விக்ரம் – Just a chartbuster ?

ஃபினாமினல், ப்லாக்பஸ்ட்டர், சார்ட்பஸ்ட்டர் என்றெல்லாம் ஒரு படத்தின் ‘வெற்றி’யைப்பற்றிப் பிரஸ்தாபிப்பது என்பது, அது அள்ளிக்கொடுத்த பண விஷயத்தைப் பிரதானமாக வைத்துத்தான், பொதுவாக. 200 ஐத் தாண்டிருச்சா, என்ன.. 400-க்கும் மேல போய்க்கிட்டிருக்கா! – போன்ற ஆஹா.. ஓஹோக்கள் திரைப்படம்பற்றிய கமர்ஷியல் ஆங்கிள் பிரமிப்புகளே. வியாபாரமாகவே உருமாறிவிட்ட உலகில், வியாபாரம்பற்றித்தானே எப்போதும் பேசுவார்கள்? குதிப்பார்கள்? அதில் தவறென்ன சொல்லமுடியும்.

விக்ரம் (2022)

இந்தப் படத்தை நான் பார்க்க விரும்புவது குறிப்பாக ஃபஹத் ஃபாஸில் (Fahadh Faasil), விஜய் சேதுபதி நடிப்பிற்காக. ஆங்காங்கே இவர்கள் இருவரின் பங்களிப்புபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதால். மேலும், லோகேஷ் கனகராஜ் அவ்வளவு நல்ல இயக்குனரா என்ன? சினிமாவை ஒரு கலானுபவமாக, அதாவது ஒரு சீரியஸ் மீடியம் என அவதானித்து, ‘செலெக்ட்’ படங்களாகப் பார்த்துவருவதால்தான், இவ்வாறான சிந்தனை. விக்ரம் ஒரு ஆர்ட் படமல்ல. ஒரு சத்யஜித் ராய், மிருணாள் சென், அரவிந்தன் படத்தைப்போல் திரையில் இழையும் கவிதையல்ல என்பது தெரிந்ததே (தினத்தந்தி மன்னிக்க)! வணிகமே இதிலும் குறிக்கோள் எனினும், கலைக்கோணத்தில் சிறந்த நடிப்பு, இயக்கப் பங்களிப்புகள் உண்டோ இந்தப் படத்தில் எனத் தெளிவாவதில் ஒரு சந்தோஷம். படத்தை நிதானமாக உட்கார்ந்து பார்த்தால்தான் இந்த விஷயங்களைப்பற்றி அறிய நேரும். கூடவே, கமல் அங்கிளின் நடிப்புத் திறன் அப்படியே இருக்கா, இல்லை, ஒருமாதிரி ‘மய்ய’மாகப் போய்விட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள! ஏனெனில், வெறுமனே சுஹாசினி தன் சித்தப்பாபற்றி வானளாவ சொல்லும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு திருப்திப்பட்டுக்கொண்டிருக்கமுடியாதே..

**

வெங்கட் சாமிநாதன்

நான் படிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படுவதைவிட, விமரிசனம் என்கிற பெயரால் தாக்கப்படுவதையே விரும்புவேன்.
-சாமுவேல் ஜான்சன்.

எந்த ஒரு கலாச்சாரத்திலும், மொழியிலும் இலக்கிய-கலை விமரிசனம் என்பது ஒரு சீரிய கலை. எளிதான விஷயம்போல் தோன்றும் சிக்கலான சங்கதி! எளிதில் கைவரும் கலை அல்ல. நவீனத்தமிழின் இலக்கிய விமரிசக முன்னோடிகளாக வ.வே.சு ஐயர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறிப்பிடமுடியும். அண்மைக்காலத்தில், சமகாலத் தமிழ்ப் படைப்புகளின் சிறந்த விமரிசகராக அறியப்பட்டவர் வெங்கட் சாமிநாதன். இலக்கியம் மற்றுமன்றி, நாட்டியம், சங்கீதம், நாட்டார் கலை என, தமிழ்க்கலாச்சாரத்தின் அனைத்துத் திக்குகளிலும் பாய்ந்தது, அலசியது அவரது பேனா.

மிகுந்த நேர்மையோடு, ஒரு படைப்பாளி, கலைஞனைப்பற்றிய முன் முடிவுகள் ஏதும் மனதில் கொள்ளாது, படைப்பினை அவதானித்தால்தான் முறையான விமரிசனம் எழுத வாய்க்கும். “தமிழகக் கலைச் சூழல் பற்றி எழுதுவது, சிக்கல்களிலும் முரண்களிலும் அகப்பட்டுத் தவிப்பதாகும். கலைவடிவங்கள் அத்தனையும் ஒரு சீரான கலை உணர்வால் பேணப்படுவதில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வித சூழல்களால் ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றன. இக்கலைகளின் வாழ்நிலையைக் கொண்டு இவற்றை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் முதலாவது, மரபார்ந்த நீண்ட வரலாறு கொண்ட வடிவங்கள். மற்றது புதியன- ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின், இம்மண்ணில் அறிமுகப்படுத்தவை’’ என்று கூறுகிறார் வெங்கட் சாமிநாதன். ’’பண்பாடு என்ற அறுபடாத செயல்பாட்டின் ஒரு துளியே இலக்கியம். ஒரு காலகட்டத்தின் இலக்கியம் அக்காலகட்டத்தின் பிற அனைத்துக் கலைகளுடனும் தொடர்புடையது’’ என்று கருத்துரைத்தவர் அவர்.

வெங்கட் சாமிநாதன் சிறந்த வாசகரும்கூட. எண்ணற்ற தமிழ், ஆங்கில இலக்கியங்களைத் விரும்பி, தேடிப் படித்தார். நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என்று ஒரு படைப்பு எந்தப் பிரிவினதாக இருப்பினும், ஆழ்ந்து படித்து, ரசித்து தன் கறாரான இலக்கிய விமரிசனத்தை வரைவதில் வல்லவர். ஒரு படைப்பாளி/கலைஞனைப் பற்றிய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விலக்கி, பாரபட்சமின்றி படைப்புகளை நேர்மையாக அணுகும் திறம் வாய்க்கப்பட்டிருந்தவர் வெ.சா. தமிழின் முக்கியமான ஆளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் சுந்தர ராமசாமி, ” தமிழின் மீதான அக்கறையில், வெங்கட் சாமிநாதனை பாரதியுடனே மட்டுமே ஒப்பிடமுடியும்” என்று கூறுகிறார்.

1950-களிலிருந்து, எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவினால் தொடங்கப்பட்ட `எழுத்து` சிற்றிதழ் மூலம் தன் விமரிசனப் பார்வையை முன்வைத்துக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சமீபகால இணைய இதழ்களான திண்ணை, சொல்வனம் போன்றவற்றிலும் கலை, இலக்கிய விமரிசனக் கட்டுரைகளத் தனியாகவும், தொடர்களாகவும் எழுதி வந்தார். வெங்கட் சாமிநாதனின் `இச்சூழலில் `, `கலை வெளிப்பயணங்கள் `, `திரை உலகில் `. `ஓர் எதிர்ப்புக் குரல்`, ‘பான்ஸாய் மனிதன்` ஆகிய கலைவிமரிசனத் தொகுதிகள் புத்தக வடிவம் பெற்றுள்ளன. ` அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை ` என்கிற தலைப்பில் சமகால நாடகக்கலை பற்றிய இவரது விமரிசனக் கட்டுரைகளும் தொகுதியாக வெளியாகியுள்ளது. சுயசரிதைக் கட்டுரைத்தொடர் `நினைவுகளின் சுவட்டில்` திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்தது.

1998-ல் இந்திய சுதந்திரத்தின் பொன்விழாவினையொட்டி `இந்தியப் பண்பாட்டு உறவுக் கழகம்` (Indian Council for Cultural Relations), கடந்த 50 ஆண்டுகளில் வெவ்வேறு இந்திய மொழிகளின் போக்கும் வளர்ச்சியும் பற்றி ஆய்வுக்கட்டுரைகளைத் தயாரித்து ‘Indian Horizon’ என்கிற தலைப்பில் ஆங்கிலத் தொகுதியாக வெளியிட்டது. அதில், தமிழ் மொழிக்காக வெங்கட் சாமிநாதன் தயாரித்த ஐம்பதாண்டுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய, தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள் சில அடங்கிய கட்டுரை ‘The Enigma of Abundance’-என்கிற தலைப்புடன் சேர்க்கப்பட்டது. ஜான் ஆப்ரஹாம் இயக்கி, விருதுபெற்று புகழீட்டிய திரைப்படமான `அக்ரஹாரத்தில் கழுதை` படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் வெங்கட் சாமிநாதன்.

கனடா நாட்டின் டொரண்ட்டோ பலகலைக்கழகம் வழங்கும் `இயல்` விருது வெங்கட் சாமிநாதனுக்கு 2003-ல் வழங்கப்பட்டது. தமிழ் நாடு அரசின், இந்திய அரசின் விருதுகள் எதுவும் இந்த மொழிக்கலைஞருக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பது சோர்வு தரும் விஷயம்.

நவீனத்தமிழின் விமரிசக வித்தகர் வெங்கட் சாமிநாதன் நேற்று (21-10-2015) பெங்களூரில் காலமானார்.
அன்னாரின் மறைவுக்கு நமது ஆழமான அஞ்சலி.

**