சலாம், கலாம் சார், சலாம் ! – 3

தொடர்ச்சி..

உழைப்பு, நேர்மை, கடமை உணர்வு, ஆசிரியர்கள்-பெரியோர்களின் ஆசியுடன் வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர் டாக்டர் அப்துல் கலாம். DRDO-ல் பணியாற்றியபோது இந்திய ராணுவத்திற்கான ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார். 1980-களில் ISRO (Indian Space Research Organization)-என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார். இந்தியாவின் SLV (Satelite Lauch Vehicle) ப்ராஜெக்ட்டில் Project Director-ஆகப் பணிபுரிந்து முக்கியப் பங்காற்றினார். அவரது தலைமையில் வடிவமைக்கப்பட்ட ’ரோஹிணி’ செயற்கைக்கோள் 1983-ல் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது. 17 மாதங்கள் விண்ணில் பறந்த அந்த செயற்கைக்கோள் 2500-க்கும் அதிகமான படங்களை எடுத்து அனுப்பியது. அவரது தலைமையில், ஆலோசனையின் பேரில், இந்தியா விதம்விதமான ஏவுகணைகளை உற்பத்தி செய்து விண்ணில் பாய்ச்சி உலக வல்லரசுகளை அதிரச் செய்தது. உலகின் முக்கியமான ஏவுகணை வல்லரசாக இந்தியா அங்கீகாரம் பெற்றது. டாக்டர் கலாம் ‘India’s Missile Man’ எனப் பாராட்டப்பட்டார். வாஜ்பாயியைப் பிரதமராகக்கொண்ட பாரதிய ஜனதா அரசு 1998-ல் ராஜஸ்தானின் போக்ரானில் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை பூமிக்கடியில் நிகழ்த்தி உலகைக் கிடுகிடுக்கவைத்தது. இந்த ரகசிய ப்ராஜெக்டை டாக்டர் கலாம் தம் தலைமையில் வழிநடத்தி வெற்றிபெறச் செய்தார். பிரதமர் வாஜ்பாயியால் வெகுவாகப் புகழப்பட்டார் கலாம். இந்தியா ஒரு அணுஆயுத வல்லரசாக உலக அரங்கில் அரங்கேற்றம் நிகழ்த்தியது. கம்பீரமாக வலம் வருகிறது.

தன் வாழ்நாளில் பல இந்திய, சர்வதேச விருதுகளைப் பெற்றார் டாக்டர் கலாம். பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளுக்குப்பின், 1997-ல் இந்தியாவின் உயர் விருதான ‘பாரத ரத்னா’ அவருக்கு வழங்கப்பட்டது. இவை தவிர, லண்டன் ராயல் சொசைட்டியின் King Charles II Medal, அமெரிக்க கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் International von Karman Wings Award, Hoover Medal, USA ஆகிய சர்வதேச விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன. 40 இந்திய, சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கித் தங்களுக்கு கௌரவம் தேடிக்கொண்டன.

ஐக்கிய நாடுகள் சபை (UN) டாக்டர் கலாமின் 79-ஆவது பிறந்தநாளை ‘சர்வதேச மாணவர் தின’மாக அறிவித்தது. 2005-ல் ஜனாதிபதி அப்துல் கலாம் அரசுப் பயணமாக ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ‘CERN’ என்கிற உலகப்புகழ்பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தார். இந்திய ஜனாதிபதி என்பதோடு, அவர் ஒரு அணு விஞ்ஞானி, Missile Technologist என்கிற சிறப்பிற்காகவும், அவரை மிகவும் மதித்து அவர்களுடைய ப்ராஜெக்ட்டுகளை சுற்றிக் காண்பித்தார்கள் அங்குள்ள விஞ்ஞானிகளும் அதிகாரிகளும். ஸ்விட்ஸர்லாந்து அரசு அவர் வருகைதந்த தினமான மே-25-ஐ ‘விஞ்ஞான தினம்’-ஆக அறிவித்து அவரைக் கௌரவித்தது.

தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார் கலாம். இந்திய ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த காலத்தில், குடியரசு தினத்தன்று ஜனாதிபதியின் தேசத்திற்கான ஆங்கில, ஹிந்தி உரையில் அவர் திருக்குறளிலிருந்தும் மகாகவி பாரதியின் கவிதைகளிலிருந்தும் அடிக்கடி மேற்கோள் காட்டியிருந்தார். டெல்லியில் தமிழ்ச்சங்கத்தின் விழாவிற்கு வந்து உரையாற்றியிருக்கிறார். இலக்கிய விழாக்களுக்கும் சென்று பேசி இருக்கிறார் கலாம்.

ஐரோப்பிய கூட்டமைப்பின் பார்லிமெண்டிற்கு (European Union Parliament)அதன் 50-வருட நிறைவு விழாவுக்கு இந்தியப் பிரதிநிதியாக ஜனாதிபதி கலாம் 2005-ல் வருகை தந்தார். ஐரோப்பிய பார்லிமெண்ட்டின் தலைவரால், அங்குள்ள பிரதிநிதிகள் முன் பேச அழைக்கப்பட்டார் கலாம். அங்கு ஒரு உயிர்த்துடிப்பான உரையை வழங்கி ஐரோப்பியர்களை அசரவைத்தார். அவர் பேசுகையில் தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் புறநாநூறிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: ‘யாதும் ஊரே..யாவரும் கேளிர்!’ 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இந்தியக் கவிஞர்- கணியர் பூங்குன்றனார் – இவ்வாறு சொன்னார்.அதன் பொருள்: ’இந்த உலகே என் ஊர்தான். உலக மக்கள் யாவரும் என் உறவினர்கள்!’ கூடவே கலாம் பேசுகிறார்: ”இந்தியாவில் நாங்கள் தனிமனிதனின் மனதில் அன்பும் நேர்மையும் குடிகொண்டிருக்கவேண்டும் என வலியுறுத்துவோம். அவனிடம் அன்பிருந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் அமைதி எனில் நாடு அமைதி பெறும். நாடு அமைதியாக இருக்குமானால் அது உலக அமைதிக்கு வழிவகுக்கும்..” கலாம் இவ்வாறு பேசுகையில் ஐரோப்பிய பார்லிமெண்ட் உறுப்பினர்கள், விருந்தினரிடமிருந்து தொடர்ச்சியான கைதட்டல். அவர் பேசி முடிக்கையில் ஐரோப்பியப் பார்லிமெண்ட் தலைவர் எழுந்திருந்து டாக்டர் கலாமைக் கட்டிக்கொள்கிறார். நன்றி உரையில் ஐரோப்பியத் தலைவர் சொல்கிறார்: இந்தியாவின் ஜனாதிபதி என்கிற நிலையிலும், ஒரு அற்புதமான தலைவர், விஞ்ஞானி என்கிற வகையிலும், ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, தாங்கள் நிகழ்த்திய இந்த உரை, மிகுந்த உற்சாக உணர்ச்சி ஊட்டும் உரை. ஐரோப்பியப் பார்லிமெண்ட்டில் இதுவரைக் கேட்டிராத அற்புதமான உரை! (Most inspirational speech. Most extraordinary speech ever heard in European Parliament..) இந்தியா என்கிற அருமையான நாட்டிற்கு எங்கள் வாழ்த்துக்கள். இந்திய-ஐரோப்பிய உறவு மேம்படட்டும்!’

சென்ற இடமெல்லாம் உலக நாடுகளில் இந்தியாவின் புகழ்பரப்பினார் ஜனாதிபதி அப்துல் கலாம். ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் விலகியபின்னும் அடிக்கடி மாணவர்களுடன் தொடர்பிலிருந்தார். Visiting Professor-ஆகப் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள், IITs, IIMs-களுக்குச் சென்று பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளைச் சந்தித்திருக்கிறார். மறைவுக்குச் சற்றுமுன், அப்படி ஒரு விழாவில்தான் ஷில்லாங்கில் கலந்துகொண்டு பேசினார் கலாம்.

பொதுவாழ்வில் அரசுப் பணத்தைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருந்தார் அவர். ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்கும் விழாவிற்கு அவருடைய உறவினர்கள் ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்தனர். அவர்களது பயணச்செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் ஜனாதிபதி கலாம் அதை மறுத்துவிட்டார். ’அவர்கள் என்னுடைய சொந்தக்காரர்கள். அவர்களது செலவு என் செலவு’ எனக் கூறியதோடு நில்லாமல் அவர்களின் பயணச்செலவிற்கானப் பணத்தை அரசாங்கத்திற்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார் ஜனாதிபதி கலாம். ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் எப்போது தமிழ்நாட்டுக்குச் சொந்த அலுவல் நிமித்தமாகச் சென்றாலும், அதற்கான பயணச்செலவைத் தானே ஏற்றுக்கொண்டார் அவர். பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும், மக்களின் பணத்தை எப்படி மரியாதையோடு கையாளவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் டாக்டர் கலாம்.

வாழ்வில் அவ்வப்போது தனக்கு உதவியாக இருந்த சாதாரண மனிதர்களை மறந்தவரில்லை கலாம். 2002-ல் ஜனாதிபதி கலாம் திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு ஏற்கனவே இளம்பிராயத்தில், பணிபுரிந்திருந்தார் அவர். அந்தக் காலகட்டத்தில் தன் செருப்புகளை சீர்செய்து கொடுத்த ஜார்ஜ் என்கிற செருப்புத் தைக்கும் தொழிலாளியை நினைவுகூர்ந்து அவருடைய கடைக்குச் சென்றார் கலாம். ஜனாதிபதியைத் தன் கடைவாசலில் பார்த்து ஜார்ஜ் அரண்டுபோய் நிற்க, “என்ன ஜார்ஜ்? எப்பிடி இருக்கீங்க? சௌக்யமா?’ என்று விஜாரித்தாராம் ஜனாதிபதி கலாம். ’இந்தியா டுடே’ இதழில் ஜார்ஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தான் அப்போது உணவருந்திய குருவாயூரப்பன் லாட்ஜின் சொந்தக்காரரான பரமேஸ்வரன் நாயரையும் சந்தித்துள்ளார் கலாம்.

இந்தியா என்கிற மாபெரும் தேசத்தின்மீது மாளாத பக்தி கொண்டிருந்தார் கலாம். இளைஞர்கள் மீது, குறிப்பாக கிராமப்புற இளைஞர்களின் படிப்பு, வளர்ச்சிவாய்ப்புகள் குறித்துக் கவலைப்பட்டார். ஆர்வத்துடன் ஏதாவது செய்ய முயன்றார். கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக PURA (Providing Urban amenities to Rural Areas) என்கிற ஒரு தொண்டுநிறுவனத்தை நிறுவினார். தனது வாழ்நாள் சேமிப்புகளை அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார் கலாம்.

இந்திய இளைஞர்களை வழிநடத்தி, ஊக்குவிக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் கலாம். Wings of Fire, India 2020, Ignited Minds are the best sellers among them. இந்திய நாட்டிற்கு, குறிப்பாக இளைஞர் சமுதாயத்துக்குக் கிடைத்த கலங்கரை விளக்கம் கலாம்.

இத்தகைய அபூர்வமான மனிதரை இழந்துவிட்ட நிலையில்தான் கலங்கி நிற்கிறது இந்திய நாடு இன்று.

**

சலாம், கலாம் சார், சலாம் ! – 2

தொடர்ச்சி..

ஆசிரியர்-மாணவன், குரு-சிஷ்யன் என்கிற மரபு சார்ந்த உறவுநிலையில், அதன் சிறப்புகளில், உன்னதத்தில் அவர் மனம் லயித்தது. தனது அரசு ஆய்வுப்பணியின் வெவ்வேறு கட்டங்களில் தான் சிறப்பாகப் பணியாற்றியதோடு தனக்குக் கீழ் பணிபுரிந்த டெக்னீஷியன்கள், உதவியாளர்களிடம் தன் சகோதரர்களுடன் நடந்துகொள்வதுபோல் வெகு அன்புடன் நடந்துகொண்டார் கலாம். அவர்களுடன் கூட இருந்து அவர்கள் சிறப்பாகச் செய்து முடித்த பணிகள் பற்றி மனதாரப் பாராட்டியுள்ளார். தனது பிரிவில் தன்னுடன் வேலைபார்த்த ஊழியர்களின் குடும்ப நலம் பற்றி கனிவுடன் விஜாரிப்பார்.

ஒருமுறை கலாமின் உதவியாளர் ஒருவர் மாலை 6 மணிக்குள் வீடு திரும்பி எக்ஸ்பிஷன் ஒன்றுக்கு அழைத்துச் செல்வதாகத் தன் குழந்தைகளிடம் சொல்லியிருந்தார். ஆனால் எக்கச்சக்கமாக வேலை வந்துவிட்டதால் அவரால் மாலையில் வீடு திரும்ப முடியவில்லை. வீட்டிலிருந்து வந்த ஃபோனை எடுத்துத் தன்னால் வரமுடியவில்லை என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார். இருந்தும் அவர் மனம் சரியாகவில்லை. அவர் தன் குழந்தைகளிடம் தன் இயலாமையைச் சொன்னவிதம், அவரின் முகத்தில் தெரிந்த வருத்தம் ஆகியவற்றை கலாம் கவனித்துக்கொண்டிருந்தார். சரியாக 6 மணிக்கு அந்த ஊழியரின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார் கலாம். அப்பாதான் வந்துவிட்டாரோ என ஆசையாய்க் கதவைத் திறந்த குழந்தைகளிடம் தான் அவர்களுடைய தந்தையுடன் ஆஃபீஸில் பணிபுரிவதாகச் சொன்னார். அவர்களின் அப்பாவுக்கு முக்கிய வேலை இருக்கிறது அதனால்தான் அவரால் வரமுடியவில்லை, குழந்தைகளை எக்ஸ்பிஷனுக்குக் கூட்டிச்செல்லத் தன்னை அனுப்பியுள்ளார் என்றார் கலாம். குழந்தைகள் தன்னோடு தயங்காமல் எக்ஸ்பிஷனுக்கு வரலாம் என்று சொல்லி, குழந்தைகளை எக்ஸ்பிஷனுக்குக் கூட்டிச்சென்று காண்பித்துவிட்டு, திரும்ப வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றார் கலாம். அன்றிரவு, குழந்தைகளின் அப்பா வெகுதாமதமாக வீடு திரும்பினார். தூங்காமல் இருந்த குழந்தைகளிடம் தான் சொன்னபடி வர முடியவில்லை என்று வருந்தியதோடு, இன்னொரு நாள் அவசியம் அழைத்துச்செல்வதாகவும் உறுதி சொன்னார் அந்த அப்பா. குழந்தைகள் ஆச்சரியப்பட்டன. சிரித்துக்கொண்டே சொல்லின: ’ஒங்க ஆஃபீஸிலிருந்து ஒரு மாமா வந்து எங்கள எக்ஸ்பிஷனுக்குக் கூட்டிட்டுப் போனாரு. ஒங்களோட ஒர்க் பண்றவர்தான் அவரு!’ என்றார்கள். ஆச்சரியத்துடன், அவர் யார், எப்படியிருந்தார் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட அப்பாவுக்குப் புரிந்தது நமது ’பாஸ்’தான் நம் வீடு தேடி வந்திருக்கிறார்; ’குழந்தைகளுக்கு அப்பா கொடுத்த வாக்குப் பொய்க்கக்கூடாது, அவர்கள் ஏமாறக்கூடாது’ என்கிற நல்ல நோக்கத்துடன் அவர்களைப் பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் நெகிழ்ந்துவிட்டாராம் கலாமின் அந்த உதவியாளர்.

யாரும் கஷ்டப்படுவதைக் காணப் பொறுக்காது அவருக்கு. அவர் தன்னுடைய கடைசிப்பயணமாக, அஸ்ஸாமின் தலைநகர் கௌஹாட்டியிலிருந்து ஷில்லாங் சென்றுகொண்டிருந்தார்-. Indian Institute of Management, Shillong-ல் ஒரு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களோடு பேசுவதற்காக. முன்னாள் ஜனாதிபதி என்பதால் உரிய பாதுகாப்போடு அழைத்துச் சென்றார்கள் அதிகாரிகள். 5 கார்கள் கொண்ட கார்கேடில்(carcade) கலாமின் கார் இரண்டாவதாகச் சென்றுகொண்டிருந்தது. முன்னே ஒரு மிலிட்டரி ஜீப். அதில் இரண்டு ஜவான்கள் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருக்க, ஒரு இளம் ஜவான் துப்பாக்கியுடன் நின்றுகொண்டு நாலாபுறமும் பாதுகாப்பு நோக்கில் பார்வையிட்டு வந்துகொண்டிருந்தார். டாக்டர் கலாமிற்கு அந்த ஜவான், நீண்ட அந்தப் பயணத்தில் நின்றுகொண்டே வந்தது மனதை என்னவோ செய்தது. தனக்கு உதவியாக பக்கத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரியிடம் ‘’அந்த ஜவான் எதற்காக நின்றுகொண்டே வருகிறார்? இது ஒரு தண்டனைபோலல்லவா இருக்கிறது? வாக்கி-டாக்கியில் பேசுங்கள். அவரை உட்கார்ந்து வரச்சொல்லுங்கள்’ என்றார் கலாம். மிலிட்டரி டியூட்டியின்படி அவர் நின்றுகொண்டு சுற்றுமுற்றும் பார்த்துத்தான் வரவேண்டும். அவர் உட்காரக்கூடாது என்று அந்த அதிகாரி விளக்கிச் சொல்லியும் சமாதானமடையவில்லை கலாம். ‘கையைக்காட்டி கொஞ்சம் உட்காரச்சொல்லுங்க’; என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டே வந்தாராம். 2 மணி நேரப் பயணத்துக்குப் பின் தான் தங்கியிருக்கும் மாளிகைக்கு வந்துசேர்ந்த கலாம், அந்த அதிகாரியிடம் சொல்லி அந்த ஜவானைக் கூப்பிட்டு அனுப்புங்கள். நான் அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்றிருக்கிறார். அதிகாரியும் செக்யூரிட்டி செட்-அப்பிற்குத் தகவல் சொல்லி, அந்த ஜவானை வரவழைத்திருக்கிறார் கலாமின் மாளிகையில். அந்த அப்பாவி ஜவான் ‘நாம் என்ன தவறு செய்துவிட்டோமோ, எதற்காகாக் கூப்பிட்டிருக்காங்களோ தெரியவில்லையே!’ என்கிற குழப்பத்தில் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்திருக்கிறார். கறுப்புச்சட்டையுடன் ஒல்லியாக வந்து நின்ற அந்த இளம் ஜவானைப் பார்த்தவுடன் கலாம் அவருடைய கை குலுக்கி நன்றி சொல்லிருக்கிறார். ’நீங்கள் களைப்பாக இருக்கிறீர்களே..ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? என் பாதுகாப்புக்காக 2 மணி நேரம் நின்றுகொண்டே வந்திருக்கிறீர்கள். என்னால் உங்களுக்குச் சிரமம்!’ என்றாராம் டாக்டர் கலாம். நெகிழ்ந்துபோன அந்த ஜவான் பேச முடியாமல் தடுமாறியிருக்கிறார். ‘ஒங்களப்போன்றவங்களுக்காக 2 மணிநேரம் என்ன, 6 மணி நேரம்கூட நான் நின்னுகிட்டே வரலாம் சார்!” என்றிருக்கிறார்.

எங்கும் எதிலும் வன்மம் தெறிக்கும் இவ்வுலகில், அன்புவழி சென்ற அருமையான மனிதர் அப்துல் கலாம். மனிதஇனம் மட்டுமன்றி மற்ற உயிர்களையும் கனிவோடு பார்த்தவர். இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (Defence Research and Development Organization) – தலைவராக இருந்தபோது அந்த நிறுவனத்துக்குப் புதிய கட்டிடம் டெல்லியில் கட்டப்பட்டது. கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவரில் வழக்கமாகச் செய்வதைப்போல கண்ணாடிச்சில்லுகளை, பாதுகாப்பு நோக்கில் பதிக்கவிருந்தார்கள். இதனைப்பற்றிக் கேள்விப்பட்ட கலாம் கண்ணாடிச் சில்லுகளை சுவரின்மீது பதிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அவர் சொன்ன காரணம்: ”இந்த வீதியில் நிறைய மரங்கள் இருக்கின்றன. பறவைகள் அதிகமாக வாழ்கின்றன. அவை காம்பவுண்டு சுவரில் உட்கார நேரும்போது கண்ணாடி குத்திவிடும். பறவைகளுக்குத் தீங்கு ஏற்படும். ஆகவே உடைந்த கண்ணாடி சில்லுகளை வைக்க வேண்டாம்!” தங்கமான தமிழர். (தொடரும்)

சலாம், கலாம் சார், சலாம் !

பகுதி -1.

டாக்டர் A.P.J. அப்துல் கலாம், அன்புக்குரிய முன்னாள் ஜனாதிபதி. நேற்று மாலை (27-7-2015) நம்மிடமிருந்து விடை பெற்றுக்கொண்டுவிட்டார். இனி இத்தகைய ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா?

மக்களின் ஜனாதிபதி (People’s President) என அன்புடன் அழைக்கப்பட்டவரும், அப்படி அழைக்கப்பட முற்றிலும் யோக்யதையானவரும் அவர் ஒருவர்தான். அரசாங்கப் பதவி என்பது எத்தனைப் பெரியதாகவும் இருக்கலாம். அதில் காலப்போக்கில் யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து எழுந்திருந்து போகலாம். பார்க் பெஞ்சில் சிலர் காலையிலோ, மாலையிலோ கொஞ்ச நேரம் உட்கார்ந்து எழுந்து போய்விடுவார்களல்லவா. அதைப்போல. அவர்கள் எல்லாம் மனதில் நிலைப்பவரா? நிச்சயமாக இல்லை. நாடெங்கும் மக்களால் ஒருசேர, பிரியத்துடன் மதிக்கப்பட, விரும்பப்பட சில அபூர்வமான தகுதிகளை டாக்டர் கலாம் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் ’மறைந்தார்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கிவாரிப்போடுகிறது நமக்கு.

டாக்டர் கலாம் பற்றி நிறைய எழுதலாம். விஷயம் இருக்கிறது. மீடியாக்கள் வரிந்துகட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டன. எழுதட்டும். பொறுப்பாக, நல்லவிஷயங்களை எழுத எப்போதாவதுதானே நமது மீடியாக்களுக்கு வாய்க்கிறது!

கலாம் என்கிற தனிப்பட்ட மனிதர் அபூர்வமானவர். சீரிய கடமை உணர்வும், மென்மையான குணநலன்களும் உடையவராக இருந்தார். கஷ்டப்படுபவர்களைக் கண்டால் இளகும் மனம், பழகுபவர்களிடம் நேசம், நட்பு, குழந்தைகளிடம், இளைஞர்களிடம் ஒரு அதீதப் பிடிப்பு, அன்பு, வாஞ்சை என இந்தக்காலத்தில் பொதுவாக மனிதரிடம் காணக்கிடைக்காத குணாதிசயங்கள் அவரிடம் காணப்பட்டன. ஆண்டவன் இப்படி ஒரு அதிசயத்தைப் படைத்து இந்தியாவுக்கு அனுப்பிவைத்திருந்தான்! திடீரென்று என்ன தோன்றியதோ அவனுக்கு, என்ன அவசரமோ — ’போதும், திரும்பி வாப்பா!’ என அழைத்துக்கொண்டுவிட்டான்.

எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் மக்களின் ஜனாதிபதி. தன் சிறுவயதிலிருந்தே பெரியோர்களையும் ஆசிரியர்களையும் மதித்தவர். மனதில் வைத்துப் போற்றியவர். இந்திய ஜனாதிபதியாகப் பதவி ஏற்று ராஷ்ட்ரபதி பவனில் வசிக்கையில், ராஷ்ட்ரபதி பவனின் மிகப்பெரிய விசிட்டர் ரூமில், தனக்கு சிறுவயதில் அன்புடன் ஆரம்பப்பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியரின் பெரிய புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார் டாக்டர் கலாம். சிறுவன் அப்துல் கலாமின் குரு பக்தி, பொறுப்புணர்வு, உழைப்பு, நேர்மை என்கிற உயர்குணங்களைக் கூர்ந்து கவனித்திருந்த அவருடைய ஆசிரியர், ‘நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய்!’ என ஆசீர்வதித்திருக்கிறார். சிவசுப்ரமணிய அய்யர் என்கிற அந்த ஆசிரியர் ஒருநாள் கலாமின் 5-ஆவது வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பறவை எவ்வாறு மேலெழுந்து பறக்கிறது என்பது அன்றைய பாடம். அய்யர் கரும்பலகையில் பறவையின் படம் வரைகிறார். அதன் உடல்பகுதி, வால், இறக்கைகள் அதன் மேல்நோக்கிய மூக்கு. அதனுடைய டேக்-ஆஃப் நிலை பற்றி, அது தன்னுடைய உயரநிலையை(altitude) எவ்வாறு நிகழ்த்துகிறது, மாற்றுகிறது, திசை திரும்ப என்ன செய்கிறது என்பதனை விளக்குகிறார். 45 நிமிடம் பாடம் எடுத்தபின்னர் கலாமை நோக்கித் திரும்புகிறார். கலாமைக் குறிப்பிட்டுக்கேட்கிறார். பறவையின் பறத்தல் பற்றி இப்போது புரிகிறதா?

கலாம் தனக்கு அது சரியாக இன்னும் புரியவில்லை என்கிறார். ஆசிரியர் மற்ற மாணவர்களையும் இதையே கேட்க, அவர்களும் தங்களுக்கும் புரிபடவில்லை எனச் சொல்கிறார்கள். இப்போதிருக்கும் (பெரும்பாலான) ஆசிரியர்களாக இருந்தால், பையனை முன்னே வரச்சொல்லி காதைப்பிடித்துத் திருகி, தலை தெறிக்கிறமாதிரி ஒரு குட்டு வைத்து, கைவீச்சில் முதுகிலும் ஓங்கி ஒரு போடுபோட்டு அநத அப்பாவிச் சிறுவனை ஒருவழி செய்திருப்பார்கள். கூடவே, ‘கவனிச்சாத்தானே! காதுகொடுத்துப் பாடத்தைக் கேட்டாத்தானேடா புரியும்! மூதேவிகளா! வந்துட்டாங்க என் பிராணனை வாங்க!’ என்று விஸ்வாமித்திர கோபத்தைக்காட்டி சாபம் போட்டிருப்பார்கள். ஆனால், சிவசுப்ரமணிய அய்யர் இந்தப் பாதகங்கள் எதுவும் செய்யவில்லை. மாறாக ’இன்னிக்கு பள்ளி முடிந்ததும் கடற்கரைப்பக்கம் உங்களெயெல்லாம் கூட்டிப்போகிறேன்’ என்றார். சொன்னபடியே செய்தார்.

கலாமுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஒரே சந்தோஷம். ஆசிரியருடன் கடற்கரையில் உட்காருகிறார்கள். நீலக்கடல். ஆர்ப்பரிக்கும் அலை. பரந்து விரிந்த வானம். ரம்யமான சூழ்நிலை. கடற்கரையில் பறவைகள் பறப்பதும், அமர்வதும், பறப்பதுமாக இருக்கின்றன. ஆசிரியர் சொல்கிறார்: உட்கார்ந்திருக்கும் அந்தப் பறவையைப் பாருங்கள். இப்போது அது எழுந்து பறக்கும். அதன் உடல் அமைப்பு, கால்களை உந்தித்தள்ளல், இறக்கை விசிறல், வாலாட்டம் என அனைத்தையும் கவனியுங்கள் என்கிறார் அய்யர். மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். பறவையின் பறத்தல் அந்த இளம் சிறுவர்களின் முன்னே நிகழ்கிறது. சிறுவன் கலாம் உன்னிப்பாகக் கவனிக்கிறான். ஆசிரியர் மீண்டும் பறத்தலின் வெவ்வேறு நிலைகளை எதிரே நிகழும் நேரடிக் காட்சியோடு பசங்களுக்கு விளக்குகிறார். இப்போது புரிகிறதா? என்று கேட்கிறார். புரிகிறது சார் என்கிறான் சிறுவன் கலாம். மற்ற மாணவர்களும் அப்படியே.

முதலில் வகுப்பறைப் புத்தகப் பாடம். தேற்றம். அதற்குப்பிறகு நேரடிக்காட்சிப் பதிவு, live காட்சிகளுடன் விளக்கம். இதுவே பாடம் கற்பித்தலின் சிறந்த நடைமுறை. ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பிற்காலத்தில் சிவசுப்ரமணிய அய்யரை நினைவுகூர்கிறார் டாக்டர் கலாம். அன்று அந்தப் பறவை தன் மனதுக்குள் வந்து உட்கார்ந்துவிட்டதாகச் சொல்கிறார் கலாம். தான் அதுபற்றியே நினைத்திருந்ததாகவும், ஒருநாள் பறத்தலின் அறிவியலைக் கற்றுத் தேறவேண்டும்; இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் முக்கிய அறிதல் ஆக, இலக்காக அமையக்கூடும் எனத் தோன்றியது அவருக்கு அந்தப்பருவத்திலேயே. ஒரு நாள் அவர் ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யரிடம் தன் படிப்பாசையைச்சொல்லி, தான் பறத்தலின் அறிவியலை(flight sciences) எவ்வாறு நெருங்குவது, கற்றுத்தேர்வது என்று கேட்டாராம். அதற்கு ஆசிரியர், முதலில் நீ 8-ஆவது வகுப்பை பாஸ் செய்யவேண்டும்! பிறகு ஹைஸ்கூல் செல்லவேண்டும். அதிலும் தேர்வு பெற்றால் கல்லூரிப்படிப்பு. அந்த நிலையை நீ அடைந்தால் உனக்கு பறத்தல் போன்ற பாடங்கள்(flight sciences) படிக்க வாய்ப்பு அமையலாம். கடும் உழைப்பு, முனைப்பு அவசியம் தேவை” என்று கலாமுக்கு அறிவுறுத்தினாராம் அந்த ஆசிரியர். அய்யரின் இந்த புத்திமதிதான் தன் வாழ்நாளின் இலக்குகளை நோக்கித் தன்னை உந்தித் தள்ளியதாக கூறுகிறார் கலாம். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இன்ஜினீயரிங், மெட்ராஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் (MIT) aeronautical engineering ஆகியவற்றைப் பிற்காலத்தில் படித்துத்தேறி அவர் ஒரு ராக்கெட் மற்றும் aerospace இன்ஜினீயர், Missile Technologist-ஆக உருவெடுக்க இது பெரிதும் துணையாயிருந்தது என்கிறார். அவரையும் தனது படிப்பின் வெவ்வேறு நிலைகளில் சிறப்பாகப் பாடம் புகட்டிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர் முத்து அய்யர், செயிண்ட் ஜோசப் கல்லூரியின் பேராசிரியர் தோத்தாத்ரி அய்யங்கார், எம்.ஐ.டி.யின் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் போன்றோர்களை என்றும் மறந்ததில்லை டாக்டர் கலாம். (தொடரும்)

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்துமா?

ஸ்ரீலங்காவுடன் இந்தியா ஆகஸ்டில் ஆடவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை சந்தீப் பாட்டில் (Sandip Patil) தலைமையிலான இந்திய கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி அறிவித்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமை தாங்கும் இந்திய அணியில் கோஹ்லியையும் சேர்த்து 7 பேட்ஸ்மன்களும், 7 பந்துவீச்சாளர்களும், ஒரு விக்கெட் கீப்பரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேட்ஸ்மன்கள் எதிர்பார்க்கப்பட்டவர்கள்தான்: ஷிகர் தவன், முரளி விஜய், செத்தேஷ்வர் புஜாரா(Cheteshwar Pujara), விராட் கோஹ்லி, அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல். வேகப்பந்துவீச்சாளர்கள்: வருண் ஆரோன், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ். -சுழல் பந்துவீச்சாளர்கள்: அஷ்வின், ஹர்பஜன் சிங், அமித் மிஷ்ரா. ஹரியானாவைச் சேர்ந்த அமித் மிஷ்ரா 4 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு விளையாடத் தேர்வுபெற்றுள்ளார். விக்கெட் கீப்பர்: வ்ருத்திமான் சாஹா. மொத்தம் 15 பேர்.

On paper, Indian team looks strong. ஆனால், ஸ்ரீலங்காவின் மைதானங்கள் நிஜத்தில் எப்படி இருக்கும்? பிட்ச்சுகள் நமது வீரர்களுக்கு, குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்குத் துணை போகுமா? சில வருடங்களாகவே ஸ்ரீலங்காவின் பிட்ச்சுகள் ஸ்பின்னர்களைவிட, வேகப்பந்துவீச்சுக்கு அதிகமாக உதவி செய்வதாக அமைந்துள்ளன. இருந்தும் சமீபத்தில் பாகிஸ்தானின் ஸ்பின்னர் யாசிர் ஷா, தன் சுழலால் ஸ்ரீலங்காவின் பேட்ஸ்மன்களைத் திணற அடித்துள்ளார் என்பது கவனிக்கத் தக்கது. இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கும் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், லெக் ஸ்பின்னர் அமித் மிஷ்ராவின் பந்துவீச்சு ஸ்ரீலங்காவின் விக்கெட்டுகளை சரிக்குமானால், கோஹ்லிக்கு குதூகலமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஹர்பஜன் சிங்கின் அனுபவம் ஸ்ரீலங்கா டூரில் கைகொடுக்கும் என நம்பலாம். அஷ்வினிடம் ஆஃப் ஸ்பின்னோடு பேட்டிங் செய்யும் திறமையும் உண்டு. டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் இருக்கும் எனத் தோன்றுகிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் குறிப்பாக 150 கி.மீ வேகம் தொடும் வேக எக்ஸ்பிரஸ் வருண் ஆரோன், உமேஷ் யாதவுடன் இணைந்து எவ்வாறு பந்து வீசுவார் என்பது முக்கியமாகும். வேகப்பந்து வீசும் சாக்கில் வருண் ஆரோனும், உமேஷ் யாதவும் ரன்களை எதிரி அணிக்கு வாரி வழங்காமல் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கொள்வோம்! அடுத்த ஜோடியான இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார் ரன்களைக் கட்டுப்படுத்தி அவ்வப்போது விக்கெட்டைச் சாய்ப்பதில் முனைவார்கள்.

பேட்டிங்கில் விராட் கோஹ்லி, ரஹானே, முரளி விஜய், புஜாரா ஆகியோர் எத்தகைய batting form-ல் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும். இந்திய விக்கெட்டுகள் ஆட்ட ஆரம்பத்திலேயே வேகமாகப் பறிபோனால், நம்பர் 6-ல் ஆடவரும் சாஹாவும், 7-ல் பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டர் அஷ்வினும் பொறுப்பாக ஆடி ரன் சேர்க்கவேண்டிவரும்.

இந்தியக் கேப்டன் கோஹ்லியின் ஆட்ட வியூகம் ஸ்ரீலங்காவில் எப்படி இருக்கும் என்பது ஆட்ட வல்லுனர்களாலும், தேர்வாளர்களாலும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும். அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் எத்தகைய பௌலிங் காம்பினேஷனைக் கொண்டுவருவார்? தன் பந்துவீச்சாளர்களை திறமை மிகுந்த ஸ்ரீலங்கா பேட்ஸ்மன்களுக்கெதிராக, ஆட்டத்தின் வெவ்வேறு நிலைகளில் எப்படிப் பயன்படுத்துவார்? மைதானத்தில் ஃபீல்டர்களை எவ்வாறு நிறுத்தி வியூகம் அமைப்பார்? இவற்றைப் பொறுத்து இந்தியா வெற்றி முனைக்குத் திரும்பும் வாய்ப்புகள் அதிகமாகும் எனக் கூறலாம்.

ஸ்ரீலங்கா தற்போதைய தொடரில் பாக்கிஸ்தானுக்கெதிராகத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இருந்தும் அந்த அணி சங்கக்காரா, கேப்டன் மேத்யூஸ், தில்ஷன், சண்டிமால், லஸித் மலிங்கா, ரங்கனா ஹெராத் போன்ற திறமை மிகுந்த வீரர்களைக்கொண்டு வலிமையுடன் விளங்குகிறது. ஸ்ரீலங்கா தனது சொந்த மைதானங்களில் எப்போதுமே ஹீரோதான் என்பதில் ஐயமில்லை. வெற்றிக்கு இந்திய அணியினர் ஒவ்வொருவரும் மிகவும் கடும் உழைப்பைத் தரவேண்டியிருக்கும். கோஹ்லி வாய்ச்சொல்லில்தான் வீரரா? இல்லை, உண்மையிலேயே தலைமைக்குத் தகுதி வாய்ந்தவர்தானா என்பதுவும் (captainship qualities) வெகுவாக ஸ்ரீலங்காவில் சோதனைக்குள்ளாகும். கோஹ்லி தன்னை இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக ஸ்தாபிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் டெஸ்ட் தொடர் இது.
**

காட்டு உன் வேலையை

மையேந்தும் கண்களையும்
மலரேந்தும் குழலையும்
வளையேந்தும் கைகளையும்
வளைய வரத்தான்
வந்து உலகில் இறங்கியிருப்பதாக
எண்ணியதுண்டு ஒரு காலத்தில்
இப்போதெல்லாம் தினம் ஆங்காங்கே
கையேந்தும் மனிதரைக் கண்டு
களைத்து நிற்குமாறு செய்துவிட்டாய்
உன்னிடம் வந்து உதவி கேட்கலாம் என்றால்
முகத்தில் என்றும் மாறாத புன்னகையுடன்
ஆயுதமேந்திய கையோடு ஆண்டவனே நீ
ஆடாது அசங்காது நின்றுகொண்டிருக்கிறாய்
ஏந்திய ஆயுதம் ஏந்தியபடியே இருந்தால்
என்னதான் மாறும் இந்த உலகில்
பாவிகளைத் தயங்காது போட்டுத் தள்ளு
யார் நீ என்பதனை ஒருமுறையாவது
எல்லோர்க்கும் காட்டி நில்லு

**

சர்தார்ஜியின் காதல் !

சர்தார்ஜி பஞ்சாபில் யார் யாரையோ பிடித்து, எப்படிஎப்படியோ மேனேஜ் பண்ணி லண்டன் போய்ச் சேர்ந்தார். அங்குக் கடும் முயற்சிக்குப் பிறகு, ஏதோ ஒரு கம்பெனியில் ஒரு துக்கடா வேலை. சர்தார்ஜிக்கு ஒரே சந்தோஷம். இருக்காதா பின்னே.. லண்டன்லேயே வேல கெடச்சுருச்சுல்ல!

நம்ப சர்தாருக்கு அங்க்ரேஸி (ஆங்கில மொழி) கொஞ்சம் ஆட்டந்தான்! இருந்தாலும், தன்னாலும் இங்கிலீஷ் தெரிந்தவர்களோடு சரிக்குச்சரியா பேச முடியும்னு ஒரு பாவ்லா! ஒரு சவடால்! அடிச்சுவிட்றது உண்டு.

அவரோடு வேலைபார்க்கும் ஒரு இளம் இங்கிலீஷ் அழகியின் மீது சர்தார்ஜியின் பார்வை விழுந்து தொலைத்தது ஒரு நாள். அவளின் அழகு, நடை, உடை பாவனைகளைக் கவனிக்க, கவனிக்க சர்தாருக்கு கொஞ்சம் கிறுகிறுப்பு.! காந்தம்போல் ஈர்க்கப்பட்டார் மனுஷன். அதனால் அலுவலகத்தில் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. அவள் வேலை செய்யும் அறைப் பக்கம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தலையைக் காட்டுவதும், அவள் எதிரே வந்தால் மீசையைத் தடவிப் பார்த்துக்கொள்வது, லேசான சிரிப்பு, அசடு வழியல் எனக் காலம் பரபரப்பாக நகர்ந்தது நம்ப ஆளுக்கு.

ஒரு நாள் ..இரவு. தூக்கம் பிடிக்கவில்லை சர்தார்ஜிக்கு. என்னடா இது, ஒரே பேஜாராப் போச்சே ! இந்த சின்னப்பொண்ணு நம்பள இந்தப் பாடுபடுத்தறாளே. இனிமே தாங்காது..நாளைக்கு எப்பிடியும் சொல்லீற வேண்டியதுதான்!

அடுத்த நாள். வழக்கத்தைவிடத் தன்னை டிப்-டாப்பாக அலங்கரித்துக்கொண்டார். ஒரு தடவைக்கு ரெண்டு தடவைக் கண்ணாடியில் தன் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டார். தலைப்பாகையைச் சரிசெய்துகொண்டார். ஒரு மஜாவான பஞ்சாபிப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு உற்சாகமாக ஆஃபீஸுக்குப் போனார் சர்தார்ஜி.

லன்ச் இடைவேளையில் அவளைச் சந்தித்தார். கொஞ்சம் பேசியபின், சரியான நேரத்தில், முகத்தை மலரவைத்துக்கொண்டு, வாயெல்லாம் பல்லாக ‘ஐ லவ் யூ!’ என்று அவளிடம் சொல்லிவிட்டார் சர்தார்ஜி.

அவளோ ஒரு வெள்ளைக்காரி. அவளுடைய லைஃப் ஸ்டைலே வேறு. இந்த ’லவ் யூ’ எல்லாம் பத்துப் பனிரெண்டு வயசிலிருந்தே பழகிப்போன சங்கதி. பெரிய புல்லரிப்பு ஏதுமில்லை இதில்! காதல், கீதல் என்றெல்லாம் எமோஷனலாகிவிட, அவள் இந்தியப் பெண்ணல்ல..

இவனுக்கு நம்மைப் பிடிக்கிறது போலிருக்கிறது ..அதனால் இப்படி வழிகிறான். நாமும் பேருக்கு ’நீயும் கொஞ்சம் பரவாயில்லடா!’-ங்கற மாதிரி ஒரு ஃபார்மாலிட்டிக்குச் சொல்லிவிடுவோம் என நினைத்து,
”ஐ டூ லவ் யூ!” என்றாள் இங்கிலீஷ் அழகி, லேசான சிரிப்புடன். (I TOO LOVE YOU! – நானும் உன்னைக் காதலிக்கிறேன் என்கிற அர்த்தத்தில் அல்ல – எனக்கும் உன்னைப் பிடிக்கிறது என்கிற மாதிரி ஒரு பேச்சுக்கு..)

சர்தார்ஜிக்கு ஒரே சந்தோஷம்! ஆனால், ’லவ் யூ’-க்கு முன்னால் அவள் போட்ட சின்ன இங்கிலீஷ் வார்த்தையால் கொஞ்சம் திகைப்பு, குழப்பம். இங்கிலீஷில் அவருக்குத் தெரிந்த ஒரே ‘டூ-‘ ’’TWO’’தான்! ’’TOO’’ என்கிற இங்கிலீஷ் வார்த்தை ஒன்று இருப்பதோ, அதன் அர்த்தமோ அப்பாவி சர்தார்ஜிக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘’I TWO LOVE YOU’’ என்று அவள் சொன்னதாகப் புரிந்து கொண்டார் நம்ம பிரகஸ்பதி! அட, இவ என்னை ரெண்டு மடங்கு அதிகமா காதலிக்கிறேன்னு சொல்றாளா!

அப்படின்னா இவ காதலுக்கு என் காதல் என்ன மட்டம்னு நெனச்சுட்டாளா? நான் யார்னு இவளுக்குப் புரியவைக்கிறேன் என்று நினைத்து உற்சாகமாக அவளை நெருங்கி,

’’ஐ த்ரீ லவ் யூ !’’ (I THREE LOVE YOU) என்று இளித்தார் சர்தார்ஜி !

**

கிரிக்கெட்-ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி

இன்று(14-07-2015) ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில்(Harare) நடந்த 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்-வாஷ் (white-wash) செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் அஜின்க்யா ரஹானேயும், முரளி விஜய்யும் மந்தமான பிட்ச்சிலும் வேகமாக ரன்னெடுக்க முயன்றனர். ஸ்ட்ரோக் ப்ளேக்கு(stroke play) சாதகமாக அமையாத ஹராரே பிட்ச்சில், ஜிம்பாப்வே பந்துவீச்சாளார்கள் துல்லியமாகப் பந்துவீசி இந்திய வீரர்களைச் சிக்கலில் ஆழ்த்தினார்கள். மேட்ஸிவாவின்(Madziva) வேகப்பந்துவீச்சில் ரஹானே, விஜய் இருவரும் விரைவிலேயே பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். 3-ஆவதாக வந்த ராபின் உத்தப்பா 31 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் சரமாரியாக சரிய இந்தியா தடுமாறிய நிலையில், தன் முதல் மேட்ச்சை இந்தியாவுக்காக விளையாடிய மனிஷ் பாண்டே அருமையாக ஆடி 71 சிறப்பான ரன்களை எடுத்தார். மறுமுனையில் கேதார் ஜாதவ் ஆக்ரோஷமாக ஆடி, தன் முதல் சதத்தை அடித்தார். இருவரின் திறமையினால்தான் இந்திய ஸ்கோர் 276-ஐ எட்ட முடிந்தது.

277 என்கிற சிக்கலான இலக்கை ஜிம்பாப்வே துரத்தியது. ஒரு பக்கத்தில் அவ்வப்போது விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, ஜிம்பாப்வேயின் துவக்க ஆட்டக்காரரான சிபாபா(Chibhabha) மிகவும் பொறுப்பாக ஆடி 82 ரன்கள் விளாசினார். மற்றவர்கள் இந்திய சுழல் மற்றும் வேகத்தில் தடுமாறி விழ, ஜிம்பாப்வே 193 ரன்களில் தன் இன்னிங்ஸை இழந்தது. பின்னி 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், அக்ஷர் பட்டேல், மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், முரளி விஜய் ஒரு-நாள் போட்டியில் தன் முதல் விக்கெட்டையும் வீழ்த்தினர். 105 முக்கிய ரன்னெடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கேதார் ஜாதவ், இன்றைய ஆட்டநாயகன்.

அனுபவம் அதிகமல்லாத இளம்வீரர்களின் துணையோடு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தொடர் நாயகனாகத் தேர்வான அம்பத்தி ராயுடு, முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பான பேட்டிங் செய்தார். ஒரு-நாள் போட்டிகளில் தனது 2-ஆவது சதத்தை முதல் மேட்ச்சில் விளாசினார். இன்றைய மேட்ச்சில் அருமையாக சதமடித்த கேதார் ஜாதவுக்கு இது ஒரு-நாள் போட்டிகளில் முதல் சதமாகும். இந்தத் தொடரில் முரளி விஜய்யும், ஸ்டூவர்ட் பின்னியும்(Stuart Binny), தங்கள் முதல் அரைசதங்களை அடித்தனர். பின்னி, தன் மத்தியவேகப் பந்துவீச்சினால் மொத்தம் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தித் தொடரின் தரமான ஆல்ரவுண்டராகத் தன்னை நிறுவினார். முதல் போட்டியில் அம்பத்தி ராயுடு-ஸ்டூவர்ட் பின்னி ஜோடி, 87-க்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் பரிதாப நிலையை தன் திறமையான பேட்டிங்கினால் சீர்செய்தது. முதலில் கவனமாகவும், பின் அதிரடியாகவும் அவர்கள் தாக்கிய 160 ரன்கள், ஒரு-நாள் போட்டிகளில் 6-ஆவது விக்கெட்டிற்கான அதிகபட்ச ரன்கள். இது ஒரு இந்திய சாதனை. புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு துல்லியமாகவும், அதி சிக்கனமாகவும் இருந்தது. ஸ்பின்னர்களான ஹர்பஜன் சிங், அக்ஷர் பட்டேல் மத்திய ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தியதோடு, ஜிம்பாப்வேயின் முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ராபின் உத்தப்பா முதன்முறையாக இந்தியாவுக்காக விக்கெட்கீப்பராக இந்தத் தொடரில் விளையாடினார். அவர் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்கலாம்.

அஜின்க்யா ரஹானே முதன்முறையாக கேப்டன் என்கிற நிலையில் இளம் இந்திய அணியை வழிநடத்தி, 3-0 என்று வெளிநாட்டில் தொடரை இந்தியாவுக்காக வென்றிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். அவரது பேட்டிங்கும் நன்றாகவே இருந்தது.

இரண்டு டி-20 போட்டிகள் இரு அணிகளுக்கிடையே இனி நடக்கவிருக்கின்றன. It is a bang bang game. இரு அணிகளின் அதிரடி வீரர்கள், பந்துவீச்சாளர்களின் திறமையைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.

**