CSK ? No, Chennai Super Flops !

சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ மறந்துவிடலாம்.

மிச்சமிருக்கும் அணிகளிடையே நடக்கவிருக்கும் கடும்போட்டிகளை இனி,  ‘ஆராம்ஸே’ உட்கார்ந்து ரசிக்கலாம். சாதிப்பவர்களைக் கொண்டாடலாம்! சென்னை அணிக்காக இரவு பகலென உருகிய, முணகிய, மனதுக்குள் கிரிக்கெட் ஆடிய  சிஎஸ்கே ரசிகர்களே.. துடித்தது, துவண்டது போதும். கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டை ஆராதியுங்கள், ஆனந்தியுங்கள். இனிவரும் IPL போட்டிகளில் உயிர்த்துடிப்புடன் யார் யார் விளையாடுகிறார்கள் என pure cricketing pleasure-க்காகப் பார்த்து மகிழுங்கள். You deserve better things..

ஏதோ வெறுப்பில்,  அலுப்பில், சொரணை ஏதுமில்லாமல், புதிய வீரர்களை, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களை, இதுகாறும் மைதானத்துக்குள் டவல், ட்ரிங்க்ஸ் எடுத்துவந்தவர்களை, ஒரே மேட்ச்சில் உள்ளே தள்ளிப் பதறவைத்து அணியையும் வீரர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடப் பார்த்தாரா மஹீந்தர் சிங் தோனி? அதாவது சென்னையின் ‘தல’? இவரைப்போய் ஓவராக ’போற்றி போற்றி’ எனப் பாடி, தலையில் தூக்கிவைத்து ஆடி – கொண்டிருந்த தமிழர்களுக்கு இது தேவைதான். தோல்வி எதிர்வந்து முட்டி மோதி சாய்த்தபின், கீழேபோட்டு மிதித்தபின் குறை சொல்லி, குற்றம்சாட்டிப் பிரயோஜனம் இல்லை. தோனியின் ‘ஆட்டம்’  ஆட்டம்கண்டுவிடவில்லை. முற்றிலுமாக முடிந்துவிட்டது. ரோஹித் ஆடாத, கேப்டனாக இல்லாத மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 30 ரன்களில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்தது- கேப்டன் தோனி உட்பட- என்பது, ’கண்முன்னே தெரிந்தது, தெரியாதது’ என எல்லாவற்றையும் சேர்த்தே சொல்கிறது. விளக்கவேண்டியதில்லை.

2019-ல், உலக்கோப்பைத் தோல்விக்கப்புறம் உடனடியாக ஓய்வை அறிவித்திருக்கவேண்டும் தோனி. வயசாகிவிட்டது என்பது அப்போதே ஸ்க்ரீனில் தெரிந்ததே. செய்யமாட்டாரே.. ஒரு வருடத்துக்கு ஆடாமல் ஆறப்போட்டு, மற்றவர்களைத் தன் ரிடையர்மெண்ட் பற்றிப் பேசவைத்து, கேட்டு மகிழ்ந்து, முடிவேதும் எடுக்காமலும் காலம் கடத்துவதில் ஒரு கர்வம். ’தல’க்கனம். தனி சுகம். கூடவே நிறைய ’டைமும்’ கிடைத்தது அல்லவா ‘தல’க்கு. எதுக்கு? விதவிதமான விளம்பரப்படங்களில் ஆனந்தமாக நடித்து, கூவிக்கூவி சாமான்களை விற்க.  விளம்பர உலகிலும் நான்தான் சூப்பர்ஸ்டார் என வணிக உலகிற்குக் ’காண்பிக்க’வேண்டாமா? இதுவரை சேர்த்த சொத்தும் போதாதே. இன்னும்.. இன்னும்..

ஒருகாலத்தில்.. ஒரு காலத்தில் இந்தியாவுக்காக நன்றாக ஆடியவர். இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளுக்குக் காரணமானவர். மஞ்சள் சட்டைகளைப் பெரும் அணியாக ஐபிஎல் -இல் நிலைநாட்ட ஒத்துழைத்தவர். நிலைகுலைந்ததற்கும் அவரேதான் பிரதான காரணமெனினும்….

போகட்டும் விடுங்கள். ஆகிற காரியத்தைப் பாருங்கள்.

**

’ழ’ கவிதைகள் அனைத்தும், ஒரே புத்தகமாக

தமிழின் புதுக்கவிதைகளுக்காக எனப் பிரத்யேகமாக கவிஞர் ஆத்மாநாம் அவர்களால் மே 1978-ல் துவக்கப்பட்டு, விட்டு விட்டு அக்டோபர் 1988 வரை வெளிவந்தது ‘ழ’ சிற்றிதழ். மொத்தம் 28 இதழ்கள் ஒரு காலகட்டத்தின் தரமான புதுக்கவிதைகள் சிலவற்றை அடையாளம் காட்டின. நவீனத் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், ஆத்மாநாமின் 1984 மறைவுக்குப்பின்,  ‘ழ’ வின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் கண்டுகொள்ளாத (ஒருவகையில் அது நல்லதுதான்) புதுக்கவிதைகளோடு, அம்ரீதா ப்ரீத்தம் போன்ற பிறமொழிக்கவிஞர்களின் படைப்புகளும்,  புதுக்கவிதையின் வளர்ச்சி தொடர்பான குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், ஞானக்கூத்தன் ஆசிரியராயிருந்த ‘ழ’ வில் வெளிவந்தன 1984-லிருந்து 1988 வரை.

கவிதைகளில் உள்ளார்ந்த ஆர்வம் காட்டுவோருக்கு:  

‘ழ’ இதழ்களில் ஆத்மாநாம் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதிவந்த ராஜகோபாலனிடமிருந்து பழைய அச்சு இதழ்களைப் பெற்று, அமேஸானில் கிண்டில் புத்தகங்களாக ஏற்றி வெளியிட்டுவந்தார் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன். ஒவ்வொரு இதழாக, தனித்தனியாக ’ழ’ கிண்டிலில் கிடைத்துவந்தது. இலவசத் தரவிறக்கம் சில  செய்திருக்கிறேன். வாங்கியுமிருக்கிறேன். இப்போது, ‘ழ’வின் இணையாசிரியரான கவிஞர் ராஜகோபாலன், விமலாதித்த மாமல்லனின் உதவியுடன் ‘ழ’ இதழ்கள் அனைத்தையும் ஒரே கிண்டில் புத்தகமாக அமேஸானில் வழங்கியிருக்கிறார். விலை ரூ.200. கவிதைகள், கவிதை குறித்த படைப்பாளிகளின் கட்டுரைகள் என 500 பக்கங்களுக்கும் மேலாக விரிகிறது இந்நூல்.

எத்தனையோ வெட்டிச் செலவுகளுக்குப் பணம் காணாமற்போய்விடுகிறது ஒவ்வொரு மாதமும் நமக்கு. இஷ்டமுள்ளோர் இதனை வாங்கிப் படிக்கலாம். என்ன.. ஒரு புத்தகம் ரூ.200.. ஆ! – என வியர்த்துக்கொட்டும் சிலருக்காகவும், மற்ற கவிதாப்ரியர்களுக்காகவும் சலுகையாக,  21-10-2020 (பகல் 12:30)-லிருந்து 23-10-20 (பகல் 11:59) வரை இலவசமாகக் கிடைக்கிறது  ‘ழ’ கிண்டில் புத்தகம். கிடைக்கிறதே என்று வெறுமனே தரவிறக்கம் செய்துவிட்டு, ஆயிரம் வேலைகளில் மும்முரமாகி மறந்துவிடாமல், தனியே உட்கார்ந்து கொஞ்சம் வாசித்துப்பாருங்கள்.  ஏதாவது வெளிச்சம் கிட்டக்கூடும்…

சரி, ஓவராக விளக்கியாயிற்று. இரண்டு  ‘ழ’ கவிதைகள் :

மேசை நடராசர்
-ஞானக்கூத்தன்

மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்களல்ல. கிங்கரர் அல்ல.

எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கருத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப்படுத்துக்கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுதுபார்க்க
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக்கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும்
சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்.

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறிவிடாமல்
ஆடிக்கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்

**

பயணம்
-சுரேசன்

பலரும்
கூட்டமாய் முடமாகிவிடுகிறீர்கள்.
ஏதோ
குறிப்பிட்ட ஒரு கணத்தில்
நான் மட்டும் சிலரோடு
ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு கணத்தையும்
சந்தித்துக்கொண்டே

படிமம் எனக்கென்று
எதுவும் தேவையில்லை
இதுதான் நானென்று
எதுவும் முடிவில்லை

இது
இன்று இனிப்பது
நாளை கசக்கும்
இயல்பான வாழ்க்கை

**

சூப்பர் கிங்ஸின் சூப்பர்-டூப்பர் தோல்விகள் !

அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 2020-இல் அதோகதியாகிவிடும் போலிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK). முதல் 7 போட்டிகளில் 5-ல் காலி! பஞ்சாபோடு கைகோர்த்து பாய்ண்ட் லிஸ்ட்டில் கடைசி வரிசையில் உட்காந்திருக்கிறது. 2010-ல் இப்படி ஒருமுறை நடந்தது; ஆனால் அப்போது இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக ஆடி, கோப்பையை வென்றது! ஆனால் இப்போது? நாக்-அவுட் நுழையவே ததிங்கினத்தோம் போடுகிறது தோனியின் ’சூப்பர்’ டீம்..

Dhoni with CSK Boss Srinivasan

ஏன் இந்த அவல நிலை? முக்கிய காரணிகளில் கேப்டன் தோனியும் ஒருவர்! அவரது வியூகங்கள், பேட்டிங் ப்ளான் ஒன்றும் இதுவரை தேறவில்லை. தோனியின் தனிப்பட்ட பேட்டிங்கும் முன்புபோல் கைகொடுக்கவில்லை. போதாக்குறைக்கு டெத்-ஓவர்களில்கூட கட்டையைப்போட்டு  கவிழ்த்துவிட்ட ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ்! ஆட்ட வியூகங்களைப் பொறுத்தவரை, சூப்பர் கிங்ஸ் தன் பழைய டெம்ப்ளேட்டையே திருப்பித் திருப்பி உபயோகிக்கப்பது சூப்பர் முட்டாள்தனங்களில் ஒன்று. அதாவது மிடில் ஓவர்களில் தூங்கி வழிந்துவிட்டு, டெத்-ஓவர்களில் (17-20) போட்டுத் தாக்கி இலக்கை அடையலாம் என மந்தமாக இயங்குவது. இந்த ஃபார்முலா அமீரகத்துப் பிட்ச்சுக்களில் சுத்தமாக எடுபடவில்லை. 16-ஆவது ஓவருக்குப் பின் ஆட வரும் தோனியால் மேட்ச்சை finish செய்ய முடியவில்லை. ஓடி ரன்னெடுக்கையில், ஐயாவுக்கு மூச்சு வாங்குகிறது, வேர்த்து வேர்த்துக்கொட்டுகிறது என்பது நன்றாகவே தெரிகிறது. மேலும், மேட்ச் கைநழுவிப்போனபின்,  கடைசி- ஓவர் சிக்ஸர்களினால் யாருக்கு லாபம்? சீன் போட்டு ஐபிஎல் -ஐ ஜெயிக்கமுடியுமா என்ன!

சரி, என்னென்ன மாற்றங்கள் வேண்டும் உடனடியாக? சூப்பர் கிங்ஸின் முதல் மூன்று பேட்ஸ்மன்கள் – ஷேன் வாட்ஸன், ஃபாஃப் டூப்ளஸீ (Faf du Plessis), அம்பதி ராயுடு – just OK. ஃபார்மில் இருப்பவர்கள், ஸ்கோர் செய்பவர்கள். மாற்றம் இங்கே தேவையில்லை. செய்யவேண்டிய மாறுதல்களில் முக்கியமானது ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன் (Sam Curran), ரவீந்திர ஜடேஜா இருவரையும் பேட்டிங் ஆர்டரில் முன்னே கொண்டுவந்து ஆடவைக்கவேண்டும்.  4, 5 எண் வரிசையில் அவர்கள் வரவேண்டும்.  ஆவேசமாக ஆடும் இவர்களுக்கு ஏழெட்டு ஓவராவது கிடைத்தால்தான் அணியின் ஸ்கோர் எகிறும். இருவரும் அபுதாபி போன்ற பெரிய மைதானத்திலும் பௌண்டரி, சிக்ஸ் பறக்கவிடும் சாதுர்யம், திறனுடையவர்கள். விக்கெட்டுகளுக்கிடையே வேகமாக ஓடி ரன் எடுப்பவர்கள். அவர்களை 17-ஆவது ஓவரில் கொண்டுவந்து அழுத்தத்தை அதிகரிப்பதைப்போன்ற முட்டாள்தனத்திலிருந்து, சிஎஸ்கே முதலில் வெளியே வரவேண்டும். கர்ரன், ஜடேஜாவிற்கு அடுத்தாற்போல், தோனி 6-ல் இறங்கி ஆக்ரோஷம் காட்டவேண்டும். குறைந்தபட்சம் பந்துகளை வேஸ்ட் செய்யாது ஆடவேண்டும். இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக, போன ஐபிஎல் மேட்ச்சில் சென்னைக்காக ஆடிய ஜெகதீசன் நன்றாகத்தான் ஆடினார். தொடரலாம்.    

இன்னொன்று தென்னாஃபிரிக்க லெக்-ஸ்பின்/கூக்ளி பௌலர் இம்ரான் தாஹிர் (Imran Tahir) ஆடுகளத்தில் இறக்கப்படவேண்டும். 2019 ஐபிஎல்-இல் அதிக பட்ச விக்கெட் வீழ்த்திய வீரர், இந்த ஐபிஎல்-இல் இன்னும் ஒரு மேட்ச்சில்கூட சேர்க்கப்படவில்லை. பெஞ்சில் உட்கார்ந்து பஜியா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இதுவா தோனி-ஃப்ளெமிங்கின்  மேட்ச் வியூகம்? சிஎஸ்கே boss ஸ்ரீனிவாசனுக்கு BP எகிறாமல் வேறென்ன செய்யும்!

இப்படிச் சில மாறுதல்களுடன் இறங்கி, உத்வேகத்துடன் ஆடினால் சிஎஸ்கே இந்த ஐபிஎல்-இல் தன் கௌரவத்தை ஓரளாவாவது காப்பாற்றிக்கொள்ளமுடியும். இல்லையென்றால், தலையில் காசித்துண்டைப் போட்டுக்கொண்டு தோனி  திரும்பிடவேண்டியதுதான்!

**

மீண்டும் ‘ழ’ வுக்குள் !

ஆத்மாநாமின் மறைவுக்குப் பின், ஞானக்கூத்தன் ஆசிரியரான  ‘ழ’ இதழ் ஒன்று வாங்கிப் படித்தேன்.  ரசித்தேன். ஒன்றிரண்டை வாசகர்களுக்காகப் பகிர்கிறேன்:

இடையில் ஒரு தரம்

- ஷாஅ


இடையில் ஒரு தரம்
பேனா உதறியதும்
பச்சென்று தரையில்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகளை
சிதையாமல் எடுத்து உரிய
இடத்தில் பொருத்திவைக்க
முடியாமல் போவதால்
கேட்பாரற்றுக் கிடக்கின்றன
இனிவரும் நாளில்
போவோர் வருவோர்
கால்பட்டுக் கலைந்தும்
தூசிபடிந்து மறைந்தும்
கழுவிவிடும் நீரில் கரைந்தும்
அவை இல்லாமல் போக
வாய்ப்புண்டு
வார்த்தைகள் கீழே
விழுந்ததால் காலியான
இடம் நீங்கலாக
தொடர்ந்து எழுதி முடித்தாலும்
அங்கு கண்டவர் அமர்ந்து
ஊர் வம்பு பேசலாம்
சண்டை சச்சரவுகளின்
மூலஸ்தானம் ஆக்கிவிடலாம்
ஏன், பொய்யானதோர்
உலகமே புனைந்திடலாம்
யார் கண்டார்
எனவே ஆரம்பம் முதல்
கடைசி வரை
முழுமையாகப் படிக்கும்
இயல்புடைய எல்லோரையும்
கேட்டுக்கொள்கிறேன்
எந்த தேசமானாலும் சரி
எந்த மொழியானாலும் சரி
அடுத்த கிரகத்துக்கு
எடுத்து செல்வதானாலும் சரி
நழுவிப்போன வார்த்தைகளையும்
கவனமாய் சேர்த்துப்
படியுங்களென்று.

**

ஊமை எழுத்து

-நகுலன்


பணக்காரர்களுடன்
பழகத் தெரிந்திருக்க
வேண்டும்
அவர்கள் பணக்காரர்கள் மாத்திரம்
இல்லை
என்ற அடிப்படையில்
இதைப் போல்
ஒவ்வொரு நிலையில்
இருப்பவருடன்
அவர் அந்த நிலையில் மாத்திரம்
இல்லை என்றவாறு.
இது பலரால் இயலவில்லை
என்பதனால் தான்..
”என்பதனால் தான் ?”
ஒன்றுமில்லை.

**

திரண்டு வருகிறது ஓர் அலை
வந்து அது போனதும்
நான் இருக்கமாட்டேன்

- காளி-தாஸ்

**

சொர்க்கவாசி

- கோபிகிருஷ்ணன்


யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது
காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது
புத்தர் வந்தார்
உயிர்வதை ஒழிந்தது
சாக்ரடீஸ் வந்தார்
மூடச்சிந்தனை ஒழிந்தது
மார்க்ஸ் வந்தார்
ஆதிக்க வர்க்கம் ஒழிந்தது
டால்ஸ்டாய் வந்தார்
வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது
லிங்கன் வந்தார்
அடிமைத்தனம் ஒழிந்தது
பெரியார் வந்தார்
அறிவிலித்தனம் ஒழிந்தது
வேறு யாரோ வந்தார்
தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது
உல்லாசமாக இருக்கிறேன்
காதில் கடுக்கண் போட்டுக்கொண்டு
யார் வருகைக்கோ காத்துக்கொண்டு

**