நேற்றும் நாளையும்

காலைக் காஃபியை மெதுவாக ஸிப் செய்துகொண்டு வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். தினமும் ஒருமுறையாவது விமலாதித்த மாமல்லன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று எட்டிப் பார்த்துவிடுவது வழக்கம். இலக்கிய தாகம் என்றெல்லாம் ஜல்லியடிக்க விருப்பமில்லை. ஏதாவது சண்டை, சர்ச்சை, சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறதா என்று அப்டேட் செய்துகொள்ளத்தான். சில சமயங்களில் அப்படியே நல்ல வாசிப்பனுபவமும் அமைந்துவிடுவதுண்டு. உதாரணம்: மாமல்லனின் ‘படித்த டாக்டர்களும் படிக்காத மெக்கானிக்கும்’ மற்றும் சாருவின் ’அசோகமித்திரனின் தத்துவம்’ எனும் சமீபக் கட்டுரைகள்.

ஜெயமோகன் பக்கத்தில் இருந்தபோது, இளம் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின்பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது பட்டது கண்ணில் : ‘நேற்றும் நாளையுமில்லாத பித்து’. என்ன சொல்கிறார் இவர்? நேற்றும் நாளையும் ‘இல்லாத’…. அப்படி ஒரு நிலை சாத்தியமெனில், அது நமக்குள் நிஜமாகவே நிகழ்ந்துவிட்டால் எப்படி இருக்கும்? பித்தா அது? அதுவல்லவோ தெளிவு!

எதிரே என்ன நடக்கிறது, தனக்குள்ளேயும் இந்த க்ஷணத்தில் என்னதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற தெளிவான ப்ரக்ஞை ஏதும் மனிதனுக்கிருப்பதில்லை. எப்போதும் ஏதாவதொரு பழசைப்பற்றியோ, எதிர்காலம்பற்றியோ – அப்படி ஒன்று ஒருவேளை இல்லாமல் போகும் சாத்தியமும் உண்டு – நினைத்துக்கொண்டு நிலைகொள்ளாத மனதுடன் நாளெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறான். நிஜத்தில் வாழ்வைப்பற்றிய எந்தப் புரிதலும் பெரும்பாலும் அவனுக்கில்லை. அதற்கான சிரத்தையோ, ஏன் சிந்தனையோகூட அவனிடம் இருப்பதில்லை. உள்ளும் வெளியுமாக உண்மையில் ஏதோ நடக்கிறது என்பதை உணருமுன்னேயே, அவனுடைய கதை முடிந்துவிடுகிறது.

இருந்தும் மனிதன், தான் இவ்வுலகில் ’வாழ்ந்துகொண்டிருப்பதாக’ நம்புகிறான். நம்பிக்கையில் உழல்கிறது உலகம் . .

**

இழுத்துமூடு முதலில் !

அச்சுபிச்சு வாட்ஸப் மெசேஜுகளுக்கிடையில் ஒருநாள் அதிசயமாக ஓஷோ. என்னவாம் அவருக்கு. . அதாவது என்ன சொல்லிவைத்திருக்கிறார் ? இதுதான்: அனாவசியமாகக் கடந்தகாலத்தைச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள்.

ரொம்பச்சரி. ஆனால் அவ்வளவு எளிதான காரியமா அது? நம்ம கடையா என்ன, இஷ்டம்போல் இழுத்து மூடிவிட? அப்படி எல்லாம் மனம் நம் பேச்சைக் கேட்டுவிட்டால் அப்புறம் என்னதான் இருக்கிறது. மனிதன் இன்னேரம் எங்கேயோ போயிருப்பானே ஐயா! இதை எழுதும்போதுகூட என்னை இடையிலே அம்போ என்றுவிட்டுவிட்டு மனம் வேறெங்கோ ரவுண்டுக்குப் போயிருப்பது தெரிகிறதே! அதைத் தற்காலிகமாகவாவது இழுத்து அல்லவா ஸ்க்ரீனுக்குக் கொண்டுவரவேண்டியுள்ளது? ஒரு இடத்தில் நில்லாது எங்கெங்கோ இஷ்டத்துக்கு ரவுண்டு சுற்றிவரும் மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதுபற்றி, அமைதிப்படுத்துதல்பற்றி என்னென்னவோ எல்லாம் காலங்காலமாய் சொல்லப்பட்டுவருகிறதே. பொல்லாக் குணமுடைய மனதை சொல்லாலோ, செயலாலோ அவ்வளவு சுலபமாக நிறுத்திவிடமுடியுமா? எத்தனை பேர் அதை சாதித்திருக்கிறார்கள் இதுவரை?

’ஆயிரம் வாசல் இதயம். . அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். .’ அதில் எந்த வாசலை மூடுவது? அப்படியே மூடினாலும் இன்னொன்று தன்னால் திறக்கும் தன்மையதாயிற்றே. மனிதன் என்னதான் செய்வான் பாவம்? ’மனம் ஒரு குரங்கு . . ! ’ என்று இன்னொரு இடத்தில் ஆரம்பித்த கண்ணதாசன் தொடர்ந்து ‘. . நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும் . . நிம்மதி இல்லாமல் அலைபோல மோதும்!’ என்றெல்லாம்வேறு நொந்துபோய் எழுதியிருக்கிறாரே. சித்தர்களையே சித்தம் கலங்கவைத்த விஷயமாயிற்றே. . அத்தகைய குணவான் ஆன மனதிடம்போய் ’அந்தக்காலத்துக்கெல்லாம் திரும்பித் திரும்பிப் போகாதே . . பழைய குப்பையைக் கிளறித் தொலைக்காதே! கொஞ்சம் சும்மா மூடிகிட்டுக் கிட!’ என்றால் கேட்டுவிடுமா?

’மனமே முருகனின் மயில்வாகனம் . . ‘ என்று ஆரம்பித்து நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறது ஒரு பக்திப்பாடல். முருகபக்தர்களுக்கு கேட்கப் படுசுகமானது. மனமென்பது முருகன் அமரும் வாகனமாகவே ஆகிவிட்டால், அதாவது எப்போதுமே முருகன்தான். வேறு சிந்தனையில்லை என்றாகிவிட்டால், கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் போன்ற கஷ்டகாலங்கள் ஏதுமில்லை என்றாகிவிடும்தான். ஆனால் அது தித்திக்கும் விஷயம்போல் தோன்றினாலும், எல்லோருக்கும் சித்திக்கும் விஷயம் அல்லவே? அதற்கும், இறைத்தேடல் உள்ள ஒருவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏகப்பட்ட சாதனாக்களை வாழ்நாள் முழுதும் செய்யவேண்டியிருக்குமே? அப்படியும் அந்நிலை சாத்தியமாகுமா என்பதே பெரும் கேள்விக்குறிதானே! சாதாரணர்கள் அண்டக்கூடிய சங்கதியா அது? நீங்கள்மாட்டுக்கு ‘.. கொஞ்சம் கொஞ்சமாக பழையதுகளை மூடிவிடுங்கள்’-னு சும்மா சல்லீஸா சொல்லிட்டு அந்தப்பக்கமா போயிட்டீங்களே ஆச்சார்ய ரஜ்னீஷ் – அதாவது ஓஷோ ஜி !

**

தண்ணி வரல !

காலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்!’ ’என்ன ப்ரச்னை? வாட்டர் மோட்டார் வேலைசெய்யவில்லையா?’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது!’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் லட்சணம் இப்படித்தானிருக்கிறது. காலை எழுந்தவுடன் ஒரு வாக் போனால் எதிர்ப்படுவது தண்ணீர் டேங்கர்கள்தான். இந்தத் தண்ணீர் டேங்கர்களும் இப்போதெல்லாம் சொன்னவுடன் வருவதில்லை. உங்கள் அவசரத்தைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்? அவர்களது ’ரெகுலர்’ கஸ்டமர்களைக் கவனித்துவிட்டு அப்புறம்தான் உங்களிடம் வருவார்களாம். அவர்கள் ராஜ்யத்தின் நியதிகள். வேறு வழியில்லை. அவஸ்தையிலிருப்பவன் அனுசரித்துத்தான் போகவேண்டும்.

ஒருகாலத்தில் இந்தியாவின் ’கார்டன் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட அழகான, சிறு நகரமாக இருந்தது இது. இன்று காலத்தின் கந்தர்வகோளத்திற்கேற்ப, ஊதி, ஓவராகப் பெருத்து நடக்கமுடியாமல் தள்ளாடுகிறது. கடந்த 15 வருடங்களாக பெங்களூர் கண்ட அபரிமித ‘வளர்ச்சி’யின் பின்விளைவு இது. City planning என்றெல்லாம் வெளிநாடுகளில்தான் சொல்கிறார்கள். நமது நாட்டில் இதைப்பற்றி ஆரம்பித்தால் ’அப்படீன்னா என்ன?’ என்று திருப்பிக்கேட்பார்கள் தெள்ளுமணிகள். கொள்ளையடிப்பதும், சுருட்டுவதும், சூறையாடுவதையும் தவிர வேறெந்தத் திட்டமும் இங்கே அரசாள்பவர்களிடம் இருந்ததில்லை. எப்படியாவது நாற்காலியைக் கைப்பற்றிவிடவேண்டும் எனத் துடிக்கும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் இல்லவே இல்லை. இனியாவது வருமா என்கிற நம்பிக்கையும் நமக்கில்லை. எந்த ஒரு மாநிலத்தையும் கட்சியையும் குறிப்பிட்டு இதனைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதுதான் சுதந்திரத்துக்குப்பின் ஒரு நாடாக இந்தியா அனுபவித்துவருவது.

அன்று சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் ரியல் எஸ்டேட், BBMP, லோக்கல் கவுன்சிலர் என்று உலவுகின்ற ஆசாமி. சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் லொகாலிட்டிக்கு அருகில் புதிய ப்ராஜெக்ட் வரப்போகிறதாம். வேறென்ன? கட்டிடங்கள்தான். வில்லாக்கள் அமையவிருக்கின்றன என தூரத்தில் கைகாண்பித்தார். ’அங்கே ஒரு குளம் இருக்கிறதே!’ என்றார் இன்னொருவர். ‘அது அவர்களின் அலுவலகக் கோப்பில், மேப்பில்தான் இருக்கிறது!’ என்று சிரித்தார் இவர். ’இப்போது போய்ப்பாருங்கள். கொஞ்சம் ஈரம் தென்படலாம். மற்றபடி மூடியாச்சு. குளமெல்லாம் போயே போச்சு!’ என்றார் ரொம்ப சாதாரணமாக. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. ’மெட்ரோலைன் போடுகிறோம், ரோடை அகலப்படுத்துகிறோம் என்று 50-60 வருட வயதான நாட்டு மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியாயிற்று. புறநகர்ப்பகுதிகளிலும் மரங்கள், பச்சைவெளிகள் வேகமாக மறைந்துவருகின்றன. புதிய புதிய ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் முளைக்கின்றன. அசுரவேகத்தில் வளர்கின்றன. லேக்வியூ அபார்ட்மெண்ட்ஸ் எனப் பெயர்ப்பலகை தெரிகிறது. அபார்ட்மெண்ட் முழித்துக்கொண்டு உற்றுப்பார்க்கிறது. லேக் எங்கே? ஏரிகள், நீர்த்தேக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருடங்களாகிவிட்டன. அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடு கட்டிட முதலாளிகளின் சுற்றுச்சூழல் வேட்டை. அவர்களது ப்ராஜெக்ட் ப்ரோஷர்களைப் (brochure) பார்த்தால் கட்டிடங்களுக்கு மத்தியில் அல்லது ஒருபகுதியில் 70% பச்சைவெளி எனப்போட்டிருக்கும். என்னவோ பெங்களூர் ஏற்கனவே பாலைவனமாக இருந்ததுபோலவும் இந்த மேதாவிகள்தான் வந்து எல்லாவற்றையும் பச்சையாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுபோலவும் விளம்பரம். என்ன ஒரு அயோக்கியத்தனம். மிஞ்சி மிஞ்சிப் போனால், கொஞ்சம் நல்லபேர் வாங்கியிருக்கும் சில கட்டிட கம்பெனிகளின் ப்ராஜெக்ட்டுகளில் கொஞ்ச மரங்களை அழகுக்காக நட்டுவைத்திருப்பார்கள் முகப்பில். எத்தகைய மரங்கள்? வெளிநாட்டு மண்ணின் கூறுகொண்ட பனை ஜாதி மரங்கள், ஈச்சை மரங்கள் போன்றவை. வேம்பு, பூவரசு, பூங்கொன்றை, ஆல், அரசு, மா, தென்னை போன்ற நிலத்தை செழுமைப்படுத்தி, சுற்றுச்சூழலை சீர்படுத்தும், பறவையினங்களுக்கு உணவுதரும், புகலிடமாகும் நாட்டுமரங்களின் இடத்தில் தூண் தூணாகப் பனை, ஈச்சை மரங்கள். ஒரு குருவி, காகம்கூட இவற்றின்மேல் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ஒண்டுவதற்கு நிழலாவது சரியாகக் கிடைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை.

இப்படி ஆங்காங்கே புதிய புதிய கட்டிடங்கள், கான்க்ரீட் மலைகள் தினந்தினம் எழும்பிக்கொண்டே இருக்கின்றன பெங்களூரில். அங்கு வசிக்கும், வசிக்கப்போகும் மக்களுக்குக் குடிப்பதற்கு, புழங்குவதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? நகராட்சித் தண்ணீர் இணைப்பு பெரும்பாலான குடியிருப்புப்பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்டிட வளாகத்திற்கும் ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாகத் தண்ணீர் வசதி ஆரம்பத்தில் கட்டிட முதலாளிகளால் செய்துதரப்படுகிறது. ஏற்கனவே ஊரில் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகளைத் தூற்று மூடியாயிற்று. மரங்களை வெட்டி, விற்று ஏப்பம் விட்டாயிற்று. முறையாக மழைவருவதும் பொய்த்துப்போக ஆரம்பித்து விட்டது. தண்ணீருக்காக பூமியை சதா தோண்டிக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? ஆழ்துளைக்கிணறுகள் எத்தனை நாளைக்குத் தாங்கும்? இரண்டு வருடங்களுக்குப்பின் நீர்வற்றி, வெறும் துளைதானே மிச்சமிருக்கும். நிலத்தடி நீர் என்பதும் கானல்நீராகிவிடுமே? நகரம் இவ்வளவு வேகமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகியிருக்கிறது. எவனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இத்தனை நடந்துகொண்டிருக்கையிலும், புதிய கட்டிட முயற்சிகளை சீர்படுத்த, சில குடியிருப்புப்பகுதிகளிலாவது சூழல் நலம் கருதி மேற்கொண்டு கட்டுமானங்களைத் தவிர்க்க, தடைவிதிக்க, அரசிடமிருந்து எந்த ஒழுங்குமுறையும், வரையறையும் இல்லை. சட்டதிட்டங்கள் இயற்றப்படுவதாக, முயற்சிகள் செய்யப்படுவதாகத் தோன்றவில்லை. அரசியல்வாதிகளின், அரசியல் அமைப்புகளின் பேச்சில் இவை இருக்கலாம். காரியத்தில் ஒரு மண்ணும் இல்லை.

இப்படிப் பெரிதாக வாயைத் திறந்துவைத்து, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் என எல்லா நலன்களையும் கபளீகரம் செய்து பூதாகாரமாக வளர்ந்துவரும் நகரில், ஏற்கனவே வசிப்பவர்களும், புதிதாகக் குடியேறியவர்களும் தொடர்ந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது. குடிநீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை எப்படியோ தங்களால் இயன்ற அளவுக்குப் பூர்த்திசெய்ய முயற்சித்தபடி.

**

கிஷோரி அமோன்கர்

இந்திய சாஸ்த்ரீய சங்கீத மரபில், தென்னாட்டு ரசிகர்கள் மத்தியில் கர்னாடக சங்கீதம் புகழ்பெற்றிருப்பதைப்போலவே, வடநாட்டில் காலங்காலமாய் பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களால் அனுபவித்து மகிழப்பட்டு வருவது ஹிந்துஸ்தானி சங்கீதம். பலவருடங்களாக, ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரு மேதை என ரசிகர்களாலும், சங்கீத விமர்சகர்களாலும் போற்றப்பட்டவர் கிஷோரி அமோன்கர்.

ஹிந்துஸ்தானி இசையின் ஜெய்ப்பூர் கரானா (Jaipur Gharana) என்கிற இசைமரபின் கீழ் வருபவர் கிஷோரி அமோன்கர். அவர் மேடையில் பாட ஆரம்பித்தால் சங்கீத ரசிகர்கள் நேரம்போவது தெரியாமல் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எண்பதுகளில் நானும் நண்பனும் டெல்லியின் மாலை நேரங்களில், பரத நாட்டியம், கத்தக், குச்சிப்புடி, மோஹினி ஆட்டம் (நண்பன் ஒரு மலையாளி!) போன்ற சிறப்பு நாட்டிய நிகழ்ச்சிகளையும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் தேடி ஒவ்வொரு கலை அரங்கமாக சுற்றிவருவோம். குறிப்பாக வார இறுதிநாட்களில். அப்படி பொழுதுபோக்க நினைத்து அலைகையில், எதேச்சையாக ஒரு மாலையில் சிக்கினார் கிஷோரி அமோன்கர். கமானி, மௌலங்கர், ஸ்ரீஃபோர்ட் ? டெல்லியின் எந்த ஆடிட்டோரியம் என நினைவில்லை. ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அவ்வப்போது டிவி-யில் கேட்டிருக்கிறோம் என்பதைத் தவிர வேறொரு விபரமும் தெரியாமல்தான் கலையரங்கிற்குள் வந்து உட்கார்ந்தோம் நானும் எனது நண்பனும். அமைதியான சூழலில் பரவிய அவரது குரலில், அவ்வப்போது எகிறும் உச்சஸ்தாயியில் தேவகானம் என சங்கீதமழை பொழிந்தது. கட்டுண்டுகிடந்தோம் இரண்டு மணிநேரம். இதுவல்லவா இசை என்று தவித்தது மனம். சாஸ்த்ரீயசங்கீத ஞானம் ஏதுமில்லா எங்களுக்கே இப்படி என்றால்? அதற்குப்பின் அவரது கச்சேரிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. கிட்டத்தட்ட இருபதாண்டுகள் பணி நிமித்தம் வெளிநாடுகளிலேயே சுற்றி சுற்றி வந்தவனின் கண்களில், அதுவும் தூரதேசத்தில், கிஷோரி அமோன்கரும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியுமா தென்படுவார்கள்? நாமல்லவா அவர்களது கலையை நோக்கிச் செல்லவேண்டும்?

அமோன்கரின் தாயான மொகுபாய் குர்திகர் (Moghubai Kurdikar) ஜெய்ப்பூர் கரானா வழியில், புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டுக் கலைஞராக இருந்தவர். அம்மாவிடமிருந்த சரஸ்வதிதேவி மகளிடம் வந்துவிட்டாள் குடியிருக்க. கிஷோரி அமோன்கர் ஜெய்ப்பூர் கரானா இசை வகைமையில் மிகவும் நுட்பமானவர். நிகழ்ச்சியின்போது உணர்வுப்பிரவமாகி ஸ்தாயியின் ஏற்ற இறக்கங்களில் இஷ்டம்போல் விளையாடக்கூடியவர். இசைவிமர்சகர்களின் தாக்குதல்களைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் பாடல்முறையில் புதுப்புது யுக்திகளை, மரபுக்குமீறிய வெளிப்படுத்தல்களை நிகழ்த்திக்காட்டிய அபாரமான இசைக்கலைஞர் அவர். காலப்போக்கில், தனக்கென ஒரு பாணி அமைத்துக்கொண்டு, எத்தனையோ மேதைகளுக்கு மத்தியிலும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ஒரு தனிமுத்திரை பதித்துக்கொண்டார். சாஸ்த்ரீய சங்கீதத்தின் நுணுக்கமறிந்த ரசிகர்கள் அவரது இசை நிகழ்ச்சிகளில் மெய்மறந்து மேடையின் முன் கிடப்பதை சில டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அமோன்கர் பாட ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றியிருக்கும் உலகம் மறைந்துவிடும். ஒரு கட்டத்தில் அவரது சங்கீதம் மட்டுமே இருக்கும். வேறெதுவும் இருக்காது. Spell-bound என்பார்களே அப்படி ஒரு மேதமை. இனி அப்படி ஒரு கலைஞர் பிறப்பாரா இந்த உலகில் ?

ஹிந்துஸ்தானி காயல் (khayal) பாடல்கள், மரபுவழி தும்ரி பாடல்களோடு (thumri songs), ஹிந்தியில் புகழ்பெற்ற மீரா பஜனைப்பாடல்களையும், கபீர்தாஸின் தத்துவார்த்தமான கவிதைகளையும் மேடைகளில் மனமுருகப் பாடியுள்ளார் அமோன்கர். க்ளாசிகல் இசையில் நிபுணத்துவம் பெற்றிருந்தும், மேடையில் அவ்வப்போது மெல்லிசைப்பாடல்களுக்காக ரசிகர்களின் விருப்பம் வரும். ஆச்சரியத்தில் சற்றே நெற்றிச்சுருக்கம் காண்பித்தாலும், கடைசியில் ஒரு ராகத்தைத் தானே தேர்வுசெய்து பக்கவாத்யக்காரர்களிடம் சொல்லிவிட்டு உயிர்ப்போடு பாட ஆரம்பிப்பார் அமோன்கர். எப்போதும் எதிலும் ஒரு ஒழுங்கு அவரிடம் காணப்பட்டது. நிகழ்ச்சிக்கு அவர் அணிந்துவரும் புடவை, முந்தானையை அவர் செருகியிருக்கும் நளினம், நெற்றியின் பிரதானமான பொட்டு, பார்க்கும் பார்வை, உட்கார்ந்திருக்கும் நிலை, கச்சேரியின்போது பக்கவாத்தியக்காரர்களிடம் காட்டும் கண்டிப்பு, தக்க சமயத்தில் ஊக்குவித்தல் என அவரிடம் இளம் வித்வான்களுக்கு கற்றுக்கொள்ளக் கிடைத்தன ஏகப்பட்ட விஷயங்கள். அவரால் ஜெய்ப்பூர் கரானா வழியில் தயார்செய்யப்பட்ட இசைமாணவ, மாணவிகள் அநேகர். அமோன்கர் பெரிய வித்வான் மட்டுமல்ல, நல்லவொரு மனுஷியும்கூட என்பது பார்ப்போரின் மனதில் உடனே பட்டுவிடும்.

ஹிந்துஸ்தானி இசையில் அமோன்கரின் அபரிமிதப் பங்களிப்பு, மேதமையைப் பாராட்டி இந்திய அரசு 1987-ல் பத்மபூஷன், 2002-ல் பத்மவிபூஷன் ஆகிய தேசிய உயர்விருதுகளை அவருக்கு வழங்கி கௌரவித்தது.

கிஷோரி அமோன்கர் மும்பையில் உள்ள தன் வீட்டில், தன் 84-ஆவது வயதில், இரண்டு நாட்களுக்குமுன் காலமானார். ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீத உலகம் விக்கித்துப்போய் நிற்கிறது செய்வதறியாமல்.
**

ஐபிஎல் : பத்து பரவச வருடங்கள்

2008-ல் இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் லலித் மோதியின் தலைமையில் துவங்கப்பட்ட சர்வதேச டி-20 க்ரிக்கெட் மேலாவான (Mela) ‘இந்தியன் ப்ரிமியர் லீக்’ எனப்படும் ஐபிஎல் (IPL), அபாரப் புகழடைந்து முன்னேறி இந்த வருடம் 10-ஆவது சீஸனில் காலடி எடுத்துவைக்கிறது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேஹ்வாக், எம்.எஸ்.தோனி, சௌரவ் கங்குலி, ராஹுல் த்ராவிட், அனில் கும்ப்ளே, ரிக்கி பாண்ட்டிங், ஷோயப் அக்தர், ஜெயசூரியா, முரளீதரன், சங்கக்காரா, மெக்கல்லம், க்றிஸ் கேல்(Chris Gayle), டி வில்லியர்ஸ் (AB de Villiers) என உலகப்புகழ்பெற்ற க்ரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடிய முதல் சீஸன்! அதன் பிறகு எத்தனையோ வீரர்கள் வந்தார்கள், சென்றார்கள். இந்தியாவுக்குள்ளும், வெளியேயும் எண்ணற்ற க்ரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு மாதம் க்ரிக்கெட் சாகஸம் எனும் மிதமிஞ்சிய போதை உலகம் இந்த ஐபிஎல். இதற்குப்போட்டியாகவோ, பொறாமைகொண்டோ, எங்கெங்கோ என்னென்னமோ பேரில் டி-20 தொடர்களை ஆரம்பித்துப் பார்த்தார்கள். ஆனால் புகழில் எதுவும் ஐபிஎல் முன் நிற்கமுடியுமா என்ன !

முதல் சீஸனில் ஆடியவர்களில் பெரும்பாலானோர் இப்போது ஓய்வுபெற்றுவிட்டார்கள். சிலர் பயிற்சியாளர்களாகவும், சிலர் வர்ணனையாளர்களாகவும் மாறி ஐபிஎல் உலகை விடாது சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். முதல் சீஸனில் ஆடியவர்களில் க்றிஸ் கேல், தோனி மற்றும் டி வில்லியர்ஸ் மட்டுமே இன்னும் மைதானத்தில் எஞ்சியிருக்கும் ஸ்டார் வீரர்கள். கேப்டனாக அல்லாமல் சாதாரண ஆட்டக்காரராக புனே அணிக்காக இந்தமுறை ஆடவிருக்கிறார் இந்திய ஒரு-நாள் மற்றும் டி-20 கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இன்று (05-04-2017) ஹைதராபாதில் தொடங்கவிருக்கும் 10-ஆவது ஐபிஎல் சீஸனின் முதல் போட்டியில், கடந்த வருட சேம்ப்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுடன் (RCB) மோதுகிறது. காயம் காரணமாக பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு வாரங்களுக்கு ஆடமாட்டார் எனத் தெரிகிறது. முதல் மேட்ச்சில் அந்த அணிக்கு, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்ஸன் கேப்டனாக ஆடுகிறார்.

இந்த ஐபிஎல் சீஸன் ஆரம்பிக்குமுன்னேயே காயப் பட்டியல் என்னவோ நீண்டுகிடக்கிறது! பெங்களூர் அணியில் கோஹ்லியோடு, அதிரடி ஆட்டக்காரரான டி வில்லியர்ஸும் முதல் மேட்ச்சில் ஆட மாட்டார் எனத் தெரிகிறது. காயம் காரணமாக கே.எல்.ராஹுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரும் ஆடப்போவதில்லை. டெல்லி அணியில் தென்னாப்பிரிக்க வீரர்களான ஜே.பி. டூமினி (JP Duminy), க்விண்டன் டி காக் (Quinton de Cock) விலகிவிட்டார்கள். பஞ்சாப் அணியின் முரளி விஜய்யும், புனே அணியின் ரவி அஷ்வினும் காயம் காரணமாக இந்த வருடம் ஆடப்போவதில்லை. ஸ்மித்தை புதிய கேப்டனாகக் கொண்டு ஆடவிருக்கும் புனே, ஸ்டார் ஸ்பின்னர் அஷ்வின் இல்லாமல் தடுமாற வாய்ப்பதிகம். இப்படி வீரர்களின் காயங்கள் அணிகளின் சமநிலையை சீர்குலைத்துவைத்திருக்கின்றன. இதுவும் ஒருவகைக்கு நல்லதே எனத் தோன்றுகிறது. ஆடவாய்ப்பில்லாமல் இதுகாறும் பெஞ்சில் உட்கார்ந்து வேடிக்கைபார்த்த ரிசர்வ் வீரர்கள், மட்டையோடு மைதானத்தில் இறங்க வாய்ப்பு வந்திருக்கிறது.

2017 ஐபிஎல் ஏலத்தின்போது இரண்டு புதிய வீரர்கள் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் புருவங்களை உயர்த்தவைத்தார்கள். அவர்களில் ஒருவர் ஏழைக்குடும்பத்து இளைஞர், வேகப்பந்துவீச்சாளர் நடராஜன். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ’தமிழ்நாடு ப்ரிமியர் லீக்’-இல், திண்டுக்கல் அணிக்காக ஆடி அதிரவைத்தவர். பஞ்சாப் அணியின் மெண்ட்டரான (Mentor) வீரேந்தர் சேஹ்வாகின் கவனத்தைக் கவர்ந்தார். விளைவு ? இந்தியவீரருக்கான இவ்வருட அதிகபட்சத் தொகையான ரூ.3 கோடியில் பஞ்சாப் அணி நடராஜனை வாங்கியுள்ளது. ‘’க்ரிக்கெட் இல்லையென்றால் என் அப்பாவைப்போல நானும் கூலிவேலைக்குப் போயிருப்பேன்’’ என்று நேர்காணலில் அடக்கமாகச் சொல்லிக் கண்கலங்கவைத்தார் நடராஜன். ஐபிஎல் எனும் ராட்சதக் களத்தில் எப்படி ஆடப்போகிறார் இவர் எனப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகிறார்கள். இதேபோன்ற இன்னுமொரு கதை ஹைதராபாதின் முகமது சிராஜ். வயதான ஆட்டோ ட்ரைவரின் மகன். இவரும் வேகப்பந்துவீச்சாளர்தான். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இவரது திறமையில் நம்பிக்கை கொண்டு வாங்கியிருக்கிறது. இந்த இருவரையும் போலவே, இன்னும் மெருகூட்டப்படவேண்டிய வைரங்களை ஐபிஎல் இந்த வருடமும் கண்டெடுக்கக்கூடும். இந்திய நட்சத்திரங்களான அஜின்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோரை ஐபிஎல்-தானே கண்டுபிடித்து வெளி உலகுக்குக் காட்டியது?

**

சொல்வனத்தில் அம்ரிதா ப்ரீத்தம்

புகழ்பெற்ற பஞ்சாபிக் கவிஞரான அம்ரிதா ப்ரீத்தமின் காதல் வாழ்க்கை, கவிதைகள் பற்றி ‘அம்ரிதா ப்ரீத்தம்: பஞ்சாபிக் கவிதாயினி’ என்கிற தலைப்பிலான எனது கட்டுரை நடப்பு `சொல்வனம்` இதழில் வெளிவந்துள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன். லிங்க் கீழே:

http://solvanam.com/?p=48724

நன்றி: சொல்வனம்
-ஏகாந்தன்