நண்பனொருவன் எப்போதாவது வாய் திறப்பவன் அன்று ஏதோ ஒரு சுபகணத்தில் திருவாய் மலர்ந்தான் : அவ்வப்போது பின்னோக்கி திரும்பிப்பார்ப்பது நல்லது இரண்டு விஷயங்கள் இதில் ஒன்று - எத்தனை தூரம் வந்திருக்கிறோம் எனப் புரிந்துகொள்ள இன்னொன்று - ஆரம்பிக்குமுன் எத்தனைப் புழுதியும் வியர்வையும் நம்மைப் பூசியிருந்தது என்பதை மறந்துவிடாதிருக்க.. எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவன் மேலும் சொல்லலானான் வேகமாகத்தான் பலரும் சென்றுகொண்டிருக்கிறார்கள் எதனை நோக்கி என்கிற தெளிவில்லாமல் **
Month: January 2019
இருப்பவருக்கு. . நினைவு மட்டும்
டெஸ்ட் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

கிரிக்கெட் dhamaaka என்று சொல்லத்தக்க ஒரு தடாலடி டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு ஒரு வரலாற்று வெற்றி என்கிறவாறு சிட்னி, ஆஸ்திரேலியாவில் நிறைவுபெற்றது. கோஹ்லியின் ஆட்டபாட்டம், இந்திய அணி, மற்றும் இந்திய ரசிகர் பட்டாளத்தின் ஆரவாரம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் இந்திய ரசிகர்கள் மேகத்தில் மிதக்கிறார்கள். இருக்காதா பின்னே! எத்தகைய கிரிக்கெட் விருந்தை அவர்கள் கண்டு களித்திருக்கிறார்கள், இடையிடையே மழையும், சூறாவளிக்காற்றும் வந்து பயமுறுத்திச் சென்றபோதிலும்.
ஆஸ்திரேலியாவுக்கெதிராக பார்டர்-கவாஸ்கர் டிராஃபிக்கான (Border-Gavaskar Trophy) தொடரை இந்தியா வென்றது இது முதல் தடவையல்ல. ஆஸ்திரேலியாவிலேயே, அவர்களுக்கு சாதகமான பிட்ச்களில் ஆடி, 2-1 என்கிற வித்தியாசத்தில் டெஸ்ட் தொடரை வென்றதுதான் இந்திய வீரர்களின் சாதனை மைல்கல். மழைவந்து கெடுக்காவிட்டால் சிட்னி டெஸ்ட்டையும் இந்தியா வென்றிருக்கும். வித்தியாசம் 3-1 என்றாகி கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் ஆஸ்திரேலியாவின் தன்னம்பிக்கையையும் நிலைகுலைய வைத்திருக்கும்.
தொடரின் ஆரம்பத்திலேயே இந்தியர்கள் சரியான தாக்குதல் மனப்பாங்குடன் இருந்தார்கள். தொடர்முழுதும் நேர்மறை மனப்போக்கை நிலைநிறுத்தியதோடு, சிறப்பான திறன் வெளிப்பாட்டை ஒட்டுமொத்த அணி என்கிற வகையிலும், தனிப்பட்ட முறையில் இந்திய வீரர்கள் சிலரும் செய்துகாட்டியதில் இந்த வரலாற்று வெற்றி நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் சர்வதேச டெஸ்ட் ஜாம்பவான்களான இயான் சேப்பல், ஷேன் வார்ன், மைக்கேல் வாஹ்ன், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ரிக்கி பாண்ட்டிங் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான் கான் என முக்கிய இடங்களிலிருந்து கோஹ்லியின் இந்திய அணிக்கு பாராட்டு மாலைகள்.
ஆஸ்திரேலியாவுக்கெதிரான இந்த தொடரில், இந்திய வெற்றிக்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டும், அணியின் 3-ஆம் எண் ஆட்டக்காரருமான செத்தேஷ்வர் புஜாராவின் (Chetheshwar Pujara) பங்களிப்பு மெச்சத்தக்கதாக அமைந்ததை பல சர்வதேச கிரிக்கெட் விமரிசகர்கள் குறிப்பிடத் தவறவில்லை. (ஆஸ்திரேலியர்களுக்கும் வேறுவழியில்லாமல், பாராட்ட வேண்டி வந்தது). 4 மேட்ச் தொடரில் 3 சதங்கள் (highest 193) ஆஸ்திரேலிய மண்ணிலே விளாசுவது, அதுவும் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேஸல்வுட், நேதன் லயன் போன்ற சூப்பர் பௌலர்களுக்கெதிராக, பௌலர்களுக்குப் பொருந்திவந்த பிட்ச்சுகளில் என்பது, வியந்து பாராட்டப்படவேண்டியதே. புஜாராவின் தனித்திறமை தெரியாமல் முன்பெல்லாம் அவரது பங்கை அலட்சியப்படுத்தி, அசட்டுத்தனம் காட்டிய சாஸ்திரி-கோஹ்லி மேனேஜ்மெண்ட்டுக்கு, விஷயம் கொஞ்சம் லேட்டாகத்தான் புரிய ஆரம்பித்திருக்கிறது . Better late, than never.
இந்தத் தொடரில் 21 வயதான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் (Rishab Pant) காட்டிய உத்வேகமும், பேட்டிங் திறமையும் (கூடவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களை வம்புக்கிழுத்தது!) இந்திய ரசிகர்களைப் பெரிதும் குதூகலிக்கவைத்தது. அவருடைய கேச்சிங்-திறன் இன்னும் முன்னேற்றமடையவேண்டியுள்ளது என்கிறபோதிலும், தொடரில் 20 கேட்ச்சுகளைப் பிடித்து அசத்திவிட்டாரே பையன்! பேட்டிங்கில் ஆரம்பத்தில் 25, 30 எனத் தட்டிவிட்டு, சிக்ஸர் அடிக்கிறேன் என்று கேட்ச்சில் அவுட்டாகிக்கொண்டு விமரிசனத்துக்குள்ளான பந்த், சிட்னியில் தன் ஸ்க்ரிப்ட்டை மாற்றியமைத்தார். தூக்கியடித்து ஆடும் தன் அதிரடி சிக்ஸர்களை வெகுவாகக் கட்டுப்படுத்தி, சிட்னியில் பௌண்டரிகளாக அவர் அடித்து நொறுக்கிய 159 நாட்-அவுட்டை (Kohli’s declaration) ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதாக மறந்துவிடாது. ஆயினும், அடுத்தவாரம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் இல்லை என்பது நமது செலக்டர்கள் காட்டும் சாணக்யத்தனம் !
வழக்கமான துவக்க ஆட்டக்காரர்களான விஜய் மற்றும் ராஹுலின் அதிர்ச்சிதரும் தொடர் வீழ்ச்சியும், ப்ரித்வி ஷாவின் ஆரம்பக்காயமும், வெளியேற்றமும், ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியது. வெகுநாட்களாகக் காத்திருப்பில் இருந்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பமைய, அவரும் அதனை இறுகப்பற்றிக்கொண்டார். கடைசி இரு போட்டிகளில் மட்டும் இறக்கப்பட்ட அகர்வால், 76, 42, 77 என எழுப்பிய ஸ்கோர்கள் வெறும் எண்ணிக்கையல்ல. சில வருடங்களாகவே இந்திய ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு இளம் வீரரின் ஆர்வம் மற்றும் கடும் உழைப்பின் பலனாய், சர்வதேச வெளியில், இந்திய அணிக்கு தக்க நேரத்தில் இவை பலன் தந்தன. இளம் ப்ரித்திவ் ஷாவோடு, இந்தியாவுக்கு இன்னுமொரு நம்பகமான ஓப்பனர் கிடைத்தது இந்தத் தொடரின் வெள்ளிக்கீற்று.
இந்திய பௌலர்களில், முதல் மேட்ச்சில் அஷ்வினும் பிறகு வந்த மேட்ச்களில் முகமது ஷமி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவும் தீரம் காட்டினர். பும்ரா 21 விக்கெட்கள் வீழ்த்தி தொடரின் அதிகபட்ச விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்கிற பெருமையை தன் முதல் ஆஸ்திரேலிய டூரிலேயே பெற்று அசத்தினார். ஷமியும், பும்ராவும் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எனத் தலா ஒருமுறை சாதித்துக் காட்டினர். சிட்னி டெஸ்ட்டில் காயம் காரணமாக அஷ்வின் ஆடமுடியாமற்போக, வாய்ப்பு கிடைத்த ரிஸ்ட்-ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியர்களைத் திணறவைத்ததோடு, தனக்குக் கிடைத்த ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி விட்டார். ரவீந்திர ஜடேஜாவின் கடைசி இரு போட்டிகளில் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சிட்னியில் அவர் ரிஷப் பந்துடன் சேர்ந்து அலட்சியமாக ஆஸ்திரேலிய பௌலர்களைப் போட்டுத்தாக்கிய 81 ரன்களை, ஒரு ஆல்ரவுண்டரின், லோயர்-ஆர்டர் பேட்ஸ்மனின் முக்கியமான பங்களிப்பு என்கிற வகையில் பார்க்கவேண்டும். ஜடேஜாவின் பேட்டிங் திறனை இந்திய அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை என்கிற விமரிசனம் கொஞ்சநாட்களாகவே உண்டு.
பொதுவாக கேப்டனாக இந்தத் தொடரில் விராட் கோஹ்லி காட்டிய தலைமைப்பண்புகள் பாராட்டுதல்களை அள்ளின. ஒரு சதத்திற்குமேல் அவர் பேட்டிங்கில் பெரிதாக செய்யவில்லை என்றபோதிலும், மற்றவர்களை உற்சாகப்படுத்தி அணியை நடத்திய விதம், குறிப்பாக முக்கிய கட்டங்களில் ஸ்பின்னர்களைக் கையாண்ட விதம், வெற்றியை நோக்கி இந்தியாவை வேகமாகச் செலுத்தியது.
2018-ஆம் ஆண்டு, உலகளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டை, பரிதாபமான நிலைக்குக் கொண்டுவந்திருந்தது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில், பந்தில் தில்லுமுல்லு செய்து கேமராவில் மாட்டிக்கொண்டு அவமானப்பட்ட ஆஸ்திரேலியாவினால், தன் முன்னணி வீரர்கள் மூவர், ஒரு வருடத்திற்கு விளையாடத் தடைசெய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து விடுபடமுடியவில்லை. டிம் பேய்னின் (Tim Paine) தலைமையில் மாற்றி அமைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் சிறந்த இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டும், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற கடும் எதிரிகளுக்கு முன்னால் சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவினால் சோபிக்கமுடியவில்லை. இந்திய பேட்ஸ்மன்களின் 5 சதங்களுக்கெதிராக, இந்த 4-போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவின் தரப்பிலிருந்து ஒரு சதமும் இல்லை என்பது ஆஸ்திரேலிய அணியின் விமரிசகர்களுக்கே அதிர்ச்சி தந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களால் இதனை ஜீரணிக்க முடியவில்லை என்பது ட்விட்டர் ட்ரெண்டுகளில் விமரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களின் உச்சபட்ச தனிப்பட்ட ஸ்கோரே, துவக்க ஆட்டக்காரரான மார்கஸ் ஹாரிஸ் கடைசி போட்டியில் அடித்த 79 தான். பௌலிங்கில் ஸ்பின்னர் நேதன் லயன் (21 விக்கெட்கள்) மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) தவிர, வேறு யாரும் டெஸ்ட் உயர்தரத்தில் ஒன்றும் பிரமாதமாக செய்யமுடியவில்லை. அதற்கு, புஜாராவின் அசாத்திய நிதான ஆட்டமும், கோஹ்லி, ரிஷப் பந்த், ரஹானே போன்றோர் பிட்ச் கண்டிஷனுக்கேற்ப ஆடிக்காட்டிய திறனும் முக்கிய காரணம் என ’ தி ஆஸ்திரேலியன்’, ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’, ’ஹெரால்ட் சன்’ ஆகிய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விஸ்தாரமாக எழுதியிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 பௌலரான மிட்ச்செல் ஸ்டார்க் தொடர் முழுதும் ஒரு சோர்வுடன் காணப்பட்டதை ஆஸ்திரேலிய செலக்டர்களும், விமர்சகர்களும் கவனிக்கத் தவறவில்லை. இப்போதெல்லாம் இருதரப்பு தொடர்கள் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட்டுகளோடு முடிவடைவது வழக்கமாக ஆகிவிட்டிருக்கையில், 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், அதுவும் அவர்களுக்கு அதிசாதகமான உள்நாட்டு பிட்ச்சுகளில் ஆடப்பட்டது, அவர்களுக்கு இப்படி ஒரு தள்ளாட்டத்தைக் கொடுத்ததெனில் என்னதான் சொல்வது? மாற்றுவீரர்களுடன் அணி அமைக்கப்பட்டவிதம், அல்லது எதிர்பார்த்ததைவிட பயங்கரமாக மிரட்டிய இந்தியப்பந்துவீச்சை சரியாக ஆடத் தவறிய முன்னிலை பேட்ஸ்மன்களின் அனுபவமின்மை, திறமையின்மையே தோல்விக்குக் காரணம் எனக் கடுமையான உள்நாட்டு விமரிசனங்களும் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் இந்தத் தள்ளாடல், மற்றும் இந்திய ஸ்பின்னர்களைக் கையாள்வதில் அவர்கள் வெளிப்படுத்திய குழப்ப மனநிலை ஆகியவற்றை, விராட் கோஹ்லி சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். இந்தியாவுக்குக் கிடைத்தது கைமேல் பலன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பலவருட போராட்டங்களுக்குப்பின், ஆஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே சாய்த்த பெருமை, ஆஸ்திரேலிய அணிக்கு அவர்களது சிட்னியில் ஃபாலோ-ஆன் (follow-on) கொடுத்து கலங்கவைத்தது எனப் புகழ்மாலைகள்.. (இதற்கிடையே கோச் ரவி சாஸ்திரியின் உளறல்கள் ஆஸ்திரேலியர்களுக்கான காமெடி சீன்!).
அடுத்து வருவது, சிட்னியில் 12-ஆம் தேதி ஆரம்பிக்கவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர். இரு தரப்பிலும் அணி வீரர்களில் மாற்றம். சற்றுமுன் வந்த செய்திப்படி டெஸ்ட் தொடரில் இந்தியாவின் டாப் பௌலரான ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர், ஹைதராபாதின் முகமது சிராஜ் இணைகிறார். ரோஹித் ஷர்மா, தோனி, ஹர்தீக் பாண்ட்யா, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜுவேந்திர சஹல் என ஒன் –டே ஸ்பெஷலிஸ்ட்டுகள் இந்திய அணியில். ஆஸ்திரேலிய அணியில், க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), ஆரோன் ஃபின்ச், ஆடம் ஜாம்ப்பா (Adam Zampa), மார்கஸ் ஸ்டோய்னிஸ் என ஆக்ரோஷம் காட்டும் வீரர்கள்.
ஒரு-நாள் கிரிக்கெட் என்பது வேறொரு மேடை; காட்சிகள் வெவ்வேறுவிதமாக மாறக்கூடும்!
Picture courtesy: Google
*
குதிரைக்காரனும், மேலும் சில சங்கதிகளும் ..
குதிரைக்காரன்
அந்தக் கடற்கரையின் அழகைப்பற்றி அவன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். பார்க்கவேண்டுமென்கிற ஆசை அவனுள் ஊற்றெடுத்துப் பெருக, அன்று கிளம்பிவிட்டான் குதிரையின் மேலேறி. விரைந்து பயணித்தும், கடற்கரை ஊரை நெருங்குவதற்குள் மாலை மறைந்து மிக இருட்டிவிட்டிருந்தது. அருகில் தெரிந்த தங்கும்விடுதி மனசுக்கு ஆசுவாசம் தந்தது. அதன் முன் சென்று குதிரையை நிறுத்தி இறங்கினான். ஒரு ஓரமாக நின்றிருந்த பெருமரத்தில் குதிரையைக் கட்டினான். விடுதிக்குள் சென்று உணவருந்தியவன் இரவு அங்கேயே தங்கிவிட்டான்.
காலையில் எழுந்து வெளிவந்தவனை அதிர்ச்சி மிரட்டலாக வரவேற்றது. மரம் அப்படியே நின்றிருந்தது. குதிரையைக் காணவில்லை. எவனோ இரவோடிரவாகக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான். மிரண்டுபோய் அங்குமிங்கும் பார்த்தான் குதிரைக்காரன். என் செய்வது இனி? திருடனா மனம் மாறி, குதிரையைத் திருப்பித் தர வருவான் ? எப்படி மேற்கொண்டு பயணிப்பது? கேள்விகள் துளைக்க சோர்ந்து நின்றவனை, மெல்ல நெருங்கிவந்த நாலுபேர் சூழ்ந்துகொண்டார்கள். என்ன நடந்ததென ஆர்வமாய் விஜாரித்தார்கள். சொன்னான்.
நால்வரில் ஒருவன், ‘குதிரையைப் போயும் போயும் மரத்திலா இரவு நேரத்தில் கட்டிவைப்பது? உன்னை..’ என்று கிண்டலாக ஆரம்பித்தவன், சிரிக்கத் தொடங்கியிருந்தான்.
இன்னொருவனோ ’கடற்கரையின் அழகைப் பார்க்கவென இவ்வளவு தொலைவிலிருந்து மெனக்கெட்டு, குதிரையில் ஏறி வந்தாயாக்கும். உன்னைவிட ஒரு முட்டாளை நான் இதுவரைப் பார்த்ததில்லை!’ என்று அங்கலாய்த்தான்.
மூன்றாமவன் தீர்மானமாகச் சொன்னான்: ’உன்னைப்போல பணக்காரர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் திமிர் கொஞ்சம் அதிகந்தான்!’
நான்காம் ஆள், சிந்தனையிலிருந்ததாகத் தோன்றியவன், விடுபட்டான்: ’பொதுவாக எங்கும் நடந்துசெல்லத் துணிவில்லாதவர்கள், கால்களில் வலுவில்லாதவர்கள், முழுச்சோம்பேறிகள் போன்றவர்கள்தான் இப்படியெல்லாம் குதிரை மேலேறிப் பயணிப்பார்கள் ..’ என இழுக்க, மற்றவர்கள் ஹோ.. ஹோ.. என மேலும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
குதிரையை இழந்தவன் திடுக்கிட்டான். ஒரு விஷயம் மனதில் பட, ஆச்சரியத்தோடு நினைத்தான் : இவர்களில் எல்லோருக்கும் நான் செய்ததுதான் குற்றமாகத் தெரிகிறது. ஆனால், குதிரையைத் திருடிக்கொண்டுபோனவனின் இழிசெயலைக் கண்டிக்கக்கூட வேண்டாம் – விமரிசித்தும்கூட ஒருத்தனும் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?
*
கதை முடிந்தது மேலே.
வேறு சில:
ஆதியில் மனிதன் நெடுக கால்போனபோக்கில் அலைந்து திரிந்தான். தன்னைப்பற்றியோ, சுற்றுப்புறத்தைப்பற்றியோ ஒன்றும் புரியாமல் குழம்பலானான். தயங்கினான். நின்றான். அங்குமிங்கும் உற்று நோக்கியவாறு மேலும் மேலும் நடந்தான் பொழுது சாயும்வரை. ஒரு கட்டத்தில், அதிசயமாய்த் தான் பார்க்க நேர்ந்த கடலின் தீரா அலைகளிடமிருந்தும், வனத்தின் குறுக்கே அவ்வபோது சீறிய பெருங்காற்றிலிருந்தும் விசித்திரமான ஓசைகளை அறிந்துகொண்டான்.
இப்படியிருக்கையில், நேற்றைய பொழுதின் வார்த்தைகளில், ஆதிகாலத்தின் ஒலிக் கோர்வைகளை வெளிக்கொணரச் சொன்னால், அவனால் எப்படி முடியும்?
*
என் உளறல்களை அவர்கள் ஆமோதித்தார்கள். மேலும் உற்சாகப்படுத்தினார்கள். என் மௌனத்தைக் கவனிக்கும்போதெல்லாம் கோபப்பட்டார்கள். கடுப்பானார்கள். நான் மெல்ல, மெல்ல, தனிமையை உணரலானேன்.
*
உண்மை என்று ஒன்றிருக்கிறதே அதை நேரடியாக சந்திப்பதற்கு இருவர் தேவைப்படுகின்றனர். அதைப்பற்றி சொல்ல என ஒருவன், புரிந்துகொள்ள என இன்னொருவன்.
*
அவனை நீ புரிந்துகொள்வதென்பது, தன்னைப்பற்றி அவன் என்னென்ன சொல்லியிருக்கிறான் என்பதிலிருந்து அல்ல. எதைச் சொல்லாமல் மறைக்கிறான் என்பதிலிருந்துதான்.
*
சில பெண்கள், ஒரு ஆணின் மனதைக் கடன் வாங்கியிருக்கக்கூடும். ஆனால் ஒரே ஒருத்திதான் அதனை சொந்தமாக்கிக்கொண்டிருப்பாள்.
*
ஓநாய் ஒன்று வனத்தில் அலைந்து திரிகையில், அப்பாவி ஆடைச் சந்தித்தது. ’என் வீட்டுக்கு ஒருமுறையாவது வந்து என்னை கௌரவிக்கலாகாதா?’ என ஆட்டிடம் வினயமாகக் கேட்டுவைத்தது. ஆடும் தள்ளி நின்று கொஞ்சம் யோசித்தது. பதில் சொல்லியது: ’ அவசியம் கௌரவித்திருப்பேன் – உன் வீடு என்பது உன் வயிற்றுக்குள் இருக்கிறது எனத் தெரியாதுபோயிருந்தால்..!
*
புத்தாண்டு தினத்தன்று, ஒரேயடியாகக் கிச்சனை எப்போதும்போல் பரபரக்கவைக்கவேண்டாம் என நினைத்து, லஞ்ச்சுக்கு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தேன். பெங்களூரின் மகாதேவ்புராவில் இருக்கும் ஃபீனிக்ஸ் மாலில் ஒரு ரவுண்டு வந்து, ஏற்கனவே பழக்கமாயிருந்த ஷோரூம்களில் நண்பர்களை வாழ்த்தி அரட்டை அடித்துக் கொஞ்ச நேரத்தில் வெளியேறினோம். சாப்பிடுவதற்கு அருகிலேயே புதிதாக எழும்பியிருக்கும், மேலும் trendy and upmarket-ஆன VR Mall-க்கு வந்தோம். ஆதெண்ட்டிக் இட்டலியன் பாஸ்த்தா, பெரிய ஸ்லைஸ்களாக பனீர் ஸப்ஜி ஒரு ப்ளேட் (பெண் சாப்பிடுவது அதுமட்டும்தான்), ஒரு நார்த்-இண்டியன் தாலி என லஞ்ச் முடித்து, புதிதாகத் திறந்திருக்கும் ஷோரூம்களைப் பார்வையிட்டோம்.மெல்ல நகர்ந்துகொண்டிருக்கையில் , வலதுபக்கம் எதிர்ப்பட்ட ’க்ராஸ்வர்ட்’, கண்களால் சமிக்ஞை செய்து, உத்தரவின்றி உள்ளே வா .. என்றது . புக் ஷாப். நுழைந்து பார்வையிட்டேன். பெரும்பாலும் யுவ, யுவதியர் உரசலாக புத்தக ஷெல்ஃபுகளின் வரிசையில் ஊர்ந்துகொண்டிருந்தனர். புத்தகமா நோக்கம்? ம்ஹூம்.. சான்ஸே இல்லை.
‘281 and beyond’ என்கிற தலைப்பில் கிரிக்கெட்வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணின் புதிய புத்தகம் ஒன்று நீலமாக, குண்டாக மேலடுக்கில் நின்றது. பக்கத்தில் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என மேலும் பிரபலங்களின் புகழ்க்கதைகள். மேலும் முன்னேற, motivational, self-help மற்றும் tech புத்தகங்களின் இடித்துத் தள்ளல். அரசியல், சினிமா பிரபலங்களின் புலம்பல்களையெல்லாம் தாண்டி, கொஞ்சம் சீரியஸான மெட்டீரியல் இருக்கும் ஷெல்ஃப் பக்கம் வந்து நின்று கண்ணோட்டினேன். கலீல் ஜிப்ரான் (Khalil Gibran). முப்பது வருடங்களுக்கு முன்பு அவருடைய புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பான The Prophet-ஐ டெல்லியின் கனாட்ப்ளேஸின் அப்போதைய pavement shop ஒன்றில் பார்த்து வாங்கியது ஞாபகம் வந்தது. படித்து ஆச்சரியப்பட்டிருந்தேன். லெபனானிலிருந்து இப்படி ஒரு கவிஞரா, எழுத்தாளரா, அட! இப்போது மேலும் அவருடைய புத்தகங்கள். பளப்பள அட்டைகளுடன் ஒய்யாரமாய் மினுக்கின. சுமாரான சைஸில் ஒன்றை எடுத்து உள்ளே புரட்ட ஆரம்பித்தேன். கண்கள் ஜிப்ரானின் வார்த்தைகளில் வேகமாக ஓட, மனது சிலவற்றை லபக்கி உள்ளடுக்குகளில் ஒளித்துவைத்தது. வீட்டுக்கு வந்தபின், அதிலிருந்து கிண்டி எடுத்துக் கொடுத்திருப்பதுதான் மேலே நீங்கள் வாசித்தது.
**
பட உதவி: இணையம்/ கூகிள்