கரிசல் இலக்கிய மன்னன் கி.ரா.வுக்கு விருது

தமிழில், கரிசல்காட்டு இலக்கியத்தின் முடிசூடா மன்னர் எனக் கருதப்படுபவர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிய தளத்தில் ஆரவாரமின்றி இயங்கி வரும் மதிப்புக்குரிய ஆளுமை. வாழ்நாள் இலக்கிய சாதனைக்கென கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு `இயல்` விருதினை இவருக்கு இந்த ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது.

கோவில்பட்டிக்கு அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில் பிறந்த கி.ரா. இயல்பில் ஒரு விவசாயி. கிராமத்துக்காரர். தேர்ந்த கதை சொல்லியும் கூட. அவருக்கு வாய்த்த கிராம வாழ்வே அவரின் சுற்றுச்சூழலான கரிசல் நிலத்து வாழ்வின் பல்வேறு அம்சங்களை எழுத்துப்படம் பிடிக்கவைத்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரது படைப்புகள், அந்தப் பகுதியில் மனிதவாழ்வின் போராட்டம், இயலாமை, பரிதவிப்பு, சோகம், ஆசை என வாழ்வின் தவிர்க்கமுடியா படிகளை எழுத்து வடிவில் பிரதிபலித்தன. கரிசல் நிலத்தின் வெட்ட வெளி, வறுத்தெடுக்கும் வெயில், வேர்வையில் மின்னும் விவசாயிகள், வேப்பமரக் கிராமங்கள் என விதவிதமாகத் தெரியும் ஒரு காலகட்டத்தின் தமிழ்ப்பிரதேசத்தின் மறக்க முடியாக் காட்சிகள் அவரது எழுத்தில் பிரகாசம் அடைகின்றன.

1958ல் சரஸ்வதி இலக்கிய இதழில்தான் இவரது சிறுகதை வெளிஉலகப் பிரவேசம் செய்தது. அதற்குப்பின் ஏகப்பட்ட சிறுகதைகளை எழுதினார் கி.ரா. ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த இவரது நாவல் `கோபல்லபுரத்து மக்கள்` 1991-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. புகழ்பெற்ற பெங்குயின் பதிப்பகம் (Penguin) இந்நூலின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது. கதவு, கோமதி, கன்னிமை, காலம் காலம், இல்லாள், தமிள் படிச்ச அளகு, தேள்விஷம், நாற்காலி போன்ற இவரது சிறுகதைகள் சுவாரஸ்யமானவை. இவற்றில் சில நாட்டுவழக்கோடு நகைச்சுவையும் கொண்டவை. குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுதியுள்ளார் கி.ரா. பெரிசுகளுக்காக அவர் எழுதிய `மறைவாய்ச் சொன்ன கதைகள்` தனித் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழின் முதல் வட்டார சொல்வழக்கு அகராதியைப் தொகுத்தவர். நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம் என்கிற நூலையும் எழுதியுள்ளார் கி.ரா.

‘கதைசொல்லியாக அவரே எனது ஆசான், தமிழ் இலக்கியத்தில் கரிசலின் குரலை உயர்த்திப் பிடித்த அவரே தமிழின் உன்னதக் கதைஞன்’ என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர் சுந்தரராமசாமி, கி.ரா.வின் கதைகளில் ரஷ்ய எழுத்தாளர் ஆன்ட்டன் செகாவின்(Anton Chekhov) சாயல் இருப்பதாகச் சொன்னார். `அதைப் படித்தபின்தான் நான் செகாவின் மொழிபெயர்ப்புக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்` என்கிறார் கி.ரா.!

கி.ரா.வை 2012 அக்டோபரில் புதுடெல்லியில் பார்த்திருக்கிறேன். தில்லித் தமிழ்ச்சங்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கி.ரா. டெல்லியில் இரண்டு நாள் தங்கியிருந்தார். காங்கோவில் இந்திய தூதரகப்பணியில் இருந்த நான், அப்போது விடுப்பில் இந்தியா வந்திருக்கையில் டெல்லி-முனிர்க்காவில், சகோதரரின் வீட்டில் தங்கியிருந்தேன். எனது சகோதரரின் மனைவி ஒரு வாசகி. எழுத்தாளர்களின் ரசிகை. அவருடைய முனைப்பில், அந்த மாலையில் தெற்கு டெல்லியில் இருக்கும் ’தமிழ்நாடு ஹவுஸ்’ சென்று கி.ரா.வை சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கூடவே அவரது மனைவியும் இன்னொரு வாசகியும் இருந்தார்.

95 வயதான கி.ரா. பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கிறார்.

**

நகலாத நாசகாரர்கள்

`போய் வருகிறேன்` என்றார்
ஒரு நேர்காணலில் அவர்
ஏன் அப்படிச் சொன்னார்?
தமிழில் அவருக்குப் பிடித்த வாக்கியமாம்
அது சரி
ஆனால் போகவேண்டியது அவரல்ல
எப்போதடா தொலைவான் என நம்மைத்
தவிக்கவைக்கும் பிரகிருதிகள்
ஏகப்பட்டது உண்டு நாட்டில்
பிடித்துத் தள்ளினால் ஒழிய
இடத்தைக் காலி செய்யாதுகள் இதுகள்

**

செய்வீர்களா ?

ஞானக்கூத்தன் போய்விட்டார்
கொஞ்சநாள் முன்பு குமரகுருபரனும்
அதற்கு முன்பு வைகறையும்
அறிமுகம் அதிகமில்லா கவிகள் சிலரும்
அப்படியே புறப்பட்டுப் போயிருக்கக்கூடும்
போதாக்குறைக்கு முந்தாநாள்
கிளம்பிப் போனார் நா. முத்துக்குமார்
உத்சவத்தில் சாமி புறப்பாடு போல
கவிகள் புறப்பாட்டுக் காலம்போலும் இது

இளசும் பெரிசுமாக மேலும் சிலர்
எங்கேயோ சுருண்டு கிடக்கக்கூடும்
வறுமையில் வதங்கியோ
வாசிப்போரின்றி வாடியோ
தணியாத தனிமையின் சோகத்தில்
தாங்கவொண்ணா மன உளைச்சலில்
தங்களைத் தாங்களே குடித்துக்கொண்டு
தயாராகிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ
வாழ்க்கை ரசத்தைப் பருகி எழுதும் கவிகளே
வக்கிரமான வஸ்துக்கள் உங்கள் உடம்பை
வதைத்து சிதைத்துத் தீர்த்துவிடாமல்
கொஞ்சம் பார்த்துக்கொண்டால் அதுவும்
தமிழுக்கு நீவிர் செய்யும் சேவையாகும்தானே ?

**

கவிஞர் நா. முத்துக்குமார்

தமிழ்த் திரைப்பாடலாசிரியராகப் புகழ்பெற்றவர் நா.முத்துக்குமார். 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதித் தள்ளிய பாடல் எக்ஸ்பிரஸ். திரைப்பாடல்கள் என்கிற பெயரில் அபத்தங்களின் பரிமாணங்கள் உலவிவரும் ஒரு மோசமான காலகட்டத்தில், கருத்தாழமும், கவிநயமும் உடைய பாடல்களைத் தமிழ்த் திரை ரசிகர்களுக்குத் தந்தவர் (இயக்குனர்களுக்கு ஏற்ப சிலவற்றை அவர் எழுதியிருக்கிறார் என்றாலும்). இருமுறை சிறந்த திரைப்பாடல்களுக்காக (ஆனந்த யாழை மீட்டுகிறாய், அழகே..அழகே…) தேசிய விருதுகள் அவரை கௌரவித்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு விருதும், ஃபிலிம்ஃபேர் விருதுகளும் அவரை நாடியிருக்கின்றன.

திரைப்பாடல்களில் தனக்கு முந்தைய சாதனையாளர்களான கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் அவர். `தி இந்து` நாளிதழின் நேர்காணல் ஒன்றில் நா. முத்துக்குமார், கண்ணதாசன்பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார் :

‘’ எந்த மொழியில் எழுதினாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், படைப்பாளிகளுக்கு மாபெரும் சவாலாக இருப்பது எளிமை. ஜென் (zen) மனநிலையைத் தனதாக்கிக்கொண்டால் மட்டுமே ஒரு படைப்பாளி எளிமையைச் சென்று அடைய முடியும். போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, அழுக்காறு, அகந்தை போன்ற குணங்களைத் தூக்கி எறியும்போது நீங்கள் ஜென் மனநிலையை அடைய முடியும். இதைத்தான் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும்” என பாரதி சொல்லிச் சென்றார். கண்ணதாசன் உள்ளத்தில் உண்மை கம்பீரமாகக் கொலுவீற்றிருந்தது. அதனால் அவரது வாக்கினில் ஒளி பிறந்தது. அதனால்தான் அவர் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்“, “நினைக்கத் தெரிந்த மனமே.. உனக்கு மறக்கத் தெரியாதா” என்று எழுத, எளிமை அவரிடம் தலைவணங்கி நின்றது. “

திரை உலகத்திற்கான படைப்புகளைத் தாண்டி, முத்துக்குமார் தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களுள் ஒருவராகவும் இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவினால் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, கணையாழி இலக்கிய இதழின் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முத்துக்குமாரின் கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதர நூல்களில் சில: குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன், என்னை சந்திக்க கனவில் வராதே போன்றவை.

41 வயது என்பது நம்மை எல்லாம் விட்டுப் போவதற்கான வயதல்லதான். இருந்தும், வேகமாக இயங்கிய இளங்கவியை, வேகமாகவே அழைத்துக்கொண்டுவிட்டது அவ்வுலகம். அதிர்ந்துபோவதை விடுத்து வேறென்ன செய்யமுடியும் நம்மால்?

அவருடைய கவிதை உலகத்திலிருந்து சிலவற்றை வாசிப்பதன் மூலம் அவரைக் கொஞ்சம் நம்மிடையே மீட்டுவருவோம் இப்போது:

ஸ்தல புராணம்

பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்

**
முதல் காதல்

காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!

**
ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில் சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும் தோன்றி
கடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள் !

**
உயில்

மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய் !

**
நெஞ்சொடு கிளத்தல்

சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றிப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்

**
வாழ்க்கை

கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துகொள்கிறார்

..

கூர்வாள்

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.

இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.

மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்

**

எழுத்தாளர் சுஜாதாவைக் கவர்ந்து, நா.முத்துக்குமாரை மேடையில் அறிமுகப்படுத்தவைத்த நா.முத்துக்குமாரின் கவிதை:

தூர்

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய் நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள் தூரெடுக்க

**

தூரத்து வெளிச்சம்

மந்தையிலிருந்து விலகி
மனம்போன போக்கில்
போய்க்கொண்டிருந்தது
காட்சிகள் விரிய ஆரம்பித்தன
புல்வெளியை அலட்சியம் செய்து
வானத்தைப் பார்க்க ஆரம்பித்தது
அந்திமச் சூரியனின் அழகை
எப்படி இதுவரை பார்க்காமலிருந்தது
இருள் வந்தபின்னும்
இடரேதுமில்லை அதற்கு
மெல்லப் படுத்துக்கொண்டு
இரவு வானை நோக்கியது
நட்சத்திரங்கள் ஒளிர்ந்து வழிகாட்டின
அறிந்திராத மற்றொரு உலகை
அடைந்துவிட்டிருந்தது ஆடு

**

என்ன செய்தாலும் . .

பாலைக் கொட்டி
தேனைக் கொட்டி
திருமஞ்சனம் செய்தாலும்
திருடிக்கொண்டு ஓடினாலும்
பரவசத்தோடு கைகூப்பி நின்றாலும்
பார்க்காதது மாதிரி கடந்து சென்றாலும்
சந்தோஷமாய் ஏதாவது சொன்னாலும்
சதா புலம்பித் தள்ளினாலும்
இருக்கென்றாலும்
இல்லவே இல்லை என்றாலும்
பார்த்துக்கொண்டுதான் இருக்குமது
ஒன்றும் செய்யாது
அதன் பேர் தெய்வம்

**