அடையாள விபரீதம்

நீயா எழுதினாய் இதையெல்லாம்
நோட்டுப்புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த
வெகுநாள் கழித்துப் பார்க்கவந்த நண்பன்
விலகாத ஆச்சரியத்தில் கேட்டுவைத்தான்
இரைதேடி சுவரில் ஊரும் பல்லியைப்போலே
கிடைக்காத பெண் தேடித் திரியும் மடையன் என
வேலைகூட வகையாக வாய்க்காது
சேலைக்கடையில் விரித்துப்போடு்பவனென
மொத்தத்தில் ஒரு தெண்டப் பிண்டமென
ஊர் உலகத்தைப்போலே ஒழுங்காகக்
கணித்து வைத்திருந்தவனின் வாய் மீண்டும்
நீயா என ஆரம்பிக்கையில்
மறித்துச் சொன்னேன் அழுத்தமாக
இல்லை உனக்குத் தெரிந்தவனுடையதல்ல
தெரிந்திருக்க சாத்தியமே இல்லாத
வேறொருவனின் கிறுக்கல் இது என்று

*

FIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா !

நேற்று (22-6-18) கடுமையான போட்டியில் பிரேஸில், காஸ்ட்ட ரிக்காவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது. அடுத்ததொரு போட்டியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, ஐரோப்பாவின் ஐஸ்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.

முதல் போட்டியில் பிரேஸிலை காஸ்ட்ட ரிக்கா 90 நிமிடங்களுக்குக் கட்டுக்குள் வைத்திருந்தது ஆச்சரியம். பிரேஸிலின் 300 மில்லியன் டாலர் சூப்பர் ஸ்டாரான நெய்மார் பந்தை உருட்டினார், திரட்டினார், நெஞ்சில் ஏற்றார், முட்டினார், பாய்ந்து தாக்கினார். ம்ஹும். காஸ்ட்ட ரிக்காவின் தடுப்பாட்டம் அவரது பந்தை கோல்பக்கம் அண்டவிடவில்லை. ஒனக்கும் பேப்பே, ஒங்கப்பனுக்கும் பேப்பே என்று எதிர்த்தாடியது. போதாக்குறைக்கு ரெஃப்ரியுடன் வாக்குவாதம் செய்து மஞ்சள் அட்டையையும் வாங்கிக்கொண்டார் நெய்மார்! நடுக்களத்தில் மார்ஸெலோ (Marcelo), முன்னணியில் ஃபிலிப்பே கௌட்டின்ஹோ ( Philippe Coutinho), கேப்ரியல் ஜேஸுஸ் (Gabriel Jesus) ஆகிய முன்னணி வீரர்கள் இடைவிடாது கடுமையாகத் தாக்கியும், துரிதமாகப் பாஸ் செய்தும் நடக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது ஆட்டப்பகுதியில் ஒருமணிநேரத்தில் பிரேஸில் 12 ஷாட்களை காஸ்ட்ட ரிக்கா கோல்போஸ்ட்டில் தாக்கியது. அவ்வளவும் காஸ்ட்ட ரிக்காவின் அபாரமான கோல்கீப்பரான கேலோர் நவஸ் (Keylor Navas)-ஆல் பாய்ந்து கவ்வப்பட்டது. அல்லது துரதிர்ஷ்டவசமாய் கோல்போஸ்ட்டின் மேலே மிதந்து சென்றது.

எக்ஸ்ட்ரா டைம் 6 நிமிடம் (இறுதியில் 8 நிமிடமானது) வாய்க்க, இன்று ஜெயிக்காமல் வெளியேறுவதில்லை என உத்வேகம்கொண்டு பொங்கியது பிரேஸில். 91 ஆவது நிமிடத்தில் பிரேஸில் ஸ்ட்ரைக்கர் கௌட்டின்ஹோ முதல் கோலைப்போட்டு, இதுவரை சீட்டு நுனியில் துடித்துக்கொண்டிருந்த மஞ்சள்பூச்சு ரசிகர்களை எகிறவைத்தார். கோச் டைட்டேயும் (Tite) உற்சாகத்தில் கோட்டிற்கு ஓடிவர, வேறொரு ஆட்டக்காரருடன் மோதித் தடுமாறிக் கீழே விழுந்தார். உணர்ச்சிகள் அடங்கி, விளையாட்டு தொடர்ந்த அடுத்த சில நிமிடங்களில் டக்ளஸ் காஸ்ட்டாவின் (Douglas Costa) கார்னர் பாஸ் ஒன்று சீறி வந்தது எதிர்ப்பக்கம் நின்றிருந்த நெய்மாரை நோக்கி. இதுவரை தன் முயற்சிகள் யாவும் வீணாகிக்கொண்டிருப்பதைக்கண்டு, கோபப்பட்டுக்கொண்டும், தலையிலடித்துக்கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும், புலம்பிக்கொண்டும் உலவிய நெய்மார், ஒருகணம் அபார நிதானம் காட்டி தொடையில் பந்தைத் தாங்கி, லாவகமாக கோலின் இடதுமூலையை நோக்கி உந்தினார். காஸ்ட்ட ரிகாவின் கோல்கீப்பர் திரும்பிப் பாய்வதற்குள் உள்ளே புகுந்துவிட்ட பந்து, ’கோல்’ என்று வீரிட்டது. நெய்மாரை இரண்டு பிரேஸில் ஸ்ட்ரைக்கர்கள் ஓடிவந்து அணைத்து உச்சிமுகர, அவர் உணர்வின் உச்சத்தைத் தொட்டார். அவர்களை விலக்கி, ஒரு கணம் தனித்து நின்று கைகளால் முகம்மூடி மெல்ல நெய்மார் அழுதவிதம், பிரேஸிலின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்த்தியது.

பிரேஸில் கோச்சும் ரசிகர்களும் ஒருபக்கம் விமரிசையாகக் கொண்டாடினாலும், அழுது உணர்ச்சிக்குள்ளானதற்காக நெய்மார் விமரிசிக்கப்பட்டார். அதற்கு பதில் சொன்னார் பிரேஸிலின் 23 வயது ஸ்ட்ரைக்கர் நெய்மார்: அந்தக் கோலுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். வாழ்க்கையில் எதுதான் எனக்கு எளிதாகக் கிடைத்திருக்கிறது? உலகக்கோப்பை கோல்மட்டும் ஈஸியாக வந்துவிடுமா என்ன?

ஐஸ்லாந்துக்கெதிரான அன்றைய இரண்டாவது போட்டியில், தன் முதல் மேட்ச்சில் க்ரோஷியாவிடம் தோற்றிருந்த நைஜீரியா, ஆக்ரோஷம் மிகக்காட்டி ஆடியது. குறிப்பாக, நைஜீரிய கோச்சினால் இந்த போட்டிக்காக உள்ளே நுழைக்கப்பட்டிருந்த லைசஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் அஹ்மத் மூஸா. அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு ஐஸ்லாந்தின் கோலுக்கருகில் துருவிக்கொண்டிருந்த மூஸா, நைஜீரியாவின் இரண்டு கோல்களையும் மிகச்சாதுர்யமாகப் போட்டு ஐஸ்லாந்தை அதிரவைத்தார். ஐஸ்லாந்து ஒரு கோலையும் போடமுடியவில்லை. நைஜீரிய பச்சைச்சட்டை விசிறிகள் குதிகுதியெனக் குதித்து ஆரவாரம் செய்தனர். ஐஸ்லாந்து ரசிகர்களின் நிலையைப்பற்றி ஏதும் சொல்வதற்கில்லை.

நைஜீரியாவின் வெற்றி, அர்ஜெண்ட்டினா ரசிகர்களைக் குஷிப்படுத்திவிட்டது. ஐஸ்லாந்து தோற்றதால், அர்ஜெண்ட்டினா அடுத்த ரவுண்டுக்குப்போகும் வாய்ப்பு தென்படுகிறது. மற்றவர்களின் விளையாட்டையும் பொருத்தது இது எனினும், அர்ஜெண்ட்டீனிய ரசிகர்கள் இதற்காக மூஸாவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! இதுவரை ஒன்றும் செய்யாத தங்களின் ஹீரோ லியோனெல் மெஸ்ஸியோடு, நைஜீரிய ஹீரோவை மனதில் சேர்த்து, மூஸாவை ‘லியோனெல் மூஸா’ என்று ஆசையாக அழைக்கிறார்கள் இப்போது. இதைக்கண்ட மூஸா எச்சரிக்கும் தொனியில், இந்த அர்ஜெண்ட்டீனிய ஆட்டபாட்டம் செவ்வாய்க்கிழமை வரைதான் என்றிருக்கிறார்! செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் அர்ஜெண்ட்டினாவுடன் மோதப்போவது இதே நைஜீரியாதான். கடவுள் புண்ணியத்தில், மெஸ்ஸிக்கெதிராக நான் நன்றாக ஆடுவேன் என்றிருக்கிறார் மூஸா ! காத்திருங்கள் ரசிகர்களே, நிறைய இருக்கிறது இன்னும் ரஷ்யாவிலிருந்து.

**

FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்

உலகக்கால்பந்து கோப்பையில் ஆரம்பமுதலே ரசிகர்களாலும் விளையாட்டு விமரிசகர்களாலும் துழாவப்படும் நட்சத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் க்றிஸ்டியானோ ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மார் (Neymar) ஆகியோர். கால்பந்து உலகின் புகழின் சிகரத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பவர்கள். கடந்த சில வருடங்களாக ஐரோப்பியக் கால்பந்து சேம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா எனப்படும் அமெரிக்கக் கண்டத்தின் கால்பந்து சேம்பியன்ஷிப் மற்றும் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகளில் சுற்றிச் சுற்றி வெற்றி மிதப்புடன் வலம்வந்த நட்சத்திரங்கள். ரசிகர்களின் கனவு ஹீரோக்கள். இவர்களோடு, உருகுவேயின் லூயிஸ் ஸுவாரஸ் (Luis Suarez), எகிப்தின் மொகமது ஸாலே(Mohamed Saleh), பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கால்பந்துக்காரரான ஈடன் ஹஸார்ட் (Eden Hazard) போன்ற நட்சத்திரங்களும் அவ்வப்போது ஆங்காங்கே மின்னி வியப்பூட்டுவதுண்டு. மாஸ்கோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர்கள் தத்தம் நாடுகளுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

மெஸ்ஸி, ரொனால்டோவைப்போலவே, பிரேஸிலின் நெய்மார், லத்தீன் அமெரிக்காவைத் தாண்டியும் மிகவும் கொண்டாடப்படும் ஒரு கால்பந்துவீரர். பெப்ருவரியில் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர், பரிபூரண குணமடைந்ததாகத் தெரியவில்லை. பிரேஸில்-ஸ்விஸ் டிரா-வான மேட்ச்சில் இவரால் ஸ்விஸ் தடுப்பாட்டக்காரர்களை (defenders) எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்றைய காஸ்ட்டா ரிகா (Costa Rica) போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பிரேஸில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஒரு கோலாவது, அவரிடமிருந்து வருமா? இல்லை, மெஸ்ஸியின் அழுகைக் கதையின் இன்னொரு வடிவம்தானா நெய்மாரும்? உலகெங்கும் பரவியுள்ள கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் விரியும் இன்றைய மாலை.

இந்த மூன்று ஸூப்பர் ஸ்டார்களில் –மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ- போர்ச்சுகலின் ரொனால்டோ மட்டும்தான், மாஸ்கோ மைதானங்களில் ஒரு துள்ளலுடன் திரிகிறார். இதுவரை 4 கோல்களை (வலிமையான அணியான ஸ்பெயினுக்கெதிராக 3, மொராக்கோவிற்கெதிராக 1) அனாயாசமாக விளாசி, தன் அணியை முன்னேற்றியிருக்கிறார் க்றிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகலின் சிகப்புச்சட்டை ரசிகர்கள் குதூகலத்தின் உச்சியில். இவரது இந்த ஃபார்ம், மற்றவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில், போர்ச்சுகலை காலிறுதிவரை எளிதாக அழைத்துவந்துவிடும் எனத் தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடான க்ரோஷியாவோடு நேற்று இரவு மோதிய, கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா, சகிக்கமுடியாத ஒரு பாடாவதி ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது. க்ரோஷியா ஆக்ரோஷ ஆட்டம் காண்பித்ததோடு, 3-0 என்ற கணக்கில் எளிதாக அர்ஜெண்டினாவைத் தூக்கி வீசியது, அர்ஜெண்டினாவின் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அர்ஜெண்டினாவின் கேப்டனும் சூப்பர் ஸ்டாருமான மெஸ்ஸி, மைதானத்தில் எங்கோ தனியே நின்றுகொண்டிருப்பதுபோன்று தோன்றியது. அவரிடம் பந்து பாஸ் ஆனால்தானே அவர் பாய முடியும்? அர்ஜெண்டினா கோச்சின் தாக்குதல்/தடுப்பாட்ட வியூகம் க்ரோஷியாவிற்கெதிராகப் பலிக்காதுபோனது. இதில் தோற்றவிதம், தோற்ற மார்ஜின் எல்லாமே அர்ஜெண்டினா போன்ற ஒரு சேம்பியன் அணிக்கு அவமானமே அன்றி வேறில்லை.அர்ஜெண்டீனியப் பத்திரிக்கைகள் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் கோல்கீப்பர் வில்லி கபயேரோ (Willey Caballero) வின் அசட்டு ஆட்டத்தை ‘சர்வநாசம்’ ‘அவமானம்’ என அடைமொழிகளைப்போட்டுக் கிழித்திருக்கின்றன. போகிறபோக்கைப் பார்த்தால், விரைவில் அவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்யூனஸ்-ஐரெஸுக்கு ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான். அங்கு எத்தகைய வரவேற்பு அவர்களுக்குக் காத்திருக்கும் என யாரும் யூகிக்கவேண்டியதில்லை! ஸாரி, மெஸ்ஸி ரசிகர்களே – கிட்டத்தட்ட, முடிந்துவிட்டது ஆட்டம் உங்களுக்கு.

’ஹேய்! மெஸ்ஸி என்கிற தனி ஒரு ஸ்டாரின் ரசிகன் மட்டுமல்ல, கால்பந்து எனப்படும் மாபெரும் விளையாட்டின் ரசிகன் நான் !’ என நீங்கள் உணர்ந்து குரல் உயர்த்துவீர்களேயானால், இந்த உலகக்கோப்பையில் பார்க்க நிறைய மீதி இருக்கிறது, உஙகளுக்கு. தவிர்க்கமுடியா அதிர்ச்சிகளுடன். ரஷ்யாவந்திருக்கும் ரசிகர்களே, நீங்கள் கூட அழைத்துவந்திருக்கும் காதலிகளுடன் சேர்ந்து, ரஷ்ய வோட்கா அளவாக அடியுங்கள், ஆனந்தியுங்கள்!

**

உலகக்கோப்பை கால்பந்து, IND-AFG முதல் டெஸ்ட் !

வந்தால் எல்லா முகூர்த்தங்களும் சேர்ந்தார்ப்போல வரும்! வழக்கம் தான் இது. இன்று விளையாட்டு ரசிகர்களுக்கு அப்படி ஒரு நாள். FIFA உலகக் கால்பந்துக்கோப்பை ரஷ்யாவில் இன்று துவங்குகிறது. முதல் போட்டி (ரஷ்யா-சௌதி அரேபியா), ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் இந்திய நேரம் இரவு 8.30க்கு நிகழ்கிறது. அதற்கு 11 மணி நேரம் முன்பு அதாவது காலை 9.30 மணிக்கு பெங்களூரில் நிகழவிருக்கிறது இந்தியா –ஆஃப்கானிஸ்தான் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட். கிரிக்கெட் உலகின் பெரிசுகள் லிஸ்ட்டில், அதாவது ’டெஸ்ட்’ போட்டிகள் விளையாடும் நாடுகளின் அணியில் முதன்முதலாக ஆஃப்கானிஸ்தானும், அயர்லாந்தும் இந்த வருடம் ஐசிசி-யினால் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கெதிராக இன்று விளையாடவிருக்கும் போட்டி மூலம், தன் ‘டெஸ்ட்’ சகாப்தத்தைத் தொடங்குகிறது ஆஃப்கானிஸ்தான். அதுதான் விசேஷம். என்ன மாதிரியான நாள் இது பார்த்தீர்களா, இந்திய ரசிகர்களே ..

பெங்களூர் டெஸ்ட்டில் ஆஃப்கானிஸ்தான் குறைந்த பட்சம் மூன்று ஸ்பின்னர்களை மைதானத்தில் இறக்கிவிடும். சுழல்பந்துவீச்சு அவர்களின் அசுர பலம். வரிசையாக வைத்திருக்கிறார்கள். கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் (Asghar Stanikzai), ஆஃப்கன் ஸ்பின்னர்கள் இந்திய ஸ்பின்னர்களைவிட சிறந்தவர்கள் என ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட்டை பத்திரிக்கையாளர்முன் நேற்று வீசியிருக்கிறார். உலகப் புகழ்பெற்றுவிட்ட (ஒரு-நாள், டி-20 போட்டிகளில்) ரஷித் கான், ஐபிஎல்-புகழ் முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற ஸ்பின் பௌலர்கள் அவர்களிடம் இருப்பதால் ஒரு குஷி! ஆஃப்கானிஸ்தானின் வேகப்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரிய பிரச்னை ஏதும் செய்துவிடாது எனத் தோன்றுகிறது. டெஸ்ட் கத்துக்குட்டிகளின் பேட்டிங் எப்படி? முகமது நபி, முகமது ஷேஹ்ஸாத் (Mohamed Shahzad), கேப்டன் அஸ்கர் ஸ்தனிக்ஸாய் மற்றும் ரஹ்மதுல்லா. ஸமியுல்லா ஷென்வாரியும் மிடில்-ஆர்டரில் நின்று ஆடக்கூடும். முதல் இன்னிங்ஸில் ஒரு மரியாதைக்குரிய ஸ்கோரை ஆஃப்கானிஸ்தான் எட்டவேண்டுமெனில் இவர்களில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது இந்திய பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு திறனாக ஆடவேண்டும். பொறுமையை மிகச் சோதிக்கும் டெஸ்ட் விளையாட்டு இவர்களுக்கு புதிதாகையால், நிச்சயம் சிரமப்படுவார்கள். இருப்பினும் ஓரிருவர் நிதானம் காட்டி ஆடினால், அரை சதம் தட்டலாம்.

இந்திய அணிக்கு அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில், உமேஷ் யாதவோடு, புதிய பௌலராக நவ்தீப் செய்னி (Navdeep Saini) இறக்கப்படுவாரா அல்லது இஷாந்த் ஷர்மா ஆடுவாரா? காலையில்தான் தெரியும். இந்திய ஸ்பின்னர்கள் ஜடேஜாவும் அஷ்வினும் நிறைய பெங்களூர் பிட்ச்சில் களியாட்டம் போடுவார்களோ? இந்தியா இன்னிங்ஸை ஆரம்பிக்கையில், எதிர்த்துவிளையாடுவது புதுமுகங்கள்தானே என்ற மிதப்பில் ஆட ஆரம்பித்தால், ஆஃப்கானிஸ்தானின் தரமான ஸ்பின்னர்கள் பெண்டெடுத்துவிடுவார்கள். புஜாரா, ரஹானே, விஜய் நின்று, நிதானம் காட்டி ஆடவேண்டியிருக்கும். வ்ருத்திமான் சாஹா காயத்தினால் விலகியதால், 2010-க்குப்பின் இந்தியாவிற்காக டெஸ்ட் ஆட வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக். அபூர்வமாக வந்திருக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டால், அவருக்கும் அணிக்கும் நல்லது. மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான போட்டி காத்திருக்கிறது.

சரி, இப்போது. ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து. போட்டிகளை இவ்வருடம் நடத்தும் ரஷ்யா மிகவும் எளிதான க்ரூப்பான ‘ஏ’ குரூப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சௌதி அரேபியா அதன் எதிரி. ஐரோப்பாவின் ஏனைய வலிமையான அணிகளோடு ஒப்பிடுகையில், ரஷ்ய கால்பந்து அணி அவ்வளவு சிறப்பான நிலையில் இல்லை. ரஷ்யா கவனமாக ஆடாவிட்டால், சௌதி அரேபியா தூக்கி எறிந்துவிடும்.

ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய கால்பந்து வீரர்கள்: ரஷ்யாவின் இகோர் அகின்ஃபீவ் (Igor Akinfeev) அபாரமான கோல்கீப்பர். அவரைத்தாண்டி பந்தை கோலுக்குள் அனுப்புவது எதிர் அணிக்குப் பெரும் சவாலாகும். அணியின் செண்டர்-பேக் (Centre-back) ப்ளேயரான ஸெர்கெய் இக்னாஷெவிச் (Sergei Ignashevich) 38 வயதிலும் அபாரமாக ஆடிவருபவர். அணியின் 22-வயது இளம்புயல் அலெக்ஸாண்டர் கோலொவின் (Aleksandr Golovin). அருமையாகத் தாக்கிவிளையாடி ரஷ்யாவுக்கு கோல் வாய்ப்புகளைத் தரும் வீரர்.

சௌதி அரேபிய அணியில் முக்கியமான வீரர்களாக கோல்கீப்பர் அப்துல்லா அல் மயோஃப் (Abdullah al Mayouf), மற்றும் அணியின் கருப்பின வீரர்களான ஒஸாமா ஹவ்ஸாவி (osama hawsawi), ஒமர் ஹவ்ஸாவி(Omar Hawsawi), யாஸர் அல்-ஷாரானி (Yasser Al Shahrani) போன்றோரைக் குறிப்பிடலாம். திறன்மிகு இளம் வீரர்கள் சிலருமுண்டு.

ரஷ்யாவா, சௌதி அரேபியாவா – உலகக்கோப்பையின் ஆரம்ப மேட்ச் யாருக்கு? இரவில் தெரியும். ரஷ்ய மற்றும் உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே கோலாகலம்தான் இனி!

**

அப்படிப் பார்த்தால் ..

வாழ்க்கையில் யார் உங்கள் முன்னே செல்கிறார்கள், யார் உங்கள் பின்னால் வருகிறார்கள் என்பதல்ல, யார் உங்களுடன் வருகிறார்கள் என்பதே முக்கியம்.

– ஸ்வாமி வாட்ஸப்பானந்தா

ஸ்வாமி, இங்கே ஒன்றை கவனித்ததாகத் தெரியவில்லை. அல்லது மேற்கொண்டு விளக்கவில்லை. சிஷ்யை இன்று லீவு என்பதால் மூடு அவுட்டாகியிருக்கலாம். அந்த விஷயத்தை –சிஷ்யை விஷயத்தையல்ல- ஸ்வாமி கவனிக்காதுவிட்டுவிட்ட விஷயத்தை, கொஞ்சம் தொடர்வோம்.

யார் உங்களுடன் வருகிறார்கள் என்பது முக்கியந்தான். ஆனால் அது யாரைச் சார்ந்தது? யாரைவைத்து, கூடவே இனிக்க இனிக்கவோ அல்லது இடித்துப் பேசிக்கொண்டோ வருபவர் முக்கியம்? உங்களை வைத்துத்தான். எப்படி உங்களை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள், எத்தகைய மனிதராய் இருக்கிறீர்கள், எப்படி வெளிஉலகுக்குத் தெரிகிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான் யார் உங்களுடன் வருகிறார்கள் அல்லது இனியும் வருவார்கள் என்பதெல்லாம்.

அதனால் வாழ்க்கையில் உங்களின் முன்னே யார், பின்னே யார் என்பதல்ல பிரமாத விஷயம். உங்கள்கூடவே சதா வந்துகொண்டிருப்பவர்கூட, அவர் எவ்வளவுதான் அன்புக்குரியவராயிருப்பினும், சிறந்தவராக இருப்பினும் ஓரளவுக்குத்தான் அவரது முக்கியத்துவமும். அதற்கு மேலில்லை. பின்னே? இவை எல்லாவற்றுக்குமிடையே, நடுநாயகனாக அல்லது நாயகியாக நிற்கும் நீங்கள்தான் இங்கே உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. மற்றவர்களிடம் மட்டுமல்லாது, உங்களிடமேகூட நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், யாராக, எத்தகையவராக உண்மையில் இருக்கிறீர்கள், இந்த உலகில் வாழ்கிறீர்கள் – இதுதான் இங்கே விஷயமே. இதில் உன்னதம் இல்லையெனில் வேறொன்றும் பெரிதாக எந்தவித பாதிப்பையும் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடாது. நீங்கள்தான் இந்த உலகத்தில் உங்களுக்கு எல்லாம். வேறெதுவும், யாரும் இல்லை.

**

ஓ! அப்பவே இப்பிடித்தானா?

’அன்றும் இன்றும் என்றும்’ என்கிற முந்தைய பதிவின் கமெண்ட்டிற்கு ஏதோ சொல்லப்போய், ‘உலகம்போறப் போக்கப் பாரு’ என்கிற வரி மனதில் தங்கி, குறுகுறுவென ஊர ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் ஆழத்தில் ஊடுருவி தங்கமே தில்லாலே.. டிங்கிரி டிங்காலே என்று முணுமுணுத்துக்கொண்டது. சின்ன வயதிலேயே கேட்டிருக்கிறோமே ஆல் இந்தியா ரேடியோவில், ரேடியோ சிலோனில். இது எந்தப் படத்தில்தான் வருகிறது, யார் எழுதியது என்கிற சங்கீத ஆராய்ச்சி ’அன்பு எங்கே?’ என்று கேட்டு ஸ்தம்பித்தது.

டி.ஆர்.ராமச்சந்திரன், பாலாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த 1958-ல் வெளியிடப்பட்ட தமிழ்ப்படம் இது. தஞ்சை ராமையா தாஸ் புகழ்பெற்ற பாடலாசிரியர் அப்போது. அந்தக்காலப்படம் என்றால் முதல் சீனிலேயே பாட்டு வந்துவிடும். பாட்டுக்காகத்தானே ஜனங்கள் உயிரைவிட்டார்கள். கொட்டகைக்கு –சினிமாக் கொட்டகைக்குப் போனதே அதுக்குத்தானே! படத்திற்கு இசை வேதா. மொத்தம் ஒன்பது பாடல்களில் ஐந்தை ராமையாதாஸ் எழுதியிருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், விந்தன், கண்ணதாசன், வி.சீத்தாராமன் ஆகிய கவிஞர்களுக்குப் போனால் போகிறதென்று ஆளுக்கு ஒரு பாட்டெழுத சான்ஸ் கொடுத்திருக்கிறார்கள். யாரிந்த வி. சீத்தாராமன் எனத் தேடித் தேடி மண்டை காய்ந்ததுதான் மிச்சம். மனுஷனைப்பற்றி தகவல் ஏதும் அகப்படவில்லை. சரி விடுங்கள். அந்தப் படத்தில் சீத்தாராமன் எழுதி டி.எம்.சௌந்திரராஜன் (அப்போது புகழ்பெற்றிருக்கவில்லை) பாடிய பாடல்: டிங்கிரி டிங்காலே.. மீனாட்சி டிங்கிரி டிங்காலே..! போர்ச்சுகீசிய இசையில் கொஞ்சம் தோய்த்து, தமிழ் சினிமாப் பாட்டுக்கு மெட்டமைத்திருக்கிறார் வேதா. 60 வருஷங்கள் ஆகிவிட்டன இந்தப்பாடல் திரையைத் தொட்டு. நம்மை விடமாட்டேன் என்கிறது இன்னும்..

அந்தக்கால உலகத்தைப்பற்றி, சமூகச்சூழல்பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது இந்தப் பாடல். மனிதனின் அடாவடித் தயாரிப்பான அணுகுண்டு ஜப்பானிய மண்ணில் விழுந்து வெடித்து சர்வநாசம் விளைவித்து 13 வருடங்களே ஆகியிருந்த கால கட்டம். நமக்குத்தான் மூளையிருக்குன்னு விஞ்ஞானிகள் எதையாவது செஞ்சிகிட்டே போகப்படாது. அதன் விளைவு எப்படிப்போகும்கிற சமூகப்பொறுப்பு வேண்டாமா எனக் கேட்காமல் கேட்கிறார் கவிஞர். சீத்தாராமனின் ஃபௌண்டெய்ன் பேனா அந்தப்பாட்டில் ஒரு இடத்தில் இப்படி விளையாடுகிறது:

அதிகமாகப் படிச்சிப் படிச்சி மூளை கலங்கி போச்சு
அணுகுண்டைத்தான் போட்டுகிட்டு அழிஞ்சுபோகலாச்சு
அறிவில்லாம படைச்சிப்புட்டா மிருகமுன்னு சொன்னோம்
அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம் !

அட, அப்படியா சங்கதி! சரி, அந்தக்கால சமூகச்சூழல்.. அதாவது குடும்பப்பொறுப்பில்லாம கையில் காசு இருக்குன்னு இஷ்டத்துக்கு அலையும் ஆம்பிளைகள், அல்டாப்பு அடாவடிகள், மைனர்கள் எப்படிப் பொழுது போக்கினார்களாம்? சொல்கிறார் இப்படி:

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சிபோன ரொட்டித் துண்டு தோக்கும் இவர் டின்னர்ர்..
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆசை
குதிரை வாலில் கொண்டுபோயி கட்டிடுவார் காசை !

ஓ! கிண்டி ரேஸுக்குப்போய் குதிரை குதிச்சுக் குதிச்சு ஓடுவதைப் பாத்து போதை தலைக்கேறி, பணத்தை ஊதித்தள்ளுவதே வேலயாப்போச்சாமா? ம்.. அப்பறம்?

ஐயா வரவைப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளம்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
அய்யா வாயில் புகையுது பார்.. ஐயாம் வெரி ஸாரி !

ஓஹோ, கவிஞரே ஸாரி சொல்லவேண்டிய நிலைமையா! சரி, அப்போதெல்லாம் இளசுகளாவது இடம், ஏவல் பாத்து இங்கிதமா, ஒழுங்கு மரியாதையா நடந்துகிச்சுங்களாமா, இல்லையா? சீத்தாராமன்கிட்டேயே கேட்டுருவோம். இந்தா சொல்லிட்டாரு :

கண்ணும் கண்ணும் பேசிக்குது.. மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடிபோட்டு கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டை எல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பை எல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது !

உலகம்போறப் போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே !

அடக்கஷ்டமே! நேரு காலத்திலேயே இப்பிடியெல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராயிருச்சா நாடு? என்னமோ நரேந்திர மோதி வந்தபின்னாலேதான் நாசமாப்போச்சு எல்லாம்னு இவனுங்க சொல்றதக் கேட்டுகிட்டு நானும் நம்பிக்கிட்டு இருந்தேனே ..

**