கிரிக்கெட் உலகக்கோப்பை, இந்தியா (CWC India, 2023)

சர்வதேச கிரிக்கெட் அதிகார அமைப்பான ஐசிசி-யால் நான்கு வருடத்துக்கு ஒருமுறை நடத்தப்படும் கிரிக்கெட் ஒரு-நாள் உலக்கோப்பை, இந்த வருடம் இந்தியாவில் நடக்கிறது. இன்று (05 அக்டோபர், 2023) முதல் போட்டி தற்போதைய சேம்பியனான இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்கவிருக்கிறது. கிரிக்கெட் உலகே இன்று உற்று நோக்கும் இடம்: நரேந்திர மோதி ஸ்டேடியம், அஹமதாபாத், குஜராத்.

இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவற்றில் ‘டெஸ்ட்’ அந்தஸ்து பெற்ற நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகியவற்றோடு இன்னுமொரு ஐரோப்பிய நாடு பங்கேற்கிறது. அது ஹாலண்டு என அழைக்கப்படும் நெதர்லாண்ட்ஸ்! ஐசிசி-யின் அசோஷியேட் மெம்பர் நாடுகள் என அழைக்கப்படும் கிரிக்கெட் ஆடும் இதர நாடுகளான – சிங்கப்பூர், நமீபியா, அமீரகம், மலேஷியா, ஜப்பான், நேப்பாளம், தாய்லாந்து, ஹாங்காங்(சீனா) போன்ற நாடுகளிடையே நடந்த போட்டிகளில் பங்குபெற்று வென்ற தகுதியோடு, கிரிக்கெட் பெரிசுகளோடு உலகக்கோப்பை ஆட இந்தியா வந்திருக்கின்றது The Orange என கிரிக்கெட் உலகில் அழைக்கப்படும் நெதர்லாந்து!

1975-ல் இங்கிலாந்தில்தான் முதல் ஒரு-நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நிகழ்ந்தன. க்ளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கோப்பையைக் கைப்பற்றியது. இதுவரை 12 உலகக்கோப்பைகள். அவற்றில் ஆஸ்திரேலியா 5 , வெஸ்ட் இண்டீஸ் 2, இந்தியா 2, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றிருக்கின்றன. 1983-ல் கபில் தேவ் தலைமையிலும், 2011 -ல் மகேந்திர சிங் தோனி கேப்டன்சியிலும் இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளது. அப்படியா சேதி..? – என்கிறாரா கீழே இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா !

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து top favourites எனலாம். இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதும் போட்டிதான் உலகக்கோப்பை ஃபைனல் என்று எதிர்பார்த்துப் படபடக்கும் பைத்தியங்கள் கொண்ட கிரிக்கெட் உலகமும் உண்டு! இந்தியா தன் முதல் போட்டியை 8/10/23 அன்று சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகிறது. பாகிஸ்தானின் முதல் மேட்ச் 6/10/23 அன்று ஹைதராபாதில், ஆரஞ்சு சட்டைகளுக்கெதிராக. அட… இந்தியா-பாகிஸ்தான் போர் என்னிக்குப்பா என்கிறீர்களா? அது 14 அக்டோபரில் அஹமதாபாதில். ஏகப்பட்ட பாகிஸ்தானி ரசிகர்கள் இந்தியாவில் வந்து இறங்கப்போகிறார்கள் இதற்கென! பச்சைக்கொடிகளும், மூவர்ணக்கொடிகளும் போட்டிபோட்டுப் பறக்கப்போகும் குருக்ஷேத்திரம்!

Mouth-watering.. Gujarati Dhokla

டிக்கெட் வாங்கிப் போய் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் ஒக்காருவோமா! டோக்லா (Dhokla), அப்பறம்.. சிவ்டா(Chiwda), சலோனி, பகர்வாடி (bhakarwadi), பாப்டி (Papdi) என விதவிதமா குஜராத்தி நம்கீனக் கொரித்துக்கொண்டே எஞ்ஜாய் பண்ணலாமா என்கிற நப்பாசை, அதீதக் கனவுகளெல்லாம் வேண்டாங்க, விட்டிருங்க! டாப் போட்டிகளுக்கான மைதான டிக்கெட்டுகள் எப்பவோ வித்துப்போச்சு.. அஹமதாபாத், டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரில் மேட்ச்சா? சான்ஸே இல்ல. அஃபீஷியல் டிக்கெட் விற்பனை தளத்தை ஆன்லைனில் இரண்டு நாட்கள் முன் சோதித்தேன். டெல்லி, பெங்களூர் போன்ற மைதானத்தில் ஏதாவது- அதாவது இந்தியா ஆடாத- மேட்ச்சைப் பார்க்கலாமா என்கிற விபரீத ஆசையில். அவற்றிற்கும் கம்மி விலை (ரூ.450, 750) , மத்திம விலை (ரூ.1500, 2000) டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ.5000, ரூ.20000 வகை டிக்கெட்டுகள்தான் சில கிடைக்கின்றன! Crazy,, crazy, cricket obsessed country. 45 inch, 50 inch LED TV -ன்னு முன்னாடி உட்காருவோம்.. பஜ்ஜி, பக்கோடா தின்றுகொண்டு மேட்ச் பார்ப்போம்.. இஷ்டத்துக்கும் கூச்சல்போடுவோம்.. ரசிப்போம். நம்ம ஒலகம்தான் நமக்கு லாயக்கு!

15, 16 நவம்பரில் இரு செமிஃபைனல் போட்டிகள் முறையே மும்பை, கல்கத்தா மைதானங்களில் நடைபெறும். அதில் ஒன்றில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா ஆடும் என நம்புவோம். (140 கோடி ஜனங்களப்பா.. ஏமாத்திறாதீங்க..!) உலகக்கோப்பை இறுதியில் யார் கைக்குத்தான் போகும்? 19 நவம்பர் இரவில் அஹமதாபாதில் பட்டாசு வெடித்து, அந்த ரகசியம் அம்பலமாகும்!

Live telecast in India – CWC matches starting @ 2 PM IST : Star Sports 1, Star Sports 1 HD – English commentary (Commentators include Ricky Ponting, Sunil Gavaskar, Nasser Hussain, Eoin Morgan, Simon Doull, Dinesh Karthik, Ravi Shastri et al… ). தமிழ் காமெண்ட்ரி கேட்டுகிட்டே மேட்ச் பாத்தாத்தான் மஜாவா இருக்கும்னா சொல்றீங்க! அதுக்கு – Star Sports 1 Tamil HD. Star channel-ன் தமிழ் காமெண்ட்ரி டீம்ல கே. ஸ்ரீ காந்த், முரளி விஜய், பத்ரிநாத், ரமேஷ் , ரஸ்ஸல் ஆர்னால்ட், பாலாஜி போன்ற முன்னாள் வீரர்கள் இருக்காங்க.. விறுவிறுன்னு, வெவரமா சொல்வாங்க…

**

**  

Asian Games 2023: இந்திய கிரிக்கெட் நங்கைகள்- தங்கமே தங்கம்!

சீனாவின் ஹாங்ஸௌவ் (Hangzhou) நகரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் (Asian Games, 2023) நடைபெற்றுவருகின்றன. 25/9/23 அன்று நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், இந்தியாவும், ஸ்ரீலங்காவும் கடுமையாக மோதின.  இறுதியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கிய இந்தியா வென்றது. இந்திய அணிக்கு முதன்முதலாக ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் .

இதற்கு முன் 2010, 2014 -ஆம் வருடங்களில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்தான் பெண்கள் கிரிக்கெட் இடம்பெற்றது. அந்த ஆசியாட் போட்டிகளுக்கு, இந்தியா அணியை அனுப்பவில்லை. அந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் தங்கம் வென்றிருந்தது! இந்தத் தடவைதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன்முதலாக ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்குபெற்றது. இந்திய வீராங்கனைகள் சூரப்புலிகள்! முதல் அடியே தடாலடி! தங்கத்தைத் தட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி என்று ஒரு இளம் அணி சீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான எதிரிகள், சவால்கள் எதிரே. என்ன செய்யுமோ.. சொல்வதற்கில்லை ஒன்றும்!

நேற்றைய ஆட்டத்தின் முடிவில், அதிரடி வீராங்கனையான சமாரி அட்டப்பட்டு (Chamari Athapaththtu) கேப்டனாக விளங்கும் ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்தது வெள்ளிப் பதக்கம். வெங்கலப்பதக்கத்திற்காக பாகிஸ்தான் பங்களாதேஷுடன் நேற்றே (25/9/23) மோதியது. மொத்துப்பட்டது. செமிஃபைனலில் இந்தியாவிடம் பரிதாபமாகத் தோற்றிருந்த பங்களாதேஷ், ஆசிய வெங்கல மெடலை அடித்துக்கொண்டுபோய்விட்டது! இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாகிஸ்தானி கிரிக்கெட் தோழிகளுக்கு ஒரு மெடலும் இல்லையே.. அடடா!

செமிஃபைனல்களில் ஸ்ரீலங்கா, பாகிஸ்தானைத் தோற்கடித்தும், இந்திய அணி பங்களாதேஷை வென்றும், தங்க மெடலுக்கான போட்டியில் சந்தித்தன. ஸ்பின் எடுத்த, ஸ்லோ பிட்ச்சில் இந்தியா முதலில் பேட் செய்தது. ஆவேசம் காட்டும் பேட்டர்களான ஷெஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியொர்களை விளாசவிடவில்லை ஸ்ரீலங்காவின் ஸ்பின்னர்கள். குறிப்பாக இனோகா ரணவீரா, உதேஷிகா ப்ரபோதினி, சுகந்திகா குமாரி ஆகியோர் அழகாக வீசினார்கள். இந்திய நங்கைகளுக்கு நெருக்கடி தர முயன்றார்கள். ஆயினும் சமாளித்து ஆடிய ஸ்ம்ருதி மந்தனா (46), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(42) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பினால் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 116 எடுத்தது. 20 ஓவர் ஃபைனல் என்று பார்த்தால் இந்த ஸ்கோர் குறைவுதான்.

Asian Games Gold medal winners: Indian Women’s Cricket team

கொஞ்சம் நின்று நிதானித்து ஆடியிருந்தால் ஸ்ரீலங்கா ஜெயித்திருக்குமோ என்றும் தோன்றியது ஒரு கட்டத்தில். கேப்டன் அட்டப்பட்டுவை எளிதில் தூக்கிவிட்டார்,  இந்தியாவிற்காக தன் இரண்டாவது டி-20 போட்டியை ஆடிய 18 வயது வீராங்கனை, வேகப்பந்துவீச்சாளர் டிட்டஸ் ஸாது (Titus Sadhu). 4 ஓவரில் ஆறு ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் சாய்த்தது இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. மிடில் ஓவர்களில் சவாலை எதிர்கொண்ட ஹாசினி பெரேரா (25), நீலாக்ஷி டி ஸில்வா (23), ஒஷாதி ராணதுங்கே (19) ஆகியோர் ஸ்ரீலங்காவின் தங்கத்துக்கு முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இந்திய ஸ்பின்னர்கள் ராஜேஷ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, தீப்தி மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசி ஸ்ரீலங்காவை அமுக்கிவிட்டார்கள். இந்திய வெற்றி.

Proudly displaying gold medal – Smriti Mandhana

ஆசிய விளையாட்டுகளில் இந்தியக் கொடி மேலே ஏற, தேசீய கீதம் பாடப்படும் தருணம் உன்னதம். இந்தமுறை எங்கள் அணி அந்தத் தருணத்தைத் தருவித்தது த்ரில்லிங்காக இருந்தது. அதை  அனுபவிக்க நேர்ந்தது ஆனந்தமாக இருந்தது என்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்ம்ருதி மந்தனாவும், ஜெமிமா ரோட்ரிக்ஸும்.

இறுதி ஸ்கோர்:

இந்தியப் பெண்கள்:  116 / 7.

ஸ்ரீலங்க மங்கைகள்:   97 / 8

**

ASIA CUP 2023: இந்தியா சாம்பியன்ஸ்!

ஆசியகோப்பை கிரிக்கெட் ஃபைனலில் இப்படி ஒரு அணி துவம்சம் செய்யப்பட்டதில்லை. நல்லதானே போய்க்கொண்டிருந்தது நமக்கு, என்ன ஆச்சு இன்னிக்கு என்று அந்த அணியின் ரசிகர்கள் கதறும் அளவுக்கு, ஒரே போடாகப் போட்டு சாய்த்துவிட்டது இந்தியா. 50 ஓவர் மேட்ச். டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்து, 15 ஓவரிலேயே ஸ்ரீலங்கா மரண அடிவாங்கியது. 50 ரன் – ஆல் அவுட்!

இந்தியாவின் முகமது சிராஜ் போட்ட ஸ்விங் பௌலிங் பல நாட்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் உலகில் ஸ்லாகித்துப் பேசப்படும். 140 + கி.மீ. வேகப்பந்துகளில் சில உட்பக்கமாக ஸ்விங் ஆனதும், பல உள்ளே நுழைந்ததுபோல் திரும்பி, வெளியே போய்ப் போக்குக் காட்டியதும், ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களைத் திணறவைத்தது. இதுவரை அனுபவிக்காதது. பிட்ச்சில் இறங்கி இந்திய வேகப்பந்துவீச்சை சந்தித்த உடனேயே, எல்லாம் தலைகீழானது. தடவ ஆரம்பித்துவிட்டார்கள். பேட்டிங் செய்வதெப்படி என மறந்துபோய்விட்டதுபோல் தோன்றியது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் முதல் ஓவரில் மூன்றாவது பந்திலேயே பும்ரா, ஓப்பனர் குஸால் பெரெராவைத் தூக்கி வீசினார். சிராஜும் பயங்கரமாக மறுபக்கத்திலிருந்துப் போட்டுத் தாக்க, அவரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள்! கேட்கணுமா பின்னே? ஸ்ரீலங்க பேட்ஸ்மன்களுக்குப் பித்துத்தான் பிடித்துவிட்டது என அவர்களது ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். நிலமை அப்படி.. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா 12 க்கு 6 விக்கெட்டுகள்! சிராஜின் அனலிஸிஸ் 5 for 5 எனச் சீறி, ஸ்ரீலங்காவின் கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சின்னாப்பின்னமாக்கியது. மனுஷனுக்கு ரோஹித் கொடுத்ததே 7 ஓவர்கள்தான். அதில் அவர் சாய்த்தது 6 விக்கெட்டுகள்.

முகமது சிராஜ் – பாராட்டு மழையில் !

பும்ராவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க எண்ணிய ரோஹித், பாண்ட்யாவிடம் பந்தைக் கொடுத்தார். ஸ்ரீலங்காவுக்கு மூச்சு வருவதற்குள், பாண்ட்யாவின் பௌலிங் அவர்களை அந்தோ பரிதாபமாக்கிவிட்டது. 3 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகள். விழிபிதுங்கிய ஸ்ரீலங்க வீரர்கள் அத்தனை விக்கெட்டுகளயும் சொற்ப டோட்டலுக்குப் பறிகொடுத்து ஓடிப்போனார்கள்!

இந்தியா சேம்பியன்ஷிப் வெல்ல 51 ரன் இலக்கு என இறங்கியது. ஷுப்மன் கில்லுடன் (Shubman Gill) ஓப்பன் செய்ய இஷான் கிஷனை இறக்கிவிட்டார் ரோஹித் ஷர்மா. இவர்களும் ஸ்ரீலங்காவின் ஜூனிவர் மாலிங்காவான, பதிரானாவிடம் தடுமாறுவார்கள். 51 ரன் எடுப்பதற்குள் 2, 3 விக்கெட்டுகள் இந்தியாவுக்கும் சாயும் என்பது அப்போதைய பொதுவான கணிப்பு. ஆனால் நடந்ததே வேறே! இறங்கிய உடனேயே, பதிரானா, மதுஷன்கா என எவரையும் விடாது தாக்கினார்கள் கில்லும், கிஷனும். 6.1 ஓவர்களிலேயே ரோஹித்தின் கைக்கு வந்தது ஆசிய கோப்பை. 8-ஆவது முறை கோப்பையைக் கைப்பற்றி மகிழ்ந்தது இந்தியா.

பாகிஸ்தானிலும், ஸ்ரீலங்காவிலுமாக நடந்த இந்த ஆசிய கோப்பைத் தொடரின் மறக்க முடியாத இந்திய வீரர் முகமது சிராஜ். ப்ளேயர் ஆஃப் த மேட்ச் வாங்கியதும், தான் எப்படிப்பட்ட மனுஷன் என உடனே காண்பித்தார் . ஆசிய கோப்பை தொடர் முழுதும் இஷ்டத்துக்கும் இடைமறித்துத் தொல்லை தந்த மழை, எல்லோருக்கும் எரிச்சலூட்டியது. அப்போதெல்லாம் தங்களின் சிறப்பான பணி மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்து பாராட்டுப் பெற்றார்கள் கொழும்பு ஆடுகளத்தின் மைதானப் பணியாளர்கள். அவர்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை உணர்ந்த சிராஜ், அதற்கு நன்றி செலுத்தும் வகையில் தனக்குக் கிடைத்த 5000 டாலர் (ஸ்ரீலங்க ரூ.16 லட்சம்) விருதுத் தொகையை சொளையாகத் தூக்கி அப்போதே அவர்களிடம் கொடுத்துவிட்டார். எத்தனையோ பேர் என்னென்னவோ சம்பாதிக்கிறார்கள், கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு. எத்தனைப் பேரிடம் வெளிப்பட்டிருக்கிறது இத்தகைய மனம்?

சரி, தயாராகுங்கள் ரசிகர்களே… உலகக்கோப்பை 2023 கதவைத் தட்டப்போகிறது விரைவில். அதுவும் இந்தியாவில்.

**

ASIA CUP 2023 பாகிஸ்தானை தூக்கிக் கடாசிய இந்தியா

நேற்று  கொழும்பு மைதானத்தில் ஆசியகோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 போட்டியில், டாஸ் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்யச்சொன்னார் பாக் கேப்டன் பாபர் ஆஸம். அவ்வளவுதான். ஏன் அப்படிச் சொல்லித் தொலைத்தேன் என்று சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர் தலையில்  அடித்துக்கொண்டிருப்பார்.. ஜாடிக்குள்ளிருந்து பூதம் புறப்பட்டதுமாதிரி கிளம்பி, பாகிஸ்தானின் ஆகச்சிறந்த பௌலர்களை துவம்சம் செய்துவிட்டார்கள் இந்திய முன்னணி பேட்ஸ்மன்கள். விளைவு  இந்தியாவின் ஹிமாலய ஸ்கோரான 356 / 2. வெறும் 2 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தமுடிந்தது பாகிஸ்தானால்.  அதுவும் ஆட்டத்தை ஆரம்பித்த ரோஹித், கில்  (Gill) இருவரும் தலா அரைசதம் சாத்தியபின்.

KL Rahul – Back with a bang !

3,4 பேட்டிங் வரிசைக் கிரமத்தில் இறங்கிய கோஹ்லியும், கே.எல். ராஹுலும் அசடுகள் போல்தான் மெதுவாக ஆரம்பித்தார்கள். பின்னால் சூடேறி, பாக் வேகப்பந்துவீச்சாளர்களையும், ஸ்பின்னர்களையும் ஓட, ஓட விரட்டிவிட்டார்கள். ஒருகட்டத்தில் ஷஹின் ஷா அஃப்ரீதி, ஹாரிஸ் ராஃப், நஸீம் ஷா என்று பாகிஸ்தானின் டாப் பௌலர்கள் கையில் அடி, காலில் அடி என்று பெவிலியனுக்கு ஓடவே விரும்பியது செம தமாஷாக இருந்தது!

இந்த ஆபரேஷன் மர்டரில், விராட் கோஹ்லியும், காயத்திலிருந்து நீண்டநாள் விலக்கத்தின் பின் திரும்பியிருந்த ராஹுலும் ஆளுக்கொரு சதம் அடித்து இந்திய ரசிகர்களுக்கு போதையேற்றினார்கள். (கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை வேகமாகக் கடந்து சாதனை) இந்தியாவின் முதல் இரண்டு பேட்ஸ்மன்கள் தலா அரைசதம், அடுத்து வந்த இருவர் ஆளுக்கொரு சதம். ஆஹா.. இப்படி இதற்கு முன் பாகிஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா காண்பித்திருக்கிறதா!

357 என்கிற இலக்கு எந்த ஒரு அணிக்கும் வயித்துக்கடுப்பைத்தான் வரவழைத்திருக்கும்.  வெகுநாள் இடைவெளிக்குபின் அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் துல்லிய ஸ்விங்கர்களில் தலைசுற்ற ஆரம்பித்தது பாகிஸ்தானுக்கு. எப்படியோ க்ரீஸில் நின்றாலே போதும் என்கிற நிலை. சிராஜும் நன்றாகவே வீசினார். பாகிஸ்தானின் டாப் பேட்ஸ்மன்கள் சிக்கிக்கொண்டு விழிக்க, இடது கை சுழல்வீரரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. நீ உன் வேலயக் காட்டு ! சக்ரவியூகம்தான். குல்தீப்பின் சுழலில் சிதறி, கதறி ஒவ்வொருத்தராக பெவிலியனுக்கு ஓடிவிட்டார்கள் பாகிஸ்தானிகள். சூப்பர் லெக்-ஸ்பின் 5 விக்கெட்டுகளை அவருக்குக் கொடுத்தது. (அடுத்த மாதம் இந்தியாவில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பையில் குல்தீப் கவனத்திற்கு வருவார்.)

அடிபட்ட மரவட்டைபோல சுருண்டு விழுந்தது பாகிஸ்தான். முக்கி, முனகி 128 தான் அவர்களால் முடிந்தது. காயம் காரணமாக இரண்டு பௌலர்கள் பேட்டிங் செய்யமுடியவில்லை என்றார்கள். இந்தியாவின் 258 வித்தியாசத்தில் அபார வெற்றி, பாகிஸ்தானை நொந்துபோக வைத்திருக்கும்.

இதை எழுதுகையில் இந்தியாவுக்கு எதிராக இன்றைய போட்டியில் இளம் ஸ்ரீலங்கா இடதுகை ஸ்பின்னர் துனித் வெல்லாலகே (Dunith Wellalage) பின்னிப் பெடலெடுத்துவிட்டார். இந்தியாவின் டாப் 5 வீரர்களை சுருட்டி எறிந்துவிட்டார். திணறுகிறது இந்தியா! இன்று ஸ்க்ரிப்ட் மாறுகிறதோ என்னவோ. கிரிக்கெட் ..ஹ்ம்… a magical game of uncertainties…

**

கிரிக்கெட் : இந்தியா vs பாகிஸ்தான் Super clash !

ஆசியகோப்பை கிரிக்கெட்டில் இன்று ஸ்ரீலங்காவின்  பல்லிக்கலே மைதானத்தில், பரம வைரிகள் மோதுகின்றன. இந்தியா vs பாகிஸ்தான்! ரசிகர்களின் வெகுநாளைய எதிர்பார்ப்பில்.. இன்று விழுகிறது முற்றுப்புள்ளி.

India captain Rohit Sharma

2019-ல் நடந்த ஒருநாள்-உலகக்கோப்பையில்தான் கடைசியாக இரு அணிகளும் மோதின. கோஹ்லி கேப்டனாக இருந்த அந்தப் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தினால் இந்தியா பாகிஸ்தானை அப்போது வீழ்த்தியிருந்தது.

இன்றைய கதை எப்படிப்போகுமோ, யாரே அறிவார்! எந்த நேரத்திலும் மைதானத்தில் நுழைந்துவிடுவேன் என மழைவேறு பயமுறுத்துவதாகக் கேள்வி. மழை ஊடுறுவலால் ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டம் நடந்தால், இரு அணிகளும் தங்களது வழக்கமான ஒரு-நாள் கிரிக்கெட் வியூகங்களை மாற்றி, ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் டி-20 போல் ஆட நேரிடும். அதற்கேற்றபடி அணியை, குறிப்பாக பேட்டிங் வரிசையை அமைத்துக்கொள்வது இந்தியாவுக்கு நல்லது.  இந்தமாதிரியான ஒரு சாத்தியக்கூறு இந்திய கோச் திராவிட் மற்றும் கேப்டன் ரோஹித்தின் திட்டமிடலில் நுழைந்திருக்கும் என நம்புவோம்.

பாகிஸ்தான் தற்போது, ஒரு-நாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1. இந்தியா தனது மிடில் ஆர்டரை சோதிப்பதில், சரிசெய்வதில் இன்னும் ஈடுபட்டிருப்பதாக ராகுல் திராவிடின் பேச்சுக்களிலிருந்து தெரிகிறது! இந்திய அணியின் காம்பினேஷன் இப்படி அமைந்தால் சிறப்பாக அமையலாம்:

1 ரோஹித் ஷர்மா 2 இஷான் கிஷன் 3 ஷுப்மன் கில்  4 விராட் கோஹ்லி  5 சூர்யகுமார் யாதவ்  6 ஹார்திக் பாண்ட்யா   7 ரவீந்திர ஜடேஜா  8 அக்ஷர் பட்டேல்  9 பும்ரா  10 முகமது ஷமி   11 முகமது சிராஜ்

பேட்டிங் வரிசையின் 5-ஆம் இடத்தில், அணிக்குத் திரும்பியிருக்கும் ஷ்ரேயஸ் ஐயர் வந்து இறங்கவும் வாய்ப்பிருக்கிறது (கே.எல். ராஹுல் காயத்திலிருந்து இன்னும் முற்றாக விடுபடவில்லையாம்!) இடதுகை சுழல் வீச்சாளரான குல்தீப் யாதவையும் இந்தப் போட்டியில் திராவிட் & கோ. கொண்டுவரக்கூடும். குல்தீப்பின் பலவீனம் : அவரால் லோயர்-ஆர்டரில் திறன் காட்டி ரன் எடுக்க இயலாது. மாறாக, அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டால், அணியின் பலம் அதிகமாகும். காரணம் பட்டேல் இடதுகை சுழல் என்பதோடு, ஒரு நல்ல ஆல்ரவுண்டர். விக்கெட் ஆரம்பத்தில் இந்தியா விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுக்க நேர்ந்தால், மிச்சம் இருக்கும் சொற்ப ஓவர்களில் பந்தை லாஃப்ட், ஹூக் செய்து அதிரடியாக ஆட முடியும் இவரால். தேவைப்பட்டால் நிதான ஆட்டத்தையும் ஆடமுடியும் என ஏற்கனவே காட்டியிருப்பவர். சிறந்த ஃபீல்டரும்கூட. நம்பர் 8-ல் பாகிஸ்தானுக்கெதிராக இவர்தான் சரியான வீரர் என்பது என் கருத்து.

இந்திய வெற்றி என்பது குறிப்பாக முதல் 4 பேட்ஸ்மன்கள் (ரோஹித், கில் (Gill), கிஷன், கோஹ்லி) எப்படி ஆடுகிறார்கள், எவ்வளவு வேகமாக ரன் சேர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். பும்ரா அணிக்குத் திரும்பியிருப்பதால், சிராஜ், ஷமியோடு இணைந்து இந்திய வேகப்பந்துவீச்சு பாகிஸ்தானின் டாப்-ஆர்டரைத் தாக்கி நிலைகுலையச் செய்யக்கூடும். ஜடேஜா அல்லது பட்டேல் (அல்லது குல்தீப்) இருவரில் யாரேனும் ஒரு ஸ்பின்னர் க்ளிக் ஆனாலும், பாகிஸ்தானுக்கு தலைவலிதான்.

Babar Azam, Pakistan Skipper

எதிர் அணியின் பலம்? வேகப்பந்து வீச்சாளர்கள் ஷஹீன் ஷா அஃப்ரீதி மற்றும் ஹாரிஸ் ராஃப் இந்திய முன்னணி வீரர்களுக்கு பெரும் சோதனைகளை முன் வைப்பர். பேட்டிங்கில் திறன்காட்ட இவர்கள்: கேப்டன் பாபர் ஆஸம், இஃப்திகார் அஹ்மது, முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமன். அணிக்கு பெரிய ஸ்கோரைக் கொணர்வதில் இவர்கள் சாதிக்கக்கூடியவர்கள்.

டாஸ் வெல்வது யார் என்பதில், ஆட்டத்தின் ரிஸல்ட்டில் பாதி அடையப்பட்டுவிடும் –குறிப்பாக ஆரம்பத்திலேயே மழை வந்து தொந்திரவு செய்தால்.

எப்படி இருப்பினும், ஒரு சனிக்கிழமை த்ரில்லர் நிகழக் காத்திருக்கிறது எனலாம்.. டிக்கட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2023-ன் host ஆதலால், டிக்கெட் வருமானத்தில் பெரும்பகுதி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டையே போய்ச் சேரும். பாகிஸ்தான் சென்று ஆட இந்தியா மறுத்துவிட்டதால், ஸ்ரீலங்காவில் இந்த marquee clash நடக்கிறது.

**

CSK’s Cup: அப்பா வெங்கடேஸ்வரா !

அஹமதாபாதின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ’ஐபிஎல் 2023’ கோப்பையை தோனி தலைமையிலான சிஎஸ்கே வென்றபின், நேற்று (30-5-23) கோப்பை சென்னை வந்து சேர்ந்தது.

ஏர்ப்போர்ட்டிலிருந்து அங்குமிங்கும் செல்லாமல், நேராக தியாகராய நகர், வெங்கடநாராயணா சாலை (TTDயின்) ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலைப் போய் அடைந்தது ஐபிஎல் கோப்பை! சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினர் மட்டும், தலைவர் என்.ஸ்ரீனிவாசன் உட்பட, கூடவே வந்திருந்தனர். சிஎஸ்கே வீரர்கள், பயிற்சியாளர்கள் கோவிலுக்கு வரவில்லை. இதைப்பற்றி முன்னரே அறிவிப்பில்லாதிருந்தும் எப்படியோ தெரிந்து, கோவில் முன் கூட்டம் சேர்ந்துவிட்டதாம். ஐபிஎல் கோப்பை பெருமாள், தாயார் முன் வைக்கப்பட்டு விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது (அப்பா! வெங்கடேஸ்வரா! அடுத்த வருஷமும் நாங்கதான் ஜெயிக்கணும்..). அர்ச்சகர்களும் கோப்பையோடு ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சிஎஸ்கே ரசிகர்களோ!

இதற்கு முன் 2018, 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை அணி ஐபிஎல் சேம்பியன்ஷிப்பை வென்றபோது, சிஎஸ்கே/இண்டியா சிமெண்ட்ஸ் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவருமான என். ஸ்ரீனிவாசன், அவரது மகள் ரூபா குருநாத்துடன் இந்தக் கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்தாராம்.

வாசகர்களுக்கு தினத்தந்தி போல் சுடச்சுடச் செய்தியை, (அட்லீஸ்ட் எப்போவாவது) தருவோமே என்கிற சுபச் சிந்தனையில் இந்தப் பதிவு! கிரிக்கெட் ரசிகர்களில் நாத்திகர்கள் இருந்தால், அவர்களும் மனதுக்குள்ளாவது ஓரிருமுறை ‘வெங்கடேஸ்வரா’ என்பார்களே..

———————————————————–

தினமும், எத்தனைதான் வேலை இருந்தாலும், ஓரிரு முறையாவது ‘கிருஷ்ணா’ என்று சொல்லலாமே! புரந்தர தாசர்

IPL 2023: சென்னைக்கு விசில் போடு!

3 அணிகள் ஆடிய அதிசய ஐபிஎல் கிரிக்கெட் ஃபைனல் அஹமதாபாதில் நடந்தது! முதல் இரவு (இது கிரிக்கெட்டின் இரவு!) ஆட்டத்தில் வருணனின் அணி, சென்னையையும், குஜராத்தையும் ஓட ஓட மைதானத்திலிருந்தே விரட்டிவிட்டுவிட்டது. ஃபைனலுக்காக வருணனுக்கு பயந்து ரிஸர்வ் வைக்கப்பட்டிருந்த இரண்டாவது நாளில் ஆட்டம் துவங்கியது. இடையில் புகுந்து கொஞ்சம் மிரட்டிவிட்டு, ’சரி போனால் போகிறது.. நீங்களே ஆடிக்கங்கடா!’ என்று வருணன் விட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விட, சிஎஸ்கே யும், குஜராத் டைட்டன்ஸும் மோதின. பெருந்திரளான ரசிகர்கள் முன் ஆடின.

படம்: கோப்பைக்காக மோதிய கேப்டன்கள்- பாண்ட்யா, தோனி

முதலில் பேட் செய்த குஜராத் சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்தது. சிஎஸ்கே யின் பிரதான பௌலர்களைத் தாக்கி ரன் வேகமாக சேர்க்க ஆரம்பித்திருந்தது. குறிப்பாக, குஜராத்தினால் குறைந்த பட்ச ஏலத்தொகையில் வாங்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் இடதுகை ஆட்டக்காரர் சாய் சுதர்ஸன் படு ஆவேசமாக குஜராத் அணிக்காக ஆடினார். வெறும் 47 பந்துகளில் 96 எடுத்தார். One of the best death bowlers in IPL 23 என மதிக்கப்படும் (சிஎஸ்கே/ ஸ்ரீலங்காவின்) மதீஷா பதிரானாவின் பந்துவீச்சை அனாயாசமாகக் கையாண்டார் சுதர்ஸன். 14 பந்துகளில் 34 ரன். சுதர்ஷணச் சக்கரம் படுவேகமாகச் சுற்றுவதுகண்டு, எதிரே நின்றுகொண்டிருந்த கேப்டன் பாண்ட்யாவே அசந்துபோய்விட்டார். இதுதான் இறுதிப்போட்டியின் தனிப்பட்ட ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் – இரு தரப்பிலிருந்தும். வ்ருத்திமான் ஸாஹா 54, ஷுப்மன் கில் 39, ஹார்திக் பாண்ட்யா 21.. குஜராத்தின் மொத்தம் 214.

215 இலக்கென இறங்க சென்னை ஆயத்தமானபோது வருணனும் இறங்கி, நீ உள்ளே போய் கொஞ்சம் உட்கார் என்று மிரட்டிவைத்தார் இரண்டு மணிநேரம். அப்புறம் ஆட அனுமதித்துவிட, மழைநேரக் கழித்தலுக்குப்பின், 15 ஓவரில் 171 என இலக்கு சிஎஸ்கே-க்கு நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்கே ஓப்பனர் டெவன் கான்வாய் 47 வேகமாக எடுத்தாலும், பயமுறுத்தியது இலக்கு. விக்கெட்களும்  வீழ்ந்தவாறு இருந்தன: கெய்க்வாட் 26, ரஹானே 27, அம்பத்தி ராயுடு 19. மோஹித் ஷர்மாவின் ஒரே பந்தில் காலியான தோனி! குஜராத் சிரித்தவாறு முன்னேறிக்கொண்டிருந்தது. மஞ்சள் முகங்களில் மந்தமாகிவிட்ட பிரகாசம்.

படம்: குஜராத்தில் ஒரு சென்னை !

களத்தில் இப்போது ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா. 13 ரன்கள் சென்னைக்குத் தேவை, கோப்பையைத் தூக்க.  கடைசி ஓவர் போடுவது குஜராத்தின் டெத் பௌலர் மோஹித் ஷர்மா (முன்னாள் சென்னை சிங்கம்). முதல் 4 பந்துகளில் சிங்கிள், சிங்கிளாக வந்த வெறும் 3 ரன்கள். ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகள். சென்னை நாடுவது 10 ரன்கள். மோஹித் ஓடிவந்து ஒரு ஸ்லோ-யார்க்கரை மிடில் ஸ்டம்ப்பில் வீச, எதுவந்தாலும் தூக்கிவிட வேண்டியதுதான் என வெறித்தனத்துடன் காத்திருந்த ஜடேஜா, அதை நேராக பௌலரின் தலைக்கு மேலே தூக்கி விளாச, மைதானத்துக்குள் பாய்ந்து விழுந்தது பந்து. சிஎஸ்கே தோற்கப்போகிறது என முகம் சிவந்து (ஏற்கனவே ஒரே சிவப்புதான்) அழ ஆரம்பிவித்துவிட்டிருந்த ஒரு ரசிகை, இளங்குமரி, முகத்தைத் துடைத்துக்கொண்டு ஜடேஜாவை உற்று நோக்குகிறாள் – அடுத்த பந்தில் 4 ரன் தேவையாச்சே.. அடிக்கமுடியுமா ஜடேஜாவால்.. அடிக்காவிட்டால்.. ஐயஹோ ! – என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பில். ஊசிமுனையில் ஆட்டம் காட்டும் அதிர்ஷ்டம். கிரிக்கெட் தாண்டி இப்படி ஒன்றும் தேவைப்படுகிறதே அவ்வப்போது காரியத்தை முடித்துவைக்க. கடைசி பந்தில் மோஹித் லெக் ஸ்டம்பிற்கு வெளியே யார்க்கரை முயற்சிக்க, மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பருக்குப் பின்பக்கமாக அதை விளாசிவிட்டார் ராஜ்புட் ரவீந்திர ஜடேஜா! அப்புறம் என்ன.. ராஜா கையவச்சா.. ராங்காப் போயிருமா? வந்தது வெற்றி சென்னையிடம். த்ரில் வெற்றி. ஐந்தாவது தடவையாக ஐபிஎல் கோப்பை, தோனியின் கையில்!

படம்: ஜடேஜாவைத் தூக்குவது.. அட, தோனியா !

சிஎஸ்கே ரசிகர்களோடு,  களிக்க வந்திருந்த தன் உள்ளூர் கூட்டத்தையும் குதூகலிக்க வைத்த ஜடேஜாவைப் பாராட்ட என மஞ்சள் சட்டைகள் மைதானத்துக்குள் பாய்கின்றனர். கடைசி இரண்டு பந்துகளின்போது, மைதானத்தைப் பார்க்காது, எதிர் சீட்டின் பின்பிறம் பார்த்துக்கொண்டு, கண் திறந்தவாறு தியானித்திருந்த மஹேந்திர சிங் தோனி, மெல்ல எழுந்துவந்து, மைதானத்துக் கோலாகலத்துடன் சேர்ந்துகொள்கிறார். எந்த ஒரு வீரரை நோக்கியும் அதிகம் எமோஷனைக் காண்பிக்க விரும்பாத தோனி, ஜடேஜாவை நெருங்கி அவரைத் தூக்கிக்கொள்ள, அஹமதாபாதின் மைதானம் மயங்குகிறது. ரசிகைகளின் கண்களில் மேலும், மேலும் ஈரம்! ஃபைனலுக்கு முன், ‘இதுதான் கடைசிப்போட்டி, ரிடையர் ஆகிவிடுகிறேன்!’- என அறிவித்துவிட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் அம்பத்தி ராயுடுவையும் நெருங்கி மெல்ல அணைத்துக்கொள்கிறார் கேப்டன் மாஹி! 20 வருட காலம் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினருக்கும் (குறிப்பாக அப்பாவுக்கு), ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார் அடக்கத்துக்குப் பேர்போன ராயுடு.

Pic: ஐபிஎல் கோப்பையுடன் ஜடேஜா, தன் மனைவி ரிவாபா, குழந்தையுடன்

இரண்டாவது முறையாக ஐபிஎல் ஃபைனலில் நுழைந்து சிறப்பான ஆட்டப்பங்களிப்பை அளித்தும், மயிரிழையில் கோப்பையை நழுவவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியினரும் பாராட்டுக்குரியவர்கள். துடிப்பான கேப்டன் பாண்ட்யாவின் தலைமையில் இன்னும் நிறைய ரவுண்டு வருவார்கள் அவர்கள் எனத் தோன்றுகிறது.

Brief scores :

Gujarat Titans: 214 / 4 (20 overs). Chennai Super Kings 171 / 5 (15 0vers-DLS)

ஐபிஎல்2023: முதல் போட்டியில் குஜராத் வெற்றி

குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் குதூகல IPL ஆரம்ப விழா நேற்று (31-3-23). தங்களுக்குத் தெரிந்த ‘கிரிக்கெட்டை ஆடி’ மஹா ரசிகர்களை சூடேற்றிவைத்த இந்தியத் திரைவானின் இளம் நட்சத்திரங்கள் – ரஷ்மிகா மந்தனா. தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia). சுஃபி, வெஸ்டர்ன் பாடகர் அரிஜித் சிங் ஆட்டத்திற்குத் துணையாகக் குரல்கொடுத்தார். ரசிகர்களின் ஆனந்தம்பற்றிக் கேட்கவும் வேண்டுமா!

அரங்கேறி நடமாடும் மங்கை… போல

அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்..!

-ஆடும் அணங்குகள் தமன்னா, ரஷ்மிகா மந்தனா

தோனியின் காலில் விழும் (வடக்குப் பழக்கம்) பிரபல பாடகர் அரிஜித் சிங்

(என்னதான் சிரிப்போ!) – ரஷ்மிகா, தமன்னா

முதல் மேட்ச். பாண்ட்யாவின் குஜராத் டைட்டன்ஸ் vs தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். பாண்ட்யா டாஸ் ஜெயித்து பௌலிங் என்று சொல்ல, தோனியின் மஞ்சள் வீரர்கள் மைதானத்தில் பேட்டுடன். ருதுராஜ் கெய்க்வாட் சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் மனதிலிருந்து ரஷ்மிகாவையும், தமன்னாவையும் மறையும்படி செய்துவிட்டார்! அப்படி ஒரு விளாசல். குறிப்பாக பாண்ட்யா, (அயர்லாந்தின் ஜோஷுவா லிட்டில், ஜோஸப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை கடைந்துஎடுத்துவிட்டார் கடைந்து. முகமது ஷமியும், ரஷீத் கானும் மட்டுமே அவரது ஆவேசத்திலிருந்து தப்பித்தார்கள். இருந்தும், சதம் வரவில்லை அவரிடம். 4 பௌண்டரி, 9 சிக்ஸர், 92-ல் அவுட். மொயீன் அலி கொஞ்சம் சேர்த்தார்.

CSK’s Gaikwad: Sublime innings

தோனி இவ்வளவு கடைசியில் வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் வந்திருந்தால் இன்னும் ரன் சேர்ந்திருக்கும். ராயுடு, ஜடேஜா, ஷிவம் துபே எல்லாம் ஃப்லாப் ஷோ. ஆனாலும், அஹமதாபாத் ஸ்டேடிய ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்துதான் வைத்திருந்தார் மகேந்திர சிங் தோனி. அவர் அடித்த ஒரு சிக்ஸரே, ரசிகர்களின் முகங்களை மினுமினுக்கவைத்தது. காமிரா காண்பித்தது. இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 178 என்றது சென்னையின் ஸ்கோர்.

வ்ரித்திமான் சாஹாவும், ஷுப்மன் கில்லும் துவக்கினார்கள் குஜராத்தின் அக்கவுண்ட்டை. வேகம் காட்டமுயன்ற சாஹா 25-ல் வெளியேற்றப்பட்டார். முதன்முறையாக இம்பேக்ட் ப்ளேயர் (impact player) ரூல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஐபிஎல்-இல். ரூலின்படி, ஆரம்ப 11-ல் இருக்கும் ஒரு வீரருக்கு பதிலாக, போட்டியின் தருணத்தை பொருத்து அணியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு இம்பாக்ட் ப்ளேயர் உள்ளே வந்து ஆடலாம். பௌலிங், பேட்டிங் செய்யலாம். ஏற்கனவே இரண்டு அணியாலும் அறிவிக்கப்பட்ட தலா 5 இம்பேக்ட் ப்ளேயர்களிலிருந்து ஒருவர் தான் இதற்கு கேப்டனால் தேர்வுசெய்யப்படவேண்டும். ஆனால், வெளியேற்றப்பட்ட வீரர் திருப்பி வந்து ஆட்டத்தில் கலந்துகொள்ளமுடியாது என்பதும் நிபந்தனை. முதலில் இதைப் பயன்படுத்தியது தோனி. குஜராத் பேட்டிங்போது, வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேயை (Tushar Deshpande), பேட்ஸ்மன் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக உள்ளே வரச் செய்தார். ஆனால் தேஷ்பாண்டே அப்படி ஒன்றும் இம்பாக்ட் ஏற்படுத்திவிடவில்லை!

Player of the Match: GT’s Rashid Khan

புதிதாக ஐபிஎல் ஆட வந்த சிஎஸ்கேயின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தனது அருமையான யார்க்கர், லெக்-கட்டர்களுடன் குஜராத்தின் வேகத்தை மட்டுப்படுத்தித் திணறவைத்தார். 3 முக்கிய விக்கெட்களைப் பிடுங்கி வீசினார்.

ஃபீல்டிங்கில் அடிபட்ட வில்லியம்ஸனுக்குப் பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக பேட்ஸ்மன் சாய் சுதர்ஷனை குஜராத் பேட்டிங்போது உள்ளே அழைத்தார் பாண்ட்யா. சாய் வேகமாக 22 அடித்துவிட்டு வெளியேற, விஜய் ஷங்கர் 27 அடித்தார். ஷுப்மன் கில் தன் ஃபார்மை உறுதிசெய்தவாறு விறுவிறுவென 63 என விளாசி குஜராத்திற்கு டாப் ஸ்கோர் கொடுத்தார். இருந்தும், டெத் ஓவர்களில் சென்னை ஜெயிக்க வாய்ப்பிருப்பதுபோல் மேட்ச் வித்தை காட்டியது. ஆனால் ரஷீத் கான் 19-ஆவது ஓவரில் சிக்ஸர், பௌண்டரி விளாசி சென்னையை அடக்க, கடைசிஓவரில் ஒரு சிக்ஸ், பௌண்டரி என குஜராத் வெற்றிக்கு வழிசெய்தார் ராஹுல் தெவட்டியா. 182/5. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் மூன்றாவது தொடர் வெற்றி இது. சிஎஸ்கே! அடுத்த சந்திப்புல திருப்பிக் கொடுத்திருங்கப்பா!

இன்று (1-4-23) சனிக்கிழமை. Double header. முதலில் (3:30 pm) பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸையும், அடுத்த போட்டியில் (7:30 pm) லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸையும் சந்திக்கின்றன. 3 புதிய கேப்டன்கள் – டெல்லிக்கு டேவிட் வார்னர், பஞ்சாபுக்கு ஷிகர் தவன், கொல்கத்தாவுக்கு நிதிஷ் ரானா. லக்னோவுக்கு கே.எல்.ராஹுல் என்பது தெரிந்ததே!

WPL, IPL .. கிரிக்கெட் ரசிகர்களின் யோகம்!

கத்தி போச்சு, மாங்கா வந்தது டும் டும் டும்.. ! – என்பதுபோல WPL போய், IPL உள்ளே நுழைகிறது நாளை (31-3-23) அகமாதாபாத் மைதானத்தில், கிரிக்கெட் ரசிகர்களின் மனவெளியில்.

மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி WPL கோப்பையை வென்று, WPL-ன் முதல் எடிஷன் போட்டிகளை சில நாட்களுக்கு முன் மும்பையில் முடிவுக்குக் கொண்டுவந்தது. பெண்களுக்கான முதல் டி-20 லீக் கிரிக்கெட் சேம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக ஆரம்பித்து நடத்தியதிலும்,எதிர்பார்த்ததைவிட ரசிகர்களின் ஆதரவு, ஆரவாரம் மைதானங்களில் பொங்கியதாலும் இந்திய கிரிக்கெட் போர்டும், அணி உரிமையாளர்களும், கமர்ஷியல் ஸ்பான்சர்களும் ஏகப்பட்ட குஷியில் இருக்கிறார்கள்.

WPL players: Smriti Mandhana, Nat Sciver-Brunt, Jemimah Rodrigues

கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை அணிக்கு ரூ.6 கோடி பரிசுப்பணமாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை. இவற்றைத் தாண்டி டூர்னமெண்ட்டின் சிறப்பு வீராங்கனை (ஹேலி மேத்யூஸ்)- ரூ.5 லட்சம், ப்ளேயர் ஆஃப் த ஃபைனல் (நாட் ஸிவர்-ப்ரண்ட்) ரூ.5 லட்சம், திறன்வாய்ந்த புதிய வீராங்கனை (யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia) ரூ.5 லட்சம், சிறந்த கேட்ச் பிடித்த வீராங்கனை (ஹர்மன்ப்ரீத் கௌர்) ரூ.2 1/2 லட்சம், ஃபைனல் மேட்ச்சில் சிறந்த பவர் ஹிட்டர் (ராதா யாதவ்) விருதுக்காக ரூ.1 லட்சம் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டு 2023-க்கான கோலாகல WPL விழா மார்ச்சில் நிறைவடைந்தது .

Above: IPL bowlers – Washington Sundar, Natarajan, Ashwin, Shardul Thakur

நாளை(31-3-23) ஆரம்பமாகிறது ஆண்களுக்கான கிரிக்கெட் ஆட்டபாட்டம். அதாவது, நம்ம IPL ! முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (கேப்டன்: ஹார்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (கேப்டன்: எம்.எஸ்.தோனி) -உடன் மோதுகிறது. இரு அணிகளுக்கும் தீவிர ரசிகர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறையப்பேர். ஆதலால், போட்டி அதிஆர்வமாக கவனிக்கப்படும். குஜராத் அணியில் பாண்ட்யாவோடு, நியூஸிலாந்தின் கில்லாடி(!) கேன் வில்லியம்ஸன், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், முகமது ஷமி, ராஹுல் தெவாட்டியா, சாய் கிஷோர் ஆகியோர் பலம் காட்டுகிறார்கள். போன வருடம் பத்து போட்டிகளில் தோற்று பரிதாபமாகக் காட்சியளித்த சிஎஸ்கே-யில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர், இங்கிலாந்தின் மொயீன் அலி, தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியஸ் (Dwaine Pretorius), அம்பதி ராயுடு ஆகியோர் முஷ்டியை உயர்த்தி நிற்கிறார்கள். தோனி முதல் மேட்ச்சில், காயம் காரணமாக ஆடமாட்டாரோ என்றொரு வதந்தி!தொடரின் பின்பகுதியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சென்னை அணியில் சேர வாய்ப்பு. அஹமதாபாதின் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் முதல் போட்டியிலேயே பொறிபறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை ஆட்டமாடிய பெண்களைக் கொஞ்சம் மனதிலிருந்து அகற்றிவிட்டு, ஆடவிருக்கும் ஆண்வீரர்களை இனி கவனிக்கப் பாருங்கள், கிரிக்கெட்டின் போதை பக்தர்களே! உங்களுக்கு சுக்ர தெசைதான் இப்போது…

**

WPL 2023:  முதல் சேம்பியன் யார்? டெல்லியா? மும்பையா?

கடந்த நாலு வாரங்களாக இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் குஷிப்படுத்திவரும் பெண்களின் முதல் இந்திய டி-20 லீக் ஆன WPL (Women’s Premier League),   இறுதிக் கட்டத்தை வந்தடைந்திருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் அணி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் குழாமுடன் WPL கோப்பைக்காக மோதத் தயாராய் உறுமிக்கொண்டு நிற்கிறது.

Meg Lanning (DC) & Harmanpreet Kaur (MI) posing with the WPL Cup

இதுவரை நடந்த சுவாரஸ்யமான போட்டிகளில் இந்த இரு அணிகள்தான் டாப்கிளாஸ் என்பதில் எந்த சந்தேகமும் எவருக்குமில்லை. மூன்றாவது இடத்தில் உ.பி.வாரியர்ஸ். 4,5 ஆவது இடங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜயண்ட்ஸ்! அணியின் பலம் என்று பார்த்தால் மும்பை இண்டியன்ஸ்தான் மனதில் முதலில் வருகிறது. டெல்லியும் சளைத்ததில்லை. முதலில் ஃபைனலில் நுழைந்த டீம் அதுதானே. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டனான மெக் லானிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி அணியில் இந்தியாவுக்கு U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), ஷிகா பாண்டே, மரிஸான் காப், அலைஸ் கேப்ஸி(Alice Capsey), ஜெஸ் ஜோனஸன் எனத் திறன்வாய்ந்த வீராங்கனைகள்.

Alice Capsey (centre) being congratulated for a wicket by Delhi Capitals’ girls.

இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் மும்பை இண்டியன்ஸில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மாத்யூஸ், WPL -ல் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய இஸ்ஸி வோங், முன்னேறிவரும் இந்திய  வீராங்கனை சைகா இஷாக் (Saika Ishaque), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia), ஆல்ரவுண்டர்கள் அமேலியா கர் (Amelia Kerr), நாட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt),  ராதா யாதவ் போன்ற in-form players.

Hayley Mathews – Mumbai Indians’ opener

மும்பையின் ப்ராபர்ன் (Brabourne) ஸ்டேடியத்தில் மகளிர் கிரிக்கெட்டின் கடும்போட்டி ஒன்று நிகழவிருக்கிறது நாளை இரவு (26-3-23). மும்பையின் அந்தத் திகிலான இரவில், அழகுமிகு WPL கோப்பை யார் கைகளில் அமர்ந்து மின்னுமோ!

**