கல்வியின் வெவ்வேறு நிலைகளில், வாய்த்த அருமையான ஆசிரியர்கள், பேராசிரியர்களைப்பற்றி நினைத்துப் பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. அவர்களில் சிலர் திறமையாக, நேர்த்தியாகப் பாடம் எடுத்ததோடு நில்லாமல், இடையிடையே பாடத்துக்கு வெளியேயும், பல நல்ல விஷயங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டவர்கள். ஒரேயடியாகப் பாடம், பாடம் என ஸ்டீரியோடைப்பாகத் தேள்கொட்டாமல், அரைத்தமாவை அழுதுகொண்டே அரைக்காமல், அவ்வப்போது சற்றே விலகி, கொஞ்சம் நல்லகதை சொல்லி, நகைச்சுவையாகப் பேசி, கிண்டலடித்து மாணவர்களைச் மனதாரச் சிரிக்கவைத்தவர்கள். நல்வழியில் சிந்திக்கவும் தூண்டினார்கள்; கடினமான பாடங்களிலும் மாணவர்களின் ஆர்வம் தணியாது பார்த்துக்கொண்ட புத்திசாலி ஆசிரியர்கள்; இளம் வயதில் மனதில் இடம் பிடித்த நல்லோர்கள். இத்தகைய அக்கறை, திறமை மிகுந்தோரிடம் பாடம் கற்கும் வாய்ப்பு அமைந்தது என் வாழ்வின் பாக்யம். இப்போதும், அந்தப் பள்ளி/கல்லூரி வாழ்க்கை திரும்பிவராதா என மனம் ஏங்குகிறது.
ஆசிரியர் என்கிற வார்த்தை, அது நம் மனதில் ஒருகாலத்தில் ஏற்படுத்திய நேர்மையானவர், நல்ல வழிகாட்டி அல்லது குறைந்தபட்சம், தான் எடுக்கும் பாடத்தில் திறமைசாலி என்கிற ஒழுங்கான பிம்பம், தற்காலத்தில் வெகுவாகச் சிதைந்துபோய்விட்டது. மிகவும் துக்கத்திற்குரிய விஷயமிது. காலையில் தினசரியைத் திறந்தாலோ, டிவியைப் பார்த்தாலோ, வருவதெல்லாம் மங்களகரமான நியூஸ்தான். சகிக்கமுடியவில்லை. வழக்கமாக வரும் க்ரைம் ஸ்டோரிகளோடு, இப்போது ஆசிரியர்-தொடர்பான வன்மங்களும் சேர்ந்துகொண்டுள்ளன. ஆசிரியர் வேலையிலிருந்துகொண்டே சிலர், மாணவ, மாணவியருக்கெதிராக நிகழ்த்திய வன்மங்கள், வக்கிரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கேட்பதற்கே அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது.
வட இந்தியாவில் பள்ளிச்சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. அடிபட்டு சிதைபவர்கள் பிஞ்சுகள். பெரும்பாலும் அரசு ஆரம்பப்பள்ளிகளில், இத்தகைய, வன்முறையில் பி..ஹெச்டி வாங்கிய ஆசிரியர்கள் சிலர் தென்படுகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் ஏதோ சிறு தவறுக்காக ஒரு சிறுமியை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை – கவனியுங்கள்- ஆசிரியை, தாறுமாறாகக் குச்சியினால் விளாசுகிறார். அடி தாங்கமுடியாமல் சிறுமி கதறிக்கொண்டே ஓடமுயற்சிக்க, கம்பால் ஓங்கி சிறுமியின் தலையில் தாக்குகிறார். சிறுமி திரும்ப, முகத்தில் அதுவும் ஒரு கண்ணில் அடி விழ, ரத்தம் பீறிட கீழே விழுந்து மயக்கமாகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட சிறுமி, கடும்காயம் காரணமாக சிகிச்சைக்குப் பின்னும், ஒரு கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழக்கிறாள். பெற்றொரின் மனநிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
டெல்லியின் புறநகர்ப்பகுதியின் அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர், படிப்பில் சரியாக கவனம் செலுத்தாத பள்ளி மாணவன் ஒருவனை தண்டிக்க முயல்கிறார். எப்படி? அவனது மனதில் நிரந்தர அவமான உணர்ச்சி ஏற்படும் வகையில் வன்மம் காட்டுகிறார், இன்னொருவர் மூலமாக. நூதன வழியாகத் தெரிகிறதல்லவா? அந்த வகுப்பின், நன்றாகப் படிக்கும், பார்க்கப் பளிச்சென்றிருக்கும் (உச்சநிலை அதிர்ச்சிக்காக) ஒரு மாணவியை அழைத்து, இந்த மாணவனின் கன்னத்தில் அறையச் சொல்கிறார் வகுப்பின் முன்னே. மாணவி யார், அந்த மாணவனைத் தண்டிக்க? அவள் திடுக்கிடுகிறாள்; தயங்குகிறாள். மறுக்கிறாள். ஆசிரியை நாயாகச் சீறுகிறாள். `சொன்னபடி கேள், இழுத்து ஒரு அறைவிடு இவனை!` என்று சிறுமியின்மீது கொலைவெறியோடு பாய்கிறாள். பையன் குன்றிப்போய் அவமானம் தாங்காது நிற்கிறான். வகுப்பு அதிர்ந்துபோய் பார்க்கிறது. தடுமாற்றத்துடனும், ஒருவித பயத்துடனும், வேறுவழியின்றி மாணவனை அறைகிறாள் அந்த இளம் மாணவி. உடம்பில் அல்ல, மனதில் நீங்கா காயமுற்று சின்னாபின்னமாகிறான் பையன். கொக்கரிக்கிறாள் ஆசிரியை வேஷத்தில் இருக்கும் அரக்கி. எப்படி இருக்கிறது வன்மத்தின் நூதனத் தாக்குதல்? அப்படி என்ன வெறுப்பு அந்தப் பையன் மீது? இத்தகைய வன்முறை அசிங்கத்தை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியையே வகுப்புக்குள் அவிழ்த்துவிட்டால், இளம் மாணவ, மாணவரிடையே நட்பு நிலை எவ்வாறிருக்கும்? ஒற்றுமையோ, பரஸ்பர அன்போ நிலவுமா? பாடம் படிப்பதற்கான, உயர்ந்த விஷயங்களைக் கற்றறிவதற்கான சூழலா இது?
டெல்லியில் ஒரு துவக்கப்பள்ளி. ஒன்றாவது இரண்டாவது வகுப்பெடுக்கும் ஆசிரியர். வகுப்புகளின் இடைவேளையில் 6, 7-வயதுச் சிறுமிகளை அழைத்துத் தன் மொபைலில் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து பிஞ்சு மனதுகளைக் குழப்புகிறார்; பதறவைக்கிறார். அதில் அவருக்கு ஒரு வருத்தின்பம் (sadistic pleasure). பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தி எப்படியோ தட்டுத்தடுமாறி, தன் தாயிடம் வகுப்பில் ஆசிரியர் காண்பிக்கும் மொபைல் காட்சிகளைப்பற்றிச் சொல்லிவிடுகிறாள். அதிர்ந்த தாய், தன் பெண்ணுடன் படிக்கும் மற்றக் குழந்தைகளிடமும் விஷயத்தை உறுதிசெய்துகொண்டு, போலீசுக்குப் போகிறார். ஹை-டெக் ஆசிரியர் கம்பி எண்ணுகிறார்.
சில நாட்கள் முன்பு பத்திரிக்கை செய்தி: கர்னாடகாவில் மங்களூருக்கு அருகே ஒரு கிராமத்தில், வேதம் கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளியில் 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட ஒரு மாணவனைக் கடந்த 10 நாட்களாகப் பள்ளி வரவில்லை என்பதற்காக ஒரு ஆசிரியப் பெருந்தகை அடித்து நொறுக்குகிறது. அவன் சொன்ன காரணத்தைக் கேட்கும் நியாயம், தர்மம் அங்கு நிகழவில்லை. பையன் என்ன சொன்னான்? தான் கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டதாகவும், அதனால் ஜுரத்துடன் வீட்டில் ஓய்வெடுக்குமாறு ஆனது என்றும் கூறுகிறான். அவனது கையில் பலத்த கட்டுப்போடப்பட்டு இருக்கிறது. இடுப்பில் சிறிய துண்டைக்கட்டிக்கொண்டு கையிலிருந்து தோள்பட்டைவரை ஸ்லிங்குடன் (sling) நடுங்கிக்கொண்டு ஆசிரியர் முன் நிற்கிறான் அந்த மெலிந்த ஏழைச் சிறுவன். உண்மை கூறிய சிறுவனை கம்பினால் சுற்றிச்சுற்றி வந்து அடித்து வதம் செய்கிறார் அவனுடைய குரு மகராஜ். சக மாணவர்கள் பீதியுடன் பார்க்கிறார்கள். காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்துவிட்டார்கள். `வாட்ஸ்-அப்`பில் வலம் வந்த இந்த வன்மம், போலீஸ் கவனத்துக்குப்போனது. ஆசிரியராக வேஷமிட்டிருந்த அந்த அயோக்கியனைப் போலீஸ் கைது செய்தது. ஆசிரியர் வேடத்தில் அலையும் அரக்கர்களிடம், கல்வி கற்ற குழந்தைகளின் மனவளர்ச்சி (psychological growth), பிற்காலத்தில் எப்படி உருவெடுக்கும்? இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இளம் மாணவர்மீதான வன்மத்தின் தென்னிந்திய சாம்பிள் இது.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் பள்ளிப் பிள்ளைகளுக்கெதிராக ஆசிரியர் எனும் வேஷத்தில் அலையும் கிரிமினல்கள் நடத்திய வன்முறை, வஞ்சக நாடகங்களிலிருந்து ஒரு சில காட்சிகளே இவை.இத்தகைய கொடுமைகள் நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது நாட்டில் என்பதுதான் கவலையை அதிகப்படுத்துகிறது.
Formative years என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பள்ளிக்குழந்தைகளின் ஆரம்ப வருடங்கள் வாழ்வில் முக்கியமானவை. நல்ல பெற்றோரும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் குழந்தைகளை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்லவேண்டிய பருவம். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போயாகவேண்டும் என்கிற காலச்சூழலில், ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் சீரிய பங்கு, குழந்தைகளின் வளர்ச்சியில் இன்றியமையாததாக ஆகிவிட்டது. குற்றச்சூழலில் வளர்ந்தவர்கள், வக்கரித்த மனம் உள்ளவர்களை இத்தகைய ஆசிரியர் பணியில் அரசு அமர்த்தக்கூடாது. தேர்வுநிலையிலேயே அவர்களை வடிகட்டித் தூக்கி எறிந்துவிடவேண்டும். அரசுப் பணியில் யாரும் வந்து அமர்ந்துகொள்ளலாம் என்கிற நிலை வந்து விட்டால், தகுதியற்றவர்கள் நாற்காலியில் வேகமாக வந்தமர்வார்கள். நாற்காலியை ஒருமுறை பிடித்துக்கொண்டுவிட்டால், தவறுசெய்து பிடிபட்டாலும், தப்பிக்க வழி தேடுவார்கள். சிறு தண்டனைகளுடன் தப்பித்து, வேலையை தக்கவைத்துக்கொள்வார்கள். தங்களின் நாசகார வேலையை வேறிடத்தில், வேறொரு புள்ளியில் தொடர்வார்கள். அப்பாவி ஜீவன்கள் மேலும் மேலும் அல்லறும். அதன் கொடூர விளைவுகள் சமூக வாழ்வை நோயாய்ப் பீடிக்கும்.
சீரிய நற்பணி செய்யும் ஆசிரியர்களை மதிப்பதும், உரியவகையில் கௌரவப்படுத்துவதும், நல்லரசின், நல்ல சமூகத்தின் அடையாளம். அதைப்போலவே, தகுதியில்லாதவர்கள், குற்றவாளிகள் ஆசிரியர் பணியில் அமர்ந்திருப்பது தெரியவந்தால், உறுதியானால், அத்தகையோரை உடனடியாகக் களையெடுத்து நீக்குவதும், சமூகத்தின் சிறப்பான மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.
**