ஞானம் in a nutshell !

நமஸ்காரம் சார்.. பாத்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப பிஸியா?

சும்மா இருப்பதே சுகம்..

ஹி.. ஹி.. அது சரி. அதுக்காக ஒன்னுமே செய்யாம…

மனிதனிடம் இருந்தே குரங்கு பிறந்தது.

சார்..சார்.. கொஞ்சம் நில்லுங்க… நீங்க ஏதோ  தப்பா…

குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான் உங்களோட வாழ்க்கை..

இது கொஞ்சம் சரியாத்தான் படறது..

நீங்கள் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறீர்கள். அவரோ.. உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆ… அப்படியா!

மாட்டுக்கறி தின்றால் கடவுள் கண்ணுக்குத் தெரியமாட்டாரா?

சார்.. எங்கே  வர்றீங்க..  அதுக்காக மாட்டைக் கொன்னு மாங்குமாங்குன்னு தின்னுப்புட்டு, சாமி, பூதம்னா .. எப்படிக் கண்ணுக்குத் தெரியும்?

துறவிகள் எல்லாம் உடனே வீடு திரும்பவேண்டும்.

ஏன் சார்?

கடவுள் இல்லை.

சார்! எதையாவது தின்னுக்கோங்க… அதுக்காக இப்படில்லாம் அநியாயமா..

உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடவுளைத் தூக்கிக் குப்பையிலே எறிந்துவிடுங்கள்..

ஐயய்யோ ! அப்பறம் எங்க கதி?

பரலோக சாம்ராஜ்ஜியம் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஓஹோ..! பித்து முத்தியிருந்தாலும் பரவாயில்ல. பிள்ளையாரு பாத்துக்குவாரு. உள்ளே வாங்க.  கணேஷ் மந்திர் வந்துட்டோம். சூடா, நல்ல பிரசாதம் கெடைக்கும். வாங்கி, கொஞ்சம் வாயில போட்டீங்கன்னா.. தெளிஞ்சிரும்…

**

நடப்பது நடக்கட்டும் …

ஜனவரி 1. ஆங்கிலக் காலண்டரின் அறிவிப்பு. முந்தைய இரவில் தூங்க ஆரம்பித்த வேளையில், சீரியலாக வெடித்துக் கலவரப்படுத்திய பெரும்பட்டாசுகளின் சத்தம் இன்னமும் அதிரும் மனத்திரையில்.. பெங்களூர் காலையின் சிலுசிலுப்பு பால்கனிக் கதவை ஒரேயடியாகத் திறக்கவேண்டாம் என்று எச்சரித்தது. சூடான, வாசனையான ஃபில்ட்டர் காப்பி.   நன்றாகத்தான் ஆரம்பித்திருக்கிறது புத்தாண்டு 2024.

பால்கனியிலிருந்து பார்க்க, பக்கத்தில் சிஎம்ஆர் ஐடி காலேஜின் காம்பவுண்டிற்குள் அதன் ஆடிட்டோரியம், சுற்றுவெளி. அவற்றில் அடத்தியாக உயர்ந்து சிறுசிறு ஆரஞ்சுக் கொண்டைகளோடு மினுக்கும் கரும்பச்சை மரங்கள். நாட்டு மரங்கள். (இதை முதலில் சொல்லவேண்டும். நகரமென்றால், அதுவும் புதுசு புதுசாக முளைக்கும் குடியிருப்பு, பெருவணிக வளாகங்களில் பனைமர வகைகள்தானே வளர்க்கப்படுகின்றன.. ”சார்.. புரிஞ்சுக்குங்க.. பனைதான் சொன்னபடி கேக்கும். போட்ட கோட்டில வரிசையா நிக்கும், வளரும்.. பாக்க கவர்ச்சியா இருக்கும். நீங்க தான் நாட்டுமரம்.. நாட்டுமரம்கிறீங்க.. அதுகள்ல்லாம் வளர்றதுக்கு நாளுகும்.. வளர்ந்தாலும், தன் இஷ்டத்துக்கு கோணமாணலா வளரும் சார்.. அழகால்லாம் இருக்காது!” – இது ஒரு பிரஹஸ்பதியின் விளக்கம்) அந்த மரங்களின் ஆரஞ்சுப்பூக்களை ரசித்தவாறு, அதில் உட்காரும் கிளிகளையும் குருவிகளையும் பார்த்தவாறு பேசிக்கொண்டு ஒரு மாலையில் நடந்தபோது, ”எங்களது வாழ்வியலில் இவை கிருஷ்ண பகவானோடு சம்பந்தப்பட்டவை!” என்றார் கூட நடந்துகொண்டிருந்த ஒரு பெங்காலி நண்பர். கிருஷ்ண பகவானோடு சம்பந்தப்படாதது என்று ஏதும் உண்டா என்ன, இந்த உலகில் என்று கேட்டுவைத்தது மனம்..

அத்தகைய ஆழவேர் கொண்ட பெருமரங்களில், ஆசையாக அதிகாலை நேரங்களில் அமர்ந்துகொண்டு, கிளைக்குக் கிளை தாவிக்கொண்டு விதவிதமான பட்சிகள் ஏதேதோ பேச ஆரம்பித்திருந்தன. என்ன பேசி என்ன பயன்? ஜனவரி முதல்நாள் என்கிற ப்ரக்ஞை இல்லாமல், ஹாப்பி ந்யூ இயர் என்று சிரிக்கத் தெரியாமல் .. ஹ்ம்… என்ன மாதிரி ஜீவன்கள் இவையெல்லாம்? கூடவாழும் அனைத்து உயிர்களையும் அன்பாக நடத்தவேண்டும், சமமாக பாவிக்கவேண்டும் என ஒரு பெரிசு, எப்போதோ சொன்னது நினைவுக்கு வர, வேற்றுயிர் விமர்சன சிந்தனையிலிருந்து விடுபடுகிறேன்.

மேலே – ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் (2023)தங்கம் வென்ற இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி

காலைக் காஃபியைக் கொஞ்சம் மீதி வைத்துக்கொண்டு (படிக்கும்போது ஸ்லோ மோஷனில் குடிக்க), லேப்டாப்பை முடுக்கி நமது மீடியா செய்திகளை மேய ஆரம்பித்தேன். காலை ரிச்சுவல்! அப்போது  இது கண்ணில் பட்டது, இண்டியன் எக்ஸ்ப்ரெஸில்: சர்வதேச அரங்குகளில் இந்தியாவுக்குக் கிடைத்த பதக்கங்களெல்லாம், கிராமப்புற, சிறுநகரங்களிலிருந்து வந்த, ரூ.5 லட்சத்துக்கும் குறைவான வருட வருமானம் உடைய விவசாய, தொழிலாள, கீழ்-மத்தியதரக் குடும்பங்களிலிருந்து வந்த இளைஞர்கள், யுவதிகளால் வெல்லப்பட்டவை…

ஒரு கணம் அந்தச் செய்தியின் தாக்கத்தில் நிலைத்தேன். யோசித்தேன். ஆமாம். அப்படித்தான் இருக்கும். அத்தகைய குடும்பத்தினர்தான் தங்கள் பிள்ளைகளை முடிந்தவரை படிக்கவைப்பதோடு, விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கெடுக்கவைப்பார்கள். கூடுமானவரை பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பார்ப்பார்கள், ஊக்குவிப்பார்கள். தேசீய அளவில் பங்கேற்க நேர்ந்து, ஒருவேளை சர்வதேசப் போட்டிகளிலும் நாட்டிற்காகத் தங்கள் பிள்ளைகள் கலந்துகொள்ள வாய்த்தால், உண்மையில் பூரித்துப்போவார்கள். அக்கம்பக்கத்திலும் சொல்லி, பெருமைப்படுவார்கள். ஆம், அவர்களேதான்..  

பின்னே? நகரவாழ் குடும்பத்தினரா, அதிலும் வசதியான குடும்பத்தினரா தங்கள் குழந்தைகள் படிப்பதோடு, விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என முனைவார்கள்? நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளிலும் பங்குகொண்டு பதக்கங்கள் வாங்கவேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள்? எல்லோரும் அப்படியல்ல என்றபோதிலும், இவர்களில் பலருக்கு பிறந்த நாட்டைத் தினம்தினம் பழித்தால்தானே பொழுதே போகிறது! தூற்றினால்தானே தின்ற சோறே ஜெரிமானமாகிறது? எப்படியாவது பிள்ளைகளை இங்கே நன்றாகப் படிக்கவைத்து, பூலோக வைகுண்டமான அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்தால்தானே இவர்களுக்கு ஜென்மசாபல்யம்? அயல்மண்ணில் தங்கள் பிள்ளைகள் சேவை செய்யவேண்டும் என்றுதானே இங்கே அரும்பாடு படுகிறார்கள் ?  அவர்களிடம்போய், தேசம், தேசத்திற்கான பங்களிப்பு,  தங்கம், வெள்ளி, வெங்கலம் என்றெல்லாம் பிதற்றலாகுமா? சொன்னால்தான் எடுபடுமா !

போகட்டும். போகிறவர்கள் போகட்டும். அமெரிக்கா, கனடா, யூகே என்றெல்லாம் விதவிதமான அயல்நாடுகளில் ஆனந்தமாய் வாழ்க்கை நடத்தட்டும்.  இருப்பவர்கள் இருப்பார்கள் இங்கே. குறைந்த வசதிகளினூடேயும் அவர்களும் படிப்பார்கள், வளர்வார்கள். வாழ்வார்கள். வாழ்க்கையில் ஏதோ கொஞ்சம் முன்னேற்றமும் காண்பார்கள்.  முடிந்தால், அவர்களில் சிலர், தங்களின் இளவயது போராட்டங்களிடையே, ஓரிரண்டு சர்வதேசப் பதக்கங்களை இந்தியாவுக்காக வென்றும் வருவார்கள். அயல்நாட்டு அரங்குகளில் இந்திய தேசியக்கொடி உயர்த்தப்படுகையில், தேசீய கீதம் பாடப்படுகையில், மெய்சிலிர்ப்பார்கள். கண்களில் ஈரம் காண்பிப்பார்கள். கொடியை உயர்த்தியவாறு பெருமையோடு நாடு திரும்பும், ’நாம் இந்தியர்’ என்பதில் பெருமை கொள்ளும் அப்பாவிகள் இவர்கள்தான்.

நடக்கட்டும்….

**

பெங்களூர்தானா இது..!

நேற்று வழக்கம்போல் ஒரு லேஸி வாக் போய்க்கொண்டிருந்தேன் காலையில். ஏஇசிஎஸ் லே-அவுட்டில் புகுந்து நடந்து ஐயங்கார் பேக்கரி முன் இடது புறமாகத் திரும்பி ஒரு குறுகிய சர்வீஸ் ரோடில் நுழைந்தேன். சற்று தூரத்தில் வந்த சிறிய முனிசிபல் பூங்கா மூடியிருந்தது. (10 மணிக்கே காலையில் பார்க்கை மூடிவிடுங்கள், கன்னட அசடுகள். மாலை 4 1/2 மணிக்குத் தான் திறப்பார்கள். பகல் நேரத்தில் பார்க்குக்கு யாரும் வரக்கூடாதாப்பா..) மேலும் நடந்து, நடந்து திரும்பி பெரிய சர்வீஸ் ரோடில் வந்து தொடர்ந்தேன். 300 மீட்டர் சென்று கணேஷ் மந்திர் கட்டிங்கில் வலதுபுறமாகத் திரும்பினால், இடதுபுற மூலையில் விஸ்தாரமாக அமைந்திருக்கும் ஆஷா டிஃபன்ஸ். காஃபி ரவுண்டு வருபவர்கள் வாசல் பெஞ்சில் உட்கார்ந்து குடிப்பார்கள். இடம் கிடைக்கலாம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஒரு காப்பி குடித்துக்கொண்டே பராக்குப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போய் குளிப்போம். மிடில் ஈஸ்ட், லோக்கல் கதைகள் என்று நியூஸ்களை மேய்வோவோம்.. சாப்பிடுவோம். 2 மணிக்கு பூனே மைதானத்தில் நீலஜெர்ஸி சுற்றிப் பரவியிருக்க ரோஹித்தின் இந்தியா, பங்களாதேஷை சந்திக்கட்டும்.. என்கிற சிந்தனையில், இடது புறமாய் வாகனாதிகளுக்கு வழிவிட்டவாறு நடந்துகொண்டிருந்தேன். சூரிய ஒளி பிரகாசமாய் விழுந்து ஓடிக்கொண்டிருந்தது சாலையில்.

ஒரு இடத்தில் திடீர்க்கூட்டம். சலசலப்பு. என்ன இங்கே என்று புரிவதற்குள் என்னைக் கடந்து ரோடையும் கடந்து, எதிர்ப்புறம் சென்றான் ஒரு உயரமான இளைஞன். வழக்கம்போல் கைக்கும் காதுக்கும் இடையே மொபைலை அழுத்திக்கொண்டே, ”இங்கே ஒரே கூட்டம்டா.. ஒரு ரூபாய்க்கு வடை சாப்பிட மண்ட ஆரம்பிச்சிருக்கானுங்க..” என்று பேசிக்கொண்டிருந்தது கேட்டது. நானும் அவனைத் தொடர்ந்து சாலையின் எதிர்ப்புறம் சென்று திரும்பிப் பார்த்தேன். அட.. ராமா! ஆமா! பெங்களூர்தானே இது.. அதுவும் ஐடி டெக்-பார்க்குகள் இருக்கும் ஏரியாவாச்சே. இந்த ரெஸ்ட்டாரண்ட்டில் ஒரு ரூபாய்க்கு வடையா.. ஆட்கள் டூ-வீலர்களில் வந்து இறங்கி, தங்களை உள்ளே நுழைத்துக்கொண்டிருந்தார்கள்.

நினைவுக்கு வந்தது மெல்ல. அங்கே, இதற்கு முன்’ சேலம் கிட்ச்சன்’ என்றொரு ரெஸ்ட்டாரண்ட் மந்த கதியில் ஓடிக்கொண்டிருந்தது. சிலர் உட்கார்ந்து டிஃபன் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். வேறுசிலர் -தமிழராயிருக்கவேண்டும்- ஸ்கூட்டர்/பைக்குகளை நிறுத்திவிட்டு பார்சல்கள் வாங்கிச் செல்வார்கள். பிரமாதமா பிஸினெஸ் நடந்ததாத் தெரியவில்லை. ஒரு மாதமுன்பு என்னடான்னா.. கடை திரையிட்டு மூடப்பட்டிருந்தது. சிலநாட்கள் கழித்து, சின்னதாக போர்டு ஒன்று வாசலில் முளைத்தது. அதில் ‘ரெனொவேஷன்’ நடக்கிறது. விமரிசையாகத் திரும்பி வருவோம். காத்திருங்கள்’ என்றொரு பயமுறுத்தல் அறிவிப்பு!

ம்ஹ்ம்… திரும்பி வந்துட்டாங்களா.. விமரிசையாத்தான் ஆரம்பமாகியிருக்கு கடை. ஆனால் ரெஸ்ட்டாரண்ட்டின் பெயர்.. மாறிப்போச்சே. சேலம் கிட்ச்சன் காணாமற்போய், செந்தூர் காஃபீ என்று முழங்கிக்கொண்டிருந்தது. அதன் கீழே பிரதான போர்டு ”Inaugural Offer ! All just Re 1 !” என்று பிரகடனப்படுத்தி, பைக்கர்களைக் குறிப்பாக மயக்கி உள்ளே இழுத்துவைத்தது. மேலும் கவனித்ததில் கொஞ்சம் விவரம்: இன்று வடை @ ரூ 1. நாளை மசாலா தோஸா @ ரூ. 1. அப்புறம் பொங்கல்.. என்று தொடரப்பார்த்தது! வழக்கமான அலுப்பு, சலிப்போடு ஷாப்பிங் என்று நடந்துகொண்டிருந்த வயதான மாமாக்கள், மாமிகள் கவனித்தனர். உஷாராகினர். தங்கள் என்ஃபீல்டு, யமஹாக்களில், ஹோண்டா, ஏதெர், ஓலாக்களில் ஒல்லி கேர்ள்ஃப்ரண்டுகளைக் குந்தவைத்து வெட்டியாக ஊர் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் திடீரென ப்ரேக் இட்டனர். ஓரமாக நிறுத்தி உள்ளே பாய்ந்தனர். க்யூவில் ஒட்டிக்கொண்டனர். அந்த பிஸியான கடைத் தெருவை கொஞ்ச நேரத்தில் தனக்கேற்றபடி செட் செய்துவிட்டிருந்தது செந்தூர்!

எதிர்ப்பக்கத்தில் நின்றவாறு கொஞ்ச நேரம் அவதானித்தேன். இந்தத் த்ரில் எல்லாம், குறிப்பாக க்யூவெல்லாம் ஒத்துவராது. நமக்கு ஆஷா டிஃபன்ஸ்தான் லாயக்கு. நடந்தேன். அங்கே கூட்டமில்லை. எப்படி இருக்கும்? செந்தூர் இழுத்திடுச்சே..! பேடிஎம்-ஐ த் தட்டிவிட்டு, 15 ரூபாய்க்கு ஒரு கோத்தாஸ் காப்பியை வாங்கிக்கொண்டு, கணேஷ் மந்திர் சாலையைப் பார்த்தவாறு பெஞ்சில் உட்கார்ந்து உறிஞ்ச ஆரம்பித்தேன். வீடு திரும்பியதும் வேறுவிதமாக பிஸியானதில், செந்தூர் மனதிலிருந்து வெளியேறியிருந்தது.

இந்தியா- பங்களாதேஷ் பார்த்துக்கொண்டிருக்கையில் வாக்கிங் என்று வெளியே சென்ற மனைவியும் மகளும் வீடு திரும்பினர் கொஞ்ச நேரத்தில். ஒரு பேப்பர் கவரில் வடையையும், மிளகாய் பஜ்ஜியையும் நீட்டியபோதும் காலைக் கதை வரவில்லை நினைவில். ரோஹித் 48 ரன்னில் அவுட்டான எரிச்சலில், ”இப்போ யார் கேட்டா, பஜ்ஜி, வடை?” – என்று சீறாத குறையாகக் கேட்டேன். ”சாப்பிட்டுப் பார்!” என்றாள் வடையின் பாதியைத் தந்தவாறே. சாப்பிடு முன்னேயே மூக்கு வாசனையையும், சாப்பிடுகையில் நாக்கு ருசியையும் உடனே ஸ்வீகரிக்க.. ”பிரமாதமா இருக்கே மெதுவடை! எங்கே கெடச்சது.. ஆ.. செந்தூரா !” என்றேன் உற்சாகமாகி. ”புது ரெஸ்ட்டாரண்ட். இன்னைக்கு வடை ரூ. 1. ஒரே கூட்டம். ஆனால் பஜ்ஜி விலை ரூ.5!” -என்றாள். பஜ்ஜி கெடக்கட்டும். ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாட்டுப் பொருளா, இந்த பெங்களூரில். அதுவும் இந்த லொகாலிட்டியில்! இதெல்லாம் இந்த ஏரியாவில் நடந்தது என்றால்.. இங்கு வசித்த எவனும், விஷயம் தெரிந்த எவனும் நம்பமாட்டானே..!

செந்தூர் காஃபீ.. அதிரடி ஆரம்பம் தான் ஒன்னோடது. ஆனால் ஏற்கனவே இந்த ஏரியாவில் உடுப்பி பார்க், உடுப்பி உபச்சார், ஆஷா டிஃபன்ஸ், நட்ராஜ் சோலே-பட்டூரே (NCB), சிரி கஃபே (Siri Cafe), கணேஷ் கஃபே, ராஜ்வாடி (ராஜஸ்தானி), ராமேஸ்வரம், மயூரா ஸாகர்ன்னு.. ஏகப்பட்ட ரெஸ்ட்டாரண்ட்ப்பா! இருந்தாலும் விடாதே தமிழா.. அடித்து ஆடு ! பார்த்திடுவோம் ஒரு கை..

செந்தூர் முருகன் கோவிலிலே .. ஒரு சேதியை …

**

கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா (CWC India, 2023)

சர்வதேச கிரிக்கெட் அதிகார அமைப்பான ஐசிசி-யால் நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் கிரிக்கெட் ஒரு-நாள் உலக்கோப்பை, இந்த வருடம் இந்தியாவில் நடக்கிறது. இன்று (05 அக்டோபர், 2023) முதல் போட்டி தற்போதைய சேம்பியனான இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கவிருக்கிறது. கிரிக்கெட் உலகே இன்று உற்று நோக்கும் இடம்: நரேந்திர மோதி ஸ்டேடியம், அஹமதாபாத், குஜராத்.

இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவற்றில் ‘டெஸ்ட்’ அந்தஸ்து பெற்ற நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகியவற்றோடு இன்னுமொரு ஐரோப்பிய நாடு பங்கேற்கிறது. அது ஹாலண்டு என அழைக்கப்படும் நெதர்லாண்ட்ஸ்! ஐசிசி-யின் அசோஷியேட் மெம்பர் நாடுகள் என அழைக்கப்படும் கிரிக்கெட் ஆடும் இதர நாடுகளான – சிங்கப்பூர், நமீபியா, அமீரகம், மலேஷியா, ஜப்பான், நேப்பாளம், தாய்லாந்து, ஹாங்காங்(சீனா) போன்ற நாடுகளிடையே நடந்த போட்டிகளில் பங்குபெற்று வென்ற தகுதியோடு, கிரிக்கெட் பெரிசுகளோடு உலகக்கோப்பை ஆட இந்தியா வந்திருக்கின்றது The Orange என கிரிக்கெட் உலகில் அழைக்கப்படும் நெதர்லாந்து!

1975-ல் இங்கிலாந்தில்தான் முதல் ஒரு-நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நிகழ்ந்தன. க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கோப்பையைக் கைப்பற்றியது. இதுவரை 12 உலகக்கோப்பைகள். அவற்றில் ஆஸ்திரேலியா 5 , வெஸ்ட் இண்டீஸ் 2, இந்தியா 2, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றிருக்கின்றன. 1983-ல் கபில் தேவ் தலைமையிலும், 2011 -ல் மகேந்திர சிங் தோனி கேப்டன்சியிலும் இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளது. அப்படியா சேதி..? – என்கிறாரா கீழே இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து top favourites எனலாம். இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதும் போட்டிதான் உலகக்கோப்பை ஃபைனல் என்று எதிர்பார்த்துப் படபடக்கும் பைத்தியங்கள் கொண்ட கிரிக்கெட் உலகமும் உண்டு! இந்தியா தன் முதல் போட்டியை 8/10/23 அன்று சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகிறது. பாகிஸ்தானின் முதல் மேட்ச் 6/10/23 அன்று ஹைதராபாதில், ஆரஞ்சு சட்டைகளுக்கெதிராக. அட… இந்தியா-பாகிஸ்தான் போர் என்னிக்குப்பா என்கிறீர்களா? அது 14 அக்டோபரில் அஹமதாபாதில். ஏகப்பட்ட பாகிஸ்தானி ரசிகர்கள் இந்தியாவில் வந்து இறங்கப்போகிறார்கள் இதற்கென! பச்சைக்கொடிகளும், மூவர்ணக்கொடிகளும் போட்டிபோட்டுப் பறக்கப்போகும் குருக்ஷேத்திரம்!

Mouth-watering.. Gujarati Dhokla

டிக்கெட் வாங்கிப் போய் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் ஒக்காருவோமா! டோக்லா (Dhokla), அப்பறம்.. சிவ்டா(Chiwda), சலோனி, பகர்வாடி (bhakarwadi), பாப்டி (Papdi) என விதவிதமா குஜராத்தி நம்கீனக் கொரித்துக்கொண்டே எஞ்ஜாய் பண்ணலாமா என்கிற நப்பாசை, அதீதக் கனவுகளெல்லாம் வேண்டாங்க, விட்டிருங்க! டாப் போட்டிகளுக்கான மைதான டிக்கெட்டுகள் எப்பவோ வித்துப்போச்சு.. அஹமதாபாத், டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரில் மேட்ச்சா? சான்ஸே இல்ல. அஃபீஷியல் டிக்கெட் விற்பனை தளத்தை ஆன்லைனில் இரண்டு நாட்கள் முன் சோதித்தேன். டெல்லி, பெங்களூர் போன்ற மைதானத்தில் ஏதாவது- அதாவது இந்தியா ஆடாத- மேட்ச்சைப் பார்க்கலாமா என்கிற விபரீத ஆசையில். அவற்றிற்கும் கம்மி விலை (ரூ.450, 750) , மத்திம விலை (ரூ.1500, 2000) டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ.5000, ரூ.20000 வகை டிக்கெட்டுகள்தான் சில கிடைக்கின்றன! Crazy,, crazy, cricket obsessed country. 45 inch, 50 inch LED TV -ன்னு முன்னாடி உட்காருவோம்.. பஜ்ஜி, பக்கோடா தின்றுகொண்டு மேட்ச் பார்ப்போம்.. இஷ்டத்துக்கும் கூச்சல்போடுவோம்.. ரசிப்போம். நம்ம ஒலகம்தான் நமக்கு லாயக்கு!

15, 16 நவம்பரில் இரு செமிஃபைனல் போட்டிகள் முறையே மும்பை, கல்கத்தா மைதானங்களில் நடைபெறும். அதில் ஒன்றில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா ஆடும் என நம்புவோம். (140 கோடி ஜனங்களப்பா.. ஏமாத்திறாதீங்க..!) உலகக்கோப்பை இறுதியில் யார் கைக்குத்தான் போகும்? 19 நவம்பர் இரவில் அஹமதாபாதில் பட்டாசு வெடித்து, அந்த ரகசியம் அம்பலமாகும்!

Live telecast in India – CWC matches starting @ 2 PM IST : Star Sports 1, Star Sports 1 HD – English commentary (Commentators include Ricky Ponting, Sunil Gavaskar, Nasser Hussain, Eoin Morgan, Simon Doull, Dinesh Karthik, Ravi Shastri et al… ). தமிழ் காமெண்ட்ரி கேட்டுகிட்டே மேட்ச் பாத்தாத்தான் மஜாவா இருக்கும்னா சொல்றீங்க! அதுக்கு – Star Sports 1 Tamil HD. Star channel-ன் தமிழ் காமெண்ட்ரி டீம்ல கே. ஸ்ரீ காந்த், முரளி விஜய், பத்ரிநாத், ரமேஷ் , ரஸ்ஸல் ஆர்னால்ட், பாலாஜி போன்ற முன்னாள் வீரர்கள் இருக்காங்க.. விறுவிறுன்னு, வெவரமா சொல்வாங்க…

**

**  

Asian Games 2023: இந்திய கிரிக்கெட் நங்கைகள்- தங்கமே தங்கம்!

சீனாவின் ஹாங்ஸௌவ் (Hangzhou) நகரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் (Asian Games, 2023) நடைபெற்றுவருகின்றன. 25/9/23 அன்று நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்தியாவும், ஸ்ரீலங்காவும் கடுமையாக மோதின.  இறுதியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கிய இந்தியா வென்றது. இந்திய அணிக்கு முதன்முதலாக ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் .

இதற்கு முன் 2010, 2014 -ஆம் வருடங்களில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்தான் பெண்கள் கிரிக்கெட் இடம்பெற்றது. அந்த ஆசியாட் போட்டிகளுக்கு, இந்தியா அணியை அனுப்பவில்லை. அந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் தங்கம் வென்றிருந்தது! இந்தத் தடவைதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முதலாக ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்குபெற்றது. இந்திய வீராங்கனைகள் சூரப்புலிகள்! முதல் அடியே தடாலடி! தங்கத்தைத் தட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி என்று ஒரு இளம் அணி சீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான எதிரிகள், சவால்கள் எதிரே. என்ன செய்யுமோ.. சொல்வதற்கில்லை ஒன்றும்!

நேற்றைய ஆட்டத்தின் முடிவில், அதிரடி வீராங்கனையான சமாரி அட்டப்பட்டு (Chamari Athapaththtu) கேப்டனாக விளங்கும் ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்தது வெள்ளிப் பதக்கம். வெங்கலப்பதக்கத்திற்காக பாகிஸ்தான் பங்களாதேஷுடன் நேற்றே (25/9/23) மோதியது. மொத்துப்பட்டது. செமிஃபைனலில் இந்தியாவிடம் பரிதாபமாகத் தோற்றிருந்த பங்களாதேஷ், ஆசிய வெங்கல மெடலை அடித்துக்கொண்டுபோய்விட்டது! இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாகிஸ்தானி கிரிக்கெட் தோழிகளுக்கு ஒரு மெடலும் இல்லையே.. அடடா!

செமிஃபைனல்களில் ஸ்ரீலங்கா, பாகிஸ்தானைத் தோற்கடித்தும், இந்திய அணி பங்களாதேஷை வென்றும், தங்க மெடலுக்கான போட்டியில் சந்தித்தன. ஸ்பின் எடுத்த, ஸ்லோ பிட்ச்சில் இந்தியா முதலில் பேட் செய்தது. ஆவேசம் காட்டும் பேட்டர்களான ஷெஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியொர்களை விளாசவிடவில்லை ஸ்ரீலங்காவின் ஸ்பின்னர்கள். குறிப்பாக இனோகா ரணவீரா, உதேஷிகா ப்ரபோதினி, சுகந்திகா குமாரி ஆகியோர் அழகாக வீசினார்கள். இந்திய நங்கைகளுக்கு நெருக்கடி தர முயன்றார்கள். ஆயினும் சமாளித்து ஆடிய ஸ்ம்ருதி மந்தனா (46), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(42) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பினால் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 116 எடுத்தது. 20 ஓவர் ஃபைனல் என்று பார்த்தால் இந்த ஸ்கோர் குறைவுதான்.

Asian Games Gold medal winners: Indian Women’s Cricket team

கொஞ்சம் நின்று நிதானித்து ஆடியிருந்தால் ஸ்ரீலங்கா ஜெயித்திருக்குமோ என்றும் தோன்றியது ஒரு கட்டத்தில். கேப்டன் அட்டப்பட்டுவை எளிதில் தூக்கிவிட்டார்,  இந்தியாவிற்காக தன் இரண்டாவது டி-20 போட்டியை ஆடிய 18 வயது வீராங்கனை, வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் ஸாது (Titus Sadhu). 4 ஓவரில் ஆறு ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் சாய்த்தது இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. மிடில் ஓவர்களில் சவாலை எதிர்கொண்ட ஹாசினி பெரேரா (25), நீலாக்ஷி டி ஸில்வா (23), ஒஷாதி ராணதுங்கே (19) ஆகியோர் ஸ்ரீலங்காவின் தங்கத்துக்கு முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இந்திய ஸ்பின்னர்கள் ராஜேஷ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, தீப்தி மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசி ஸ்ரீலங்காவை அமுக்கிவிட்டார்கள். இந்திய வெற்றி.

Proudly displaying gold medal – Smriti Mandhana

ஆசிய விளையாட்டுகளில் இந்தியக் கொடி மேலே ஏற, தேசீய கீதம் பாடப்படும் தருணம் உன்னதம். இந்தமுறை எங்கள் அணி அந்தத் தருணத்தைத் தருவித்தது த்ரில்லிங்காக இருந்தது. அதை  அனுபவிக்க நேர்ந்தது ஆனந்தமாக இருந்தது என்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்ம்ருதி மந்தனாவும், ஜெமிமா ரோட்ரிக்ஸும்.

இறுதி ஸ்கோர்:

இந்தியப் பெண்கள்:  116 / 7.

ஸ்ரீலங்க மங்கைகள்:   97 / 8

**

ASIA CUP 2023: இந்தியா சாம்பியன்ஸ்!

ஆசியகோப்பை கிரிக்கெட் ஃபைனலில் இப்படி ஒரு அணி துவம்சம் செய்யப்பட்டதில்லை. நல்லதானே போய்க்கொண்டிருந்தது நமக்கு, என்ன ஆச்சு இன்னிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் கதறும் அளவுக்கு, ஒரே போடாகப் போட்டு சாய்த்துவிட்டது இந்தியா. 50 ஓவர் மேட்ச். டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்து, 15 ஓவரிலேயே ஸ்ரீலங்கா மரண அடிவாங்கியது. 50 ரன் – ஆல் அவுட்!

இந்தியாவின் முகமது சிராஜ் போட்ட ஸ்விங் பௌலிங் பல நாட்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் உலகில் ஸ்லாகித்துப் பேசப்படும். 140 + கி.மீ. வேகப்பந்துகளில் சில உட்பக்கமாக ஸ்விங் ஆனதும், பல உள்ளே நுழைந்ததுபோல் திரும்பி, வெளியே போய்ப் போக்குக் காட்டியதும், ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைத் திணறவைத்தது. இதுவரை அனுபவிக்காதது. பிட்ச்சில் இறங்கி இந்திய வேகப்பந்துவீச்சை சந்தித்த உடனேயே, எல்லாம் தலைகீழானது. தடவ ஆரம்பித்துவிட்டார்கள். பேட்டிங் செய்வதெப்படி என மறந்துபோய்விட்டதுபோல் தோன்றியது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் முதல் ஓவரில் மூன்றாவது பந்திலேயே பும்ரா, ஓப்பனர் குஸால் பெரெராவைத் தூக்கி வீசினார். சிராஜும் பயங்கரமாக மறுபக்கத்திலிருந்துப் போட்டுத் தாக்க, அவரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள்! கேட்கணுமா பின்னே? ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்குப் பித்துத்தான் பிடித்துவிட்டது என அவர்களது ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். நிலமை அப்படி.. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா 12 க்கு 6 விக்கெட்டுகள்! சிராஜின் அனலிஸிஸ் 5 for 5 எனச் சீறி, ஸ்ரீலங்காவின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சின்னாப்பின்னமாக்கியது. மனுஷனுக்கு ரோஹித் கொடுத்ததே 7 ஓவர்கள்தான். அதில் அவர் சாய்த்தது 6 விக்கெட்டுகள்.

முகமது சிராஜ் – பாராட்டு மழையில் !

பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க எண்ணிய ரோஹித், பாண்ட்யாவிடம் பந்தைக் கொடுத்தார். ஸ்ரீலங்காவுக்கு மூச்சு வருவதற்குள், பாண்ட்யாவின் பௌலிங் அவர்களை அந்தோ பரிதாபமாக்கிவிட்டது. 3 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள். விழிபிதுங்கிய ஸ்ரீலங்க வீரர்கள் அத்தனை விக்கெட்டுகளயும் சொற்ப டோட்டலுக்குப் பறிகொடுத்து ஓடிப்போனார்கள்!

இந்தியா சேம்பியன்ஷிப் வெல்ல 51 ரன் இலக்கு என இறங்கியது. ஷுப்மன் கில்லுடன் (Shubman Gill) ஓப்பன் செய்ய இஷான் கிஷனை இறக்கிவிட்டார் ரோஹித் ஷர்மா. இவர்களும் ஸ்ரீலங்காவின் ஜூனிவர் மாலிங்காவான, பதிரானாவிடம் தடுமாறுவார்கள். 51 ரன் எடுப்பதற்குள் 2, 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்கும் சாயும் என்பது அப்போதைய பொதுவான கணிப்பு. ஆனால் நடந்ததே வேறே! இறங்கிய உடனேயே, பதிரானா, மதுஷன்கா என எவரையும் விடாது தாக்கினார்கள் கில்லும், கிஷனும். 6.1 ஓவர்களிலேயே ரோஹித்தின் கைக்கு வந்தது ஆசிய கோப்பை. 8-ஆவது முறை கோப்பையைக் கைப்பற்றி மகிழ்ந்தது இந்தியா.

பாகிஸ்தானிலும், ஸ்ரீலங்காவிலுமாக நடந்த இந்த ஆசிய கோப்பைத் தொடரின் மறக்க முடியாத இந்திய வீரர் முகமது சிராஜ். ப்ளேயர் ஆஃப் த மேட்ச் வாங்கியதும், தான் எப்படிப்பட்ட மனுஷன் என உடனே காண்பித்தார் . ஆசிய கோப்பை தொடர் முழுதும் இஷ்டத்துக்கும் இடைமறித்துத் தொல்லை தந்த மழை, எல்லோருக்கும் எரிச்சலூட்டியது. அப்போதெல்லாம் தங்களின் சிறப்பான பணி மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்து பாராட்டுப் பெற்றார்கள் கொழும்பு ஆடுகளத்தின் மைதானப் பணியாளர்கள். அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை உணர்ந்த சிராஜ், அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தனக்குக் கிடைத்த 5000 டாலர் (ஸ்ரீலங்க ரூ.16 லட்சம்) விருதுத் தொகையை சொளையாகத் தூக்கி அப்போதே அவர்களிடம் கொடுத்துவிட்டார். எத்தனையோ பேர் என்னென்னவோ சம்பாதிக்கிறார்கள், கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு. எத்தனைப் பேரிடம் வெளிப்பட்டிருக்கிறது இத்தகைய மனம்?

சரி, தயாராகுங்கள் ரசிகர்களே… உலகக்கோப்பை 2023 கதவைத் தட்டப்போகிறது விரைவில். அதுவும் இந்தியாவில்.

**

எமெர்ஜென்சி அலர்ட் !

டெல்லியில் இருக்கிறேன் தற்போது. ஒரே வெயில். வாசலில் வளாக செக்யூரிட்டியோடு பேசிவிட்டு உள்ளே வந்தேன். மாலை வாக்கில், வெயில் தாழ்ந்திருப்பதாக நினைத்தவாறு, வெளியே போவோம். இப்போது கொஞ்சம் படுத்திருக்கலாம், எத்தனைதான் நியூஸ் பார்ப்பது.. என நினைத்தவாறு சாய்ந்தேன். மணி 12:29 ? திடீரென மொபைல் அலறியது. இது கால் டோன் இல்லையே.. என்ன இது, என்று ஸ்க்ரீனைப் பார்க்க, ஹிந்தியில் பரபரத்தது எச்சரிக்கை! இது நார்மல் கால் நிச்சயம் இல்லை.. காலே இல்லை. உச்ச ஸ்தாயியில் சைரன் சத்தம்வேறு, பதற்றத்தை ஏற்படுத்தியது. கட் செய்யவும் முடியவில்லை. ஃபோனை பவர் ஆஃப் செய்தேன். இருந்தாலும் மனதில் ஒரு அதிர்ச்சி. என்னமாதிரி மெஸேஜ்.. யாரிடமிருந்து? எனக்கா? யாராவது ஹேக் செய்கிறானா ? அவன் இப்படியா அசட்டுத்தனமாக சைரன் போட்டுக் காரியம் செய்வான்.. சே…

மூன்று நான்கு நிமிடம் கழித்து மீண்டும் மொபைலை ஆன் செய்தேன்.. நொடிகளில் மீண்டும் எச்சரிக்கை சைரன்.. சகிக்கமுடியவில்லை. ஃபோனை பவர் கட் செய்தேன். நாம் என்ன தேசத் துரோகமா செய்துவிட்டோம்.. ஏய்.. நில்.. ஒடப்பாக்காதே.. வர்றோம்.. என்பது மாதிரி அந்த அலறலை டிகோட் செய்து அஃபீஷியல் வார்னிங் போல நினைத்துப் பார்த்தேன். மோடி ஏதாவது அதிரவைக்கனும்னா எட்டாந்தேதி ராத்திரி 8 மணிக்கு நிதானமா டிவில அறிவிப்பாரே.. பாங்கான மனுஷன்! இப்ப என்ன நடக்குது… இது என்ன நார்த் கொரியாவா, இல்லை சீனாவா. நாம இருக்கிறது நம்ப இந்தியாவிலே! ஆ.. பாரத்! பாருக்குள்ளே நல்ல நாடு..!

15 நிமிடங்களுக்குப்பின் சந்தேகத்தோடு மொபைலை ஆன் பண்ணி ரீசண்ட் கால்ஸ் களில் சோதித்தேன். ட்ரூ காலரும் எதையும் ரெகார்ட் செய்யவில்லை. நல்ல காலம், மீண்டும் அந்த சைரன் எச்சரிக்கை மெஸேஜ் வரவில்லை. இருந்தும்… என்னமோ நடக்குது நாட்டுக்குள்ளே…

பின்னர்தான் விஷயம் தெரிந்தது. அப்பாடி! ஒரு ஆசுவாசம். திடீரென நாட்டில் ஒரு எமர்ஜென்சி நேர்ந்தால், அது இயற்கைப் பேரிடரோ, செயற்கைப் பேரிடரோ ..எதுவோ, அதைப்பற்றி உடனே பொதுமக்களுக்கு – இந்திய பிரஜைகளுக்கு- நாடுமுழுதும் மொபைல் மூலம் மெஸேஜ் அனுப்பித் தெரிவிக்க என ஒரு எமர்ஜென்சி அலர்ட் சிஸ்டத்தை உண்டாக்க முனைகிறது NDMA – National Disaster Management Agency . அதற்காக வெளிநாட்டு டெக்னாலஜியை நம்பியிராமல், நமது மத்திய அரசின் டெபார்ட்மெண்ட் ஆஃப் டெலிகம்யூனிகேஷன்ஸ் (C-Dot), மொபைல் ஃபோன் மூலமாக அவசர ஒலிபரப்பு செய்வதற்கான முயற்சியில், ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது. அதன் சோதனை/சாம்பிள் மெஸேஜ் தான் இப்படி. இன்று நண்பகல் 12:00 லிருந்து 12:45 வரை, நாடுமுழுவதிலிருந்தும் ரேண்டமாக – பொத்தாம்பொதுவாக, மொபைல் நம்பர்களைத் தேர்ந்தெடுத்து எமெர்ஜென்சி மெஸேஜை இப்படி அலறவிட்டிருக்கிறது. எமெர்ஜென்சி அலர்ட் பல இடங்களில் ஆங்கிலத்திலும், சில பகுதிகளில் ஹிந்தியிலும் வந்திருக்கிறது. நான் டெல்லியில் இருப்பதால் டெல்லியின் ஜியோ நம்பரை உபயோகிக்கப்போய், என்னை ஹிந்தியில் எச்சரித்து பயமுறுத்தியிருக்கிறார்கள்! ஹிந்தியில் பாரத் சர்க்கார் துவாரா… என்று அது ஆரம்பிக்கையில், மேலும் படிக்க முற்படவில்லை. இது அரசாங்க எச்சரிக்கையா அல்லது மத்திய அரசின் பேரில் சில விஷமிகள் காட்டும் வித்தையா, ஃபோனுக்கு ஆபத்தா, பேங்க் அக்கவுண்ட்டுக்கு வெடியா.. என்று மனம் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

ஸ்க்ரீனை அடைத்துக்கொண்டு சீன் போட்ட அந்த எமெர்ஜென்சி அலர்ட்டை முற்றிலும் படிக்க, பொறுமை இல்லை. சைரன் தந்த படபடப்பில், மொபைலை ஆஃப் செய் என்றே மனம் உத்தரவிட்டது. அந்த எமெர்ஜென்சி சாம்பிள் மெஸேஜில் ’இது அரசாங்கத்திடமிருந்து.. ஒரு டெஸ்ட் மெஸேஜ்தான். எந்த ஆக்‌ஷனும் தேவையில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள்தான். முழுதாகப் படித்தால்தானே! நமக்கு சத்தம் என்றால் அலர்ஜி. அதோடு எமெர்ஜென்சி என்றால் சூப்பர் அலர்ஜி.. ஒருவேளை எமெர்ஜென்சி ஹீரோயின் இந்திரா காந்தி திரும்பிவிட்டாரோ, என்னவோ என்றெல்லாம் பாழும் மனது சிந்திக்க ஆரம்பித்துவிடாதா..!

**

ASIA CUP 2023 பாகிஸ்தானை தூக்கிக் கடாசிய இந்தியா

நேற்று  கொழும்பு மைதானத்தில் ஆசியகோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 போட்டியில், டாஸ் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்யச்சொன்னார் பாக் கேப்டன் பாபர் ஆஸம். அவ்வளவுதான். ஏன் அப்படிச் சொல்லித் தொலைத்தேன் என்று சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர் தலையில்  அடித்துக்கொண்டிருப்பார்.. ஜாடிக்குள்ளிருந்து பூதம் புறப்பட்டதுமாதிரி கிளம்பி, பாகிஸ்தானின் ஆகச்சிறந்த பௌலர்களை துவம்சம் செய்துவிட்டார்கள் இந்திய முன்னணி பேட்ஸ்மன்கள். விளைவு  இந்தியாவின் ஹிமாலய ஸ்கோரான 356 / 2. வெறும் 2 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தமுடிந்தது பாகிஸ்தானால்.  அதுவும் ஆட்டத்தை ஆரம்பித்த ரோஹித், கில்  (Gill) இருவரும் தலா அரைசதம் சாத்தியபின்.

KL Rahul – Back with a bang !

3,4 பேட்டிங் வரிசைக் கிரமத்தில் இறங்கிய கோஹ்லியும், கே.எல். ராஹுலும் அசடுகள் போல்தான் மெதுவாக ஆரம்பித்தார்கள். பின்னால் சூடேறி, பாக் வேகப்பந்துவீச்சாளர்களையும், ஸ்பின்னர்களையும் ஓட, ஓட விரட்டிவிட்டார்கள். ஒருகட்டத்தில் ஷஹின் ஷா அஃப்ரீதி, ஹாரிஸ் ராஃப், நஸீம் ஷா என்று பாகிஸ்தானின் டாப் பௌலர்கள் கையில் அடி, காலில் அடி என்று பெவிலியனுக்கு ஓடவே விரும்பியது செம தமாஷாக இருந்தது!

இந்த ஆபரேஷன் மர்டரில், விராட் கோஹ்லியும், காயத்திலிருந்து நீண்டநாள் விலக்கத்தின் பின் திரும்பியிருந்த ராஹுலும் ஆளுக்கொரு சதம் அடித்து இந்திய ரசிகர்களுக்கு போதையேற்றினார்கள். (கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை வேகமாகக் கடந்து சாதனை) இந்தியாவின் முதல் இரண்டு பேட்ஸ்மன்கள் தலா அரைசதம், அடுத்து வந்த இருவர் ஆளுக்கொரு சதம். ஆஹா.. இப்படி இதற்கு முன் பாகிஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா காண்பித்திருக்கிறதா!

357 என்கிற இலக்கு எந்த ஒரு அணிக்கும் வயித்துக்கடுப்பைத்தான் வரவழைத்திருக்கும்.  வெகுநாள் இடைவெளிக்குபின் அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் துல்லிய ஸ்விங்கர்களில் தலைசுற்ற ஆரம்பித்தது பாகிஸ்தானுக்கு. எப்படியோ க்ரீஸில் நின்றாலே போதும் என்கிற நிலை. சிராஜும் நன்றாகவே வீசினார். பாகிஸ்தானின் டாப் பேட்ஸ்மன்கள் சிக்கிக்கொண்டு விழிக்க, இடது கை சுழல்வீரரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. நீ உன் வேலயக் காட்டு ! சக்ரவியூகம்தான். குல்தீப்பின் சுழலில் சிதறி, கதறி ஒவ்வொருத்தராக பெவிலியனுக்கு ஓடிவிட்டார்கள் பாகிஸ்தானிகள். சூப்பர் லெக்-ஸ்பின் 5 விக்கெட்டுகளை அவருக்குக் கொடுத்தது. (அடுத்த மாதம் இந்தியாவில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பையில் குல்தீப் கவனத்திற்கு வருவார்.)

அடிபட்ட மரவட்டைபோல சுருண்டு விழுந்தது பாகிஸ்தான். முக்கி, முனகி 128 தான் அவர்களால் முடிந்தது. காயம் காரணமாக இரண்டு பௌலர்கள் பேட்டிங் செய்யமுடியவில்லை என்றார்கள். இந்தியாவின் 258 வித்தியாசத்தில் அபார வெற்றி, பாகிஸ்தானை நொந்துபோக வைத்திருக்கும்.

இதை எழுதுகையில் இந்தியாவுக்கு எதிராக இன்றைய போட்டியில் இளம் ஸ்ரீலங்கா இடதுகை ஸ்பின்னர் துனித் வெல்லாலகே (Dunith Wellalage) பின்னிப் பெடலெடுத்துவிட்டார். இந்தியாவின் டாப் 5 வீரர்களை சுருட்டி எறிந்துவிட்டார். திணறுகிறது இந்தியா! இன்று ஸ்க்ரிப்ட் மாறுகிறதோ என்னவோ. கிரிக்கெட் ..ஹ்ம்… a magical game of uncertainties…

**

பரவாயில்லையே இந்த குட்டி !

ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் பெங்களூரில் நாங்கள் வசிக்கும் Brookefield -ற்கு அருகில் BEML Layout இல் இருக்கும் வெங்கடரமணா கோவிலில் திருமஞ்சனம் நடக்கும். அவசரமின்றி, நிதானமாக பார்த்துப் பார்த்து திருமஞ்சனம் பண்ணும் அர்ச்சகர் ஜோடி. பெருமாளுக்கு வண்ண வண்ண மலர்மாலைகளோடு அழகாக அலங்காரம் செய்வார்கள். சேவிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். சும்மா எதிரே நின்று பார்த்துக்கொண்டிருக்கலாம். அந்தப் பெருமாள் கோவில் 10-12 வருஷங்களுக்கு முன்னர்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

வாசலில் இட, வலப்புறத்தில் ஜெய, விஜயர்கள். த்வஜ ஸ்தம்பத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் சிறு ஆஞ்சனேயர் ஸந்நிதி. வாசலுக்கு இடது புறத்தில், ஆஞ்சனேயரைப் பார்த்தவாறு வீற்றிருக்கும் வினாயகர். பிரஹாரத்தில் கொஞ்சம் உயரமான கருடப் பெருமான், ஸ்ரீதேவி, பூநீலா தேவி ஸமேத வெங்கடரமணப் பெருமாளை நேராகப் பார்த்துக் கைகூப்பிய நிலையில் காட்சி தருகிறார். உட்பிரஹாரத்தில் மூலவருக்கு வலதுபுறத்தில் சிறிய அளவில் கைகூப்பிய திருக்கோலத்தில் ராமானுஜர். கோவிலில் அர்ச்சனை செய்தோ, சாதரணமாக வணங்கியபின்போ, உட்பிரஹாரத்தில் ராமானுஜர் ஸந்நிதி அருகில் தரையில் அமர்ந்து சிலர் காயத்ரி ஜெபம், திவ்யப் பிரபந்த பாசுரங்கள் என ஏதாவது அவர்களுக்குத் தெரிந்த பாசுரங்கள், ஸ்லோகங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். சில நிமிஷங்களுக்குப்பின் வெளியேறி கோவில் வளாகத்தில் இருக்கும் நவக்ரஹங்களைச் சுற்றிவந்து வணங்கிவிட்டுப் போவார்கள்.

பிரதான வாசலின் இடதுபுறத்தில் பட்டைக்கருங்கல் போட்ட  திண்ணை இடது வலதாக இருக்கும். அங்கே சனி, ஞாயிறுகளில் பெரிய அலுமினிய அண்டாவில் கோவில் பிரசாதத்தை வைத்து உட்கார்ந்துகொண்டு கோவில் சிப்பந்தி ஒருவர், பெருமாளை வழிபட்டுத் திரும்புவோருக்குப் பிரசாத வினியோகம் செய்துகொண்டிருப்பார். சிலர் வாங்கிக்கொண்டு, கோவில் வளாகத்துக்குள் நின்றவாறே சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். சிலர் பைகளில் தொன்னையை வைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்கள். கோவிலுக்கு வர முடியாத பெரியவர்கள் வீட்டில் இருக்கக்கூடும், குழந்தைகள் இருக்கலாம்…

அந்த சனிக்கிழமை காலை நான் பெருமாளை சேவித்துவிட்டு வெளியேறுமுன் பிரசாதம் வாங்கிக்கொள்கையில், கூட்டம் இல்லை. பிரசாதம் அண்டாவில் இன்னும் பாக்கி இருந்தது. ஒரு சிலர் அவ்வப்போது வாங்கிக்கொண்டு நகர்ந்தார்கள். அப்போது.. அழுக்கு ஃப்ராக் அணிந்த ஒரு ஏழைச் சிறுமி. 4 வயதிருக்கும். பிரதான வாயில் வழியே உள்ளே மெதுவாக நுழைந்தாள். வாசலில் நுழைந்ததுமே, வலதுபுறத் திண்ணையிலிருந்து பிரசாத வாசனை! பிரசாதம் தருபவர் முன் அப்போது யாருமில்லை. நான்தான் வாங்கிக்கொண்டு சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எதிர்த் திண்ணையின் மீது பையை வைத்துக்கொண்டு நின்றிருந்தார் ஒரு வயதான மாமி. வாங்கிய பிரசாதத்தை ஸ்டீல் டப்பாவுக்கு மாற்றி உள்ளே அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார். ஒரு கணம் தயங்கிய அந்தப் பசித்த சிறுமியை, பெருமாள் பிரசாதம், ’சும்மா.. வா!’ என்று அழைத்துவைத்ததோ! பிரசாத பாத்திரத்தை மெல்ல நெருங்கிய சிறுமி, உயரமான திண்ணையின் கீழே, மெலிதான சின்ன உருவமாக வெறுங்காலுடன் வந்து நின்றாள்.

எனக்குள் பதற்றம் பரவியது. முன்னொரு நாள் இப்படி யாரோ ஒரு ஏழைச்சிறுவன் நெருங்கி பிரசாதத்திற்காக கை நீட்ட, இந்த ஆள் கோபத்தில் கத்தி விரட்டியிருக்கிறான் – ’ஏய்..! இங்கே நிக்காதே… போ.. போ..’ என்று.. அந்த அப்பாவிப் பையன் மிரண்டு வெளியே ஓடியதைப் பார்த்த காட்சியை மனம் வேகமாக விரித்துக் காண்பித்தது. இப்போதும் அதுதானா நடக்கப்போகிறது? அப்படி நடந்தால்.. பாவம் இந்தக் குழந்தை. நல்ல காலம். நான் இன்னும் சாப்பிடவில்லை. இந்தப் பிரசாதத்தை வாசலுக்குப் போய் இந்தச் சிறுமியிடம் கொடுத்துவிடலாம்.. என சிந்தனை எனக்குள் முளைத்தது.

ஏதோ பாதாளத்திலிருந்து அண்ணாந்து உயரே பார்ப்பதுபோல், பரிதாபமாகப் பிரசாத அண்டாவைப் பார்த்தவாறே சிறுமி தன் சின்னக் கைகளை விரித்து உயர்த்தினாள். கேலியாகப் பார்த்தான் அந்த கோவில் சிப்பந்தி. கொஞ்சம் சுமாரான மூடில் இருந்திருக்கிறானோ.. கொடுப்பதற்கு பிரசாதத்தை எடுக்கவில்லை.. ஆனால், பேசலானான். ஏழையிடம் எகத்தாளம்.. வம்பு!

சிப்பந்தி:  எங்கேருந்து வர்றே..!

சிறுமி:  பார்க்லேர்ந்து…

(கோவிலுக்கு அடுத்தாற்போல் சின்ன பார்க் இருக்கிறது. அங்கே கூட்டிப் பெருக்கும் யாரோ ஒரு ஏழைப்பெண்ணின் மகளோ இவள்?)

பார்க் யாரோடது? – என்றான் கேலியாக சிறுமியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.

சிறுமி தயங்கவில்லை. தெளிவான குரலில் சொன்னாள் :  என்னோடது !

அவன் சற்றே உள்ளுக்குள் பின்வாங்கியிருக்கவேண்டும். இருந்தாலும், காட்டிக்கொள்ளாது மேலும் சீண்டினான்:

யாரு அந்த பார்க்கை கூட்டுறது? பெருக்கறது யாரு? – அவன் மூஞ்சியில் ஏளனச் சிரிப்பின் விகாரம்.

நீ !  – என்று அவன் முகத்திற்கு எதிரே தன் குட்டி ஆள்காட்டி விரலைக் காட்டினாள் குழந்தை.

திடுக்கிட்டான் அவன். எனக்கும் ஆச்சர்யம். என்ன ஒரு பதில்! பக்கத்தில் நின்றிருந்த அந்த மாமி கூர்மையாக அந்த உரையாடலைக் கவனித்திருக்கவேண்டும்.

”பார்க் அவளோடதாமா! அதப் பெருக்கி சுத்தம் செய்றது நீதான் – னு ஒன்னயப் பாத்து சொல்றா ! பரவாயில்லையே இந்த குட்டி!” – கண்களில் ஆச்சர்யத்தோடு அந்தச் சிறுமியைத் திரும்பிப் பார்த்துச் சொன்னார் அந்த மாமி.

சிறுமி தன்னை அசால்ட்டாகக் காலிசெய்துவிட்டதை மனதில் வேகமாக வாங்கிக்கொண்டவனாய், தொன்னையில் ஒரு கரண்டி பிரசாதத்தை அவசரமாகப் போட்டு குழந்தையிடம் கொடுத்துவிட்டான். இத இங்கேருந்து விரட்டிருவோம்.. என நினைத்திருக்கும் அவன் மனம். அப்பாடி! பிரசாதத்தைக் கொடுத்தானே…  என்கிற நிம்மதி எனக்குள்.  

ஜாக்ரதையாகத் தன்  சின்னக் கைகளில் தொன்னையை ஏந்திக்கொண்டு, புளியோதரையை ஆசையாகப் பார்த்தவாறு, படிகளில் மெல்ல அடி அடியாக வைத்து இறங்கிச் சென்று மறைந்தாள் அந்தக் குழந்தை. 

அந்த சனிக்கிழமை நைவேத்யத்தை வெங்கட்ரமணப் பெருமாள் ஏற்றுக்கொண்டுவிட்டாரோ … சிந்தனையுடன் பிரசாதத்தை என் தொன்னையிலிருந்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். அலாதி ருசி..

**

கிரிக்கெட் : இந்தியா vs பாகிஸ்தான் Super clash !

ஆசியகோப்பை கிரிக்கெட்டில் இன்று ஸ்ரீலங்காவின்  பல்லிக்கலே மைதானத்தில், பரம வைரிகள் மோதுகின்றன. இந்தியா vs பாகிஸ்தான்! ரசிகர்களின் வெகுநாளைய எதிர்பார்ப்பில்.. இன்று விழுகிறது முற்றுப்புள்ளி.

India captain Rohit Sharma

2019-ல் நடந்த ஒருநாள்-உலகக்கோப்பையில்தான் கடைசியாக இரு அணிகளும் மோதின. கோஹ்லி கேப்டனாக இருந்த அந்தப் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தினால் இந்தியா பாகிஸ்தானை அப்போது வீழ்த்தியிருந்தது.

இன்றைய கதை எப்படிப்போகுமோ, யாரே அறிவார்! எந்த நேரத்திலும் மைதானத்தில் நுழைந்துவிடுவேன் என மழைவேறு பயமுறுத்துவதாகக் கேள்வி. மழை ஊடுறுவலால் ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டம் நடந்தால், இரு அணிகளும் தங்களது வழக்கமான ஒரு-நாள் கிரிக்கெட் வியூகங்களை மாற்றி, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் டி-20 போல் ஆட நேரிடும். அதற்கேற்றபடி அணியை, குறிப்பாக பேட்டிங் வரிசையை அமைத்துக்கொள்வது இந்தியாவுக்கு நல்லது.  இந்தமாதிரியான ஒரு சாத்தியக்கூறு இந்திய கோச் திராவிட் மற்றும் கேப்டன் ரோஹித்தின் திட்டமிடலில் நுழைந்திருக்கும் என நம்புவோம்.

பாகிஸ்தான் தற்போது, ஒரு-நாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1. இந்தியா தனது மிடில் ஆர்டரை சோதிப்பதில், சரிசெய்வதில் இன்னும் ஈடுபட்டிருப்பதாக ராகுல் திராவிடின் பேச்சுக்களிலிருந்து தெரிகிறது! இந்திய அணியின் காம்பினேஷன் இப்படி அமைந்தால் சிறப்பாக அமையலாம்:

1 ரோஹித் ஷர்மா 2 இஷான் கிஷன் 3 ஷுப்மன் கில்  4 விராட் கோஹ்லி  5 சூர்யகுமார் யாதவ்  6 ஹார்திக் பாண்ட்யா   7 ரவீந்திர ஜடேஜா  8 அக்ஷர் பட்டேல்  9 பும்ரா  10 முகமது ஷமி   11 முகமது சிராஜ்

பேட்டிங் வரிசையின் 5-ஆம் இடத்தில், அணிக்குத் திரும்பியிருக்கும் ஷ்ரேயஸ் ஐயர் வந்து இறங்கவும் வாய்ப்பிருக்கிறது (கே.எல். ராஹுல் காயத்திலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லையாம்!) இடதுகை சுழல் வீச்சாளரான குல்தீப் யாதவையும் இந்தப் போட்டியில் திராவிட் & கோ. கொண்டுவரக்கூடும். குல்தீப்பின் பலவீனம் : அவரால் லோயர்-ஆர்டரில் திறன் காட்டி ரன் எடுக்க இயலாது. மாறாக, அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டால், அணியின் பலம் அதிகமாகும். காரணம் பட்டேல் இடதுகை சுழல் என்பதோடு, ஒரு நல்ல ஆல்ரவுண்டர். விக்கெட் ஆரம்பத்தில் இந்தியா விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுக்க நேர்ந்தால், மிச்சம் இருக்கும் சொற்ப ஓவர்களில் பந்தை லாஃப்ட், ஹூக் செய்து அதிரடியாக ஆட முடியும் இவரால். தேவைப்பட்டால் நிதான ஆட்டத்தையும் ஆடமுடியும் என ஏற்கனவே காட்டியிருப்பவர். சிறந்த ஃபீல்டரும்கூட. நம்பர் 8-ல் பாகிஸ்தானுக்கெதிராக இவர்தான் சரியான வீரர் என்பது என் கருத்து.

இந்திய வெற்றி என்பது குறிப்பாக முதல் 4 பேட்ஸ்மன்கள் (ரோஹித், கில் (Gill), கிஷன், கோஹ்லி) எப்படி ஆடுகிறார்கள், எவ்வளவு வேகமாக ரன் சேர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். பும்ரா அணிக்குத் திரும்பியிருப்பதால், சிராஜ், ஷமியோடு இணைந்து இந்திய வேகப்பந்துவீச்சு பாகிஸ்தானின் டாப்-ஆர்டரைத் தாக்கி நிலைகுலையச் செய்யக்கூடும். ஜடேஜா அல்லது பட்டேல் (அல்லது குல்தீப்) இருவரில் யாரேனும் ஒரு ஸ்பின்னர் க்ளிக் ஆனாலும், பாகிஸ்தானுக்கு தலைவலிதான்.

Babar Azam, Pakistan Skipper

எதிர் அணியின் பலம்? வேகப்பந்து வீச்சாளர்கள் ஷஹீன் ஷா அஃப்ரீதி மற்றும் ஹாரிஸ் ராஃப் இந்திய முன்னணி வீரர்களுக்கு பெரும் சோதனைகளை முன் வைப்பர். பேட்டிங்கில் திறன்காட்ட இவர்கள்: கேப்டன் பாபர் ஆஸம், இஃப்திகார் அஹ்மது, முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமன். அணிக்கு பெரிய ஸ்கோரைக் கொணர்வதில் இவர்கள் சாதிக்கக்கூடியவர்கள்.

டாஸ் வெல்வது யார் என்பதில், ஆட்டத்தின் ரிஸல்ட்டில் பாதி அடையப்பட்டுவிடும் –குறிப்பாக ஆரம்பத்திலேயே மழை வந்து தொந்திரவு செய்தால்.

எப்படி இருப்பினும், ஒரு சனிக்கிழமை த்ரில்லர் நிகழக் காத்திருக்கிறது எனலாம்.. டிக்கட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2023-ன் host ஆதலால், டிக்கெட் வருமானத்தில் பெரும்பகுதி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டையே போய்ச் சேரும். பாகிஸ்தான் சென்று ஆட இந்தியா மறுத்துவிட்டதால், ஸ்ரீலங்காவில் இந்த marquee clash நடக்கிறது.

**