தாக்கும் வெப்பத்தில் நடுக்கும் குளிர்

வார்த்தைக்கு வார்த்தை
பேச்சுக்குப் பேச்சு
ஒரு வாக்குவாதம்
சில சமயங்களில் சீரிய தர்க்கவாதம்
பல நேரங்களில் வெறும் விதண்டாவாதம்
எப்பவும் இப்படித்தான் என்னோடு
வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறது
எனக்கு வந்துவாய்த்த
வாழ்க்கை எனும் வம்பு
இருந்தும் அதை
விட்டகலத் துணிச்சலில்லை
விடாது தொடரவும் முடியவில்லை
இருதலைக்கொள்ளி எறும்பே
ஏதாவது செய்ய விரும்பேன்

**

முடிவற்ற சோகம்

நீரால்தான் நிரம்பும் ஏழையின் வயிறு
நீர்தான் எப்போதும் கண்களில்
நீர்த்துப் போய்விட்டது அவன் வாழ்க்கை
நீர் சொன்னது சரிதான்
நீராலானதுதான் உலகம் எனினும்
நீரேறி வந்த படகு
நிலம் காணவில்லை

**

சுஜாதா

ஓயாது அவதானித்தவனின்
உணர்ச்சிப் பிரவாகத்தைப்
பின்னிருந்து ரகசியமாய் ரசித்தது
மொழியின் முடிவில்லா வழிமீது
விழிவைத்துப் பார்த்து
எழுதி எழுதி ஏங்கியிருந்தவனை
தோளில் மெல்லத் தொட்டது ஒரு நாள்
கூடவரச் சொல்லிக்
கூட்டிப்போய்விட்டது
காலமுழுதும் தேடிக்கொண்டிருந்த
களைப்பறியாக் கலைஞன்
கிடைத்துவிட்ட திருப்தியில்
காலம்
**

உள்ளே உறைவது

பாட்டிலின் மூடி கைநழுவிக் கீழே விழுந்தது
உருண்டோடி மறைந்தது
பக்கத்தில்தான் கிடக்கும் சனியன் என்று
கட்டிலுக்கடியில் இப்படியும் அப்படியும் துழாவினேன்
கையை உள்ளே உள்ளே இழுத்தது மூடி
கூட்டப்படாத குப்பைகள் ஏகமாக சிக்கின
மூடியின் முகவரிமட்டும் தெரிந்தபாடில்லை
ஒருவழியாக என்னை நாற்காலியிலிருந்து
இறக்கி இடுப்பில் வலிகொடுத்து
இருட்டில் துழாவவைத்தபின்தான் தெரிந்தது
தூரத்துக் கடலில் ஒரு தோணிபோல
சிணுங்கி அமர்ந்திருந்த அந்தச் சின்ன மூடி
எரிச்சலில் ஒரு லாவு லாவியதில்
கைக்குள் சிக்கியது
ஜடப்பொருளாயிருந்தாலும்
அததுக்குள் இருக்கும் விஷமம் இருக்கிறதே
அப்பப்பா.. சொல்லி முடியாது

**

2 0 1 5 !

அன்பர்களே! இந்த நள்ளிரவில் இரண்டு கைகளாலும் பெற்றுக்கொண்டு மனதில் இனிதே இருத்திக்கொள்ளுங்கள் : புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

வைகுண்ட ஏகாதசி அன்று மங்களகரமாகப் பிறந்துள்ளது 2015. ஆண்டவனின் அருள் அனைத்துயிர்க்கும் வரும் நாட்களில் அபரிமிதமாகக் கிட்டட்டும். வன்முறைகள் – அவற்றின் பரிமாணம் எதுவாக இருப்பினும், குறிப்பாகப் பெண்களுக்கெதிரான வக்கிரங்கள், வன்மங்கள் அடியோடு ஒழிந்திட அவனுடைய கருணை உடனே கிடைக்கட்டும்.

எமது நாட்டிலும், உலகெங்கும் மனிதகுலத்துக்கும், மற்றெல்லா உயிர்க்கும் அமைதி, அன்பு, நல்வாழ்வு அருளி, கால்நீட்டிப் படுத்துக் களித்திடுவாய், காலமெலாம் எமையெல்லாம் படைத்துக் காத்தருள்பவனே, பரந்தாமா !

**