இப்படிஓரு விசித்திர காம்பினேஷனில் இந்தியா பேட்டிங் செய்து ரன் குவிக்கவேண்டும் அல்லது எதிரி டீமின் ஸ்கோரை விரட்ட வேண்டும், வெல்லவேண்டும். என்ன ஒரு இக்கட்டான நிலை, பாருங்கள். இருப்பினும், இருண்ட வானில் ஒரு ஒளிக்கீற்றுபோல ஃபார்மில் உள்ள அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இளம் இந்திய வீரர்கள் அணிக்கு ஒரு அரணாய் இருந்து ரன் சேர்த்துக்கொடுப்பார்கள் எனத் தோன்றுகிறது. நம்பிக்கைதானே ஐயா, வாழ்க்கை..

நமது வேகப்பந்து வீச்சாளர்களைப்பற்றி என்னத்தச் சொல்ல. துல்லியமாகவோ, சரியான திசையை நோக்கியோ வீசாமல், இஷ்டத்துக்கும் பந்துகளை தூக்கிப்போட்டு, எதிர் அணியின் பேட்ஸ்மன்களுக்குக் கிளுகிளுப்பூட்டுவதில் நமது வேகப்பந்துவீச்சாளர்களை மிஞ்ச உலகில் யாருமில்லை. உமேஷ் யாதவ், முகமது ஷமி இவர்களின் துல்லியமற்ற, கட்டுப்பாடற்ற பந்துவீச்சை நினைத்தால் கலக்கம் ஏற்படுகிறது. பந்துகள் ஏகத்துக்கும் எகிறும் ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து மைதானங்களில் இந்த பிரஹஸ்பதிகள் ஒரு கண்ட்ரோல் இல்லாமல், கேப்டன் அமைத்திருக்கும் ஃபீல்டிங்கிற்கேற்ப பந்து வீசாமால் போனால், அது எதிரணிக்கு ரன்களை வாரி வழங்குவதில் போய்முடிந்துவிடும். இஷ்டத்துக்கும் ஓடும் இந்த அசட்டுக் குதிரைகளைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் கேப்டன் தோனியின், பங்கு மிகவும் முக்கியமானது. அணியின் வெற்றி வாய்ப்பு என்பது பெரும்பாலும் அங்கேதான் தொக்கி நிற்கும் எனத்தோன்றுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் இந்தியா இதுவரை ஐந்து முறை மோதியுள்ளது. அனைத்திலும் இந்தியாவுக்கே வெற்றி என்கிற உண்மையில் இந்தியாவுக்காக முன்பு விளையாடிய சர்வதேசத்தரம் வாய்ந்த வீரர்களான, டெண்டுல்கர், அஸருத்தீன், கங்குலி, திராவிட், சேவாக் போன்றவர்களின் அபாரத் திறமை ஒளிந்துள்ளது. இருந்தும் இந்த மாதிரி புள்ளிவிபரங்களில் மனதை இழக்காமல், தங்கள் நாட்டிற்காக, அணியின் வெற்றிக்காக இந்தியாவின் தற்போதைய வீரர்கள் ஒன்றாக இணைந்து சிறப்பாக விளையாடினால், பாகிஸ்தானுக்கெதிரான முதல் மேட்சிலும் இனிவரும் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு தேடிவரும்.

இந்திய அணிக்கு நமது வாழ்த்துக்கள். இனி உலகக்கோப்பை முடியும் வரை காலையில் எழுந்து நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து படபடப்புடன் டி.வி. பார்க்கும் வழக்கம் நம்மையெல்லாம் தொற்றிக்கொள்ளும். சிலருக்கு வீட்டில் இருக்கும் பெண்களின் வசவுகளைக் காலை நேரத்தில் வாங்கிக்கட்டிக்கொள்ளும் அனுபவமும் இலவச இணைப்பாகக் கிடைக்கக் கூடும் ! Good Luck இந்திய ரசிகர்களே..
**

வால்..வால்.. கேஜ்ரிவால் !

விளக்குமாறு படம் போட்ட (ஆம் ஆத்மியின் தேர்தல் சின்னம்) வெள்ளைத்தொப்பிகளை அணிந்து கொண்டு மாதக்கணக்கில் வால்..வால் என்று கத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில், ஆட்டோவில் பவனி வந்தவர்கள், பெரும்பாலோர் இளசுகள்- சும்மா வெறுமனே சுத்திச்சுத்தி வரவில்லை டெல்லியை. சமூகத்தின் அடிமட்டத்திற்குச் சென்று, சந்துபொந்துகளிலெல்லாம் போய் ஆம் ஆத்மியுடன் (திருவாளர் பொதுஜனத்தைக் குறிக்கும் ஹிந்தி வார்த்தை) பேசியிருக்கிறார்கள். சராசரி டெல்லிவாசியை ஆம் ஆத்மி கட்சியின்மீது நம்பிக்கை கொள்ளவைத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இன்று டெல்லி அரசியலில் வீசிய ’கேஜ்ரிவால்’ என்கிற கடும்புயல். ஆம் ஆத்மிக் கட்சியின் தாக்குதலில், பிரதானப் போட்டிக் கட்சியான பாரதிய ஜனதாவின் வண்டி தடம் புரண்டு விழுந்துவிட்டது. கடந்த 10 வருடங்களாக டெல்லியை ஆண்ட மகாமகோ தேசியக்கட்சியான காங்கிரஸின் கதி? ஐயோ! ஐயோ! கேட்காதீர்கள். அட்ரஸையோ காணோம் டெல்லியில்! கடைசிச்செய்தி கிடைக்கும்வரை அது இன்னும் கிடைத்தபாடில்லை.

2013-ல் நடந்த இந்திய யூனியன் பிரதேசமான டெல்லியின் 70-சீட் அசெம்பிளிக்கான தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்ட புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் பண்டிட்டுகளின் கணிப்பையும் மீறி 28 சீட்டுகளை கைப்பற்றி ஒரு அசத்து அசத்தியது. 36 சீட் வென்றால் ஆட்சி அமைத்துவிடலாம் என்கிற நிலையில் பாரதிய ஜனதா (பிஜேபி) வுக்கு 32 சீட்டுகளே கிடைத்தன. மிச்சமிருக்கும் 4 சீட்டுகளின் ஆதரவைப் பெறமுடியாத நிலையில் ஆட்சி அமைக்கமுடியாது என கவர்னரிடம் கைவிரித்தது முதலாம் இடத்தைப் பெற்ற பிஜேபி. வேறுவழியில்லாமல் இரண்டாவது பெரிய கட்சியான ஆம் ஆத்மியைக் கவர்னர் அழைக்க, ஆட்சியைத் தயக்கத்துடன் ஏற்ற கேஜ்ரிவால், வேகவேகமாகத் தன் கட்சி எம். எல்.ஏக்களுடன் அசெம்பிளி வந்து கையிழுத்திட்டார். வெளியே ஓடினார். அசெம்பிளி மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு ஒருநாள் முன் விறுவிறுவென்று மின்கட்டணத்தை வெகுவாகக் குறைத்து உத்தரவிட்டார். எந்த நேரத்திலும் தங்களை எதிர்க்கட்சிகள் கலைத்துவிடலாம் என்கிற பதற்றத்தில் என்னென்னவோ செய்தார்; காங்கிரஸையும் பிஜேபியையும் சாடினார். நாற்காலியில் உட்கார்ந்திருந்த நேரத்தைக்காட்டிலும் வீதியில் கூச்சலிட்டதும், தர்னா செய்ததும் தான் அதிகநாட்கள். தானே தன் கட்சியின் 49- நாள் ஆட்சியை ஒரு முடிவுக்குக்கொண்டுவந்து, விடுவிடுவென ராஜினாமா செய்துவிட்டு ஓரத்தில் போய் நின்றுகொண்டார் கேஜ்ரிவால். அதற்குப்பிறகு அரசியல் வட்டாரங்களில் அவர்மீது வீசப்பட்ட கேலிகள், கிண்டல்கள். (கடந்த வருட பொதுத்தேர்தலின் பிரச்சாரப்போரின்போது 49-நாட்களில் பதவியை ராஜினாமாசெய்து ஓடியதற்காக, அரவிந்த் கேஜ்ரிவாலை ”AK-49” என்று விளாசினார் நரேந்திர மோதி!); பதில் தாக்குதல், பதவியிலிருந்து இறங்கியதற்காக மக்களிடம் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்கும் படலம் என்று டெல்லி அரசியலின் சுவாரஸ்யமான ஒருவருட காலம் கடந்து சென்றது.

மே 2014-ல் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில், தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா வென்றது. மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. டெல்லி அரசியலில் குறைந்த காலத்தில் பரபரப்பு ஏற்படுத்திய மிதப்பில், தேசியப் பொதுத்தேர்தலில் நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஆர்ப்பரித்த ஆம் ஆத்மி கட்சியோ மண்ணைக் கவ்வியது. நரேந்திர மோதிக்கு எதிராக ஓபன் சேலஞ்சாக இறங்கிக் கோஷமிட்ட கேஜ்ரிவால், நாடெங்கும் வீசிய மோதி அலையில் தலைகவிழ்ந்து ஒளிந்துகொள்ளுமாறு ஆகிப்போனது அப்போது.

இந்தப் பிண்ணனியில்தான் பார்க்கவேண்டும் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் இன்றைய ஹிமாலய வெற்றியை. பொதுத்தேர்தலுக்குப் பின் மாநிலங்களில் நடைபெற்ற அசெம்பிளித் தேர்தல்களில் வெற்றி நடை போட ஆரம்பித்திருந்தது பிஜேபி (பாரதிய ஜனதா) கட்சி. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர்பார்த்தே அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கிரண் பேதியை முதல்வர் வேட்பாளராகத் தெரிவு செய்து பிரச்சாரம் செய்தது அமித் ஷா தலைமியிலான பிஜேபி. கேஜ்ரிவாலைப்போலவே, கிரண் பேதியும் அன்னா ஹஸாரேயின் இயக்கத்திலிருந்து வெளிவந்தவர். நேர்மைக்குப் பேர்போனவர் என்கிற பிம்பம் பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இருகட்சிகளின் பிரச்சாரத்தில் அனல் பரந்தது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வீடுகளுக்கு அளிக்கப்படும் தண்ணீர் இலவசமாகத் தரப்படும்; மின்கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும்; இலவச Wi-Fi internet என்றெல்லாம் வாக்குறுதிகளை விசிறி அடித்திருந்தார் கேஜ்ரிவால். அடிமட்ட ஆதரவுகொண்ட ஆம் ஆத்மியின் பெருகிவரும் செல்வாக்கைக் கருத்துக்கணிப்பில் மீடியா படம்போட்டுக் காட்டியது. மீடியாவின் மற்றுமொரு பகுதி “hot and neck and neck race between BJP and AAP” என்று சஸ்பென்ஸ் லெவலை ஒரேயடியாக ஏற்றியது. மாய எண்ணான 36-ஐ நோக்கிய படையெடுப்பில் இரண்டு கட்சிகளும் ஒரேயடியாக நெருக்கிக்கொண்டால், மீண்டும் ’தொங்கு அசெம்பிளி’யாகிவிடுமே என்கிற சாத்தியமும் சில தரப்பிரனரால் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. பிப்ரவரி 7-ல் நடந்த தேர்தல் முடிவுகள் இன்று (10-02-2015) மதியம் அறிவிக்கப்பட்டபோது, டெல்லியின் தேர்தல் சரித்திரம் ஒரேயடியாகப் புரட்டிப் போடப்பட்டுவிட்டது தெரிந்தது. பாரதிய ஜனதாவின் வலிமையை அலட்சியமாகப் புறம் தள்ளி, இந்திய அரசியல் சீனில் நெஞ்சை நிமிர்த்திக் காட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. கிட்டத்தட்ட அந்தக் கட்சியாலேகூட நம்பமுடியாத ஒரு அசுரத்தனமான வெற்றி.70-க்கு 67 சீட்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு. பிஜேபி-க்கு 3. காங்கிரஸைக் காணவில்லை!

ஒரேயடியாக வெற்றிபோதையில் குதிக்காமல், அடக்கத்தோடு கொண்டாடுமாறு கேஜ்ரிவால் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக மீடியா இன்று மாலை கூறியது. இன்றைய மாலையில் இருந்து, டெல்லி நகரமே பட்டாசுச் சத்தத்தில் அதிர்ந்துகொண்டிருக்கிறது. ஸ்வீட் ஷாப்புகளில் லட்டுகள் நல்ல விற்பனை. இதனை எழுதும் இந்த இரவு நேரத்தில் கேட்கும் சத்தம் ஆம் ஆத்மித் தொண்டர்களின் கொண்டாட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது. Surely, time for celebrations for AAP. But miles to go for Arvind Kejriwal. 49-நாள் ஆட்சியின்போது நடந்தது போன்ற பார்லிமெண்ட்டின் முன் தர்னா, ஜனதா தர்பார் என்கிற நாடக அரங்கேற்றம், மத்திய அரசை ஓயாது குறைகூறுதல், போலீஸுடன் தகராறு போன்ற கேலிக்கூத்துக்களை எல்லாம் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி தவிர்த்தால் அதன் பரிணாம வளர்ச்சிக்கு நல்லது. நல்லாட்சியில், மக்கள் சேவையில் கவனம் செலுத்துமேயானால், ஆம் ஆத்மி கட்சி வரவிருக்கும் உத்திரப்பிரதேச அசெம்பிளித் தேர்தலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும். எதிர்வரும் சில வருடங்கள் கேஜ்ரிவால் செயல்வீரரா இல்லை வெறும் வெத்துவேட்டா என்பதை டெல்லி வாசிகளுக்கு உறுதிப்படுத்திவிடும். அதுவரை பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்கவேண்டியதுதான்.

**

திரையெனும் சிறை

அடிக்கடி நாங்கள் சாமான் வாங்கும்
மளிக்கைக்கடைப் பெண்மணி
ஆண்டவனால் ஏதோ ஒரு அவசரத்தில்
படைக்கப்பட்ட தனிப்பிறவி
கடைக்குள் நுழைந்தவுடன்
ஆள் நுழைந்த சந்தடி கேட்டு
வாங்கய்யா வாங்க என்ன வேணும் என்று
வாயென்னவோ தன்னிச்சையாக
சொல்லிவைக்கும் என்றாலும்
கண்ணோ உங்களைக் கவனமாய்த் தவிர்த்து
தலைக்குமேலே பொறுத்தப்பட்டு
ஓய்வு ஒழிச்சலின்றி வன்மம் பேசும்
டிவியில் பாசமாய்ப் பதிந்திருக்கும்
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு
நீங்களே கடைக்குள்ளேபோய்
விதவிதமான சாமான்களை
விபரமாய் நோட்டம்விட்டு
விலையெல்லாம் சரிபார்த்து
அம்மணியின் முன்னே நாலைந்தைப் பரப்பி
எத்தனை ஆச்சு என்பீர்கள்
எக்கச்சக்கமான சமயத்தில் வந்து
எதெதெற்கோ விலைகேட்டு
உயிரை வாங்கும் உங்களை
உடனே ஒருவழி செய்யமுடியாமல்
அவசரமாக விலையைச் சரிபார்த்து
நூத்திஎம்பத்திநாலு என்பார் எரிச்சலுடன்
ஐநூறை உங்கள் கையிலிருந்து பிடுங்கி
அவசரமாய் உள்ளே தள்ளியபின்
நோட்டுக்களாகப் பாக்கிக் கொடுத்துவிட்டு
ஆறுரூபாய்ச் சில்லறையை
அப்பறமா வந்து வாங்கிக்குங்க என்று
அடிக்காத குறையாக உங்களை விரட்டியே
பரபரப்பாய் மேலே கண்ணைச் செலுத்தி அந்த
பாழாய்ப்போன டிவியைத்தான் பார்ப்பார்
இந்த இரண்டு நிமிடக் காலவெளியில் அங்கே
யார்யாருக்கு என்னென்ன நடந்ததோ ஐயோ !

**

ஏதாவது

ஏதாவது சொல் என்கிறாய்
என்னத்தைச் சொல்ல
இல்லாத ஒன்றை
எப்படிச் சொல்வது
என்னதான் சொல்வது
சொல் மறந்துபோன வேளையில்
புல் மறந்துவிட்ட பூமியில்
மழையைப்பற்றி என்ன சொல்வது ?
சொல்வதற்கு ஏதுமில்லை
சொடுக்குவதற்கு விரல்களில்லை
என்றால் புரிவதில்லை
போதாத வேளையில்
ஏதாவது சொல்லென்றால் . .

**