கதவைத் திறந்தபோது

. . . . .

கல்தான் கடவுள் என்றில்லை
புல்லும் பூவும்
நெருப்பும் நீரும்
ஆடும் மாடும்
கோழியும் குருவியும்கூட
கடவுளேதான்
தெருவில் போகிற மனுஷன்கூட
தெய்வந்தான்
பூமியும் சாமியே
அம்பரமும் ஆண்டவனே
அதிசயமா என்ன
பார்க்கிறபடி பார்த்தால்
பரம்பொருள்தான் எல்லாமே

**

டெஸ்ட் க்ரிக்கெட் : புனேயில் மண்ணைக் கவ்விய இந்தியா

ஓ’ கீஃப் (Steve O’Keefe) என்கிற உலகம் அதிகம் அறிந்திராத ஒரு ஃபிங்கர் ஸ்பின்னரைக் கையில் வைத்துக்கொண்டு, முதல் டெஸ்ட்டில் இந்தியாவை மிரட்டியே கொன்றுவிட்டது ஆஸ்திரேலியா. பேரதிர்ச்சி !

புனேயில் நேற்று (25-2-17)-ல் முடிந்த போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டபாடில்லை. நடந்தது க்ரிக்கெட்டா? இல்லை ஹிப்னாட்டிசமா? ஏன் இப்படி சுருண்டு சுருண்டு விழுந்தார்கள் இந்திய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள்- அதுவும் ஒரே பௌலரிடம்? ஸ்பின் பௌலிங்கை சந்தித்திராதவர்களா இவர்கள்?

புனேயில் நடந்த முதல் டெஸ்ட் மேட்ச் இது. இந்தியாவுக்கு சாதகமான சூழல் என்று கணிக்கப்பட்ட பிட்ச். டாஸை வென்றது சாதகமானது ஆஸ்திரேலியாவுக்கு. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கே இந்திய ஸ்பின்னுக்கு எதிராகப் பெரும் சவாலாக இருக்கும் எனக் கணிக்கப்பட, ஆஸ்திரேலியா திணறியது. இருந்தும் சுதாரித்து தன் ஸ்கோரை 260-க்கு கொண்டு சென்றது. முக்கியமான பேட்ஸ்மன்கள், அஷ்வின்-ஜடேஜா, மற்றும் உமேஷ் யாதவிடம் பலியாக, 8-ஆம் நம்பரில் வந்த பௌலரான மிட்ச்செல் ஸ்டார்க், இந்திய ஸ்பின்னர்களைக் குறிவைத்து விளாசினார். 63 பந்துகளில் 61 எடுத்துவிட்டார். துவக்க ஆட்டக்காரர் மேட் ரென்ஷாவின் அருமையான 68-க்குப் பின் அதிகபட்ச ஆஸி பங்களிப்பு. ஸ்டார்க்கின் அதிரடி நிகழ்ந்திருக்காவிடில் ஆஸ்திரேலியா 250-ஐ நெருங்கியிருக்கவும் வாய்ப்பில்லை. இந்தியாவின் பௌலர்கள் சிறப்பாகவே வீசினர். இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை. புனே ஒரு ஹாரர் ஸ்டோரியை இந்தியாவுக்காகத் தயாராக வைத்திருந்தது என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்க நியாயமில்லை.

இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் சரியாகத்தான் ஆட ஆரம்பித்தார்கள். அல்லது அப்படித் தோன்றியது. குறிப்பாக கே.எல். ராஹுல். ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 ஸ்பின்னரான நேத்தன் லயனிடம் அஞ்சவேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. லஞ்சுக்கு முன்பு அவரும் ஓ’கீஃபும் வீசியவிதத்தில், வரவிற்கும் புயல்பற்றிய எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. {லஞ்ச் இடைவேளையின்போது ஆஸ்திரேலியாவின் ஸ்பின் கோச்சான ஸ்ரீதரன் ஸ்ரீராமுடன் (முன்னாள் தமிழ்நாடு/இந்தியா ஆல்ரவுண்டர்) தான் பேசியதாகவும், சில நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு, லஞ்ச் இடைவேளையில் பயிற்சி செய்ததாகவும் பிற்பாடு கூறினார் ஓ’கீஃப். Look at his professionalism)}. இடைவேளைக்குப் பின் திரும்பிய ஓ’கீஃப் மந்திரவாதியாக மாறிவிட்டிருந்தார். ஏதோ விசையை அழுத்தி விழுக்காட்டுவதுபோல் இந்திய பேட்ஸ்மன்களை ஒவ்வொருவராக விழவைத்தார். முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட். ராஹுல், ரஹானே, சாஹா, ஜடேஜா, ஜயந்த், உமேஷ் என, சூலையிலிருந்து செங்கல் சரிவதைப்போல் சரிந்தார்கள், 40 ஓவர் விளையாடுவதற்குள் நாக்குத் தள்ளிவிட்டது இந்தியாவுக்கு. ஒரு பொறுப்பின்றி, எதிர்ப்பின்றி. இந்தியா 105-ல் சுருண்டது. ஓ’கீஃபின் இந்த அசுரவிளையாட்டை ஆஸ்திரேலியர்களே நம்ப முடியாமல் மூக்கில் விரல்வைத்துப் பார்த்திருந்தார்கள். அவரை அணிக்காகத் தேர்வு செய்யாது சிலவருடங்களாகக் காலந்தாழ்த்தி, ஒரு இரண்டாந்திர பௌலரைப்போல நடத்தியவர்கள்தான் இந்த ஆஸ்திரேலியர்களும். ஆனால் புனேயில், ஆஸ்திரேலியா எதிர்பாராதவிதமாக 155 ரன் முன்னிலை வகிக்க வழிசெய்தது இந்த ஓ’கீஃப்-தான்.

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுகையில், கதையை அஷ்வினை வைத்தே ஆரம்பித்தார் கோஹ்லி. முதல் ஓவரிலேயே வார்னர் காலி. அடுத்த சில ஓவர்களிலேயே அஷ்வின் இரண்டாவது விக்கெட்டை எடுக்க, ஜடேஜா துல்லியமாக அந்தப் பக்கத்திலிருந்து வீசிக்கொண்டிருந்தார். ஆனால் 155 முன்னிலை ரன்களை கைவசம் வைத்திருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் அசரவில்லை. நிதானம். அவ்வப்போது ஸ்பின்னர்களுக்கெதிரான தாக்குதல் ஆட்டம். விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தாலும், இந்திய ஸ்பின்னர்களிடம் ஆஸ்திரேலியா சரணடைய வில்லை. குறிப்பாக அஷ்வினைக் குறிவைத்துத் தாக்கினார்கள். இருந்தும் அஷ்வின் விக்கெட் எடுத்துக்கொண்டிருந்தார். அஷ்வின் விஸ்வரூபம் எடுக்க முடியாதபடி இந்திய ஃபீல்டர்கள் பார்த்துக்கொண்டார்கள் ! ஆஸ்திரேலியாவுக்கு கடுமையாக ஒத்துழைத்தார்கள் நமது ஃபீல்டர்கள்! ஸ்மித்தின் 5 கேட்ச்சுகளை, ஆமாம்-5 கேட்ச்சுகளை நழுவவிட்டுக் கையைப் பிசைந்துகொண்டு, சூயிங் கம்மை மென்றுகொண்டு நின்றிருந்தார்கள் இந்தியர்கள். உலகின் நம்பர் 1 டீம்!

இப்படி ஒரு கேவல ஆட்டம் ஆடினால் ஆஸ்திரேலியா என்ன, ஜிம்பாப்வேக்கு எதிராகவும்கூட கிரிக்கெட்டில் ஜெயிக்கமுடியாது. ஸ்மித் சதம் எடுத்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார். ஆஸ்திரேலியா மூன்றாவது நாள் லஞ்ச் பொழுதில் 285 எடுத்து ஆல் அவுட்டானார்கள். முதல் இன்னிங்ஸில் 41 ஓவர் கூடத் தாக்குப் பிடிக்கமுடியாத இந்திய சூரர்களுக்கு 400+ இலக்கு! சான்ஸே இல்லை. அதுவும் இந்தியர்கள் இருந்த மனநிலையில்.

ஏதோ ஒரு இன்னிங்ஸில் அபத்தமாக ஆடிவிட்டார்கள். நமது ஜாம்பவான்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக் கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள் என யாரும் நினைத்திருந்தால் அவர்கள் எதிர்ப்பார்ப்பில் உடனே விழுந்தது மண். இந்தியர்கள் ஆடுகையில் அதே ஸ்டீவ் ஓ’கீஃப்-ஐ முன்னே கொண்டுவந்து பயமுறுத்தினார் ஸ்டீவ் ஸ்மித். Instant effect ! புயற்காற்றில் முருங்கை மரம் சாய்வதுபோல் சாய்ந்தது இந்திய பேட்டிங். விஜய், ராஹுல், புஜாரா, கோஹ்லி, ரஹானே, அஷ்வின். . கடந்த இரு வருடங்களாக இந்தியாவின் தூண்களாக நின்றவர்கள். இத்தகைய வீரர்களா இப்படி ’சொத்’ ’சொத்’-தென வீழ்ந்தார்கள் ஆம்! ஓ’கீஃபைக் கண்டதுமே ஏனோ கால்கள் நடுங்க ஆரம்பித்தன. முதல் இன்னிங்ஸைப்போலவே, 6 விக்கெட்டுகளை அவருக்கே தாரை வார்த்தார்கள். 107-ல் இந்தியா ஆல் அவுட். தொடர்ச்சியாக 19 மேட்ச்சுகளில் தோல்வியைக் காணாத விராட்டின் இந்திய அணி, புனேயில் மூன்று நாட்களுக்குள் நொறுங்கியது. பரிதாப சரித்திரம் திரும்பிவிட்டதா? டெஸ்ட் க்ரிக்கெட்டில் தோற்பது என்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயமில்லை. ஆனால் எதிர்த்துப் போராடாமல், இரண்டு இன்னிங்ஸிலும் இப்படி ஒரு சரணாகதி – அதுவும் இந்திய மண்ணில்? ஜீரணிக்க முடியாதது.

க்ரிக்கெட் இத்தகைய கொடூர விளையாட்டு என்பது தெரிந்ததுதான். அதாவது படுமோசமாகத் தோற்ற அணிக்கு. 11 ரன்களில் 7 விக்கெட்டை இழக்கும் அணி (இந்திய முதல் இன்னிங்ஸ்), ஒரே பேட்ஸ்மனுக்கு 5 கேட்ச்சுகளைத் தவறவிடும் அணி எப்படி ஜெயிக்கமுடியும் – கேட்கிறார் இந்தியக் கேப்டன். சரிதான் ஐயா! ஆனால், ஏன் இப்படி திடீரென அனைவருமே மழுங்கி மண்ணாய்ப் போய்விட்டீர்கள் என்பது ரசிகர்களின் கேள்வி ! காலங்காலமாக இந்திய மைதானங்களில் ஸ்பின்னுக்கு எதிராக விளையாடியே வளர்ந்த இந்திய பேட்ஸ்மன்கள், திடீரென்று ஒரு ஓ’கீஃப் வந்துவிட்டார் என்று எல்லாவற்றையும் அவுத்துப்போட்டுவிட்டு ஓடுவானேன்? இது இந்தக் கேள்வியின் சாரம். இது புனேயில் மட்டும்தானா? இனி வரவிருக்கும் போட்டிகளிலும் இந்த அபத்தக்காவியம் தொடருமா? இந்திய ரசிகர்களை சின்னாபின்னமாக்கும் பெருங்கேள்வி இது !

படுமோசமான தோல்விக்குப்பின் அணியில் மாறுதல் தேவை என்கிற சலசலப்பு இயல்பானது. ஏற்கனவே இருக்கும் ஒரு சலசலப்பு இப்போது உச்சம் பெற்றுவிட்டது. 300 அடித்த கருண் நாயர் ஏன் இல்லை அணியில்? அவர் உள்ளே வரவேண்டுமெனில், 5-ஆம் நம்பரில் ஆடும் அஜின்க்யா ரஹானே வெளியேறவேண்டியிருக்கும். ராஹுல் முதல் இன்னிங்ஸில் 64 எடுத்ததினால் அவரைக் கொஞ்சம் விட்டுவிடுவோம். மற்றபடி, கேப்டன் உட்பட, இந்திய பேட்ஸ்மன்கள் அனைவருமே மூஞ்சியில் புனே கரியைப் பூசி நிற்கும் வேளையில், ரஹானேயை மட்டும் ’வெளியே போ’ என்பதிலும் நியாயமில்லைதான். ஆயினும் நியாய, அநியாயங்களைத் தாண்டி, அணியின் வெற்றிக்காக அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டிய தருணம் இது.

இந்தியாவுக்காக டி-20-ல் சிறப்பாக ஸ்பின் வீசிய, legbreak googly bowler-ஆன யஜுவேந்திர சாஹல்(Yuzvendra Chahal)-ஐ பெங்களூர் டெஸ்ட்டில் (மார்ச் 4-8) கொண்டுவந்தால் என்ன என்கிற எண்ணம் தலைகாட்டுகிறது. ஜெயந்த் யாதவிற்கு பதிலாக இவர் வரலாமோ? அஷ்வினோ, ஜடேஜாவோ அடிவாங்க நேரிடுகையில், சாஹல் ஒருமுனையில் ஆஸ்திரேலியர்களின் கழுத்தை நெரிக்க உதவக்கூடும். வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மாவின் இடத்தில், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டான, குஜராத்தின் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு வாய்ப்பு தருவதும் உசிதமே. இப்படி நாம் நினைக்கிறோம். கும்ப்ளேயும், கோஹ்லியும் எப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறார்களோ தெரியவில்லையே.

இதெல்லாம் சரி, கைகளில் வெண்ணெயைத் தடவிக்கொண்டு மைதானத்துக்கு வரும் இந்திய ஃபீல்டர்களை எந்தக் கழுவில் ஏற்றலாம் ?

**

க்ரிக்கெட்: ஆஸ்திரேலியா – இந்தியா சூப்பர் டெஸ்ட் சீரீஸ்

‘சூப்பர்’ என்று ஏன் சொல்கிறேன் என்றால் அப்படித்தான் போகப்போகிறது உலகின் இரண்டு அபாரமான டெஸ்ட் அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட தொடர். ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வலிமையானது என்றே தோன்றுகிறது. நிச்சயம் இது இங்கிலாந்து அணியோ, நியூஸிலாந்து அணியோ அல்ல – எல்லாப் போட்டிகளிலும் இந்தியா ஜெயிப்பதற்கு. விராட் கோலியும் அனில் கும்ப்ளேயும் இதனை நன்றாக அறிவர்.

ஆஸ்திரேலியர்களின் மனதை அரித்துக்கொண்டிருப்பது இந்திய ஸ்பின்னர்களை எப்படி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சமாளிப்பது என்பது. அஷ்வின், ஜடேஜா இருக்கும் ஃபார்மில் இது ஈசியான விஷயம் அல்ல. இந்த ஜோடிதான் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக்கின் கேப்டன் பதவியை சமீபத்தில் காவு வாங்கியது. அந்தத் தொடரின் வீடியோக்களை ஆஸ்திரேலியர்கள் போட்டுப்போட்டுப் பார்த்திருப்பர். ஒரு முடிவுக்கு வந்திருப்பர் இத்தனை நேரம். ஆஸ்திரேலிய முன்னணி ஸ்பின்னரான நேத்தன் லயான் (Nathan Lyon) மற்றும் ஸ்டீவ் ஓக்கீஃப்(Steve O’keefe) –இருவருக்கும் இந்தத் தொடரில் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும். இந்திய ஸ்பின்னர்களுக்குக் கிடைக்காத ஒரு பாக்யம் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு உண்டு: அது ஆஸ்திரேலியாவின் அபார ஃபீல்டிங். இத்தகைய ஃபீல்டிங் துணையோடு ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் இந்திய பேட்ஸ்மன்களைத் தாக்குவர். இந்தியாவில் ரஹானே, ஜடேஜா, பாண்ட்யாவை விட்டால் சர்வதேசத் தரம் வாய்ந்த ஃபீல்டர்கள் இல்லை எனலாம். இப்படி நிலை இருந்தும், இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணி. இந்தியாவின் சூப்பர் பர்ஃபார்மன்ஸிற்கு அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பங்களிப்பு எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவின் new allround sensation ஜயந்த் யாதவும் இவர்களுடன் சேர்ந்துகொண்டால், நிலைமையே வேறு.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்தத் தொடரில் பெரும் பங்கு இருக்கும் என்றே தோன்றுகிறது. மிட்ச்செல் ஸ்டார்க் (Mitchel Starc) மற்றும் ஜோஷ் ஹாஸல்வுட் ப்ரதான வேகப்பந்துவீச்சாளர்கள். (Josh Hazzlewood). மூன்றாவதாக மத்தியகதி பந்துவீச்சாளர் மிட்ச்செல் மார்ஷ்(Mitchel Marsh) வீசக்கூடும்.
ஆஸ்திரேலியாவின் திறன்மிகு பேட்டிங் டேவிட் வார்னர், மேட் ரென்ஷா(Matt Renshaw) ஆகிய துவக்க ஆட்டக்காரர்களோடு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ் மற்றும் பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் (Peter Handscomb) என விரியும்.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் விஜய்யும், ராஹுலும் ஸ்டார்க் & கோ.வை எப்படி சமாளித்து ஆடுவார்கள் என்பது மிகவும் முக்கியம். இங்கிலாந்துக்கெதிராக முச்சதம் (Triple Ton) அடித்த கருண் நாயர் ஆடுவாரா? சந்தேகமே. ஐந்தாம் எண்ணில் அஜின்க்யா ரஹானேவுக்கு வாய்ப்பு அதிகம். ஆறில் விக்கெட் கீப்பர் சாஹா வந்தே ஆகவேண்டும். கோஹ்லிக்கும் புஜாராவுக்கும் இந்தத் தொடரில் அதிக வேலையிருக்கிறது என்று தோன்றுகிறது.

தொடர் ஆரம்பிக்கிறது புனேயில். பிட்ச் ஸ்பின் எடுக்கலாம் இரண்டாவது நாளிலிருந்து. யார் டாஸ் ஜெயித்தாலும் முதலில் பேட்டிங் எனப் பாய்வார்கள். இருந்தும் க்ரிக்கெட்டில் எல்லாவற்றையும் கணித்து கரையேறிவிடமுடியாது. கடைசியாக விளையாடியிருக்கும் 19 டெஸ்ட்டுகளில் கோஹ்லி தலைமையிலான இந்தியா இதுவரை ஒன்றிலும் தோற்கவில்லை என்பது ஒரு அசத்தல் பர்ஃபார்மன்ஸ்தான். சந்தேகமில்லை. Good Luck, Virat Kohli !

**

தமிழ்நாடே ! உனை நினைத்தாலே . . .

ஆறு மாதங்களுக்குள் மூன்றாவது முதல்வரைப் பார்க்கிறது தமிழ்நாடு. அதுவும் மூவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் ! வரவிருக்கும் வருடங்களில், தமிழர்களுக்காக இன்னும் என்னென்ன அவஸ்தைகள், அவமானங்கள் வரிசையில் காத்து நிற்கின்றனவோ ?

சமீபத்திய, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தின்போது, சட்டப்பேரவையில் நடந்த அநாகரீகங்கள், தமிழ்நாட்டை மட்டுமல்லாது தேசத்தையே அதிரவைத்தவை. தமிழ்நாட்டு மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிஹார், உத்தராகண்ட் லெவலுக்கு அராஜகத்தில் முன்னேறிவிட்டார்களா, அதாவது அரசியல் நாகரிகத்தில் தாழ்ந்துபோய்விட்டார்களா என்கிற கடும் அதிர்ச்சி அது. தீர்மானத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு பிரதான எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அட்டூழியங்கள், அக்கட்சி தன் அரசியல் பாரம்பரியம் எத்தகையது என்பதை மக்களுக்கு மீண்டும் ஒருமுறை சீன் போட்டு நினைவுபடுத்திவிட்டது: சபாநாயகரின் நாற்காலியின் மீது உட்கார்ந்து கூச்சலிடல், பெண்பிரதிநிதியும்கூட மேஜை மீதேறி வீர முழக்கமிடல், ஆவணங்களைக் கிழித்துப் பறக்கவிடல், சட்டையைக் கிழித்தல் அல்லது கிழித்துவிட்டுக்கொள்ளுதல்.. ஓ! 1988-ன் வர்ஷன் 2.0 –ஆ இது ! பிரதிநிதிகளே, உங்களைத் தேர்ந்தெடுத்த பாவத்திற்கு தமிழர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

ஜெயலலிதா என்கிற மக்கள் ஆதரவுபெற்ற அரசியல் ஆளுமை மறைந்துவிட்ட நிலையில், அவர் கிட்டத்தட்ட 30 வருடங்களாகக் கட்டிக் காத்த அதிமுக எனும் பெரும் அரசியல் கட்சி சிதற ஆரம்பித்துள்ளது. சந்திலே புகுந்து அவசர அவசரமாக கட்சித் தலைமையைக் கைப்பற்றிய, கட்சியின் இப்போதைய ’தேவி..ஸ்ரீதேவி’யான சின்னம்மா என்று பக்தியோடு கட்சிக்காரர்களால் அழைக்கப்படும் சசிகலா, அதைவிட வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளின் இறுதியில் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். காலங்காலமாக செய்த பாவங்களும் ஒருவித உழைப்பு அல்லவா ! அதற்கும் ஒரு சம்பளம் கிடைக்காமல் போகுமா?

சபாநாயகர் எதிர்க்கட்சியின் ரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கைக்கு மறுப்பு சொன்னதோடு, எதிர்க்கட்சியை ஒரேயடியாக வெளியேற்றி, மீதி இருப்பவர்களை வைத்துக்கொண்டு அவசர அவசரமாக தீர்மானத்தை இயற்றிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கைத் தீர்மானத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். சின்னம்மாவிடம் சபாநாயகர் சபாஷ் பெறவேண்டிய அபார தருணம் அல்லவா இது. விட்டுவிட முடியுமா! விளைவாக, பழனிச்சாமி தமிழ்நாட்டின் 13-ஆவது முதல்வராக நிறுவப்பட்டு, ஆட்சிபீடத்தில் அமர்ந்து, கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட ஆரம்பித்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் பின்புலம் என்ன என்று ஆராய்கிறீர்கள் என்பது தெரிகிறது. அது வேற கத !

மன்மோகன் சிங்கை பொம்மைபோல் டெல்லி சிம்மாசனத்தில் உட்காரவைத்து, 10 வருடங்களாக சோனியா காந்தி நடத்திய ரிமோட் கண்ட்ரோல் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதுதான் சின்னம்மா, எடப்பாடி என்கிறவிதமாக தமிழ்நாட்டில் பரிமாணம் கொண்டுள்ளது. History repeats itself, somewhere, in some form..no doubt. பரப்பன அக்ரஹாராவிலிருந்து சுண்டி சுண்டி இழுக்கும் கயிறு. அதற்கேற்றவாறு கைகால்களைத் தூக்கி ஆடவேண்டிய முதல்வர். இதன் அபத்த விளைவுகளைத் தாங்கியே ஆகவேண்டிய அப்பாவி மக்கள். தமிழ்நாட்டைத் தேடிவந்த வாழ்வு !

நடக்கட்டும். இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…இந்த நாட்டிலே…!

**

மன்னார்குடி மனோன்மணி !

ஜெயலலிதாவின் சமாதியில் கையால் மூன்றுமுறை அறைந்து (யாரை?) சபதம் ! எம்ஜிஆர் நினைவிடத்தில் தியானம் ! ஓபிஎஸ் எஃபெக்ட் ?

அடடா! பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்குப் போகுமுன்னும் என்ன ஒரு பரபரப்பு.. என்ன ஒரு பக்தி, சிரத்தை, ஆவேசம்! சசிகலாஜி, மெய் சிலிர்க்கிறது. உங்களது வீரபராக்ரமங்களை, சபதங்களை, ஆவேச சூளுரைத்தல்களை டிவியில் கண்டு, கேட்டு களித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழ்மக்கள், உங்களை என்னவென்று புரிந்துகொள்வார்கள்? யாரிடத்தில் யார்? வெறும் நாலே மாதத்தில் நாற அடித்துவிட்டீர்களே தமிழ்நாட்டை. இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றைக் கூனிக் குறுகிப்போகும்படி செய்துவிட்டீர்களே அம்மணி!

மனதில் பெரும் ஆட்சிக்கனவோடு, பிரமாதத் திட்டங்கள், சூழ்ச்சிகளோடு திரைமறைவில் தீவிரமாக நீங்கள் இயங்கியவிதம்.. மக்களின் அபிமானம் பெற்றவரை, மாநிலத்தின் முதல்வரை, மறைத்துவைத்தே மாதங்கள் சில தள்ளி, மறைந்துவிட்டார் எனத் திடீரென மருத்துவர்களைவைத்தே குண்டுவீச வைத்து, வராத கண்ணீரை டிஷ்யூ காகிதத்தால் காமெராவுக்கு முன் நிதானமாகத் துடைத்துவிட்டுக்கொண்டீர்களே, ஆஹா! உங்களைத் தவிர வேறு யாருக்குக் கைவரும் இந்த அபரிமித நடிப்பு, சாகசம்?

உச்சநீதி மன்றத் தீர்வு வந்து உலுக்கிவிடுமுன் சிம்மாசனம் ஏறிவிட நீங்கள் செய்த சீரிய முயற்சிகளைப் பார்த்து, தமிழகம் மட்டுமா, மத்திய அரசும்கூட கொஞ்சம் ஆடித்தான்போய்விட்டது. கட்சித் தலைமையை தடாலெனக் கபளீகரம் செய்து, ஏற்கனவே பணியாற்றிவந்த முதல்வரை மிரட்டியேக் கழட்டிவிட்டு, தானே ஆட்சிபீடத்தில் சொகுசாக உட்கார்ந்துவிட பேராசைப்பட்ட உத்தமியே, தமிழ்நாட்டைப்பற்றித்தான் எப்படி சல்லீசாகக் கணக்குப்போட்டுவிட்டீர்கள்? மேலிருந்தும் சில கணக்குகள் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை மறந்தேபோய்விட்டீர்களே மங்கையர்க்கரசி! காசு சேர்த்தபின்னும் களி திங்கத்தான் விதி என்றிருந்தால் என்னதான் செய்வது?

வருஷக்கணக்காக வளர்த்துவிட்ட ஏடாகூட ஆசைகளும், அவற்றை சென்றடைய செயல்படுத்திய அசாத்திய சதிகளும், சூழ்ச்சிகளும் சேர்ந்து அல்லவா சம்பாதித்து வைத்திருக்கிறது உங்களுக்கேயான இந்த விதியை? மக்கள் ஆதரவுபெற்ற ஒரு அரசியல் ஆளுமையின் நிழலில் நின்றுகொண்டு, பாதுகாப்பில் இருந்துகொண்டு, கும்மியடிக்க குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டு ஒரே அடியாக ஆட்டம்போட்டீர்களே வருஷக்கணக்கில். அள்ளினீர்கள், அபகரித்தீர்கள். சுருட்டினீர்கள். அட்டூழியத்திற்கு ஒரு அளவில்லை என்கிற வகையில் சூழ்ச்சியின் உலகில் சுகமாய் உலவினீர்கள். மேலிருந்து நீளமான கயிறொன்று உங்களுக்காக விடப்பட்டிருப்பதுமட்டும் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியும் கயிறுமல்ல அது. ’போதும் உன் ஆட்டம்!’ என அது நினைத்து கயிறைச் சுண்டி இழுத்ததுதான் தாமதம் ; உடனே பிடித்து உங்களையும், சார்ந்தவர்களையும் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

சட்டம் ஒரு இருட்டறை. எதுவும் செய்யலாம்; எதுவும் வெளியே தெரியாது, தெரிந்தாலும் யாராலும் எதுவும் புடுங்க முடியாது எனத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டீர்கள். இப்போது இருட்டில் தூக்கம் வராமல் கொசுவிரட்டி யோசனை செய்யுங்கள். உங்களது குடும்பத்தினரை மூலதனமாக வைத்துக்கொண்டு, மூதேவி வேலைசெய்து இன்னும் என்னென்ன கூத்தடிக்கலாம், யார் யாரைக் கவிழ்க்கலாம், மேலே தந்திரமாக அனுப்பலாம் என்று தீவிரமாக சிந்தியுங்கள். 3 ½ வருட காலம் முழித்துக்கொண்டு நிற்கின்றது உங்கள் முன்னே. இதமாக உங்கள்மேல் சாய்ந்துகொண்டு துர்ஆலோசனை சொல்ல இருக்கிறார் இளவரசியும் பக்கத்தில் !

ஜெயலலிதாவின் charisma, அவர்மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்தைக்கொண்டு, கடந்த தேர்தலில் வென்றுவிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் மெஜாரிட்டி தற்போது உங்கள் ’வசம்’ இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஏழெட்டு நாட்களாக நீங்கள் போட்டுக்கொண்டிருக்கும் ’சாப்பாடு, சொகுசு’களுக்கு எம்.எல்.ஏ.-க்கள் கொஞ்ச நாட்களாவது விசுவாசம் காட்டாவிட்டால் எப்படி ! நீங்கள் பரப்பன அக்ரஹாரத்தில் உட்கார்ந்து ஊதுவத்தி சுற்றிக்கொண்டிருக்க, உங்களது சூழ்ச்சிகளின்படி, உத்திரவுகளின்படி உங்களது ’ஆட்கள்’ சென்னைக் கோட்டையில் அமர்ந்து ஆட்சிசெய்தால் – அதுதான் நடக்கும்போலிருக்கிறது, இப்போதிருக்கும் நிலைமையைப் பார்த்தால் – இன்னல்கள்தான் தொடரும் பாமரமக்களுக்கு. அவமானமும் வேதனையும்தான் மிஞ்சும் தமிழ்நாட்டுக்கு. முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, நல்லதொரு ஆட்சிவரும் வரையில், கத்தலாம், போராடலாம்; இருந்தும் ஆட்சி மாறும்வரை மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும் ஜனநாயகத்தில்.

சசிகலாஜி! முப்பது வருடங்களுக்கும் மேலாக திரைக்குப் பின்னால் நிழலாகப் பதுங்கிப் பதுங்கி உலவிய மர்மஉருவம் நீங்கள். திரைக்குவெளியே வந்து, அரசியல் வெளிச்சத்தில் நீங்கள் காட்சியளித்த சில மாதங்களிலேயே, உங்களது ஆத்திரமுகம், அசூயைமுகம், குரோதமுகம், கொடூரமுகம் தெரிந்துவிட்டது அப்பாவித் தமிழ்மக்களுக்கு. பார்த்துவிட்டார்கள். அவர்கள் கேள்விப்பட்டது சந்தேகப்பட்டது எல்லாம் உண்மைதான் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இதெல்லாம் உங்களுக்குப் புரியப்போவதில்லை. இருந்தும் சொல்லவேண்டியிருக்கிறது : தமிழ்நாட்டின் பொதுவாக ஒன்றுமறியாத பாமரமக்கள்கூட, அதிலும் குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் போன்றவர்கள் – கொஞ்சம் விழித்துக்கொண்டுவிட்ட காலம் இது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உணர்ச்சிவசப்படும் மக்கள் கூட்டம் முன்னே, அதிலும் ஜெயலலிதாவை இன்னும் மனசார ’அம்மா’ என்றழைக்கும், போற்றும் கிராமத்துப்பெண்களின் முன்னே, போலீஸ் பாதுகாப்பின்றி போய் நின்றுவிடாதீர்கள். பின்னிவிடுவார்கள் பின்னி !

**

கரைந்திருக்கும் அவர்கள்

உங்களை எப்போதோ இது
கடந்து சென்றுவிட்டது
ஒரு கருப்புப்பூனை போல்
குறுக்கே சென்று
‘மியாவ்!’ எல்லாம் வேண்டாம்
அவர்கள் எதையாவது
பார்த்துக்கொண்டிருக்கட்டும்
பேசிக்கொண்டிருக்கட்டும்
நிமிடங்கள் சிலவாவது
நிம்மதியாகக் கழியட்டும்
கண்வைக்க வேண்டாம்
கலங்கப்படுத்த வேண்டாம்
தூரத்திலேயே ஒதுங்கி மனதின்
ஈரம் காட்டுங்கள் கொஞ்சம்

**

விலகிவிட்டதா சனி ?

சூது
கவ்வியிருந்தது
நாதியில்லை இனி
நாசந்தான்
என்றிருந்த கையறுநிலை
இன்று – விடுபட்டுவிட்டதுபோல்
தோன்றுகிறது தர்மம்
நிஜந்தானா ?
இல்லை
திரும்பியும் வந்துவிடுமா அது
கவ்வ ?

**

’அதீதம் ‘ இதழில் ஏகாந்தன் கவிதைகள்

அதீதம் இணைய இதழில் என் மூன்று கவிதைகள் – ’அழைப்பு’, ‘அப்போதெல்லாம்’, ’வன்மம்’ ஆகியவை வெளியாகியிருக்கின்றன. உங்களை ‘அதீதம்’ இதழுக்கு அன்புடன் வாசிக்க அழைக்கிறேன்.

லிங்க்: http://www.atheetham.com/2017/01/blog-post.html

நன்றி: ‘அதீதம்’

-ஏகாந்தன்

Melukote temples – மலைமேலமர்ந்து யோகம் செய்யும் ஸ்வாமி

மேலக்கோட்டை பயணம் – இறுதிப் பகுதி

‘ஒரு கொடியவிலங்காய் கதிகலங்கவைத்து, உறுமி ஆர்ப்பரித்து மலைப்பிரதேசங்களில் அலைபவன் !’ என்கிறது ரிக்வேதம். யாரைப்பற்றி இப்படி ஒரு வர்ணனை? மகாவிஷ்ணுவைப்பற்றி. விஷ்ணுவா? அவர் சாந்த ஸ்வரூபன், ஆபத்பாந்தவன், காக்கும் கடவுளாயிற்றே! இந்தக் கடுமையான வர்ணனை அவரைப்பற்றியா? ஆம், மகாவிஷ்ணுவின் நரசிம்ஹ அவதாரக் காட்சியை இப்படிக் குறிப்பிடுகிறது ரிக்வேதம், இதுவன்றி, பிரும்ஹ புராணம், வாயு புராணம், அக்னி புராணம், சிவபுராணம், லிங்க புராணம், ஸ்கந்த புராணம் போன்றவைகளும் நரசிம்ஹ அவதாரத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. அதர்வணவேதத்தில் வரும் நரசிம்ஹ தபனி உபநிஷதம், கோபால தபனி உபனிஷதம் ஆகியற்றிலும் நரசிம்ஹ அவதாரம் குறிப்பிடப்படுகிறது. தபனி (Tapani –austerity) என்பது இங்கு ஒரு சன்னியாசியின் அகத்தூய்மை, புலனடக்கம் பற்றியது. இவற்றின் துணையுடன் ஒரு துறவி நரசிம்ஹமாகிய பரப்பிரும்ஹத்தில் தன்னை முழுமையாகச் சரணடையச் செய்வது, முற்றிலுமாகக் கரைப்பது என்றாகிறது.

Yoga Narasimha Swamy Temple, Melukote

வேதபுராணங்கள் இப்படியெல்லாம் குறிப்பிடமுயலும் நரசிம்ஹ ஸ்வாமி மேலக்கோட்டையில் திருநாராயணர் கோவிலுக்கருகிலேயே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடிக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் ஒரு குன்றின் மேல் எழிலாகக் காலங்காலமாய் அமர்ந்திருக்கிறார். யோகநரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் இந்தியாவின் மிகவும் ப்ரசித்திபெற்ற நரசிம்ஹர் கோவில்களில் ஒன்று. காலை 9 மணியிலிருந்து 1 மணிவரை, மாலை 5.30-யிலிருந்து 8 வரை பக்தர்களுக்காகத் திறந்திருக்கிறது. வருடாந்திர நரசிம்ஹ ஜெயந்தியன்று விசேஷ பூஜை உண்டு.

அடிவாரத்திலிருந்து மலையின் மேல் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கார் செல்ல சாலை இருந்தது. அதுவரை சென்று மற்ற வண்டிகளுடன் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மேலே பார்த்தோம். மலைப்பாக இருந்தது. இவ்வளவு உயரம் ஏறிவிடமுடியுமா? வெறுங்காலோடு பக்தர்கள் முன்னேறுவதைப் பார்த்து, ‘செருப்புகளைக் காரில போட்றுங்க சார்!’’ என்றார் ஓட்டுனர். அப்படியே செய்தோம். சாலையிலிருந்து கோவிலுக்கான அடிவாரப் படிகளை நெருங்குவதற்குள்ளேயே சாலையில் கிடந்த பொடிக்கற்கள் பாதங்களைக் கடும் சோதனைக்குள்ளாக்கின. வீட்டிலேயே ஹவாய் சப்பல்களுடன் பழக்கப்பட்ட பாதங்கள், கட்டாந்தரைக்கும் கற்களுக்கும் வருஷக்கணக்கில் அந்நியப்பட்டிருந்ததுதான் காரணம். பாதசுகத்தைப் பார்த்திருந்தால் பகவான் தரிசனம் தருவானா? அந்தக்காலத்தில் ஆழ்வார்களெல்லாம் வெறுங்காலோடும், வெறும் வயிற்றோடும் அல்லவா ஒவ்வொரு தலமாக அலைந்தார்கள் ?

படிகளில் கால்வைக்குமுன் கோவிலின் திவ்ய சரித்திரத்தை கொஞ்சம் நோட்டம் விடலாமா? மேலக்கோட்டை யோகநரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் இருக்கிறதே, அது பழையது, பழையது அத்தனைப் பழையது. புராணங்களிலும் இதனைப்பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த யோகநரசிம்ஹர் சாக்ஷாத் பிரஹலாதனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம். பிற்காலத்தில் ஹோய்சல அரசர்கள் இந்தக் கோவிலை புனரமைத்துக் கட்டினார்கள். நாம் இப்போது பார்ப்பது அவர்களது கட்டிடக் கலைநுட்பம் கலந்து காட்சியளிக்கும் அழகுக்கோவில்தான். மைசூர் மகாராஜாக்களின் வம்சத்தில் வந்த மூன்றாவது கிருஷ்ணராஜ உடையார் இந்த நரசிம்ஹப்பெருமானுக்குத் தங்கக் கிரீடம் உபயம் செய்து வணங்கியிருக்கிறார். திப்பு சுல்தானால் வழங்கப்பட்ட பெரிய தப்பு (பறை- drum) ஒன்றும் இந்தக் கோவிலில் உள்ளது.

தற்காலக் கதை கொஞ்சம்: மேலக்கோட்டையில் ISKCON அமைப்பு, வேத உபதேசத்திற்காக ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்திவருகிறது. இது தன் கோஷாலாவில் 6 பசுக்களை வளர்க்கிறது. இவைதரும் பால் தினமும் யோகநரசிம்ஹரின் அபிஷேகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது.

பழங்காலத்தில் நம்மை பயணிக்க அழைக்கும் கோவிலின் படிகள் கரடு, முரடாக, கோணல்மாணலாக அமைந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு 15-20 படி தாண்டியவுடன் நிற்பதற்கு கொஞ்சம் விஸ்தாரமான அகன்ற கடப்பைக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன; வயோதிக, மற்றும் கால் ப்ரச்னைகளோடு படியேறும் பக்தர்கள் சற்றே உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வலதுபுறமாகக் கல்லிலேயே பெஞ்சுபோல் அமைத்துக் கட்டியிருந்தார்கள் அந்தக்காலத்து மனிதர்கள். படி ஏறிபவர்களுக்கு களைப்பு ஏற்படாதிருக்க, தாகம் தீர்க்கவென படிகளின் இரு பக்கங்களிலும் பெண்கள் மோர் விற்றுக்கொண்டு அமர்ந்திருந்ததைக் காணமுடிந்தது. அந்தக்காலத்து நல்ல பழக்கங்கள் சில இன்னும் மாறாதிருப்பதில் ஒரு திருப்தி.

முதலில் மலைப்பு ஏற்பட்டாலும், படிகளில் கால்வைத்து ஏற ஏற எப்படியும் மேலே கோவிலுக்குள் நுழைந்துவிடலாம் என்கிற நம்பிக்கையை நரசிம்ஹ ஸ்வாமி மனதில் விதைத்துக்கொண்டே இருந்தார். வயதான பெண்கள், சில ஆண்கள், இளம் வயதினர் என ஒரு சிறுகூட்டம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆங்காங்கே மற்றவர்களுக்கு வழிவிட்டு சற்று நின்று, மெதுவாக ஏறினோம். மொத்தம் 300 படிகள். சில இடங்களில் 45 டிகிரி கோணத்தில் ஏறுவதற்கு வசதியாகவும், வேறு சில இடங்களில் சற்றே செங்குத்தாகவும் இருந்து எங்களைக் கொஞ்சம் சோதித்து மேலனுப்பிவைத்தன படிகள். 270-280 படிகள் கடந்தவுடன் ஒரு நுழைவு வாசல் காலத்தைத் தாண்டியதாய் நின்றது. அங்கே இடதுபுறத்தில் ஒரு சிறிய ஆஞ்சனேயர் பக்தர்களைச் சற்றே இளைப்பாறவைத்து தன்னை வணங்கவைத்து அனுப்பினார். அவரை சிலநிமிடங்கள் வணங்கிவிட்டு வளைந்து மேலேறும் படிகளில் தொடர்ந்து ஏறினோம் . இதோ வந்துவிட்டது நரசிம்ஹர் கோவிலின் முகப்பு. மலைப்பு, களைப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை. உற்சாகமாக நுழைந்தோம் கோவிலுக்குள்.

காலங்காலமாய் எத்தனை எத்தனை ராஜாக்கள், ராணிகள், துறவிகள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து யோகநரசிம்ஹ ஸ்வாமியை வணங்கியிருப்பர்? அத்தகையை யுகாந்திரப் பெருமை வாய்ந்த ஒரு கோவிலுக்குள் நுழைகிறோம் என்கிற எண்ணம் ஒரு பெரும் வியப்பும், ஆச்சரியமுமாய் மனதை நிறைத்தது. கூட்டம் அதிகமில்லை . காலை 11 மணியைத் தாண்டி இருக்கும். நிதானமாக உள்ளே சென்று இடதுபுறம் திரும்பி கர்ப்பகிருஹத்தை வந்தடைந்தோம். எதிரே, துறுதுறு கண்களுடன் யோகப்பட்டை அணிந்து அமர்ந்தகோலத்தில் யோகநரசிம்ஹரின் கம்பீரக் காட்சி. இரண்டு அர்ச்சகர்கள் பக்தர்களைக் கவனித்துக்கொள்ள நின்றிருந்தார்கள். ஒருவரிடம் கொண்டுவந்திருந்த தேங்காய், பழத்தைக்கொடுத்து நைவேத்தியம் செய்யச் சொன்னோம். வாங்கியவர் வலதுபுற மூலைக்குச் சென்று தேங்காயை உடைத்து வாழைப்பழம், தேங்காயை யோகநரசிம்ஹருக்குக் காட்டிவிட்டு நொடியில் எங்களிடம் கொடுத்துவிட்டார். எந்த ஃப்ளைட்டைப் பிடிக்கவேண்டியிருந்ததோ அவருக்கு. ஒரு அர்ச்சனை இல்லை, மந்திரமோ, ஸ்லோகமோ முணுமுணுக்கக்கூட இல்லை. இங்கே கன்னடக் கோவில்களில் இப்படித்தான் வழக்க்மோ? தீர்த்த வட்டிலைப் பார்த்தோம். கையை நீட்டினோம். எங்களோடு நின்றுகொண்டிருந்த 10-12 பக்தர்களும் சாமியைக் கும்பிட்டு கை நீட்டினார்கள். நல்லவேளை. தீர்த்தம் கிடைத்தது. கூடவே துளசியும். மீண்டும் ஒருமுறை ஆசையோடு நரசிம்ஹரைப் பார்த்து நமஸ்கரித்து பிரஹாரத்தை நிதானகதியில் சுற்றிவந்தோம்.. இவ்வளவு பிரசித்திபெற்ற அருள்மிகு ஆண்டவனின் திருக்கோவிலைவிட்டு அவ்வளவு விரைவில் விலகிவிட மனம் வருமா! மற்றவர்களுக்கும் இப்படித்தான் தோன்றித்தோ என்னவோ, அவர்களும் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தார்கள்.

இப்படி பிரகாரச்சுற்று முடியும் தருவாயில் சுவற்றில் ஏதோ பளபளத்தது. பார்த்தால் திருமாலின் பத்து அவதாரங்கள் வரையப்பட்டு நடுவில் பிரதானமாய் யோகநரசிம்ஹர் பித்தளைத் தகட்டில் ஜொலித்துக்கொண்டிருந்தார். என் மகளிடம் ’உன் RedMi-யின் கேமராவினால் ஒரு தட்டுத் தட்டிவிடு!’ என்றேன். யாராகிலும் தடை சொல்வார்கள் அல்லது திட்டுவார்கள் என்று தயங்கினாள். ’கோவிலிலிருந்து வெளிவரும் நிலையில் பிரகாரச்சுவரில்தான் இருக்கிறது சும்மா எடு. ஒன்றும் ஆகாது!’ என்றேன். அவசரமாக மொபைலை நரசிம்ஹஸ்வாமியின் முன்னே ஒருகணம் காண்பித்து லாவகமாக க்ளிக்கிவிட்டுத் வேகமாகத் திரும்பினாள். நரசிம்ஹரைத் தவிர வேறு யாரும் கவனித்ததாகக்கூடத் தெரியவில்லை.

பிரிய மனமில்லாமல் பிரிந்து, கோவிலுக்கு வெளியே வந்து, படிகளில் இறங்க ஆரம்பித்தோம். எதிரே சில வெளிநாட்டவர்கள் ஏறி வந்துகொண்டிருந்தார்கள். அயல்நாட்டு டூரிஸ்ட்டுகள். கோவில் வெளிக்கோபுர வாசலின் முகப்பில் இடதுபுறம் கொஞ்சம் உயரத்தில் கல்சுவற்றின் சித்திர வேலைப்பாடுகளுக்கிடையில், இப்போது கண்ணில்பட்டார் ஒரு குட்டி வினாயகர். கண்களை சுற்றுப்புறமாக ஓடவிட்டுக் காட்சிகளை ரசித்துக்கொண்டே கீழே இறங்கினோம். இளைஞர்கள், பெண்கள் என சிலர் மேலேறி வந்துகொண்டிருந்தார்கள்.

சில இடங்களில் கோவிலின் அருகே இடதுபுறமாக, விதவித உருவங்களில் பெரும்பாறைகள், பாறைகளின் வெடிப்பிலிருந்து கிளம்பியிருக்கும் பாரிஜாத மரங்கள். கீழ்விழுந்துகிடக்கும் அவற்றின் ஆரஞ்சுக்காம்புடன் கூடிய வெள்ளை மலர்கள், காற்றுவெளியின் லேசான சுகந்தம், குளுகுளுப்பு என ஒரு out of the world அனுபவமாகத் தோன்றியது. புதிரும் அழகும் மிளிரும் அந்தப் பிரதேசமே வருபவர்களிடம் கடந்தகால ரகசியங்கள்பற்றிக் கொஞ்சம் சொல்ல முயன்றதாகத் தோன்றியது. என் பெண் முன்சென்று திரும்பி, கோவிலைப் பார்த்துக்கொண்டு சில ஃபோட்டோக்களை கொஞ்சம் சாவதானமாக க்ளிக்கினாள். படிகளில் கைப்பிடிக் குழாயைப் பிடித்தவாறு இறங்கிவரும் ஒரு மத்திம வயதுப் பெண்ணின் கையிலிருக்கும் பையை ஆர்வமாகப் பார்த்து அருகிலுள்ள கைப்பிடிச் சுவரில் குதித்து நெருக்கம் காட்டியது ஒரு இளம் குரங்கு. நல்லவேளை, அந்தப் பெண் கவனிக்காததால் பதறவில்லை. குரங்காரும் என்ன நினைத்தாரோ, பறிக்கும் முடிவினைத் தள்ளிப்போட்டுவிட்டார் ! இன்னும் சில குரங்குகள் அங்கும் இங்குமாகத் தவ்வி சேட்டைகள் செய்தவண்ணமிருந்தன. சில மலை முகடுகளிலிருந்து தூரப்பார்வையில், மேலக்கோட்டையில் எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதுபோல் ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன.

பாரிஜாத மரங்களின் கீழ் கொஞ்சம் நின்றோம். எடுத்துப் பார்த்தேன் – கீழே விழுந்துகிடந்த பூக்கள் இன்னும் வாடாதிருந்தன. மேலே பல மரங்களில் இலைகளைக் காணோம். சில இளம் மொட்டுக்கள் இருந்தன. இந்தப் பாரிஜாதம் இருக்கிறதே… ஒருகாலத்தில் தேவலோகத்தில்தான் பூத்துக் குலுங்கியது ! அதுபற்றிய புராணக் கதை ஒன்றுண்டு:

பூலோகத்தில் இரவு தீண்ட ஆரம்பித்த ஒரு மாலைப்பொழுதில், கிருஷ்ணனின் மீது ஒயிலாகச் சாய்ந்திருந்தாள் ருக்மணி. மெல்லத் தலை உயர்த்தி, அவன் காதில் மிருதுவாகச் சொன்னாள்: ’’எனக்கு பாரிஜாதம் வேண்டும்!’’

கிருஷ்ணன் அவளைப் ப்ரியத்தோடு பார்த்தான். மெல்லிய புன்னகையோடு சொன்னான்: ‘எங்கே வந்து என்ன கேட்கிறாய் ருக்மணி! இது பூலோகம். பாரிஜாதம் தேவலோகத்தில்தானே இருக்கும்!’’

’’அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு அது வேண்டும்!’’ என்றாள் அவள்.

ருக்மணி பிடித்தால் விடமாட்டாள். கிருஷ்ணனும் வார்த்தைகளை வீணாக்குபவன் அல்ல. ‘உனக்காக தேவலோகம்போய் கொண்டுவருகிறேன் !’ என்றான்; மறைந்தான்.

உடன் பூலோகத்துக்குத் திரும்பியவன், அவளுக்குப் பிடித்த புஷ்பத்தைக் கொடுத்து சந்தோஷப்படுத்தினான். கூடவே தேவலோகத்திலிருந்து சிறிய பாரிஜாதச் செடி ஒன்றையும் கொண்டுவந்திருந்தான். ருக்மணியின் மாளிகைத் தோட்டத்தில் நட்டான். ‘இது பெரிசாகி நிறையப் பூக்கும் ! உனக்கு சந்தோஷம்தானே!’. என்றான். ருக்மணி கிருஷ்ணனின் அன்பில் மிகவும் நெகிழ்ந்துபோனாள்.

செடி மரமானது காலப்போக்கில். கிளைகள் அடர்ந்து படர்ந்தன. மொட்டுக்கள் தோன்றி இரவில் மலர்களாய்ச் சொரிந்தன. ஒரு இரவில் கிருஷ்ணனுடன் தன் தோட்டத்திற்கு வந்த ருக்மணி தான் கண்ட காட்சியில் அதிர்ச்சியுற்றாள். பாரிஜாத மரம் தன் பெரிய கிளைகளில் பலவற்றைப் பக்கத்து மாளிகையின் தோட்டத்துக்கு அனுப்பி அங்கே பூவாய் சொரிந்திருந்தது. பேருக்கு சில புஷ்பங்கள் மட்டுமே ருக்மணியின் தோட்டத்தில். பக்கத்து மாளிகையில் வசித்த அந்த அடுத்தவீட்டுப்பெண் யார்? சத்யபாமா ! பாரிஜாதத்தின் விஷமத்தை என்னவென்று சொல்வது!

கிருஷ்ணனும் கவனித்தான். ‘என்ன ருக்மணி!’ என்றான் மிக இயல்பாக.

‘நீ கொண்டுவந்து வைத்த அழகு மரம் என்ன காரியம் செய்திருக்கிறது? நீயே பார்!’ என்றாள் கடுப்புடன்.

’அதான் நன்றாகப் பூத்திருக்கிறதே!’ என்று அவளது முகத்தைப் பார்த்து முறுவலித்தான் அவன். .

‘எங்கே போய் பூத்திருக்கிறது? கவனித்தாயா!’ – ருக்மணி.

‘ஓ! கிளைகள் உன் தோட்டத்தைவிட்டு வெளியே போய்விட்டதா? அதனால் என்ன! உன் தோட்டத்திலும் பூத்துத்தானே இருக்கிறது!’ என்றான் மிக இயல்பாக. ருக்மணி அவனைப் பார்த்தாள். ’மகா கள்ளன் இவன்! உண்மையில் இதில் இவனுக்கு சந்தோஷமாகக் கூட இருக்கும்!’ என நினைத்தாள். அவனைப் பார்த்திருந்தவளுக்கு ஏனோ கோபம் தணிந்தது. ‘விடு இந்த மரத்தை! இதற்காக என் அன்பனைக் கோபித்துக்கொள்வேனா!’ என்று ஒருவழியாக சமாதானமுற்றாள் ருக்மணி.
இப்படி ருக்மணியையே சீண்டிப்பார்த்த புஷ்ப மரம் பாரிஜாதம். அதாவது நமது பூலோகத்தின் பவழமல்லி.
பாரிஜாதத்தின் கதை ஓடி நிற்க, தொடர்ந்து இறங்கி அடிவாரத்திற்கு வந்தோம். கார் நின்ற இடம் நோக்கி வருகையில் ஒரு ஆச்சரியம். ஒரு சர்வதேச சைக்கிள் பயணி போன்ற ஒருவர் அதற்கான headgear, shorts எல்லாம் அணிந்து நின்றிருந்தார். பக்கத்தில் அவரோடு ஊர்சுற்றும் வாகனம், பைகள், தண்ணீர் பாட்டில் இத்தியாதிகளுடன் அலங்காரமாய் நின்றிருந்தது. வயதானவர். யாருக்காகவாவது காத்திருக்கிறாரா? கொஞ்சம் பேச்ச்சுக் கொடுத்துப்பார்ப்போம் என்றது மனது. நெருங்கி, ’Can you speak in English?’ என்றேன். வெளிநாட்டவரெல்லாம் ஆங்கிலம் பேசவேண்டும் என்று யார் சொன்னது?

’Yes, I can !’என்றார் உற்சாகத்துடன்.

‘எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயர்?’ என்று கேட்டேன்.
’France! I am Michelle ‘என்றார் அவர். துருக்கி, க்ரீஸ், மொராக்கோ என்றெல்லாம் ஒரு ரவுண்டடித்து- சைக்கிளில் பிரதானமாக – இப்போது இந்தியா வந்திருப்பதாக சொன்னார்.

ஆச்சரியப்பட்டு ‘எப்போது புறப்பட்டீர்கள் ஃப்ரான்ஸிலிருந்து? -கேட்டேன். ’மூன்றுவருடங்களாயிற்று!’ என்றார். நெடும் பயணம் அவரை வதக்கி புடம் போட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது. ’நீங்கள் மட்டுமா கூட யாரும் வந்திருக்கிறார்களா?’ –மேலும் விஜாரித்தேன். ’என் மனைவி! மேலே ஏறிக் கோவிலுக்குப்போயிருக்கிறாள் !’ என்று சொல்லி மேலும் ஆச்சரியப்படுத்தினார்.

கோவில் என்றவுடன் இவருக்குக் கொஞ்சம் சொல்லவேண்டியதுதான் என நினைத்து ஆரம்பித்தேன். ’மிகவும் புகழ்பெற்ற மலைக்கோவில் இது. நீங்கள் கேள்விப்பட்டு இங்கு வந்திருப்பது சந்தோஷமாயிருக்கிறது’ என்றேன். ’மும்பையிலிருந்து பெங்களூர் வந்து தங்கியிருக்கிறோம். கர்னாடக சுற்றுப்புறங்களில் சுற்றுகிறோம்’ என்றவர், ’இது ஒரு ஜெயின் கோவிலா?’ என்றார்.

போச்சுடா! விடிய விடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்கிறாற்போல்…என்று மனம் நினைக்கையில், இல்லை, இவர் கதை கேட்கவில்லை. தன் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் என நினைவு எச்சரித்தது. பரவாயில்லை. நரசிம்ஹர் இவரை எப்படியோ இங்கே இழுத்துவந்துவிட்டார். கொஞ்சமாகச் சொல்வோம் என நினைத்து ‘இது ஒரு ஹிந்து கோவில். ஹிந்து கடவுள் விஷ்ணு என்று கேள்விப்பட்டிருக்கிறீரா?’ என்று கேட்டேன். ’யெஸ்..யெஸ்..!.விஷ்ணு!’ என்றார்.

அந்த விஷ்ணுவுடைய கோவில் இது. ஆனால் இங்கே விஷ்ணு மனித உடம்பு, சிங்கத் தலையோடு காட்சிதருகிறார். அவருடைய அவதாரங்களில் ஒன்றில் இப்படி அவரது தோற்றம்!’ என்றேன். வியப்போடு அவர் கேட்டுக்கொண்டிருக்கையில் வந்து சேர்ந்தார் அவரது மனைவி. ‘உங்கள் கணவரோடு பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் நீண்ட பயணம் ஆச்சரியமளிக்கிறது. உங்களுக்கு ஆரோக்கியம், மனோதிடம் இவற்றைக் கடவுள் நிறைய தந்திருக்கிறார்!’ என்றேன். அவர் சந்தோஷப்பட்டார். ’உங்கள் பயணத்தில் தமிழ்நாடு, சென்னை இப்படி ஏதாவது ? ’ என்று இழுத்தேன்.

‘சென்னை!’ என்றார் வியப்புடன். ’ஆம் அங்கு போகிறோம். அங்கிருந்து கப்பல் வழியாக மியன்மார் (பர்மா) செல்கிறோம். (சில பகுதிகளில் கப்பல்வழி சென்று அந்தந்த நாடுகளில் இறங்கியவுடன் நாட்டுக்குள் சைக்கிளில் பயணிக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன்). ‘சுற்றிப் பார்க்கப்போவதில்லையா சென்னையை? பார்ப்பதற்கு நிறைய இருக்கிறதே!’ என்றேன். ’பார்க்கவேண்டும் ஆனால் விசா 3 மாதத்துக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மிகவும் குறைவாக இருக்கிறது. மியன்மாரில் ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு பயணிப்போம்!’ என்றார்.

’நான் விசா ஆஃபீஸராக தூதரகத்தில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது என்னிடம் நீங்கள் வந்திருக்கக்கூடாதா! இந்தியாவில் ரவுண்டடிக்க ஒரு வருட விசா கொடுத்திருப்பேனே. உங்கள் போன்றோருக்குத்தானே இந்திய விசா அதிகமாகக் கொடுக்கவேண்டும்!’ என்றேன். இந்த எதிர்பாராத தகவலால் அவர் அசந்துபோனார். நன்றி சொன்னார். அவர்கள் இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி படங்கள் சிலவற்றை க்ளிக் செய்து அகன்றோம்.

மேலக்கோட்டை செலுவநாராயண ஸ்வாமிடமிருந்தும், யோகநரசிம்ஹ ஸ்வாமியிடமிருந்தும் பிரியாவிடை பெற்று பெங்களூர் நோக்கிப் பயணமானோம்.

**

Melukote Temple திருடப்பட்ட விஷ்ணுவின் வைரமுடி !

மேலக்கோட்டைப் பயணம் 3 (தொடர்ச்சி)

திருநாராயணபுரம் என்று வைஷ்ணவர்களால் அழைக்கப்படும் மேலக்கோட்டையில் காட்சிகொடுக்கும் செலுவநாராயண ஸ்வாமி திருக்கோயிலுக்கு நாங்கள் வந்துசேரும்போது காலை 10.45 . மலைப்பிரதேச ஊரானதால் குளுகுளுவென்றிருந்தது. கோவில் மதியம் 1 மணிவரை திறந்திருக்கும் என்றார்கள். கோவில் கட்டிடத்தைப் பார்த்தாலே தெரிந்தது மிகவும் தொன்மையான கோவில் என்று. முதலில் சன்னிதிக்குள் போய் திருநாராயணப் பெருமாளை சேவித்துவிடுவோம் என வேகமாய் உள்ளே சென்றோம். கூட்டம் இல்லை. உள்ளூர்க்காரர்கள் மாதிரி தெரிந்த சிலர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்தார்கள். பின்னேயே நாங்களும் சென்றோம். வந்துவிட்டது மூலவர் செலுவநாராயண ஸ்வாமியின் சன்னிதி. பத்துப்பனிரெண்டு அடி தூரத்தில் நின்ற திருக்கோலத்தில் திருநாராயணன் பிரகாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் தன் பக்தர்களை. அவருடைய திருப்பாதத்தில் பீவி நாச்சியாரின் சிறிய விக்ரகம் இருக்கிறது. அந்தத் தூரத்திலிருந்து பார்க்கையில் சரியாகத் தெரியவில்லை. அர்ச்சகராவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

நின்றிருந்த அர்ச்சகர்களில் ஒருவரிடம் கையில் கொண்டுவந்திருந்த தேங்காய் பழத்தைக் கொடுத்தோம். தேங்காயைப் பார்த்தவுடன் ’வாசலுக்குப் போய் உடைச்சுண்டு வாங்கோ!’ என எங்களை உடன் திருப்பினார் அர்ச்சகர். இது என்னடா, எங்கும் காணாத அதிசயம்! நாமே தேங்காயை உடைத்துவிடவேண்டியதுதானா? ரிவர்ஸ் கியரில் நகர்ந்தோம். எங்கே போய் உடைப்பது? கிட்டத்தட்ட நுழைவாசலே மீண்டும் வந்துவிடும் நிலையில், கோவிலின் நாதஸ்வர வித்வான் ஒருவர் எதிர்ப்பட்டு வலதுபுறம் காட்டி ’அங்கே போய் தேங்காயை உடைச்சிட்டு வாங்க’ என்றார் தமிழில். அட, இது நம்ம ஆளு! சில அடிகள் முன்னேறியவுடன் தேங்காய் உடைப்பதற்கான பிரத்தியேக அமைப்பு தெரிந்தது. ஓ! இப்படி ஒரு ஏற்பாடா ! உடைத்தேன் தேங்காயை. மூடிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வேகமாக சன்னிதிக்கு வந்தோம். இப்போதாவது வாங்கிக்கொள்வீரா அர்ச்சகரே? வேறேதும் சொல்வீரா என்கிற வகையில் மனம் ஓடியது. அர்ச்சகர் தேங்காய் மூடிகள், பழங்களை வாங்கிக்கொண்டு பெருமாளுக்கு சுருக்கமாக நைவேத்யம் செய்து ப்ரசாதத்தைத் தந்தார். தீபத்தைக் கண்ணில் ஒத்திக்கொண்டவுடன் பெருமாள் தீர்த்தம் கொடுத்தார் எங்களுக்கும் மற்றவர்களுக்கும். அருகில் நின்ற அர்ச்சகரிடம் ’உத்சவப் பெருமாள்..’ என்று தயக்கத்துடன் ஆரம்பித்தேன். ‘செல்வப்பிள்ளை!’ என்னைச் சரிசெய்தார் உடனே. ’தரிசிக்க நேரமாகும்!’ என்றார். ’திருமஞ்சனம் முடிந்து அலங்காரமாகிக் கொண்டிருக்கிறதுபோலும்’ : இது என் தர்மபத்தினியின் யூகம்.

செலுவநாராயணப் பெருமாளைப் பார்த்து உருக்கமாக வேண்டி நின்றனர் பக்தர்கள். அதில் ஒரு இளம்பெண், அந்த சிறிய கூட்டத்திலிருந்து சற்றே ஒதுங்கி சன்னிதிக்கு நேரே அங்கேயே உட்கார்ந்துகொண்டாள். சில நிமிடம் கண்மூடி அமர்ந்திருந்தாள். நல்ல காலம், அர்ச்சகர் ஏதும் ஆட்சேபிக்கவில்லை. இன்னும் சிலர் வந்து பெருமாளை அவரவர்க்குத் தோன்றியபடி வணங்கி நிற்க, அர்ச்சகர்கள் அருகில் யாருடனோ அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.

திருநாராயணரை அமைதியாக சேவித்தவுடன், இடதுபுறமாக உள்பிரகாரத்தில் நுழைந்து சுற்ற ஆரம்பித்தோம். உள்பிரகார மண்டபத்தில் நிறைய பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இவ்வளவுபேர் இங்கே எப்படி? இந்த பள்ளிக்கூடவாத்தியார்கள் சொல்லித்தரும் அழகிற்கு, நேரடியாக ஆண்டவனிடமே கேட்டுவிடலாம் பாடத்தை என்று வந்துவிட்டார்களா ! அவர்களைக் கடந்து திரும்புகையில் ஆஞ்சனேய சன்னிதி. சேவித்து தீர்த்தம் வாங்கிக்கொண்டு பிரகாரத்தை தொடர்ந்து சுற்றினோம். சுற்று முடியும் தருவாயில் தாயாரின் சன்னிதி வந்தது. அழகான கல்யாணி நாச்சியார். பரபரப்பின்றி நிதானமாகத் தாயாரை வணங்கிவிட்டு வெளியே வந்தோம். தாயார் சன்னிதியின் அருகில் அழகிய சிற்பவேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறுமண்டபம் ஒன்று, கடந்துபோய்விட்ட ஒரு காலகட்டத்தின் கட்டிடக்கலையின் நுட்பங்களை பறைசாற்றி நின்றிருந்தது.

கொஞ்சம் நகர்ந்தபின் வந்தது ராமானுஜர் சன்னிதி. கல் விக்ரகத்துக்கு அருகில் தாமிரத்தில் ராமானுஜர் விக்ரகம் ஒன்று பளபளத்தது. செல்வப்பிள்ளையை டெல்லியிலிருந்து மீட்டுவந்தவரை, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, ’நமோ நாராயணா’ என்கிற மந்திரத்தை அனைவருக்குமாக அருளியவரை, பக்தர்கள் எந்தக் குலமாயினும் அனைவரையும் சமமாக பாவித்தவரை, முற்றிலும் வித்தியாசமான ஒரு ஞானியை மனமார வணங்கினோம்.

வெளியே வந்தவுடன் மீண்டும் அந்தப் பெரிய கோவிலை ஒரு முறை நிதானமாகப் பார்த்தேன். பழைய காலத்துத் கற்தூண்களில் நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள். அகலவாக்கில் விரிந்திருந்த முகப்பு. வாசலுக்கு எதிரே சுமார் 15 அடிதூரத்தில் சிறிய சன்னிதிபோன்ற அமைப்பு. அதனுள் கைகூப்பியபடி சிலை ஒன்று. கோவிலைக் கட்டிய மன்னனாயிருக்கும் என நான் கூற, ‘கருடன் சன்னிதி. பெருமாளைப் பார்த்துக்கொண்டு யார் நிற்பார்கள்!’ என்று என் அறியாமையை உடனே சுட்டினாள் மனைவி. கேட்டவுடன் உஷாராகி, அருகில் சென்று பார்த்தேன். ஆம், அவரே தான். கோவிலின் முன் நின்று சில புகைப்படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பினோம். 12-13 வயதிருக்கும் – ஒரு பள்ளி மாணவி – கருடனின் பாதங்களில் குனிந்து, சிரம் வைத்து தியானித்திருந்ததைக் கண்டேன். தொழில்நுட்பம், நவீனநாகரீகம் என்றெல்லாம் ஒரே வேகமாகப் பொங்கும் இப்போதைய காலகட்டத்திலும், பண்டைய கலாச்சார உன்னதத்திலிருந்து நீங்கிவிடாது, நமது குழந்தைகள் நன்றாகவே வளர்ந்துவருகின்றன என்று ஒரு நிம்மதி தோன்றியது மனதில்.

ராமானுஜர் – விஷ்ணுவர்தனுக்குப் பிந்தைய காலத்தில், 16-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மைசூர் மகாராஜாவான ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டினத்தையும் சுற்றுப்பகுதிகளையும் கைப்பற்றினார். வைஷ்ணவ சித்தாந்தத்தின்மீது பிடிப்புகொண்டார். செலுவநாராயண ஸ்வாமி கோவிலும் சுற்றுப்புறங்களும் அவரால் மேலக்கோட்டை பிராமணர்களுக்கு, கோவிலை செவ்வனே பராமரிக்க, பூஜைபுனஸ்காரங்களைக் கிரமப்படி நடத்தவென வழங்கப்பட்டது. மைசூர் மகாராஜாக்களின் பரம்பரையில் வந்த மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் திருநாராயணனுக்கு உபயமாக மணிகள் பதிக்கப்பட்ட தங்கக்கிரீடம் ஒன்றை அளித்துள்ளார். இது கிருஷ்ணராஜமுடி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலிலிருக்கும் ஏனைய தங்க, வெள்ளி நகைகள், பாத்திரங்களில் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையாரின் பட்டத்து ராணியரால் உபயம் செய்யப்பட்டவை எனப் பதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ உடையார், பட்டத்துமகிஷிகளுடன் அடிக்கடி இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வாராம்.

வைரமுடி ப்ரம்மோத்சவம்

செலுவநாராயண ஸ்வாமி திருக்கோவிலில் நடத்தப்படும் வைரமுடி பிரும்மோத்ஸவம் அதிவிசேஷமானது. தென்னாட்டில் நடக்கும் 4 புகழ்பெற்ற பிரும்மோத்ஸவங்களுள் ஒன்று. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) இது நடக்கும். மேலக்கோட்டையே புத்துயிர் பெற்று திருவிழாக்கோலத்தில் பரபரக்கும் மாதம்; ஏகப்பட்ட பக்தர் வெள்ளத்தை ஈர்க்கும் மகாவைபவம். கிட்டத்தட்ட 4 லட்சம்பேர் கூடுகின்றனர். இந்த உற்சவத்தின்போது செல்வப்பிள்ளை அணிந்து வலம்வரும் வைரக் கிரீடம் அல்லது வைரமுடி மிகவும் தொன்மையானது. இந்த வைரமுடி, பிரும்மோத்ஸவ காலத்தில் (13 நாட்கள்) மட்டும்தான் கோவிலுக்கு மைசூர் கருவூலத்திலிருந்து காவல் பாதுகாப்புடன் கொண்டுவரப்படுகிறது. பிரும்மோத்ஸவத்தின்போது இது ராமானுஜரின் சன்னிதிமுன் செல்வப்பிள்ளக்கு அணிவிக்கப்படுகிறது. உத்சவருக்கு அணிவிக்குமுன் இதனைப்பார்க்கக்கூடாதாம். ஆதலால் அர்ச்சகர் தன் கண்களில் துணிகட்டிக்கொண்டு செல்வப்பிள்ளைக்கு இதனை அணிவிக்கிறார். செல்வப்பிள்ளையின் சிரசின்மீதுதான் இதனை யாரும் பார்க்கவேண்டும். உத்சவம் முடிந்தபின் பட்டுத்துணியால் சுற்றப்பட்டு செல்வப்பிள்ளையின் சிரசிலிருந்து ஜாக்ரதையாக அகற்றப்பெற்று மிகுந்த பாதுகாப்புடன் மைசூர் கருவூலத்திற்கு (அந்தக்காலத்தில் ராஜாவின் கருவூலம்) அனுப்பப்படுகிறது. இந்தமுறை இப்போதும் நீடிக்கிறது. இத்தகைய புகழ்பெற்ற வைரமுடி புராணகாலத்தைச் சேர்ந்தது என்கிறது வைஷ்ணவ குருபரம்பரைக் கதை. அதனைக் கொஞ்சம் பார்ப்போம்:

ஒரு காலத்தில், வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனின் வைரக்கிரீடம், அவன் சயனித்திருக்கையில் திருட்டுப்போய்விட்டது! யார் இந்த துஷ்ட வேலையைச் செய்தது? விரோச்சனன் என்கிற அசுரர்களின் மன்னன். யார் இவன்? பக்த ப்ரஹலாதனின் புதல்வன். விஷ்ணுவின் பரமபக்தனான ப்ரஹலாதனுக்கு இப்படி ஒரு பிள்ளை! நாராயணன் ஜாஸ்தி அலட்டிக்கொள்ளவில்லையோ! விஷ்ணுப்ரியர்களான தேவர்களால் இதனைத் தாங்கமுடியவில்லை. கருடபகவானை அழைத்து ‘நீர் போய் அந்த விரோச்சனனை வென்று மீட்டுக்கொண்டுவாரும் வைரமுடியை!’ என்று கேட்டுக்கொண்டனர். கருடனும் பெருமாள் அனுமதிபெற்று ராட்சசலோகம் சென்றார். நீண்டகாலம் நடந்த பெரும்போரில் விரோச்சனனை ஒருவழியாக வென்றார். திருமாலின் வைரமுடியோடு திரும்பிக்கொண்டிருந்தார்.
வைரமுடியில் ப்ரதானமாக இருந்த ஒரு நீலமணி அவர் வருகிற வழியில் கீழே விழுந்துவிட்டது. அந்த நீலமணி பூமியில் விழுந்த இடம் கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நாச்சியார் கோவில். நீலக்கல் விழுந்த இடத்தில் ஆறு ஒன்று புறப்பட்டு திடுதிடுவென ஓட ஆரம்பித்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் ஓடும் மணிமுத்தாறுதான் அது என்கிறது புராணம்.

கருடன் திரும்பி வந்துகொண்டிருக்கையில், பிருந்தாவனத்தைக் கடந்துகொண்டிருந்தார் ஒரு பகற்பொழுதில். கீழே பார்த்தால் கிருஷ்ணன்! தன் நண்பர்களுடன் வெயிலில் விளையாடிக்கொண்டிருந்தான். நாராயணன் அல்லவா இது! வெயில் இவர்மேல் தாக்குமோ என நினைத்துத் தன் பிரம்மாண்டமான இறக்கைகளை பிருந்தாவனத்தின் மீது விரித்து மையம்கொண்டார் கருடன். நிழல் படர்ந்தது பிருந்தாவனத்தில். பின்னர் கீழிறங்கி தான் கொண்டுவந்த வைரக்கிரீடத்தைக் கிருஷ்ணனுக்கு அணிவித்து வணங்கினார். மனிதரூபத்தில் இருந்த கிருஷ்ணனோ அதனைத் தான் வணங்கும் நாராயண விக்ரஹத்துக்கு (புராணகாலத்தில் ராமப்ரியா -தற்போது செல்வப்பிள்ளை) அணிவித்து மகிழ்ந்தானாம். இப்படியாக மேலக்கோட்டைப் பெருமாளிடம் வந்துசேர்ந்ததாம் இந்த வைரமுடி.

கோவிலுக்கு வெளியே வந்தோம். எங்கள் காரை எங்கே பார்க் செய்திருக்கிறார் ஒட்டுனர் எனத் தெரியவில்லை. ஒன்றும் அவசரமில்லை என வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சீதோஷ்ணநிலை ப்ரமாதமாக இருந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் வந்தது ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம். அதற்கடுத்தாற்போல், ராமானுஜருக்குப்பின் வந்த வைஷ்ணவ ஆச்சாரியர்களுள் முக்கியமானவரான ஸ்வாமி மகாதேசிகனின் சன்னிதி இருந்தது. சன்னிதி திறந்திருந்ததால் படியேறி உள்ளே சென்றோம். மிகவும் வயதான அர்ச்சகர் சன்னிதியில் அன்புடன் வரவேற்றார். ஸ்வாமி தேசிகன் மிகவும் அழகான தோற்றத்தில் காட்சி அளித்தார். ஆச்சாரியனுக்கு தீபாராதனை செய்துவிட்டு, தீர்த்தம், துளசி தந்தார் பெரியவர். அவருடைய கனிவு கண்டு கொஞ்சம் பேசலாம் எனத் தோன்றியது. அவரிடம் ஸ்வாமி தேசிகன் ராமானுஜரைப்போலவே மேலக்கோட்டை வந்து தங்கியிருந்திருக்கிறாரா என்று கேட்டேன். ‘இல்லை. தங்கியிருக்கவில்லை. ஆனால் வந்திருக்கிறார். இந்த ஸ்தலத்தை ஸ்லாகித்திருக்கிறார். ஒரு ஸ்லோகத்தில் மேலக்கோட்டையைப்பற்றிக் குறிப்பிட்டு ‘எல்லா விசேஷங்களும் கொண்ட உன்னத ஸ்தலம்’ எனப்பொருள்படும்படி பாடியிருக்கிறார் என்றார். அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் கடைசிவரியைப் பாடியும் காட்டினார் பெரியவர். அடியேனின் அஞ்ஞானத்தில் என்ன பெரிதாகப் புரிந்துவிடப்போகிறது? அர்ச்சகர் ஸ்வாமியிடம் விடைபெற்று வெளியே வந்தோம்.

கொஞ்சதூரத்தில் பக்தர்களுக்கான தங்கும்விடுதி ஒன்று காணப்பட்டது. தெருவோரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறுகடைகள். சாலையில் சில அந்தணர்கள் – மேலக்கோட்டை ஐயங்கார்களாக இருக்கும் – நெற்றியில் பளிச்சென்ற நாமத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அக்ரஹாரத் தெருவாக இருக்கும் எனப்பட்டது. தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துவிட்ட ஓட்டுனர், வண்டியை எடுத்துக்கொண்டுவந்து நிறுத்தினார். கிளம்பினோம். உயரத்திலிருந்து கவர்ந்திழுக்கும் இன்னுமொரு பழங்காலக் குன்றுக்கோவிலை நோக்கி. யோகநரசிம்ஹ ஸ்வாமியைத் தரிசிக்கவேண்டாமா ?

(தொடரும்)

**