தற்போதுள்ள சூழலில், வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, டிவி, சமூகவலைத்தளங்களைப் பார்த்துக்கொண்டு வியாதியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் யாருக்கும் பைத்தியம் பிடித்துவிடும். ஜாலியான ஆள்கூட தளர்ந்து ஒடுங்கிவிடுவான்! முழுக்குடும்பமே வீட்டில் ஒருசேர அமர்ந்திருக்கும் அதிசய காலகட்டத்தில், அவர்கள் பார்க்க, கேட்க, மனோரஞ்சகமாக ஏதாவது டிவி-யில் வரவேண்டாமா – செய்திகள், சினிமா தவிர்த்து? அதுவும் நமது நாட்டின் இதிகாசம், புராணம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் குடும்பத்து அங்கத்தினர்கள் ஒரு சேர உட்கார்ந்து ரசிக்கலாமே! மனசும் பீதி, நோய்ச் சிந்தனையிலிருந்து விலகி, கொஞ்சம் அமைதியாகும். புராண புருஷர்களை, யுவதிகளை, அவர்தம் வாழ்வு, போராட்டம், வாழ்வியல் நேர்மை, தர்மம் என்றெல்லாம் மனது சிந்திக்க ஆரம்பிக்கும். மக்களின் சிந்தனைத் தளம், பதற்ற நிலையிலிருந்து தற்காலிகமாவது, ஆரோக்யமான நிலைக்கு உயர்த்தப்பட வாய்ப்புண்டு. உள்ளேயே அடைந்துகிடந்து தின்பது, தூங்குவது,வீட்டுவேலைகள் தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை. இந்நிலையில், மனதிற்கு சந்தோஷம், அமைதி தரும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் அல்லவா?
மத்திய அரசின் தகவல், தொடர்புத்துறை இதைப்பற்றி சிந்தித்திருக்கிறது. ட்விட்டரில் சில நாட்களாக வந்துகொண்டிருந்த கோரிக்கைகளும் காரணம். 25-30 வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷன் மூலமாக ஒளிபரப்பட்ட பாப்புலர் சீரியல்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றை மீண்டும் திரைக்குக்கொண்டுவந்தால்.. மக்கள் வரவேற்கக்கூடும். நல்ல சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் மீண்டுவரும் வாய்ப்பையும் ஏற்படுத்தலாம். ’தனித்திருக்கும்’ குடும்பங்களுக்கு இந்த சமயத்தில் இத்தகைய சேவை தேவையாயிற்றே.
பரிசீலித்தது, முடிவு எடுத்தது அமைச்சகம். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன் அதிகாரபூர்வ ட்வீட் மெசேஜில் அறிவித்துவிட்டார். ஜனங்களின் கோரிக்கைப்படி, தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் வருகிறது. நாடெங்கும் ரசிகர்கள், சாதாரண மக்கள் படுகுஷி. கோரிக்கை வைத்த நெட்டிசன்களுக்கும் சிக்ஸ் அடித்த த்ரில்!
இன்றிலிருந்து தினமும் காலை 9 மணியிலிருந்து 10 வரை மற்றும் மாலை 9 -லிருந்து 10 வரை, ’DD National’ தேசீய சேனலில் ’ராமாயணம்’ – மக்களைக் கவர்ந்த புகழ்பெற்ற டிவி தொடர் மறுஒளிபரப்பாகிறது. இன்றே மதியம் 12-லிருந்து 1 வரை, பிறகு இரவு 7 -லிருந்து 8 வரை தினந்தோறும் இன்னொரு இதிகாசமான ‘மகாபாரதம்’ மறு ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இது காட்டப்படவிருக்கும் சேனல் ’டிடி பாரதி’ (DD Bharti). இதுவரை இந்த சேனல்களை தங்கள் லிஸ்ட்டில் சேர்க்காதவர்கள் இப்போது இணைத்துக்கொள்ளுங்கள். குடும்பம் பார்த்து மகிழட்டும்.
சீதை, ராமன், லக்ஷ்மணன்’ராமாயணம்’ தொடர் துளசிதாசரின் ‘ராம் சரித் மனஸ்’-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தயாரித்து, இயக்கியவர் ராமானந்த சாகர் (Ramananda Sagar). 1987-88 காலகட்டத்தில் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய ஜனரஞ்சகத் தொடர். மக்கள் மனதிலிருந்து நீங்காத பாத்திரங்களாக அருண் கோவில் (Arun Govil) ராமனாகவும், தீபிகா சிக்காலியா (Deepika Chikhalia) சீதையாகவும், சுனில் லாஹிரி லக்ஷ்மணனாகவும், பாலிவுட் நடிகை பத்மா கன்னா கைகேயியாகவும், அரவிந்த் திரிவேதி ராவணனாகவும், பயில்வான் தாரா சிங் (Dara Singh) ஹனுமான் வேஷத்திலும் தூள்கிளப்பினர்.
கிருஷ்ணனாக நிதிஷ் பாரத்வாஜ்பாலிவுட் பிரமுகர் பி.ஆர். சோப்ரா (BR Chopra) தயாரித்து தூர்தர்ஷனில் 1988-90 -ல் ஒளிபரப்பப்பட்ட ‘மஹாபாரதம்’ தொடர் நாட்டின் மூலை,முடுக்குகளிலெல்லாம் சாதாரண மக்களாலும் பார்த்து ரசிக்கப்பட்டது. வியாசர் எழுதிய மகாபாரதம் மற்றும் விஷ்ணுபுராணத்தின் அடிப்படையில் கதை தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. நிதிஷ் பாரத்வாஜ் (Nitish Bharatwaj) கிருஷ்ணன் வேடத்திலும், ரூபா கங்குலி (Roopa Ganguly) திரௌபதியாகவும், அர்ஜுன் அர்ஜுனனாகவும், பாலிவுட் வில்லன் புனீத் இஸ்ஸார் (Puneet Issar) துரியோதனன் ஆகவும், பீஷ்மராக முகேஷ் கன்னாவும் நடிப்புத்திறன் காட்டிய சின்னத்திரைக் காவியம்.
**
தாய்நாட்டைப்பற்றிய அக்கறையுடைய ஒவ்வொரு இந்தியனும், இந்த ஆபத்தான சூழலில் வீட்டுக்குள்ளேதான் இருக்கவேண்டும். கொடும் நோயொன்றின் கொட்டத்தை அடக்க இப்படித்தான் இருக்கவேண்டியிருக்கிறது. இயங்கவேண்டியிருக்கிறது. இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெய்ன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி எனப் பல தேசங்களிலும் இதுவே நோய் பரவாமல் தடுக்க பிரதான வழியெனக் கண்டுபிடித்து அமுல்படுத்தியிருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையும் இதுதான். இந்தியாவிலும் ’தனித்திருத்தல்’ (social distancing) அறிவுறுத்தப்பட்டு, நாடு முழுவதுமான லாக்-டவுன் செயல்படுத்தப்படுகிறது. எதற்கெடுத்தாலும் கூச்சல், கூப்பாடு என காலங்காலமாகப் பழக்கப்பட்டுப்போன ஒரு சமூகத்தில் இதனை சரியாக, உடனடியாக செயல்படுத்துவதில் அரசு இயந்திரங்களின் நிர்வாக சிரமங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. மக்களுக்காக லாக்-டவுன் முழுமையாக அமுல்படுத்தப்பட, மக்களின் பூரண ஒத்துழைப்புதான் தேவையே. அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கெதிராக காந்தி நடத்திய தீவிர ‘Civil Disobedience Movement’ போல, இப்பொழுது ஒரு ‘Civil Obedience Movement’ – ’மக்கள் ஒத்துழைப்பு இயக்கம்’ அத்தியாவசியமாகிறது தாய்நாட்டின் நலனுக்காக. முகம் சுழித்தும், விமரிசித்தும் எந்தப் பயனுமில்லை. ஆங்காங்கே தலைகாட்டும் சில எதிர்ப்பாளர்களுக்குப் புரியவேண்டும். மறுக்க வாய்ப்பு தரப்படாது. அடிவாங்கும் முன்பே அறிந்துகொண்டால் அல்லல் இல்லை!
பாதிக்கப்பட்ட மற்ற எல்லா நாட்டினரும் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் இந்நேரத்தில் நாமும் சந்திக்கிறோம், வேறு வழி இல்லாததால். இத்தகைய ‘லாக்-டவுன்’ காலத்தில், உணவு, மருந்து, சமையல் வாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சரிவரக் கிடைக்க, அதன் சப்ளை-செயின் ஒழுங்காக இயங்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயல்கின்றன. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடினநிலையினால் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், வேலைக்கு வர முடியாதவர்களுக்கு முழுசம்பளத்துடன் விடுமுறை தர, தனியார் கம்பெனிகளுக்கான அரசின் உத்தரவுகள் போயிருக்கின்றன. அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் விதமாக, மஹிந்திரா, ரிலையன்ஸ், டாடா போன்ற சில பெரும் தொழில்நிறுவனங்கள் ஏழைத்தொழிலாளர்களுக்கு மருத்துவ சலுகைகளோடு, இரண்டு மாத அட்வான்ஸ் சம்பளம் தர இணங்கியிருக்கின்றன.
பிரதமந்திரியின் ஏழைகள் நலத் திட்டம் (PM’s Garib Kalyan Yojana) மூலமாக 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பொதுமக்களுக்கான பல நலத்திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (26/3/20) அறிவித்திருக்கிறார். இதன் கீழ், விளிம்புநிலைத் தொழிலாளர்கள் மற்றும் 15000 ரூபாய்க்கும் குறைவாக மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மூன்று மாத பிராவிடெண்ட் நிதிக்கான தொகையை மத்திய அரசே தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஏழைத்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். தொழிலாளர் நல நிதியாக, கட்டுமானத்தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.31000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. நாடெங்குமுள்ள 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இது பலன் தரும். வாழ்வுகாக்கும் சிறப்புப் பணியிலிருக்கும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு எனப் பிரத்தியேகமாக ரூ.15000 கோடி ரூபாய் செலவில் பலதிட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் ‘உஜ்வாலா திட்ட’த்தின் (‘Ujjwala Yojana 2020’)கீழ், ஏழைப்பெண்களுக்கென மூன்று மாதங்களுக்கு இலவச ’சமையல் வாயு’ வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இனாமாக வழங்கப்படும். மேலும் விவசாயிகள், உதவித்தொகை பெறும் ஏழை முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான மாதாந்திர பண உதவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ATM-பணம் எடுத்தலுக்கான கட்டணங்களுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி, மாநில அரசுகள் தங்கள் நிதியிலிருந்து மாதாந்திர ரேஷன் உணவுப்பொருட்களோடு, குடும்பத்துக்கு ஆயிரம்/இரண்டாயிரம் என பணமும் இனாமாகத் தருகின்றன. இப்படி வரிசையாகப் பல பொதுநல நடவடிக்கைகள் மத்திய/மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு நாட்டில் செயல்பாட்டில் வந்துகொண்டிருக்கின்றன.
Mylab’s Corona testkit Pic courtesy: ANIகொரோனா வைரஸ் தாக்கத்தை தாமதமின்றி, துல்லியமாகக் கண்டுபிடிக்கும் சோதனைகளுக்காக இதுவரை அரசாங்க சோதனைச்சாலைகளே பயன்படுத்தப்பட்டுவந்தன. நாடெங்கும் பரவிவரும் தொற்றுநோயின் அறிகுறிகளை அறிவதற்கான சோதனைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இந்திய அரசு இரண்டு தனியார் நிறுவனங்களின் திறன் மிக்க கிருமி-சோதனைச்சாலைகளுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. National Institute of Virology, Drug Controller of India ஆகிய இந்திய அரசின் அறிவியல் கழகங்களால் தரமறியப்பட்ட அவைகள்: அல்டோனா டயக்னாஸ்டிக்ஸ் (Altona Diagnostics) என்கிற ஒரு ஜெர்மன் கம்பெனியும், மைலாப் (Mylab) எனப்படும் புனேயிலுள்ள ஒரு இந்திய கம்பெனியுமாகும். ’மைலாப்’ தயாரித்த ’சோதனைக் கருவி’யை டெல்லியிலுள்ள இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (Indian Council of Medical Research (ICMR, Delhi) மேலும் ஆராய்ந்து, அதன் பயன்பாட்டிற்கான அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனைப் பெருமளவில் வாங்கி மாநிலங்களுக்கு விநியோகம் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிறந்த சோதனைக்கருவி என்பதோடு, இதன் விலை (ரூ.1200), வெளிநாட்டிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் சோதனைக் கருவிகளின் விலையில் நாலில் ஒரு பங்கே என்பது கூடுதல் தகவல். கொரோனா நெருக்கடியை கடுமையாக எதிர்கொள்ள உதவியாக, இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் சோதனைக் கருவிகளைத் தன்னால் உற்பத்தி செய்ய இயலும் என்று அரசுக்குத் தெரிவித்திருக்கிறது மைலாப்.
இப்படிப் பலவேறான மக்கள் பணிகளை தனியார் துறை வாயிலாகவும், அரசுத் துறைகள் மூலமாகவும் முடுக்கிவிட்டுள்ளது இந்திய மத்திய அரசு. மாநில அரசுகளும் கூடுமானவரை அவ்வாறே. இவையெல்லாம் ஜனங்களின் ஒட்டுமொத்த நலனுக்காகத்தான் என அனைவரும் தீர்க்கமாகப் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல பலன் அனைவருக்கும் விரைவில் கிடைக்க, குடிமக்களின் மனமார்ந்த ஒத்துழைப்பே முக்கியம். இது ஒரு பெரும் தேசீய இயக்கமாக நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். இதனைத்தான் இந்தியப் பிரதமர் தன் டிவி உரையில், உலக சுகாதார நிறுவன ((WHO) அறிக்கைகளையும் மேற்கோள்காட்டி வலியுறுத்தியிருக்கிறார். பிரதமர் மக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுப்பதாகத் தோன்றினாலும், நெருக்கடி நிலையில் அது அரசாங்கத்தின் உத்தரவு என்பது சந்தேகமறப் புரிந்துகொள்ளப்படவேண்டும். தப்பிப் பிழைக்க வேறு மார்க்கமில்லை. Just obey and follow the instructions dear citizens; Stay indoors in your own interest. ஒன்றுபட்டால்தான் வாழ்வு. ஊளையிட்டு எதிர்த்தால், ஓரத்தில் விழுந்துகிடக்க நேரும் – நோயின் கடுமை அப்படி.
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோ, ஹீரோயின்கள் என ரசிகர்களால் சிலிர்ப்புடன் கொண்டாடப்பட்டவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இவ்வகை வழக்கமான ஜொலிப்புகளைத் தாண்டி குணசித்திர பாத்திரங்களில் மிளிர்ந்து, தன் பன்முகத்திறனுக்காக சக கலைஞர்களாலேயே பாராட்டப்பட்டும், பேசப்பட்டும் வந்தவர் நடிகரும், இயக்குனருமான ‘விசு’. இயற்பெயர் விஸ்வனாதன். ஆரம்பத்தில் மேடை நாடகங்கள். பிறகு திரையுலகில் பிரவேசம், அது தந்த புகழ்வெளிச்சம். திரையுலகிலிருந்து வெளிவந்தபின், டிவி- நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களை ஈர்த்து, யூ-ட்யூபில் போய் தன் கலைச் சேவையை நிறுத்திக்கொண்ட கலைஞர். உடல்நலம் குன்றியபோதும் கடைசிவரை துறுதுறுவென இருந்த ஆளுமை.
இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு, துணை இயக்குனராக தன் ‘திரை இயக்க’ வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’(1981) ‘நெற்றிக்கண் (1981)’ ஆகிய படங்களில் விசுவின் முறையே வசனம், திரைக்கதை. எஸ்.பி.முத்துராமனின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’(1980) படத்தில்தான் நடிகராக முதன்முதலாகக் காட்சிதந்தார் விசு. அதன் பிறகு அவர் தானே இயக்கி வந்த முதல் படம் ’கண்மணி பூங்கா’(1982). மத்தியவர்க்க குடும்ப உறவுச்சிக்கல்களே கதைக்களன் என ஒரு ஃபார்முலா வகுத்துக்கொண்டு விளையாடியவர். அதில் புகழ்பெற்றவர் -இயக்கம், திரைவசனம், நடிப்பு என மிளிர்ந்த மனிதர். விசுவின் படம் என்றாலே நகைச்சுவையும் சுவாரஸ்யமான குடும்பக்கதையும் இருக்கும் என ரசிகர்கள் நம்பி, ஆர்வமாகத் தியேட்டர்களுக்கு ஓடிய காலகட்டம்.
மனதைக் கிள்ளும் வசனங்கள், துடிப்பான பெண் பாத்திர அமைப்புகள், தன் உயிர்ப்பான நகைச்சுவை ததும்பும் நடிப்பு ஆகியவைகொண்டு திரையில் சித்திரங்கள் பலதீட்டி, ரசிகர்களைக் கொள்ளையடித்த பெருமை அவருடையது. ’மணல் கயிறு’(1982) படத்தில் அவர்தான் நாரதர் நாயுடு. குறைந்த வருமானத்தில் கூட்டுக்குடும்பம் நடத்த சிரமப்படும் அம்மையப்பன் முதலியாராக வந்து மனதில் இடம்பிடித்தார் விசு, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில். ’திருமதி ஒரு வெகுமதி’ (1987) படத்தில் நாகர்கோவில் நாதமுனி! இப்படி நினைவில் அலையும் விசுவின் பாத்திரங்கள்.
அவர் படைத்த ’குடும்ப சினிமா’வில் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள் ‘உமா’க்கள். விசுவின் ராஜமுத்திரை! அவர் இயக்கி, நடித்த புகழ்பெற்ற ’சம்சாரம் அது மின்சாரம் (1986) திரைப்படத்தில் மறக்கமுடியாத மருமகள் உமாவாக நடித்திருக்கிறார் நடிகை லட்சுமி. ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் எல்லோருக்கும் பிடித்த அந்த ‘அக்கா’வின் பெயரும் உமா! நடித்தவர் கல்பனா. ’வரவு நல்ல உறவு’(1990) படத்தில் அதே பெயரில் பொறுமைசாலி மருமகளாக வந்து, பார்ப்போரை உருகவைத்த நடிகை ரேகா. இந்த கேரக்டர்கள் தனக்குப் பிடித்திருந்ததாக பின்னர் ஒரு நேர்காணலில் விசு கூறியிருக்கிறார்.
’சம்சாரம் அது மின்சாரம்’, தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிஎக்ஸ்ப்ரெஸ் விருது என வரிசையாக வென்றுகொடுத்தது அவருக்கு. விசுவை ஒரு பாப்புலர் டைரக்டராக தமிழ் சினிமாவில் நிறுவியது. ’சன்ஸார்’ என்கிற தலைப்பில் ஹிந்திப் படமாக அடுத்தவருடமே வெளியானது. தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என மறுபிறப்புகள் அதற்கு!
சினிமாவை விட்டு விலகியிருந்த காலகட்டத்தில் ‘அரட்டை அரங்கம்’, ‘மக்கள் அரங்கம்’ என சாதாரணர்களின் பிரச்னைகளை மக்கள் முன் காரசார விவாதங்களுக்கு உட்படுத்தி அவர் அளித்த டிவி நிகழ்ச்சிகளும் ஜனரஞ்சகமாக அமைந்தன. டிவி-யின் மாபெரும் வீச்சினால் வெளிநாடுவாழ் தமிழர்கள் பலர் அவரது ரசிகர்களாக அதிகரித்த காலமது. தன் கடைசிகாலகட்டத்தில் யூ-ட்யூப் சேனல்களில் காணப்பட்டார் விசு.
கடைசி ஆசையாக ஒன்று வைத்திருந்திருக்கிறார் விசு. ‘சம்சாரம் அது மின்சாரம்-2’ -க்காக கதை வசனம் எழுதி வைத்திருந்ததாகக் கேள்வி. லட்சுமியின் இடத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லிவந்திருக்கிறார். ஏவிஎம்- ப்ரொடக்ஷன்ஸ் கம்பெனியை அணுக, அவர்கள் கைவிரித்துவிட்டார்களாம். மேற்கொண்டு முயற்சித்துக்கொண்டிருக்கையில் காலன் குறுக்கே வந்துவிட்டான்.
உடல்நலக்குறைவினால் இரண்டு நாள் முன்பு மறைந்த தமிழ் சினிமாவின் மறக்க முடியாக் கலைஞருக்கு, பிரபலங்கள், ’கொரோனா’ ஊரடங்கின் காரணமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலை. இருந்தும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தியதாக செய்தி. நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், இயக்குனர் வஸந்தபாலன், கவிஞர் வைரமுத்து ஆகியோரிடமிருந்து வந்தன கனிவான, உருக்கமான வார்த்தைகள். கிரிக்கெட் வீரர் அஷ்வினும் தன் அஞ்சலி ‘ட்வீட்டில்’, ‘என் இளமைக்காலத்தில் உங்கள் படங்களின் புத்திசாலித்தனமான திரைக்கதை, அழகான நகைச்சுவை, டிவி நிகழ்ச்சிகள் மூலம், ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள்’ என நினைவுகூர்ந்திருக்கிறார்.
**
கொரோனாவின் கோரத்தாண்டவம் நாட்டிலும், உலகெங்கும். நாட்டின் தரைவழி எல்லைகளை மூடி, வெளிநாட்டு விமான வருகைகளை நிறுத்தி, தொடர்ச்சியாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துகளை ரத்து செய்து, மாநிலங்களும் தங்களுக்கிடைய எல்லைகளை மூடி, பொதுப்போக்குவரத்தை நிறுத்தி, இந்திய ரயில்வேயும் தன் மாபெரும் ரயில் சேவையை நிறுத்தி, இப்படி எத்தனை எத்தனையோ செயல்பாடுகள், அமுல்படுத்தப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகள். கூடவே இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், சோதனைகள், நோய் ஆய்வுச்சாலைகள், நாடெங்கும் லட்சணக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மருத்துவப் படுக்கைகள். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அவசரநிலையில் உண்மையில் இயங்குகின்றன. ஆனால் எல்லா நன்முயற்சிக்கும், பொதுமக்களிடமிருந்தும் 100 சதவிகித ஒத்துழைப்பும் தேவை அல்லவா?
வெளிநாட்டிலிருந்து ஓசைப்படாமல் நுழைந்துவிட்டவர்களை, ‘ஹோம் க்வாரண்டைன்’ என கையில் மையால் ஸ்டாம்ப் செய்து அனுப்பியும், வீட்டில் மூடிக்கொண்டு கிடக்காமல், ஊர் ஊராக அலையும் பொறுப்பற்ற ஜென்மங்களை போலீஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் விரட்டிப் பிடித்துவருகிறது. ஒரு உலகளாவிய மெடிக்கல் எமர்ஜென்சி நிலையில், நாட்டில் வேகமாகப்பரவும் விசித்திரக்கூறுகளை உடைய ஆபத்தான ஒரு நோயை, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதின் மூலமே (Social distancing) ஒவ்வொருவரும் எதிர்க்கவேண்டும். தன்னை, தன் குடும்பத்தை, வாழும் சமூகத்தைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என எத்தனை முறைதான் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து, நாட்டின் பிரதமர், முதல் அமைச்சர்கள் மூலம் அறிவிப்பது, கேட்டுக்கொள்வது. மருத்துவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், மீடியா வழியாகவும் விளக்குவது? விதவிதமாக, குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் சொல்லிக்கொடுப்பது? கடந்த வாரங்களில் இப்படி ஒரு massive public exercise, விழிப்புணர்வு இயக்கமாக நாடெங்கும் செயல்படுத்தப்பட்டும், எல்லோருக்கும் நிலைமையின் தீவிரம் இன்னும் புரியவில்லை போலிருக்கிறதே. குறிப்பாக பீஹார், உபி போன்ற மாநிலங்களில் பலருக்கு ஏறமாட்டேன் என்கிறதே மண்டையில்? மண்டையைப் போட்டபின் என்னத்தைப் புரிந்துகொள்வார்கள் இவர்கள்?
ஊரடங்கை மீறியவர்களுக்கு குஜராத் போலீஸ் தண்டனை!ஊரடங்கு, ’லாக்டவுன்’(lockdown) சமயங்களில், அனுமதிக்கப்பட்ட சொற்ப நேரத்தில் கடைக்குச் சென்று அத்தியாவசியப்பண்டங்களை வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாக வாங்கிக்கொண்டால் தப்பில்லை. ஒருவாரத்திற்காவது காய்கறி, உணவுப்பொருட்களை வாங்கிவைத்துக்கொள்வது குடும்பங்கள் விஷயத்தில் வழக்கம்தான். ஆனால், மாஸ்க், ஸானிடைஸர், டிஷ்யூ, டாய்லெட் சோப், குனைன் மருந்துகள், யூகலிப்டஸ் ஆயில் என ஒரேயடியாக ஸ்டோர்களிலிருந்து கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக்கொண்டு வீட்டில் அடுக்கி அழகுபார்ப்பது, முட்டாள்தனம் அல்லாமல் வேறென்ன? அதேபோல், ’வெளியே போகக்கூடாது, வீட்டிலுள்ளேயே கிடந்து உன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்க உதவி செய்’ எனப் பச்சையாகச் சொல்லப்பட்டபோதும், உத்தரவிடப்பட்டபோதும், அவ்வப்போது நைசாக வீட்டிலிருந்து வெளியே நழுவுவது, நாலைந்து பேராக முடிச்சு, முடிச்சாக மூலையில் நின்று கதைப்பது, இளிப்பது, டூவீலர், கார்களில் ஊர்வலம் செல்ல முயற்சிப்பது என்பதெல்லாம் கேவலமான, பொறுப்பற்ற செயல்களல்லவா? சமூகவிரோதச் செயல்கள் என அரசுத்துறைகளால் இவை வகைப்படுத்தப்படும். தண்டனை கிடைத்தால் வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.
இப்படி முட்டாள்களாக நடந்துகொள்ளும் ஆசாமிகளைக் குறிப்பிட, ஒரு புதிய ஆங்கில வார்த்தை சிருஷ்டிக்கப்பட்டுவிட்டது ட்விட்டர் உலகத்தில். Covidiot ! கோவிடியட். எப்படி இருக்கு! ‘கோவிட்-19’ வியாதியின் ஆபத்து நிலையிலும், முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் மூதேவிகளைக் குறிக்கும் சொல். Covid+idiot. இத்தகைய கோவிடியட்-கள் பிரதானமாக உலவும் பிரதேசங்கள் பீஹார், உ.பி.போன்றவை எனத் தெரியவருகிறது. பெங்களூரிலும் சில இடங்களில், ஊரடங்கி இருக்காமல், இரவில் மக்கள் உல்லாசமாகத் திரிந்ததாகவும் செய்தி இப்போது உலவுகிறது. அநாகரீகம். அவமானம்.
குறுகிய காலத்தில் உலகப்புகழ் பெற்றுவிட்ட ’சைனீஸ் சூப்பர் ப்ராடக்ட்’ ஆகிவிட்டது ’கொரோனா’ வைரஸ்! இதனால் வெடித்துப் பரவும், ஒரு மருந்தில்லா நோய் (Covid-19 (Corona Virus Disease 2019)) உலகத்தையே சில வாரங்களில் சித்தம் கலங்கவைத்துவிட்டது. ஸ்தம்பித்துப்போயிருக்கிறது எல்லாம். பணம், பணம் என ஒரே லட்சியமாகப் பாய்ந்துகொண்டிருந்த சர்வதேசப் பெருவணிக நிறுவனங்களும், பேராசைப்பேய்களும் எங்கே போய் விழுந்தார்கள் எனத் தெரியவில்லை.
சீனாவின் வுஹான் கிருமி ஆய்வுச்சாலையிலிருந்து பரவ ஆரம்பித்த வைரஸின் கதை, ஆரம்ப மாதங்களில், சீன அரசின் முயற்சியினால் அமுக்கப்பட்டது. உயிர்ப்பலி அதிகமாக அதிகமாக, அந்த முயற்சி கைவிடப்பட்டது. எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அப்பாவி சீன மக்களின் வாழ்வு முடங்கியது. சீன ஜனாதிபதியே துண்டைக்காணோம், துணியைக் காணோம் என இரண்டு வாரங்கள் முகமூடிபோட்டு ரகசியமான இடத்தில் ஒளிக்கப்பட்டிருந்த நிலை. ’சரியான மருந்தில்லை, நிலைமையை எங்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை’ என வேறுவழியின்றி, வெளி உலகிற்கு சீனா கைவிரித்து மாதமாகிவிட்டது. அதுவரை அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ சீனாவிலிருந்து வருவோர், போவோருக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. வைரஸ் கிளப்பிவிட்ட வியாதி, தடையின்றி எங்கும் பரவ ஆரம்பித்தது. குணப்படுத்தமுடியாமல் செத்தவர்களின் எண்ணிக்கையை உலகத்திற்குச் சொல்வதா, மறைப்பதா எனக் குழம்பித் தவிக்கும் நாடு ‘மத்திய கிழக்கின் Regional Power’ என்று நேற்றுவரைத் தன்னைக் கருதிக்கொண்ட ஈரான். அங்கே போதிய உயர்நிலை சோதனைச்சாலை வசதிகள் இல்லை என்பதும் ஒரு மருத்துவ எமர்ஜென்சியை அவர்களால் தாங்கமுடியாது என்பதும் உலகத்துக்குத் தெரிந்துவிட்டதே என்கிற அவமான நிலையில் அது கப்சிப் ஆகிவிட்டது. உலகமே திண்டாடிவரும் நிலையில் யாரும் ஈரானைத் தனியாக விமரிசிக்கவில்லை; விமரிசிக்கவேண்டிய அவசியமுமில்லை. ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தாண்டி, பரவி வரும் கொரோனா உலகின் முன்னேறிய நாடுகள் என மார்தட்டிக்கொள்ளும் தேசங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டுஆட்டு என்று ஆட்டிவருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலியிலும், ஸ்பெயினிலும் கொரோனா பலிகள் நாளுக்கு நாள் குபீரென வெடித்து பீதியைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. எங்கே ஓடுவது, எங்கே புதைப்பது என்பதே இத்தாலியின் நித்தியப் பிரச்னையாகியிருக்கிறது. சோகம். அமெரிக்கா திணறுகிறது. இங்கிலாந்து மிரண்டுபோய் விழிக்கிறது. மற்ற நாடுகளும் வெளியே வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருந்தாலும், உண்மையில் நடுநடுங்கி விழிபிதுங்கிக்கொண்டிருக்கின்றன. Survival fears of the nations…
’மக்கள் ஊரடங்கு’ (Janta Curfew)இந்தியாவில் ஆரம்பத்தில் மிகக்குறைவாகவே இருந்தது நோயின் பாதிப்பு. இப்போது அதிகமாகிவருகிறது. இதுவரை ஆனந்தமாகத் தாங்கள் வசித்த வெளிநாடுகளிலிருந்து, சுயபாதுகாப்புக்காக, திடீர் தேசபக்தி மேலிட, இந்தியா திரும்பியிருக்கும் சில இந்தியர்கள், மற்றும் வெவ்வேறு காரணங்களால் ஏற்கனவே தங்கள் பாஸ்போர்ட்டில் இருக்கும் இந்திய விசாக்களைப் பயன்படுத்தி ‘விசிட்’ அடித்து நமது நகரங்களில் உலவிய சில வெளிநாட்டுக்காரர்கள், இந்திய மண்ணிற்குச் செய்த கைங்கர்யம் இது. இந்திய நோய்பாதிப்புகள் திடீரென அதிகமாக இவர்களே காரணம். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டத்தட்ட 45 பேர்; 16-18 பேர் இந்திய மருத்துவத்தில் குணப்படுத்தப்பட்டுத் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள் என்கிறது ஒரு செய்தி.
மக்களில் சிலர் அறியாத, அல்லது பொதுவாக மறந்துவிடும் ஒரு விஷயம்: இது போன்ற நெருக்கடி நிலைகளிலும் உலகின் எந்த ஒரு நாடும், பாதிக்கப்பட்ட நாடுகளில் வசிக்கும் தன் குடிமக்களை அரசாங்க செலவில் நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவதில்லை. ஒவ்வொரு வெளிநாட்டவரும், தங்கள் செலவில், முயற்சியில்தான் தத்தம் நாட்டிற்குத் திரும்பியிருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் மட்டும்தான் இப்போதும், இதற்கு முந்தைய போர்சார்ந்த நெருக்கடி நிலைகளிலும், தன் குடிமக்களை அரசு செலவில் -சில சமயங்களில் இந்திய ராணுவ உதவியுடன், சில சமயங்களில் ஏர் இந்தியா விமானம் அனுப்பியும், இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. நமது ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ஏர் இந்தியா அதிகாரிகள், ஊழியர்கள், இந்திய தூதரகத்தினர் போன்றோரின் நெருக்கடிகால சிறப்புப்பணிகளை நாம், அவ்வப்போதாவது நினைவு கூறல் வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் நேரம், காலம் பார்க்காது செயல்படும், டாக்டர்கள், நர்ஸுகள், ஏனைய மருத்துவ ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், காவல்/பாதுகாப்புத் துறையினர் ஆகியோரின் பணியையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டிய நேரமே இது.
கொரோனா விளைவித்திருக்கும் இக்கட்டான சூழலில், காரண காரியங்களைத் தாண்டியும் பதறாமல், அதே சமயம் அதிஜாக்ரதை உணர்வுடன், ஒற்றுமையாக நாம் இயங்கவேண்டிய தருணம் இது. பிரதமர் வேண்டிக்கொண்ட ‘மக்கள் ஊரடங்கு’ ஆகட்டும், மாநில அரசுகள் விதித்திருக்கும் நோய் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள், வழிமுறைகளாகட்டும், இந்தியக் குடிமகன் என்கிற நிலையில் ஒவ்வொருவரும் அலட்சியம் செய்யாமல் கடைபிடிக்கவேண்டிவை இவை. நமது நலனிற்காக, நாட்டின் ஒட்டுமொத்த ஆரோக்யத்திற்காக அவசியம் செய்யவேண்டியவை. இத்தகைய வேதனை நிலையிலும் சிலர் காட்டவிரும்பும் கட்சி, அரசியல் போன்ற புறம்போக்குச் சிந்தனைகளை அகற்றிவிட்டு, ’ஒரு இந்தியன் நான், என் சமூகக் கடமைகள் இவை’ என பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, நமக்கு நாமே நமது ஒற்றுமையை, உறுதியை நிரூபித்துக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தாய்நாநாட்டின் நலன் கருதி சுயஒழுக்கம், தூய்மை, சமூகத்தனித்திருத்தல் (social distancing) – முன்பொரு காலகட்டத்தில் நம் வாழ்வியல் நெறிகளாக, தினசரி நியமங்களாக இருந்தவை – இவைகளை மீண்டும் நம் வாழ்வோடு இணைத்துக்கொண்டு இயங்கவேண்டி நிர்பந்தித்திருக்கிறது இந்த அவசரகாலம். இந்தியக் குடிமகன் என்கிற பெருமித உணர்வையும், அது சார்ந்த சில கூடுதல் பொறுப்புகளையும் நமக்கு அளித்திருக்கும் காலமிது.
ஏழெட்டு வருட நீதிப் போராட்டத்தின் இறுதிக்கட்டமாக, டெல்லியில் ஒரு குளிர்கால இரவில், மருத்துவ மாணவி ஒருத்தியை ஓடும் பஸ்ஸில் அவளது நண்பனுக்கு எதிரிலேயே கோரமாக சீரழித்த டிரைவர் உட்பட்ட ஆறு காமக்கொடூரர்களில் நால்வரை, ஒருவழியாகத் தூக்கில்போட்டுவிட்டு கைகளை ‘ஸானிடைஸ்’ செய்துகொண்டது நாடு (மார்ச் 20, 2020). (ஏற்கனவே, கைது செய்யப்பட்ட சிலமாதங்களிலேயே டெல்லியின் திஹார் சிறையில் முக்கிய குற்றவாளி எனக் கருதப்பட்ட ராம்சிங் தற்கொலை செய்துகொண்டான்.)
குற்றம் என்று ஒன்று நிகழ்த்தப்பட்டால்- அதுவும் கொலைக்குற்றம், பெண்ணிற்கு எதிரான குற்றம் என்று வந்தால்- குற்றவாளி உடனே பிடிக்கப்பட்டு, உச்சபட்ச தண்டனை தரப்படுவது, அதுவும் இழுத்தடிக்கப்படாமல் உடனே நிறைவேற்றப்படுவதே எந்த ஒரு சமூகத்தின் நலத்திற்கும் உகந்தது. ’க்ரிமினல் கேஸ்’ என ஆரம்பித்து அதுமாட்டுக்கு நடந்துகொண்டே இருந்து, முதலில் அரண்ட, நடுங்கிய குற்றவாளிகளே போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒரு பொழுதுபோக்காக ’எஞ்ஜாய்’ செய்யும்படி ஆகிவிட்டால், பொதுமக்களின் வரிப்பணத்தில் தின்று கொழுத்து சிறையிலேயே ’நிம்மதியாக வாழ’ ஆரம்பித்துவிட்டால் – நாட்டின் நீதித்துறை உள்நாட்டிலும், சர்வதேசவெளியிலும், சிரிப்புக்குள்ளாகும். நாட்டில் கொடும் குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்கும். தர்மம் தலைதெறித்து ஓடும். தொடர்ந்து சீரழிக்கப்படுபவர்கள், நாசமாகிறவர்கள் பாதுகாப்பில்லாத அப்பாவிப் பெண்களாகவோ, சிறுமிகளாகவோதான் பெரும்பாலும் இருப்பார்கள். இத்தகைய கேவலமான சமூகச் சூழலின் இடையே, நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் திட்டமிட்டு, கதைத்து, என்ன பிரயோஜனம்? பெண்ணுக்குப் பாதுகாப்புத் தர இயலாத ஒரு சமூகம் வளருமா? வாழுமா?
நிர்பயா மற்றும் இதுபோன்ற வழக்குகளைப்பற்றி சிந்திப்பதோ, பேசுவதோ, எழுதுவதோ மிகவும் மனச்சோர்வு தரும் விஷயம். இருந்தாலும் நாடெல்லாம் சாமானியக் குடிமக்களின் மனதில் பற்றி எரியும், நீங்காத துக்கம் தரும் ஒரு விஷயத்தை அலட்சியம் செய்யவும் முடியவில்லையே. இந்திய மக்களில் பலர் 20 மார்ச் காலைவேளையில் மகிழ்ச்சியடைந்தனர் என்பதைவிட, ஒருவாறான நிம்மதி அடைந்தனர் எனச் சொல்லலாம். ட்விட்டர், முகநூல், வாட்ஸப் தடதடத்துகொண்டிருக்கின்றன. ஒரு புதிய ஹேஷ்டேக் வந்துவிட்டது. பெருங்குற்றமொன்றில் பங்காளியாக இருந்துவிட்டு அந்த ஐந்தாவது அயோக்யன், எப்படித் தப்பிக்கலாம்? – எனக் கேள்விமேல் கேள்வியாக, குடைய ஆரம்பித்துவிட்டது.
2015-ல் வந்த செய்தி
அந்த ஒருவன், ஆறு பயங்கரக்குற்றவாளிகளில் ஒருவன் (கொடூரத்திலும் கொடூரமானவன் என்றன ஆரம்ப விசாரணைக்குப் பின்வந்த செய்திகள், விபரங்கள் விகாரமானவை, தவிர்ப்போம்), நாலுபேரோடு சேர்த்து ஐந்தாவது ஆளாக தூக்குத்தண்டனை பெற்றிருக்கவேண்டியவன், தப்பித்து ’இருக்கிறான்’. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் மீடியாவில் பேசப்படாமலேயே மூடிமறைக்கப்பட்ட அவனது பெயர் முகமது அஃப்ரோஸ். உ.பி.-யைச் சேர்ந்தவன். டெல்லிக்குப் பிழைப்பதற்காக வந்த ஏழையாம். குற்றம் செய்தான். தப்பித்துவிட்டான். எப்படி? இப்படி ஒரு கீழ்த்தரமான குற்றம் செய்த நாளன்று அவனது வயது 18 வருடங்களுக்கு சிலமாதங்கள் குறைவாக இருந்ததாக சில அதிகாரிகளால் பின்னால் ‘கண்டுபிடிக்கப்பட்டது’ (2013). பாவப்பட்ட ‘பையன்’ என அறியப்பட்டு, இரக்கம் மிகக்கொண்டு, அவனது கேஸ் ‘இளம்வயதினர்க்கான நீதிமன்ற’த்திற்கு (Juvenile Justice Board) மாற்றப்பட்டது. அங்கே ‘போனால் போகிறான் சின்னப்பையன், ’ என அவனுக்கு மூன்று வருடம் ‘சீர்திருத்த வாசம்’ தண்டனையாக வழங்கப்பட்டது. சிறு, சிறு குற்றங்கள் செய்து ’உள்ளே’ வந்திருந்த மற்ற சிறார்களுக்கு, இவன் ‘பாடம்’ எடுத்திருப்பானோ, என்னவோ? நிர்பயா குற்றவாளிப் ‘பையன்’ ஒருகட்டத்தில் ’மனம் திருந்திவிட்டதாக’ கருதப்பட்டு, 2015-ல் விடுவிக்கப்பட்டான். நிர்பயாவின் பெற்றோரோடு, பொதுமக்கள் இயக்கங்கள் எதிர்ப்புக்குரல் கொடுத்தன. அரசியல்வாதிகளில் அவனது விடுதலையைக் கடுமையாக எதிர்த்தவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி. ’அவனது ‘கதை’ வேறுமாறானது, ‘சிறார் சீர்திருத்தக் கேஸ்’ இல்லை அது’ என சில சான்றுகளுடன் மத்திய அரசுக்கு மனுகொடுத்தார். புதிதாகப் பதவிக்கு வந்திருந்த மத்திய அரசு அவனை விடுவிக்கக்கூடாது எனக் கோர்ட் சென்றது. ஆனால், ’ஏற்கனவே சிறார்கள் நீதிமன்றத்தினால் மூன்று வருட ‘சீர்திருத்தத்தை’ தண்டனையாகப் பெற்றவன். ’தண்டனை’ முடிந்து அவன் வெளியேறுவதைத் தடை செய்யமுடியாது!’ என்றது டெல்லி ஹைகோர்ட். வெளியே அவிழ்த்துவிடப்பட்டான் ‘அப்பாவிப் பையன்’.
அப்பறம்? இங்கேயும் கொஞ்சம் : அவன் -முகமது அஃப்ரோஸ் (2015-ல் 21 வயது)- எப்போது வெளியே வருவான் என வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் ஒருவர். யாரப்பா அது? பிரிவு தாங்கமுடியாத பாசத் தந்தையா, தாயா? கூடப்பிறந்தவரா? இல்லை, டெல்லியின் முதலமைச்சர் அண்ணாச்சி கேஜ்ரிவால். குற்றவாளியை அழைத்து, அவனுக்கு ரூ.10000 அன்பளிப்பு செய்தது டெல்லி அரசு. பொதுமக்களிடமிருந்து கடும்எதிர்ப்பு வர, ஒரு ‘தொண்டு நிறுவனத்திடம்’ அவனை ஒப்படைத்து தையல் மெஷின் போன்றவைகளை வழங்கவைத்தது கேஜ்ரிவால் அரசு. ஏழையாம், திக்கற்றவனாம், எங்கே போவான், ‘டெய்லரிங் கடை’ வைத்துப் பிழைக்கட்டும்!’ என்பது தரப்பட்ட விளக்கம். நிர்பயா பெற்றோரோடு சேர்ந்து மக்களும் வெகுண்டெழ, தொண்டு நிறுவனம் டெல்லி அரசின் ஆலோசனைபேரில் வேறு ஏற்பாட்டைச் செய்தது.
அவனுக்கு யாரிடமிருந்தும், ஏதும் தீங்கு நிகழ்ந்துவிடக்கூடாதே? பாதுகாப்பாக வாழ ஒரு ’வழி’ செய்து கொடுக்க, பெயர் குறிப்பிடப்படாத அந்த ’தொண்டுநிறுவனம்’ அவனை டெல்லியிலிருந்து தூரத்துக்கு தள்ளிக்கொண்டு வந்தது. பாதுகாப்பான இடம்? ஆமாம். வேறு எது, நம்ம தென்னிந்தியாதான். நம்மவர்கள்தானே போக்கில்லாதவர்களுக்கும், போக்கிரிகளுக்கும் வாழ்வு கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள். இங்கே எங்கோ ஒரு நகரத்தில் -அது சென்னையாகவோ, பெங்களூராகவோ இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை- கொண்டுவந்து விட்டார்கள். சும்மா அப்படியே அல்ல. அவனது ’டெல்லி ரெகார்ட்’ வெளியே தெரியாதபடி, பெயரை, அடையாளத்தை மாற்றி ! ’தொண்டு’ நிறுவனம் என்றால் சும்மாவா? ’சப்பாத்தி, புரோட்டா செய்ய வடநாட்டுக்காரன் இருந்தால் தேவலையே’ – எனத் தேடிய உணவகத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டிருக்கிறார்கள். முதலாளிக்கும் ‘அவன்’ யாரென்று சொல்லப்படவில்லை! ’ஒரு தென்னிந்திய ரெஸ்ட்டாரண்ட்டில், பாதுகாப்பான வாழ்க்கை அவனுக்கு அமைத்துத் தரப்பட்டுவிட்டது. அனாமதேயமாக, ஆனந்தமாக வாழ்கிறான், இப்போது 23 வயதாகிவிட்ட அவன்’- என்கிறது 2017-ல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.
இப்போது பார்த்து, சிலர் கிளம்பியிருக்கிறார்களே, அந்த ஐந்தாவது மூர்க்கன் எங்கே, அவன் எப்படித் தப்பிக்கலாம் என்று …
வசதியுடையோர், பணக்காரர்கள், அவ்வப்போது புழங்கும் கைகளில் ஸானிடைஸர் போட்டுத் தேய்த்துக்கொள்வார்கள். வெளியிலிருந்து வீட்டுக்குள் வர நேர்ந்தால், கால்களைக் கழுவிவிட்டு உள்ளே வருவார்கள் -அல்லது உள்ளே வந்தபின் டெட்டால் /சாவ்லான் கலந்த நீரில் கை, கால்களை நன்றாகத் தேய்த்து அலம்பிக்கொள்வார்கள். இன்னும் என்னென்னவோ தங்கள் ஞானப்படி செய்துகொண்டு பாதுகாப்பாக, ’உள்ளேயே’ இருப்பார்கள். உள்ளே இருந்துகொண்டும் காரியங்கள் பல செய்யத் தெரிந்தவர்கள். ம்… ஆனால், இந்த ஏழைகள்? வக்கில்லாதோர், போக்கிடம் இல்லாதோர் என நிறையப்பேர் இருக்கிறார்களே. அவர்கள் என்ன செய்வார்கள் இந்தக் கேடுகெட்ட கொரோனா காலத்தில்..
எப்போதும்போல் இருப்பார்கள். வழக்கம்போல், ஏதாவது வேலையாக வெளியேபோவார்கள். அலைவார்கள். பசியெடுத்துவிட்டால், ஜேபிலிருக்கும் காசுக்கேற்றபடி, ரோட்டோரக்கடையில் கிடைத்ததை வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு சிங்கிள் டீயாவது மரத்தடியில் நின்றுகொண்டு குடிப்பார்கள். அதிலே கொஞ்சம் ஆனந்திப்பார்கள். வேர்க்க விறுவிறுக்க மேற்கொண்டு நடப்பார்கள். அவர்களை இந்த கொரோனா என்ன செய்யும்? போயும் போயும் இந்தப் பரதேசிகளை நான் தொட்டு, என் கௌரவத்தை இழப்பேனா என நினைத்து விலகிக்கொண்டு விடுமோ?
இந்தியாவின் வடக்கில் யூனியன் பிரதேசம், நகரான சண்டிகர். அங்கே ஒரு பெரும் வணிக வளாகம். ஜே..ஜே.. என மக்கள்கூட்டம் எப்போதும் ததும்பும் இடம். வெறிச்சோடிக்கிடக்கிறது. சதுக்கத்தில் எப்போதும்போல் அன்றும், ஒரு மூலையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் ஜொகீந்தர். 70-க்கு மேலிருக்கும். முற்றிக் கனிந்த தோற்றம். தலையில் பர்ப்பிள் கலர் டர்பன். கையில் தம்புராபோன்று ஒரு நாட்டு வாத்தியம். வாயில் பாட்டின் முணுமுணுப்பு. பக்கத்தில் சிறு பை. எதிரே சிறிய துணி விரிக்கப்பட்டு ஆகாசம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. காசுதான் ஒன்றும் விழக் காணோம்.
என்ன நடக்கிறது? ஏன் ஜனங்களையே காணோம். அவருக்கு ஏதாவது தெரியுமா? கேட்டதற்கு பதில் சொல்கிறார்: ’’ஊர்ல ஏதோ வியாதி வந்திருக்காம்… யாரையுமே காணோம். ஒண்ணும் புரியமாட்டேங்குது. இவ்வளவு பெரிய ஊர்ல எல்லாருக்குமா வியாதி? ’’ அவரிடம் கொரோனாபற்றி எந்த செய்தியும் இல்லை. நோய் தொற்றிக்கொள்ளுமோ என்கிற பயமுமில்லை. செய்வதற்கும் ஏதுமில்லை, எப்போதும் போல் வாத்தியத்தை இசைப்பது, வாய்திறந்து பாடுவதைத் தவிர.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜொகீந்தர் சிங். பாடிப் பிழைப்பவர். இது ஒன்றுதான் தெரிந்த ‘தொழில்’. அதற்காகத்தான் சண்டீகர் வந்திருக்கிறார், பணக்காரர்கள், தொழில்காரர்கள் வசிக்கும் ஊர். காசுபணம் தாராளமாய்ப் புழங்கும் இடம் எனக் கேள்விப்பட்டு. அவருக்கு ஆறு மகள்களாம். நாலுபேருக்கு கல்யாணம் செய்துவிட்டாராம். இன்னும் ரெண்டு பேர் பாக்கி.. ’’இப்படி யாருமே பாட்டுக்கேட்க வராட்டா, எப்படிக் காசு சேரும்?’’ என அப்பாவியாகக் கேட்கும் சர்தார்ஜி. கேட்டுவிட்டு ஆகாசத்தை இடுங்கிய கண்களால் பார்க்கிறார். ஒரு பதிலும் தராமல், நிர்மலமாய்ப் பரவிக்கிடக்கிறது வானம். விரல்கள் தம்புராவின் நரம்புகளின் மீது ஊற, தன்னிச்சையாக பாட ஆரம்பிக்கிறார். எதிரே யாருமில்லையே.. பாடுகிறீர்களே? – என்றால், ‘யாருமில்லேங்கறதுனாலே பாடாமல் இருக்கமுடியுமா!’ என்று வருகிறது பதில். பாட்டுக்குப் பழகிய அடர்ந்த குரல், மெல்ல சீராக அவரிடமிருந்து வெளிப்படுகிறது. கானம் காற்றில் மிதக்கிறது. கேட்பதற்குத்தான் ஆளில்லை. ஒரு நாய்கூட. ஓ.. நோ! அப்படிச் சொல்லக்கூடாது. அப்போதுதான் கடந்து சென்ற அந்தத் தெருநாய், சர்தார்ஜியின் கானம் கேட்டு நின்று, திரும்பிப் பார்க்கிறது. அதன் தனிமையைக் கலைத்துவிட்டாரோ ஜொகீந்தர்? கேட்கிறது பாட்டை. ஆனால்.. காசுபோடவேண்டும் என்று அதற்குத் தெரியாது. ஒரு வேளை தெரிந்திருந்தாலும் ..
’வயசுதான் ஆகிக்கிட்டே இருக்கு.. இதுகூடத் தெரியல இன்னும்!’ என்றாள் அவரின் மனைவி. உண்மைதான். வயசு ஆகிக்கொண்டேதான் போகிறது. என்ன செய்வது? காலையில் காப்பி குடிப்பதற்கு முன்னேதான் இந்த திடீர் ஞானோதயமா என்ன? ஏற்கனவே தெரிந்த, ஆச்சரியப்படுத்தாத, மனதில் ஊறிப்போன விஷயம்தான். சிந்தனை ஊற்றெடுக்க, காலாற நடக்கலானார் மனிதர்.
எதற்குத்தான் ஆகவில்லை? மனிதன், மிருகம், பறவை, மரம், செடிகொடி, கல், மண், மலை, நதி, கடல், ஆகாயம் எல்லாவற்றிற்கும் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது வயசு. அதுபோலவேதான் நமக்கும். எப்போதிலிருந்து? பிறந்த கணத்திலிருந்தே, அதுமாட்டுக்கு ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. இப்போதும், இந்தக் கணத்திலும் ஆகிக்கொண்டிருக்கிறது. இனியும் ஆகும்.. எதுவரை ஆகவேண்டும் என இருக்கிறதோ, அதுவரை ஆகும். இதில் நம்முடைய முயற்சி என்ன? பங்கு என்ன? சாதனை என்ன? ஒரு மண்ணுமில்லை. அதுமாட்டுக்கு நடக்கிறது காரியம். நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும். மற்றவர்கள், சந்தர்ப்பத்துக்கேற்றபடி, அவ்வப்போது கிண்டலடிக்கவோ, குத்திக்காட்டவோ வழிசெய்கிறது, நமக்கு இப்படி ‘ஆகி’க்கொண்டிருக்கும் வயசு.
பேசுவதை, எழுதுவதை நிறுத்தலாம். ஏதாவது காரியம் செய்துகொண்டிருந்தால் அதை நிறுத்திப் பார்க்கலாம். இந்த பாழாய்ப்போன வயது ஆவதை ..? ம்ஹும். ப்ரயத்தனத்தில் அர்த்தம் இல்லை. நம் கையில் இல்லை.
இத்தகைய கலங்கிய மனநிலையில் ஒருவேளை, ஏதும் புதிதாக, மாறுதலாக செய்வதற்கு, சொல்வதற்கோகூட இல்லையா? அப்படி ஒரு சோர்வா? அடடா.. பிறகு? ’மலை சாய்ந்து போனால்.. சிலையாகலாம். இந்த மனம் சாய்ந்து போனால்.. என்ன செய்யலாம்?’ – என்று கேட்டுப்போனானே நம் கவிஞன். சாய்ந்துபோன மனதை வைத்துக்கொண்டு செய்வதறியாது புலம்பியிருப்பானோ அவனும்?
இத்தகு கவைக்குதவாத சித்தத்தில், ஒரு போக்கற்ற நிதர்சனத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லை எனினும், ஏதாவது சொல்லிப் பார்க்கலாமா? ’கிருஷ்ணா..!’ எனலாம். புரந்தர தாசரைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார். அவர் இதையே பலவிதமாய்ச் சொல்லிச் செல்கிறார். மனம் குழம்பியிருக்கையில், தெளிவாயிருக்கையில், சந்தோஷமாயிருக்கையில், துக்கமாயிருக்கையில், ஒரு இடத்துக்கு நாம் காரியமாகப் போகையில், போய்விட்டுத் திரும்பி வருகையில், அங்குமிங்கும் நிலையின்றி அலைந்துகொண்டிருக்கையில், மூலையில் முடங்கிக் கிடக்க நேர்கையில், பூமியைப் பார்க்கையில், ஆகாசத்தைப் பார்க்கையில்.. ’கிருஷ்ணா..!’ எனலாமே. சாப்பிடுவதற்குமுன் சொல்லலாம். ரசித்து சாப்பிடும்போதும் சொல்லலாம். சாப்பிட்டுப் பசியடங்கிய திருப்தியிலும் கிருஷ்ணா எனலாம்தான். அற்பமானதோ, பெரியதோ – செய்யவேண்டிய செயல்களுக்கு முன்னே சொல்லாம், இடையேகூடச் சொல்லலாம், முடிந்தபின்னும் சொல்லலாம். தூங்குவதற்கு முன் சொல்லலாம். தூங்கி எழுந்தபின்னும் சொல்லலாம். தூக்கம் அகாலமாகக் கலைந்து, என்ன முயற்சித்தும் மேற்கொண்டு வராது அடம்பிடிக்கையில், இருட்டைப் பார்த்துக்கொண்டும் ‘கிருஷ்ணா..!’ என வாய்திறக்கலாம். கஷ்டத்திற்கிடையே சொல்லலாம். கஷ்டம் கலைந்தபின்னும் சொல்லலாம். விடாது தொடரும் நித்யப்பிரச்னைகளினூடேயும் அவ்வப்போது ’கிருஷ்ணா..’ எனலாம். ’வாயிருக்கிறது. வார்த்தையுமிருக்கிறது. கிருஷ்ணா என்று சொல்லப்படாதா!’ என்று சகமனிதர்களைப் பார்த்து அங்கலாய்ப்பார் புரந்தர தாசர்.
ஹரியே எங்கும், எதிலும் என நினைத்தவர், அவ்வாறே உணர்ந்தவர், அவனையே நினைந்து காலமெலாம் மருகினவர் தாசர். தென்னிந்தியாவில் ஹிந்துமத மறுமலர்ச்சி/ பக்தி இயக்கம் உச்சத்திலிருந்த காலகட்டம். 15-16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். செல்வந்தராய் இருந்தவர், ஒருநிலையில் எதையோ சடாரென உணர்ந்து, எல்லாவற்றையும் தூக்கிவீசிவிட்டு, பிச்சை எடுத்துப் புசித்து, அலைந்து திரிந்தவர். பொதுஜனங்களுக்கிடையே தெய்வத்தைப் பாடி, பழகி பக்திப் பரவசத்தை அருளிய ‘ஹரிதாசர்களில்’ பிரதானமானவராகக் கொண்டாடப்படுபவர் புரந்தர தாசர் (கன்னடத்தில் புரந்தர தாசரு). கேட்போர் உருக, அவர்தம் மாயை கருக, பாடித் திரிந்தார் ‘கிருஷ்ணா .. ராமா..’ என்றே. 18-19 ஆம் நூற்றாண்டில்தமிழ்நாட்டில் தியாகராஜர், தியாகப்ரும்மம் ‘ராமா’.. ராமா!’ என மகிழ்ந்து, நெகிழ்ந்து சிஷ்யர்களுடன் பாடிச் சென்றதுபோலவே.
எந்தவித எதிர்ப்பும் challenger இந்தியாவிடமிருந்து வராமல் போக, ஒரு one-sided affair ஆகிப்போனது மெல்பர்னில் (Melbourne) நடந்த (8th March – Intl. Women’s Day) மகளிர் டி-20 உலகக்கோப்பைக்கான இறுதி ஆட்டம். பெரிதும் எதிர்பார்த்திருந்த லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு வெகுமதியாகக் கிடைத்தது அதிர்ச்சிதான். இந்திய அணியினர் கேட்ச்சுகளைக் கோட்டை விட, ஆஸ்திரேலிய பேட்டிங் சரியான சமயத்தில் தூள்கிளப்ப, 85 ரன் வித்தியாசத்தில் கோப்பை ஆஸ்திரேலியாவின் கையில், ஐந்தாவது முறையாக.
முன்பு ஒரு கட்டுரையில் சொன்னதுபோல், இந்திய மிடில் ஆர்டர் எழுந்து தாக்காமல் போனால், அதாவது ஸ்ம்ருதி, ஹர்மன்ப்ரீத், ஜெமிமா, வேதா போன்றவர்களிடமிருந்து பெரிய ஸ்கோர் வரவில்லை எனில், இத்தகைய முக்கிய போட்டிகளில் ஒப்பேற முடியாது என்கிற கணிப்பு, பயம் பலித்துவிட்டது. ஷெஃபாலி இதுவரை 10-12 ஓவர் வரை நின்று தாக்கியிருக்கிறார்; 29-லிருந்து 47 வரை விளாசியிருக்கிறார். அத்தகைய ஒரு தாக்குதலில் நாம் குளிர்காயலாம் என மற்றவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள் எனினும், அதற்கு மேல் வீறுகொண்டு எழ இந்திய மிடில்-ஆர்டர் வீராங்கனைகளால் முடியவில்லை. அதிமுக்கியமான போட்டியில் துரதிருஷ்டவசமாக ஷெஃபாலி முதல் ஓவரில் வீழ்ந்துவிட, அடுத்துவந்தவர்கள் – சிலர் அவரைவிட அனுபவத்தில் புலிகள் – பொறுமை காத்து ஆடவோ, போட்டுத்தாக்கவோ முடியாது, மேட்ச்சை எதிரியிடம் வலிய ஒப்படைத்தது போலானது. இங்கேதான் துக்கமே.
ஷெஃபாலி 35-40 ரன் எடுத்திருந்தால் இந்திய ஸ்கோர் 135-140 என்கிற கௌரவ நிலையை எட்டியிருக்கும். கடைசி வரை ஃபார்முக்கே வராத சீனியர் பேட்ஸ்மன்களான ஸ்ம்ருதி, ஹர்ன்மன்ப்ரீத், வேதா போன்றோரை வைத்துக்கொண்டு கோப்பையை வெல்வது எப்படி சாத்தியம்? அதுவும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு கடைந்தெடுத்த ப்ரொஃபஷனல் டீமுக்கு எதிராக, 80000 பேர்கொண்ட ஆரவாரக் கூட்டத்தின் பின்னணியில், ’ஃபைனல் போட்டி அனுபவம்’ இல்லாத அணி சாதித்திருக்க வாய்ப்பு மிக, மிகக் கம்மி. நாம்தான் அதிகமாக எதிர்பார்த்துவிட்டோம்.
உலகக்கோப்பையை இழந்த இந்தியர்களின் சோகம்..
போட்டியின் இறுதியில் இந்திய வீராங்கனைகள் நிலைகுலைந்து காணப்பட்டது சோகத்தின் உச்சம். குறிப்பாக 16 வயது சிறுமியான, உண்மையில் இந்தியா ஃபைனல் வரை வந்துசேர பிரதான காரணகர்த்தாவான, உலக்கோப்பையில் ஏற்கனவே ஆடியிராத ஷெஃபாலி வர்மா – தோல்வியில் துவண்டு அழுதது நெஞ்சைத் தொட்டது என்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்டார் ப்ரெட் லீ (Brett Lee). ’இந்தக் கட்டத்திலிருந்து இந்திய மகளிர் மேலெழுந்து வருவார்கள், நிச்சயம்’ என்றார். தன்னுடைய சக வீராங்கனையின் தோளில் சாய்ந்துகொண்டும், ப்ரமை பிடித்தவாறு தனித்தும் நின்றுகொண்டிருந்த இந்திய அணியினரைப் பார்த்த வெஸ்ட் இண்டீஸின் லெஜெண்ட் சர் விவ் ரிச்சர்ட்ஸ் (Sir Viv Richards) சொல்கிறார்: ’உங்கள் கையிலும் கோப்பை ஒரு நாள் வரும்!’
Courtesy: Cartoonist Satish Acharya, One India.com
வரும். ஆனால் அதற்கு இன்னும் காலமிருக்கிறது; நிறைய உழைப்பு பாக்கியிருக்கிறது. அணியில் பலரின் அனுபவக் குறைவு, ‘big match temperament’ இல்லாமை, பதற்றம் என ஒன்றுகூடி, இந்திய அணியை ஒரு கத்துக்குட்டிகள்போல் உலகத்துக்குக் காட்டிவிட்டது இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி. பரவாயில்லை. ஆயினும், நமது வீராங்கனைகள் மீது வருத்தமில்லை. ஒரு மேட்ச்கூடத் தோற்காமல் உலகக்கோப்பையை விளையாடி, இறுதிப்போட்டியில் நுழைந்தவர்கள் என்கிற பெருமையும் இந்தியப் பெண்களுக்கு உண்டு. ஆகவே, திறனுக்கு அவர்களிடம் குறைவில்லை. நமது கன்னிகைகள் முனைப்பிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. They are just rough diamonds.. they need professional polishing. விரைவில் அது அவர்களுக்குக் கிடைக்கும். மீண்டு வருவார்கள் இந்திய வீராங்கனைகள். காத்திருப்போம்.