காந்தி talks ?

மய்யம் என்ற ஒன்றை ஆரம்பித்து ஒரு மையமில்லாது போய்விட்ட ’உலக நாயகன்’, ஒரு கலைஞனாக மட்டும் மிளிர்ந்த காலகட்டம். துல்லியமாகச் சொன்னால் 1987 – இங்கே ஃபோகஸுக்கு வருவது. தெற்கு டெல்லியின் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியம் என்று நினைவு. நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. ஒன்றில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. புஷ்பக் – வடநாட்டு ஆடியன்ஸுக்கு. தெற்குப்பக்கம் அதன் பெயர் பேசும்படம்,  புஷ்பக விமானம் இப்படி. குறிப்பாக கன்னடப் பிரதேசத்தில் மட்டும் 25 வாரங்களைத் தாண்டி அட்டகாசம் செய்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய கமல் ஹாசன் படம். பெங்களூரின் சில இடங்களில் அமைக்கப்பட்ட சுவாரஸ்யக் காட்சிகள். வேலைவெட்டி இல்லா கமலைவிட தன்னிடம் அதிகம் உண்டு காசு என அமர்ந்திருக்கும் சாக்கைத் தூக்கிக் காட்டி சீண்டும் அந்த விஷமப் பிச்சைக்காரன் காட்சிப்படுத்தப்பட்ட இடம் – பெங்களூரின் வின்ஸர் மேனர் ஹோட்டல் அருகில். அமலாவின் அமெரிக்கையான அழகும்,  பாலிவுட்டின் (தூர்தர்ஷனின் ‘நுக்கட்’ சீரியல் புகழ்) சமீர் கக்கர், டினூ ஆனந்த் (ஐஸ் கத்தியோடு மிரட்டும் காமிக்கல் வில்லன்!) ஆகியோரின் நடிப்பும் அதகளம் செய்த ஒரு கனாக்காலத்தின் திரைவெளி. ‘ஒரு பிரேதத்தைச் சுற்றிக் காதலை வளர்த்திருக்கிறீர்களே.. படம் பார்க்க விரும்புகிறேன்!’ – என்று சிங்கீதத்திடம் சொன்னாராம் சத்யஜித் ரே.

இந்தப் புஷ்பக்கின் நினைவு காலையில் ஏன் தீண்டியது? காரணம்.கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishor Pandurang Belekar)! மராத்தி திரைமுகமான அவர் இயக்கியிருக்கும் காந்தி டாக்ஸ் (Gandhi Talks – காந்தி பேசுகிறார்). புஷ்பக் (பேசும்படம்) போல வசனமில்லாப் படம்- வெகுநாட்களுக்குப் பிறகு இந்தியத் திரைகளில். A dark comedy. இப்போதைய தலைமுறையினரில் புஷ்பக் போன்ற வித்தியாசமான, அழுத்தமான நடிப்புப் பங்களிப்புகளைத் தந்த படங்களைத் தேடிப் பார்ப்பவர்கள் குறைவு. அப்படி ஒரு படமும் எண்பதுகளில் வந்தது என்பதே பலருக்குத் தெரியாது. இந்தக் காலத்துக்கேற்றபடி ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணிகொண்டு கொஞ்சம் ட்ரெண்டிங்காக, பலர் தன்னை சம்பந்தப்படுத்திப் பார்க்கப் பொருத்தமாக ஒரு படத்தை எடுத்து வெளியே விட்டால் என்ன என்று பெலேகர் & கோ (Zee Studios /  Kyoorious Digital) கொஞ்சம் மற்றோரிடமிருந்து வேறுபட்டு யோசித்ததின் திரைவிளைவு காந்தி டாக்ஸ். ம.செ. விஜய் சேதுபதி, அதித்தி ராவ், அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதவ் போன்றோர் வார்த்தையின்றி, உடல்மொழி மட்டுமே கொண்டு ஜாலம் காட்டியிருக்கிறார்களா? எப்படி! பார்த்தால்தான் தெரியும் படமும், அது செல்லும் தடமும். இந்த வருடம் திரையில் ஒளிரும்..

**

விக்ரம் – Just a chartbuster ?

ஃபினாமினல், ப்லாக்பஸ்ட்டர், சார்ட்பஸ்ட்டர் என்றெல்லாம் ஒரு படத்தின் ‘வெற்றி’யைப்பற்றிப் பிரஸ்தாபிப்பது என்பது, அது அள்ளிக்கொடுத்த பண விஷயத்தைப் பிரதானமாக வைத்துத்தான், பொதுவாக. 200 ஐத் தாண்டிருச்சா, என்ன.. 400-க்கும் மேல போய்க்கிட்டிருக்கா! – போன்ற ஆஹா.. ஓஹோக்கள் திரைப்படம்பற்றிய கமர்ஷியல் ஆங்கிள் பிரமிப்புகளே. வியாபாரமாகவே உருமாறிவிட்ட உலகில், வியாபாரம்பற்றித்தானே எப்போதும் பேசுவார்கள்? குதிப்பார்கள்? அதில் தவறென்ன சொல்லமுடியும்.

விக்ரம் (2022)

இந்தப் படத்தை நான் பார்க்க விரும்புவது குறிப்பாக ஃபஹத் ஃபாஸில் (Fahadh Faasil), விஜய் சேதுபதி நடிப்பிற்காக. ஆங்காங்கே இவர்கள் இருவரின் பங்களிப்புபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதால். மேலும், லோகேஷ் கனகராஜ் அவ்வளவு நல்ல இயக்குனரா என்ன? சினிமாவை ஒரு கலானுபவமாக, அதாவது ஒரு சீரியஸ் மீடியம் என அவதானித்து, ‘செலெக்ட்’ படங்களாகப் பார்த்துவருவதால்தான், இவ்வாறான சிந்தனை. விக்ரம் ஒரு ஆர்ட் படமல்ல. ஒரு சத்யஜித் ராய், மிருணாள் சென், அரவிந்தன் படத்தைப்போல் திரையில் இழையும் கவிதையல்ல என்பது தெரிந்ததே (தினத்தந்தி மன்னிக்க)! வணிகமே இதிலும் குறிக்கோள் எனினும், கலைக்கோணத்தில் சிறந்த நடிப்பு, இயக்கப் பங்களிப்புகள் உண்டோ இந்தப் படத்தில் எனத் தெளிவாவதில் ஒரு சந்தோஷம். படத்தை நிதானமாக உட்கார்ந்து பார்த்தால்தான் இந்த விஷயங்களைப்பற்றி அறிய நேரும். கூடவே, கமல் அங்கிளின் நடிப்புத் திறன் அப்படியே இருக்கா, இல்லை, ஒருமாதிரி ‘மய்ய’மாகப் போய்விட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள! ஏனெனில், வெறுமனே சுஹாசினி தன் சித்தப்பாபற்றி வானளாவ சொல்லும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு திருப்திப்பட்டுக்கொண்டிருக்கமுடியாதே..

**

99 Songs

தொண்ணூற்றி ஒன்பது பாடல்கள்? ஏன் ஒன்னு கொறஞ்சு போச்சா? – என அசட்டுத்தனமாகக் கேட்கவேண்டாம். ஏப்ரல் 16-ல் திரையரங்கிற்கு வரவிருக்கும் (கொரொனா சனியன் வேற!) ஒரு romantic musical  படத்தின் பெயர் இது. கதை? நூறு பாடல்களை  அந்த வாலிபன் எழுதவேண்டுமாம்.. சிலதையாவது பாடிக் காண்பிக்கவேண்டியிருக்குமோ.. அப்போதுதான் காதலியை அடையலாமாம். என்ன ஒரு வில்லத்தனமான கண்டிஷன், அதுவும் இந்தக் காலத்தில்! ஸ்டார்பக்ஸின் குளுகுளுவில் உட்காரவைத்து, குக்கீஸோடு ஒரு கப்புச்சினோ வாங்கிக் கொடுத்தால், அல்லது ஹாக்கி போக்கி (Hokey Pokey), கொரமங்கலாவுக்கு அழைத்துப்போய், மூலையில் உட்காரவைத்து ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்து அவள் அழகை அருகிருந்து தரிசித்தால்.. போதாதா? காதலி மயங்கமாட்டாளா, கிடைக்கமாட்டாளாமா? ஒருவேளை சராசரித் தமிழ்ப்பெண்ணோ? ஃபேமஸ் தியேட்டர் ஒன்றின் பக்கம் தள்ளிக்கொண்டுபோய்.. ஒரு விஜய் படம் அல்லது அஜீத் படம்? என்ன, இதெல்லாமும் பிடிக்காதாமா.. என்ன ஒரு கஷ்டம்? 100 பாடல்களை முதலில் எழுதிக் காமிடா நீ.. என்றால் என்ன அர்த்தம்? ஹீரோவைக் களேபரப்படுத்தித் திக்குமுக்காடவைக்கத் திட்டமா?

சங்கீதப்பைத்தியமான அந்த வாலிபன் பக்குவப்படப் பக்குவப்பட, அவனது பாடல்களும் மாற்றம் காண்கின்றன. அவன் தரும் இசையும். காதலி எப்படி எதிர்கொள்கிறாள்? பெயருக்கேற்றபடி துள்ளும் பாடல்களோடு காதல் கதை என்பது நிச்சயம். எஹான் பட் (உச்சரிப்பைக் கவனிக்கவும்: Ehan Bhat) என்கிற, முதன்முறையாக, திரையில் எட்டிப் பார்க்கப்போகும், குரல் கொடுக்கும் காஷ்மீரி இளைஞன் ஒருவன் நாயகன்!

Ehan Bhat with A.R. Rahman
ரஹ்மானுடன் எஹான் பட்

ரஹ்மானின் திட்டத்தில் தான் வந்ததெப்படி. பாடகர் எஹான் பட் : ”கூச்ச சுபாவமுள்ள ஒரு காஷ்மீரி இளைஞன் நான். ஏதோ ஆடிஷன் எனக் கூப்பிட்டார்கள். ஐந்தே நிமிடம்தான். போகச்சொல்லிவிட்டார்கள். சில மாதங்கள் கழித்து திடீரெனத் தகவல் – நீ தேர்வாகிவிட்டாய், வா, சென்னைக்கு. ரஹ்மான் சாரின் ப்ராஜெக்ட் எனக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்! காலை 10 மணிக்கு வரச்சொன்னார்கள். 9 மணியிலிருந்தே அவரது ஸ்டூடியோ வாசலில் நடுக்கத்தோடு அன்று உட்கார்ந்திருந்தேன். சற்றுநேரத்தில் உள்ளே கூப்பிட்டனுப்பினார்கள். அங்கே ரஹ்மான் சாரும், (இயக்குனர்) அஷுதோஷ் கௌவாரிகரும் இருந்தார்கள்.”

”ரஹ்மான் சார் அதிகம் பேசமாட்டார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். நானோ இதற்கெல்லாம் புதுசு. கூச்சம். தயக்கம் எல்லாம் எனக்குள். ஆனால்.. சாருக்கென்ன? அவருக்குமா கூச்சம்? ரஹ்மான் சார் மெல்ல என்னைப் பார்த்தார். பின் சுவரைப் பார்க்க ஆரம்பித்தார். நானும் தயக்கத்தோடு அவரை ஏறிட்டு நோக்கினேன். சுவரைப் பார்த்தேன்!  ’அரேஞ்சுடு மேரேஜு’க்காகப் பெண் பார்க்கப் போய் விழிப்பதாய் உணர்ந்தேன்.. நெளிந்தேன். ஒரே குழப்பம். டென்ஷன்..” என்கிறார் பட்.

Edilsy Vargas images
நாயகி !

அதெல்லாம் சரி.. ஹீரோயின்?  எடில்ஸி வர்காஸ் (Edilsy Vargas) ! அமெரிக்க மாடல் அழகி. ஏற்கனவே Lotoman, La Soga, Pimp Bullies போன்ற படங்களில் ’நடித்த’ அனுபவம் உண்டாமே.. சில டிவி நிகழ்ச்சிகள்/ கமர்ஷியல்களும் வந்திருக்கிராரம்.. ம்ம்… இவருக்கு முன்னாடி நம்ம கத்துக்குட்டிப் பையனை நிறுத்தி அழகு பார்க்கலாமா! அப்படித்தான் செய்திருக்கிறார் ரஹ்மான். ஜோடி எப்படி, படம் எப்படி எனப் படம் பார்த்தால்தான் சொல்லமுடியும்..

ரஹ்மான் என்ன சொல்கிறார் : ”பத்துவருடத்திற்கும் மேலாக மனதில் இருந்தது இது. ஒரு புதிய குரலை அறிமுகப்படுத்துவது, புதுவிதமாக -ஸ்டீரியோ-டைப் தமிழ்/பாலிவுட் படங்களிலிருந்து வேறுபட்டு ஒன்றைத் தயாரிப்பது, இசை தருவது, திரைக்குக் கொண்டுவருவது.. மக்கள் எப்படி வரவேற்பார்கள்?  சொல்வது கடினம். வென்றால் மேலே.. இல்லையென்றால் நான் காலி!”

**

சென்னைத் திரைப்பட விழா 2021

சினிமாப்பைத்தியங்களுக்குப் பேர்போன நாடு இந்தியா. அதிலும் தமிழ்நாடு.. மேலும் குறிப்பாக சென்னை நகரம். மனதை அயரவைத்த லாக்டவுன் காலத்திற்குப்பின், 2021 தரும் நல்விருந்து வந்துவிட்டது! சென்னை திரைப்படவிழா -Chennai International Film Festival (CIFF)ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கிறது. சர்வதேச சினிமாவும் வித்தியாசமான சில தமிழ்ப்படங்களும் என அணிவகுத்து நிற்கின்றன விழாவுக்கென. 53 நாடுகள், 91 படங்கள். சிறந்த டைரக்டர்களின் படங்கள் அல்லது சினி-விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட சமீபத்திய திரைப்படங்கள் அல்லது விருதுக்கென சிபாரிசு , வென்றவை எனத் தேர்வுசெய்யப்பட்டவை.  

தரமான உலகப்படங்களை ஆர்வமாகத் தேடும் ரசிகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய சில அந்நிய நிலத்துப் படங்கள்:   

விழாவின் ஆரம்பப்படமான ஃப்ரான்ஸின் (Locarno திரைவிழாவுக்கு சிபாரிசு செய்யப்பட்ட)  ‘The Girl With a Bracelet’ (Crime வகை ஃப்ரெஞ்ச் மொழிப் படம்.(Dir: Stephane Demoustier). பள்ளி இறுதிவகுப்பு மாணவி லிஸாவின்மீது பழி: தோழியைக் கொன்றுவிட்டாள்! இதோ கேஸ் ஆரம்பிக்கப்போகிறது – உண்மை வெளிவராமலா போய்விடும்? ஆனால்.. அவள் நடந்துகொள்ளும் விதம்..

அர்ஜெண்டினா படமான ‘தூக்கத்தில் நடப்பவர்கள்’ (Los Sonambulos (The Sleepwalkers), கோடையில் பிக்னிக் செல்லும் ஒரு அம்மா, மகள் கதை. ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் எப்படி ஒருவரை ஒருவர் மோதவைக்கின்றன, முறைக்கவைக்கின்றன என மனித ஆசாபாசங்களை மென்மையாகக் கடத்துகிறார் இயக்குனர் பாலா ஹெர்னாந்தஸ் (Paula Hernandez).

போர்ச்சுகலின் திரைப்படம் ‘Listen’ (‘கவனி’). Dir: Ana Rocha): லண்டனில் ஒரு தம்பதியின் மூன்று சிறுகுழந்தைகளை, ஏதோ ப்ரச்னையென சமூகசேவைகளுக்கான அரசுத்துறை கொண்டுபோய்விட்டது. தங்கள் குழந்தைகளை மீட்க தம்பதி படும்பாட்டைச் சொல்லும் கதை.

போலந்திலிருந்து புதுமுக இயக்குனரின் படமொன்று ’I never Cry’. (நான் அழுவதில்லை)    (Dir: Piotr Domalewsky). உருக்கம். நெருக்கம். மொபைலும் கையுமாக இருக்கும் 17 வயது துள்ளல் பெண்ணொருத்திக்கு குடும்பத்தலைமை ஏற்கவேண்டிய இக்கட்டான நிலை. அயர்லாந்தில் பணிபுரிந்த அவளது தந்தை கட்டடப்பணியில் விபத்தொன்றில் இறந்துவிட்டதாக அதிரவைத்த செய்தி. போலந்துக்கு வந்து தன்னை அடிக்கடி பார்க்காத அப்பாவின்மீது, உணர்வுபூர்வ நெருக்கத்தை அவள் என்றும்  கொண்டிருந்ததில்லை. ஆங்கிலம் பேசத்தெரியாத அம்மாவால் அயர்லாந்துபோய் கணவனின் உடலைப் பெறமுடியாத இயலாமை. துக்கம். பதின்மவயது மகளுக்கு ஆங்கிலப் பிரச்னை ஏதுமில்லை. தயங்கினாலும், போகிறாள். அயர்லாந்து போய்ச் சேர்ந்தபின்தான், இறந்துவிட்ட அப்பாவைப்பற்றி ’அறிந்துகொள்ள’ ஆரம்பிக்கிறாள்.. கவனம் மிக ஈர்த்த படம்.  Zofia Stafiej எனும் இளம் புதுமுகம் மகளாக தூள்கிளப்பியிருக்கிறாராம்.

ஆஃப்கானிஸ்தாலிருந்து Ramin Rasouli இயக்கிய ஒரு படம்: ’The Dogs didn’t Sleep Last Night’ (நாய்கள் இரவில் உறங்கவில்லை). நித்ய யுத்தம் சீரழித்துவிட்டிருக்கும்  நாட்டின் சோகக் கதையைச் சொல்கிறது. ஆடுமேய்க்கும் ஒரு பெண், பறவை பிடிக்கும் ஒரு பையன், ஒரு பள்ளி ஆசிரியன் என வேறுபட்ட வாழ்க்கைகொண்டவர்களின் கதைகள் எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைகின்றன எனச் சொல்லிச்செல்லும் சுவாரஸ்யம். ஆஃப்கன், ஈரானிய நடிக, நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

Keoni Waxman இயக்கி, ஸ்டீவன் சீகல் நடித்திருக்கும் பெல்ஜியத்தின் ’A Good Man’ (ஒரு நல்ல மனிதன்) அதிரவைக்கும் திரைப்படம்.  இஸ்லாமியத் தீவிரவாதியும், ஆயுத விற்பனையாளனுமான ’சென்’ (Chen)-ஐப் பிடிக்க/ போட்டுத்தள்ளும் ரகசியத் திட்டத்துடன் அலெக்ஸாண்டர் எல்லைப் பகுதிக்குத் தன் வீரர்களுடன் போகிறான். எதிர்கொண்ட பயங்கரத் தாக்குதலில், அவனுடைய அணியினர் கொல்லப்படுகிறார்கள். சென் தப்பியோடிவிடுகிறான். அலெக்ஸாண்டர் ..? -என நகரும் கதை.

விருதுபெற்ற இஸ்ரேல் படமொன்று: ஏஷியா (Asia). அம்மா-மகள் கதை. அம்மாவின் பெயர்தான் ஏஷியா. ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்கு தன் மகளுடன் குடியேறி நர்ஸாகப் பணிபுரியும் single mother. தன் இஷ்டப்படி, அதேசமயம்,  பிறர் விருப்பு, வெறுப்புகளை மதிக்கும் ஒரு வித்தியாசமான பெண். மகள் ஒரு நாள், தாயான அவளிடம் வந்து சொல்லும் வார்த்தைகள் அவளைத் திடுக்கிடவைக்கின்றன. ஹீப்ரு/ரஷ்ய மொழிப்படம். இயக்கம்: Ruthy Pribar.

இவை தாண்டி பிற இந்தியமொழிப் படங்கள்,  தமிழ்ப்படங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் இல்லாமல் சென்னையில் திரைவிழாவா! சில:

‘Bridge’ (Assamese film Kripal Kalita). மலையாளப் படம் ’Safe’. இயக்கம்: பிரதீப் கலிபுரயத். இன்னொரு மலையாளப் படம் : ‘தி.மி.ராம்’ (இயக்கம்  ஷிவராம் மோனி). ‘Gatham’ எனும் தெலுங்கு படம் (இயக்குனர்: கிரன் கொண்டமடுகுலா).  மராத்தி படம்: ‘ஜூன்’ (இயக்கம்: சுஹ்ருத் கோட்போலே, வைபவ் கிஸ்தி). ஒரு ஒரியப் படம்: காலிரா அதித்தா (இயக்கம்: என்.எம்.பாண்டா).

விழாவில் தமிழ்ப்படங்கள்: 1.அக்கா குருவி (இயக்கம்: சாமி ) 2. ‘KD’ (இயக்கம்: மதுமிதா சுந்தரராமன்). 3. பாஸ்வர்ட் (இயக்கம்: கண்ணன்.) 4. சியான்கள் (இயக்கம்: வைகறை பாலன்). 5. விண்டோ சீட் (இயக்கம்: பரத்ராஜ்) 6. அமலா ( இயக்கம்: நிஷாத் இப்ராஹிம்). 7. கன்னிமாடம் (இயக்கம்: போஸ் வெங்கட்). 8. காட்ஃபாதர் (இயக்கம்: ஜெகன் ராஜசேகர்) 9. என்றாவது ஒரு நாள் (இயக்கம்: வெற்றி துரைசாமி) 10. மழையில் நனைகிறேன் (இயக்கம்: டி.சுரேஷ் குமார்). 11. The Mosquito Philosphy -தமிழ்ப்படந்தான்! (இயக்கம்: ஜே.ராதாகிருஷ்ணன்). 12. கல்தா (இயக்கம்: ஹரி உத்ரா). 13. காளிதாஸ் (இயக்கம்: ஸ்ரீசெந்தில்) 14.லேபர் (இயக்கம்: சத்யபதி). 15. சூரரைப் போற்று (இயக்கம்: சுதா கொங்கரா) 16. மை நேம் இஸ் ஆனந்தன் (இயக்கம்:ஸ்ரீதர் வெங்கடேசன்). 17. பொன்மகள் வந்தாள் (ஜே.ஜே.ஃப்ரடரிக்) 18. க.பெ. ரணசிங்கம் (இயக்கம்: விருமாண்டி).

அப்பாடி! இத்தனைத் தமிழ்ப்படங்களா ஒரு திரைவிழாவில்? ஆச்சரியம்.

பிப்ரவரி 18-லிருந்து 25 வரை செல்லும் திரைவிழா முத்துக்களை சென்னையின் PVR Multiplex (முந்தைய சத்யம் சினிமா),   Anna Cinemas  ஆகியவற்றில் கண்டு மகிழலாம். தமிழ்ப்படங்களாகத் தேடிப்பார்த்துப் போகாமல், பிறமொழி, உலகப் படங்களையும் கண்டு ரசியுங்கள். கலாரசனை மேம்படும். சினிமா தொடர்பான விஷயங்கள் சரியாகப் புலப்பட ஆரம்பிக்கும். படங்களுக்குச் செல்கையில், கோவிட்கால முகக்கவசம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடவேண்டாம்.  கூட்டம் நெரிக்கும். முன்பதிவு செய்துகொண்டு செல்லவும்: http://www.chennaifilmfest.com

**  

நடிக்கவிடமாட்டீங்க ? சரி..

சுதந்திரத்துக்கு முன்னான காலகட்டத்தில், நாட்டில் இருந்த பல திறன்வாய்ந்த நாடக நடிகர்களில் ஒருவர். அந்தக்காலத்தின் புகழ்பெற்ற Boys நாடகக் கம்பெனியில் சேர்ந்து, இளம் வயதிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து நாடக உலகையே, தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் திருப்பிப் போட்டவர்! அருமையான கலைஞர். இப்படிப்பட்ட திறமையை வைத்துக்கொண்டு சினிமா உலகிற்குள் நுழையாதிருக்கமுடியுமா? நுழைந்தார், அந்தக் காலத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்த ‘பேசும்படங்களிலும்’ (அதற்கு முன் ’வாய்பேசாத’ படங்கள்தான் ஒடிக்கொண்டிருந்தன எனத் தனியாகச் சொல்லவேண்டுமா!) பிரவேசித்து, திறமை காட்டிய தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க பங்களிப்பாளர்.

’அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1941) படத்தில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனாக நடித்திருக்கிறார். 1952-ல் வெளியான புகழ்பெற்ற ‘பராசக்தி’ படத்தில் இளம் சிவாஜிகணேசன், கருணாநிதியின் வீரதீர, காரசார வசனத்தில் வெடித்துக்கொண்டிருக்க, நிமிர்ந்த நெஞ்சோடு  பொறுமையாக அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பாக்யம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது! பலபடங்களில் வில்லன் வேலை. அதில் மெச்சப்பெற்ற சில பங்களிப்புகள் உண்டு.

அட, யாரப்பா அது? கே.பி.காமாட்சி ! முழுப்பெயர் கே.பி.காமாட்சி சுந்தரம். ஒரு கட்டத்தில் ’நீ நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்..’ எனச் சொல்லிவிட்டதோ தில்லுமுல்லுத் திரையுலகம்…  நடிக்க வாய்ப்புகள் மேலும் வரவில்லை. மூடிக்கொண்டு அழுபவரா காமாட்சி? வாடி விழுந்துவிடுவாரா? நடிக்கத்தானே வாய்ப்பில்லை? பாட்டு எழுதலாம்ல.. முன்னாடியே சில பாடல்களைத் சினிமாத்திரைக்காக எழுதியிருக்கிறோமே – எனத் தெளிந்து ஸ்டூடியோவைச் சுற்றிவந்திருக்கிறார் மனுஷன். மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் சிறந்தவர் காமாட்சி. அவ்வப்போது வாய்ப்பு கிடைக்க, மனதை மயக்கும் பாடல்கள் சிலவற்றைத் தமிழ் சினிமாவுக்குத் தந்த கவிஞராக உருமாற்றம் பெற்றார். அப்போது எழுத ஆரம்பித்த கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம், கே.பி.காமாட்சி சுந்தரத்தை ஆசானாகக் கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.

அந்தக்காலத்திலேயே ‘பழையபாட்டு’ எனக் கருதப்பட்ட சில ரம்யமான பாடல்களை ஆல் இந்தியா ரேடியோ, ரேடியோ சிலோனின் கைங்கர்யத்தில் அனுபவித்திருக்கிறோம் – இசைக்காக மட்டுமல்லாது அவற்றின் எழில்கொஞ்சும் வார்த்தைவடிவத்திற்காகவும். ஆனால் எழுதியவர் காமாட்சி சுந்தரம் எனத் தெரிந்திருக்கவில்லையே! கீழே கொஞ்சம் பாருங்கள்..

’வாழ்க்கை’ (1941) படத்தில் இந்தப் பாடல் : “உன் கண் உன்னை ஏமாற்றினால்.. என்மேல் கோபம் கொள்ளுவதேன்!”

‘பராசக்தி’(1952)-யில் வரும் :

“ஓ! ரசிக்கும் சீமானே !
வா, ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்..!
அதை நினைக்கும்பொழுது
மனம் இனிக்கும் விதத்தில்
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் !”

‘எதிர்பாராதது’ (1954) படத்தில் வரும் ”சிற்பி செதுக்காத பொற்சிலையே..!”

’அமரதீபம்’(1956) படத்தில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் சேர்ந்து, புகழ்பெற்ற இசையமைப்பாளரான T. சலபதி ராவின் இசையில் உருகும் ”தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு..”
எனக் கொஞ்சிச் செல்லும் பாடல். கவிஞர் காமாட்சியின் மொழிவண்ணத்தை ரசிப்பதற்காக இந்தப் பாடலை முழுமையாக அனுபவிப்போம்:

தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்ப நாதம்
எழுதிடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே ..
காற்றினிலே .. தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ .. ஓ.. ஓ..
புதுமை இதில்தான் என்னவோ

மீன் உலவும் வானில்
வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும்
ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்.. ஓ.. ஓ..
மென்காற்றே நீ சொல்லுவாய்

கான மயில் நின்று
வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே, வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே .. ஓ.. ஓ..
காணாததும் ஏன் வாழ்விலே ..

கண்ணோடு கண்கள்
பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல்
வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் .. ஓ.. ஓ..
கலைமதியே நீ சொல்லுவாய்  !

**

இர்ஃபான் என்றொரு அபூர்வக் கலைஞன்

இந்திய சினிமாவில் புழங்கிவரும் ஏகப்பட்ட ‘கான்’களில் (Khans) ஒருவர் என்று பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்டவர் அல்லர். ஹிந்தி சினிமா, ஹாலிவுட் சினிமா என்கிற இருவேறு துருவங்களிலிருந்தும் ரசிகர்களால், விமரிசகர்களால் ஆழ்ந்து ரசிக்கப்பட்ட, அனுபவிக்கப்பட்ட ஒரு அற்புதக் கலைஞன். இர்ஃபான் கான். 53 வயதுக்குள் நடிக்கமுடிந்தது சுமார் 80 படங்கள்தான். கலைவடிவம் என்று வந்துவிட்டால், எண்ணிக்கையா முக்கியம்? தரமல்லவா பேசவேண்டும்? பேசின நிறைய, அவரது படங்கள், பாவம் பலகாட்டும் அவரது முகத்தைப்போலவே..

ராஜஸ்தான்காரரான இர்ஃபான் கானுக்கு இளம் வயதில் கிரிக்கெட்டராக ஆக ஆசையிருந்தது. ஆனால் மட்டையும் கையுமாகப் பையன் சுற்றிக்கொண்டிருந்தது அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை! ’கிரிக்கெட் வேண்டாம் உனக்கு. போ..போய்ப் படி!’ என்று திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் முதுகலைப் படிப்பு, மற்றொரு புறம் ’தேசிய நாடகப் பள்ளி’யில் (National School of Drama (NSD), Delhi) நடிப்புக்கலைப் பயிற்சி என இளம் வயது அவரை நிலைகொள்ளாது அலைக்கழித்தது. சினிமா வாய்ப்புகள் அவரிடம் நெருங்க மறுத்தன. முதன்முதலாக தூர்தர்ஷனின் ‘ஸ்ரீகாந்த்’ தொடரில் நடிப்பைக் காண்பிக்க வாய்ப்பு கிட்டியது. பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் பின் பாலிவுட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன சின்ன ரோல்கள்.

இவரை ஒரு கலைஞனாக முதலில் கண்டுகொண்டது டைரக்டர் மீரா நாயர். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்த மீரா டெல்லியில் NSD-க்கு ஒரு முறை வந்திருந்தார். பாம்பேயின் தெருக்குழந்தைகளை வைத்துப் படம்பண்ணும் எண்ணத்திலிருந்தார் அவர். அப்போது ஓரளவு நடிக்கப் பயிற்சிவிக்கப்பட்ட ஒரு இளம் நடிகன் கிடைப்பானா எனத் தேடியே அங்கு வந்தது. அங்கே 20-வயதான இர்ஃபானை பார்த்தார். அவரது ஆழ்ந்த கண்கள், தீவிரம்காட்டும் முகம் கவனத்தை உடனே ஈர்த்தன. ஆனால் இர்ஃபானின் உயரம்? 6 அடி 1 அங்குலம் ! கூடவே நன்றாக வளர்ந்த பையன்! தெருப்பையனாக வரமாட்டான் இவன். எனவே வேறொரு சிறிய பாத்திரத்திற்காக இர்ஃபானை தேர்வு செய்தார் மீரா. அந்த ஒரு சிறு ரோலுக்காக நாடகப்பள்ளியின் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பாம்பே வந்து மீரா நாயருடனும், தெருச் சிறுவ, சிறுமியருடனும் மாசக்கணக்கில் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தார் இர்ஃபான். இப்படித்தான் கிடைத்தது இர்ஃபானுக்கு முதல் ’சீரியஸ்’ படம், Salaam Bombay! (1998).

16 வருடங்களுக்குப்பிறகு மீரா, இர்ஃபான் கானிடம் திரும்பி வந்தார். இந்தமுறை புகழ்பெற்ற இந்திய-ஆங்கில நாவலாசிரியையான ஜும்ப்பா லாஹிரி (Jumpa Lahiri)-யின் ‘The Namesake’ என்ற நாவலை அதே பெயரில் படமாக்க எண்ணம். மீராவின் மனதில் பிரதான ரோலில் நடிக்கத் தகுதியானவர் இர்ஃபான் தான் என்பது வந்துவிட்டது. இர்ஃபானை அழைத்துக்கொண்டுபோய், அமெரிக்காவில் தங்கவைத்தார். அங்கு வாழும் இந்திய-பெங்காலி குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. தனக்கு பழக்கமில்லாத புது உலகமான அமெரிக்காவையும், அங்கு வாழும் பெங்காலி குடும்பத்தின் கலாச்சார சங்கமத்தையும் எளிதில் கிரஹித்துக்கொண்டார் இர்ஃபான் என்கிறார் மீரா நாயர். ஒரு பெங்காலி இளைஞனாக அவரது பார்வை, தோற்றம் எல்லாமும் அச்சு அசலாக ஒத்துப்போனது ஆச்சரியம் என்றார்.

லண்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான ‘தி கார்டியன்,’ இர்ஃபான் கானின் மறைவு செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டது. இப்படி ஒரு பிரும்மாண்ட திறமை கொண்டிருந்த இந்திய நட்சத்திரத்தை ஹாலிவுட்டின் தராதர அளவுக்குள் அடக்குவது இயலாதது என்றது. இர்ஃபானின் ’லஞ்ச் பாக்ஸ்’, ‘தி வாரியர்’ போன்ற அருமையான படங்களை மீண்டும் பார்ப்பதே, அவரைப்போன்ற ஒரு கலைஞனுக்கு நாம் செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாகும் என்றது. ஹாலிவுட் டைரக்டரான ஆசிஃப் கபாடியா (Asif Kapadia) இர்ஃபான் கான் பிரதான பாத்திரத்தில் சிறப்பான பங்களித்திருந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இந்தியத் தயாரிப்பான The Warrior’ (2001) படத்தை இயக்கியவர். அந்தப் படம் பிரிட்டிஷ் Bafta விருதை வென்று, விமரிசகர்களால் வெகுவாக ஸ்லாகிக்கப்பட்டது. கபாடியா கட்டுரை ஒன்றில், முதன்முதலில் தன் படத்துக்கான ஹீரோவை பம்பாயில் ‘கண்டுபிடித்த’திலிருந்து, இர்ஃபானுடன் தனக்கு இறுதிவரை நிலவிய ஆழ்ந்த நட்புபற்றி எழுதியிருந்தார். ’தி வாரியர்’ படக்குழு, படத்தின் ரிலீஸிற்குப் பின்னும் பலமுறை சந்தித்து அளவளாவி மகிழ்ந்தது, திரையுலகில் பொதுவாக நிகழாதது என்கிறார். ‘நாங்கள் ஒரு குடும்பம்போல் ஆகிவிட்டோம். உயரமாய், கம்பீரம் கலந்த அமைதியுடன் வலம்வந்த இர்ஃபான், எங்களுக்கு ஒரு குருவைப் போல் இருந்தார்’ என்கிறார் மேலும். ஒரு படத்தில் எத்தகைய சிறிய ரோலை அவருக்குக் கொடுத்தாலும், அந்தப் படத்தின் மிகவும் நம்பகத்தகுந்த ஒரு விஷயமாக அதை மாற்றிவிடும் ஆற்றல் உண்டு. வசனவரிகள் மிகக் கொஞ்சமாக இருந்தாலும் சரியே. சாதாரண வார்த்தைகளை அவர் உதிர்த்தாலும் அவற்றிற்கு பெரும் சக்தி கிடைத்துவிடும். அவரது பார்வையும், பாவங்களும் நிறையச் சொல்லிச் சென்றுவிடும். திரையில் அவர் எதை வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு நேர்மை இருந்தது. அவரது ஆன்மா தெரிந்தது. இவையெல்லாமே அவர் ஒரு இயற்கையான கலைஞர் எனத் தெளிவாகக் காண்பித்தது. மேலும், வெற்றியும், புகழும் இர்ஃபானை பாதித்ததில்லை என எழுதுகிறார். 2000- வாக்கில் சரியான பட வாய்ப்பு வராமல், தன்னை வெளிப்படுத்தமுடியாமல் தவித்திருந்த இர்ஃபான் கான், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டுவிடவேண்டியதுதான் என முடிவுக்கு வந்திருந்தாராம். அப்போது அவர் முன் வந்து நின்ற படம் ’தி வாரியர்’ !

Irrfan Khan in ‘The Warrior’ (2001)
அந்தப் படத்தின் வெற்றி, அவரை மேலும் மேலும் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. மேலும் குறிப்பிடத்தகுந்த படங்கள் அவரை நாடின. The Darjeeling Limited (Dir: Wes Anderson,2007), The Slumdog millianaire (Dir: Danny Boyle, 2008), The Life of Pi (Dir: Ang Lee, 2012), Jurassic World (Dir: Colin Trevorrow, 2015) என ஹாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கினார் இர்ஃபான். கூடவே இந்தியத் திரைவெளியும் அவரை வரவேற்றது. ஹாஸில்(2003), விஷால் பாரத்வாஜ் இயக்கத்தில் மக்பூல்(2003), ஹைதர்(2014) ஆகிய படங்கள், பான் சிங் தோமர் (ஓட்டப்பந்தய வீரன் கொள்ளைக்காரனான கதை, 2010), ரிதேஷ் பத்ரா ((Ritesh Batra) இயக்கத்தில் வந்த ‘லஞ்ச் பாக்ஸ்’(2013), இர்ஃபான் அமிதாப் பச்சனுடன் நடித்த, ஷூஜித் சர்க்கார் இயக்கிய பிக்கு (Piku, 2015), போன்றவை அவரை ஹிந்திப் பட உலகிலும் விரிவாகப் பேசப்பட்ட முன்னணி நட்சத்திரமாக ஆக்கின. குறிப்பாக, மசாலா படம் விடுத்து தரமான off-beat படங்களை ரசிக்கும் இந்திய/வெளிநாட்டு ரசிகர்களுக்கு, அவரது படங்கள் காலப்போக்கில் பெருவிருந்தாகிப்போகின. பான் சிங் தோமர் படத்தில் தன் நடிப்பிற்காக தேசிய விருதுபெற்றார் இர்ஃபான். 2013-ல் இந்திய அரசு இர்ஃபான் கானுக்கு ’பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.

2017- ல் வெளியான சாகேத் சௌத்ரி இயக்கிய காமெடி/டிராமா படமான ‘ஹிந்தி மீடியம்’ படம் அவருக்கு IIFA விருதைப் பெற்றுத் தந்தது. தன் பெண்குழந்தையை ஒரு புகழ்பெற்ற பள்ளியில் போட, அப்பனாக அவர் படும்பாட்டை அவ்வப்போது சிரிக்கவைத்துச் சொல்லும் கதை. அந்தப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக, அதன் தொடர்ச்சிபோல் தயாரிக்கப்பட்டு வந்தது இன்னொன்று ‘Angrezi Medium'(2020), இர்ஃபானின் நண்பரும் டைரக்டருமான Homi Adajania-வின் இயக்கத்தில். அபூர்வ வகை கேன்சர் (neuroendocrine tumour) நோயினால் பீடிக்கப்பட்டு நியூயார்க்கில் சிகிச்சைபெற்று தற்செயலாக இந்தியாவுக்கு மீண்டிருந்த இர்ஃபான் கான், கடைசியாக நடித்துக்கொடுத்த படம். கொரோனா சூழலில் திரையரங்குகளில் வெளியிடப்படமுடியாது போனது. தனிப்பட்ட வெளியீட்டு விழாவில் உடல்நலமுற்றிருந்த இர்ஃபானால் கலந்துகொள்ளமுடியாத பரிதாப நிலை.

29 ஏப்ரல் அதிகாலையில் இயற்கை எய்திய இர்ஃபானின் இறுதிச்சடங்கு, லாக்டவுன் தடைகளால், குடும்பத்தினர், மிகநெருங்கிய நண்பர்கள் என 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள மும்பையில் நடந்தது. நேரடியாகப் பங்குகொள்ளமுடியாத ரசிகர்களுக்கு மாபெரும் சோகம்.

இர்ஃபான் கானுக்காக, அன்போடும், கவனத்தோடும் திரைத்துறையினரால் வெளிப்படுத்தப்பட்ட அஞ்சலிகள் பல. அதில் ஒன்று ‘Angrezi Medium’ இயக்குனர் ஹோமி அடஜானியா (Homi Adajania) சொன்னது: ”என்னை உன் நண்பன் என அழைத்துக்கொள்ள முடிந்ததற்காகவும், உன்னோடு சில அடிகள் சேர்ந்து நடக்கமுடிந்ததற்காகவும், குறைந்த காலத்தில் நிறைந்த சந்தோஷம் தந்த நினைவுகளுக்காகவும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ’என் கலையின்மீது நம்பமுடியாத அளவு காதல் கொண்டிருப்பதாகவும், நட்சத்திர அந்தஸ்து எனக்கு இனிமேல் தேவையில்லை’ என்றும் ஒருமுறை சொன்னாய். உண்மைதான். நீ நட்சத்திரமாக மின்னவேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் மற்ற எதைவிடவும் நீதான் அதிகமாக ஜொலித்தாய்..”

எப்படியோ, திரையுலகம் ஓரு அருமையான கலைஞனை அகாலமாக, அநியாயமாக இழந்துவிட்டது.
**

விசு

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோ, ஹீரோயின்கள் என ரசிகர்களால் சிலிர்ப்புடன் கொண்டாடப்பட்டவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இவ்வகை வழக்கமான ஜொலிப்புகளைத் தாண்டி குணசித்திர பாத்திரங்களில் மிளிர்ந்து, தன் பன்முகத்திறனுக்காக சக கலைஞர்களாலேயே பாராட்டப்பட்டும், பேசப்பட்டும் வந்தவர் நடிகரும், இயக்குனருமான ‘விசு’. இயற்பெயர் விஸ்வனாதன். ஆரம்பத்தில் மேடை நாடகங்கள். பிறகு திரையுலகில் பிரவேசம், அது தந்த புகழ்வெளிச்சம். திரையுலகிலிருந்து வெளிவந்தபின், டிவி- நிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களை ஈர்த்து, யூ-ட்யூபில் போய் தன் கலைச் சேவையை நிறுத்திக்கொண்ட கலைஞர். உடல்நலம் குன்றியபோதும் கடைசிவரை துறுதுறுவென இருந்த ஆளுமை.

இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு, துணை இயக்குனராக தன் ‘திரை இயக்க’ வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’(1981) ‘நெற்றிக்கண் (1981)’ ஆகிய படங்களில் விசுவின் முறையே வசனம், திரைக்கதை. எஸ்.பி.முத்துராமனின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’(1980) படத்தில்தான் நடிகராக முதன்முதலாகக் காட்சிதந்தார் விசு. அதன் பிறகு அவர் தானே இயக்கி வந்த முதல் படம் ’கண்மணி பூங்கா’(1982). மத்தியவர்க்க குடும்ப உறவுச்சிக்கல்களே கதைக்களன் என ஒரு ஃபார்முலா வகுத்துக்கொண்டு விளையாடியவர். அதில் புகழ்பெற்றவர் -இயக்கம், திரைவசனம், நடிப்பு என மிளிர்ந்த மனிதர். விசுவின் படம் என்றாலே நகைச்சுவையும் சுவாரஸ்யமான குடும்பக்கதையும் இருக்கும் என ரசிகர்கள் நம்பி, ஆர்வமாகத் தியேட்டர்களுக்கு ஓடிய காலகட்டம்.

மனதைக் கிள்ளும் வசனங்கள், துடிப்பான பெண் பாத்திர அமைப்புகள், தன் உயிர்ப்பான நகைச்சுவை ததும்பும் நடிப்பு ஆகியவைகொண்டு திரையில் சித்திரங்கள் பலதீட்டி, ரசிகர்களைக் கொள்ளையடித்த பெருமை அவருடையது. ’மணல் கயிறு’(1982) படத்தில் அவர்தான் நாரதர் நாயுடு. குறைந்த வருமானத்தில் கூட்டுக்குடும்பம் நடத்த சிரமப்படும் அம்மையப்பன் முதலியாராக வந்து மனதில் இடம்பிடித்தார் விசு, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில். ’திருமதி ஒரு வெகுமதி’ (1987) படத்தில் நாகர்கோவில் நாதமுனி! இப்படி நினைவில் அலையும் விசுவின் பாத்திரங்கள்.

அவர் படைத்த ’குடும்ப சினிமா’வில் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள் ‘உமா’க்கள். விசுவின் ராஜமுத்திரை! அவர் இயக்கி, நடித்த புகழ்பெற்ற ’சம்சாரம் அது மின்சாரம் (1986) திரைப்படத்தில் மறக்கமுடியாத மருமகள் உமாவாக நடித்திருக்கிறார் நடிகை லட்சுமி. ‘திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் எல்லோருக்கும் பிடித்த அந்த ‘அக்கா’வின் பெயரும் உமா! நடித்தவர் கல்பனா. ’வரவு நல்ல உறவு’(1990) படத்தில் அதே பெயரில் பொறுமைசாலி மருமகளாக வந்து, பார்ப்போரை உருகவைத்த நடிகை ரேகா. இந்த கேரக்டர்கள் தனக்குப் பிடித்திருந்ததாக பின்னர் ஒரு நேர்காணலில் விசு கூறியிருக்கிறார்.

’சம்சாரம் அது மின்சாரம்’, தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிஎக்ஸ்ப்ரெஸ் விருது என வரிசையாக வென்றுகொடுத்தது அவருக்கு. விசுவை ஒரு பாப்புலர் டைரக்டராக தமிழ் சினிமாவில் நிறுவியது. ’சன்ஸார்’ என்கிற தலைப்பில் ஹிந்திப் படமாக அடுத்தவருடமே வெளியானது. தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என மறுபிறப்புகள் அதற்கு!

சினிமாவை விட்டு விலகியிருந்த காலகட்டத்தில் ‘அரட்டை அரங்கம்’, ‘மக்கள் அரங்கம்’ என சாதாரணர்களின் பிரச்னைகளை மக்கள் முன் காரசார விவாதங்களுக்கு உட்படுத்தி அவர் அளித்த டிவி நிகழ்ச்சிகளும் ஜனரஞ்சகமாக அமைந்தன. டிவி-யின் மாபெரும் வீச்சினால் வெளிநாடுவாழ் தமிழர்கள் பலர் அவரது ரசிகர்களாக அதிகரித்த காலமது. தன் கடைசிகாலகட்டத்தில் யூ-ட்யூப் சேனல்களில் காணப்பட்டார் விசு.

கடைசி ஆசையாக ஒன்று வைத்திருந்திருக்கிறார் விசு. ‘சம்சாரம் அது மின்சாரம்-2’ -க்காக கதை வசனம் எழுதி வைத்திருந்ததாகக் கேள்வி. லட்சுமியின் இடத்தில் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லிவந்திருக்கிறார். ஏவிஎம்- ப்ரொடக்ஷன்ஸ் கம்பெனியை அணுக, அவர்கள் கைவிரித்துவிட்டார்களாம். மேற்கொண்டு முயற்சித்துக்கொண்டிருக்கையில் காலன் குறுக்கே வந்துவிட்டான்.

உடல்நலக்குறைவினால் இரண்டு நாள் முன்பு மறைந்த தமிழ் சினிமாவின் மறக்க முடியாக் கலைஞருக்கு, பிரபலங்கள், ’கொரோனா’ ஊரடங்கின் காரணமாக நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத நிலை. இருந்தும் ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தியதாக செய்தி. நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், இயக்குனர் வஸந்தபாலன், கவிஞர் வைரமுத்து ஆகியோரிடமிருந்து வந்தன கனிவான, உருக்கமான வார்த்தைகள். கிரிக்கெட் வீரர் அஷ்வினும் தன் அஞ்சலி ‘ட்வீட்டில்’, ‘என் இளமைக்காலத்தில் உங்கள் படங்களின் புத்திசாலித்தனமான திரைக்கதை, அழகான நகைச்சுவை, டிவி நிகழ்ச்சிகள் மூலம், ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள்’ என நினைவுகூர்ந்திருக்கிறார்.
**

” ஜெகம் புகழும் புண்ய கதை ….

 

.. ராமனின் கதையே..! அதை செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே !” – என்று ஒரு அமர கீதம். தமிழ் சினிமாவின் பொற்காலத்தின் ஒரு பகுதியான அறுபதுகளில், திரையில் எதிரொலித்துப் பரவியது. ரசிகர்களிடையே பிரபலமான பாடல், இன்றும் பரவசத்தோடு கேட்கப்படுகிறது. ஒரு பாடலைக் கேட்டு ஆனந்திப்பார்களே ஒழிய, இதை எழுதியது யார் என நமது இனிய தமிழ் மக்கள் சிந்திக்கமாட்டார்கள் – பொதுவாக இதுதான் நிலைமை! கவிஞர் மருதகாசியின் கைவண்ணம் இது. 1963 -ல் வெளிவந்த ’லவகுசா’ திரைப்படத்தில் வருகிற இந்தப் பாடலில், ராமாயணக் காவியத்தையே ஒற்றைப் பாடலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் மருதகாசி. ராமன், சீதை – தெய்வீக ஜோடியின் புத்திரர்களான சிறுவர்கள் லவன், குசன் ஆகியோர், தாங்கள் யார், தங்கள் தந்தை யார் எனத் தெரியப்படுத்திப் பாடுவதாகத் திரையில் வெளிப்பட்டது. கேட்டோரின் காதுகளில், குறிப்பாக ராம பக்தர்களின் செவிகளில் ரீங்கரித்து நின்றது. அந்தப் பொடியன்களுக்குப் பொருத்தமான நளினமான இளங்குரலில் பி.சுசீலாவும், பி.லீலாவும் இழைத்திருக்கின்றனர். பி.லீலாவுக்கு அமைந்த முதல் திரைப்படப் பாடலும் இதுதானாம். கே.வி.மகாதேவன் இசைத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட படம் லவகுசா. சூப்பர்-டூப்பர் ஹிட் இரண்டு மொழிகளிலுமே. என்.டி. ராமாராவும் அஞ்சலிதேவியும் ராமர், சீதையாகக் கலக்கிய திரைக்காவியம். தமிழ் ’லவகுசா’வில் ஜெமினி கணேசன், ராமனின் தம்பி லக்ஷ்மணனாக வருகிறார். அப்போது இளமையோடு லக்ஷணமாக இருந்திருப்பாரோ…! தெலுங்கு நடிகர் சோபன் பாபு நடித்திருக்கிறார் தம்பி சத்ருக்னனாக. குணச்சித்திர நடிகை பி.கண்ணாம்பா ராமனின் அன்னை கோஸலையாக நடிக்க, பூமாதேவியாக நடித்திருப்பவர் எஸ்.வரலக்ஷ்மி. பின்னாளின் இரண்டு பெருநட்சத்திரங்கள் இப்படத்தில்..பாவம், சிறு பாத்திரங்களாக.   துணிவெளுப்பவர், அவரின் மனைவி ரோல்களில் எம்.ஆர். ராதா, மனோரமா!

மருதகாசியை ராமன் ஏற்கனவே பிடித்துவிட்டிருந்தார்! ‘சம்பூர்ண ராமாயணம்’(1950) படத்தில் ராவணன் பாடுவதாக வரும், சி.எஸ்.ஜெயராமன் பாடிய, ‘இன்றுபோய் நாளை வாராய்.. என, எனை ஒரு மனிதனும் புகலுவதோ…..! ’ என்ற உருக்கமான பாடலும் ஐயா மருதகாசியின் சித்திரம்தான்.

இவருடைய திரையுலகப் பிரவேசம் திருச்சி எஸ்.லோகநாதனின் உதவியுடன் நிகழ்ந்திருக்கிறது. மருதகாசியின் முதல் திரைப்படப் பாடல் ’மாயாவதி’ எனும் படத்தில் வந்தது. ‘பெண் எனும் மாயப்பேயாம் பொய் மாதரை என் மனம் நாடுமோ..’ என ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பாடலை. எந்தப் பெண், எப்படி ஏமாற்றினாளோ இவரை.. ஒன்றும் தெரியவில்லை! அதற்கப்புறம் பொன்முடி, மந்திரிகுமாரி, தூக்குத்தூக்கி, அமரகவி, மக்களைப்பெற்ற மகராசி, பாவை விளக்கு என புகழ்பெற்ற பல படங்களில் இவரது பாடல்கள் ஒலித்து ரசிகர்களை வசப்படுத்தின. ‘வாராய்…நீ.. வாராய்! போகுமிடம் வெகுதூரமில்லை..நீ வாராய்..!’, ‘உலவும் தென்றல் காற்றினிலே…’,  ‘எந்நாளும் வாழ்விலே…கண்ணான காதலே…!’, ’காவியமா நெஞ்சின் ஓவியமா..’, ‘மாசிலா.. உண்மைக்காதலே…’ மற்றும்,  ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே.. ஏனோ அவசரமே.. எனை அழைக்கும் வானுலகே’ போன்ற இனிமையான பாடல்களை வழங்கிய கவிஞர்.

சக கலைஞர்களை மதித்துப் போற்றிய மாமனிதர் மருதகாசி. பிரபல கவிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போன்றும், உடுமலை நாராயண கவியைத் தன் அண்ணனெனவும் மதித்தாராம். வாலி, டி.எம்.எஸ். ஆகியோருக்கும் திரையுலகவாழ்வில் ஆரம்பத்தில் உதவியிருக்கிறார். முப்பதாண்டுகளுக்குமேல் தமிழ்த் திரையுலகில் சிறந்த பாடலாசிரியராய் பிரகாசித்தவர். 4000 -த்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பெருங்கவிஞர் மருதகாசி. திருச்சி மாவட்டம் மேலக்குடிகாட்டில் பிறந்து கும்பகோணத்தில் படித்துவளர்ந்தவர்.   2007-ல், மருதகாசியின் பாடல்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு, தேசிய உடைமை ஆக்கியது. ஏதோ, அவர்களால் முடிந்தது..

சனிக்கிழமையாயிற்றே எனக் கோவிலுக்குப்போய், திரும்பி வந்து டிவி-யைப்போட்டால்.. தீர்ப்பு என்கிறார்கள், ஜென்மபூமி என்கிறார்கள்.. கோவில் என்கிறார்கள்…ராம் ராம் என்கிறார்கள். மனம் பரபரத்து,  அடி அடுக்கிலிருந்து தேடி எடுத்துக்கொடுத்தது  – ‘ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே..’ . கூடவே ஏதேதோ கதையெல்லாமும் வந்து சேர்ந்துகொண்டது.

**

இங்கும் .. அங்கும் ..

வழக்கம்போல நடைபயில என அந்தக் காலையில், குடியிருப்பு வளாகத்தைவிட்டு வெளியே வருகிறேன். பள்ளிக்குழந்தைகளின் அவசரங்கள், மஞ்சள் பஸ்களின் உறுமல்கள்  எனக் கடமையான பரபரப்புகளை ஒருவாறு கடந்தபின், சாலையில் சற்றே அமைதி. கால்கள் சீராக நடந்துகொண்டிருக்கையில், வழக்கம்போல் புத்தி ஏதோ சொல்லப் பார்த்தது; அதற்கும் பொழுதுபோகவேண்டுமே:  ‘சும்மாதானே நடந்துபோய்க்கொண்டிருக்கிறாய். கொஞ்சம் காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொண்டே நடந்தால் என்ன.. அந்தப் பார்க் வருவதற்குள்….’

புத்தியின் விண்ணப்பத்தைக் கேட்டு அங்கீகரிக்கும் முன், மனம் – அதைப்பற்றி என்ன சொல்ல, அது ஒரு தேவகணம்.. ஆரம்பித்தது, கருமேகம் படர்ந்திருந்த  காலைவேளையில், ஒரு  மெல்லிய ஹம்மிங்குடன்:

ஓ….  ஹோ.. ஹோ…

மயங்கும் கண்ணைப் பாராமல் ..
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..

இது என்னடா புதுக் கஷ்டம் என நினைத்ததோ என்னவோ, மீண்டும் தீவிரமாகக் குறுக்கிட முயற்சி செய்தது புத்தி:  ‘நான் என்ன சொல்றேன்னா.. காயத்ரியைக் காலையில் கொஞ்சம் சொல்லிக்கொண்டே நடந்தால்…’

ம்ஹும். இதற்குள், அண்டம் முழுதும் அந்தப் பெண்குரலாய்ப் பரவி விட்டிருந்தது மனம்:

ஓ…. ஹோ…ஹோ….

மயங்கும் கண்ணைப் பாராமல் ..
கலங்கும் நெஞ்சைக் கேளாமல் ..
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே ..
மழை வந்த வேளை
மனம் தந்த பாதை
அவன் தந்த உறவல்லவா…  ஆ.. ஆ…

நானே வருவேன்
இங்கும் அங்கும்
நானே… வருவேன்… வருவேன்… வருவேன்…

நான் நடக்க, நடக்க, மனம் மிதந்துகொண்டே வந்தது. பார்க் பெஞ்சில் உட்கார்ந்தபின்னும் விடவில்லை. மொபைலைத் தட்டி, மெல்லக் கேட்கவைத்தது. இயர்ஃபோன் கொண்டுபோகாததால், பெஞ்சில் மொபைலைப் படுக்கவைத்து மெதுவாகப் பாடலைப் பரவவிட்டேன். நான் பெறும் இன்பம், இனிதே பெறுக இவ்வையகம்..

நானே வருவேன்.. இங்கும் அங்கும்…
நானே…வருவேன்… வருவேன்… வருவேன்…

Haunting … நான் லயித்திருக்க, பக்கத்து நடைபாதையில் ஒன்றிரண்டு ஓரப்பார்வைப் பெண்கள், இதழ்களில் முகிழ்க்கப் பார்த்த மென்னகையை அடக்கிக்கொண்டு வேகமாகக் கடந்தார்கள். பாவம், என்னமோ ஆயிடுச்சு இவனுக்கு…

மனம், நாளெல்லாம் இந்தப் பாடலை ரீங்கரித்துக்கொண்டேயிருந்தது. அதை ஒன்றும் சொல்வதற்கில்லை.    ‘…பொல்லாதது.. மனம் பொல்லாதது.. என்ன சொன்னாலும் கேளாதது !’

**
<<<<<<< “நானே வருவேன்… இங்கும் அங்கும்..”
பாடல்:கண்ணதாசன். இசை: வேதா.  குரல்: பி.சுசீலா.
{படம்: யார் நீ? (1966) (ஜெய்சங்கர், ஜெயலலிதா )} >>>>>>>

 

அஸம்பவா ..

அம்பிகா பிரசாத். ஒரு சராசரி.. இப்படி-அப்படியாகக் கொஞ்சம் நேர்மை, நாணயம், கொஞ்சம் கடவுள் பக்தி, இத்தியாதி. வீட்டில் அடக்கமான பெண்டாட்டி, அருமையான பிள்ளை. தானுண்டு, தன் பிழைப்புண்டு, தன் குடும்பமும் உண்டு என வாழும் ஜீவன். ஒரு நல்லநாளில், அரசாங்கம் பணியிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டது! வீட்டிலேயே அடைந்துகிடப்பது என்னவோ போலாகிவிட்டது. ஆனால், ஒத்த வயதினில், அவருக்கு நெருக்கமான நண்பர் இருந்தார். மதன் கோபால். இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் அடிக்கடி சந்தித்துப் பொழுதுபோக்கினார்கள். கிண்டல், கேலி,  ஊர் வம்பு, தும்புகள் என அரட்டை. மீண்டும் சுவாரஸ்யம் தட்ட ஆரம்பித்திருந்தது வாழ்க்கையில்.

ஒரு இரவு வந்தது. அம்பிகா பிரசாதின் கதையை வேறுமாதிரியாக மாற்றிப்போட்டது. இல்லை.. அதெல்லாம் இல்லை, பிரசாத் தப்புத்தண்டா ஏதும் செய்யவில்லை. ஆனால்,  இந்த உலகில் அப்பாவி மனிதர்களுக்குத்தானே ஆபத்து வீடு தேடி வரும்? அந்த பாழாய்ப்போன இரவில் எல்லோரும் தூங்கிவிட்டிருந்தார்கள். ஊரே அடங்கிவிட்டிருந்தது போலிருந்தது. அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. சில நாட்களில் இப்படித்தான். வயசாகிவிட்டதோ? கொஞ்ச நேரம் ஆகுமே தவிர, தூக்கம் வந்துடும்.. வந்துடும் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார் பிரசாத். புரண்டு புரண்டு படுத்துப்பார்த்ததுதான் மிச்சம். ம்ஹூம்… தூக்கம் நெருங்காத கண்களை வெகுநேரம் மூடி வைத்திருப்பதில் சிரமம் தெரிந்தது. விழித்தார். நல்ல இருட்டு. அறையில் மூலைக்கு மூலை கண்களை உருட்டினார். ஆ.. அங்கே.. அந்த மூலையில்.. என்ன அது?  என்ன.. மங்கலாக..சாம்பல் நிறத்தில்? அசைகிறதே.. முன்னேயா  வருகிறது? ஒரு உருவம்… எப்படி உள்ளே? அவருக்கு பயம். நெஞ்சு படபடத்தது.  உடம்பில் மெல்லிய நடுக்கம். வாயில் வார்த்தை எழவில்லை. எச்சிலை விழுங்க முயற்சித்தார்.  கஷ்டப்பட்டுக் குரலை மேலே கொண்டுவந்தார்.. ”யார்..யார்.. நீ ஏன்.. இங்கே..” தடுமாறினார் ஈனக்குரலில்.

உருவத்திடமிருந்து மெல்லிய சத்தம், ஆனால் தெளிவாக வந்தது:  ”புறப்படு.. என்னுடன்” .

ஐயோ.. யாரிது?  எமனா.. முகம் சரியாகத் தெரியாமல்.. எம தூதனோ? அம்பிகா பிரசாதின் மூளையில் மணி வேகமாக அடித்தது. ”நானா .. நான்.. எதற்கு.  எங்கே….”

அவருடைய குழறலைத் தாண்டி அந்தக் குரல் தீர்க்கமாக வெளிப்பட்டது..

”உன் கதை முடிந்தது. கிளம்பு!” என்றது… என்றான் யமதூதன்.

”ஆ! ஐயோ.. நான் மாட்டேன். இன்னும் கொஞ்சநாள் ..  என்னை இருக்கவிடு..”

”ம்ஹூம். வா!”

இருக்கிற சக்தியையெல்லாம் சேர்த்துக்கொண்டு குழறினார் பிரசாத்: ”இத்தனை நாள் வேலை, வேலை எனப் படாதபாடெல்லாம் பட்டுவிட்டேன். ஒரு சுகம் இல்லை. இப்போதுதான் வீட்டில் கொஞ்சம் ஓய்வாக … இப்போதுபோய் வந்திருக்கிறாயே? உனக்கே இது தர்மமாகத் தெரிகிறதா?”

”பேசிக்கொண்டிருக்க நான் வரவில்லை. ம்…” குரலில் கடுமை.

விடமாட்டான் போலிருக்கிறதே..

”அப்பா!” – கையெடுத்துக் கும்பிட்டார் பிரசாத்.  ”கோபப்படாதே ! கொஞ்சம் பொறுத்துக்கொள். கொஞ்ச காலந்தான்..”

கேலியாக சிரிப்பதுபோல் மெலிதான சத்தம். ”காலமா? அதுதான் முடிந்துவிட்டதே !”

”சரி.. சரி.. அது உன் கணக்கு. ஆனால், என்னைக் கூப்பிடாதே. என்னால் வரமுடியாது.  எனக்கு உன் தயவு வேண்டும். மாட்டேன் என்று மட்டும் சொல்லிவிடாதே. உன்னை வேண்டிக்கொள்கிறேன். மூன்று வருஷம் கழித்து நீ திரும்பி வந்தால்…நான்.. ”

”மூன்று வருஷமா! ”

”கொஞ்சம் நான் சொல்வதைக் கேள். பெரும் சிக்கல் எனக்கு. ஒரே மகன்.  டாக்டருக்குப் படித்துக்கொண்டிருக்கிறான். இன்னும் மூன்று வருஷத்தில் படிப்பு முடிந்துவிடும். அவனை இப்படியே பாதியில் விட்டுவிட்டுப்போகமுடியுமா?  கொஞ்சம் இரக்கம் காட்டு. சரியாக மூன்றே வருஷம். பையன் டாக்டர் என்று ஆகிவிடுவான். அதற்குமேல், அரை நாள்கூட அதிகம் வேண்டாம். உடனே நீ என்னைக் கொண்டுபோகலாம்.  தயைசெய்து இதற்குமட்டும் ஒத்துக்கொண்டு, என்னை இப்போது விட்டுவிடு. போய்விடு..  போய்விடு..”  கைகூப்பி மன்றாடுகிறார் பிரசாத்.

யமதூதன் இதற்கெல்லாம் இணங்குபவனா, என்ன? ஆனால் அன்று, அவனுக்கும் என்ன தோன்றியதோ? இரக்கமா, வேறேதாவதா அது?

”சரி. போனால் போகிறது என்று உன்னை விட்டுவிட்டு, போகிறேன். ஆனால், போகும்போது உனக்கு வேண்டப்பட்டவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டுதான் போவேன்!”

தன் உயிரை எடுக்காதிருந்தால் அதுவே போதும் என்கிற சுயநலம் தாக்க, நெஞ்சு அடித்துக்கொள்ள, ’’சரி..சரி ..உன் இஷ்டம்.. இப்ப போயிடு. அது போதும்!’’ என்றார் நடுங்கும் குரலில் பிரசாத். உருவம் கரைந்தது..மறைந்தது. போய்விட்டது. வியர்த்துவிட்டது பிரசாதுக்கு. அறை மேலும் இருண்டதுபோல் காணப்பட்டது. தூரத்தில் நாய் ஒன்றின் ஊளைச் சத்தம் ஒரேயடியாக உயர்ந்து, ஈனமாகக் கேட்டது. அவரை என்னமோ செய்தது. வெகுநேரம் புரண்டு, புரண்டு படுத்திருந்த மனுஷன் களைப்பாகி,  ஒருவழியாகத் தூங்கிப்போனார்.

மறுநாள் அதிகாலை. விழிப்பு வந்தபோது, முந்தைய ராத்திரியின் கொடூரம் மனத்திரையில் பளிச்சிட்டது. பிரசாத் திடுக்கிட்டு எழுந்துகொண்டார். கதவைத் திறந்தார். வெளிச்சத்தைக் கண்டதும் மனதில் ஒரு மகிழ்ச்சி. நேற்று ராத்திரி வந்த பயங்கரன்…. அப்பாடா..சாமி! எப்படியோ தப்பித்துவிட்டோம்.

கொஞ்ச நேரத்தில் அவருடைய வீட்டிற்கு ஒருவன் சைக்கிளில் வந்து இறங்கினான். செய்தி. அவருடைய ஆத்மார்த்த நண்பர் மதன் கோபால் காலமாகிவிட்டார். ”ஆ! எப்போது? நேற்று மாலை வீட்டுக்கு வந்திருந்தானே.. கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோமே. நன்றாகத்தானே இருந்தான் மதன்.. உடம்புக்கு திடீரென  ஏதாவது..”

”உடம்புக்கெல்லாம் ஒன்றுமில்லை. இரவுச்சாப்பாட்டுக்குப்பின், குடும்பத்தில் எல்லோரிடமும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பேரக்குழந்தைகளுடன் ரொம்ப நேரம் விளையாடியிருக்கிறார். காலையில் இன்னும் எழுந்திருக்கவில்லையே என்று போய்ப் பார்த்தால்.. அசையாமல் கட்டிலில் கிடக்கிறார். ராத்திரியிலேயே உயிர் போயிருக்கவேண்டும்” என்று சொன்னவன், சைக்கிளில் ஏறி வேகம்பிடித்தான்.

அம்பிகா பிரசாதிற்கு வயிற்றை என்னவோ செய்தது. மனம் இருண்டது. நாள் பூராவும் அந்த சிந்தனை : ’தலைக்கு வந்தது.. தலைப்பாகையோடு போயிற்று.’ ஆனால்.. மதன் எத்தனை  நல்ல நண்பன், மனம்விட்டு நான் மணிக்கணக்கில் பேசும் ஒரே ஜீவன். எனக்கிருந்த ஒரே ஒருத்தன்.. போகிறபோக்கில் அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டானே ராத்திரியில் வந்த பாவி. ஹே பகவான்.. எல்லாம் வெறுமையாகிவிட்டது போலிருந்தது அவருக்கு. அடுத்த சில நாட்களில் குற்ற உணர்வில், குட்டிபோட்ட பூனைபோல அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார் பிரசாத். கொஞ்ச நாட்களுக்குப் பின், வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதுபோலிருந்தது. காலம் நகர்ந்துகொண்டிருந்தது.

அம்பிகா பிரசாதின் மகன்  மருத்துவம் முடித்தான். டாக்டர் ஆகிவிட்டான். அவருடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. ஆனால் சில நாட்களில் அவரே சொல்லியிருந்த மூன்றுவருடக் கெடு முடிந்தது. அடுத்த இரவில் அந்த உருவம் முன்னே வந்து, நிழலாய் ஆடியது. ‘திருப்திதானே.. கிளம்பு !’ என்றது.

சுகமாகச் செல்கிறதே வாழ்க்கை. உயிரைவிட முடியுமா இப்போ? கெஞ்சுகிறார் அம்பிகா பிரசாத், யமதூதனிடம். இந்த முறை அவர் சொல்லும் காரணம்? ”மகனுக்குக் கல்யாணம் ஆகவேண்டும், மருமகள் வீட்டுக்கு வரவேண்டும். ஒரே ஒரு வருஷம் போதும். முடிச்சிடுவேன்.. மேற்கொண்டு ஏதும் கேட்கமாட்டேன்! கைவிட்டு விடாதே..கருணை காட்டு”- என்று காலில் விழுந்து புரளாத குறை. யமதூதனிடம் ஒரு தயக்கம். பின்னர் எச்சரிக்கிறான். ”இதுதான் கடைசி உனக்கு. ஒரே வருஷம். திரும்பிவருவேன். தூக்கிச்செல்வேன்!” மறைந்துவிடுகிறான்.

அடுத்த நாளிலிருந்து, வேகவேகமாகக் காரியங்கள் செய்கிறார் அம்பிகா பிரசாத். மகன் டாக்டராச்சே. சமூகத்தில் நல்லபேர். வசதியான இடத்தில் பெண் கிடைத்து, திருமணம் நடந்துவிட்டது. வீட்டுக்கு வந்த மணமகளும்தான் எவ்வளவு பொருத்தம், என்ன ஒரு பாந்தம்! குடும்பமே கலகல என ஆகிவிட்டது. ’ஆஹா.. இதுவல்லவா வாழ்க்கை.. வாழ்க்கை என்பது ஒரு போதை!’ என்று பாட ஆரம்பித்தது அம்பிகா பிரசாதின் மனம். அதற்காக? காலம் நகராதிருக்குமா? ஓடுகிறது. ஓடிவிட்டது. நாளையோடு முடிகிறது இறுதிக்கெடு. நாளை இரவில் வந்துவிடுவானே அந்தக் கொடூரன்..

அந்த இரவும் வந்தது. தூக்கம் வராமல் பயமும், பதற்றமுமாய்க் கட்டிலில் அமர்ந்திருந்தார் அம்பிகா பிரசாத். பின்னிரவில் திடீரெனத் தெரிந்த உருவம் நெருங்கியது. ‘வார்த்தையைக் காப்பாற்றிக்கொள். வா!’ என்ற கட்டளை. அம்பிகா பிரசாதின் மனம் மூர்க்கமாக அடம்பிடித்தது. ’நான்.. நான்.. வரமாட்டேன்!” எனக் குழறிப் பின்வாங்குகிறார். யமதூதன் அலட்சியமாக நெருங்குகிறான். இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் பிரசாத். பக்கத்தில் வைத்திருந்த ஒரு பெரும் கழியைப் பாய்ந்து எடுத்துச் சுழற்றினார். உருவம் திகைப்பதுபோல் பின் வாங்க, வெறியுடன் தாக்கினார் அம்பிகா பிரசாத். ஓங்கி ஒரே போடு… உருவம் தப்பி மறைந்துவிட்டதோ.. ‘ஆ!.. ஆ!.. ம்..மா ..’ என்று இருட்டில் நொறுங்கியது ஒரு ஈனக்குரல். தடாலென்று ஏதோ கீழே விழும் சத்தம், அம்பிகா பிரசாதை திடுக்கிடவைத்தது. தட்டுத் தடுமாறி விளக்கைப் போட்டார். தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் தரையில் விழுந்துகிடந்தாள், அவரது மனைவி. ‘ஐயோ.. ஐயோ.’ வீரிட்டார் அம்பிகா பிரசாத். ”நீயா!.. நீ.. நீ எப்படி, எப்போது இங்கே வந்தாய்…” எனப் புலம்பியவாறு குனிந்து அவளை அசைத்தார். குலுக்கிப் பார்த்தார். அவளது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.  அங்கேயே உட்கார்ந்துவிட்டார். தலையிலடித்துக்கொண்டார். என்  அருமை மனைவியையும் இழந்துவிட்டேனே.. கதறினார் அம்பிகா பிரசாத். பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தவரின் மனதில் திடீரென்று ஒரு ஆவேசம் கிளம்பியது. ’உன்னால்தான் எல்லாம்.. உன்னால்தான்..’ என்று எங்கோ பார்த்துத் தனக்குத்தானே தீவிரமாக சொல்லிக்கொண்டார். துக்கம் தாளமுடியாமல், தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு இறந்தார் அம்பிகா பிரசாத் – என்று முடிகிறது கதை.

Saeed Jaffrey, Actor

’அசம்பவா’ என்ற பெயரில் 1984-ல் வெளிவந்த ஹிந்திப் படம். எண்பதுகளில், சோதனை முயற்சிகளாகவும், வித்தியாசமான கதைக்களன்கள் கொண்டதாகவும், பாலிவுட்டில் புதிய இயக்குனர்கள், தேர்ந்த நடிக, நடிகைகளைக்கொண்டு பல ‘நியூவேவ்’ அல்லது ‘off-beat films’ -களை எடுத்து வெளியிட்டார்கள்.  அவற்றினிடையேயும், மிக மாறுபட்ட திரைப்படம் இது. மனித மனதில் புதைந்துகிடக்கும் பலவீனங்கள், குள்ளநரித்தனங்கள், அநீதி, பேராசை என ஆழம் பார்க்கமுயல்கிறது இந்தப் படம். ஒரு கலைப்படைப்பு என்பதற்கான சித்திரங்கள் தெறிக்கின்றன இதில்.

கதையின் களமே மரணம் ஆனதால், இந்தப் படம் அதிக நாள் ஓடவில்லைபோலும். திரை விருது எதையும் பெறவில்லை. ஆயினும் விமரிசகர்களால் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஜக்தீஷ் பானர்ஜி எனும் இயக்குனரின் படம் இது. இங்கிலாந்தின் நாடகவெளியில் தாக்கம் ஏற்படுத்திய, இந்தியாவிலும் சில புகழ்பெற்ற டைரக்டர்களின் படங்களில் சிறப்பாக நடித்திருந்த சயீத் ஜாஃப்ரீ (Saeed Jaffrey) முக்கிய பாத்திரத்தில் (அம்பிகா பிரசாத்) நடித்த படம். மனைவியாக மராட்டிய சினிமா/நாடகத் திரை நட்சத்திரங்களில் ஒருவரான ரோஹினி ஹட்டங்காடி. ஆத்ம நண்பனாக மன்மோகன் கிருஷ்ணா. ஆர்ட் படங்களில் தென்படும் முகங்கள்..

”.. கட் கயி உம்ர் மேரி தோ.. முஜே பத்தா ஏ (ச்)சலா…” என்று துவங்கும் புபீந்தர் சிங் (Bhupinder Singh) இனிமையாகப் பாடிய ஒரு பாடல் இந்தப் படத்தில். (”அது முடியும் தருவாயில்தான் தெரியவந்தது – வாழ்க்கையா? நான் அதை எங்கே வாழ்ந்தேன்…” என்கிற அர்த்தத்தில்). இன்னுமொரு பாடல்: ’ஜிந்தகி பி க்யா நஷா ஹை…’ என்று ஆரம்பிக்கும் சுரேஷ் வாட்கர் பாடிய -”வாழ்க்கைதான் எத்தனை போதையானது.. நான் இன்று குடித்திருக்கிறேன்…மரணமே நீயும் சேர்ந்துகொள்.. இந்தா..குடி..” எனச் செல்லும் பாடல். இரண்டு இடங்களிலும் சயீத் ஜாஃப்ரீயின் நடிப்பு அசத்தல். இரண்டையும் எழுதியது விஸ்வனாத் சச்தேவ். மியூசிக்: பினாய் ஹஸீப் (Binoy Hasib). மராட்டிய எழுத்தாளர் எஸ்.என். நாவரே எழுதிய கதை ‘அஸம்பவா’.

இந்தப் படத்தை சோமாலியாவில் பணியிலிருக்கையில், வீடியோவில் பார்த்தேன். அதிர்ச்சியும், சொல்லவொண்ணா அயர்வும் தருவதாக இருந்த படம். சயீத் ஜாஃப்ரீயின் நடிப்போடு, மற்ற நடிக, நடிகர்களின் பங்களிப்பும் அளவாக அமைந்திருக்கிறது. நினைவிலிருந்து, கதையை மேலே கொண்டுவந்திருக்கிறேன்.

அமேஸானிலோ, ஃப்லிப்கார்ட்டிலோ டிவிடி, விசிடி கிடைக்கலாம். வாங்கிப் பாருங்கள் ஒரு முறை..

**