
அந்தக்காலக் காலண்டர் படங்கள் நம் இளம்பிராயம், வீடு, வாசல் எனப் பலவகை நினைவுகளாய்ப் பின்னிப் பிணைந்திருப்பவை. ஒரு ரம்யமான கனவுபோல் மனதைவிட்டு அகலாதவை. அப்போதெல்லாம் ஆன்மிக மணம் கமழும் சாமிபடங்கள்போட்டு வரும் காலண்டர்கள் மக்களிடையே வெகுபிரபலமாக இருந்தன. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வரும்போதே எந்தக் கம்பெனியில் எந்தமாதிரி தெய்வப்படங்கள் காலண்டரில் போடுவார்கள் என்கிற நினைப்பும் அதைத் தவறாது வாங்கிவிட வேண்டும் என்கிற பரபரப்பும் குடும்பங்களில் காணப்படும். புதுவருடம் என்றால் கண்ணுக்குக் குளிர்ச்சியான, வண்ண வண்ணப் படங்கள் தாங்கிய காலண்டரை வீட்டில் தொங்கவிடுவதில் ஒரு மகிழ்ச்சி. நாலுபேர் நம் வீட்டுக்கு வந்துபார்த்து ’ஆஹா, இந்தக் காலண்டர் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது!’ என்று கேட்டுவிட்டால், அப்போது ஏற்படுமே ஒரு அலாதிப் பெருமிதம், ஒரு கிளுகிளுப்பு!
பொதுவாக அவ்வளவு எளிதில், நல்ல கலைஅழகுடன்கூடிய தெய்வப்படங்கள் டெல்லியில் கிடைப்பதில்லை. இங்கே தமிழ்நாடு, தென்னிந்தியாவில் உள்ளது போன்ற காலண்டர்பட கலாச்சாரம் அவ்வளவு பரவலாக இல்லை எனலாம். இரண்டு நாள் முன்பு, அபூர்வமாகக் கிடைத்ததால் வீட்டுக்கு என வாங்கியிருந்த தெய்வப்பட.ங்கள் சிலவற்றைப் பார்த்தேன். ஃப்ரேம் போட்டு மாட்டுவதற்கேற்ற தெய்வீக சாந்தம், அழகு, ஒரு நேர்த்தி அவற்றில் இல்லை என்பது முதல் பார்வையிலேயே எனக்குத் தெளிவானது. அதை மனைவியிடம் சொன்னபோது அவருக்கு ஆச்சரியம்; என்ன இது, எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டாரே என்கிற அதிர்ச்சி. சிறுவயதிலேயே காலண்டர்படங்களை வாங்கும்போது அதிலுள்ள தெய்வ உருவங்களை அதன் கலைஅழகு, ஓவிய நுணுக்கங்கள் போன்றவற்றிற்காக உன்னிப்பாகப் பார்த்துத் தேர்வு செய்வது என் பழக்கம் என்பது அம்மணிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
இந்த நிகழ்வு அந்தப் பொற்காலத்திற்கு என்னை இழுத்துச்சென்றது. உடனே நினைவுக்கு வந்தார் காலண்டர்படக்கலை நிபுணரான கொண்டய ராஜு. அப்போதெல்லாம் நவம்பர்-டிசம்பரில் புதிய காலண்டர்கள் வினாயகர், முருகன், லக்ஷ்மி, விஷ்ணு, சிவன், அம்பாள், ராமர் என்று விதம் விதமான தெய்வ உருவங்களைத் தாங்கி வரும். அவை கையில் கிடைத்தவுடன் நான் என் அப்பாவுடன் உட்கார்ந்து படங்களை ஆராய்வேன். தெய்வ உருவம் எப்படி வரையப்பட்டிருக்கிறது, முகம் சாந்தமாக, சிரித்தமுகமாக இருக்கிறதா, கண்கள், மூக்கு, உதடுகள் பாந்தமாக அமைந்திருக்கின்றனவா, ஆடை ஆபரணங்கள், சித்திரவேலைப்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன, கொடுக்கப்பட்டிருக்கும் வண்ணம் பொருத்தமானதா என்றெல்லாம் தீவிர ஆராய்ச்சி எங்கள் வீட்டில் நடக்கும். அதன்பின் ஒரு சில படங்களை மட்டுமே சிறந்தவை எனத் தேர்ந்து வீட்டில் பூஜை அறையில், கூடத்தில் மாட்ட என, ஃப்ரேம் போட அனுப்புவோம். இப்படியாக ’பிரமாதமான படம், பூஜைக்கு மிகவும் உகந்தது’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டதெல்லாம் வரைந்தது யார் எனப் பார்த்தால், சி.கொண்டய ராஜுவின் கையெழுத்து படத்தின் கீழ்மூலையில், மங்கலான வண்ணத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும். ஒரு சில வருடங்களிலேயே புரிந்துவிட்டது காலண்டர்பட ஓவியம் என்றால் கொண்டய ராஜுதான். அவர்தான் இந்த ஃபீல்டில் கில்லாடி. Simply masterclass ! மற்றவர்களெல்லாம் அவருக்கு அப்புறம்தான். கொண்டய ராஜு வரைந்த, எங்கள் வீட்டிலிருந்த சத்யநாராயணர் படம் ஒன்று.. ஆஹா, முகத்தில் என்ன ஒரு தேஜஸ், பேசும்கண்கள். . நேரில் வந்ததுபோல் இன்றும் மனக்கண்முன்னே நிற்கிறது. அந்தக்காலகட்டத்தில் ராஜா, முருகக்கனி போன்ற தென்னிந்திய ஓவியர்களும், எல்.என்.ஷர்மா, எஸ்.எம்.பண்டிட், பி.சர்தார் போன்ற வட இந்திய ஓவியர்களும் காலண்டர் படங்களில் பேரெடுக்கப் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர்.
கொண்டய ராஜு என்கிற, ’சிவகாசி காலண்டர் உலக’த்தையேக் கலக்கிய இந்த தலைசிறந்த ஓவியர் உண்மையில் யார், எந்த ஊர்? அவரைப்பற்றிய விபரம் ஒன்றும் அந்த பதின்மவயதில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது என்றும் அவருடைய சிஷ்யர்களான டி.சுப்பையா, ராமலிங்கம் போன்றோர் அவருக்கு உதவியாளர்களாகப் பணிசெய்கிறார்கள் என்று மட்டுமே செவிவழிவந்த தகவல். மேலதிகத் தகவல்கள் பிறகுதான் மெல்ல வந்துசேர்ந்தன.
சென்னையில் 1898-ல் பிறந்த கொண்டய ராஜு சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தார். புகைப்படக்கலைஞரும், ஓவியருமான தன் சித்தப்பா கெங்கயா ராஜுவின் பராமரிப்பில் வளர்ந்தார். சென்னை ஓவியக்கல்லூரியில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றார். ஓவியக்கலையில் நல்ல தேர்ச்சி இருந்தும், அந்த இளம் வயதிலேயே அவரது மனம் தனிமையை நாடியது. பிரம்மச்சர்ய வாழ்வை மேற்கொண்டார். திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷியின் சிஷ்யர்களோடு சேர்ந்து பிச்சை எடுத்து உண்டார். அங்கேயே தங்கி வாழ்ந்து வந்தார்.
ஆனால் அதிர்ஷ்ட தேவதையோ அவரை நோட்டம் விட்டது. எங்கேபோய் ஒளிந்திருக்கிறாய் என்றது ! அவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக் காட்சி அமைத்தது. ஒரு நாள் ஒரு பக்தர் தான் வரைந்திருந்த ரமணர் படம் ஒன்றை ரமண மகரிஷியிடம் காட்டினார். அதைப் பார்த்த ரமணர் அதில் ஏதோ குறையிருப்பதாகக் கூறினார். எதிரே சிஷ்யர்களோடு சிஷ்யராக அமர்ந்திருந்த கொண்டய ராஜு அதனைத் தான் பார்க்கலாகுமா என்றார். ரமணர் ஆச்சரியத்துடன் ’உனக்கு ஓவியம்பற்றி எல்லாம் தெரியுமா?’ என வினவினார். ‘ஏதோ கொஞ்சம் அடியேனுக்குத் தெரியும்’ என்று பணிவுடன் பதில் சொன்னார். ஓவியத்தைப் பார்த்த கொண்டய ராஜு, ரமண மகரிஷியின் அனுமதிபெற்று அதில் உள்ள குறைகளைத் திருத்திக் கொடுத்தார். திருத்தப்பட்ட ஓவியத்தைப் பார்த்த ரமணர் அசந்துபோனார். ‘ஓவியம் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கும் நீ இங்கு உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறாய்! கிளம்பு.. உன் கலையை உலகம் பார்க்கும் வேளை வந்துவிட்டது!’ என்று ஆசீர்வதித்து வெளிஉலகுக்குக் கொண்டய ராஜுவை அனுப்பிவைத்தார். . .
(தொடரும்)
படம் இணையத்திலிருந்து: நன்றி.