விராட் கோஹ்லிக்கு சுக்கிர திசை நடந்துகொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை (ஜோஸ்ய விஷயத்தில் ஞானசூன்யமானவர்கள் இதை அலட்சியம் செய்க!). ஸ்ரீலங்காவில் கிரிக்கெட் தொடரை சில மாதங்களுக்கு முன் போராடி வென்றது அவரது தலைமையில் அங்கு சென்ற இந்திய அணி. இப்போது இந்தியாவில் விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணி கடந்த 9 வருடங்களாக வெளிநாட்டில் எந்த டெஸ்ட் தொடரிலும் தோற்றதில்லை எனும் பெருமைகொண்டது. 15 தொடர்களை வரிசையாக அந்நிய மண்ணில் வென்ற உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணி. ஒருநாள் தொடரிலும், டி-20 தொடரிலும் சமீபத்தில் இந்தியாவை ஒரு சாத்து சாத்தி வென்றவர்கள். அத்தகைய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதென்பது எளிதான காரியமில்லை. பெரும் உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரில் ஆடிவரும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பாராட்டுக்குரியது.
மொஹாலியிலும், நாக்பூரிலும் பிட்ச் ஸ்பின்னுக்குத் துணைபோனதுதான் இந்திய வெற்றிக்குக் காரணம் என்பார்கள் எதற்கெடுத்தாலும் புலம்புபவர்கள். சிலரிருக்கும் மனநிலையோ வேறானது. அவர்களால் இந்தியா எப்படி விளையாடி ஜெயித்தாலும், இந்திய வெற்றியை ஜீரணிக்க இயலாது. குறைசொல்லிப் பழக்கமே தவிர, பாராட்டிப் பழக்கமில்லை. தொலையட்டும். எந்த ஒரு கிரிக்கெட் தேசமும் தன் அணியின் வலிமையை கருத்தில்கொண்டு, அதற்குச் சாதகமாகத்தான் பிட்ச்சைத் தயார் செய்யும். இதில் தவறேதுமில்லை. சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும், முறையே அவர்களது ஹோம் பிட்ச்சுகளில் தோனியின் தலைமையிலான இந்திய அணியை அடித்துத் துவம்சம் செய்தார்கள்.தோய்த்துத் தொங்கவிட்டார்கள். அப்போது இந்திய பத்திரிக்கைக்காரர்களோ,டி.வி.சேனல்களோ, ஏன் இந்திய அணியினரோகூட பிட்ச்கள் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பௌலர்களுக்கு சாதகமானவை, அதனால்தான் அந்த அணிகள் வென்றன என்று கூறவில்லை. ஒரு தரமான சர்வதேச அணி என்பது எந்த நிலையிலும், எந்த நாட்டின் மைதானத்திலும், நிலைமைக்கேற்பத் தங்களது ஆட்டத்தைச் சரிசெய்து விளையாடும் திறமை வாய்ந்த வீரர்களைப் பெற்றிருக்கவேண்டும். திறமையாக, முனைப்புடன் விளையாடினால் வெற்றி அல்லது டிரா. தடுமாறித் தடவினால், தோல்வி அல்லது படுதோல்வி –இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளவேண்டியதுதான். இந்தியா உட்பட எந்த சர்வதேச அணிக்கும் பொருந்தும் இது.
இந்தத் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதன்மையான பௌலராகத் திகழ்கிறார். 15 முறை, 5-விக்கெட்டுகளை ஒரு இன்னிங்க்ஸில் வீழ்த்துவதென்பது ஸ்பின்–கலையில் தேர்ச்சிபெற்ற பௌலர் ஒருவரால் மட்டுமே முடியும். அஷ்வின் தேர்ச்சிபெற்று வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. கடந்த மாதங்களில் அவரது கடும் உழைப்பு இந்தியாவின் மகத்தான வெற்றியில்போய் முடிந்திருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்தே, விராட் கோஹ்லி அஷ்வினைப் புகழ்ந்திருக்கிறார். அஷ்வினுடன் சேர்ந்து சிறப்பாகப் பந்துவீசிவரும் ஜடேஜா, மிஷ்ரா ஆகியோரது பங்களிப்பும் சிறப்பானது.
வெற்றிக்கு இடையிலேயும் இந்திய அணி கவலைப்படவேண்டிய நிலையில் இருப்பது, குழப்பிவரும் அவர்காளில் சிலரின் பேட்டிங்கினால்தான். முரளி விஜய், புஜாரா – இருவர் மட்டுமே திறமைகாட்டி, முனைப்புடன் விளையாடுகிறார்கள். ஷிகர் தவண்(Shikar Dhawan) கொஞ்சம் பரவாயில்லை. மற்றவர்கள் இடைவிடாது தடவிவருவது அணிக்கு நல்லதல்ல. வெளிநாடுகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் நம்பகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்–ஆன அஜின்க்யா ரஹானே இந்தத் தொடரில் இதுவரை நிலைத்து ஆடமுடியாமல்போனது ஏமாற்றமே. கோஹ்லியும், ரோஹித் ஷர்மாவும் ஏதோ மைதானத்துக்குள் வந்துபோகவேண்டுமே என வருவது போல் இருக்கிறது. வருகிறார்கள். போகிறார்கள்.
அடுத்த மேட்ச் நடக்கவிருப்பது டெல்லியில் – டிசம்பரின் விறைக்கவைக்கும் குளிரில். தொடரை வென்றுவிட்டோம் என்கிற தலைக்கனத்தோடு அந்த மைதானத்தில் இறங்கினால், இந்தியர்களுக்குச் செம்மையான அடிவிழ வாய்ப்பிருக்கிறது. 9 வருஷத்தில் முதன்முறையாக வெளிநாட்டுத்தொடரை இழந்துவிட்டோமே என்கிற பதற்றத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கர்கள், டெல்லியில் இந்தியர்களின் வருகைக்காகத் தயாராக இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சுக்கு இங்கே வேலையிருக்கிறது. டெல்லியின் பிட்ச் வேறு, டெல்லி சொல்லப்போகும் கதையும் வேறாக இருக்கலாம்.
**