வதனமே சந்திர பிம்பமோ..

மயக்கும் மாலையின் மகத்தான ஆட்சி
மயங்கும் சிறிசுகளின் மனமோகனக் காட்சி
ஆணின் பெண்ணின் அழகுறு மாட்சி
அருகிருக்கும் மரங்களே அனைத்திற்கும் சாட்சி

**

எங்கே நிம்மதி ?

வாழ்க்கை வினைகளின் முழு வார்ப்பு
வரும் இன்பதுன்பங்களின் இடையறா தொகுப்பு
பிணி, மூப்பு, மனமெலாம் காழ்ப்பு
பிடியைவிட்டு விலக வருமா வாய்ப்பு?

**

மீள்ஜென்மம்

நான் இறந்துவிட்டது
அவளுக்குத் தெரியுமா
கவலையோடு கேட்கிறாய்
நீ இருந்ததே தெரியாதே
முன்பு இருந்ததும்
இப்போது இல்லாமல்
இருப்பதும்
அவளுக்கு எங்கே புரியப்போகிறது
அவள் வாழ்க்கை அவளுக்கு
உன் கவலை உனக்கு

**

கைகூப்பியும் . .

கையறு நிலையில்
கையேந்தி நிற்கிறாயே சாலை ஓரம்
கைம்பெண்ணோ நீ
கையாலாகா உறவினர்
கைவிட்டுவிட்டனரா
கைதூக்கிவிடும் கடவுளையும் காணோமே
கைவசம் இல்லையா கருணை அவனிடமும்?

**

பச்சைத் துரோகம்

நேற்றுத்தான் பார்த்தேன் மாலையில்
பூத்தும் காய்த்தும் குலுங்கிக்கொண்டிருந்தாய்
உரசும் உடன் இழையும் இளங்காற்றுடன்
உல்லாசமாய் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தாய்
பலவாறாக உன்னிலிருந்து தொங்கும் காய்களை
பதம் பார்த்துப் பறித்துப் போயிருந்தனர்
சமைத்து சுவைத்து மகிழ்ந்திருப்பர்
சரிதான் பாதகம் இல்லை ஒன்றும்
அடுத்த மாலை உனைப்பார்க்க
ஆசையோடு திரும்புகையில்தான்
அதிர்ச்சிமின்சாரம் அடிவயிற்றில் தாக்கியது
அரிவாளுடனும் கோடரியுடனும் எப்போது வந்தார்கள்
அடுத்த நாள் காலையிலா இல்லை அர்த்த ராத்திரியிலேயா
அள்ளித் தின்ற சோறும் காயும் ஜெரிப்பதற்கு முன்னமேயா

அந்தப் பாறை

அதோ எதிரில் தெரிகிறதே அந்தப் பாறை
அதைப்பற்றி என்ன பெரிதாக நான் சொல்லிவிட முடியும்
அது எவ்வளவு கறுத்துப் பெருத்து இருக்கிறது
வடிவமில்லா வடிவில் இருக்கிறது
காலதேவனின் விரல் வருடல்களாய்
அதன் மேல் தெரியும் சிறு வெடிப்புகள்
அதன் மீது பொறியும் மதியநேரத்து வெயில்
அதன் மேலே கவிந்திருக்கும் நீல நெடும் வானம்
அதனடியில் வெடித்துக் கிளம்பியிருக்கும்
சின்னஞ்சிறு செடிகள்
அதில் ஒன்றில் பூத்திருக்கும் குட்டி வெள்ளைப்பூ
பாறையினடியில் ஊரும் சிற்றெரும்புகள்
அவற்றின் ஓயாத தேடல்கள் வாழ்க்கைப் பிரச்சினைகள்
என்றெல்லாம் சொன்னாலும்
சொல்லிவிட முடிகிறதா எல்லாவற்றையும்
இன்னும் எத்தனையோ சங்கதிகள்
கல்லுக்குள் தேரையாக
காலத்தின் அதிரகசியங்கள்
அதனுள் உறைந்து மறைந்து கிடக்கின்றனவே
அதுவே வாயைத் திறந்து சொன்னாலொழிய
பெரிதாக என்ன நான் கூறிவிடமுடியும்
அந்தப் பாறையைப் பற்றி

**