ஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்

2018-க்கான ஐபிஎல் கோப்பையை வென்று வாகை சூடிவிட்டது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றி, இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில், இவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாரகள். தோனிக்கு, மட்டையுடன் மைதானத்தில் இறங்கும் வாய்ப்பே இல்லாது செய்துவிட்டார் ஷேன் வாட்ஸன்.

முன்னதாக தோனி டாஸ் வென்று, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை உள்ளே அனுப்பியபோது, அவர்கள் சரியாக விளையாடி 180-185 –ஆவது எடுத்தால்தான் சென்னைக்கு சவால் விட ஏதுவாக இருக்கும் எனத் தோன்றியது. தேவையில்லாத ஆரம்ப ரன்–அவுட்டுக்குப்பின் கேப்டன் வில்லியம்சனும், ஷிகர் தவனும் (Shikar Dhawan) ஜாக்ரதை காட்டினார்கள். தவன் ஜடேஜாவிடம் விழுந்தவுடன், இனியும் காத்திருந்து ப்ரயோஜனம் இல்லையென்று, வில்லியம்ஸன் தன் அதிரடியை ஆரம்பித்தார். குறிப்பாக சென்னையின் டுவெய்ன் ப்ராவோவைத்(Dwayne Bravo) தாக்குதாக்கென்று தாக்கினார். அவர் பெரிய இன்னிங்ஸ் கொடுக்கப்போகிறார் எனத் தோன்றிய வேளையில், ஸ்பின்னர் கரன் ஷர்மாவின் வைட்(wide) டெலிவரியை முன்னால் வந்து தாக்க முற்பட்டு, பந்தை இழந்து, விக்கெட்டையும் தோனியின் ஸ்டம்பிங்கில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய யூசுஃப் பட்டான் உடனே காரியத்தில் இறங்கி மளமளவென ரன் குவித்தார். ஷகிபுல் ஹஸனும் (Shakib-ul-Hassan) கைகொடுக்க, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுத்தது. ஆனால் ஹஸன் ப்ராவோவிடம் வீழ, அடுத்துவந்த ஹூடாவைப் போடா என்று விரட்டிவிட்டார் லுங்கி இங்கிடி (Lungi Ngidi). ஆனால் மறுமுனையில் ஆவேசத்தில் இருந்த பட்டானுடன், கார்லோஸ் ப்ராத்வெய்ட்டும்(Carlos Brathwaite) சேர்ந்து ரன்களை உயர்த்த, ஒருவழியாக 178 என்ற கௌரவமான ஸ்கோரில் வந்து நின்றது ஹைதராபாத்.

179 என்பது வெற்றிக்கான பெரிய டார்கெட் இல்லை சிஎஸ்கே-வுக்கு. ஊதிவிடுவார்கள் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஹைதராபாதுக்கு எதிரான சென்னையின் ட்ராக் ரெக்கார்டும் அப்படித்தானே. இருந்தும் துவக்க ஆட்டக்காரர்களான வாட்ஸனும், டூப்ளஸியும் (du Plessis), ரிஸ்க் எடுக்காது, மெதுவாக ஆடினர். டூப்ளஸி சீக்கிரம் வீட்டுக்கு ஓடிவிட, ரெய்னா சேர்ந்துகொண்டார் வாட்ஸனுடன். விரைவிலேயே மும்பையின் வான்கடே மைதானத்தில் மஞ்சள் சட்டைகள் நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டன! படபட-ரெய்னா 34 ரன்களில் வெளியேறுகையில், அடுத்தமுனையில் வெடித்துக்கொண்டிருந்தார் வாட்ஸன். 13-ஆவது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, பேயாட்டம் போட்டார். 3 சிக்ஸர், 2 பௌண்டரி. நமக்கு கப் இல்லை என்பது அந்த ஓவரிலேயே ஹைதராபாதிற்குப் புரிந்துவிட்டது. அதற்குப்பின் பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் போதுமென்ற சாதாரண நிலைதான் சென்னைக்கு. 51 பந்தில் செஞ்சுரி அடித்து வாட்ஸன் அதகளம் செய்கையில், அடுத்தபக்கத்தில் டென்ஷனின்றி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார் அம்பத்தி ராயுடு. ராயுடுவுக்கும் வேலைவைக்காமல், தோனியும் மைதானத்தில் மற்றவர்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தால் போதும் எனும் வகையில் வாட்ஸன் கிட்டத்தட்ட தனிஒருவனாக ஆடி, சென்னையின் கையில் மீண்டும் ஐபிஎல் கோப்பையைத் தூக்கி வைப்பார் என்பது யாரும் எதிர்பாராததுதான்.

டேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தலைமை தந்தார் கேன் வில்லியம்ஸன். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கௌல் போன்ற பௌலர்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு அணியை ஃபைனல்வரை கொண்டுவந்து நிறுத்திய பெருமை வில்லியம்ஸனையே சாரும். பேட்டிங்கிலும் உச்சம் தொட்டு ஆரஞ்சு கேப்பையும் வென்றார்.

முந்தைய மேட்ச்சில் 10 பந்துகளில் 34 ரன்கள், 3 விக்கெட் என ஹைதராபாதிற்காக ஒற்றையாளாகத் தாண்டவமாடிய ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஷீத்கான், இறுதிப்போட்டியில் தன் கனவைக் கலைக்கும் அளவுக்கு குளறுபடி ஏதும் செய்யாதிருக்க, அவரை அதிகவனமாகக் கையாண்டது சிஎஸ்கே. அவரை எதிர்த்து ரன் எடுக்க முனையவுமில்லை. விக்கெட் எதையும் அவரிடம் இழக்கவும் இல்லை! அதேபோல் சென்னை அணியால் மிகவும் மதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார். இவருக்குரிய மரியாதையைக் கொடுத்தே கவனமாக ஆடிய சென்னை வீரர்கள், இவருக்கும் ஒரு விக்கெட்கூட விழாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இரண்டு வருடங்களுக்குப்பின் பெரும் உத்வேகத்துடன் ஐபிஎல்-லுக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ், தன் புகழ் மங்காதவாறு விளையாடியது ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது. குறிப்பாக சென்னையின் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் பேட்டிங்கில் அசத்தோ அசத்தென அசத்தி, தோனியின் சுமையை வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். ஆரம்ப மேட்ச்சுகளில் டெத்-ஓவர்களில்(death overs) சிறப்பாக வீசினார் டுவெய்ன் ப்ராவோ. சுரேஷ் ரெய்னா, டூப்ளஸி போன்றோரின் திறமைமிகு பேட்டிங்கும், அவ்வப்போது சென்னையைத் தூக்கி நிறுத்தியது. பௌலிங்கில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) தூள்கிளப்பினார். புது வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹர் (Deepak Chahar) முந்தைய போட்டிகள் பலவற்றில், கட்டுப்பாட்டுடன் வீசினார். ஸ்பின்னர்களில் ரவீந்திர ஜடேஜா ப்ரமாதம். ட்வீட்டரில் அடிக்கடி லொடலொடத்த ஹர்பஜன் சிங்கினால், பந்தை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஒன்றும் பெரிசாக செய்யமுடியவில்லை என்பதைக் கண்டுகொண்ட தோனி கடந்த போட்டியில் அவருக்கு ஒரு ஓவரும் தரவில்லை. இந்தப்போட்டியில் அவரைத் தூக்கியேவிட்டார்!

எதிர்பார்த்ததுபோலவே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை அழகாக முன்னின்று வழிநடத்தியதோடு, இறுதியில் ஐபிஎல் கோப்பையை வென்றும் காட்டிவிட்டார். அணி நிர்வாகத்தின் வெற்றிக் கனவு ஒருபுறமிருக்க, தோனியும், தன் விமரிசகர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப எண்ணி, இந்த ஐபிஎல்-ஐ தன் பர்சனல் இலக்காகக் கொண்டு ஆடியிருக்கக்கூடும். 2019—ல் இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான, தோனியின் மன, உடல் அளவிலான ஆயத்த முயற்சிகளில் முதலாவதாகும் இது. அடுத்தாற்போல் வரவிருக்கிறது இங்கிலாந்தில் ஜூலையில் இந்தியா ஆடவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர்…

**

அன்றும் இன்றும் என்றும்

இந்த உலகில் பலர் மனமில்லாதவர். மனமில்லாதவர் என்றால் ஏதோ மனம் எனும் ஒன்றை, ஒரு entity-ஐ, அது எதுவாயினும், அதை, கடந்து சென்றுவிட்ட ஞானி என இங்கே அர்த்தமில்லை. மெய்யியல்பற்றியல்ல பேச்சு. மனமில்லாதவர் என இங்கே குறிப்பிடுவது யாருக்காகவும் எதையும் செய்ய விரும்பாதவர்களை. ஒரு துரும்பையும்கூடத் தூக்கிப்போட மனமில்லாதவர்கள். உலகம் என்பதும் வாழ்க்கை என்பதும் இவர்களைப் பொறுத்தவரை இவர்களேதான். வேறொன்றுமில்லை. இந்த லட்சணத்தில் அடுத்தவனாவது, கஷ்டமாவது, உதவியாவது, மாற்றமாவது, மண்ணாங்கட்டியாவது.. போங்கப்பா அந்தப்பக்கம்.. என்றிருப்பவர்கள். தங்களைத் தாண்டி வேறெதிலும் இஷ்டமில்லாதவர்கள். இப்படிப்பட்டவர்களால்தான் இந்த உலகம் எப்போதும் நிரம்பி வழிகிறது. மத்லபி என்பார்கள் வடநாட்டில். அதாவது அதிசுயநலவாதிகள்.

இத்தகையோர் விரவிக் கிடக்கும் உலகில், ஆங்காங்கே கொஞ்சம்பேர் வித்தியாசமாகத்தான் தெரிவார்கள். அவர்களிலும் பலர் அமைதியாகவே இருப்பார்கள். சிலர் தலை உயர்த்தி, மாற்றம், புரட்சி, புது உலகம் என்றெல்லாம் சத்தம்போட்டிருக்கிறார்கள். இது அப்போதும் நடந்திருக்கிறது. இப்போதும் சிலர் தலையை சிலுப்பிக்கொண்டு, புதிதாக எதையோ கண்டுபிடித்துவிட்டவர்களைப்போல் கூவித் திரிகிறார்கள். இனிவரும் காலத்திலும் இத்தகைய ப்ரக்ருதிகள் தோன்றத்தான் செய்வார்கள். ஒரேயடியாக முஷ்டியை உயர்த்தி, தொண்டை கிழிய கோஷம் போடுவார்கள். ஏதேதோ செய்ய முனைவார்கள். அல்லது அதற்காக ஆள் சேர்ப்பார்கள். அவர்களால் எல்லாம் ஒன்றும் நிகழாதா என்று கேட்கலாம். நிகழலாம் ஏதோ கொஞ்சம் இங்கேயும் அங்கேயுமாக. அல்லது நிகழ்வதாக, ஏதோ நடந்துவிட்டதாகக் கூடத் தோன்றலாம். பிறகு மீண்டும் எல்லாம் பழைய குருடி.. கதவத் திறடி.. என்றாகிவிடும். எப்போதும்போலவே, எருமைமாட்டுக்கணக்காய், எல்லாவற்றையும் உள்ளேதள்ளி மெல்ல அசைபோட்டு நடந்துபோய்க்கொண்டிருக்கும் உலகம்..

**

கலைக்கோவில்கள், கோட்டான்கள் ..

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக..

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கோவில்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் வாழும் கலைக்கோவில்..
கொண்டது எனது அரசாங்கம்

எவனோ ஒருத்தன்  சந்தோஷமாக எழுதிவிட்டுப்போயிருக்கிறானே ! மனதுக்குள் கிடந்து எழுந்த வரிகளை ரசித்து முணுமுணுத்தவாறு வளாகத்துக்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தேன்.  மேற்கொண்டு சிந்தனை சென்றது…

தப்புத் தப்பாகத் தெரிகிறதே காட்சிகள்?  ஒரு பக்கம் எடப்பாடி. இன்னொரு பக்கம் குமாரசாமி.  கலைக்கோவிலா, குயில்கள் வசிக்கின்றனவா? கோட்டான்கள் கூத்தடிக்கும்  வெளியாக ஆகிவிடும்போலிருக்கிறது நாடு? குயில்கள் இருக்கட்டும், பறந்தோடிவிட்டனவே பறவைகளெல்லாம்? நீரில்லா நதிகள்.. யாருக்கு சொந்தமானால் என்ன? அதற்காகவே காத்திருப்பவர்கள் ஓடி வந்து, மணல் அள்ளலாம்…விற்கலாம்.. பணம் பண்ணலாம்.   கொடுமைகள் தொடர்கின்றன.. பிறந்த மண்ணுக்கெதிராக…  யாரைப்பற்றி என்ன சொல்லி என்ன பிரயோஜனம் ?

**

பாலகுமாரன்

‘சாவி’ வாரஇதழ் என்று நினைக்கிறேன். அப்போது எழுத்தாளர் சாவியே ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிக்கை. அதில் வந்துகொண்டிருந்தது அந்த நாட்களில் ’மெர்க்குரிப்பூக்கள்’ என்ற தொடர்கதை. பாலகுமாரன் எனும் புதிதாக அறிமுகமாகி எழுத ஆரம்பித்திருந்த ஒரு எழுத்தாளர் எழுதிக்கொண்டிருந்தது. முதல் அத்தியாயத்திலேயே, ஏதோ போராட்டக்களத்தில் ஹீரோ காலி. போய்விட்டான் மேலே. இருந்தும் கதையின் சுவாரஸ்யம் தொடர்ந்தது. தீயாய்ப் பிடித்துக்கொண்டது. அதிலிருந்த பெண் கதாமாந்தர்கள் அழுத்தமாக, ப்ரகாசமாக வெளிப்பட்டிருந்தார்கள். ஒருவித ஆச்சரியத்துடன் படித்தேன். இப்படித்தான் பாலகுமாரனை ஒரு எழுத்தாளராக இளவயதில் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். மெர்க்குரிப்பூக்களுக்கு 1980-ல் ’இலக்கியசிந்தனை விருது’ கொடுக்கப்பட்டது. பிறகு அவர் எழுதிய ’இரும்பு குதிரைகள்’ வித்தியாசமாகத் தோன்றியது அப்போது. ஏனோ சுஜாதாவின் பக்கம் வராத ’சாகித்ய அகாடமி விருது’, அவரது காலத்தவரான பாலகுமாரனை நாடிவர, இரும்பு குதிரைகள் நாவல் வழிவகுத்தது.

இப்படி ஆரம்பித்த பாலகுமாரனின் ஆரம்ப எழுத்தில் ஒரு இலக்கியத் தரம் தென்பட்டது. (விருதுகளை வைத்துச் சொல்லவில்லை இதை). இன்னும் நல்ல எழுத்து இவரிடமிருந்து வரும் என வாசகர்களின் எதிர்பார்ப்பு மேலெழுந்தவேளையில், போக்கு மாறியது. எழுத்துத்தடம் விலகி வேறானது. வேகவேகமாக வணிகப் பத்திரிக்கைகளில் எழுதி ப்ராபல்யம் அடையவேண்டும் என்கிற, சக எழுத்தாளர்களுடனான போட்டி முனைப்பில் எழுத ஆரம்பித்தார். ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் அவருடைய கதைகள், தொடர்களை வெளியிட்டன. பிரபலமடைந்தார்தான். ஆனால் எழுத்தின் இலக்கிய தரம் எதிர்ப்பக்கமாகச் சென்று, மலையேறிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

பாலகுமாரன்
சமூகச்சூழலில், குடும்பப் பின்னணியில் உறவுகளின் ஆழங்கள், அபத்தங்கள், சிக்கல்கள் எனப் பின்னிச் சென்ற இவரது எழுத்து, குறிப்பாக குடும்பம் என்கிற பெயரில் பெண்ணின்மீது சமூகம் காட்டிய தாங்கவொண்ணா அழுத்தம், மனவன்மத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. இதனால் பெண்வாசகரைப் பெரிதும் ஈர்த்தது எனலாம். சராசரித் தமிழ்வாசகரிடையே ஒருகாலகட்டத்தில் மிகவும் பிரசித்தமாக ஆகிப்போனது. குமுதம், ஆனந்தவிகடன், கல்கிபோன்ற வணிகப் பத்திரிக்கைகளின் விற்பனை எகிறுவதற்கு துணைபோனது. எண்பது, தொண்ணூறுகளில் அவரிடமிருந்து சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் புற்றீசலாய்ப் புறப்பட்டு வந்தன. அவையே வாழ்வையும் வளத்தையும் தந்ததால், ஒரு திருப்தியும் அவருக்கு அதில் ஏற்பட்டிருக்கவேண்டும். அதனைத் தொடர்ந்துசென்றார் பாலகுமாரன். அவரைத் தொடரவில்லை அதன் பின்னர் நான்.

வெகுகாலத்திற்குப் பின் ஒருமுறை இந்தியா திரும்பியிருந்தபோது, குமுதத்தின் ’பக்தி’ இதழைப் பார்க்க நேர்ந்தது. (பக்தி, சக்தி என்றெல்லாம் பெயர்வைத்து விற்று, மேலும் மேலும் காசு சேர்ப்பதற்கான யுக்தியை தமிழ்ப் பத்திரிக்கை முதலாளிகள் கையாள ஆரம்பித்திருந்தனர்). அந்த பக்தி இதழிலும் பாலகுமாரன்! என்னடா இது, இங்கேயும் அவரது ஸ்டீரியோ-டைப் குடும்ப மசாலாவா? குடும்பம் எப்படி சாமி கும்பிடவேண்டும் என்று எழுதுகிறாரா? ’காதலாகிக் கனிந்து’ என்கிற தொடர் என்று ஞாபகம். தயக்கத்துடன் படித்துப் பார்த்தேன். ஆன்மீகப் பாதையில் காலூன்றியிருந்தார். அதில்தான் அவர் தன் குருவாகக் கொண்டாடிய யோகி ராம் சூரத்குமார் அவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்திருந்தார் என ஞாபகம். அல்லது அதில்தான் நான் யோகியைப்பற்றி பாலகுமாரன் எழுதியிருந்ததை முதன்முதலாகப் படித்தேன். யோகியுடனான அவரது சந்திப்பு, அனுபவங்களுக்குப்பின் அவரது எழுத்து பெரும் மாறுதல் கண்டதாகக் கூறியிருக்கிறார். எப்படியிருப்பினும், ஒரு தனிமனிதனாக அவர் யோகியால் வெகுவாக மாற்றப்பட்டிருந்தார், ஆன்மீக வெளியில் பெரிதும் முன்னேறியிருந்தார் என்பதை அவரோடு நெருங்கிப் பழகிய வாசகர்களும், நண்பர்களும் அறிந்திருந்தனர். சொல்லியும் வந்தனர். உடையார், கங்கைகொண்ட சோழன் போன்ற சரித்திரப் புனைவுகளையும், மெய்ஞானிகளான ரமணமகரிஷி, யோகி ராம் சூரத்குமார் ஆகியோரைப்பற்றிய நூல்களையும் அந்தக் காலகட்டத்தில் பாலகுமாரன் எழுதினார். ஏற்கனவே அவருக்கு நிறைய அமைந்துவிட்டிருந்த பெண்வாசகர்களோடு, ஆன்மீக நாட்டமுடைய வாசகர்களும் சேர்ந்துகொண்டார்கள். ’இதுபோதும்’ என்கிற தலைப்பில் பிற்காலத்தில் தான் எழுதிய ஆன்மீக நூலை முக்கியமானதாகக் கருதினார் பாலகுமாரன். சக எழுத்தாளர் ஒருவரிடமும் அதனைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.

இலக்கியத் துளிர் காட்டிய இவரது ஆரம்ப எழுத்தை கவிஞர் ஞானக்கூத்தன் அடையாளம்கண்டு, ஊக்குவித்திருக்கிறார். வழிப்படுத்த முயன்றிருக்கிறார். துவக்கத்தில் மொழியின் கவிதை வடிவம் பாலகுமாரனை ஈர்த்திருந்திருக்கிறது. புதுக்கவிதைகள் நிறையப் புறப்பட்ட எழுபதுகளின் தமிழ்க்காலம். கணையாழியில் சில கவிதைகள் எழுதியிருக்கிறார். அப்படி வெளிவந்த பாலகுமாரன் கவிதை ஒன்று:

உனக்கென்ன கோவில் குளம்
சாமி பூதம் ஆயிரமாயிரம்
இனிமையாய்ப் பொழுதும் போகும்
வலப்பக்கம் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள்
வலிக்கின்றன
அடியே
நாளையேனும் மறக்காமல்
வா

இன்றைய தமிழ் எழுத்துச்சூழலில் இத்தகையக் கவிதை ஒன்றை பெரும்பாலானோர் அனாயாசமாக எழுதிவிடக்கூடும்!

ஞானக்கூத்தனின் மொழிலயம் காட்டும் பாலகுமாரனின் பழைய கவிதை ஒன்று – சற்றே நீளமானது எனினும் சுவாரஸ்யமானது – கிடைத்தது. கீழே:

பிழை

ஆயிரம் கவலைகள் இருந்தாலும்
காலை என்பது சந்தோஷம்
விடியல் என்பது நம்பிக்கை
காலைப்போலப் பரவசமாய்
கவலை மறக்கும் பெருமிதமாய்
பிறிதொரு விஷயம் பிள்ளைகள்
காலை நேரம் தெருவோரம்
கைகள்வீசி நான் நடக்க
பள்ளிப்பிள்ளைப் பலநூறு
போவார் வருவார் பூஞ்சிட்டாய்
வெட்டிப்போட்ட பெரும்வாழை
ஆற்றில்போக அதன்மீது
தத்தித் தத்தி இடமாறும்
பறவைகள்போலே கீச்சிட்டு
சைக்கிள் ரிக்ஷா தார் ரோட்டில்
பத்துப் பிள்ளைகள் அதனுள்ளே
அலையில் உருண்ட வாழைபோல்
வண்டி குலுங்கப் பள்ளத்தில்
புத்தகம் தாங்கிய பையொன்று
தெருவில் விழுந்தது ’சொத்’தென்று
போவோர் வருவோர் கூச்சலிட
அலைந்தது ரிக்ஷா நடுரோட்டில்
ஓரம் நின்றது கதறலுடன்
ரிக்ஷாக்காரன் கருமுதுகில்
கிழிசல் பனியன், அதன்மீது
கொடிகள் இரண்டு வியர்வையுடன்
வண்டிக்காரன் கீழிறங்கி
பையைப் பார்த்தான் ஆத்திரமாய்
எவனுது பையி, சோம்பேறி
எவண்டா விட்டான் நடுரோட்டில்
தினமும் எழவா ரோதனையாப்
போவுது போடா எம்பொழப்பு
பையைவிட்ட சிறுபிள்ளை
தரையில் குதிக்க, கைதூக்கி
தலையில் போட்டான் கொடிமுதுகு
வலியில் துடித்தது சிறுபிள்ளை

எனக்கும் உண்டு சிறுமதலை
அதுவும் போகுது பள்ளிக்கு
இதுபோல் தினமும் ரிக்ஷாவில்
எவனோ பிள்ளை விம்மியழ
எனக்குள் மூண்டது பெருங்கோபம்
சொடுக்கித் திருப்பிக் கொடிமுதுகை
‘டேய்’ என விளித்தேன் ஆத்திரமாய்
உன்னை நம்பி பல பெற்றோர்
பிள்ளையை அனுப்ப நடுரோட்டில்
தலையில் அடிக்கும் தைரியமா
எப்படி வந்தது கொடிமுதுகா
அவனும் பேச நான் பேச
வார்த்தை தடித்தது பிரம்பாக
நரம்புகள் திமிறின முறுக்காக
பறப்பன ஊர்வன எல்லாமே
திகைத்து நின்றது நடுத்தெருவில்
எனக்குத் துணையாய் பலபேர்கள்
அவனை மதித்தும் சிலபேர்கள்
இரண்டாய் மூன்றாய் பலநூறாய்
கூட்டம் சேர்ந்தது முற்பகலில்
தலையில் அடித்தக் கைவிரலை
ஒடித்துப்போட்டால் சரியாகும்
எவரோ தீர்ப்பை முன்மொழிய
என்னைத் தொட்டான் சிறுபிள்ளை
ஏனெனக் கேட்டேன் தலைகுனிந்து
ரிக்ஷா ஓட்டி என் தகப்பன்
பையை விட்டது என் தவறு
எனக்காய் தினமும் கால்வலிக்க
இத்தனைப்பேரை அவர் இழுக்க
தலையில் அடித்தது பெரிதில்லை
அப்பாமீது பிழையில்லை
மெல்லச் சொன்னான் தரை நோக்கி
வியந்து பார்த்தேன் கொடிமுதுகை
என்னை வெறுத்த கொடிமுதுகு
சோற்றுப் பொட்டலம் தரைவீசி
அதட்டிச் சொன்னான் பிள்ளையிடம்
நடந்து போடா பள்ளிக்கு
ரிக்ஷா சொகுசு உனக்கெதற்கு
கஷ்டப்படுடா கடன்காரா
அப்பத் தெரியும் ஊர் உலகம்
ஏறி மிதித்தான் வண்டியினை
குலுங்கிப்போச்சு தார் ரோட்டில்
சோற்றுப் பொட்டலம் இடக்கையில்
புத்தகச் சுமையோ வலத்தோளில்
கிழிந்த ஷூவை இழுத்தபடி
பிள்ளை போனான் தலைகுனிந்து
எனக்குள் மெல்லிய குறுகுறுப்பு
கூட்டைக் கலைத்த முட்டாளாய்
நடந்து பேசி அவனோடே
விபரம் அறியும் ஆசைகள்
ஏனோ என்னுள் வலிவில்லை
பிழையெது இங்கெனத் தெரியவில்லை

**

தமிழ்த்திரையுலகிலும் பிரவேசித்த பாலகுமாரன் சிறந்த வசனகர்த்தாவாக பல ஆண்டுகள் எழுதினார். சில படங்களில் முத்திரை பதித்தார். சுஜாதாவைப்போல, தமிழ்த் திரைவசனத்தின் தரத்தை பலபடிகள் மேலெடுத்துச்சென்றவர் பாலகுமாரன். ரஜினிகாந்தின் வெற்றிப்படங்களில் பாலகுமாரனின் ஒற்றைவரி வசனங்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களின் மனதில் அதகளம் செய்தன. நினைவில் நீங்காது நீள்கின்றன. குணா, காதலன், ஜெண்டில்மேன், புதுப்பேட்டை, பாட்ஷா, நாயகன் போன்ற படங்கள் அவரது வசனத் திறனுக்கு எடுத்துக்காட்டு. 1995-ல் வெளியான பாட்ஷாவில் சில சுருக் சுருக் வசனங்கள் : ’’யுவராணி அவர் கிட்ட என்ன சொன்னீங்க ?’’ “உண்மையைச் சொன்னேன்!” ரஜினிகாந்த் வேறொரு இடத்தில் “டேய்! டேய்! நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்!” என்று கூறுவது சீனைத் தெறிக்கவிட்டது. பாலகுமாரன் –ரஜினிகாந்த் காம்பினேஷனில் ரசிகர்கள் சிலிர்த்தார்கள். காதலன் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்: “சந்தோஷமோ, துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு. நிதானத்துக்கு வருவ.” திரைவசனங்களில் ஒரு துடிப்பு, உக்கிரம், தெளிவு காட்டிய பாலகுமாரனை மறக்கமாட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றிய பாலகுமாரன் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்: இது நம்ம ஆளு. ஆனால் படத்திற்கான விளம்பரங்களில் வணிக காரணங்களுக்காக ‘இயக்கம்: கே.பாக்யராஜ்’ என்றிருக்கும்! இப்படியும் நடந்திருக்கிறது பாலகுமாரனுக்கு.

**

அம்மாவைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?

மனதுக்குப் பிடித்தமான, உன்னதமான ஒரு விஷயத்தை, நாம் நம் மனதிலேயேதான் சரியாக அனுபவிக்கமுடியும். அல்லது இணக்கமானவர்களோடு, நம்மோடு ஒத்திசைவு உள்ளவர்களோடு சரியான சூழலில் பகிர்ந்துகொள்ளலாம். அளவளாவி மகிழலாம். ஆனால் ஒருபோதும் உணர்வற்ற முட்டாள்களோடோ, அயோக்கியர்களோடோ இத்தகைய மென்னுணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஆனால் நம்மை அப்படி நிம்மதியாக இருக்க விட்டுவிடுவார்களா, நம் நாட்டில்?

நமது பத்திரிக்கைகளை, டிவி சேனல்களை, தவிர்க்கமுடியாமலும் ஒரு வித தினசரி சலிப்புடனும்தான் படிக்கவேண்டியிருக்கிறது/ பார்க்கவேண்டியிருக்கிறது. செய்திகள் என்கிற பெயரில் காலையிலிருந்தே சுற்றிச்சுற்றி வரும் தினசரி அபத்தங்கள், கேலிக்கூத்துகள், வக்கிரங்கள், வன்ம விவரிப்புகள். குறிப்பாக இந்திய டிவி சேனல்கள், சினிமாக்கள் போன்ற பொதுஜன ஊடகங்கள் இத்தகைய செய்தி, பட வெளியீடுகளில் ஒப்பற்றவை. தனிமனித, குடும்ப உறவுகள் தொடர்பான நல்லுணர்வுகளை, ஒழுக்கமதிப்பீடுகளை திட்டமிட்டு சிதைப்பதில் ஈடுஇணையற்றவை. மீடியா சுதந்திரம் என்கிற லேபிளை நெற்றியில் ஒட்டிக்கொண்டு, சமுகச் சீரழிவை, உக்கிரமாக, வருடக்கணக்கில் செய்துவருபவை (எல்லாப் பத்திரிக்கைகளும், மீடியாவும் இப்படி மோசமில்லை எனும்போதும்).

இன்று காலை, கர்னாடகா எக்ஸிட்-போல், ஐபிஎல், அயர்லாந்து-பாகிஸ்தான், ஈரான் –இஸ்ரேல், மோதி-முக்திநாத் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பத்திரிக்கைக் கதவைத் திறந்தேன். எந்த நேரத்தில் திறந்தேனோ.. எரிச்சலுற்றது மனது. எகிறியது BP.

என்ன அது? அன்னையர் தினம். இதில் எரிச்சலுற என்னப்பா இருக்கிறது? கொஞ்சம் பொறுங்கள். எரிச்சல் கொடுத்தது தினமல்ல, அப்பாவி அம்மாக்களுமல்ல. இந்த தினத்தின் மகிமையை தன் ‘ஸ்டைலில்’ குறிப்பிட்டுக் குதூகலித்தது ஒரு பத்திரிக்கை. அன்னை அல்லது அம்மா அல்லது தாயார் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? ஒரு நெருக்கமான, அப்பாவித்தனமான அன்பு, அளவிலாப் பாசம், எப்போதும் பொங்கிநிற்கும் ப்ரியம், பிரிவு தரும் உருக்கம், கண்கலக்கம், நீங்காத நினைவு – இதெல்லாம்தானே? ஆனால் நமது பத்திரிக்கைகள் எதை, எந்தமாதிரி அம்மாக்களை இன்றைய தினம் நமக்கு நினைவுபடுத்த, நாம் மெச்சவேண்டும் என விரும்புகின்றன?

Power Moms! என்ன திடீரென்று ஆங்கிலத்துக்குத் தாவிக் குழப்புகிறீர்கள் என்கிறீர்களா? தமிழிலேயே வருகிறேன்: ’சக்திவாய்ந்த அம்மாக்கள்!’ இது சரிதானே. அம்மாவின் சக்திக்கு இணையாகுமா என்கிறீர்கள். இந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன். இவர்கள் குறிப்பிட்டது உங்க அம்மா, எங்க அம்மா போன்ற அப்பாவி அம்மாக்களைப்பற்றியல்ல. அவர்கள் தினம் காட்டி, புகட்டி வளர்த்த பாசத்தின் சக்தியைப்பற்றியல்ல, இந்தப்பத்திரிக்கைகள், குறிப்பிட்டுப் பீற்றிக்கொள்வது.

பின்னே? Power Moms என்று இவர்கள் குறிப்பிட்டு நம்மையும் உணர்ச்சிவசப்படச் சொல்வது, அரசியல்வாதிகளின் அம்மாக்கள், பாலிவுட்டின் அம்மாக்கள். இவர்கள்தான் சக்தி வாய்ந்த அம்மாக்களாம். இவர்களே அன்னையர் தினக் கொண்டாட்டத்திற்குத் தகுதியானவர்கள்! நீங்களும் நானும் இதை அப்படியே ஒத்துக்கொண்டு நமது அசட்டு அம்மாக்களைப்பற்றிய சிந்தனைகளை மூலையில் தூக்கிக்கடாசிவிட்டு, ’பவர் அம்மா’க்களைப் பற்றி இந்த நன்னாளில் சிந்தித்து மகிழவேண்டும். இந்திராகாந்தி, சோனியா காந்தி, ஷீலா தீக்ஷித் என்று கூவிக்கொண்டு பெருமைப்பட்டுக்கொள்ளவேண்டுமாம். எப்படி இருக்கிறது நமது மீடியா சொல்லும் அம்மாக் கதை? நம்மைப்போன்ற அசடுகளுக்கு இவ்வாறு விளக்கியும் புரியாமல் போய்விடுமே என்பதற்காக பாசக்கார அம்மா-பிள்ளை படங்கள் சிலவும் போட்டிருக்கிறார்கள். இந்திரா காந்தி-ராஜீவ் காந்தி, சோனியாகாந்தி-ராகுல், ஷீலா தீக்ஷித்-சந்தீப் தீக்ஷித், போறாக்குறைக்கு ராப்ரி தேவி !(ஊழல்திலகம் லாலு ப்ரசாத் யாதவின் அர்ருமை மனைவி). ராப்ரிதேவி தன் மகன் தேஜஸ்வி யாதவுடன். அடடா! எப்பேர்ப்பட்ட அம்மாக்கள் நம்நாட்டில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். நாம் கொடுத்துத்தான் வைத்திருக்கவேண்டும். சந்தேகமில்லை. பாலிவுட் ரசிகர்களையும் விட்டுவிடக்கூடாதே! அதற்காக மேலும் படங்கள் போட்டுக்காண்பித்திருக்கிறது பத்திரிக்கை: ஹிந்திப்படங்களில் அம்மாக்களாக வந்து அம்மாவின் அன்பைப்பற்றி நமக்கு விபரமாகச் சொல்லித் தெளிவித்த நிருபா ராய் (அமிதாப் பச்சனுக்கு அம்மாவாக வந்து அழுதுகொண்டே இருந்தவர்), ரீமா லாகூ, ஃபரிதா ஜலால் ஆகிய புண்யாத்மாக்கள்.

என்ன புரிகிறதா ஏதாவது? இப்போதாவது? அன்னையர் தினம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பெற்றதாயை நினைத்து உணர்ச்சிவசப்படும் ஜீவன்களே, மேற்சொன்னதுபோன்ற ’பவர்-அம்மா’க்களை இன்று நீங்கள் நினைக்காவிட்டால், அன்னையர் தினம் கொண்டாடி என்ன ப்ரயோஜனம்?

**

மே, 11 : என்ன உலகமே, ஞாபகமிருக்கா !

20 வருடங்களுக்கு முன் (1998), இதே நாளில்தான் இந்தியா போக்ரான்-2 என்று பின்னால் அழைக்கப்பட்ட, அதிரடி நவீன அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. ’ஆபரேஷன் ஷக்தி’ என கோட்-பெயர் கொண்ட இந்த அணு ஆயுத சோதனைகளின் முதல் பாகமாக மூன்று அணு ஆயுதங்களை ராஜஸ்தானின் போக்ரான் (Pokhran) பாலைவனத்தில், பூமிக்கடியில் வெடித்து தூள்கிளப்பியது இந்தியா! கூடவே, கொஞ்சம் வெரெய்ட்டியும் காட்டி பயமுறுத்தியது: ஒரு அதிநவீன fusion அணுகுண்டு மற்றும் இரண்டு fission அணுகுண்டுகளை வெற்றிகரமாக வெடித்து சோதித்தது. அதிர்ந்துபோன அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், சீனா போன்ற வல்லரசுகளும், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, போன்ற ஏனைய முக்கிய நாடுகளும் இந்தியாவை கடுமையாக விமரிசித்து, திட்டித் தீர்க்குமுன், இன்னுமொரு நல்ல காரியம் செய்தது இந்தியா. இரண்டு நாள் கழித்து (மே 13), இன்னும் இரண்டு fission அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தியது. என்ன ஆயிற்று, இந்த இந்தியாவுக்கு? உலகின் வல்லரசு நாடுகள் தலையைப் பிய்த்துக்கொண்டன. அமெரிக்க சிஐஏ மற்றும் பெண்ட்டகன் (Pentagon) நிர்வாகங்களுக்கு, சித்தம் கலங்கிப்போனது எனலாம். இத்தனை உளவு சேட்டலைட்டுகளை இந்தியாவுக்கு மேலே உலவவிட்டும், எப்படி நம் கண்ணில் மண்ணைத் தூவியது இந்த நாடு என்பதே அங்கே கொதித்த பிரதானமான கேள்வி. இந்த அதிநுட்பமான, பாராட்டத்தக்க இந்திய அணுவிஞ்ஞான சாதனைகளின் பின்னணியில் சிறப்பாக தலைமைதாங்கி வழிநடத்தியவர் –அப்போது இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் உற்பத்திக் கழகத்தின் (DRDO) டைரக்டராகப் பணியாற்றிய, புகழ்பெற்ற மிஸைல்-டெக்னாலஜிஸ்ட்டான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். (We salute you, Sir.) அப்துல் கலாமையும், ஆர்.சிதம்பரம் போன்ற மற்ற அணுசக்தி விஞ்ஞானிகளையும், கூட ஒத்துழைத்த தரைப்படை பொறியியலாளர்களையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார் இந்தியப் பிரதமரான அட்டல் பிஹாரி வாஜ்பாயி. மேலும் அன்று மாலையே ’இந்தியா இப்போது முழுத்திறனுள்ள அணுஆயுத வல்லரசு’ என சத்தமாக அறிவித்து, உலகை, குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய உலகை மேலும் படபடக்கவைத்தார்.

அப்போது பிஜேபி-யின் தகவல்தொடர்பு அமைச்சர் பிரமோத் மகாஜன், இந்திய அரசின் செய்தித்தொடர்பாளராக வாஜ்பாயியால் நியமிக்கப்பட்டிருந்தார். மகாஜன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சாமர்த்தியமாகப் பேசும் திறனுள்ளவர். அணு ஆயுதசோதனைக்குப் பின்னான டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்தியா அணுஆயுதத் தடைகளுக்கெதிராக சோதனைகளை நடத்திவிட்டதே.. வல்லரசுகள் அங்கீகரிக்குமா, மேற்கத்திய நாடுகள், ஐநா போன்ற அமைப்புகள் பொருளாதாரத் தடையெல்லாம் விதிக்குமே.. என்ன செய்யப்போகிறீர்கள் என்றெல்லாம் கேள்விகள் இந்திய மற்றும் அந்நிய நிருபர்களிடமிருந்து பறந்துவந்தபோது, பிரமோத் மகாஜன் புன்சிரிப்புடன் அதனை அனாயாசமாக எதிர்கொண்டது நினைவில் இருக்கிறது. அவர் சொன்னது இதுதான்: யாருடைய அங்கீகரிப்பையும் இந்தியா வேண்டவில்லை. எங்களுக்கு அது தேவையுமில்லை. அறிவித்துவிட்டோம், நாங்கள் அணுஆயுத வல்லரசு என்று. புரியவேண்டியவர்களுக்கு இது நன்றாகப் புரியும் என்றார். இந்தியா பலதரப்பிலிருந்து கடும் விமரிசனம், தடைகளுக்கு ஆளாகுமே, எப்படிக் கையாள்வீர்கள் என ஒரு வடக்கத்திய நிருபர் ஹிந்தியில் துருவியதற்கு, மகாஜன் ஹிந்தியில் சொன்ன சுருக் பதில் தெளிவாக நினைவில் இருக்கிறது. ’கொஞ்ச நாட்களுக்கு எங்கும் சூடு, அனல் பறக்கும். அதன்பிறகு எல்லாம் குளிர்ந்துவிடும்! (thode samay ke baadh, sab tanda padjayega !). ஹிந்தி நிருபர்களுக்கு சேர்ந்து சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

நான் அப்போது கென்யாவின் தலைநகரான நைரோபியில் தூதரகப்பணியில் இருந்தேன். கென்யாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடான The Daily Nation –ல் அடுத்த நாள் இப்படித் தலைப்பு செய்தி வந்து கென்யர்களை அதிரவைத்தது. அப்போது 70000-க்கும் மேலாக அங்கிருந்த இந்திய தேசத்தவர்களைக் குதூகலிக்கவைத்தது: ”India explodes N-Bomb ! World in shock !”

**

சின்னப்பசங்க !

என்ன ஒரு திமிரு பாத்தீங்களா சார்?

திமிரா? நாம்பாக்கலையே.. எங்கே?

ரோட்டுல நடந்துவரும்போது அப்படி என்னத்தத்தான் பாத்துகிட்டு வர்றீங்க? இப்ப ஒரு பய, விருட்டுன்னு நமக்குள்ள ஸ்கூட்டரத் திருப்பி சீறிகிட்டுப் போறானே..ஒரு அடி வேகமா வந்திருந்தேன்னா, நா இடிபட்டு சாஞ்சிருப்பேன்!

சேச்சே.. சின்னப்பசங்க! கொஞ்சம் வேகமானவனுங்க. அவ்வளவுதான். ஆனா, அப்படில்லாம் இடிச்சுரமாட்டான்.

இடிச்சுரமாட்டானா? இடிச்சுட்டான்னா? சரி, நம்மள இடிச்சுத் தள்ளலன்னே வச்சிக்குவோம். போற வேகத்துல எங்கயாவது பள்ளத்துல இவன் விழுந்து கால கைய ஒடச்சிகிட்டான்னா என்ன செய்யறது? அறிவு வேணாம்.. ?

ஒன்னும் ஆகாது. அப்படியே ஆனாலும், 500 மீட்டருக்கு ஒரு ஆஸ்பத்திரி, கிளினிக்கு இருக்கு பெங்களூரிலே. போயி பேண்டேஜ் போட்டுகிட்டுப் போயிருவான்.

நிறுத்துங்க! பேண்டேஜ் டேப்புக்கும் எலெக்ட்ரிக் டேப்புக்கும் வித்தியாசம் தெரியுமா இவனுக்கு ?

ஓ..! அப்படியா சொல்றீங்க நீங்க..

பின்னே என்ன நா அப்பலேர்ந்து சொல்லிகிட்டு வர்றேன். நீங்க என்னத்த பாக்குறீங்க..என்னத்தப் புரிஞ்சிக்கிறீங்க..

அதுவா? .. பால்வண்ணம் பருவம் கண்டு.. வேல்வண்ணம் விழிகள் கண்டு.. மால்வண்ணம் நான் கண்டு .. வாடுகிறேன் ..

வாடிக் கெட்டுப்போங்க, இல்ல பாடிக் கெட்டுப்போங்க! ஒங்ககிட்டேல்லாம் பேசறதே வேஸ்ட்டு ..

**

திரைப்பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி

அந்த மாலைப்பொழுதில் நெட்டில் நியூஸ் வாசித்துக்கொண்டிருக்கையில், ’எம்.எஸ். ராஜேஸ்வரி மறைந்தார்’ என்பதில் கண்கள் ஓடியும், ’மறைந்தார்’ என்பதை ஏனோ மனம் தனக்குள் வாங்கிக்கொள்ளவில்லை. எம்.எஸ். ராஜேஸ்வரி என்று பார்த்தவுடனே

‘குவா குவா பாப்பா..அவ
குளிக்க காசு கேப்பா..!
அம்மா வந்து சாப்பிடச் சொன்னா
அழுது கொஞ்சம் பாப்பா..
குவா குவா பாப்பா.. அவ
குளிக்க காசு கேப்பா!

என்று நினைவுப் பக்கங்களிலிருந்து பாட ஆரம்பித்துவிட்டது மனது. ஹம் பண்ணிக்கொண்டிருக்கையில், இந்தப்பாடலின் வரிகள் இப்படியெல்லாமும் போகுமே என்பதும் அடுக்கடுக்காக நினைவுக்கு வந்து படுத்தியது:

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல
அதுல வந்த சண்டயில இவள நினைக்கல
அவசரமா அப்பா போன இடமும் தெரியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல
அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல ..

யாருமில்லா அனாதையா கடையில கிடந்தா – எங்க
அம்மாவுக்குப் பொண்ணா வந்து மடியில இருந்தா
ஆயிரந்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா?
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பா ஆகுமா..
அங்கே இங்கே கூட்டிப்போகும் அப்பா ஆகுமா..

குவா குவா பாப்பா.. அவ
குளிக்க காசு கேப்பா!

(மேற்சொன்ன பாடலை கண்ணதாசன் ’இரு வல்லவர்கள்’ (1966) படத்திற்காக எழுதினார். வேதாவின் இசையில், ராஜேஸ்வரியின் குரலில் வந்தது பாடல்). இப்படியெல்லாம் பாடி நம்மை உருக்கிப்போட்டவர்தான் எம் எஸ் ராஜேஸ்வரி. வெறும் திரைப்பாடகி அல்ல அவர். ஒரு ஸ்பெஷலிஸ்ட். குரலில் அந்த குழந்தைத்தனம், மென்மையை அவரைப்போல அனாயாசமாகக் கொண்டுவந்தவர் யாருமில்லை. தமிழ்த் திரை உலகம் புண்ணியம் செய்திருக்கவேண்டும், இப்படி ஒரு கலைஞர் நமக்கு வாய்த்ததற்கு. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆர்.சுதர்சனம், ஜி.ராமனாதன், விஸ்வனாதன் –ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், இளையராஜா போன்ற சிறந்த இசையமைப்பாளர்களுக்காக அவர் திரையில் பாட நேர்ந்ததால், காலத்தால் கரைக்கமுடியா இசைக்காவியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் பெயரைச் சொன்னதும் ’களத்தூர் கண்ணம்மா (1960)-வில் வரும் அந்தப் புகழ்பெற்ற பாட்டு நினைவுக்கு வாராதிருக்குமா? காட்சியில், அனாதைக் குழந்தைகள் முருகன் சிலைமுன் நின்று பாடுகின்றன. முன் வரிசையில் நிற்கும் சிறுவன் கமல் ஹாசனுக்குக் குரல் கொடுக்கிறார் ராஜேஸ்வரி :

‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே..
அம்மாவும் நீயே ..

என உருக்கத்துடன் ஆரம்பித்து..

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனசாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே
எங்களுக்கோர் அன்புசெய்ய யாருமில்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையே…

-என அப்பாவிக் குரலில் அரற்றுகிறார். அதே பாடலில் மேலும் ..

பூனை நாயும் கிளியும்கூட மனிதன் மடியிலே
பெற்ற பிள்ளைபோல நல்லுறவாய்க் கூடி வாழுதே..
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே..

என ஆச்சரியத்துடன் கடவுளைப் பார்த்துக் கேட்கிறார். எல்லாமே சுகித்திருக்கும் உலகில் எங்களுக்கு மட்டும் அன்பில்லாது போனதெப்படி? – என்கிற ஏக்க உணர்வை எழுப்பி, அந்தக் குழந்தையாக நம்மையும் தன் குரலால் மாற்றிக் கரைக்கிறார் ராஜேஸ்வரி. வாலி வரைந்த பாடலுக்கு ஆர்.சுதர்சனத்தின் இசை.

தன்னுடைய முதல் திரைப்பாடலை 12 –ஆவது வயதில் 1946-ல், ’விஜயலக்ஷ்மி’ என்கிற படத்தில் ஸோலாவாகப் பாடுகிறார் எம்.எஸ். ராஜேஸ்வரி. ‘மையல் மிக மீறுதே’ என்கிற பாடல். 1947-ல் இந்திய சுதந்திர வருடக் கொண்டாட்டமாக ஏவிஎம் வெளியிட்டது ‘நாம் இருவர்’ திரைப்படம். அதில் கவிஞர் கே.பி. காமாட்சியின் ‘மகான் காந்தி மகான்’ என்ற ஆர்.சுதர்சனத்தின் இசையிலமைந்த பாடலை குமாரி கமலாவிற்காகப் பிரமாதமாகப் பாடியிருந்தார் சிறுமியான ராஜேஸ்வரி. ’மஹ்ஹான்..காந்தி மஹான்..’ என அவர் ஆரம்பிக்கும் விதமே அலாதி. இவரது குரல்நயம், ஏற்ற இறக்கங்கள், பாடும் திறன் என கவனித்திருந்த இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனம்தான் சிறுமி ராஜேஸ்வரியை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகப்படுத்தியவர். ஏவிஎம் ஸ்டூடியோவில் ஆரம்பத்தில் சொற்ப மாத சம்பளத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் ராஜேஸ்வரி. ஏவிஎம்-மின் 1940-1950 வருடங்களிலான படங்களில் ஒரு ஆஸ்தானப் பாடகி போல் ஸோலோ பாடல்களும், டி.எஸ். பகவதி போன்றோரோடு இதர பாடல்களையும் பாடியிருக்கிறார். ராமராஜ்யம், வேதாள உலகம், பராசக்தி, நாம் இருவர், பெண், வாழ்க்கை போன்ற படங்கள் இவை. 1948-ல் வெளியான ’வேதாள உலகம்’ படத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் ‘ஓடிவிளையாடு பாப்பா’வை பாடகி டி.எஸ்.பகவதியுடன் இணைந்து வழங்கியிருக்கிறார். குழந்தைப்பாடல்களுக்காகப் பொதுவாகப்பேசப்பட்டாலும், அருமையான டூயட்டுகளையும், ஸோலோ பாடல்களையும் தமிழ்த் திரையுலகிற்கு அளித்தவர் ராஜேஸ்வரி.

1952 படமான ’பராசக்தி’யில் எம்.எஸ். ராஜேஸ்வரி இரண்டு இனிமையான பாடல்களை ரசிகர்களுக்குத் தந்து ஆச்சரியப்படுத்தினார். தஞ்சை ராமையா தாஸின் காதல் பாடலுக்கு ஆர்.சுதர்ஸனம் ரம்யமாக இசை அமைத்துள்ளார். ஹீரோயின் பண்டரிபாய்க்காகக் இனிமையாக இப்படிப் பாடுகிறார்:

புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க..
இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே.. அந்த
மர்மத்தை சொல்லிவிட்டுப் போங்க..
மர்மத்தை சொல்லிவிட்டுப் போங்க..!

அடுத்தது- குமாரி கமலா நாட்டியத்துக்காக அமைந்துள்ள இந்தப் பாடல். நடிகரும் கவிஞருமான கே.பி. காமாட்சி
எழுதியது.

ஓ.. ரசிக்கும் சீமானே..!
ஓ.. ரசிக்கும் சீமானே.. வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்!
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..!

இந்தப்பாடலின் கடைசி பாராவை அட்டகாசமாக எழுதியிருக்கிறார் கவிஞர் காமாட்சி. அதனை அனாயாசமாகப் பாடித்தள்ளியவர் ராஜேஸ்வரி:

வானுலகம் போற்றுவதை நாடி.. இன்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி – பெண்களின்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப்போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம் !
தினம் நினைக்கும் பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…ரசிக்கும் சீமானே ..!

-அழகான பாடலுக்கு அருமையாகத் துணைபோகிறது கமலாவின் நடனம். சுகபோக இடத்தில் எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு நெளியும் இளைஞனாக சிவாஜி கணேசன்! ஆடியோ, வீடியோ இரண்டையும் ரசிக்கமுடியுமாறு அமைந்த அபூர்வப்பாடல்.

1954-ல் வெளிவந்த சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி ஆகியோர் நடித்த ’தூக்குத்தூக்கி’ படத்தில் ராஜேஸ்வரி டிஎம் சௌந்திரராஜனுடன் பாடிய டூயட் அந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தம். மருதகாசியின் மயக்கும் எழுத்துக்கு ஜி.ராமனாதனின் இதமான இசை. பீம்ப்ளாஸ் ராகம். ஊடலால் தாக்கப்பட்ட நாயக, நாயகிக்கிடையே இழைகிறது பாடல் :

கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?
வேறெதிலே உந்தன் கவனம்..
வேறெதிலே உந்தன் கவனம்?’

அதில் ஓரிடத்தில் லலிதாவுக்கான குரலில் நாயகனை சீண்டுவார் ராஜேஸ்வரி:

உண்மையில் என்மேல் உமக்கன்பு.. ஆ..ஆ..ஆ..
உண்மையில் என்மேல் உமக்கன்பு
உண்டென்றால்… இல்லை இனி வம்பு..!

சிவாஜிக்காக பதில்கொடுக்கும் இளம் டி.எம்.எஸ்:

கண்ணில் தெரியுதே குறும்பு..
கனிமொழியே நீ எனை விரும்பு !

நினைவிலிருந்து நீங்காத டூயட். அந்தக்காலப் பாடலென்றால் அந்தக்காலப் பாடல்தான் !

1955-ல் வெளியான ’டவுன்பஸ்’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் அஞ்சலிதேவிக்காக ராஜேஸ்வரி பாடிய ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே’ என்கிற கவிஞர் கா.மு.ஷெரீஃபின் பாடல் ரசிகர்களின் மனதை நெகிழவைத்தது.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் தாலாட்டுக்கு அருமையாகப் பொருந்திவரும் எனத் திரையுலகில் நிரூபித்த இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி. இவர்களின் இனிய இசையில், எம்.ஜி.ஆர். சாவித்திரி நடித்த மகாதேவி (1957) படத்தில் ‘காக்கா காக்கா மைகொண்டா.. காடைக்குருவி மலர் கொண்டா.. பசுவே பசுவே பால் கொண்டா, பச்சைக்கிளியே பழம் கொண்டா..’ என்கிற மருதகாசியின் பாடலைப் பாடி, புகழ்பெறவைத்தார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. கண்ணதாசன் தயாரித்து பாடலெழுதிய ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் இன்னொரு தாலாட்டுப்பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு விஸ்வநாதன் –ராமமூர்த்தியின் இசையில் அமைந்தது. ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்..மணல்கூட ஒருநாளில் பொன்னாகலாம்’ எனச் செல்லும் வரிகளில் கேட்பவருக்கு உத்வேகம் கொடுத்த இந்தப்பாடல் பிரபலமானதோடு, சாகித்ய அகாடமியால் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறப்பையும் பெற்று அசத்தியது. இவரது தாலாட்டுப்பாடல்கள் புகழ்பெறுவதைக் கவனித்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், 1958 படமான ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிற படத்தில் கே.முத்துசாமி எழுதிய இந்தப் பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரிக்குக் கொடுத்தார்:

மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா..
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்குப் பாரமா ?

எனக் கேட்டு, கேட்பவர்களை மெல்ல உருகவிட்டார் ராஜேஸ்வரி. உடனடி ஹிட்டானது இந்தப் பாடலும்.

1960-ல் ராஜேஸ்வரி ஜோராக ஜொலித்துக்கொண்டிருந்தார். அந்த வருடத்தில் அப்படிப்பட்ட படங்கள், பாட்டுகள். படிக்காத மேதை படத்தில், தான் பள்ளிக்குப்போய்ப் படிக்காதுபோய்விட்டோமே என நொந்துபோய்க் கிடக்கும் சிவாஜி கணேசனை சௌகார் ஜானகி தேற்றுவதாக வரும் சீனுக்கான பாடலில் அசத்திவிட்டார் ராஜேஸ்வரி:

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

-என்று ஆரம்பிக்கும் கண்ணதாசன் பாடல் இப்படியெல்லாம் ராஜேஸ்வரியின் குரலில் கேள்வி கேட்கும்:

கல்வியில்லாக் கன்றுகளும் தாயை அழைக்கும் – காட்டில்
கவரிமானும் பெண்களைப்போல் மானத்தைக் காக்கும்
பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே -நெஞ்சில்
பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா.. ?

என்று நம் உணர்வை மீட்டிச்செல்லும் பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசை இழைத்துள்ளார்.

அறுபதுகளிலிருந்து ராஜேஸ்வரிக்கு பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்களுக்கான பாடல்களே வாய்த்தன. 1960 படமான களத்தூர் கண்ணம்மாவில் கமலுக்காகப் பாடிய ’அம்மாவும் நீயே’ என்கிற புகழ்பெற்ற பாடலுக்குப்பின், அதே வருடத்தில் வெளியான ’கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் மற்றொரு குழந்தைப்பாடலையும் தன் குரலினால் பிரபலமாக்கினார் ராஜேஸ்வரி. அது ’சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்.. இரவில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்!’ என வரும் மருதகாசியின் பாடல். அடுத்த வருடமே அவர் பாடிய இன்னொரு குழந்தைப்பாடல் புகழ்வெளிச்சத்தை சந்தித்தது. அதுவும் மருதகாசி இயற்றியது – கே.வி. மகாதேவன் இசையில் வந்தது:

மியாவ் மியாவ் பூனைக்குட்டி
வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி – அவர்
அழகைச் சொல்லடி செல்லக்குட்டி ..
மியாவ்.. மியாவ்..

என மியாவிவிட்டார் எம்.எஸ்.ராஜேஸ்வரி. 1961-ல் வெளிவந்த ‘குமுதம்’ படத்தில் கண் தெரியா அப்பாவி சௌகார் ஜானகிக்காக இப்படிக் குரல் கொடுத்திருக்கிறார்.

1965-ல் வெளிவந்த ’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வனாதனின் இசையில் வெளியான ’கோழி ஒரு கூட்டிலே.. சேவல் ஒரு கூட்டிலே.. கோழிக்குஞ்சு ரெண்டு மட்டும் அன்பில்லாத காட்டிலே..’ எனும் பாடலுக்கு குட்டிபத்மினிக்காக சோகமாகக் குரல் கொடுத்திருக்கிறார் ராஜேஸ்வரி. பாடல் ரசிகர்களின் மனதில் உடனேபோய் உட்கார்ந்துகொண்டது. குழந்தை நட்சத்திரத்திற்கான பாடலென்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரிதான் என்கிற அளவுக்கு அப்போது பேர் வாங்கிவிட்டிருந்தார் அவர். பேபி ஷாலினிக்காக நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். இப்படி பல்வேறு பாடல்கள் 1979 வரை. அதற்குப்பின் அவருக்கு வாய்ப்புகள் வராதிருந்தன.

வெகுகால இடைவெளிக்குப்பின் எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலை ரசிகர்களுக்காகத் திரைக்கு மீட்டுவந்த பெருமை இளையராஜாவையே சாரும். 1989 –ல் வெளியான, கமல் ஹாசனின் மிகச்சிறந்த திரைச்சித்திரங்களில் ஒன்றான ’நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ என்ற புலமைப்பித்தனின் பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியும் கே.ஜமுனா ராணியும் பாட, அருமையாக இசைப்படுத்தியிருந்தார் இளையராஜா.

மதுரை சடகோபன் ராஜேஸ்வரி – எம்.எஸ்.ராஜேஸ்வரி தமிழ் ரசிகர்களிடையே இவ்வளவு புகழ்பெற்றிருந்தும், சமீபத்தில் அவர் தன் 87-ஆவது வயதில் சென்னையில் மறைந்தபோது தமிழ்த் திரையுலகத்திலிருந்து யாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று அவரது மகன் ராஜ் வெங்கடேஷ் சொன்னதாக விகடனில் படித்தேன். (ட்விட்டரில் அஞ்சலி சொன்ன கமல் ஹாசனும், பின்னால் நினைவு கூர்ந்து பாராட்டிய பாடகிகள் பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இதில் விதிவிலக்கு). ’தமிழ்த் திரை உலகை வெகுவாக நேசித்தார் என் அம்மா. அங்கிருந்து யாராவது வந்து அஞ்சலி செலுத்தினால்தான் அவரது ஆன்மா சாந்தியடையும். அதற்காகக் காத்திருக்கிறோம்..’ என அவர் மகன் சொன்னதாகப் படித்தபோது மனதை என்னவோ செய்தது. 40 வருடங்களுக்கு மேலாகத் திரையுலகில் இணைந்திருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை, உணர்ச்சிக்குரலில் ஒலிக்கவிட்டு ரசிக உள்ளங்களைக் கொள்ளைகொண்ட மனுஷிக்கு, நேரில் சென்று அஞ்சலி செலுத்த சென்னைப் பட உலகில் யாரும் இல்லையா? என்ன ஒரு விசித்திர உலகமடா இது.

**