மார்கழிப் பொங்கல் வாய்நிறைந்த நன்னாட்கள் !

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து குளித்துக் கோவிலுக்குச் செல்வது ஒரு ரம்யமான விஷயம். ஆனால், வாழ்வில் காலைச் சூரியனைச் சந்தித்தே பழக்கம் இல்லாதவர்களுக்கு, மிகவும் கடுமையான விஷயம்தான் இது.

மார்கழிக் குளிர் என்று இங்கே சொன்னது, தமிழ்நாட்டின் அல்லது பொதுவாகத் தென்னாட்டின் மார்கழி மாதத்தைக் குறித்தல்ல. டெல்லியின் குளிர்காலத்தில் மார்கழி மாதம் எப்படியிருக்கும் என்று சொல்லிப் பிரயோஜனம் இல்லை. நடுக்கும் அதிகாலையில், சுமார் 5 மணிக்கு வீரதீரமாக பாத்ரூமில் நுழைந்து, தலையில் தண்ணீர் கொட்டிக்கொண்டால் உடனே புரிந்துவிடும் நிலைமை ! ஆனால் தண்ணீர் தலையில் விழுவதற்கு, முதலில் படுக்கையை விட்டு – அதாவது, டெல்லியின் கடும் குளிருக்கு இதமாக கம்பளி, ரஜாய் போன்றவற்றால் இளஞ்சூடு கொடுக்கப்பட்ட படுக்கையை – விட்டு எழுந்து வருவது பகீரதப் பிரயத்தனம்தான். அதற்கப்புறம்தானே கோவிந்தனையும் அவன் வீற்றிருக்கும் கோவிலையும்பற்றி நினைக்க முடியும்?

இந்த ஆரம்பச் சோதனைகளில் ஒருவாறு தேர்வுபெற்று, அதிகாலையில் நீங்கள் கோவிலுக்குள் நுழைந்தே விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பிறகென்ன மாலோலனின் சன்னிதிக்கு முன்னமர்ந்து `மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்..` என்று ஆண்டாள் அருளிய பாசுரங்களை எடுத்துவிடவேண்டியதுதான். பாடல்களில் மனம் லயித்து பக்திச் சூடேற, முடிவில் தீபாராதனை கண்டு மகிழும், நெகிழும் மனம். தீர்த்தம், சடாரி ஆனபின், தொன்னையில் வந்து விழுமே நெய்மணம் கமழும் சூடான வெண்பொங்கல். அது வாயில் கரையும்போது ஏற்படும் அனுபவம். மிளகு கடிபடுகையில் ஏற்படும் ஆனந்த லகரி! அந்த அதீத சுகத்திற்காக எந்த ஒரு சோதனையையும் தாங்கிக்கொள்ளலாம்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தன் மனங்கவர்ந்த அழகனாம் திருமாலைத் துயில் எழுப்புவதற்கென, அதிகாலையில் எழுந்துத் தன் தோழிமார்களைக் கோவிலுக்கு அழைப்பதாக வருகின்றன அவர் இயற்றிய 30 திருப்பாவை பாசுரங்கள். கண்ணனைத் துயிலெழுப்ப முயல்கையில், தன்னோடு துணைக்கு வரும் தோழியரையும் முதலில் படுக்கையைவிட்டுக் கிளப்பவேண்டுமே ! அவ்வாறே ஆண்டாள் இதழ்மலர்ந்த திருப்பாவையின் 14-ஆவது தினப்பாடல் இன்று:

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்; நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோ ரெம்பாவாய்.

பொருள் (தோராயமாக):

எங்களுக்கு முன்னே எழுந்து வந்துவிடுவேன் என(வீரம்) பேசிய பெண்ணே! நீ இன்னும் எழுந்தபாடில்லை. அதைப்பற்றிய வெட்கமும் உனக்கில்லை ! உன் வீட்டுப் பின்புறத்தோட்டத்தில் உள்ள குளத்தில், செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. ஆம்பல் மலர்கள் மூடித் தலைகவிழ்ந்துகொண்டன. தங்கள் கோவில்களில் காலைச்சங்கு ஊதி பூஜிப்பதற்கென, காவி உடையணிந்த, வெண்பற்களை உடைய துறவிகள் சென்றுகொண்டிருக்கின்றனர். தன் வலிமையான கைகளில் சங்கு, சக்கரங்களை ஏந்தி நிற்கும், தாமரைமலர் போன்ற அழகிய கண்களை உடையவனை(கண்ணனை)ப் பாடித் துயிலெழுப்புவோம்.(எழுந்து வருவாயாக!)

**

பாலித்தீன் சொக்கப்பனை

நெருக்கித் தெறிக்கும்
நகர வீதிகளில்
யார்மீதும் மோதிவிடாமல்
ஓரமாக ஊர்ந்து செல்வதும்
அவ்வளவு எளிதான காரியமில்லை
எங்கோ ஏதோ எரியும்
விஷ வாடை நாசியைத் தீண்டுகிறது
அருகில் நெருங்குகையில் தெரிகிறது
சாலையோரக் குப்பைக்குன்றில்
யாரோ தீ மூட்டியிருக்கிறார்கள்
கிழிக்கப்பட்ட பால் பாக்கெட்
உபயோகமான ஏதேதோ
நுகர்வோர் பொருட்கள்,
ரசாயனக் கழிவுகள்
தீக்கங்குகள் தீண்டி மகிழ
பாலித்தீனும் பிளாஸ்டிக்கும்
கக்குகின்றன நச்சுப்புகையை
மூச்சைத் தற்காலிகமாக நிறுத்தி
வேகமாகக் கடக்கையில்
நினைவில் எழுந்து ஆடுகிறது
அந்தக் கலகல கிராமத்தின்
கார்த்திகை இரவு மைதானம்
பழம்பெரும் சிவன் கோவிலுக்கருகில்
பனைமட்டைகளோடு கட்டப்பட்ட
நெற்கதிர்களும் மரக்கிளைகளும்
கோபுரமாய் உயர்ந்து நிற்க
கொளுத்தப்பட்ட சொக்கப்பனை
ஜ்வாலையின் நடிக்கும் ப்ரகாசத்தில்
ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகப் பார்த்து
சீண்டிக்கொண்டது
சிரித்துக்கொண்டது
ஆழ்மனதிலிருந்து மேலெழுந்தன
அந்த காலத்தின் அழகுக் காட்சிகள்
ஒரு கணம் நகரம் விழுங்கப்பட
ஒளிர்ந்தது பளிச்சென
குளிர்ந்த மனதின் குழந்தைத்தனம்

**

கடைத்தெருக் கதைசொல்லி

ஆ. மாதவன் என்கிற பெயரை மேம்போக்காகத் தமிழ் படிக்கும் பெரும்பாலானோர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆழமாக எதையும் சென்று நோக்கும் பழக்கம்-அதுவும் இலக்கியம் போன்ற வகைமையில்- பொதுவாக தமிழர்க்கில்லை. பூர்வீகம் திருநெல்வேலியாக இருந்தபோதிலும், மாதவன் திருவனந்தபுரத்திலேயே ஆரம்பத்திலிருந்தே வாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கிய வெளியில் ஒரு ‘low profile’ எழுத்தாளர். அவருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான `சாகித்ய அகாடெமி விருது` என்றவுடன் `யாருடா, இந்த ஆளு!` என்று புருவம் உயர்த்தியிருப்பார்கள் நம்மவர்கள்.

அவரது படைப்புகளப்பற்றி வெகுகாலம் கவனம் கொள்ளாதிருந்த சாகித்ய அகாடமி, அவர் வயது 80-ஐத் தாண்டிய நிலையில், அவரை நினைவில் மீட்டது. விருதுக்கு தேர்வு செய்யப்படும் எழுத்தாளர் தேர்வு செய்யப்படும் ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகளில் ஏதாவது படைத்திருக்கவேண்டும் என்கிற விசித்திர விதி ஒன்று சாகித்ய அகாடெமியிடம் இருக்கிறது! ஆதலால் அவர் 2013-ல் வெளியிட்ட `இலக்கியச் சுவடுகள்` எனும் கட்டுரை நூலை விருதுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர் படைப்பின் உச்சத்திலிருந்தபோது எழுதிய `கிருஷ்ணப்பருந்து`, `கடைத்தெருக் கதைகள்` போன்ற படைப்புகளுக்காக அவர் அப்போதே தேர்வு செய்யப்பட்டிருக்கவேண்டும். தூங்குமூஞ்சி அகாடெமி !

ஆ. மாதவனின் எழுத்து பற்றி எழுதியவர்கள் ஓரிருவரே. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக நோக்கும் மாதவனின் படைப்புகள் `இயல்புவாத அழகியல்` சார்ந்தது என்கிறார் ஜெயமோகன். சாரு நிவேதிதா தனது கட்டுரை ஒன்றில் மாதவனின் எழுத்துக்களை `தீமையின் அழகியல்` என்கிறார். காமம், வக்ரம், கொடூரம் போன்ற மனதின் இருட்டுப் பக்கங்களை மறைந்திருந்து படிக்கும் எழுத்துக்கள். அவரது `எட்டாவது நாள்` என்கிற குறுநாவல் இத்தகைய உதாரணத்திற்குச் சிறந்தது.

குடும்ப சூழ்நிலை காரணமாக 10-ஆவது வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. திருவனந்தபுரத்தின் சாலைத்தெரு எனும் கடைத்தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தார் மாதவன். சிறுவயதிலிருந்தே மலையாள, தமிழ் நூல்களை விரும்பிப் படித்ததனால், இலக்கிய ஈடுபாடு உண்டானது. சந்தைத் தெருல் தென்படும் சாதாரண மனிதர்களே மாதவனின் கதாமாந்தர்கள். அவர்கள் `இன்று`, இப்போது` என வாழ்வை நேரடியாகச் சந்திப்பவர்கள். நேற்றென்றும், நாளையென்றும் பெரிதாக ஏதுமில்லை வாழ்வில். எத்திப்பிழைப்பது, சம்பாதிப்பது, தின்பது, போகிப்பது என வாழ்வை சாதாரணமாக எதிர்கொள்பவர்கள். ஆதலால் `அறம்` பற்றிய தாக்கம், சிந்தனை அவர்களிடம் அறவே இல்லை. அவர்களின் தமிழ், மலையாளம் கலந்த கலப்புமொழி, சந்தைமொழி, தினசரி சந்திக்கும் வாழ்க்கைச் சவால்கள், செய்யும் தடாலடிக் காரியங்கள் போன்றவை அத்தகைய உயிர்ப்பான பாத்திரங்களை வாசகன் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

நாவல்கள் சில எழுதியிருப்பினும் ஆ. மாதவன் சிறந்த சிறுகதை ஆசிரியராகவே கவனம் பெறுகிறார். ஜெயமோகன் தன்னுடைய `தமிழ் இலக்கிய முன்னோடிகள்` வரிசையில் மாதவனைச் சேர்த்திருக்கிறார். மாதவனின் `கிருஷ்ணப்பருந்து` என்கிற குறுநாவல் பரவலாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. `கடைத்தெருக் கதைகள்`, `அரேபியக் குதிரை` எனும் சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழினி பதிப்பகம் அவரது 72 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டு இளைய தலைமுறை வாசகர்களிடம் அவரை அறிமுகம் செய்தது. தான் படித்த, மலையாள எழுத்தாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளில் சிலவற்றைத் தமிழாக்கம் செய்தும் வெளியிட்டுள்ளார் மாதவன்.

“கடவுள் எனும் புலப்படாத பிரும்மாண்டத்தின் அரவணைப்பை மனித மனத்தின் நுண்ணுணர்வால்தான் உணர முடியும். இந்த உணர்வின் சாட்சிக்கூடங்கள்தான் கோயில்கள், சிற்பங்கள், இசை, நாட்டியம் எல்லாம். இசை தரும் ஸ்பரிச சுகத்தை தெய்வீகம் என்று உணர்பவன். ஆதலால் நான் கலைஞன்!“ என்கிறார் ஆ.மாதவன்.

**

தனி ஒருவன்

வேண்டுதல் பிரார்த்தனை
பணங்காசு நகைநட்டு
சகலத்தையும் நேரில் சமர்ப்பிக்கவென
லட்சக்கணக்கில் மோதிக்கொண்டிருந்தது
பக்தர் கூட்டம் தினம் தினம்
சக்திவாய்ந்த அந்த தெய்வமோ
வழிமேல் விழிவைத்துக்
காலமெலாம் காத்திருந்தது
எந்த பாரத்தையும் தன்மீது போடாமல்
எதையும் கேட்காமல் வேண்டாமல்
தன்னை ஒருமுறை
பார்த்துவிட்டாலே போதும் என்கிற
ஆசையை மட்டும் சுமந்துவரும்
அந்த ஒருவனை எதிர்பார்த்து

**

மனித நேயம்

சமீபத்திய சென்னை வெள்ளம் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களால், எந்த ஒரு பெருநகரத்தையும் இயற்கையால் எளிதில் புரட்டிப்போட்டுவிடமுடியுமே என ஃப்ரான்ஸ் அரசையும் கவலைகொள்ள வைத்தது. பாரிஸில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், இயற்கையே மனிதனுக்கு எதிராக பெரிதாகக் கிளம்பிவிட்டால் என்னாகும் மானிடர் வாழ்வு என உலகத் தலைவர்களை மிரளவைத்தது. பெருநகர சொகுசு வாழ்வை நொடியில் சிறிசாக்கிச் சின்னாபின்னம் செய்தது.

ஆனால், பேரழிவின் நடுவில் எங்கோ மறைந்து கிடந்த மனிதம் சிலிர்த்தெழுந்து நின்றது. கூப்பிட்ட கூக்குரலுக்கு ஓடோடி வந்தது. பேதமேதும் பாராட்டாது நீரில் இறங்கி நெருப்பாய்ப் பணி செய்தது. நாமெல்லாம் இதுகாறும் மறந்துவிட்டிருந்த, ஒடிந்தவருக்கு உதவும், தொய்ந்தவரைத் தோளில் சாய்த்துக்கொள்ளும் மனித நேயம் பிரகாசமாய் ஒளிவிட்டது சென்னையில். இத்தகைய நெகிழ்வான பின்னணியில் கவிதை ஒன்று -என் வழக்கத்துக்கு மாறாக சற்றே நீளமானது- எழுந்தது. நேற்றைய (14-12-15) தினமணி வெளியிட்டது (நன்றி:தினமணி). கீழே :

மனித நேயம்

மாறிக் கொண்டிருக்கும் காலம் தினமும்
மாற்றியது தன் வீச்சில் அனைத்தையும்
மாறினான் மண்வாழ் மனிதனும்
தான் தன் வீடு பெண்டு பிள்ளை
தவிர்த்து எதுவுமில்லை அவனுக்கு உலகில்

பகலிரவு நேரம் பாராமல்
பணம் சேர்க்கும் எந்திரமானான்
எண்ணத்தில் வேறெதுவுமில்லை
எதிரே வருபவர் தெரிவதில்லை
காசு காசு காசு என்கிற
காயத்ரி ஜெபத்தைத் தவிர
பேசுவதற்கு விஷயமில்லை
பெருமைப்பட ஏதுமில்லை
அடுத்தவன் வாழ்ந்தாலென்ன
அடியோடு அழிந்தால்தானென்ன
சுயநலம் எனும் கோரப் பயிரின்
விளைநிலமாய் மாறிவிட்டான்

காலந்தாண்டிய பெருவெளியில்
கால்நீட்டிக் கண்ணயர்ந்திருந்த கடவுள்
விழித்தது திடீரென ஒரு நாள்
விண்ணதிர்ந்து பொங்கியது
பேய்மழையாய் மண்மீதிறங்கி
பெருவெள்ளமாய்க் கிழித்தோடியது
கண்வரை வெள்ளநீர் எகிர்ந்துயர
விண்பார்த்து அலறினான் மனிதன்
மண்மீதில் செய்துவிட்டான் பல பாவம்
மண்டையைப் பிய்ப்பதில் என்ன லாபம்

இருந்தும் நாட்டில் நல்ல உள்ளம்
எங்கெங்கோ மூலையில்
இருக்கவே செய்தது
இடரிலிருந்து மீட்கும் சுடரென
எழுந்தோடி வந்தது விரைந்து
வெள்ளநீர் கண்டு
உள்ளம் கலங்கிடாமல்
பணிவிடை பலசெய்து
பாதித்த பாமரர்களுக்கு
பாங்காய் உதவி மகிழ்ந்தது

அழிந்துவிட்டதோ மனிதரிடையே
அன்பும் பாசமும்
அளவிலா நேசமும்
வாடிய முகம் கண்டு
ஓடிவரும் நற்பண்பும்
என்றெல்லாம் எண்ணி எண்ணி
இளைத்திருந்த வேளையில்
இடையிலே புகுந்து உலுக்கிப்போட்ட
இயற்கைப் பெரும் சக்தியே
மனித நேயம் மாசற்ற உயிரன்பின்
மாண்புதனை மீண்டும் நினைவுறுத்தி
மனிதரை மாபெரும் இடரிலிருந்து
மீட்டு நிமிர்த்துவிட்டாய் நீ, வாழ்க !

–ஏகாந்தன்

**

மழையின்மீதா பிழை ?

சென்னையை சமீபத்தில் தாக்கிய அசுர வெள்ளம், நகரவாசிகளின் மென்னியைப் பிடித்து ஒரேயடியாக இறுக்கிவிட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் புனரமைப்பதில், அரசுக்கும் மூச்சுத் திணறுகிறது.
சென்னையும் சுற்றுப்புறமும், பல வருடங்களாக வானம் பார்த்துக் காய்ந்துபோயிருந்த பூமி. காலம் தவறிப் பெய்யும் பருவமழை. சமீபகாலங்களில், நகருக்கு நீர் தரும் ஏரிகளில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைந்து, சில சிறு நீர்நிலைகள் காணாமலேகூட போய்விட்டன. அண்டை மாநிலத்துக்காரன் எப்போதடா அவன் அணையைத் திறந்து நமக்குத் தண்ணீர் விடுவான் என, வாயைப் பார்க்கவேண்டிய நிலை வழக்கமாகிவிட்டிருந்தது. பெருமழை இந்த நகரத்துக்கு இனி வரவே வராது என்கிற சிந்தனைப்போக்கை மக்களும், ஆள்பவர்களும் கொள்ளத் துவங்கிவிட்ட நேரம். திடீரென இயற்கை மாற்றி யோசித்தது. 118-வருடங்களாகக் காணாத பெரும் திறப்பு சென்னையின் தலைக்கு மேலே, வானில் ஏற்பட்டது. விளைவு? ஆத்திரம் மிகக்கொண்டு, கொட்டோ கொட்டென்று நாலு வாரங்களாகக் கொட்டித் தீர்த்தது பேய்மழை. நகரை நடுநடுங்கவைத்தது. பெருக்கெடுத்த வெள்ளம், சாதாரணரின் வாழ்வைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது

பல வருடங்களாக நகரமயமாக்கல் என்கிற பேரில் இயற்கையோடு மனிதன் விளையாடிய தப்பாட்டத்தின் கொடும் விளைவுதான், கண் முன்னே கட்டற்ற வெள்ளமாய்ப் பொங்கி ஓடியது. ஏரிகள், கண்மாய்களை நிறைத்து, ஆறுகளில் ஓடி, கடலில் கலக்கவேண்டிய உபரி நீர்வெள்ளம், நகரத்தின் தெருக்களில், சந்துபொந்துகளில் ஓடி, வீடுகளில் புகுந்து மனிதனை அலறி அடித்துக்கொண்டு மொட்டைமாடிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேல்தளங்களுக்கும் விரட்டிவிட்டது. சென்னைப் பக்கம் இனி தலைவைத்துக்கூடப் படுக்கமாட்டேன் எனச் சிலரை, ஊரைவிட்டே தலைதெறித்து ஓடவைத்தது.

நாளுக்குநாள் பூதாகாரமாக வளர்ந்துவரும் சென்னைப் பெருநகரின் சுற்றுச்சூழல் சீரழிவு இன்று, நேற்று நிகழ்ந்ததல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே, கேட்பாரற்று நடந்து வருகிறது. ஓட்டுவங்கிகளை மட்டும் பிரதானமாக எண்ணத்தில்கொண்டு, இரு கழகங்களும் மாற்றி மாற்றித் தமிழ்நாட்டை ஆண்ட லட்சணம்தான் இது.

நகரின் நீர்வழிப்பாதைகளையும், ஏரி, கண்மாய்க்கரைகளையும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அரசு தாரை வார்த்ததின் விளைவுகளை, சென்னையின் சாதாரணக் குடிமக்கள் இன்று கண்ணீருடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தென்னகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய அரசர்களும், பல்லவ, நாயக்க, தொண்டமான் மன்னர்களும், சிற்றரசர்களும், மக்களின் பொருளாதார, சமூக, மதத் தேவைகளை ஒருங்கே பாதுகாத்து நல்லாட்சி செய்தார்கள். கோயில்கள் கட்டினார்கள், கூடவே தெப்பக்குளங்களும் கட்டினார்கள். ஏரிகள், கண்மாய்கள், குளங்களைக் கட்டியதோடு, முறைப்படி தூர்வாரிச் செம்மைப்படுத்தினார்கள். மழைநீர் சேமிப்பு, நீர்வளப் பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் என்று அவ்வப்போது மேடையேறி வசனம் பேசிக்கொண்டிருக்காமல், பட்டிமன்றங்கள் நடத்திப் பல்லிளிக்காமல், காரியத்தில் காட்டினார்கள். மக்கள் தொண்டை மனநிறைவாகச் செய்தார்கள். இப்போதுதான் மக்களாட்சியாயிற்றே. எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா! யாருக்கும் தன் ஊர், தன் நகரம், தன் நாடு என்கிற பொறுப்புணர்வு (Civic sense), தேசபக்தி எள்ளளவும் இல்லை. அரசாளும் மக்களின் பிரதிநிதிகள், ஏரி,குளங்களின் தூர் வாருவதற்கு பதிலாக, பொது இடங்களை, மழைகாணா நீர்நிலைப் பரப்புகளைக் கூறுபோட்டு விற்று, மக்களின் காலை வாருகிறார்கள். இயற்கைப்பேரிடர், அது இதுவென்று வம்பில் மாட்டிக்கொண்டால், இவர்கள் அவர்கள் மீதும், அவர்கள் இவர்கள் மீதும் மண்ணை வாரி இறைப்பார்கள். எவரும் தாங்கள் ஆண்டபோது என்ன செய்து கிழித்தோம் என்று வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். தங்கள் கையாலாகாத்தனத்தை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

சென்னை நகரினூடே காலங்காலமாக கூவம், அடையாறு ஆறுகள் ஓடுகின்றன. மேலும் பக்கிங்ஹாம் கால்வாய். ஒரு காலத்தில் உல்லாசப் படகுகள் ஓடிய கால்வாய். விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய்கள், கேப்டன் காட்டன் கால்வாய் போன்ற கால்வாய்களும் உள்ளன. காலக்கிரமப்படி இத்தகைய நீர்நிலைகள், வடிகால்கள் ஆழப்படுத்தப்பட்டு, பெரிதுபடுத்தப்பட்டு, தூர்வாரப்பட்டிருந்தால், தீவிர உணர்வோடு கழிவுகள் அகற்றப்பட்டிருந்தால், இந்தப் பேய்மழையை தந்த வெள்ள உபரிநீரையும் சென்னை நகரம் பெரும் சேதம் இன்றி சமாளித்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? நகரம் நாளுக்கு நாள் பெரிதாக விஸ்வரூபம் எடுக்க, குப்பை கூளங்கள், ப்ளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள், கந்தல் துணிகள், கட்டடக்கழிவுகள் என அங்கும் இங்குமாய் வீசப்பட்டதால், வடிகால்களும், நீர்முகத்துவாரங்களும் கழிவுகளால் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளநீர் ஆறை நோக்கி, கடல் நோக்கிச் சீராகச் செல்ல வழியில்லாமல், முடியாமல் எதிர்த்துத் திரும்பி, நகருக்குள்ளேயே கட்டுக்கடங்காது சீறிப்பாய்ந்தது. எவன் இப்படியெல்லாம் செய்தவன் எனத் தேடிவந்ததுபோல, குடியிருப்புகளை வளைத்துத் தாக்கி அழித்தது, நகரவாழ்வை நொடியில் நிர்மூலமாக்கியது. நாற்றமெடுத்து நகருக்கே ஒரு பெரிய அவமானமாக மாறியிருக்கும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்திப் புனரமைக்கப் போவதாக தமிழக அரசு, பல ஆண்டுகளாக நாடகமாடி வருகிறது. `எங்களாட்சியில் கூவம் மணக்கும்` என்று அப்போது அலட்டிக்கொண்டவர்கள், தங்கள் சொந்த வாழ்வில், பணம் மிகச் சேர்த்து மணம் பரப்பிக்கொண்டார்கள். இப்போதிருக்கும் அரசை குறைகூறிக் கொக்கரிக்கிறார்கள். இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, செய்வதறியாமல் தலைவிதியே என வாழ்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

மத்திய அரசின் அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வுக் கழகம், 1980-களில் இருந்த சென்னை நீர்நிலைகளின் நிலையை, தற்போதுள்ள அவலநிலையோடு ஒப்பீடு செய்துள்ளது. நகரிலும் சுற்றுப்புறங்களிலும், அப்போதிருந்த 600-க்கும் மேற்பட்ட சிறு, பெரு நீர்நிலைகளில் பெரும்பாலானவை காணாமற்போயிருந்தது, 2008-ல் நடந்த சர்வேயின்போது தெரிய வந்தது. அப்போதைய கணக்கெடுப்பின்படி, நகரின் 19 பிரதான ஏரிகளின் பரப்பளவு, 2,792 ஏக்கராக இருந்திருக்கிறது. இது வெகுவாகச் சுருங்கி, 2000-ஆவது ஆண்டில், 1,594 ஏக்கராக ஆகிவிட்டது. எங்கே போயிற்று முன்பிருந்த நிலப்பரப்பு? அந்நிய நாடா வந்து ஆக்கிரமித்துவிட்டது? இல்லை. நமது ஆட்சியாளர்கள், மக்கள் நலன்பற்றிக் கவலைகொள்ளாத தர்மவான்கள், மழையின்றி காய்ந்திருந்த பூமியை, நம்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் கட்டடங்கள், தொழிற்சாலைகள் கட்டிப் பணம்பண்ணுவதற்கென, சலுகைவிலையில் விற்றிருக்கிறார்கள். அவ்வப்போது பெரும் கமிஷன் தொகைகள், இந்த பணமுதலைகளிடமிருந்து அரசியல்வாதிகளின் கறுப்புப்பண அக்கவுண்ட்டுகளுக்குப் போயிருக்கும் எனத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. இந்த மூதேவிகள்தான் தேசத்தின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என புத்தி சொல்கிறார்கள். மக்களுக்கு வாழ்வுபற்றியும், வளர்ச்சிபற்றியும், தேர்தல் சமயத்தில் ராத்திரி, பகலாக லெக்ச்சர் அடிக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்று, வளரும் நகரங்களுக்கான புதிய சாலைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்களை உண்டுசெய்தல், ஏற்கனவே இருப்பனவற்றைப் பாதுகாத்தல், காலக்கிரமப்படி நகரக்கழிவு அகற்றல், சுற்றுச்சூழல் கெடாது பாதுகாத்தல் போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் (City planning), நம் நாட்டில் ஒருபோதும் இருந்ததில்லை. அப்படியே திட்டமிட்டிருந்தாலும் அவை பேப்பர், கோப்புகளோடு நின்றுவிட்டன. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து நமது அரசுகள் ஏதாவது பாடம் கற்றுள்ளனவா? ம்..ஹூம். அடுத்து தேர்தல் வருகிறது. கூட்டணிகள் போடவேண்டும். கூட இருந்தவர்களுக்குக் குழிபறிக்கவேண்டும். தரப்போகும் இலவசங்கள் பற்றி இந்தப் பாவிஜனங்களுக்கு விளக்கவேண்டும். குமித்துவைத்துள்ள கருப்புப்பணத்திலிருந்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 2000ரூ. கொடுத்தால் போதுமா? 5000 வரை அழவேண்டியிருக்குமா? இப்படி எத்தனையோ வேலைகள் பாக்கியிருக்கிறது! கவலைவிடுங்கள் ஐயா. அடுத்த வெள்ளம் வர இன்னும் 117 ஆண்டுகள் இருக்கின்றன. அதுவரை விடாது சுருட்டுவோம். எதிர்ப்போரை நாட்டைவிட்டே விரட்டுவோம்.

**

இந்தியாவின் அபார கிரிக்கெட் வெற்றி (India-SA)

டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா (Feroz Shah Kotla) மைதானத்தில் சுவாரஸ்யமான ஒரு கிரிக்கெட் போட்டி நேற்று (7-12-2015)முடிவுகண்டது. டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின் 5-ஆவது நாளன்று, உலகின் நம்பர் 1 அணியான தென்னாப்பிரிக்காவை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் அபரிமித சந்தோஷம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஒருநாள் தொடர், டி-20 போட்டிகளில் இந்தியாவை எளிதில் சாய்த்துப்போட்ட தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் இவ்வளவு தடுமாறும், சிதறும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவை இந்திய மண்ணிலேயே வீழ்த்துவதென்பது எந்த ஒரு வெளிநாட்டு அணிக்கும் பெரிய சவால்தான். (கடந்த வருடம்தான் வலிமையான ஆஸ்திரேலிய அணி 0-4 என டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் தோற்று, தொங்கிய முகத்துடன் வெளியேறினார்கள்).

டி வில்லியர்ஸ்(de Villiers), ஹஷிம் ஆம்லா, ஃபாஃப் டூப்ளஸீ (Faf du Plessi), ஜே.பி.டூமினி (JP Duminy) போன்ற, ஸ்பின் பௌலிங்கிற்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர்களைக்கொண்ட அணி இது. விக்கெட்கீப்பர் விலாஸ், டேன் பீட்(Dane Piedt), வான் ஸில்(Van Zyl) போன்ற அனுபவமற்ற புதியவர்களும் தென்னாப்பிரிக்க அணியில் இருந்தார்கள். மொஹாலியில் தோற்றபின் பெங்களூரில் அவர்கள் நன்றாக விளையாடியிருக்கலாம். ஆனால் வருண பகவான் பெங்களூர் போட்டியை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார். நாக்பூரின் மந்தமான பிட்ச் தென்னாப்பிரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. மனதில் அதைரியம். பயந்து கொண்டே இந்திய சுழல்பந்துவீச்சை சந்தித்தார்கள். விளைவு படுமோசமாக ஆனது. பிட்ச் ஸ்பின்னுக்குத் துணைபோன நிலையில் ஜடேஜாவும், அஷ்வினும் விஸ்வரூபம் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசியும் கதை நடக்கவில்லை. டி வில்லியர்ஸ் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தும், துவக்க வீரர்கள், கேப்டன் ஆம்லா, டூ ப்ளஸீ, டூமினி ஆகியோரின் தடுமாற்றத்தினால், தென்னாப்பிரிக்கா 3-ஆவது நாளிலேயே ஆட்டத்தைப் பறிகொடுத்தது.

டெல்லியிலோ, பிட்ச் வேகப்பந்துவீச்சு, ஸ்பின் இரண்டிற்கும் வசதியாக அமைந்தது. பேட்ஸ்மன்கள் முனைப்புடன் நிலைத்து ஆடவும் வழிசெய்தது. அஜின்க்யா ரஹானேயின் 127, அஷ்வினின் 56 எனச் சேர்த்து, முதல் இன்னிங்ஸில் இந்தியா 334-ஐ எட்டியது. தனது முதல் இன்னிங்ஸை தென்னாப்பிரிக்க அணி வெகு ஜாக்ரதையாகத்தான் ஆட ஆரம்பித்தது. இந்தப் பிட்ச்சிலும் எந்தப் பேய், பிசாசு அவர்கள் கண்ணில் பட்டதோ தெரியவில்லை; ஜடேஜா, அஷ்வின், யாதவ்-போன்றோரின் துல்லியமான பந்துவீச்சிற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல், 121-ல் ஆல் அவுட் ஆகி சோர்ந்துபோனது.

இந்தியா எளிதாக தென்னாப்பிரிக்காவுக்கு ஃபாலோ-ஆன்(follow-on)கொடுத்திருக்கலாம். ஆம்லாவை சங்கடப்படுத்த கோஹ்லி விரும்பவில்லை போலும். இந்தியா 2-ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. முரளி விஜய் தவறாக அவுட் கொடுக்கப்பட, தவண், ரோஹித் ஆகியோர் நிலைக்கவில்லை. ஆனால் இந்தப் பிட்சில் ஒரு ஆபத்தும் இல்லை என நிரூபித்தார் ரஹானே. கோஹ்லியுடன் சேர்ந்து அருமையாக ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, 88-ல் அவுட் ஆனார். ரஹானேயின் ஸ்கோர் 100-ஐ எட்டியவுடன், கோஹ்லி இந்திய இன்னிங்ஸை 267க்கு 5 விக்கெட் என டிக்ளேர்(declare) செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் அருமையான விஷயங்களில் சில, இந்த `இன்னிங்ஸ் டிக்ளரேஷன்` (Innings declaration), `ஃபால்லோ-ஆன்` (follow-on) ஆகியவை !

வெற்றிக்கு 480 ரன் என்கிற ஹிமாலய இலக்குடன், தென்னாப்பிரிக்கா தனது இறுதி இன்னிங்ஸை ஆடியது. இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா முதன் முறையாக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கேப்டன் ஆம்லாவும், டி வில்லியர்ஸும் 5 மணிநேரத்திற்கும் மேலாகக் கட்டை போட்டு விளையாடினார்கள். இந்திய பௌலர்கள் மெய்டனுக்குமேல் மெய்டன் ஓவராக வீசிச் சலித்துக்கொண்டார்கள். ஆம்லாவை ஒருவழியாக ஜடேஜா தூக்கியபின், டூப்ளஸீ வந்தார். இரண்டு மணிநேரம் கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு, டிவில்லியர்ஸுடன் சேர்ந்து உழைத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு இறுதி டெஸ்ட்டில் எப்படியாவது `டிரா` வாங்கித்தர, இந்த மூவரும் கடுமையாக முயன்றனர். தேனீர் இடைவேளையின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.

மிச்சமிருக்கும் 2 மணிநேர ஆட்டத்தை எப்படியாவது கட்டைபோட்டுக் காப்பாற்றிவிடுவார்கள், இந்தியாவை ஜெயிக்கவிடமாட்டார்கள் எனத் தோன்ற ஆரம்பித்தது. கோஹ்லியின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.
தேனீர் இடைவேளைக்குப்பின் ஆடவந்த தென்னாப்பிரிக்காவுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை அருமையாக வேகப்பந்து வீசிய உமேஷ் யாதவ், அடுத்தடுத்த ஓவர்களில், விலாஸையும், ஆபோட்டையும்(Abbot) க்ளீன் போல்ட் செய்துவிட்டார். தென்னாப்பிரிக்காவின் சக்கரங்கள் கழன்றுகொள்ள ஆரம்பித்தன. அஷ்வின் மறுமுனையில் பிரமாதமாக வீசி, நவீன கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரும், தென்னாப்பிரிக்காவின் எதிர்ப்புத் தூணுமான டி வில்லியர்ஸின் விக்கெட்டைச் சாய்த்து, இந்திய அணியின் பேட்டரியைச் சார்ஜ் செய்தார். அடுத்து வந்தவர்கள் அதிர்ந்துபோய் ஓட்டமெடுக்க, இந்தியா, தென்னாப்பிரிக்காவை 143 ரன்களுக்குள் சுருட்டித் தூக்கி எறிந்தது.

337 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி, டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாகும். அணியின் கடுமையான உழைப்பு, முனைப்புக்குக் கிடைத்த வெற்றி இது. தொடரில், முரளி விஜய், ரஹானே, புஜாரா, கோஹ்லி ஆகிய பேட்ஸ்மன்கள், அஷ்வின், ஜடேஜா, மிஷ்ரா ஆகிய பௌலர்களின் சிறப்பான பங்களிப்பு இந்தியாவிற்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. கோஹ்லியின் தலைமையும் பாராட்டத்தக்க வகையில் அமைந்தது. ஆட்ட நாயகனாக, இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த அஜின்க்யா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்நாயகன் விருது, 31 தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளைச் சாய்த்த அஷ்வினுக்குக் கிடைத்தது. முதலாவது காந்தி-மண்டேலா Freedom Cup-ஐ கோஹ்லியின் தலைமையில் இந்தியா தட்டிச் சென்றது.

சென்னை வெள்ள நெருக்கடியில், தங்கள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ என்கிற மன உளைச்சல் நிலையிலும், தமிழக வீரர்களான முரளி விஜய், அஷ்வின் ஆகியோர் டெல்லி டெஸ்ட்டில் நாட்டிற்காக முனைப்புடன் ஆடியதை, கேப்டன் கோஹ்லி நேர்காணலில் பெருமையாகக் குறிப்பிட்டார், கோப்பையை வென்ற கேப்டனும், விருது வென்ற வீரர்கள் ரஹானே, அஷ்வின் ஆகியோரும், தங்கள் வெற்றி/விருதுகளை, சென்னையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணித்துப் பேசியது, ட்விட்டரில் எழுதியது நெகிழவைத்தது.

**

ப்ரத்யட்சம்

கொடும் மழையின் கோரத் தாக்குதலில்
நெஞ்சம் இடிந்து இடர்பல தொடர்ந்தும்
கொஞ்சம் நல்லதாகவும் நடந்துதானிருக்கிறது
கருமேகம் கலைத்த கதிரவனின் ஒளிபோலே
அருமையாகக் கண்டுகொண்டார் ஒருவிஷயம்
உதவுபவர் யார் துயரத்தைப் பகிர்பவர் யார்
கதவுக்குப்பின் ஒளிபவர்தான் யார் யார்
நல்லவர் யார் நல்லவராய் நடிப்பவர் யார்
வெட்டிச்சொல் வீணர்தான் யார் யார்
பொட்டில் அடித்ததுபோல் புரிந்துகொண்டார்கள்
கொட்டுகின்ற மழையினிடையே சென்னைவாசிகள்

**

சென்னை செய்த பாவம்தான் என்ன?

என்ன செய்தார்கள் தமிழர்களென்று உனக்கு மூக்குக்குமேல் வந்தது இப்படி ஒரு கோபம்? ஏனிந்தக் கடும் குரோதம்? மேலும் மழைக்கு வாய்ப்பாமே? ஏன்? சென்னையில், சுற்றுப்புறத்தில், எங்கேயாவது தரை தெரிகிறதா, வானிலிருந்து பார்க்கையில்? இயற்கைப் பெரும் சக்தியே! என்றுதான் தணியும் உன் கொலைவெறி ? இப்படியெல்லாம் இயற்கையை நோக்கிக் கேட்டு விம்முகிறது பாழும் மனம்.

தீபாவளிக்கு முன்னிருந்தே ஆரம்பித்தது மழை. ஏதோ கொஞ்ச நாள் பெய்யும், விட்டுவிடும் எனத்தான் எதிர்பார்த்தார்கள் சென்னைவாசிகள். மூன்று வாரங்கள் முடிந்தன. மேலிருந்து கொட்டுவது நின்றபாடில்லை. நிற்குமா? நிர்மூலந்தானா என்கிற பயம் கவ்விக்கொண்டது. நகரின் பிரதான ஏரிகளில் தண்ணீர் ஏறி ஆபத்தான அளவைத் தாண்டியாகிவிட்டது. தண்ணீரே கண்டிராத பேர்மறந்துபோன ஏரிகளெல்லாம் நிறைந்தன, உடைந்தன. குளங்கள், குட்டைகள் காணாமற்போய்விட்டன. நகரில் முன்பு சாலைகள் என்பதாக ஏதும் இருந்ததா என்பதே சென்னை மக்களுக்கு மறந்துபோய்விட்டது. இப்படி ஒரு வெறுப்புத் தாக்குதலா இயற்கையிடமிருந்து?

தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற வெள்ளத்தடுப்பு, அணைகளில் நீர்க்கட்டுப்பாடு, பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி என ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை இயங்கிக்கொண்டிருக்கிறது. அரசின் அனைத்து சேவைத் துறைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் விடுப்பு மறுக்கப்பட்டு அனைவரும் 24-மணி நேர மக்கள் சேவைக்காக பணிக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒரு வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து என்பதே இல்லாமல் போய்விட்ட நிலையில், தண்ணீரில் தவிக்கும் வெவ்வேறுபகுதி மக்களை அடைவதெப்படி? வெள்ளப்பெருக்கினூடேயும் கூடுமானவரை அரசுப் பேருந்துகள் இரவு, பகலாக இயங்கிவருகின்றன. 24-மணிநேர அவசரகால அடிப்படையில் விடாது பணி செய்யும் ராணுவம், தேசியப்பேரிடர் நிவாரணப் படை, தீயணைப்புப்படை,ஓட்டுநர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற அத்தியாவசிய சேவை அதிகாரிகள்/ஊழியர்களின் நிலைமையையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்களின் குடும்பங்களில் என்னென்ன பிரச்சினைகளோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நோய்வாய்ப்பட்டவருக்கு உதவியாகவும், நோய்த் தடுப்பிற்கெனவும் நிலவேம்புக்கஷாயம், நிலவேம்புச்சாறு கலக்கப்பட்ட மூலிகைக்குடிநீர் இதுவரை 24.61 லட்சம் தமிழ்நாடு அரசின் சுகாரத்துறை வழங்கியிருக்கிறது. இந்தப் பணி, விட்டுவிட்டு மழைபெய்துகொண்டிருந்த, டெங்கு காய்ச்சல் வர ஆரம்பித்த அக்டோபரிலேயே துவக்கப்பட்டுவிட்டது. சாலைகள் வெள்ளநீரால் மூடப்படுமுன், எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் ஆம்புலன்சில் டாக்டர், செவிலியர் உதவியுடன் நோய்க்கு மருந்து மற்றும் தண்ணீர்-தொடர்பான நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஜெயலலிதாவின் அரசு ஆபத்தான பகுதிகளில் மின்சார சப்ளையை முன்கூட்டியே நிறுத்தி வைத்திருக்கிறது. மின்சார ட்ரான்ஸ்மிட்டர் எல்லாம் வெள்ளநீரில் அமிழ்ந்திருக்கும் நேரத்தில், தண்ணீரில் நிற்கும் மக்கள் மின்சாரம் தாக்கி இறந்துவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கை இது. இயற்கைப் பேரிடரின்போது இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும், மாநில அரசு இத்தகைய முன்னெச்செரிக்கைப் பணி செய்ததில்லை.

நிற்கமாட்டேன் என்று அடம்பிடிக்கும் எமகாத மழையினால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்வருகிறது. ரன்வேயிலும் தண்ணீர் நுழைந்துவிட்ட சென்னை விமானநிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்வதற்கும் வழியில்லை என்கிற பரிதாப நிலை. தேசியப்பேரிடர் தடுப்புப்படை, ராணுவம், கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியவை மத்திய அரசினால் மக்கள்சேவைக்கென முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோதி வான்படை விமானத்தில், அரக்கோணம் ராணுவ விமானதளத்தில் வந்திறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று, சென்னையின் வெள்ளநிலையைப் பார்வையிட்டார். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவும் ஹெலிகாப்டர் மூலம் நீரில் அமிழ்ந்திருக்கும் சென்னை நகர்ப்பகுதிகளைப் பார்வையிட்டார். இக்கட்டான இந்த நேரத்தில், மத்திய அரசு அனைத்து அவசர உதவிகளையும் தமிழ்நாட்டிற்கு வழங்கும் எனக் கூறியதோடு, முன்பு கொடுத்த ரூ.939 கோடிக்கும் மேலாக, 1000 கோடி ரூபாயை அவசர உதவியாகத் தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

தற்போது இந்திய ராணுவத்தினர் சென்னை புறநகர் பகுதிகளில், வீடுகளிலும், மருத்துவனை மனைகள், மற்றும் பொது இடங்களிலும் சிக்கியுள்ள மக்களைப் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். இன்று மாலைவரை, சுமார் 10000-க்கும் மேலானோர் ஆபத்தான பகுதிகளிலிருந்து ராணுவம், கடற்படை மற்றும் தேசியப் பேரிடர் பாதுகாப்புப் படைகளினால் மீட்கப்பட்டுள்ளனர். விசாகபட்டினத்திலிருந்து இந்திய கடற்படைக் கப்பல் ராஜாலி, உணவு, மருந்து சப்ளையுடன் சென்னை துறைமுகத்துக்குப் பாயுமாறு மோதி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய வான்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சியில், தனிவீடுகளின் மொட்டைமாடிகளில் தஞ்சம் புகுந்தோருக்கு உணவு, மருந்துப் பொட்டலங்களை வீச ஆரம்பித்துவிட்டது. இன்னலுற்ற மக்களின் துயர்துடைக்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பங்கு எப்போதும்போல் சிறப்பானது. பெரிதும் பாராட்டப்படவேண்டியது. மேலும் மக்கள் பணிக்கென, ராணுவ வீரர்கள் பெங்களூர், சிகந்தராபாத், ஹைதராபாத் பகுதிகளிலிருந்து சென்னைக்கு உடனடியாக அனுப்பப்பட மோதி அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய அவலநிலையில், சாதாரண மக்களின் மனோதைரியம், எந்தவிதபேதமும் இன்றி, ஒருவருக்கொருவர் உதவும் பண்பு ஆகியவை தங்கள் கவனத்துக்கு வந்ததாக நெகிழ்ச்சியோடு பாராளுமன்றத்தில் கூறினார் அமைச்சர் வெங்கய்யா நாயுடு. தனிமனிதர்களும், தன்னார்வக்குழுக்களும், அமைப்புகளும் பாதிக்கப்பட்டோருக்கு, உணவுப்பொட்டலங்கள் வழங்கி தங்களால் ஆனதை செய்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது. மனித அவலத்தோடு, எத்தனையோ கால்நடைகளும், வளர்ப்புப் பிராணிகள், கோழிகளும் கொடும் வெள்ளத்தில் மாய்ந்துவிட்டன. சென்னையிலிருந்து இயங்கும் ப்ளூ க்ராஸ்(Blue Cross) என்கிற வளர்ப்பு விலங்குகளுக்கு வாழ்வு/மருத்துவ உதவிசெய்யும் நிறுவனமும் தன்னாலியன்றதை செய்துவருகிறது.

`ஊரு ரெண்டுபட்டா, கூத்தாடிக்குக் கொண்டாட்டம்` என்றொரு பழமொழி உண்டு. அப்பாவி மக்கள் சொல்லவொண்ணாத் துன்பத்தில் தவிக்கும் இந்நிலையிலும், சில அரசியல் கட்சிகள், குழுக்கள், அரசையும் மற்றவர்களையும் மிகையாகக் குறைகூறி, ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் பொதுமக்களுக்கு எரிச்சலூட்டி, தங்களுக்காக அரசியல் ஆதாயம் செய்ய முனைகின்றனர். நமது அரசியல் வாழ்வின் தீரா அபச்சாரம் இது. இத்தகைய அபத்தங்களைத் தாண்டி, மாநில மத்திய அரசு இயந்திரங்கள் முனைப்போடும், கடமையுணர்வோடும் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது கண்கூடாகத் தெரிகிறது. தண்ணீர் வடிய ஆரம்பித்திருக்கும் சென்னையின் அபூர்வமான சிலபகுதிகளில், பாழ்பட்ட தொடர்புச்சாலைகளும், நெடுஞ்சாலைகளும் வேகமாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன, சென்னையிலிருந்து மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்த சாலைவழி போக்குவரத்தும் பெரும் முனைப்புடன் தமிழ்நாடு அரசினால் சீர்செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் சப்ளை, மருத்துவசதிகள் போதிய அளவில் வேகமாக பாதிக்கப்பட்டவர்களைப் போய்ச்சேர, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன என்கிற தகவலும் அண்மையில் கிட்டியுள்ளது. மனதிற்கு ஆசுவாசம் தரும் விஷயம் இது.

இயற்கைத் தன் குரோதத்தை மறந்து, சற்றே தழைந்துபோனால்தான் மனிதனும் ஏதாவது முயற்சிக்க முடியும். பாவப்பட்ட சென்னை மற்றும் சுற்றுப்புறத்துக்கும், மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் ஓரளவாவது விமோசனம் கிட்ட வாய்ப்பாக இருக்கும். களத்தில் இறங்கி பணிசெய்ய, அரசு இயந்திரத்துக்கு நிதி வசதியோடு, போதுமான அவகாசம், சரியான காலநிலையும் தேவை அல்லவா. இந்நிலையில், மேலும் மழை அடுத்த 48 மணிநேரத்தில் கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களைத் தாக்கும் என்கிற அறிவிப்பு பதைக்கச் செய்கிறது. கொட்டிக்கொண்டே இருந்தால் அரசும் எங்கேதான் போய் முட்டிக்கொள்ளும்?

சோதனைமேல் சோதனை.. போதுமடா சாமி!
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி!
(கண்ணதாசன்)

**

பேயெனப் பெய்யும் மழை

சாதாரணமாகத் தமிழ்நாட்டில் எளிதில் கண்ணிலே தென்படாத மழை, இந்த வருடம் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் மாமழையாக வந்திறங்கி, பின்னர் பேய்மழையாகி சென்னை, கடலூரிலும் சுற்றுப்புறங்களிலும் மனிதவாழ்வை நிர்மூலமாக்கிவிட்டது. இயற்கைப் பேரிடருக்கு முன்னால் மனிதன் எவ்வளவுதான் முயற்சித்தாலும், இடர் இடர்தான். சிதைந்துபோவது ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருந்த ஏழைகளின் வாழ்வுதான். 2015 தாங்கவொண்ணா மறைவுகள், அழிவுகளைத் தந்துள்ளது. போவதற்குமுன்னால் தமிழ்நாட்டையும் ஒரு போடு போட்டுவிட்டுப் போகிறது போலிருக்கிறது. இன்னும் என்னென்ன விளைவுகள் நேர இருக்கின்றனவோ?

இந்தக் கவலையின் பின்னணியில் ஒரு சிறுகவிதை கீழே. தினமணி இதழில் நேற்று(30-11-2015) வெளிவந்தது. நன்றி:தினமணி.

பேயெனப் பெய்யும் மழை

வறண்டுபோன பூமிகண்டு கலங்கி
வாடி வதங்கிப்போயிருந்த ஏழை
வயிற்றைத் தடவிக்கொண்டு
வானத்தைப் பார்த்தது உண்மைதான்

ஏகத்துக்கும் துன்பப்பட்டவன்
மேகத்தைப் பார்த்து வேண்டி
வேகமாக வரச்சொன்னதும் நிஜந்தான்

விரைவாக வந்த நீ
காரியம் முடித்துக்
கடந்துசெல்வாய் என்றுதான்
எப்போதும்போல் எதிர்பார்த்திருந்தான்

வந்து இறங்கியதே
வளைத்துத் தாக்கத்தான் என்கிற
வானுலகத் திட்டத்தை இந்த
பூலோக அப்பாவி அறிந்தானில்லையே

— ஏகாந்தன்