2021 ஆரம்பித்து 2 மாதங்கள் முழுசாக முடியவில்லை. கிரிக்கெட் உலகை அதகளப்படுத்தியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை எதிர்பாரா, அதீத வெற்றிகள் – in terms of exceptional quality and perseverance for us and extreme shock for the opponents! நினைத்துப் பார்க்கவும் முடியாத ரகளையான ஆட்டங்கள், முடிவுகள். அப்படி ஒன்றாக நேற்று (25/2/2021) – இரண்டாவது நாளிலேயே ‘கத்தம்’ ஆன அஹமதாபாத் பகலிரவு டெஸ்ட் – சரித்திரப் பக்கங்களில் ஏறி உட்கார்ந்துகொண்டது. இதற்கு முன்னும் சில டெஸ்ட்டுகள் இப்படி 2-ஆவது நாளிலேயே முடிந்திருக்கின்றனதான். (மிகவும் சமீபத்தியது 2018-ல், டெஸ்ட் அனுபவம் போதாத ஆஃப்கானிஸ்தானை இந்தியா எளிதாக வென்றது).
ஆட்டத்தில் வெற்றி என்றால் ஒரு பக்கம் துள்ளலும், இன்னொரு பக்கம் துவண்டுவிழுதலும் நடக்கும்தானே. இரண்டாவதாகச் சொன்னது இங்கிலாந்தின் கதையாயிற்று, 5-நாள் ஆட்டத்தின் இரண்டாவது நாளிலிலேயே. இங்கிலீஷ் வீரர்கள் நேற்று ராத்திரி தூங்கியிருக்க மாட்டார்கள். என்ன நடந்தது என்று காலையிலும் சரியாகப் புரிந்திருக்காது. Hangover of a late-night party is nothing compared to a hangover that envelopes one, after a sound thrashing in the hands of the enemy. சுழலில் சிக்கிச் சிதறியதை தங்கள் மனதில் மீண்டும் மீண்டும் போட்டுப்பார்த்துக் குலைவார்கள். அப்படி ஒரு மரண அடி. அடுத்த வியாழனுக்குள் எழுந்துவிட்டால் சரி..

Kingpin of Indian attack
அக்ஷர் என்பது இந்தியாவின் புதிய அஸ்திரம். இது அஷ்வினைவிடவும் துல்லியமாகப் பாயும். கொல்லும். எதிரி எதிர்பார்க்கவில்லை. தரமான ஸ்பின் பௌலிங்கை சமாளிக்கமுடியாமல் இங்கிலாந்தின் டாப் பேட்ஸ்மன்கள் வெலவெலத்து அவுட்டானது அகமதாபாதிலும் நடந்தேறியிருக்கிறது. இங்கிலாந்தின் பேட்டிங் கோச்சின் முகத்தில் ஈயாடவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்? பந்துகளைச் சந்திக்கத் திராணியற்று விக்கெட்டுகள் கிடுகிடுவென இரண்டு இன்னிங்ஸிலும் சரிந்தன. முதல் பேட்டிங் செய்கையிலேயே 74-க்கு 2 என்றிருந்த இங்கிலாந்து மேற்கொண்டு ரன் சேர்க்கமுடியாமல், 112-ல் இந்திய ஸ்பின்னர்களிடம் சுருண்டது. அக்ஷர் மிரட்ட, 6 விக்கெட்டுகள் அவரது காலடியில்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்? 99-க்கு 3 என்று முதல் நாளிரவு இருந்த இந்தியாவை, இரண்டாவது நாளில் 145 ஆல்-அவுட் ஆக்கியதில் ஏகப்பட்ட குஷி இங்கிலாந்துக்கு. இருக்காதா பின்னே! பார்ட்-டைம் ஸ்பின்னர் எனக் கருதப்படும் ரூட்டிற்கே 8 ரன்களில் 5 விக்கெட் கிடைக்குமளவுக்கு இந்தியாவின் பேட்டிங் சொதப்பல். கொடுமை. ஆனால் இடைவேளைக்கப்புறம் அவர்கள் பேட்டும் கையுமாக இரண்டாவது இன்னிங்ஸிற்காக இறங்குகையில் – 175-180 அடிக்கலாம் என எத்தனித்திருப்பார்கள் – புதுப்பந்தும் கையுமாக வரவேற்றது இஷாந்தோ, பும்ராவோ அல்ல. அக்ஷர் பட்டேல்! முதல் 3 பந்துகளில் 2 விக்கெட். 0 / 2. இங்கிலாந்தின் பேண்ட் அப்போதே இடுப்பிலிருந்து நழுவ ஆரம்பித்துவிட்டது. அதற்கப்புறம் நடந்தது பேட்டிங் அல்ல.. பேத்தல். பிட்ச் என்னப்பா செய்யமுடியும், நேராக வரும் பந்தே கண்ணில் படாவிட்டால் ?
’என்னென்னவெல்லாமோ செய்துபார்த்தது: அம்பயரை முறைத்தது, சான்ஸே இல்லாத சமயங்களிலும் DRS ! – என்று அலறியது, பிட்ச்சை வெறித்துப் பார்த்தது, மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டது, அவ்வப்போது பிரார்த்தனையும் செய்திருக்கும்..’ என இங்கிலாந்தின் பரிதாபத்தை வர்ணிக்க முயல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ். ஒன்றும் ஒப்பேறவில்லை. 81 ஆல்-அவுட். இந்தியாவுக்கெதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர். இந்தியா வெல்ல 49 ரன்களே தேவை என்ற இலக்கு. ரோஹித்தும், Gill-உம் சேர்ந்து 8 ஓவருக்குள் அடித்து நொறுக்கி, விரட்டிவிட்டார்கள் இங்கிலாந்தை. பிங்க் பந்து, இங்கிலாந்தின் முகத்தைச் சிவக்க வைத்துவிட்டது.

பிட்ச் படுமோசமாமா? டெஸ்ட் ஆடுவதற்கே லாயக்கில்லையா? இப்படி சிலர் இங்கிலாந்தில் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களைப்போல் சில இந்திய பழசுகளும். எதிர்பார்த்ததுதான். ‘It looks undercooked because the batsmen were undercooked..’ எனத் திட்டியிருக்கிறது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழ். விமரிசனம் இரண்டு அணிகளின் பேட்ஸ்மன்களுக்கும் சேர்த்துத்தான் என்பதைக் கவனிக்கவேண்டும் – Rohit Sharma and Zak Crawley (Eng. first innings) being exceptions.
ஸ்டார் சேனல் விமரிசகரான இங்கிலாந்தின் முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் (Graeme Swann) இங்கிலாந்து பேட்ஸ்மன்களைக் கடுமையாக சாடியிருக்கிறார். ‘க்வாலிட்டி ஸ்பின் பௌலிங்கை எதிர்கொண்டு விளையாடுகிற விதமா இது? இந்த மேட்ச்சில் ஸ்பின்னர்களுக்குக் கிடைத்த 28 விக்கெட்டுகளில், 21-ல், பந்து ’ஸ்பின்’ ஆகவே இல்லை! நேராக வந்து pad-ஐயோ, ஸ்டம்ப்பையோ தாக்கியவை. இதிலும் நீங்கள் ’எல்பிடபிள்யூ’ அல்லது ’க்ளீன் -போல்ட்’ ஆகிறீர்கள்! பிட்ச்சையா குறை சொல்லப்பார்க்கிறீர்கள்?’ எனப் பாய்ந்துள்ளார் ஸ்வான். மேலும், அஷ்வினை விடவும் இதுபோன்ற பிட்ச்சுகளில் ஆபத்தானவர் அக்ஷர் என்றிருக்கிறார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சனும் விடவில்லை. இரு தரப்பு பேட்ஸ்மன்களின் ஆட்டத்தையும் குறை சொல்லியிருக்கிறார். ’3-ஆவது, 4-ஆவது நாளுக்கு ஆட்டத்தைக் கொண்டு சென்றிருக்கவேண்டும். பந்தை ஒழுங்காகப் பார்த்து ஆடினால்தானே!’ என்று விளாசல்.
’இரண்டே நாட்களில் கதையை முடித்து, இங்கிலாந்தை இந்தியா அவமானப்படுத்திவிட்டது. ஆனால் உண்மை என்ன? மேட்ச் ஆரம்பிக்கும் முன்னரே, இங்கிலாந்து தோற்றுவிட்டது.. அபத்தமான அணித் தேர்வு: ஒரே ஒரு ஸ்பின்னர், 11-ஆம் நம்பர் வீரராக நால்வர் !’ – என இங்கிலாந்தின் சோகத்தைக் கிண்டிக் கிளறிப் பார்த்திருக்கிறது லண்டனிலிருந்து வெளிவரும் The Sun.
2-1 எனத் தொடரில் இந்தியா முன்னிலை. மேட்ச்சில் அக்ஷருக்கு 11 விக்கெட்டுகள். Patel is already a find of the tour for India. பட்டேல் போடுகிற போட்டில் ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லை என்பதே மறந்துவிட்டது ரசிகர்களுக்கு! அஷ்வினின் 400 விக்கெட்டுகள். இஷாந்த் ஷர்மாவுக்கு 100-ஆவது டெஸ்ட் மேட்ச் இது – அபார டெஸ்ட் சாதனைகள்.
இதே மைதானத்தில், வேறொரு பிட்ச்சில் கடைசி டெஸ்ட். மார்ச் 4-ல் துவக்கம். அதில் இந்தியா தோற்காமல், வென்றாலோ அல்லது டிரா செய்தாலோ, உலகக்கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் ஃபைனலில் நியூஸிலாந்தை சந்திக்கும். இந்தியா தோற்றால், ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கும் யோகம்! பார்ப்போம்.
**