கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. நண்பர் ஸ்ரீராம் மூலம் தெரிந்துகொண்டபின்னரே, ஜெயமோகன், சிலிகான் ஷெல்ஃப் தளங்கள் சென்று சற்றுமுன் பார்க்க நேர்ந்தது. 24/8/2021 – ஆம் தேதியே இது அறிவிக்கப்பட்டுள்ளது ஜெயமோகனின் தளத்தில்.
சுமார் 40 வருட காலம் கவிதையில், கவிதை வெளியில் மட்டுமே பிரதானமாக இயங்கிவரும் ஒரு உன்னதக் கலைஞனுக்கு அங்கீகாரம், பாராட்டு என உரக்கச் சொல்லும் ஒரு விருது என்பது மனதிற்கு சந்தோஷம் தருகிறது. காலை நன்றாக விடிந்தது. தமிழ்நாட்டில் வெளிச்சம் பரவினால் நல்லது…
சரி, கொஞ்சம் விக்ரமாதித்யன், அவரது ’சுடலைமாடன் வரை’ தொகுப்பிலிருந்து. என்ன இது – பாம்பு.. பாம்பு என அலறுகிறாரா.. குதூகலிக்கிறாரா ? :
’இன்று இங்கு வந்திருக்கிறேன்’, ‘டார்ச்சர்’ என்கிற தலைப்புகளில் என் இரு கவிதைகள் ‘பதாகை’ இணைய இலக்கிய இதழில் (23 ஆகஸ்டு, 2021) வெளிவந்திருக்கின்றன. வாசகர்கள், குறிப்பாக கவிதாப்ரியர்கள்(!) பதாகையில் வாசிக்க, கீழே தந்திருகிறேன் லிங்க்:
விக்ரமாதித்யன் நம்பி என ஆரம்பத்திலும், இப்போது விக்ரமாதித்யன் எனவுமே அறியப்படும் தமிழுக்கு நேர்ந்த, தேர்ந்த சமகாலக் கவிஞன். படிமங்கள், உருவகங்கள் எனச் சுமைதாங்கி வராமல், பேச்சுமொழியின் சாதா வார்த்தைகளாலேயே சாகசம் காட்டும் வரிகளைத் தந்துவரும் ஆளுமை. சில சமகால இலக்கியப் பெரிசுகளுக்கு (அப்படித் தங்களை வரித்துக்கொண்டு அழகு பார்க்கும் அசடுகளுக்கு) நேரடிமொழியில் வளர்ந்தது கவிதையேயில்லை எனத் தோன்றுகிறது போலும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவரவர் இலக்கியவிதிவழி அவரவர் செல்கின்றனரே!
விக்ரமாதித்யனின் சில கவிதைகளை இங்கே ப்ரிய வாசகர்களுக்காகத் தருகிறேன்..:
நான் யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை
வசந்தம் தவறியபோதும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையில் வன்கொலைச் சாவுக்கு இடமில்லை
வெயில் காயும் மழை புரட்டிப்போடும் அல்பப் புழுக்களும் வாழ்ந்து கொண்டிருக்காமல் இல்லை
(குறுங்கவிதைகள் ‘கிரகயுத்தம்’ எனும் விக்ரமாதித்யனின் தொகுப்பிலிருந்து).
கவிஞர் விக்ரமாதித்யன்
எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் முனைப்பில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்போது அமேஸான் தளத்தில் கிடைக்கிறது இலவசவாசிப்புக்கென, விக்ரமாதித்யனின் கவிதை மின்னூல்கள். அந்த வரிசையில் விக்ரமாதித்யனின் சிறுகதைத் தொகுப்பொன்றும் இப்போது இலவச வாசிப்பில் இருக்கிறது : 25-8-2021. பகல் 11:29 வரை(IST). பெயர்: ‘அவன் அவள்‘. 16 சிறுகதைகள் உள்ளன. அமேஸான் அக்கவுண்ட் இருக்கும் வாசகர்கள், கூடவே அமேஸான் தளத்தின் ‘Free Kindle app’-ஐத் தரவிறக்கம் செய்திருந்தால், இலவசமாக மின்னூலைத் தரவிறக்கம் செய்து இந்த சிறுகதைத் தொகுப்பை ஆனந்தமாக வாசிக்கலாம்.
அமேஸானில் விக்ரமாதித்யனின் மின்னூல்கள் இலவசமாக சில நாட்களுக்குக் கிடைப்பதுபோக, மற்ற நாட்களில் உலகெங்கும் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமேஸான் மின்னூலின் மிகக் குறைந்த விலையான ரூ.49/-க்கே அவை இனி கிடைக்கும் என எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனிடமிருந்து தற்போது தகவல் கிடைத்ததால் இங்கே சேர்க்கிறேன், வாசகர்களின் வசதிக்காக.
’கசடதபற’ சிற்றிதழ் (ஆகஸ்ட் 1971, எண்.11) மின்னூலாக இப்போது அமேஸான் தளத்தில் இலவச வாசிப்புக்கு/ தரவிறக்கத்திற்குக் கிடைக்கிறது. இந்த இதழில் கீழ்க்கண்ட பங்களிப்புகள்:
நிலம், நீர், ஆகாயம் – ஐராவதம்
சரித்திரத்தினிடையில் ஒரு கலாவியக்தி – வெங்கட் சாமிநாதன்
வெற்றி – ப. கங்கைகொண்டான்
பிரிவுகள் – கலாப்ரியா
காலம் – பாலகுமாரன்
பேர் தெரியாத குடிமகனுக்கு – ஆங்கில மூலம்: W.H. ஆடன்
A Confession – கண்ணம்மா
திரைகளுக்கு அப்பால் – வெங்கட் சாமிநாதன்
அக்கம்பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி
மேற்கண்ட கிண்டில் மின்னூலின் விலை: ரூ.49.
இலவசமாகக் கிடைக்கிறது இப்போது:
13-08-2021 பகல் 12:30-லிருந்து, 15-08-2021 பகல் 11:29 வரை (இந்திய நேரம்)
ஜெர்மனியின் ஜோஹனஸ் வெட்டர் (Johannes Vetter) எனும், உலக ’ஜாவலின்’ (Javelin) ஆட்டத்தின் சூராதி சூரர், டோக்யோ ஒலிம்பிக்ஸின் ஆரம்பத்தில் இந்தியாவின் இளம்புயல் நீரஜ் சோப்ராவைப்பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்: ”சோப்ரா திறமையானவர்தான். ஆனால் என்கிட்டே நெருங்கமுடியாது. நான் 90 மீட்டர் எறிபவன்!” இந்தப் பேச்சை தடகள உலகில் யாரும் அலட்சியம் செய்யவில்லை. ஏனெனில் வெட்டர் இந்த வருடம் (வெவ்வேறு போட்டிகளில்) ஈட்டி எறிதலில் 90 மீட்டர் எனும் சாதனையை 7 முறை கடந்தவர். ஒலிம்பிக் ஜாவலின் தங்கம் ஜெர்மனிக்குத்தான் என்பது ஏற்கனவே ஒலிம்பிக் தடகள உலகில் தீர்மானமாகிவிட்டிருந்தது! புதிதாகச் சுற்றித் திரியும் இந்திய இளைஞன் நீரஜ் சோப்ராவுக்கும் ஏதாவது கிடைக்கலாம் என்பதுபோன்ற நிலை.
கேள்விக்குறி, ஆச்சரியக்குறியோடு உலகம் நீரஜ் சோப்ராவைப் பார்த்துக்கொண்டிருந்தது நேற்று (ஆகஸ்ட் 7, 21) டோக்யோவின் ஒலிம்பிக் மைதானத்தில். மற்றவர்களெல்லாம் மூச்சு இழுத்துக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஓடிவந்து ஈட்டி எறிந்துகொண்டிருந்தனர். 79 மீட்டரிலிருந்து 84 வரைதான் அவர்களால் அதுவரை முடிந்தது. அப்போதுதான் இறங்கினார் களத்தில் நீரஜ். ஜாக்கெட்டை கழட்டி வீசினார். ஈட்டியைக் கையில் எடுத்தார். பார்த்தார் ஒரு கணம். தடதடவென ஓடிவந்து வீசினார். போய் விழுந்தது 87 மீட்டர்தாண்டி. மைதானத்தில் பற்றியது தீ!
Gold getting ready…
87+ மீட்டர் தூரமா? ஆ! யார் இதை வீழ்த்துவது.. இதென்ன கேள்வி? வெட்டர்தான். அவர் போட்றுவாரு 90 என்று முணுமுணுத்தது டோக்யாவில் கால்நீட்டி, தொடைதட்டி உட்கார்ந்திருந்த ஒலிம்பிக் பெரிசுகள் கூட்டம். வெட்டர் வந்தார். அலட்சியமாக ஓடி எறிந்தார் ஈட்டியை. என்ன! 79 மீட்டர்தானே வந்திருக்கு.. முதல் ரவுண்டிலேயே இன்னும் இருக்கிறது 2 சான்ஸ்.. வந்தார். போட்டார்.. போட்டார். ம்ஹூம்.. 84- மீட்டர் தூரத்தையே தாண்டமுடியவில்லை.
ஆளுக்கு 3 முயற்சிகள் செய்த முதல் ரவுண்டிலிருந்து வடிகட்டியபின், தங்கத்துக்கான ஃபைனலின் கடைசி ரவுண்டில், உலகின் 8 டாப் வீரர்கள். ஆனால்… லிஸ்ட்டில் வெட்டரின் பெயர் இல்லை! குட்டி நாடான மால்டோவாவும், ஃபின்லாந்தும் ஜெர்மனியின் வெட்டரை விட அதிகத் தூரம் வீசியதால் உள்ளே! ஒலிம்பிக்கில் தன் முதல் பதக்கத்துக்காக ஏங்கிய பக்கத்துவீட்டு பாகிஸ்தானின் தடகள வீரர் நதீமும் அந்த லிஸ்ட்டில். நிச்சயத் தங்கத்தை எதிர்பார்த்திருந்த ஜெர்மனி அயர்ந்தது. தனது இன்னொரு வீரர் முதல் ரவுண்டில் 85+ வீசியவர், இறுதி ரவுண்டில் இருப்பது கொஞ்சம் ஆசுவாசம் தந்தது ஜெர்மனிக்கு. ஆனால் செக் குடியரசின் (Czech Republic) இரண்டுவீரர்கள்வேறு, 85+ -ல் மிரட்டுகிறார்களே. இந்த இந்தியன் வேற புகுந்துட்டான்.. சே..
முதல் ரவுண்டும் (வீரருக்கு தலா 3 வாய்ப்புகள்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறுதி ரவுண்டிலும் மேலும் 3 வாய்ப்புகள், டாப்-8 பேருக்குக் கிடைத்தன. ஃபைனலின் மொத்தம் 6 முயற்சிகளில் எது ஒரு வீரரின் ஆகச் சிறந்ததோ அதுவே பதக்கத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படும். வீரர்கள் முயற்சித்தார்கள். முன்பைவிடக் குறைவாகச் சிலரும், கொஞ்சம் கூட எனச் சிலரும் எறிந்தார்கள். சில முயற்சிகள் ஃபௌலில் முடிந்தன. இறுதி ரவுண்டின் இரண்டு முயற்சிகளில், நீரஜ் சோப்ராவும் ஃபௌல் ஆனார். ஆனால், அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இறுதி வாய்ப்பு ஒன்று அவருக்கு பாக்கி இருந்தது. ஆனால் அதை முயற்சிக்கவேண்டிய அவசியமே இல்லாமல் மற்றவர்கள், தங்களது மொத்தம் தலா ஆறு முயற்சிகளில் 86+ மீட்டருக்குக் கீழேயே சுருண்டுவிட்டார்கள். முதல் 3 வாய்ப்புகளில், 87.03, 87.58, 76.79 என வீசியிருந்தார் சோப்ரா. 87.58 மீட்டர் எறிந்து முதல் ரவுண்டிலேயே போட்டுச்சாத்திய தூரம் – இறுதியில் இந்தியத் தங்கத்துக்குப் போதுமானதாக இருந்தது!
செக் குடியரசின் இருவீரர்கள் – யாகுப் வத்லேஷ் (Jakub Vadlejch), விதேஸ்லாவ் வெஸிலி (Vitezslav Vesely) வெள்ளி, வெங்கலப்பதங்களை முறையே வென்றார்கள்.
2008-ல் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் 10-மீ.துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்காக தங்கம் வென்றார். அதற்கப்புறம், தனிவீரர் ஒருவரின் தங்கமாக (individual gold medal) இதுவே இந்தியாவுக்கு இரண்டாவதாகும். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் முதல் தங்கம் இந்தியாவுக்கு நீரஜ் சோப்ராவினால் கிடைத்துள்ளது.
தன் நாட்டுக்காக கர்வமிகு ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய நீரஜ் சோப்ரா, தான் வென்ற பதக்கத்தை சமீபத்தில் மறைந்த இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்கிற்கு அர்ப்பணிப்பதாகக் கூறியது எல்லோரையும் நெகிழவைத்தது. 1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக்ஸில் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மில்கா சிங், மயிரிழையில் 4-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, வெங்கலப் பதக்கத்தை இழந்தார். ஆயினும் இந்தியத் தடகள வரலாற்றில் மறக்கமுடியாத ஆளுமையாகக் கருதப்பட்டு போற்றப்படுபவர் பத்மஸ்ரீ மில்கா சிங். (மில்கா சிங்கின் அதுபோன்ற விதியே இந்திய வீராங்கனை PT உஷாவுக்காகவும் 1984 லாஸேஞ்சலிஸ் ஒலிம்பிக்ஸிலும் காத்திருந்தது விளையாட்டு ரசிகர்களுக்கு சோர்வு மிகத்தந்த விஷயம்.)
ஹரியானாவில் ஒரு விவசாயியின் மகனான நீரஜ் சோப்ரா, 23 வயதிற்குள், கடந்த சில ஆண்டுகளில் சர்வதேசப்போட்டிகளில் (South Asian Games, Commonwealth Games, Asian Games, World Junior Athletic Championships) பங்கெடுத்து தங்கம் வென்ற சூரர். இந்திய ராணுவத்தில் ஒரு இளநிலை அதிகாரி. பிரதமர், ஜனாதிபதி எனப் பலரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன இந்தியாவின் புது ஹீரோவுக்கு. இந்திய நாட்டின் மற்றும் இந்திய ராணுவத்தின் வீரதீரக்கொடியை உலக உச்சத்தில் பறக்கவிட்டதற்காக நீரஜ் சோப்ராவை மனமாரப் பாராட்டியிருக்கிறார் இந்திய முப்படைக் கூட்டமைப்பின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் (Gen. Bipin Rawat). ஜெர்மன் வீரர் வெட்டரும், கூடவே இந்திய விளையாட்டுப்பிரபலங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் சோப்ராவுக்கான புகழ் அர்ச்சனையில்..