ஒரு பெங்களூர் மாலை

கஃபெடரியாவுக்கு இது பரவாயில்லை
முதுகிலிருந்த மூட்டையை
இறக்கிவைத்துக்கொண்டே சொன்னாள்
கிறக்கமான நயனங்களையுடைய அவள்
இங்கேயே உட்கார்ந்து ஏதாவது சாப்பிடலாம்
மஞ்சள் நாற்காலிகளை தங்களுக்காக
மரத்தடியில் இழுத்து வைத்த இன்னொருத்தி
மகிழ்வாய்க் குமிழ்வாய் மலர்ந்தாள்
கூந்தலைக் கோதிக்கொண்டிருந்த
மூன்றாவது அழகி முன்னேறிச் சென்றாள்
மூவருக்குமாய் ஏதோ வாங்கிவந்தாள்
ஆளுக்கொரு ப்ளேட்டாகக் கையிலேந்தி
அரைவட்டமாய் அமர்ந்துகொண்டு
சலசலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள்
சிலுசிலுத்துக்கொண்டிருந்த இளங்காற்று
உச்சியில் படர்ந்து குடைபிடித்திருந்த
ஆதிமரத்தின்மீது சாய்ந்தவாறே
ஆசையோடு அவர்களது பேச்சைக்
கேட்டுக்கொண்டிருந்தது

**

மெய்ஞானி ஹகீம் ஸனாய்

’’சொல்வனம்’’ இணைய இதழில் (26-07-2017), ஆஃப்கானிஸ்தானில் பிறந்த கவிஞரும் மெய்ஞானியுமான ஹகீம் ஸனாய்பற்றிய ’’ஹகீம் ஸனாய்: பாரசீக மெய்ஞானி’’ என்கிற என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. படிக்க வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.

இணைப்பு: http://solvanam.com/?p=49769

நன்றி: சொல்வனம்

**

கொஞ்சம் மாற்றிப்போட்டால்

எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்
வெறுப்பு விதண்டாவாதம்
கடுகடுத்து அலையும் உலகினில்
எம்மதமும் சம்மதம் என்பவரும்
எல்லாம் அவரவர்க்கு வாய்த்தபடி
என நினைந்தே கடப்பவரும் உண்டு

இங்கே விதிக்கப்பட்டிருப்பதோ
இதோ அதோ எனக் கொஞ்சகாலம்
நிலையிலா நீர்க்குமிழி வாழ்வினில்
ஏனிந்த மாளாக் கோபம் குரோதம்
எதன்மீதும் குறைகாணும் மூர்க்கம்

சகமனிதர் ஜீவன்களோடு
சதா அன்புகாட்டாவிடினும்
எப்போதாவது கொஞ்சம் காட்ட
எத்தனித்தால்தானென்ன

பாதையை மாற்றினால்
பயணம் சுகமாகலாம்
வெறுப்புப் பக்கங்களை
கிழித்தெறிந்துவிட்டால்
விதியும்கூட மசிந்துவிடலாம்
முடியாதா என்ன, உன்னால்?

**

மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா?

இங்கிலாந்தில் விமரிசையாக நடந்துவரும் மகளிர்க்கான க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதியாட்டம் இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் நடக்கவிருக்கிறது. (முந்தைய பதிவொன்றில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜைப்பற்றிப் பார்த்திருந்தோம்). ஆரம்ப மேட்ச்சில் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிரணி, நிதானம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டியாக அடித்து ஆடி, செமிஃபைனலுக்கு வந்து சேர்ந்தது. செமிஃபைனலில் எதிர் நின்றதோ நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா. ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றிருந்த அணி. இந்தியக் கேப்டன் மித்தாலி ராஜின் உழைப்பு, ஊக்குவிப்பு, தலைமைப்பண்பென பல காரணங்கள்; கூடவே அந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌரின் அட்டகாச விளாசல், இந்திய பௌலர்களின் கடும் தாக்குதல் என எல்லாம் சேர்ந்ததால், பூதாகாரமாக எதிர்த்து நின்ற ஆஸ்திரேலியாவை இந்தியா ஊதித்தள்ளிவிட்டது. (இதே ஆஸ்திரேலியா, லீக்-போட்டியில் இந்தியாவை எளிதாகத் தோற்கடித்திருந்தது.)

இந்திய மகளிர் அணி இப்போது உலகக்கோப்பையின் இறுதி போட்டியின் நுழைவாசலில், பளபளக்கும் உலககோப்பையில் கண்வைத்து நிற்கிறது. திடீர்ப்புயலென விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்தியாவை எதிர்த்துப் போட்டிபோடவிருப்பது ஹீதர் நைட்(Heather Knight) தலைமையிலான வலிமையான இங்கிலாந்து. கேப்டன் நைட்டோடு, டேமி பூமான் (Tammy Beaumont) , நத்தாலீ ஸிவர் (Natalie Sciver) போன்ற திறமை, அனுபவம் கொண்ட பேட்ஸ்மன்களைக்கொண்ட அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் ஆச்சரியமாகத் தோற்ற இங்கிலாந்து, அதற்குப் பிறகான ஏழு போட்டிகளில் வரிசையாக வென்று ஒரு கம்பீரத்துடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இதுவரை நான்கு முறை உலக சேம்பியனாக இருந்துள்ளது இங்கிலாந்து என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

க்ரிக்கெட் விளையாட்டில் – அதுவும் வித்தியாசமான திறன், ஸ்டைல், வியூகம் கொண்ட இரு அணிகள் ஃபைனலில் மோதுகையில் – முடிவைத் தடாலடியாக யூகிக்கமுயல்வது அசட்டுத்தனமாய் முடியும். இந்தப் போட்டியின் முடிவு எந்தவொரு அணிக்கும் சாதகமாகலாம் என்கிறது நிதர்சனம். இன்று எந்த அணி அதிசிறப்பாக ஆடி, எதிரியை வியூகத்தாலும் வெல்கிறதோ அதற்கே கோப்பை எனலாம். நியூஜிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிராக திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்ததுபோல், இந்திய அணியின் கேப்டனும், ஒவ்வொரு வீராங்கனையும், இந்திய வெற்றிக்காக உயிர்கொடுத்து ஆடினால் – since cricket is quite clearly a team game – இந்தியா கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சாத்தியம் வலுப்பெறும். பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் – இந்த ஞாயிறு இந்தியாவுக்கு எதைத் தரப்போகிறதென்று. இதற்குமுன் 2005-ல் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழக்க நேர்ந்தது.அந்த இந்திய அணியில் விளையாடிய சீனியர் வீராங்கனைகளாக மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி இருவர் மட்டுமே இந்திய அணியில் இருக்கின்றனர். மற்றவர்களில் பெரும்பாலானோர் 19 வயதிலிருந்து 25 வயதுவரையிலான புதியவர்கள்.

பூனம் யாதவ், ஸ்ம்ருதி மந்தனாவின் துவக்க பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தால், நல்லதொரு ஸ்கோரை இந்தியா நிறுத்த வாய்ப்புண்டு. மிடில்-ஆர்டரில் ஹர்மன்ப்ரீத் கௌர், மித்தாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா ஆகியோரின் தீர்க்கமான பங்களிப்பு இன்று மிக அவசியம். நியூஸிலாந்திற்கெதிராக, தன் முதல் போட்டியிலேயே அதிரடி பௌலிங் போட்டுக்கலக்கிய சுழல்வீராங்கனை ராஜேஷ்வரி கெயக்வாட்(Rajeshwari Gayakwad) இன்று விளையாடுவாரா? அல்லது பௌலிங் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, பாகிஸ்தானுக்கெதிராக ஐந்து விக்கெட் எடுத்து மிரட்டிய இடதுகை பந்துவீச்சாளர் ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), மிடில் ஓவர்களில் தடாலடியாகப் பந்துவீசும் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா (Deepti Sharma), மற்றும் பூனம் யாதவ் (Poonam Yadav)-ஆகியோரைச் சுற்றி இருக்குமா என்பது மித்தாலி ராஜ் வகுக்கப்போகும் வியூகத்திலிருந்துதான் தெரியவேண்டும். உலகக்கோப்பையை வெல்வதற்கான தகுதிகளுடன், உத்வேகத்துடனும் நிற்கிறது மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா. ஜெய் ஹிந்த் !

**

கதை காட்டும் ஓவியர்கள்

சிறுவயதில் படக்கதைகளைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகமிருந்தது. படிப்பது கொஞ்சம். பார்த்துக் கண் மலர்வது அதிகம் என ஓடிய காலம். அம்புலிமாமாவாக இருக்கட்டும் ; தற்செயலாகக் கையில் மாட்டுகிற வாரப்பத்திரிக்கைகள், தீபாவளி மலர்களாக இருக்கட்டும். முதலில் கண்போனது படத்தை நோக்கித்தான். First, visual delight. Then comes pleasure of the text! கலர்ப்படமோ, கறுப்பு வெள்ளையோ – கருத்தோடு பார்த்த ரசித்த அந்த நாட்கள், மென்மையானவை, உணர்வுபூர்வமானவை. பொதுவாக வார இதழ்கள் கையில் கிடைத்தவுடன், எல்லோரும் தொடர்கதைக்கு முதலில் ஓடுவார்கள். நான் அப்படியல்ல. குமுதமோ, விகடனோ, தினமணிகதிரோ, கல்கியோ (அல்லது பின்னாளில் வந்த இதயம் பேசுகிறது, குங்குமம், சாவி போன்றவையும் ), முதலில் அதைக் கசங்காமல், நலுங்காமல் எடுத்துக்கொண்டுபோவேன். அதுவென்னவோ ஒரு கலைப்பொக்கிஷம் போல. பத்திரிக்கை, புஸ்தகங்கள் கசங்கிவிட்டால் படிக்கப் பிடிக்காது அப்போதெல்லாம்! வீட்டின் ஒரு தனி இடத்தில், அல்லது வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஆர்வமாகப் புரட்டுவது வழக்கம். அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, அவற்றின் டிசைன், உள்ளடக்கம், கதை,கட்டுரைகள், ஜோக்குகள், வரையப்பட்டிருக்கும் படங்கள் என அந்தக் குறிப்பிட்ட இதழ் வண்ணமும், கறுப்பு-வெள்ளையுமாக எப்படி execute –ஆகி இருக்கிறது என ஆசிரியரைவிடவும் கவலையோடும், அக்கறையோடும் நான் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம்தான் சுஜாதா, ஜெயகாந்தன், கண்ணதாசன், பாலகுமாரன், புஷ்பாதங்கதுரை என அப்போது பிரபலமாக எழுதிக்கொண்டிருந்தவர்களின் பக்கங்களை – அன்றைய மூடு, ரசனைக்கேற்றபடி மெதுவாகப் படிக்க ஆரம்பிப்பேன். கதைகளுக்கான படங்களை மற்றவர்களைப்போல் மேம்போக்காகப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடாமல், படத்தின் வலது கடைக்கோடியில் யார் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று ஓவியரின் பெயரைப் பார்த்து மனதில் வைத்துக்கொள்ளும் பழக்கம் சிறுவயதிலேயே இருந்தது. வார இதழ்களில் படங்கள் வரையப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தே ‘சரி இந்தக் கதையைப் படிச்சுடவேண்டியதுதான்’ என்று எண்ணம் சிறுவயதில் வந்ததுண்டு. எழுபதுகளில் பிரபலமாக ஆகத் துவங்கியிருந்த ஜெயராஜின் படங்கள் இத்தகைய ஈர்ப்புசக்தி மிகக்கொண்டவை. கதையைப் பற்றி முதலிலேயே கிசுகிசுத்துவிடும் படங்கள்! சிறுகதை எழுத்தாளர்களைவிடவும், அதற்கான படங்களை வரைபவர்களின்மீது நமது பிரபல பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, கலைமகள் போன்றவை அதீத கவனம் செலுத்தின என்றிருந்த காலமது.

எழுபதுகளில் சாவியை (எழுத்தாளர் சா.விஸ்வனாதன்) ஆசிரியராகக்கொண்டு வர ஆரம்பித்தது ‘தினமணி கதிர்’ வார இதழ்.(இப்போது இலவசமாக தினமணி நாளிதழோடு தரப்படும் பத்திரிக்கையல்ல), பெரிய சைஸிலான tabloid. வெள்ளைவெளேர் எனத் தாள். கவர்ச்சியாகவும் படிக்கவேண்டிய சங்கதிகளுடனும், கிறுகிறுப்பூட்டும் கருப்பு-வெள்ளை ஓவியங்களுடனும் வாராவாரம் ஒரு பரபரப்பை இளம் வாசகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. சாவி ஒரு திறமை வாய்ந்த பத்திரிக்கை ஆசிரியர். ஜனரஞ்சகப்பத்திரிக்கையின் வெற்றி நுணுக்கங்கள் தெரிந்தவர். (இதனால்தான் தங்களின் குழுமத்திலிருந்து ‘குங்குமம்’ பத்திரிக்கையை ஆரம்பிக்கையில் கலைஞர் கருணாநிதி, தன் நண்பரான சாவியை அதற்கு ஆசிரியராக இருக்க கேட்டுக்கொண்டார். சாவியும் அதை ஏற்று, ‘நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன்!’ என்று குங்குமத்தின் முதல் ஆசிரியரானார்). சாவி ஆசிரியராக ஜொலித்த தினமணி கதிரில் சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் போன்ற எழுத்தாளர்களின் கதைத்தொடர்கள்,வித்தியாசமான கட்டுரைகளும் (விந்தனின் ‘ஓ, மனிதா!’) இதழை அலங்கரித்தன. அவற்றிற்கு ஜெயராஜ் வரைந்த கிட்டத்தட்ட முழுப்பக்கப் படங்கள் பார்ப்பவர்களைக் கற்பனை உலகில் பறக்கவிட்டன! கதாபாத்திரங்களை, குறிப்பாக நாகரீக யுவதிகளை அவர் தத்ரூபமாகக் காகிதத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். அவரது வளைவுகள், நெளிவு, சுழிவுகளில் துடிக்கும் இளமை, துணிச்சல். அபாரம்! சுஜாதாவின் எழுத்து; ஜெயராஜின் படங்கள். புஷ்பாதங்கதுரையாக மற்றபத்திரிக்கைகளில் ப்ரபலமான எழுத்தாளரை, ஸ்ரீவேணுகோபாலனாக தினமணிகதிரில் metamorphosis செய்தவர் சாவி! அப்போது தொடராக வந்த ஸ்ரீவேணுகோபாலனின் ‘நந்தா என் நிலா’வுக்கும் ஜெயராஜே வரைந்தார் என நினைவு. தினமணிகதிர் கோலாகலமாய் ஓடியது அப்போது.

குமுதத்தில் லதா குறிப்பாக சாண்டில்யனின் சரித்திர நாவல் தொடருக்கும், மாருதி மற்ற கதைகளுக்கும் வரைந்துகொண்டிருந்தனர். குடும்பக்கதைகளுக்கு மாருதியின் ஓவியங்கள் கச்சிதமாகப் பொருந்தின. ஆனந்தவிகடனில் ’மாயா’வின் படங்கள் இதழை அலங்கரித்தன. ஜெயராஜின் பாப்புலாரிட்டி விலைவாசிபோல் எகிற, அவர் ஏனைய தமிழ் இதழ்களுக்கும் படம் போட ஆரம்பித்தார். பிறகு வந்த ம.செ. என்கிற மணியம் செல்வன் விகடன், கல்கி, குங்குமம் எனப் பலவருடங்களாக வரைந்துவருகிறார்.

அப்போதெல்லாம் ஒவ்வொரு குறிப்பிட்ட ஓவியரின் வரையும் ஸ்டைலை நான் கவனித்திருந்தேன். உதாரணத்துக்கு ஜெ.. எனக் கையெழுத்திடும் ஜெயராஜ் பக்கவாட்டுக் கோணத்தில் வரையும் யுவதிகளின் கண், லேசாக மேல்தூக்கிய சின்னமூக்கு, இதழ், முகவாய், உடம்பின் நாஸூக்கான வளைவுகள், மாருதி வெளிக்கொணரும் மத்தியவர்க்கப் பெற்றோரின் கவலைதோய்ந்த முகங்கள், காதில் பெரிய வளையத்தோடு சிரிக்கும் நங்கைகள், சரித்திரத் தொடருக்கு லதா வரையும் வாளிப்பான தேகமுடைய நாயகன், நாயகி, விகடனில் சில கோடுகளில் மாயா காண்பித்த ஆண் பெண் உருவ வசீகரங்கள் கவர்ந்தன. ஆனால் இப்போதும் பல பத்திரிக்கைகளில் வரைந்துகொண்டிருக்கும் ம.செ.யின் பல வரைவுகளில் என் மனம் ஈடுபட மறுக்கிறது. அவரது template-ஆன பெரிய கண்கள், சின்னஞ்சிறிய மூக்கு, அதற்குக்கீழே காணாமல்போகும் உதடு, முகவாய் – என ஒரேமாதிரி போட்டுத்தள்ளிக்கொண்டிருப்பது சலிப்பு தருகிறது. இருந்தும், விகடனில் இமையத்தின் கதை ஒன்றிற்காக கவலைதோய்ந்த பெண்முகங்களை அவர் ஒரு அருமையான கோட்டோவியமாக்கியிருந்ததும் கூடவே நினைவுக்கு வருகிறது.

இதே காலகட்டத்தில்தான் ஓவியர் ஆதிமூலம் தன் அருமையான கைவண்ணத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தார். அவரது கோட்டோவியங்கள் தமிழ்நாட்டைத் தாண்டியும் புகழ்பெற்றவை. குறிப்பாக அவரது காந்தி. Space Series எனும் தொடர் கோட்டோவியங்கள். ஆனால் தமிழின் வணிகப்பத்திரிக்கைகள் அவரது கோட்டோவியத்தில் ஈர்ப்பு காட்டவில்லை. அவரைப்போன்ற மேதைக்கு அவர்கள் தங்கள் இதழ்களில் இடம் கொடுக்கவில்லை. அதனால் சராசரி தமிழ் வாசகனிடம் / ரசிகனிடம் ஆதிமூலம் போய்ச்சேரவில்லை என்பது துக்கம். தமிழின் இலக்கிய ஏடுகளில் சில அவ்வப்போது அவருக்கு வாய்ப்பளித்தன. காலச்சுவடு இதழின் ’லோகோ’கூட ஆதிமூலம் வரைந்ததுதான். இலக்கியவாதிகளோடு தொடர்பிலிருந்த ஆதிமூலம் இலக்கியவாதிகளின் முகங்களைக் கோட்டோவியங்களாகத் தீட்டியுள்ளார். ஆதிமூலம் வரைந்த கொடுவாள் மீசை, கிருதா, இருபக்கமும் வழியும் கேசமுமாக ஜெயகாந்தனின் முகம் ரசிகர்களின் நினைவில் நிற்கும். அவ்வாறே அவரின் கோடுகளில் சிக்கிய சுந்தர ராமசாமியின் முகம்.

இந்த வகையில் இன்னுமொரு சிறப்பான தமிழ் ஓவியர் டிராட்ஸ்கி மருது. சில இலக்கியப் பத்திரிக்கைகளில் அவ்வபோது தென்படுகின்றன அவரது நவீன கோட்டோவியங்கள். தீராநதி, தடம், உயிர்மை, காலச்சுவடு, அந்திமழை போன்ற தமிழின் சிற்றிதழ்களை மேயும்போதும், தீபாவளி மலர்களிலும் புதுப்புது ஓவியர்களைக் கண்டிருக்கிறேன். சமீபத்தில் அவ்வாறு கவனத்துக்கு வந்தவர்கள் ‘மாற்கு’, ரமணன், ஜி.ராமமூர்த்தி, ரவி, மகேஸ், மாரி ஆனந்த் ஆகியோர். இவர்களிடமிருந்து நிறையப் பார்த்தபின்புதான் மேலும் எழுதமுடியும்.

சரி, தமிழ் வாரப்பத்திரிக்கைகளின் உலகத்திற்குத் திரும்புவோம். இப்போதெல்லாம் நமது சஞ்சிகைகள், வண்ண வண்ண புகைப்படங்கள், வம்புகள், ஜோக்குகள், மீதம் இருக்கவே இருக்கிறது – காசுகொட்டும் விளம்பரங்கள் என பக்கங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, ஆண்டுச் சந்தாவை அவசரமாகக் கட்டச்சொல்கின்றன வாசகர்களை. இருப்பினும் நமது ஓவியர்களின் சில படங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. தற்போது வரைபவர்களில் குமுதம், விகடனில் அடிக்கடி வரும் ’ஸ்யாம்’ முக்கியமானவர் எனத் தோன்றுகிறது. அழகிய முகங்கள், சம்பவக்காட்சிகள் அவரது தூரிகையில் நடனமாடுகின்றன. ஷ்யாம் என்றிருக்கவேண்டிய பெயரை ‘ஸ்யாம்’ என ஏன் எழுதுகிறார்? ‘ஸ்’ ‘ஷ்’ உச்சரிப்பு குழப்பமாக இருக்குமோ? போதாக்குறைக்கு அவரது கையெழுத்தே ஒரு புரியாக்கிறுக்கல். ‘ஓவியம்: ஸ்யாம்’ என மேலே எழுதியிருப்பதைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. குமுதத்துக் கதைகளுக்கு வரையும் இன்னொரு ஓவியர் ’தமிழ்’. இவரது ஓவியங்களும் நேர்த்தியானவை. குங்குமம் வார இதழில் மனோகரின் கோட்டோவியங்கள் வருகின்றன. இதே பத்திரிக்கையில் வரையும் ‘அரஸ்’ ஒரு திறமையான ஓவியர். வெகுகாலமாக வரைந்துவருபவர். ஆனந்த விகடனின் கடந்த வருடத்து இதழொன்றில் ஒரு கவிதைக்காக ’ராஜ்குமார் ஸ்தபதி’ வரைந்த ஓவியம் மனதில் நிழலாடுகிறது. சைக்கிள் ஹாண்டில்பாரில் தலைகீழாகத் தொங்கவிட்ட சேவலுடன் நம்மை உற்றுப்பார்க்கும் ஒரு கிராமத்து மனிதரின் அந்தப் படம் கலாபூர்வமானது. ராஜ்குமார் ஸ்தபதியை மீண்டும் எங்கு காண்பேன்?

இவர்களின் படைப்புகளை ரசிக்கும் அதே வேளையில், இன்னொரு சிந்தனையும் மனதைப் படுத்துகிறது. நமது பத்திரிக்கைகள் இவர்களது ஓவியங்களுக்கு சன்மானம் என்று ஏதாவது தருகின்றனவா? இல்லை, ‘எங்க பத்திரிக்கையில ஒம் படம் வந்திருக்குல்ல! அதுக்கே ஒனக்கு கொடுத்துவச்சிருக்கணும். அதவிட்டுட்டுப் பணம் வேற எதிர்பாக்கறியா!’- என்று பாய்கின்றனவா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இன்னும் சில ஓவியர்கள் இங்கு விட்டுப்போயிருக்கலாம் எனினும், பத்திரிக்கைகளில் படங்கள் வரையும் ஓவியர்களைப்பற்றி சமீபத்தில் சிந்தித்திருந்ததின் விளைவே இந்தக் கட்டுரை.

**