இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டனில் 22 ஜூனில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை தோற்காத இந்தியாவை, ஒரு ஆட்டு ஆட்டிப் பார்த்தது ஆஃப்கானிஸ்தான்! இந்தியாவைக் கடுமையாக எதிர்கொண்ட உலக்கோப்பையின் கத்துக்குட்டி அணி, கடைசி ஓவர் வரை சவால்விட்டு அசத்தியது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், இந்திய முகங்கள் வாட ஆரம்பிக்க, ஆஃப்கன் வெற்றியே நிதர்சனம் எனத் தோன்றியது.
ஆஃப்கன் கேப்டன் குல்பதின் நாயப் (Gulbadin Naib)
அருமையான பேட்டிங் பிட்ச் என்று வர்ணனையாளர்கள் உளறினார்கள். இந்தியா டாஸ் வென்றதும், முதலில் பேட்செய்தது. பிட்ச்சை சரியாகக் கணித்திருந்த ஆஃப்கானிஸ்தான், நான்கு ஸ்பின்னர்களோடு தைரியமாக இறங்கியது. தனது லெக்-ஸ்பின் கூக்ளி பௌலரான 20-வயது முஜீப்-உர்-ரஹ்மானிடம் ஆரம்பப்பந்தைக் கொடுத்து, இந்தியாவுக்கு மணி அடித்தது. ராஹுல், ரோஹித் கட்டை போட, ரன் வருவதே அரிதாயிருந்தது முதல் ஐந்து ஓவர்களில். ஐந்தாவது ஓவரில் திணறிய ரோஹித்தை அருமையாக ஏமாற்றி, க்ளீன் போல்ட் செய்தார் ரஹ்மான். அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாது இந்தியா ஆட, ரன்கள் சிங்கிள்களில் நடந்தன. முகமது நபி, ரஹ்மத் ஷா, ரஷீத் கான் என மேலும் தரமான ஸ்பின்னர்களைப் போட்டு இந்தியாவைத் தாக்கி நெளியவைத்தார் ஆஃப்கன் கேப்டன் குல்பதின் நாயப் (Gulbadin Naib). விராட் கோஹ்லி ஒருவர் மட்டுமே இந்திய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியவர். மற்றவர்கள் ஏகப்பட்ட கஷ்டத்துடன் ரன், ரன்னாக முன்னேற முயன்று வழியிலேயே விழுந்து வெளியேறினர். ராஹுல் 30, விஜய் ஷங்கர் 29, தோனி 28 ஆகியோரின் ஆட்டம், இந்தியாவின் வலிமையையா காண்பித்தது ?
குறிப்பாக விராட் கோஹ்லி விழுந்தவுடன், சீனியரான தோனி சில ஓவர்களில் சார்ஜ் எடுத்துத் தாக்கியிருக்கவேண்டும். செய்யவில்லை. அப்போது களத்திலிருந்த தோனி-கேதார் ஜோடி அடுத்த ஐந்து ஓவர்களில் (31-36) ஒரு பௌண்டரியும் அடிக்கவில்லை. ரிஸ்க் எடுத்துத் தாக்கவேண்டிய 41-45 ஓவர்களில் ஓவருக்கு 2 ரன் என, தோனி கட்டைபோட்டுக்கொண்டிருந்தது ரசிகர்களுக்கு வெறுப்பேற்றியது. இவருடைய மந்த ஆட்டம் ஜாதவின் ஆட்டத்தையும் குழப்பியது. தோனி அவுட்டாகி, பாண்ட்யா வருகையில் நிலைமை மோசம். உடனடியாகத் தாக்கமுயன்ற பாண்ட்யா, முடியாது வீழ்ந்தார். என்னதான் கஷ்டமான பிட்ச் எனினும், 250-ஐ இந்திய ஸ்கோர் தாண்டியிருக்கவேண்டும். ம்ஹூம். ஜாதவ் போராடி அரைசதம் எடுத்திருக்காவிட்டால், இந்தியா 190-ஐக்கூடத் தாண்டியிருக்காது. இந்திய மிடில் ஆர்டரை ஒரேயடியாக நெருக்கி, நிலைகுலையவைத்ததில் ஆஃப்கன் ஸ்பின்னர்களுக்கு அபார வெற்றி.
ஆஃப்கானிஸ்தான் நிதானமாக,அவ்வப்போது தூக்கி அடித்து இலக்கை(225) நோக்கி முன்னேறியது. கேப்டன் குல்பதீன் நாயபும் ரஹ்மத் ஷாவும் சிறப்பாக ஆடினர். நிலைமை சீராக சென்றுகொண்டிருக்கையில், 29-ஆவது ஓவரை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா, ரஹ்மத் ஷாவையும், ஹஷ்மதுல்லா ஷஹீதியையும் அடுத்தடுத்து சாய்த்துவிட்டார். ஆஃப்கன் அணி தள்ளாடியது. கீழ்வரிசை பேட்ஸ்மன்கள் ஒவ்வொருவராக தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க, ஆல்ரவுண்டர் முகமது நபி, ஆஃப்கானிஸ்தானின் ஹீரோவென அபாரமாக ஆடி, போட்டியை இறுதி ஓவர் த்ரில்லுக்குத் தூக்கிச்சென்றார்.
கடைசி இரண்டு ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் இந்தியா முகம் வெளுத்துப்போயிருந்தது. 49 ஆவது ஓவரை வீச, டெத்-ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவிடம் பந்தைக் கொடுத்தார் கோஹ்லி. ஐந்தே ரன்கள்தான் கொடுத்தார் பும்ரா. யார்க்கர் மேல் யார்க்கராக வீசி, நபியைக் கட்டிப்போட்டுவிட்டார். இந்த ஓவர்தான் இந்தியாவை வெற்றியை நோக்கித் திருப்பிவிட்டது. கடைசி ஓவரில் 16 ரன் எடுத்தால் ஆஃப்கன் வெற்றி. முதல் பந்திலேயே நபிக்கு பௌண்டரியைத் தாரை வார்த்தார் முகமது ஷமி. பும்ராவுக்கும், ஷமிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என வர்ணனையாளர்கள் முணுமுணுக்கிறார்கள். 5 பந்துகளில் இப்போது 12 ரன்களே தேவை ஆஃப்கானிஸ்தானுக்கு. ஆஃப்கன் ரசிகர்கள் ஆகாசத்துக்கும் விண்ணுக்குமாக இருந்தார்கள். இந்திய ராஜாவைப்போல் வேஷமிட்டு வந்திருந்த கணவனோடு அமர்ந்திருந்த ஒரு இந்திய ரசிகை அழ ஆரம்பித்துவிட்டார்! ஷமியின் அடுத்த பந்தை நபி நேராக மேலேத் தூக்கினார்.. பௌண்டரிக்கு முன் ஓடிவந்த பாண்ட்யா லாவகமாக லபக்கிவிட்டார்! முகமது ஷமியிடம் முகமது நபி காலி! அவர் சேர்த்தது 52 ரன்கள். இந்தியாவுக்கு மூச்சு திரும்பவந்தது. அடுத்து நடந்தது அதை விட ஆச்சரியம். கடைசி ஓவரின் 4 ஆவது 5 ஆவது பந்துகளில் பாதத்தை நொறுக்கும் யார்க்கர்களை வீசி, அடுத்தடுத்து 2 ஆஃப்கன் விக்கெட்டுகளை க்ளீன் -போல்ட் செய்தார் ஷமி. இந்த உலகக்கோப்பையில், தன் முதல் மேட்ச்சிலேயே ஹேட்ரிக். வார்ரே… வா..! ஷமி.. நீ ஒரு கில்லாடி! 11 ரன்களில் இந்தியாவின் ஜெயம். கோஹ்லிக்கு நிம்மதி.
ஆனால், முழு ஆட்டத்தையும் பார்த்த, கிரிக்கெட் தெரிந்தவர்களுக்குப் புரிந்திருக்கும் – ஜெயித்திருக்கவேண்டிய அணி.. ஆஃப்கானிஸ்தான்!
ஒரு ஸ்லோ பிட்ச்சில் இந்தியாவைப் புரட்டி, நன்றாகப் பாடம் எடுத்து அனுப்பியிருக்கிறது ஆஃப்கானிஸ்தான். எதிரணியில் தரமான ஸ்பின்னர்கள் பந்துபோட்டால், சமாளித்து ரன் விகிதத்தை உயர்த்த இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள் தடவுகிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஷகீப்-உல்-ஹசன் red-hot form-ல் இருக்கும் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு போட்டி இந்தியாவுக்கு இருக்கிறது.. அவர்களிடம் ஹசனைத் தாண்டியும், மெஹ்தி ஹாசன், மொஸாதெக் ஹுசேன் ஆகிய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.
இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். விரல் காயம். 15-பேர் கொண்ட இந்திய அணியில், தவனின் இடத்தில், டெல்லியின் அதிரடி பேட்ஸ்மன் ரிஷப் பந்த். ஒரு-நாள் போட்டியில் அப்படியொன்றும் அனுபவம் ரிஷப்-இற்கு இல்லை. வெறும் ஐந்து சர்வதேசப் போட்டிகள். சராசரி 23.2 ரன்கள். எனினும், தவனைப்போல இவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர். எதிரி டீமின் ஸ்பின்னர்கள் ஆளநினைக்கும் மிடில்-ஓவர்களில் கடுமையாக எதிர்த்துத் தாக்கும் இயற்கைத்திறன் உள்ள இளம்வீரர். இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலு சேர்ப்பார் என்பது கணிப்பு. ஆஃப்கானிஸ்தானுக்கெதிரான இன்றைய (22-6-19) போட்டியில் ரிஷப் பந்த் இறக்கப்படலாம். ஒருவேளை, நான்காம் இடத்தில் இறங்கப்பட்டால், ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான், முஜீப்-உர்-ரஹ்மான் ஆகிய உலகத் தரமான ஸ்பின்னர்களை எப்படி ஆடுகிறார் என்பது கிரிக்கெட் நிபுணர்கள்/வர்ணனையாளர்களால் கூர்மையாகக் கவனிக்கப்படும்.
ரிஷப் பந்த் (Rishab Pant)
சரி, யாருடைய இடத்தில் இவர்? அனேகமாக விஜய் ஷங்கர் அல்லது கேதார் ஜாதவ், ரிஷப்-இற்கு வழிவிடவேண்டியிருக்கும். பாகிஸ்தானுக்கெதிரான ஹை-ஆக்டேன் மேட்ச்சில் ஷங்கரின் பங்களிப்பை மனதில் கொண்டு, அவரை இன்றைய போட்டியிலிருந்து நீக்க, விராட் கோஹ்லிக்கு மனம்வராமல்போகலாம்!
மேலும் மாற்றங்கள் இருக்குமா? இருக்கும். இந்தியாவின் ஸ்விங் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விளையாடாத நிலை. 140+ கி.மீ. -யில் பந்து வீசும் முகமது ஷமி, புவனேஷ்வரின் இடத்தில் புகுந்துகொள்வார். பும்ரா, ஷமி, பாண்ட்யா என்பது அணிக்கு அமையும் ஒரு கூர்மையான வேகப்பந்துவீச்சு.
ரிசர்வ் பெஞ்சில் ஜடேஜாவும், கார்த்திக்கும் பொறுமையாக உட்கார்ந்து உலகக்கோப்பையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய அல்லது அடுத்துவரும் வெஸ்ட் இண்டீஸுக்கெதிரான போட்டியில் இவர்களில் ஒருவராவது உள்ளே வரவேண்டும். ரிசர்வ் ஆட்டக்காரர்களை அவ்வப்போதாவது மைதானத்திற்குள் இறக்கினால்தான், அவர்களது நம்பிக்கையும் தளராது இருக்கும். டச்சிலும் இருப்பார்கள். நாளைக்கு தேவைப்படுகையில், அவசரமாக அவர்களை உள்ளே இழுக்கமுடியும், என்பதை அறிந்தவர்தான் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி.
இங்கிலாந்துக்கெதிரான கடந்த மேட்ச்சில் ஆஃப்கானிஸ்தான் – குறிப்பாக பௌலர்கள்- கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். ஆஃப்கன் சிறப்பு ஸ்பின்னரான ரஷீத் கானை இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் நொறுக்கித்தள்ளிவிட்டார்கள். அடிபட்ட பாம்பாக ஆஃப்கானிஸ்தான் இன்று சீறக்கூடும். புதிய வீரர்களை டெஸ்ட் செய்வதோடு,இந்தியா கவனத்தோடு விளையாடுவது உத்தமம். நேற்றைய (21-6-19) மேட்ச்சில், வலிமையாகத் தெரிந்த இங்கிலாந்து, ஸ்ரீலங்காவிடம் செமயா உதைபட்டதை, இந்தியா நினைவில் கொள்வது நல்லது.
யாரிடம் தங்களது கிரிக்கெட் அணி தோற்றாலும் பாக். ரசிகர்களுக்கு அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டி ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை செமயா நகட்டிவிட்டது. ம்..ஹூம்.. அலட்டிக்கொள்ளவில்லை, பச்சைச் சட்டைகள்.
ஆனால்… இந்தியாவிடம் மட்டும் தோற்றுவிடக்கூடாது! (இந்தியர்களில் பலரும் கிட்டத்தட்ட இப்படித்தான்!) இந்தியாவிடம் தோல்வியென்றாலே பாகிஸ்தான் அலற ஆரம்பித்துவிடுகிறது. வருகிற கடுப்பில், பாக். ரசிகர்கள் அவர்களது கேப்டனில் ஆரம்பித்து யாரையும் விடுவதில்லை. கிழித்துவிடுகிறார்கள் கிழித்து. போதாக்குறைக்கு, பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் போன்ற சில முன்னாள் வீரர்கள்வேறு, எரியும் நெருப்பில் நெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! கடந்த இரண்டு தினங்களாக டிவி-சேனல்களிலும், ட்விட்டர்களிலும் பச்சைகளின் அலம்பல், அக்கப்போர் தாங்கமுடியவில்லை! சில மனோரஞ்சகம். சில டமால்! சில உருக்கம்.. பார்ப்போம்:
Shabbir – ஒரு பாக் ரசிகர் ட்விட்டுகிறார்:
இந்தியாவுடனான ஆட்டத்திற்கு முதல் நாள் பாக். ரசிகர்கள்: Rain, rain go away.. We want Pak to play..
ஆட்டத்தின்போது: Rain..rain.. where are you ? Come back !
*
ஷப்பீர் – இன்னுமொரு ட்வீட்: பாகிஸ்தான் எந்த மாதிரி டீம்னா, இவனுங்க பௌலிங் போட்டா, பிட்ச் பேட்டிங் பிட்ச்சாத் தெரியுது.. பேட்டிங் செஞ்சானுங்கன்னா, பிட்ச் பௌலிங் பிட்ச்சா மாறிடுது!
*
அலீனா என்கிற பாக். ரசிகை: ‘இந்தியா, பாகிஸ்தான் என நாட்டைப் பிரிக்காது இருந்திருந்தால், இந்த அவமானம் ஏற்பட்டிருக்குமா!’
ட்விட்டரில் இன்னொருவர்: ’ஒரு-நாள் போட்டிகளில் இந்தியாவின் விராட் கோலி மட்டும் அடித்த சதம்: 41. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து அடித்த சதம்: 41. எந்த அணி சிறந்தது என்பதற்கு இதைவிட வேறு நிரூபணம் தேவையில்லை!’
*
வைரலான பாக். கேப்டனின் கொட்டாவி !
இந்தியா-பாக் ஆட்டத்தின் முதல் மழை-இடைவெளிக்குப் பின் ஆடவந்த பாக் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது விக்கெட்டிற்குப் பின் நிற்கிறார். பாவம். மனுஷனுக்கு அசதி.. கொட்டாவி விடுகிறார்.. இந்தப் படத்தைச் செமயா பிடித்துக்கொண்டார்கள் பாக் ரசிகர்கள். வைரல்தான்!
பாகிஸ்தானின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கான பெண் அமைச்சர் ஷிரீன் மஸாரி சேர்ந்துகொண்டார்: ’இதை ஒத்துக்கொள்வது வெறுப்பாக இருக்கிறது. ஆனால் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்: ஒருபக்கம் ஒருவரோடொருவர் நன்றாக இணைந்து செயல்படும் ஒரு ப்ரொஃபஷனல் டீம்.. இன்னொரு பக்கம் ஒருத்தருக்கொருவர் சம்பந்தமே இல்லாத ஒரு அணி.. அதற்கு கொட்டாவி விடும் ஒரு கேப்டன்! கஷ்டம்..!’
*
பாக். ரசிகரைத் தேற்றும் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்
ஒரு பாகிஸ்தானி, இந்தியாவிடம் தோற்ற துக்கத்தின் உச்சியில் ட்விட்டுகிறார்: ’நான் இறந்தால், என்னை இந்த சர்ஃப்ராஸ் அகமது சவக்குழியில் தள்ளட்டும். அதுவே என்னை அவன் கடைசிமுறையாகக் கீழே தள்ளுவதாக இருந்துவிடட்டும்!’
*
ஒரு ரசிகர் கொஞ்சம் மென்மையாக ட்விட்டரில்: ’இது ஒரு விளையாட்டுத்தாம்பா.. விடுங்க..!’
அடுத்தவரின் பதிலில் அரசியல் நெடி! ‘இந்த அரசாங்கம் (இம்ரான் கானின் அரசைச் சொல்கிறார்) பதவியேற்றதிலிருந்து, நல்ல நியூஸே வரமாட்டேங்குதே!’
*
பாக் டிவி சேனலில் வருகிறது, இந்தியா-பாக். ஆட்டம்பற்றிய ரசிகர்களின் நேர்காணல் நிகழ்ச்சி. அதில் ஒரு பாக். ரசிகர் ஹைப்பர்.. சூப்பர் ஹைப்பர்! இந்தியாவிடம் தோற்ற அவமானம் தாங்கமுடியவில்லை.. பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸைப் போட்டுக்கிழிக்கிறார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்த முதுகில் மெல்லத் தட்டுகிறார்கள். அவரால் அடக்கமுடியவில்லை:
’மழை இடைவேளையில சிக்கன் பிரியானியும், க்ரீம் ஷேக்கும் அடித்துவிட்டுவந்தா, கொட்டாவி வருமா..வராதா! சொல்லுங்க.. இவன்லாம் ஒரு கேப்டனா..’ என்கிற ரீதியில் எகிற, தட்டிக்கொடுத்த நண்பர்கள் அவரை அடக்குவதாக எண்ணி, அடிப்பதுபோல் முதுகில் ரெண்டு போடுகிறார்கள். ரசிகர் மேலும் ஆத்திரமாகி கத்துகிறார்: ‘அடிங்கப்பா! அடிங்க! என்னய மொதல்ல அடிங்க.. அவன (பாக். கேப்டனை) ஒன்னும் கேட்டுராதீங்க.. என்னயப்போட்டு சாத்துங்க.. அதான் சரி!’
இந்த இடத்தில் நமக்கே பாவமாயிருக்கிறது. அவர் பாகிஸ்தானியாக இருந்தாலென்ன? தன் நாட்டு அணி, எதிரியிடம் இப்படி அவமானத்தோல்வி அடைந்துவிட்டதே என ஓவர்-உணர்ச்சியில் படபடக்கிறார் மனுஷன்.. அவரால் முடியவில்லை.
*
பாக். ரசிகர்களின் ஆத்திரத்தில் நம் நாட்டு டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்ஸாவும் மாட்டிக்கொண்டார். சானியாவின் கணவர் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மன் ஷோயப் மாலிக் ஆயிற்றே.. மேன்செஸ்டரில், பாக். அணியில் சிலருக்கு டின்னர் தந்திருக்கிறார்கள் சானியாவும், அவர் கணவர் ஷோயப்பும். பாட்டிலும், புகையுமாக பாக். வீரர்கள் ‘ஷீஸா’ எனப்படும் அந்த ரெஸ்ட்டாரண்டில் அமர்ந்திருக்கும் அந்தப்படம் பாக். ரசிகர்களிடம் சிக்கிவிட்டது. படத்தில் சானியா, ஷோயப், ஹாசன் அலி, இமாத் வாசிம், வஹாப் ஆகியோர் தெரிகிறார்கள். இன்னுமொரு பெண்ணும்.. பாகிஸ்தான் ரசிகர்கள் விடுவார்களா! ட்விட்டரில் ஒரே ரகளை..
’முக்கியமான ஆட்டத்திற்கு முதலான ராத்திரியில் இப்படி 2 மணிவரை ‘ஹூக்கா’ பிடித்துக்கொண்டு, தின்னு, கூத்தடிச்சா, அடுத்த நாள் ஆட்டம் நாசமாத்தானே போகும்? பாக். டீம்ல ஒருத்தனுக்காவது டிஸிப்ளின் இருக்கா? கோச், கேப்டன்லாம் என்னடா செய்றான்க !
*
கூடவே இன்னுமொரு ட்வீட், சானியாவை நோக்கி: ஏம்மா! பாகிஸ்தான் டீமுக்கு டின்னர் கொடுக்க ஒனக்கு இப்பதான் நேரம் கெடச்சுதா!
இந்தியாவின் சண்டைக்கோழியான சானியா மிர்ஸா விடுவாரா? ட்விட்டிவிட்டார்:
’முதல்ல இந்த படத்த எங்க அனுமதியில்லாமப் போட்டதே தப்பு.. தோக்கற டீம் டின்னர் சாப்பிடக்கூடாதுன்னு யாரு சொன்னது! மந்தங்களா.. போய் வேற காரணத்தத் தேடுங்க!
இருதரப்பிலும் ரசிகர்கள் துடிப்புடன் காத்திருந்து அனுபவித்த, மேன்செஸ்டரில் நேற்று (16-6-19) ஆடப்பட்ட உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் முன் பாகிஸ்தான், கல்லின் கீழ் கண்ணாடியென நொறுங்கியது. உலகக்கோப்பை வெற்றி ஸ்கோர் 7-க்கு 7. India in seventh heaven !
‘அப்பாக்கள் தின’த்தன்று நடந்த மேட்ச் பற்றி அமுல் விளம்பரம் !
ஏகப்பட்ட hype-உடன் அரங்கேறிய போட்டியின் சில அம்சங்கள்:
டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அனுப்பிய பாகிஸ்தானுக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பைப் போட்டிகளில் தன் இரண்டாவது சதத்தை விளாசினார் (140). பாக். ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு, எதிரி பௌலர்களை புரட்டி எடுத்துவிட்டார் ரோஹித். முகமது ஆமீர் மட்டும் ஒரு விதிவிலக்கு. முதன்முறையாக ரோஹித்துடன் ஒரு-நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ராஹுல் அரைசதமடித்து வெளியேறினார், 77 ரன் எடுத்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோஹ்லி, ஆமீரின் பந்துவீச்சில், தான் காட்-பிஹைண்ட் ஆகிவிட்டதாக நினைத்துத் தானாகவே வெளியேறிவிட்டார். அம்பயருக்கே ஒருகணம் ஒன்றும் புரியவில்லை! இந்தக்காலத்தில் இப்படி ஒரு அசடு! ரீப்ளேயில் அவர் அவுட் இல்லை எனத் தெரிந்தது. நான்காவதில் வந்த பாண்ட்யா 26, தோனி 1 என நடையைக்கட்ட, உலக்கோப்பையில் முதல் மேட்ச் ஆடவந்த விஜய் ஷங்கரும், கேதார் ஜாதவும் கொஞ்சம் சேர்த்து, இந்திய ஸ்கோரை 336 எனக் காண்பித்தார்கள். இடையிலே, வருண பகவான் வந்து பார்த்துவிட்டுப் போனார்!
பாகிஸ்தானுக்கு வெல்ல, 337 தேவை. மழை திரும்பும் பயமுறுத்தலும் இருந்தது. பாகிஸ்தான் பேட் செய்கையில், ஐந்தாவது ஓவரிலேயே தொடையை இழுத்துப்பிடிக்க, நொண்டிக்கொண்டே பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார் இந்தியாவின் பிரதான பௌலர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார். அவருடைய ஓவரில் இருந்த மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி ஓவரை முடிக்கவென, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரை அழைத்தார் கோஹ்லி. என்ன ஆச்சரியம்! உலகக்கோப்பையில் வீசிய தன் முதல் பந்திலேயே பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் -ஐ தூக்கிக் கடாசிவிட்டார் ஷங்கர். கோஹ்லிக்கே தன் கண்ணை நம்பமுடியவில்லை. அடுத்த முனையில் வீசிக்கொண்டிருந்த இந்தியாவின் டாப் பௌலரான பும்ராவுக்கே இன்னும் விக்கெட் விழவில்லை..
பாண்ட்யாவும் ஷங்கரும் கொஞ்சம் வீசியபின், இடதுகை ரிஸ்ட்-ஸ்பின்னரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் இந்தியக் கேப்டன். நூறு ரன் பார்ட்னர்ஷிப் போட்டு அப்போது அருமையாக ஆடிக்கொண்டிருந்த பாபர் ஆஸம் (Babar Azam) மற்றும் ஃபக்ர் ஸமன் (Fakr Zaman) ஆகிய பாக் நட்சத்திர வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தினார் யாதவ். பாகிஸ்தான் அதிர்ந்தது. இருந்தும் இன்னும் அவர்களிடம் இருக்கிறார்களே வீரர்கள்..
முகமது ஹஃபீஸ், விக்கெட் எடுக்க முயன்ற யஜுவேந்திர சாஹலை சிக்ஸருக்குத் தூக்கி ஏதோ சொல்லமுயன்றார். ஆனால் அந்தப்பொழுது வேறோன்றைச் சொன்னது. திரும்பவும் அழைக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா, அடுத்தடுத்த பந்துகளில் ஹஃபீஸையும், ஷோயப் மாலிக்கையும் பிடுங்கி எறிந்தார். 18 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ, பாக். ரத்த அழுத்தம் எகிறியது. புவனேஷ்வர் குமார் இல்லாத நிலையில், கோஹ்லிக்கு வேறு வழியில்லை. வாப்பா.. விஜய் ஷங்கர்! ஷங்கரின் மீடியம்-பேஸ் (medium pace) தொடர்ந்தது. தன் ஐந்தாவது ஓவரில், முன்னே வந்து ஆட முயன்ற பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதின் பின்னே, சிவப்பு விளக்கு எரியவைத்தார் ஷங்கர். ஸ்கோர் 35-ஆவது ஓவரில் 166/6. பாக். முதுகெலும்பில் விரிசல்! பச்சை-வெள்ளைக் கொடிகள் பறப்பதை நிறுத்திக்கொண்டன. பாரத் ஆர்மியின் மேளதாளம்.. பாக். ரசிகர்களில் சிலர் மெல்லக் கழண்டுகொண்டார்கள்.
திரும்பி வந்த மழை, ஆட்டத்தை நிறுத்தியது. மழை ஒருவழியாக நின்று, சென்று, ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது , டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி, 40 ஓவர்களில் 302 எடுத்தால்தான் வெற்றி என்கிற மோசமான நிலை பாகிஸ்தானுக்கு. இந்திய பௌலர்களின் இறுக்கமான பந்துவீச்சினால் ஏற்கனவே ரன்விகிதம் குன்றிப்போயிருந்தது. இறுதியில் 212/6 ரன்களே முடிந்தது. 89 ரன் வித்தியாசத்தில், பலமாக அடிவாங்கி வீழ்ந்தது பாகிஸ்தான். இந்தியாவின் கையில், இன்னுமொரு மோசமான தோல்வி. பாகிஸ்தானில் ஏகப்பட்ட டிவி- செட்டுகள் உடைந்து நொறுங்கியதாகக் கேள்வி.. ’அப்பாக்கள் தின’த்தன்றா இப்படியெல்லாம் செய்வது !
இங்கிலாந்தின் மேன்செஸ்டரில் (Old Trafford, Manchester) இன்று (16-6-19) நடக்கவிருக்கும் போட்டி, இந்த உலகக்கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று. சுமார் 1.5 billion ரசிகர்கள் உலகெங்குமிருந்தும் இந்தப் போட்டியைப் பார்க்க இருக்கிறார்கள் என்கிறது ஒரு மதிப்பீடு. இத்தனை பெரிய ரசிகர்கூட்டம் வேறெந்த கிரிக்கெட் போட்டிக்கும் அமைய வாய்ப்பில்லை! இருநாட்டு ரசிகர்களும் சில இரவுகளாகவே தூக்கத்தை விட்டுவிட்டு கைகளில் கொடி, முகத்தில் வர்ணம், மனமெலாம் ஏக்கமென வலம் வந்துகொண்டிருப்பார்கள். ஐசிசி-க்கும் ஒரே ஆனந்தம்- இந்திய, பாக் வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் மேன்செஸ்டரில் இதற்காகத்தானே மேட்ச் வைத்திருக்கிறார்கள்? வருமானம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுமே.. பார்த்துப் பார்த்துத்தான் இந்த ஞாயிறு ’ஸ்லாட்’டும் கொடுக்கப்பட்டுள்ளது இந்தப் போட்டிக்கு. ஆனால் மேலே ஒருவர் இருக்கிறார் – வருணதேவன்! இதுவரை நாலைந்து மேட்ச்சுகளைக் காலிசெய்துவிட்ட தேவாதி தேவன்! இன்றைய கதைக்கு எந்தமாதிரி கட்டம் போட்டுவைத்திருக்கிறாரோ, தெரியவில்லையே..
உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 6 முறை சந்தித்திருக்கின்றன. அனைத்திலும் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்திருக்கிறது. இது ஏதோ, தற்செயலாக நடந்ததல்ல. இப்படி தொடர்வெற்றிகளை வேறெந்த நாடும் தன்னுடைய பரம வைரிக்கெதிராக (உதாரணம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து), நிகழ்த்தியதில்லை. மெச்சத்தக்க இந்திய வெற்றிகள் இவை.
2017-ல் இங்கிலாந்தில் நடந்த ‘சேம்பியன்ஸ் ட்ராஃபி’யில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் இந்தியா காண்பித்த மோசமான, பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக, கோபமுற்ற இந்திய கோச் அனில் கும்ப்ளே சில இந்திய வீரர்களைக் கூப்பிட்டுக் கண்டிக்கப்போய், அது கேப்டன் கோஹ்லிக்குப் பிடிக்காமல் போக, கும்ப்ளே தன் கோச் பதவியை விட்டு விலக நேர்ந்தது. அந்த எளிதான வெற்றியை பாகிஸ்தான் மனதில் நினைத்து மகிழ்ந்து, உலகக்கோப்பையிலும் அது தொடரவேண்டும் என ஏங்குகிறது. அதன் ரிபீட்டைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும், ரசிகர்களும் இன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானி வீரர்களில் ஹாரிஸ் ஸோஹைல் மற்றும் ஆசிஃப் அலி மட்டுமே, தனிப்பட்ட காரணங்களுக்காக, தங்களது மனைவிகளை உலகக்கோப்பையின்போது இங்கிலாந்துக்கு அழைத்துவர பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டினால் அனுமதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களும் தங்களின் மனைவிகளை இங்கிலாந்துக்கு அழைத்துவர போர்டின் அனுமதியைக் கேட்டனர். பாக். போர்டின் ’இன்ஃபார்மலான பதில்’ இப்படி இருந்திருக்கிறது: ’முதலில் ஜூன் 16-ல் இந்தியாவுக்கெதிராக விளையாடி ரிசல்ட்டைக் காண்பியுங்கள். பிறகு மனைவிமார்களின் கதையைப் பேசுவோம்!’
இந்திய வீரர் கிரன் மோரேயின் மீது பாயும் பாகிஸ்தானின் ஜேவத் மியாண்டாட் (உலகக்கோப்பை 1992)
இந்தியாவை வீழ்த்துவதுபற்றி ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மீடியா, கிரிக்கெட் போர்டு என எல்லா திசைகளிலும் துடிக்கிறது பாகிஸ்தான்! இந்தியாவை ஜெயிப்பது, உலகக்கோப்பையை வெல்வதை விடவும் முக்கியம் என்று பச்சையாகவே சொல்லிவிட்டார் முன்னாள்வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை செலக்டருமான இன்ஸமாம்-உல்-ஹக்.
இந்தியா விளையாடும் மைதானங்களிலெல்லாம் படையெடுக்கும் ’பாரத் ஆர்மி’ உட்பட, இந்திய ரசிகர்களில் பலரும் பாகிஸ்தான் விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரு வெறியோடுதான் திரிகிறார்கள்!. ’ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் விளையாடினாலும், இது எங்களுக்கு இன்னுமொரு போட்டிதான்!’ -என்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி, ’இது ஒரு marquee event! எங்களிடமிருந்து உச்சபட்ச திறமையை இந்தப் போட்டி வெளிக்கொணரும்..’ என்றும் சொல்லியிருக்கிறார். அணித் தேர்விலிருந்து, போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் அழுத்தம் வீரர்களின்மீது சற்றுக் கூடுதலாக இருக்கத்தான் செய்யும். இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு இருபுறத்திலிருந்தும் கோடிக்கணக்கானோர் காட்டும் ஹைப்பர் எமோஷன் -தான் இதற்குக் காரணம். ஒன்றும் செய்வதற்கில்லை. Lets enjoy !
பாகிஸ்தான் தரப்பிலிருந்து பேட்ஸ்மன்கள் ஃபக்ர் ஜமன், இமாம்-உல்-ஹக், பாபர் ஆஸம், முகமது ஹஃபீஸ் முக்கியமானவர்கள். பௌலிங்கில் வேகப்புலி முகமது ஆமீர் இந்தியாவுக்கு சவாலாக இருப்பார்.
ஷிகர் தவன் காயம் காரணமாக ஆடமுடியாத நிலையில், ரோஹித் ஷர்மாவுடன் கே.எல்.ராஹுல் ஆட்டத்தைத் துவக்குவார் என்பது நிச்சயம். நான்காவது இடத்தில் யார் என்பது இந்தியாவின் இன்றைய பெரிய கேள்வி! விஜய் ஷங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் எனப் பெயர்கள் அடிபடுகின்றன. ஷங்கரைவிட கார்த்திக்கிற்கு சர்வதேசப்போட்டிகளின் அனுபவம், மற்றும் big match temperament உண்டு. கவனிக்கப்படவேண்டிய விஷயம் இது. ரவீந்திர ஜடேஜா அவருடைய அதிரடி பேட்டிங், இடதுகை ஸ்பின் பௌலிங்கிற்காக இணைக்கப்பட ஒரு ‘outside chance’ தெரிகிறது. ஒருவேளை, வெள்ளிக்கிழமைதான் இங்கிலாந்து வந்துசேர்ந்த ’இளம்புயல்’ ரிஷப் பந்த்-ஐ, நேரடியாக அணியில் 4-ஆம் இடத்தில் போட்டுவிடுவார்களோ! ரிஷப் பந்த் மிடில்-ஆர்டரில் உள்ளே புகுந்து பாக் பௌலர்களைத் துரத்தித் தாக்கினால், அதைவிட ரசிகர்களுக்குக் குஷி ஏதுமில்லை. ஹர்தீக் பாண்ட்யா, தோனி போன்றோரிடமிருந்தும் இத்தகைய எதிர்பார்ப்புகள் எகிறுகின்றன. பும்ரா, புவனேஷ்வர், சாஹல், குல்தீப் ஆகிய இந்திய பௌலர்கள், பாகிஸ்தானை சாய்க்க ஏதாவது வியூகம் வைத்திருப்பார்கள்.
இன்னும் சிலமணிநேரங்களில் ஆட்டத்தின் போக்கு தெரிய ஆரம்பிக்கும். இருதரப்பு ரசிகர்களே, நிதானம்! வெடிகள் ரெடி !
நேற்று (12-6-19) நடந்த உலக்கோப்பைப் போட்டியில் அதிகம் சிரமப்படாமல், சாதாரணமாக பாகிஸ்தானை வீழ்த்திக் காட்டியது ஆஸ்திரேலியா. 307 ரன் எடுத்து அசத்திய ஆஸ்திரேலிய பேட்டிங்கில், டேவிட் வார்னரின் சதம் வைரமென மின்னியது.
கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த டெஸ்ட்டின்போது நடந்த பந்தை சேதப்படுத்துதல் (ball tampering) சர்ச்சையில் வசமாக மாட்டி, ஒருவருட விளையாட்டுத்தடைபெற்ற மூவரில் ஒருவர் இந்த வார்னர். அவருடைய சர்வதேச கிரிக்கெட் கேரியர் கிட்டத்தட்ட அஸ்தமித்துவீட்டதுபோன்ற நிலை அப்போது. ‘அவந்தான் பண்ணச்சொன்னான்!’, ‘நா ஒன்னும் பண்ணல. அவன் தப்பு பண்றதப் பாத்தேன்.. ஆனா பண்ணாதேன்னு சொல்லாமப்போய்ட்டேன்!’ என்பதுபோல பான்க்ராஃப்ட்டும் (Cameron Bancroft), கேப்டன் ஸ்மித்தும், பத்திரிக்கைக்காரர்கள் முன் அழுது, மூஞ்சி சிவந்து காட்சிகள் போட்டுக்கொண்டிருக்கையில், வார்னர் ஒன்றும் சொல்லாது ஒதுங்கிக் கிடந்தார். எதையாவது உளறி கிளறிக்கொட்டி, மேற்கொண்டு மாட்டிக்கொள்ளவேண்டாம் என நினைத்திருக்கலாம்.. அல்லது நொறுங்கிப்போய் மூலையில் விழுந்திருக்கலாம். இப்படி ஏதோ ஒன்று.
ஒருவருடம் என்பது ஒரு விளையாட்டுவீரருக்குப் பெரிய காலவெளி. நேஷனல் டீமிலிருந்து விலக்கப்பட்டுவைக்கப்பட்டிருப்பது என்பது தண்டனை என்பதோடு ஒரு பெரும் அவமானமும். ஒரு முனைப்பான சிறப்பு ஆட்டக்காரருக்குக் கடும்சோதனை. இத்தகைய மோசமான சூழலில், மனதைத் திடப்படுத்தி, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்து, ஆடி, ஓடி, வாயை மூடி, திரும்பவும் அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், வார்னர் மற்றும் ஸ்மித் விஷயத்தில் இது நடந்திருக்கிறது.
உலகக்கோப்பைத் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்தபின்னரும், வார்னர் கிரிக்கெட் விமரிசகர்களால் தூற்றப்பட்டார். ஏன்? வழக்கத்துக்கு மாறான மந்தமான ஆட்டம். இப்படி கட்டையைப்போட்டு ஓவர்களை வேஸ்ட் செய்வதா ஒரு ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை? – என அவரைக் கடுமையாகச் சாடினர். வார்னர் பதில் சொல்லவில்லை. ’சிறப்பான பங்களிப்பு அளிக்கவேண்டும்’ என்கிற அழுத்ததில் ஆடுகிறார் அவர் என்றார் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்.
நேற்று பாகிஸ்தானுக்கெதிராக கவனமாக ஆட ஆரம்பித்து இறுதியில் சதம் போட்டபின்தான், வார்னர் பழைய வார்னராகக் காணப்பட்டார். ஆள் சமநிலைக்கு வந்திருக்கிறார். மீடியாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்கையில், நேற்று இப்படிக் கூறினார்:
மனைவி, குழந்தைகளுடன் டேவிட் வார்னர்
அந்த மூன்று மாதங்கள் (விளையாடத்தடை விதிக்கப்பட்டதன் பின்னான) கொடுமையானவை. நான் என்னை, எல்லாவற்றிலிருந்தும் விலக்கிக்கொண்டேன். மூலையில் விழுந்துகிடந்தேன். என் மனைவிதான் தினமும் வந்து, வந்து என்னைத் தட்டி எழுப்புவாள். உடற்பயிற்சி செய்யச்சொல்வாள். சின்னச் சின்ன டி-20 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடச்சொன்னாள். உடற்தகுதியும், தொடர்ந்த கிரிக்கெட் ஆட்டமும் எனக்கு இந்தக் காலகட்டத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தாள். விடாத முனைப்புக் காட்டி என்னை விரட்டிக்கொண்டிருந்தாள். என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தாள். இலக்கை நோக்கித் தீவிரமாகத் திருப்பிவிட்டாள். வலிமையான, நம்பமுடியாத பெண் அவள்!’ என்று தன் மனைவி கேண்டிஸ் (Candice Warner)-இன் புகழ்பாடுகிறார் வார்னர்.
மேலும், ‘என்னுடைய மனைவி, குழந்தைகள் என, குடும்பம்தான் எனக்குத் துணையாக இருந்தது இந்தக் காலகட்டத்தில். அவளுக்குத்தான் எல்லா க்ரெடிட்டும்!’ என்கிறார் வார்னர்.
நல்ல மனைவிமார்கள் நம்ப நாட்டில்தான்! – என இறுமாப்புகொள்ளவேண்டாம் என்பதற்காகவும் இந்தக் கட்டுரை!
நேற்று (09-06-19) லண்டனின் ஓவல் மைதானத்தில் ஒரு high-scoring மேட்ச்சில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தூக்கி வீசியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி, கடுமையாகவே அமைந்தது. சில சிறப்பு அம்சங்களை மட்டும் கவனிக்கலாம்.
இந்தியா முதலில் பேட் செய்கையில், அதிகவனமாக ஆரம்பித்தது. முதல் பவர் ப்ளேயில் (10 ஓவர்கள்) விக்கெட் இழக்காமல், ஒரு அஸ்திவாரம் அமைத்துக்கொண்டு, பிறகு தாக்கலாம் என்பது வியூகம். நேற்று இந்தியாவின் நாள் – வியூகம் க்ளிக் ஆனது! ரோஹித், விராத் கோலி அரைசதங்கள், தவன் சதம் என அமர்க்களமாக இருந்தாலும் கடைசி 10 ஓவர்களை நெருங்குகையில் பேட்டிங் இன்னும் வேகமெடுத்தாலொழிய சரியான இலக்கை எதிரிக்குக் கொடுக்கமுடியாது என்கிற எண்ணம் கோஹ்லியின் மனதில் அரித்துக்கொண்டிருந்திருக்கவேண்டும்.
Hardik Pandya
37-ஆவது ஓவரில் ஷிகர் தவன் விழுந்தவுடன், கே எல். ராஹுல் வந்திருக்கவேண்டும். பெரிதும் பேசப்பட்ட 4-ஆம் எண் ஆட்டக்காரரின் நிலையில் ஹர்தீக் பாண்ட்யாவை அழைத்தார் கோஹ்லி. பௌலரைப்பற்றி சிந்திக்காமல், இறங்கியவுடன் விளாசும் தன்மைவாய்ந்த உலகின் மிகச் சில வீரர்களுள் பாண்ட்யாவும் ஒருவர். A freakish streak in him all the time.. கோஹ்லி எதிர்த்திசையில் ஆடிக்கொண்டிருக்க, சில பந்துகளிலேயே வெடித்தார் பாண்ட்யா. ஆஸ்திரேலியாவின் நேற்றைய சிறந்த பௌலரான கம்மின்ஸை (Pat Cummins) ஏறிவந்து, அவருடைய தலைக்குமேலே சிக்ஸர் தூக்கியும், ஆஃப் சைடில் பௌண்டரி விளாசிய விதமும் ஆஸ்திரேலியாவை நடுங்கவைத்தது. அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை என்பது வேறுவிஷயம். 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளென, வெறும் 27 பந்துகளில் 48 விளாசல். கோஹ்லிக்கும் இந்தியாவுக்கும் அந்த நேரத்தில் அதுதான் தேவையாக இருந்தது. பாண்ட்யாவுக்குப்பின் வந்த எம் எஸ் தோனி தன் பழையபாணியை மறக்கவில்லை. 14 பந்துகளில் 27 ரன்கள் அவரிடமிருந்தும் பறக்க, ஆஸ்திரேலியா பதறியது. இடையிடையே விக்கெட்டுகள், கோஹ்லி உட்பட விழுந்தும் இந்தியா உயர்ந்து எழும்பியது. 352 என இந்தியா ஸ்கோரை முடித்துக்கொண்டு, ’வந்து விளையாடிக் காமிங்கடா பாக்கலாம்! – என்றது ஆஸ்திரேலியாவை!
அதிரடிக்குப் பேர்போன டேவிட் வார்னர், அரைசதம் கடந்தாலும், மிக மந்தமான பேட்டிங் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமரிசகர்களைக் கடுப்பேற்றினார். அதிரடியாவது, மண்ணாவது, விட்டால்போதும் என்றாகிவிட்டது, ஃபின்ச் (Aaron Finch), கவாஜா, மேக்ஸ்வெல் போன்ற ஒவ்வொரு ஆஸ்திரேலிய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனுக்கும். நின்று ஆடி ரன் சேர்த்த ஸ்டீவ் ஸ்மித், 69 எடுத்து அவுட் ஆகையில் ஆஸ்திரேலியாவுக்கு ஏறவேண்டிய மலையுச்சி உயரத்தில் மிக உயரத்தில் தெரிந்து பயமுறுத்தியது. புவனேஷ்வர், சாஹல், குல்தீப் என இந்திய பௌலர்களுக்கு வேகமாக விக்கெட் விழவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவைத் துள்ள விடவில்லை. கடும் கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலிய அதிரடிகளை அழுத்திவைத்திருந்தார்கள். வெஸ்ட் இண்டீஸுக்கெதிராக ஒரேயடியாக ஆட்டம்போட்ட நேத்தன் கூல்ட்டர் நைலை (Nathan Coulter-Nile), 9 பந்துகளில் கழுத்தை நெறித்து வெளியேற்றினார் பும்ரா (Jasprit Bumrah). எதிர்பாராதவிதமாக, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே (Alex Carey) 35 பந்துகளில் 55 எனத் தூள்கிளப்பினார். அதைத்தவிர, ஆஸ்திரேலியாவிடம் அவிழ்த்துவிட வேறொன்றுமில்லை. டெத் ஓவர்களை (death overs) பும்ராவும், புவனேஷ்வரும் அபாரமாக வீச (49-ஆவது ஓவரில் பும்ரா கொடுத்தது ஒரு ரன் – அதுவும் தோனியின் மிஸ்ஃபீல்டிங்கினால் விளைந்தது!), அழுத்தம் உச்சத்தைத் தொட, விக்கெட்டுகள் நொறுங்கின. ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத தோல்வி. நீலத்திற்கு முன், மஞ்சளினால் ஆட்டம் காண்பிக்க முடியவில்லை. ரிஸல்ட்!
சில சுவாரஸ்யங்கள்:
1. Ball tampering கேஸில் மாட்டி, ஒருவருட ban-ற்குப்பின் ஆட வந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பௌண்டரி எல்லையில் ஃபீல்ட் செய்துகொண்டிருக்கையில் இந்திய ரசிகர்களின் ஒரு குழு cheat ! .. cheat ! எனக் கூச்சலிட்டு கலவரப்படுத்தினர். இந்தியக் கேப்டன் கோஹ்லி தன் ஜெர்ஸியைக் காண்பித்து ’எங்களை ஆதரித்துக் கோஷமிடுங்கள். அவரைத் தொந்திரவு செய்யவேண்டாம்’ என ரசிகர்களை நோக்கி சைகை செய்தும், ரசிகர்கள் நிறுத்தவில்லை. ஆட்டம் முடிந்தபின் இந்திய ரசிகர்களின் இந்த செய்கைக்காகத் தான் மன்னிப்பு கேட்பதாக ஸ்மித்திடம் கூறினார் கோஹ்லி.
2. ஆஸ்திரேலியா பேட் செய்கையில் பும்ரா வீசிய முதல் பந்து டேவிட் வார்னரின் லெக்ஸ்டம்பிற்குக் கிஸ் கொடுத்துச் சென்றது பெய்ல்களுக்கு(bails) அது பிடிக்கவில்லை போலும். கீழே விழவில்லை! வார்னர் தப்பித்தார்.
3. ஆஸ்திரேலிய லெக்-ஸ்பின்னர் ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa) ஒவ்வொரு முறை பந்துவீசுவதற்கு முன்னும் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிடுவார். பின் பந்தைத் தேய்ப்பார். வீசுவார். பாக்கெட்டுக்குள் என்ன? ரசிகர்கள் சந்தேகப்பட்டார்கள். Ball tempering? (இப்போதுதான் இரண்டு ஆஸ்திரேலியர்கள் ஒருவருட தண்டனைக்குப்பின் ஆடத் திரும்பியிருக்கிறார்கள்). ஆஸ்திரேலிய கேப்டன் Finch விளக்கினார்: ஜாம்ப்பா தன் பாக்கெட்டுக்குள் hand-warmers வைத்திருந்தார். அதைத்தான் தொட்டுக்கொண்டார்! ஜாம்ப்பாவிற்கு விக்கெட் ஏதும் விழாததால், இது இத்தோடு விடப்பட்டது..
ஆயினும் ட்விட்டர்க்காரர்கள் சீறினார்கள். ஒருவர் : Australians were, are and will be cheaters..! இது ரொம்பவே ஓவர். ஆஸ்திரேலியா உலகக்கோப்பையின் வலிமையான அணிகளில் ஒன்று. நாம் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம்..
17-ஆம் நூற்றாண்டு. வெனிஸ் {இத்தாலியன்: வெனிஸியா (Venesia)}. ஏட்ரியாட்டிக் கடலின் (Aedriatic Sea) 100 குட்டித்தீவுகளாலான, இத்தாலியின் வடக்குப் பிரதேசமான வெனிட்டோவின் தலைநகர். பொதுவாகவே வெனிஸ் நகரம் அதன் துணிச்சலான பெண்களுக்குப் பேர்போனது. இங்கே வாழ்ந்த ஒரு பிரபுவிற்கு (Lord), ஜூன் 5, 1646-ல் பிறந்த அந்தப் பெண்குழந்தை ஒரு prodigy-யாகப் பின்னாளில் அறியப்பட்டாள். எதிலும் கூர்மையான கவனம். ஆழ்ந்த வாசிப்புத் திறன். புத்தகத்தைக் கையிலெடுத்துவிட்டால் கீழே வைப்பதில்லை. எப்போதும் படிப்புதான். வேறெதிலும் மனம் செல்லவில்லை. தனது மாளிகையின் ஒரு மூலையில், அமைதியான சூழலில், ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் மணிக்கணக்காக ஆழ்ந்திருப்பது அவளுக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வசதியான அப்பாவும் வீட்டில் நிறைய வாங்கிப்போட்டார். சிறப்பாசிரியர்களை வீட்டிற்கே வரவழைத்து, மொழிகளில் தனிப்பயிற்சி. தன் ஏழாவது வயதிலேயே பல்மொழி வித்தகர் என அழைக்கும் அளவுக்கு ஆகிவிட்டாள். க்ரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் சொந்த ஊர் மாஸ்டர்களே அவளை நிபுணியாக்கிவிட்டார்கள். மேலும், ஃப்ரெஞ்ச், ஸ்பேனிஷ் ஆகியவற்றையும் கற்ற அந்தச் சிறுமி பிற்காலத்தில், ஹீப்ரூ, அரபி மொழிகளையும் விட்டுவைக்கவில்லை. கவனியுங்கள். நமது சமகாலப் பெண்ணொருத்தியின் கதையல்ல இங்கே படித்துக்கொண்டிருப்பது. ஐரோப்பாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விசித்திரமான பெண்பற்றியது. இத்தாலியின் பிரதான மதமான கிறித்துவமும், கட்டுப்பெட்டித்தனமான அந்தக்கால சமூகச்சூழலும், பெண்களை ஆண்களுக்கு சரிநிகராக நடத்துவதை விடுங்கள் – ஒப்பிட்டுப் பேசுவதைக்கூட, கடுமையாகக் கண்டித்த, நிராகரித்த ஒரு காலகட்டம். பிஷப் சொன்னால் போதும். அதுவே மந்திரம். அப்படியே தொடர்வதே வழக்கம். சாதாரண மக்களின் கடுமையான orthodoxy. இத்தகைய சூழலிலும் அதிசயமாக விளைந்துவிட்டது அந்த முத்து.
அந்த சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னும், அவளது படிப்பு பலதுறைகளுக்கும் நீண்டது. தர்க்கவியல், இயற்பியல். வானவியலென ஈடுபாடு வளர்ந்தது. கணிதத்திற்குள் நுழைந்து ஆழ்ந்த நாட்களுமுண்டு. அவ்வப்போது, ஹார்ப், வயலின் போன்ற இசை வாத்தியங்களிலும் அவளுடைய விரல்கள் விளையாடிவந்தன. தொட்டதில் எல்லாம் ஒரு மேன்மை. சரஸ்வதி தேவியே இத்தாலியில் வந்து இறங்கிவிட்டாளா?
இந்த நிலையில் ஒரு கட்டத்தில், இறையியல் (Theology) அந்த இளம்பெண்ணின் மனதை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. அதில் பட்டப்படிப்பிற்காக, வெனிஸுக்கு அருகிலிருந்த, உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான பதுவா பல்கலைக்கழகத்தில் (University of Padua, founded in 1222) சேர்ந்து பயின்றுவந்தாள். பட்டம் கிடைக்க இருக்கையில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து முணுமுணுப்பு, எதிர்ப்பு. ஒருவழியாக பல்கலைக்கழகத்தினர் அவர்களை சமாளித்து, அந்தப் பெண்ணிற்குப் பட்டம் கொடுத்துவிட்டனர்.
Elena Cornaro Piscopia
சரி, படிக்கும் ஆசை இப்பவாவது கொஞ்சம் குறைந்ததா? இல்லை. அது தீயாய் வளர்ந்துகொண்டிருந்தது. இறையியலில் நீங்காத கவனம். மேற்படிப்பை மேலும் தொடர்ந்தவள், இறையியலில் முனைவர் பட்டத்திற்கு (Doctor of Theology,) பல்கலைக்கழகத்தில், தன் பெயரைப் பதிவுசெய்து, படிக்க ஆரம்பித்தாள். 1669-ல் தன் 26-ஆவது வயதில், The Colloquy of Christ (அல்லது Dialogue of Christ – யேசுவின் உரையாடல்)-ஐ ஸ்பேனிஷிலிருந்து இத்தாலிய மொழிக்கு, திறம்பட மொழியாக்கம் செய்துவிட்டாள். கேள்விப்பட்ட, பதுவா மற்றும் வெனிஸ் நகர அறிஞர்கள், பேராசிரியர்கள் அரண்டுபோயினர்.
வருடம் 1672-ல் முனைவருக்கான மேற்படிப்பு முடிவுபெற்று, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட இருக்கும் நாளும் நெருங்கியது. வெனிஸின் கிறிஸ்துவ சபை, பெண்களை இறையியல், தத்துவம் போன்ற விஷயங்களில் தலையிடுவதைத் தடைசெய்திருந்த காலகட்டம். ஒரு பெண்ணிற்கு டாக்டர் பட்டம் கிடைக்கவிருக்கிறது என்கிற செய்தி நகரில் கசிய ஆரம்பித்தது. அவ்வளவுதான். பொங்கிவிட்டது கத்தோலிக்க கிறிஸ்தவ சபை. குறிப்பாக, பதுவா நகர பிஷப் (Bishop of Padua), க்ரெகோரியோ கார்டினல் பார்பரிகோ (Gregorio Cardinal Barbarigo). ‘அவள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தால்தான் என்ன? போயும் போயும் ஒரு பெண்ணுக்கா டாக்டர் பட்டம் தருவது? சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கறதா பல்கலைக்கழகத்தில நீங்கல்லாம் கூடி முடிவு பண்ணிட்டீங்களா? – என்கிற ரீதியில் பெருஞ்சத்தம்போட்டு, பலவிதத் தடைகளை எழுப்பி, அந்தப் பெண்ணிற்கு டாக்டர் பட்டம் தரப்படுவதற்குக் குறுக்கே வரிசைகட்டி நின்றனர். ஆறு வருட ஓயாத போராட்டத்துக்குப் பின் கத்தோலிக்க திருச்சபை மசிந்தது. எதிர்ப்புகள் ஒருவழியாக சமாளிக்கப்பட்டன. அவளுக்கு டாக்டர் பட்டம் அளிக்க பதுவா பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் இறுதிக்கட்டமாக, அறிஞர், நிபுணர் குழுவொன்றினால் அவள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவாளென அறிவிக்கப்பட்டது. பல்கலையின் மாணவர்கள், பழைய மாணவர்களோடு, இத்தாலியின் ஏனைய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெனிஸ் செனட்டர்கள், பல்துறை அறிஞர்கள் உட்பட பலர், இதுவரை நிகழ்ந்திராத, அந்த நம்பமுடியாத காட்சியைப் பார்க்க விரும்பியதால், பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வை நடத்தமுடியாது எனப் புரிந்துகொண்டார்கள். 1678-ல் அந்த நேர்முகத்தேர்வு பெரும்பாலானோரின் விருப்பப்படி, பதுவா நகரின் கத்தீட்ரல் முன் உள்ள பெரும் மைதானத்தில் நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.
தேர்வின்போது, தேர்வுக்குழுவின் துறைசார்ந்த நிபுணர்களால், சில நேரான, சில கடுமையான, மேலும் சில குண்டக்க மண்டக்கக் கேள்விகளுக்கு ஒரு பெண் – ஆ.. ஒரு பெண் – நேர்கொண்ட பார்வையில், நிதானமாக, தெளிவான குரலில், சரியான பதிலளித்தது, அனைவரையும் வாய்பிளக்கவைத்தது. அட, இப்படியெல்லாமா இந்த நாட்டில் நடக்கும் ! நேர்முகத்தேர்வுக்குப் பின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிஞர்கள், செனட்டர்கள் என குழுமியிருந்த பிரமுகர்கள்முன் பேச அழைக்கப்பட்டாள் அவள். தனது வளமான குரலில், க்ளாசிக்கல் லத்தீன் மொழியின் அழகுபொங்க, சுமார் ஒருமணிநேரம் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் படைப்பு ஒன்றைப்பற்றி தத்ரூபமாக விளக்கி அவள் பேசியபோது, அனைவரும் அசையாதிருந்து, உன்னிப்பாக அவளது பேச்சைக் கேட்டார்கள். இறுதியாக, அந்த அதிசயப்பெண், உயர் மதிப்பெண்களுடன் டாக்டர் பட்டத்திற்கு தேர்வாகிவிட்டதாக பல்கலைக்கழகக் குழுவினரால் அறிவிக்கப்பட்டபோது, பதுவா நகர் மட்டுமல்ல, கேள்விப்பட்ட முழு இத்தாலியே ஆச்சரியத்தில் உறைந்தது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் செய்தி வேகமாகப் பயணித்து பெரும் அதிர்ச்சியைத் தந்தது. என்ன! நிஜந்தானா? ஒரு லேடி பி.ஹெச்.டி..?
1678-ஆம் ஆண்டிலேயே, பதுவா பல்கலைக்கழகம் அவளை கணிதப் பேராசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியராகப் பணியாற்றியபோதும் மேலும் படிப்பு படிப்பெனவே அவள் மனம் சென்றது. அவளது படிப்பும், பண்பும், உழைப்பும், மாட்சிமையும் ஐரோப்பாவின் கல்விவெளியில் நன்கு பரவ ஆரம்பித்திருந்தது.
என்ன தோன்றியதோ அவளுக்கு, தன் 11-ஆம் வயதில், வாழ்நாள் முழுதும் கன்னியாகவே இருப்பேன் என சங்கல்பித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். அப்படியே இருக்கவும் செய்தாள். பின்னாளில், அவளுடைய தகுதிக்கு ஏற்ற சில அழகான ஆண்கள் அவள் கரம்பற்ற விரும்பியபோதும், இணங்கவில்லை அவள். டாக்டர் பட்டம் பெற்றபின், அடுத்த ஏழாண்டுகள் மேலும் படிப்பிலேயே ஆழ்ந்திருந்தாலும், தான, தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினாள். அவளுடைய 38-ஆவது வயதில் கொடும் காசநோய் அவளைத் தாக்கியது. அதே வருடம்(1684), இவ்வுலக வாழ்வினிலிருந்து விலகிச் சென்றாள் அவள். வெனிஸ், பதுவா, ஸியெனா, ரோம் நகரங்களில் அவளுக்காக சிறப்பு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அவள் படித்த பதுவா பல்கலைக்கழகம், தன் வளாகத்தில் அவளை சிலை ரூபமாக வரித்து வைத்துக்கொண்டது.
ஆண்களுக்கு நிகரான பெண்களின் சமத்துவம், முன்னேற்றம் நிகழ்ந்திராத ஒரு பின்புலத்தில், அந்தக் காலத்திலேயே டாக்டர் பட்டம் வாங்கிக் கலக்கிய, உலகின் முதல் பெண்மணி எனப் போற்றப்படுகிறார் இத்தாலிய தர்க்கவியலாளரும் (logician), அறிஞருமான எலினா பிஸ்கோப்பியா (Elena Piscopia). (முழுப்பெயர் Elena Cornaro Piscopia). பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் (degree) வாங்கிய உலகின் முதல் பெண்ணும் இவரே.
Lady Elena, Lady Cornaro என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட எலினா பிஸ்கோப்பியாவின் வாழ்வுபற்றி ‘The Lady Cornaro : Pride and Prodigy of Venice’ எனும் ஒரு புத்தகம் 1999-ல் Jane Smith Guernsey எனும் எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதாவின் அசத்தலான வெற்றிக்குப்பின், நரேந்திர மோதி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். கடந்த 71 -ஆண்டு இந்திய ஜனநாயக வரலாற்றில், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகிய காங்கிரஸ் பிரதமர்களைத் தாண்டி, காங்கிரஸல்லாத தேசியக்கட்சி ஒன்றின் பிரமுகர், அடுத்தடுத்து பிரதமராகப் பதவியேற்றிருப்பது இதுவே முதல் முறை.
தன்னுடைய சர்க்காரில் தன்னோடு சேர்ந்து பணியாற்றவிருக்கும் அணியை மோதி அறிவித்திருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி மற்றும் அவர்களது தேசீய ஜனநாயகக் கூட்டணியின் வெவ்வேறு மாநிலங்களிலான சிறப்பான தேர்தல் வெற்றிகளைக் கணக்கில்கொண்டுதான் மோதியின் கேபினெட் டீம் செதுக்கப்பட்டிருக்கிறது. அபரிமித வெற்றிகளைத் தந்தவை: உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், கர்னாடகா மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லி. மேலும், மஹாராஷ்ட்ரா, பிஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, அஸ்ஸாம் மாநிலங்களிலும் பாஜக-வுக்கும் அதன் கூட்டணிக்கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றன. ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்து இவ்வாறு வெற்றி பெற்ற முக்கியப் பிரமுகர்களின் அரசியல் ஆளுமை, கல்வித் தகுதி, ஏற்கனவே மத்திய, மாநில அளவில் பதவியிலிருந்திருந்தால் அதன்படி வெளிப்பட்ட நிர்வாகத் திறன், அனுபவம் போன்றவைகளை எல்லாம் பார்த்தே, கவனமாக இந்தக் கேபினெட் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய மந்திரிசபைகளில் அவைகளின் அதீத முக்கியத்துவம் காரணமாக, பிரதானமான அமைச்சரவைகள் என உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இலாக்காக்கள் அரசியல் வல்லுனர்களால் பார்க்கப்படுகின்றன. இந்த நான்கில் யார் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது அந்த அரசின் ஒட்டுமொத்த வலிமை குறித்து கோடிட்டுக் காட்டிவிடும். அத்தகைய அமைச்சகங்களின் பொறுப்புக்களை யார், யாருக்கு இந்த தடவை பிரதமர் மோதி அளித்திருக்கிறார் எனப் பார்ப்போம்.
அமித் ஷா: ஏற்கனவே டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலத்தபடி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரும், பிரதமரின் வலது கையுமான அமித் ஷா, மந்திரிசபைக்குள் நுழைந்துவிட்டார்! சட்டம், ஒழுங்கு, உள்நாட்டுப்பாதுகாப்பு, மத்திய துணைராணுவ அமைப்புகள், உளவுத்துறை ஆகியவற்றின் நிர்வாகம் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்ட உள்துறை இலாகா ஷாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குஜராத்தில் உள்துறை மந்திரியாகப் பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆனால், இந்தியாவின் உள்துறை என்பது பெருங்கடல். நிர்வாகத்திறமை, அதிரடி முடிவெடுக்கும் திறன் போன்றவை கைகொடுப்பதால், அவரிடம் பிரதமர் மோதிக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. நன்றாகப் பணியாற்றுவார் . நம்பலாம் ஷாவை!
மாணவப்பருவத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.-ல் பணி. எண்பதுகளில், அகமதாபாதில், தனது ஆர்.எஸ்.எஸ். காலத்தில்தான் நரேந்திர மோதியை முதன்முதலாக சந்தித்தார் அமித் ஷா. குஜராத்தில் நரேந்திர மோதி மூன்று முறை முதல்வரானபோது, அவரோடு தோளோடு தோள் நின்று கட்சி, அரசு இரண்டையும் வலுவாக்கியதோடு, மக்களிடையே பிரபலமாகச்செய்த பெருமை ஷாவுக்கு உண்டு. பிஜேபி-யின் அகில இந்தியத் தலைவரானபின், பல்வேறு மாநிலங்கள் மற்றும் 2014, 2019 தேர்தல்களில், பாரதீய ஜனதாவின் மகத்தான வெற்றிகளுக்கு அமித் ஷா என்கிற நிர்வாகிக்கு முக்கியமான பங்களிப்பு இருந்தது என்றால் மிகையாகாது.
ராஜ்நாத் சிங்: முந்தைய மோதி அரசாங்கத்தில் உள்துறை இலாக்காவில் பணியாற்றிய ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார். நாட்டின் முழுபாதுகாப்பு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு (defence cooperations) ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும் பொறுப்பு. கடந்த ஐந்தாண்டுகளில், முதலில் மனோகர் பர்ரிகர், பின்னர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களால் திறம்பட இயக்கப்பட்ட இலாகா.
ராஜ்நாத் சிங் முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வர். முன்னாள் பிஜேபி தலைவர். வாஜ்பாயியின் அரசு மற்றும் மோதியின் முதலாவது கேபினெட் ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியிருக்கும் BJP veteran.
அடுத்ததாக வரும் மத்திய அரசின் இரண்டு முக்கிய இலாக்காக்கள் நிதி அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும். இந்த முறை இவைகள், இரண்டு பிரபலமான தமிழர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன:
டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர்
டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர்: ‘வெளியுறவுத்துறை’, வல்லரசுகள் மட்டும் ஏனைய நாடுகளுடனான ராஜீய உறவுகள், மற்றும் சர்வதேச வணிக உறவுகள், ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளை, இந்திய நலனைக் கருத்தில்கொண்டு, கவனமாகக் கையாளும் இலாக்கா. (முன்பு சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பொறுப்பில் சிறப்பான பங்களித்திருந்தார். உடல் நலக் கோளாறினால் அவர் நீடிக்கமுடியவில்லை.) வெளியுறவுத்துறைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார், அதற்கு மிகப் பொருத்தமான ஒருவர். டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர். பலத்த சர்வதேச நெருக்கடிகள், மாற்றங்களுக்கிடையே இந்திய வெளியுறைத்துறை செயலராக 2015-18 என மூன்றாண்டுகள் பாராட்டத்தக்க சேவை. அமெரிக்கா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் தலைநகரங்களில் இந்திய தூதராக இருந்த அனுபவம். இந்தியாவின் ’சைனா-ஸ்பெஷலிஸ்ட்’ என சர்வதேச அரசியல் விமரிசகர்களால் பார்க்கப்படுபவர். சீனாவுடனான ‘Dokhlam’ எல்லை நெருக்கடியின்போது, சீன-இந்திய ராஜீய பேச்சுவார்த்தைகளில், விட்டுக்கொடுக்காமல், கடுமையாக இந்தியாவுக்காக negotiate செய்தவர் என்கிறது BBC. இத்தகைய வெளியுறவுத்துறை நிகழ்வுகள் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளாகவே பிரதமர் மோதிக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டவர் ஜெய்ஷங்கர். Modi’s handpicked specialist for the job. இவர் வெளியுறவு அமைச்சராக, மோதியால் நியமிக்கப்பட்டதை சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கின்றன.
அடுத்த ஐந்தாண்டுகளில் சர்வதேச உறவுகள் – குறிப்பாக, ட்ரம்பிற்குப் பின்னான அமெரிக்கா, பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய யூனியன், தெற்கு ஆசியக் கடற்பகுதிகளில் சீனாவின் லூட்டி, கொரியா, ஈரான், மத்திய கிழக்குப் பிரச்னைகள் போன்ற பலவித நெருக்கடிகளில் பிரதமர் மோதிக்கு ஆலோசனை சொல்பவராகவும், இந்தியாவை வழிநடத்துபவராகவும் அமைவார் என நம்பலாம்.
மேலும்: தமிழ்நாட்டவர்கள் -சராசரித் தமிழர்கள் எனப் படிக்கவும்- கிட்டத்தட்ட அறிந்திராத தமிழர்! பூர்வீகம் திருச்சி. தந்தை கே. சுப்ரமணியம் டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்பதவியில் இருந்தவர். International Strategic Affairs Analyst. ஜெய்ஷங்கரின் சகோதரர் சஞ்சய் சுப்ரமணியம் ஒரு சரித்திர ஆய்வாளர் -renowned Historian. ஜெய்ஷங்கர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் டெல்லியில். அங்குள்ள JNU பல்கலைக்கழகத்தில் படித்து, சர்வதேச அரசியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். (1977-2018 : IFS -held the highest post of Foreign Secretary). இப்போதைக்கு பார்லிமெண்ட்டின் எந்த சபையிலும் உறுப்பினர் இல்லை. இன்னும் 6 மாதத்துக்குள் ராஜ்யசபா எம்.பி.-யாக தேர்ந்தெடுக்கப்படவேண்டிய நிலை ஜெய்ஷங்கருக்கு.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்: அடுத்ததாக முக்கியத்துவம் பெறுவது நிதி இலாகா. முந்தைய மோதி அரசில் நம்பர் 2-ஆகக் கருதப்பட்ட அருண் ஜேட்லி, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்றெல்லாம் அதிரடியாகப் பணியாற்றிய நாட்டின் நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் இன்றியமையாத துறை (உடல்நலக்குறைவு காரணமாக ஜேட்லி, இந்தமுறை கேபினெட்டுக்குள் வர மறுத்துவிட்டார்). இதுவரை இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி என சிறப்புப் பெற்றிருந்த நிர்மலா சீதாராமன், மோதி 2.0-ல், நிதி அமைச்சராக அமர்த்தப்பட்டதில் பலர் புருவங்களை உயர்த்தியுள்ளனர்! முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூடுதல் பொறுப்பாக நிதியை சில வருடங்களுக்குத் தன் வசம் வைத்திருந்தார் எனினும், நிர்மலா சீதாராமன் முழுப்பொறுப்பு வகிக்கும் இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சராகியிருக்கிறார். நிர்மலாவுக்கு, மோதி இந்த முறை, இரண்டு முக்கிய பொறுப்புகள் கொடுத்திருக்கிறார்: Finance & Corporate Affairs. தனது பணி ஒழுங்கு மற்றும் நிர்வாகத்திறமையை ஏற்கனவே நிரூபித்திருக்கும் நிர்மலா, புதிய பொறுப்புகளில் சிறப்பாக ஒளிர்வார் என எதிர்பார்க்கலாம்.
NRI -ஆக லண்டனில் Habitat, PWC போன்ற நிறுவனங்களில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றியவர் நிர்மலா. ஒருமுறை ஒரு NRI நிகழ்வுக்காக டெல்லி வந்திருந்த நிர்மலா சீதாராமன், பிஜேபி-யின் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். நிர்மலாவின் தகுதிகள், மேலைநாட்டு அனுபவம் எனப் புரிந்துகொண்ட சுஷ்மா சொன்னாராம்: ‘உங்களைப் போன்றவர்கள் இப்படி வெளிநாட்டில் போய் உட்கார்ந்துகொண்டால் எப்படி? உங்களது சேவை இந்தியாவுக்கல்லவா தேவைப்படுகிறது! இந்தியாவுக்கு திரும்பிவிடுங்கள்!’ என்றிருக்கிறார். ஆலோசனையை ஏற்ற நிர்மலா, இந்தியா திரும்பிவிட்டார். 2008-ல் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். 2010-ல், அப்போதைய பிஜேபி தலைவரான நிதின் கட்கரியால், கட்சியின் ஒரு Spokesperson-ஆக நியமிக்கப்பட்டார். முதலாவது மோதி சர்க்காரில், வணிகத்துறை ராஜாங்க அமைச்சராக இரண்டாண்டுகள் பணி அனுபவம்.
மேலும்: நிர்மலா சீத்தாரமன் ஒரு தமிழர். அப்பாவழி பூர்வீகம் முசிறி. அம்மாவழியில் திருவெண்காடு கிராமம், நாகப்பட்டினம் மாவட்டம். திருச்சி ஹோலி க்ராஸ் பள்ளியில் படித்தவர். சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இளங்கலை. (வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரைப் போலவே இவரும்) JNU (Jawaharlal Nehru University, Delhi)-ல் முதுநிலைப் பட்டதாரி (பொருளாதாரம்).
மேலும் சில முக்கியமான கேபினெட் மந்திரிகள் :
ஸ்ம்ருதி இரானி
ஸ்ம்ருதி இரானி: ‘பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், டெக்ஸ்டைல்ஸ்’ ஆகிய பொறுப்புகள் இவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. கடந்த மந்திரிசபையில், செய்தி, தகவல் தொடர்பு, மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள்.
ஸ்ம்ருதி இரானி, மோதி கேபினெட்டின் இளவயதுக்காரர்; 46-தான் அமைச்சரின் வயது! இயற்பெயர் ஸ்ம்ருதி மல்ஹோத்ரா. அம்மா ஒரு பெங்காலி; அப்பா பாம்பேக்கார பஞ்சாபி! Zubin Irani எனும் தொழிலதிபரை மணந்ததால் ஸ்ம்ருதி இரானி ஆனார். ஸ்ம்ருதி ஒரு முன்னாள் டிவி நடிகை/தயாரிப்பாளர். All is well, Malik Ek, Amrita போன்ற off-beat படங்களில் நடித்துள்ளார்.
பியுஷ் கோயல் (Piyush Goyal): ரயில்வே, வணிகம் மற்றும் பெருந்தொழில்கள் ஆகிய பொறுப்புகளும் தரப்பட்டுள்ளன இவருக்கு. கடந்த மோதி அரசின் கடைசி பட்ஜெட்டை (ஜேட்லி உடல் நலக்குறைவாக இருந்தபோது) தாக்கல் செய்தவர். கடந்த ஐந்து ஆண்டுகளின் திறமை மிகு கேபினெட் அமைச்சர்களில் ஒருவராக அரசியல் வல்லுனர்களால் கருதப்பட்டவர் .
கோயல், மஹாராஷ்ட்ராவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர். அம்மா மஹாராஷ்ட்ராவில் மூன்று முறை பிஜேபி எம்.எல்.ஏ.ஆக இருந்தவர். இவரது அப்பா வேத பிரகாஷ் கோயல், வாஜ்பாயி அரசில் கப்பல் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
பிரகாஷ் ஜவடேகர்: செய்தி, ஒலிபரப்பு, மற்றும் வனம், சுற்றுச்சூழல் துறைகள் இவர் வசம். பூனேயின் கலகலப்பான பிஜேபி முகம். கல்லூரிநாட்களிலேயே பாரதீய ஜனதாவின் மாணவர் அணியில் செயல்பட்டவர். முந்தைய சர்க்காரில் இணையமைச்சர். இப்போது கேபினெட் அமைச்சர்.
ரவி ஷங்கர் பிரசாத் : முந்தைய மோதி அரசில், வெவ்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம். இப்போது, ‘சட்டம், நீதி, தகவல் தொடர்பு’ அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். (பிஜேபி-யிலிருந்து கடைசி நேரத்தில் காங்கிரஸுக்குத் தாவி, தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஹிந்தி நடிகர் ஷத்ருகன் சின்ஹாவை, பிஹாரின் பாட்னா தொகுதியில் நசுக்கியவர்.)
நரேந்திர சிங் தோமர்: நரேந்திர மோதிக்கப்புறம், மத்திய மந்திரிசபையின் இன்னுமொரு நரேந்திரர் ! மத்தியப் பிரதேசத்துக்காரர். கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகள் நலன் ஆகிய பொறுப்புகள் பெற்றிருக்கிறார். தன்னுடைய இரண்டாவது அரசின் பதவிக்காலத்தில் விவசாயிகளின் பிரச்னைகள், குடிதண்ணீர் பிரச்னை போன்றவற்றில் முக்கிய கவனம் கொள்ளப்படும் என பிரதமர் தெரிவித்திருப்பதால், இந்தப் பதவியில் தோமர் முக்கிய பங்காற்ற வேண்டியிருக்கும். முந்தைய மந்திரிசபையிலும் பங்குபெற்றிருந்தார்.
டாக்டர் ஹர்ஷ்வர்தன் : டெல்லியிலிருந்து பிஜேபி-யின் பிரபல முகம். Well-qualified doctor of medicine. ஏற்கனவே மோதி அரசில் அமைச்சராக இருந்தவர். இம்முறை சுகாதாரத்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என இலாக்காக்கள் வழங்கப்பட்டுள்ளன இவருக்கு.
அர்ஜுன் முண்டா: ஜார்க்கண்ட்டின் முன்னாள் முதல்வர். மிகவும் மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதி. ஆதிவாசி வகுப்பில் வரும் பிஜேபி தலைவர். ஜார்க்கண்டில் இவரது புகழ்கண்டு, பாரதீய ஜனதா இவரை தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமித்திருந்தது. இப்போது ’ஆதிவாசிகள் நலம், வளர்ச்சி’ க்கான அமைச்சகம், மிகச் சரியாக இவருக்குத் தரப்பட்டிருக்கிறது.
அர்ஜுன் முண்டா ஆதிவாசி மொழிகளோடு, ஹிந்தி, பெங்காலி, ஒடிய மொழிகளில் வல்லவர். சர்வதேச அளவில் இந்திய வில்வித்தைக்காரர்கள் புகழ்பெறவேண்டும் எனும் ஆசையுள்ளவர். புல்லாங்குழலிலும் கொஞ்சம் விளையாடுவார், அவ்வப்போது!
முக்தார் அப்பாஸ் நக்வி: மோதி சர்க்காரின் ஒரே இஸ்லாமிய அமைச்சர். ’சிறுபான்மையினர் நலம்’ அமைச்சகத்தை இவருக்குத் தந்திருக்கிறார் மோதி. நக்வி ஒரு உத்திரப்பிரதேச அரசியல்வாதி. இந்திராகாந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால், ஜெயில் சென்ற அனுபவம். பிஜேபி-யை ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து தனித்துப் பார்க்கவேண்டும் என்பதும், ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசீய உணர்வு கொண்ட நிறுவனம் என்பதும் நக்வியின் கருத்துக்கள். வாஜ்பாயியின் சர்க்காரிலும், மோதியின் முதலாவது கேபினெட்டிலும், இணை அமைச்சராகப் பணியாற்றியிருக்கும் சீனியர். இப்போது கேபினெட் லெவலுக்கு பதவி உயர்வு கொடுத்திருக்கிறார் மோதி.
தர்மேந்திர பிரதான் : பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் எஃகுத் துறைகளின் அமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார் பிரதான். ஒடிஷாவில் பிஜேபி யின் அபாரமான வளர்ச்சி/ வெற்றிக்குக் காரணமானவர் பிரதான். முன்னாள் பிஜேபி தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்.
அர்விந்த் சாவந்த் : பொது நிறுவனங்கள், மற்றும் பெருந்தொழில்கள் விவகாரத்தைக் கவனிக்கும் அமைச்சகம், சிவசேனா எம்பி-யான இவருக்குத் தரப்பட்டுள்ளது. சிவசேனா இந்த அமைச்சகத்தை பிஜேபி-யிடம் கேட்டு வாங்கியிருக்கக்கூடும். சாவந்த், பாம்பே (தெற்கு) தொகுதியில் காங்கிரஸின் பெரும்புள்ளியான முரளி தேவ்ராவைத் தோற்கடித்த சிவசேனா எம்.பி.