கிரிக்கெட் தயார்நிலை: காயம் செய்யும் மாயம் !

ஆஸ்திரேலியாவுக்கெதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர் இன்று (24-2-19) விசாகப்பட்டினத்தில்  துவங்குகிறது. முதலில் இரண்டு டி-20 போட்டிகளும், பிறகு ஐந்து  ஒரு-நாள் போட்டிகளும். இவைகளின் மூலம், நாட்டின் வெவ்வேறு அணிகளிலிருந்து முக்கிய வீரர்களை சுழற்சிமுறையில் விளையாடவிட்டு  அவர்களது பேட்டிங் அல்லது பௌலிங் ஃபார்மை (form) அறிய முயற்சி செய்கிறது இந்திய கிரிக்கெட் போர்டு.
இடுப்பு, முதுகுப் பிடிப்பு என ட்ரீட்மெண்ட்டில் இருந்து சமீபத்தில் வெளிவந்த இந்தியாவின் பிரதான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் முதுகில் வலி என்றதால், அணியிலிருந்து ட்ரீட்மெண்ட்/ஓய்வுக்கென விடுவிக்கப்பட்டுள்ளார். போதிய ஓய்வு, சரியான ட்ரீட்மெண்ட் பெற்று உலகக்கோப்பை அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்ப்போம். ஏற்கனவே தோள்பட்டை காயத்திற்கான ட்ரீட்மெண்ட் என்கிற பெயரில் போர்டின் டாக்டர்கள்  சொதப்பியதால், டெஸ்ட் விக்கெட் கீப்பர் வ்ருத்திமான் சாஹாவின் ஒரு கிரிக்கெட்-வருடம் காலியாகிவிட்டது என்பதும் இந்த சமயத்தில் நினைவுக்கு வந்து சோர்வு தருகிறது. அஷ்வின், ப்ரித்வி ஷா ஆகியோர் காயத்துக்குப் பின் தங்கள் உடல் தயார்நிலை எப்படி இருக்கிறது என்பதை மார்ச் இறுதியில் ஆரம்பிக்கவிருக்கும் ஐபிஎல்-இல்தான் காண்பிக்கமுடியும். ஐபிஎல் -ன் காட்டடி ஃபார்மேட்டை உலகக்கோப்பையின் ஐம்பது ஓவர் கிரிக்கெட்டோடு ஒப்பிட முடியாவிட்டாலும், அவர்களின் உடல்திறன் கிரிக்கெட்டுக்கு எப்படி ஒத்துழைக்கிறது என்பது மார்ச்-ஏப்ரலில் தெரிந்துவிடும்.
ஆஸ்திரேலிய தொடரின் ஒரு-நாள் போட்டிகளுக்கென, பாண்ட்யாவின் இடத்தில், இதுவரை தேர்வுக்குழுவின் நினைவில் வராத டெஸ்ட் வீரரான ரவீந்திர ஜடேஜா (ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டர்) தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியம். அவரே தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருப்பார்! இந்தியாவின் அருமையான ஃபீல்டர்களில் ஒருவர் மற்றும் அதிரடி காட்டக்கூடிய கீழ்வரிசை பேட்ஸ்மன். இவர் தனக்குக் கிடைத்திருக்கும் அபூர்வ வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இந்தத் தொடரில் சாதித்துக் காட்டலாம். தேர்வுக்குழுவை இம்ப்ரெஸ் செய்துவிடலாம். ரவி சாஸ்திரி-கோஹ்லி (திரைக்குப் பின்னால் தோனி)- க்ரூப்பைக் கவரவேண்டுமே!
உலகக்கோப்பையில் இடம்பெறும் வாய்ப்புள்ள  வீரர்கள், வரவிருக்கும் ஆஸ்திரேலிய, ஐபிஎல் தொடர்களில் வீரதீரம் காண்பிக்க முற்படுவது இயற்கை. அடுத்த இரண்டு மாதங்களில் காயம்பட்டுக்கொள்ளாமல்  ஃபிட்னெஸைக் கவனித்துக்கொள்வது அவர்களுக்கு நல்லது. குறிப்பாக ரிஷப் பந்த், க்ருனால் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சஹல், விஜய் ஷங்கர் போன்றோர். கூடவே, இதுவரை இந்திய தேர்வுக்குழுவின் உலகக்கோப்பை கணக்கில் வராத அஷ்வின், ப்ரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் போன்றோரும் உடல், மன ரீதியாகத் தயார் நிலையில் இருக்கவேண்டியவர்களே. இன்னும் மூன்று மாதமிருக்கிறது லண்டனில் மெகா ஷோ ஆரம்பிக்க. எந்த சமயத்தில், எந்த காரணத்தினால், யார் உள்ளே வரவேண்டியிருக்கும், யார் வெளியே போகவேண்டியிருக்கும் என்பதை யார்தான் அறிவார் ?
*

கிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 :  இந்திய அணித் தேர்வுகள்

கிரிக்கெட் உலகின் முக்கிய பத்து  நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது, மே இறுதியில். அதற்கான தயார்நிலைக்காக, பங்கேற்கும் நாடுகள் தங்களுக்குள் ஒருநாள் போட்டித் தொடர்களை விமரிசையாக ஆடிவருகின்றன. இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத நாடுகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகியவை, போர்க்காலநடவடிக்கைபோல் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருக்கின்றன. நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா, வார்னர்-ஸ்மித் சர்ச்சை/தடைக்குப் பின் வெகுவாக ஆட்டம் கண்டிருக்கிறது எனினும், ஒரு-நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. செலக்‌ஷன் பாலிட்டிக்ஸில் சிக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் நிலையும் மோசம்.  அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன வெஸ்ட் இண்டீஸ், எப்போதும்போல ஹாயாக இருக்கிறது.. பாகிஸ்தான் சமீபத்திய தொடர்களில் கொஞ்சம் ஜெயித்தும், கொஞ்சம் தோற்றும், ஒரேயடியாக வாயடி அடித்துக்கொண்டும் திரிகிறது. சிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல. பங்களாதேஷ் சமீப காலத்தில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. புதிதாக இந்த முறை உலகக்கோப்பை வட்டத்துக்குள் வந்திருக்கும் ஆஃப்கானிஸ்தான், ஆர்வத்துடன் கவனிக்கப்படவேண்டிய அணி. பெரிய அணிகளில் எதனையும் கவிழ்க்கும்  திறன் உடையது. கிரிக்கெட் உலகின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு விதமாக உலகக்கோப்பை ஃபீவர் சூடேற்றிக்கொண்டிருக்கிறது.
சரி, இந்தியாவின் தயார்நிலை எப்படியிருக்கிறது? ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மண்ணில் சமீபத்தில் அது ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறது என்பது ஒரு உற்சாகத்தை அணியினரிடையே ஏற்படுத்தியுள்ளது. மனோபலம், தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான். இருந்தும் உலகக்கோப்பை என்று வரும்போது,  ஓரிரு கடும்போட்டிகளிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடும்.
தன்னைக் கூர்மையாக்கிக்கொள்ளவென மார்ச் மாதத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கெதிராக இன்னுமொரு தொடர் விளையாடவிருக்கிறது. இது நடக்கவிருப்பது இந்தியாவில். ஆதலால் நமது ஆட்டக்காரர்கள் பிரமாத ஸ்கோரை நிறுவி, சூரப்புலிகளாகத் தெரிவார்கள்தான். உலகக்கோப்பை நடக்கப்போவதோ பந்து அதிரடியாக ஸ்விங்காகித் தெறிக்கும் இங்கிலாந்தில். இந்தப் பாச்சா அங்கே பலிக்காது. இருப்பினும் பயிற்சி எனும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்?  யார் யார் உள்ளே, யார் யார் வெளியே என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு இப்போது. அனேகமாக பதினைந்து பேர் கொண்ட அணி,  தேர்வுக்கமிட்டியால் தேர்வு செய்யப்படும். காயம் மற்றும் வேறு வம்புகளில் சிக்காதிருந்தால், முதல் பத்து வீரர்கள் அனேகமாக உறுதியாக உள்ளே வருவார்கள் எனலாம். அவர்கள் இவர்கள்:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் ஆகியோர். இவர்களோடு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வர, அனேகமாக ஹைத்ராபாதின் (சென்னை சூப்பர் கிங்ஸ்) அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படுவார் எனவும்  எதிர்பார்க்கலாம். அந்த வரிசைநிலையில் வந்து, பந்துவீச்சு எப்படியிருப்பினும் நிலைமைக்கேற்ப, நிதானமாக அல்லது தாக்கி ஆடும் திறன் அவருக்குண்டு.
மேலே குறிப்பிட்ட முதல் பத்தில், கடைசி ஆறு வீரர்கள் இந்திய அணியின் பௌலிங் துறையைத் திறம்படக் கவனித்துக்கொள்வார்கள். நம்பலாம். BCCI மேலும் ஒன்றிரண்டு ஆல்-ரவுண்டர்களை அணியில் சேர்க்கப் பார்க்கும். ஆரம்ப விக்கெட்டுகள் ஒரேயடியாக சரிந்தால் நின்று ஆட, தேவைப்பட்டால் எகிறிப் பாய, மிடில் ஆர்டரில் ஸ்கோரை வேகமாக ஏற்றும் திறன் வாய்ந்தவர்களாக மேலும் இரண்டு பேட்ஸ்மன்களாவது ரிசர்வில் அவசியம் இருக்கவேண்டும். தோனியைத் தாண்டியும் ஒரு ஃபினிஷர் – ஆறாவது அல்லது ஏழாவது என்கிற பேட்டிங் வரிசையில் இருப்பதே அணிக்கு வலு சேர்க்கும். இந்த நிலைகளில் யார் யாருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்பதே தலையைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் கேள்விகள்.
ஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மேலும் ஆல்ரவுண்டர்கள் இந்திய உலகக்கோப்பை  அணியில் வேண்டும்  எனில், அதற்காக மூன்று வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) , விஜய் ஷங்கர்(தமிழ்நாடு), க்ருனால் பாண்ட்யா(மும்பை)  ஆகியவர்கள். இவர்களில், ஜாதவ் ஆறாவது, ஏழாவது நிலைகளில் வந்து ஆடி, ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார். ஸ்பின் பௌலிங் போட்டு விக்கெட்டைத் தூக்கும் திறனுமுண்டு. விஜய் ஷங்கர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். முதன்மையாக, நல்லதொரு பேட்ஸ்மன். சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் இது தெரிந்தது.  மீடியம்-பேஸ் பௌலிங் அவ்வப்போது போட்டு எதிரியின் ரன் விகிதத்தைக் குறைக்கமுடியும். திறன்மிகு ஃபீல்டர் என்பது இன்னுமொரு ப்ளஸ். ஹர்திக்கின் அண்ணாவான க்ருனால் பாண்ட்யா, ஸ்பின் பௌலிங்-ஆல்ரவுண்டர். கீழ்வரிசையில் அதிரடி பேட்டிங்கிற்கு (மும்பை இந்தியன்ஸ்) பேர்போனவர். உள்ளே வரும் தகுதி இவருக்கும் உண்டு. மேற்சொன்ன மூவரில் ஒரேயொரு ஆல்ரவுண்டரைத்தான் தேர்வு செய்வார்கள் எனில், பெரும்பாலும் கேதார் ஜாதவ் தேர்வுசெய்யப்படவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால்,  விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு  கிடைக்கலாம். கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாதிற்கு இப்போதெல்லாம் ஏகப்பட்ட தலைவலி!
மாறும் நிலைமை மற்றும் களவியூகத்தின்படி திடீரென இறக்க, இன்னும் இரண்டு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், அணிக்கு அவசியம் தேவை. இங்கே காட்சி தருபவர்கள் டெல்லியின் ரிஷப் பந்த், தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக், கர்னாடகாவின் கே.எல்.ராஹுல் மற்றும் மும்பையின் அஜின்க்யா ரஹானே. இங்கிலாந்து தொடரில் ஸ்பின், பேஸ் (pace) என எதனையும் அடித்து அதிரடி காண்பித்த ரிஷப் பந்த் தேர்வாகும் வாய்ப்போடு நிற்கிறார். ஒரு ஸ்பெஷல் டேலண்ட்  எனவே வல்லுனர்களால் பார்க்கப்படுகிறார், இருபத்தோரு வயதாகும் பந்த். முக்கியமான போட்டிகளில் பந்த், ஒரு பத்து ஓவர் விளையாடினாலே போட்டியின் திசை மாறிவிட வாய்ப்புண்டு. இவர் அணியில் நிச்சயம் வேண்டும். கடந்த ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் ஆக்ரோஷம் காண்பித்தும், ஸ்ரீலங்காவில் லாவகமாக ஃபினிஷ் செய்தும் வெற்றியைக் கொணர்ந்த  தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில்   இருக்கவேண்டியவர். இந்தியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா கார்த்திக்கை துவக்க ஆட்டக்காரராகவும் இறக்கலாம்-ஏனெனில் முன்பு இங்கிலாந்தில்  துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடிய அனுபவம் அவருக்குண்டு என்கிறார். ஆனால் தேர்வுக்குழுக்காரர்கள் என்ன நினைக்கிறார்களோ? ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ? ஒன்றும் சொல்வதற்கில்லை.
**

காதலுக்கு இதுதானா பரிசு ?

Bina Rai as Anarkali
ஒரே ஒருநாளைப் பிடித்துக் கொண்டு ஏன் தொங்கவேண்டும், உலகெங்கும் பரவிக்கிடக்கும் காதலர்கள்? அவர்கள் செய்த பாவம்தான் என்ன? காதலில் திளைத்திருப்பவர்கள் காலண்டரையும், கடிகாரத்தையுமா பார்த்துக்கொண்டிருப்பார்கள்? அவர்களுக்கு வருஷத்தில் ஒரே ஒரு நாள் என்று வழங்க, நீங்கள் யார் தர்மப்பிரபு? ஒருநாள்தான் அவர்களுக்கென்றால், மிச்சசொச்ச நாட்கள் யார், யாருக்கு? களவாணிகள், கொள்ளைக்காரர்கள் இத்தியாதிகள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப்போகட்டும் எனப் பெருந்தன்மையோடு விட்டுவிட்டீர்களா அசடுகளே?
சரி, தொலையுங்கள். ஒன்றைக் கவனித்தீர்களா? பேரரசன் அக்பரை ’அக்பர் தி கிரேட்’ என்கிறது இந்திய சரித்திரம். என்ன பிரயோஜனம்? உன்னதமான காதலைக் கொன்றுபோட்டானே..  ’வில்லன் தி வொர்ஸ்ட்’ என்றல்லவா காதல் உலகம் அவனைக் கண்டிக்கிறது?
காலையில் கூகிளைத் திறந்தால் மதுபாலாவின் பிறந்தநாள் என்று சித்திரத்தைக் காண்பிக்கிறது. மதுபாலா. அந்நாளைய ஹிந்தி சினிமா உலகின் நிஜ அழகிகளில் ஒருவர். நல்ல நடிகையும். அவரைப்பற்றி நினைத்திருக்கையில் அந்தப் பாடலின் ஆரம்பத்தை முணுமுணுத்துப் பார்த்தது மனது:
யே   ஜிந்தகி  உஸீகி ஹை..
ஜோ கிஸீகா  ஹோ கயா..
ப்யார் மே ஹி  கோ கயா..
’இந்த வாழ்க்கை அவனுடையது..’ என உருக்கமாக ஆரம்பிக்கும் பாடல் வந்த படம் ஒருவேளை மதுபாலா நடித்த படமோ எனத் தேடினால், இல்லை. அனார்கலி. 1953-ன் திரை காதல்காவியம். இளவரசனை மயக்கிப்போட்ட நடனமாது அனார்கலியாக பீனா ராய். அனார்கலியா? யாரு? இங்கே மீண்டும் சக்ரவர்த்தி அக்பருக்கு வருவோம்.  அக்பரது மகன் இளவரசன் சலீம் (ஜஹாங்கீர்), அக்பரின் ஹிந்து மனைவியான ஜோதா பாய்க்கு (ஜோத்பூர் இளவரசி) பிறந்தவன்.  மென்மையான குணநலன்கள் உள்ளவன். அனார்கலி எனும் அழகிய மங்கையின் மனதிற்குள் புகுந்துவிட்டிருந்தான் அப்போது அவன்.
பேரரசன் அக்பர் அனார்கலியை (அவளது இயற்பெயர் நாதிரா) முதன்முதலாக சந்தித்தபோது அவள் அவனது அரண்மனைத் தோட்டத்தில் இளவரசனுக்காக ரகசியமாகக் காத்திருக்கிறாள். அவளது மென்மையான தோற்றமோ, சுபாவமோ, எதுவோ அக்பருக்கு அவள்மேல் மதிப்பை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அவளுக்கு பரிசு ஏதாவது கொடுக்க விரும்புகிறான். அவளோ எந்த பரிசையும் விரும்பவில்லை. ’ஏதாவது கேள் பெண்ணே..!’ என்கிறான். அவளோ, ‘சரி! மாதுளம்பழம் வேண்டும்’ என்கிறாள். அக்பர் ஆச்சரியப்படுகிறான். என்னமாதிரியான இளம்பெண் இவள். அவளை அனார்கலி என்று அன்றிலிருந்து குறிப்பிடுகிறான். அனார்கலி = மாதுளம் மொட்டு. இரண்டாவது முறை அக்பர் அவளைச் சந்தித்தது காபூல் போரில் அடிபட்டுத் திரும்பியிருந்த இளவரசன் சலீமைப் பார்க்கச் சென்றபோது. காயங்களுக்கு சிரத்தையாக மருந்திட்டுக் கட்டுப்போட்டுத் தடவிக்கொடுத்துக் கவனித்துக்கொண்டிருந்தாள் அனார்கலி. அவளது கடமையுணர்வில் மகிழ்கிறான். ஆனால் அந்த மூன்றாவது சந்திப்பு – அவளுக்கே வினையானது.
தன் சபையில் அன்று மாலை ஆடிக்கொண்டிருந்த நடன மங்கைகளுள் ஒருவளாக அனார்கலியை அக்பர் பார்க்கிறான். நடனமாதுக்களை கீழ்நிலையில்  வைத்திருந்த, கீழ்த்தரமாக கனவான்கள் பார்த்த காலமது. ரம்யமான மாலை நேரத்தில் அனார்கலி அபாரமாக ஆடுகிறாள். மனம்விட்டுப் பாடுகிறாள். கொஞ்சம் குடித்துமிருக்கிறாள் என்பதையும் கவனித்துவிட்டான் அரசன். கோபத்தில் அவளை சிறையில் தள்ளுகிறான். யாரும் எதிர்பாராதவகையில் தீவிரமாகக் குறுக்கிட்டான் இளவரசன். சபையிலேயே கடும் வாக்குவாதம். இளவரசனின் கோபத்தில், அவன் அனார்கலியின் மீது மையலில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான் அக்பர். வெகுண்டான். தன் மகன், நாட்டின் இளவரசன், கேவலம் ஒரு நடனமாதுவிடமா மனதை இழப்பது? அவளுக்குப் பரிந்துகொண்டு, தன் தந்தையிடமே சண்டையிடுவதா? அவனைக் கடுமையாக எச்சரிக்கிறான் அக்பர். சலீமும் விடுவதாயில்லை. சண்டை நாளுக்கு நாள் தொடர்கிறது; அதிகரிக்கிறது. இடையிடையே அனார்கலியை அழைத்து இந்தக் காதலை நிராகரிக்கும்படி, மறந்துவிடும்படிக் கேட்டுக்கொள்கிறான். மிரட்டுகிறான். அவளுக்குப் புரிகிறது. தான் ஒரு ஏழை. கீழ்வர்க்கத்தில் பிறந்துவிட்ட அனாதை. யாருக்கும் பதில்சொல்லும் நிலையில்லை அவளுக்கு. அரசனை எதிர்ப்பதா? வேறு வினைவேண்டாம்.. பணிந்துபோக முற்படுகிறாள். விலகி, விலகிச் செல்கிறாள். மனதிலிருந்து விலக மறுக்கிறான் இளவரசன். சரியான உறக்கமில்லை, உணவில்லை. நிம்மதி இல்லவே இல்லை.
அந்தப்பக்கம் அரசன் சலீமுக்குக் கொடுத்த அழுத்தம் கடுமையான விளைவினை ஏற்படுத்தியது. அவன் காதல் நிச்சயமானது என்கிறான். அனார்கலியைத்தான் மணப்பேன் என அடம் பிடிக்கிறான். குறுக்கிட மன்னனுக்கு யோக்யதையே இல்லை என்கிறான். அக்பர் கோபத்தின் உச்சம் சென்றான். தன் மகனைக் கொன்றுபோட்டுவிட உத்தரவிடுகிறான். தகவல் பறக்கிறது அனார்கலிக்கு. அவள் கதறியவாறு ஓடிவருகிறாள். தன் காதலன் உயிர்பிழைக்கவேண்டி, அரசன் முன், இளவரசன் முன், காதலைத் துறப்பதாக அறிவிக்கிறாள் அனார்கலி. அதிர்ச்சியில் இளவரசன் சலீம். அனார்கலியா இப்படி? ஐயகோ! நான் எப்படி வாழ்வேன் இனி? அரசன் மகிழ்கிறான்.  ஆனால் அவன் யாரையும் நம்புபவனில்லை.
அனார்கலியை விடாது, கடுமையாகத் தண்டிக்கிறான் அக்பர். சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் இளவரசன் முன், அனார்கலியை நிறுத்தி, அவள்மீது உயிரோடு சமாதி எழுப்பி அவளைத் தீர்த்துக்கட்ட உத்திரவு. அனாதை அனார்கலி என் செய்வாள்? நிர்கதியாய் நிற்கிறாள் கண்கலங்கி. சமாதி வேகவேகமாக எழுப்பப்படுகிறது. துடிக்கிறான் இளவரசன். அப்போது அவனுக்காக உருகி அவள் பாடும் பாட்டுதான் மேலே குறிப்பிடப்பட்டது. (லதா மங்கேஷ்கர் குரலில், சி. ராமச்சந்திராவின் இசையில் ராஜேந்திர கிஷனின் வரிகள்.)
கதையை மேலும் கேட்க விரும்புபவர்களுக்கு: சமாதி முழுமையாக எழுப்பப்பட்டபின் இப்படி நடந்ததாம்: அனார்கலி நின்ற இடத்திற்கு அருகில் சுரங்கப்பாதையின் வாயில் ஒன்றிருந்ததாகவும்,  அதன் வழி அனார்கலி ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு, ’இனி இந்தநாட்டுப் பக்கம் தலைவைத்தும் படுக்கப்படாது..ஓடிவிடு! ‘ என எச்சரிக்கப்பட்டு அந்த அனாதை நாடுகடத்தப்பட்டதாகவும் சரித்திரத்தின் ஓரப்பக்கம் தெரிவிக்கிறது.
ஆனால் அவள் காதலன்? ஆடிப்போன இளவரசனின் கணக்கில் அவனது அப்பன், அவனது காதலியை உயிரோடு கொன்றுபோட்டான். காதலை அழித்துவிட்டான்.  பித்துப்பிடித்தவன் போலானான் சலீம். ஜஹாங்கீர் என்கிற பெயரில் பிற்காலத்தில் ஆட்சி செய்தும், இறுதிவரை அவன் அனார்கலியின் நினைவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அனார்கலி? அவள்தான் ஏழையாயிற்றே? ஏழைக்கேது சரித்திரம்?
*

மாறும் காட்சிகள்

 

காலையில் ஒரு  உலர் சூழல்
எப்போதும் தலை உயர்த்திக் காட்சிதரும்
ஆதவனுக்கு என்ன வந்ததோ இன்று
மேகமூட்டம் கவிந்திருக்கையில்
மேலோட்டமாக பொதுவாக உலவிச் செல்லும்
தென்றலையும் காணோம் இந்தப்பக்கம்
சிறு சிறு சிவப்புப் பூக்களின் மீது
அமர்ந்து அழுந்தித் தேன் குடிக்க
வண்ணத்துப் பூச்சிகளாவது
வரவேண்டாம்?
மரங்களின் அடர்த்திகளில் என்ன அசைவு
வேண்டப்படாத பழுப்புகள், மஞ்சள்கள்
வேகமாகக் கழட்டிவிடப்படுகின்றன
நிலத்தில் மோதி சரசரக்கின்றன
காலைநடை  நடப்பவர்களின்
காலடிபட்டு நொறுங்கித் தூளாகுமாறு
கடுமையாக எழுதப்பட்ட ரகசிய விதி..
நடப்பதாக எண்ணிக்கொண்டு எதிரே
மெல்ல மெல்ல அசைந்து செல்பவர்கள்
காலப்போக்கில் கசங்கிப்போன கனவான்கள்
எந்த திருப்பத்திலும் சாயக்கூடும்
எப்படியும் சரிந்துவிடலாம் ..
பூங்காவினுள் சாவகாசமாக நுழையும்
பூத்ததலைத் தாத்தாவின் கைபிடித்து
மென்நடைபோட்டுவரும்  குழந்தை
எதைப் பார்த்து இப்படிச்
சிலிர்த்துச் சிரிக்கிறது
என்ன புரிந்தது அதற்கு ?
**

இந்நாளில் அன்று ! 

’’ஆழ்நிலை தியானத்தை

அந்நிய நாடுகளில்

அரங்கேற்றிக் காண்பித்த

இந்திய ஆன்மிக குரு

இறந்த நாள் பிப்ரவரி 5, 1917.

அவர் 1939-ல் .. ஸ்வாமியின் சீடராகி

1941-லிருந்து 1953 வரை

இமயமலைச் சாரலில் செய்தது தவம்

மேற்கொண்டு ஸ்தாபித்தது ஒரு ஆசிரமம்

உலகப்பயணத்தை 1958-ல் தொடங்கி..’’

ஐயோ.. நிறுத்துங்கடா.. டேய் !

முடில..

புரிந்துகொண்டேன்

புரிந்துகொண்டேன்

இறந்தவர் மறுபடி பிறந்துவந்து

இணக்கமாய் வாழ்வதெல்லாம்

இந்தியாவில் மட்டும்தான்

தெளிவாகச் சித்தரித்த

தெள்ளுமணி தமிழ் மீடியாவே

தலைவணங்குகிறேன்

காலைக்காப்பி ஆறிக்கொண்டிருக்கிறது..

கொஞ்சம் குடிச்சுக்கட்டுமா?

**ஏகாந்தன்
அடிக்குறிப்பு:  நேற்றைய ப் பத்திரிக்கை செய்தி ஒன்று, ஒரு யோகியின் பிறந்த  வருடத்தை (1917)  ‘இறந்த வருடமாக்கி’, தேதிகளையும்  குளறுபடி செய்து வெளியிட்டிருந்தது. அதன் விளைவாகப் பொங்கிய அங்கதக் கவிதையே இது! 

இப்படியா ?

 

ஏய்,  ஊர்சுற்றி !

கோயில்பக்கம் போனியாடா

நாளைக்காலை அர்ச்சனைக்கு

பட்டரிடம் சொல்லிட்டியா

ட்விட்டர் பையன் காதில்

ஷட்டர் போட்டா மூடியிருக்கிறான்

பட்டர் கிடைக்கும்மா..

பக்கத்துக் கடையிலேயே

பதறாதே வாங்கிட்டு வர்றேன் என்றான்

தொடுதிரையிலிருந்து தலையைத் தூக்காமல்

பல்லைக்கடித்த மாமியின் முன்

கிட்டு மாமா வந்து நிற்க இதுவா நேரம்

வாட்டர்வாலா இன்னுமா வரல..

கூட்டிப்பெருக்கற கோகிலாவையும் காணோம்

திட்டக்கூடாதுன்னு பாக்குறேன் காலைல..

கிட்டக்கவந்து  மனுஷன் இப்படியா அடுக்குவார்

விட்டிருப்பாள் பட்டுன்னு கன்னத்தில் ஒன்னு

கட்டிய புருஷனாச்சேன்னுதான் ..

வெட்டுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு

சட்டென  நகர்ந்துவிட்டாள் மாமி

**

ஒன்றுமில்லை . .

சொந்தபந்தங்களில் யாரும்

என்னைச் சரியாகப் புரிந்துகொண்டவரில்லை

வெகுகாலமாய் அங்கலாய்த்துக்கொண்டிருந்த மனது

திடீரென ஒருநாள் தயங்கி நிறுத்தியது

மௌனவெளியில் கொஞ்சம் நடந்தபின்

இப்படி ஆரம்பித்தது :

உண்மையில் யார் அவர்கள்

எனக்குப் புரிகிறார்களா

தெரியவில்லை

என்னைச் சுற்றி அவர்களும்

அவர்களைச் சுற்றி  நானும்

அவ்வப்போது உலவி வருகிறோம்

அவ்வளவே ..

**