இருதரப்பு கிரிக்கெட்: இந்தியா-நியூஸிலாந்து டி-20 தொடர்

கைக்கெட்டாத உலகக்கோப்பையை மறந்துவிடலாம்! இன்று (17/11/21) ஜெய்ப்பூரில் துவங்குகிறது நியூஸிலாந்து, இந்தியாவுக்கு இடையேயான 3-மேட்ச் டி-20 தொடர். இதற்குப் பின் 2-மேட்ச் டெஸ்ட் போட்டித்தொடரும் வரும் (அடுத்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளின் ஆரம்பம்).

சாஸ்திரி-கோஹ்லியின் சத்தமான  சகாப்தத்தின் கதவு மூடப்பட்டுவிட்டது. இரைச்சல் தாங்கமுடியவில்லை! ’பிங்க் சிட்டி’யில் ஆரம்பமாகும் இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட்டின் புதிய பாதை/அணுகுமுறைகளின் துவக்க வாயிலாக அமையக்கூடும். திராவிட்-ரோஹித்தின் தலைமை டி-20 தொடர்களில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கிறது தொடர்.

டெஸ்ட்களுக்கு இன்னும் கோஹ்லிதான் கேப்டன். அவர் ‘ஓய்வில்’ இருப்பதால், இந்த மாத இறுதியில் கான்பூரில் ஆரம்பிக்கவிருக்கும் முதல் டெஸ்ட்டிற்கு ’ஆஸ்திரேலியா புகழ்’ அஜின்க்யா ரஹானே தலைமை தாங்குகிறார். பேசாமல், இரண்டு போட்டிகளுக்குமே அவரை கேப்டனாக அறிவித்து, பழைய பூஜாரி கோஹ்லிக்கு ’இன்னும் கொஞ்சம்’ ஓய்வு கொடுத்திருக்கலாம். ஒன்றிரண்டு புது விளம்பரப்படங்களில் நடிக்க அவகாசம் கிடைத்திருக்கும்!  

Rohit Sharma briefs Venkatesh Iyer in the nets

இந்த டி-20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இல்லை: கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, ஹார்தீக் பாண்ட்யா, ஷர்துல் டாக்குர், வருண் சக்ரவர்த்தி. கடந்த ஐபிஎல்-இல் வித்தை காட்டிய இவர்கள் முதன்முதலாக உள்ளே : ஆல்ரவுண்டர்கள் வெங்கடேஷ் ஐயர் (மத்திய பிரதேசம்/ கொல்கத்தா நைட்ரைடர்ஸ்), ஹர்ஷல் பட்டேல் (ஹரியானா/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் (மத்திய பிரதேசம்/ டெல்லி கேப்பிடல்ஸ்) மற்றும் ருதுராஜ் கேய்க்வாட் (மஹாராஷ்ட்ரா/ சென்னை சூப்பர் கிங்ஸ்). ரோஹித் ஷர்மா தலைமை வகிக்கும் (கே.எல்.ராஹுல், வைஸ்-கேப்டன்) இன்றைய முதல் மேட்ச்சுக்கான அணிவரிசை இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: 1. ரோஹித் ஷர்மா 2. கே.எல். ராஹுல் 3. ஷ்ரேயஸ் ஐயர் 4. சூர்யகுமார் யாதவ் 5. இஷான் கிஷன் 6. ரிஷப் பந்த் 7. ஹர்ஷல் பட்டேல் 8. அஷ்வின் (இருவரும் ஆல்ரவுண்டர்கள்) 9. புவனேஷ்வர் குமார் 10. முகமது சிராஜ் 11. யஜுவேந்திர சாஹல்.

திராவிட்-ரோஹித் ஜோடி ஒருவேளை இப்படியும் சிந்திக்கக்கூடும்: வெங்கடேஷ் ஐயருக்கு அவருக்கான ‘இந்தியா வாய்ப்பை’ இந்த மேட்ச்சில் வழங்கலாம். வெங்கடேஷின் ஐபிஎல் பேட்டிங் ஃபார்ம் அப்படி. மிதவேகப் பந்துவீச்சும் அவரால் முடியும் (பாண்ட்யா இல்லாததும் நினைவில் வரும்). சாஹலுக்குப் பதிலாக அக்‌ஷர் பட்டேலை சேர்க்கலாம். பேட்டிங்கில், கீழ்வரிசையில் ஆக்ரோஷமாகத் தாக்கக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால். இப்படியெல்லாம் கோச்சும், கேப்டனும் மாற்றி யோசிக்க வாய்ப்புண்டு!

திராவிட்-ரோஹித் காம்பினேஷனை ஜெய்ப்பூர் வெற்றிகரமாகத் துவக்கிவைக்குமா என இந்த இரவினில் தெரிந்துவிடும்.

உலகக்கோப்பை இறுதியில் தோற்ற அந்த அணியிலும் மாறுதல்கள் நிச்சயம் உண்டு. லோக்கி ஃபெர்குஸன் சேர்ந்திருக்கிறார். இந்திய பேட்ஸ்மன்களுக்கு அவரது துல்லியம் தொந்தரவு தரும் நிச்சயம். நியூஸிலாந்துக்கு வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ (Tim Southee) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அசல் கேப்டன் கேன் வில்லியம்சன் டெஸ்ட் தொடருக்காகத் தன்னைத் தயார்செய்துகொண்டிருக்கிறாராம்.

**

ICC T-20 World Cup: ஆஸ்திரேலியா சேம்பியன்

உலகக்கோப்பையில் ’குரூப் ஸ்டேஜ்-இல் மட்டும் ஐந்து மேட்ச் விளையாடிய விராட் கோஹ்லியின் இந்தியா,  ‘சிறிய’ நாடுகளுக்கு எதிரான வெறும் 3 வெற்றிகளுடன் செமிஃபைனலுக்குள் கால்வைக்க முடியாமல் கந்தலாகி வீடு திரும்பியது. (Bio-bubble-தான் காரணம்: மாஜி கோச் ரவி சாஸ்திரி!). கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட, சிறப்பாக ஆடிவந்த பாகிஸ்தானுக்கும் கூடுதலாக ஒரு போட்டி மட்டுமே (செமிஃபைனல்) ஆடித் தன் ரசிகர்களைக் குஷிப்படுத்திவிட்டு கராச்சிக்கு அவசர ஃப்ளைட் பிடிக்கவேண்டியிருந்தது.  உலக டெஸ்ட் சாம்பியனான நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நேற்று (14-11-21) துபாயில் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்  மோதின.

world-cup-2021-prize-money-australia-runner-up-new-zealand-team-india-also-gets-money-after-elimination-from-super-12-list-of-all-awards  – first time T20 champion became Australia's $ 1.6 million, Team India out  of Super-12 had to be satisfied with ...

சரிபலத்துடன் மோதிய இரு அணிகள், டி-20 வகைமையில் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தின. டாஸ் ஜெயித்த அணிகள் இரண்டாவதாக பேட்டிங் செய்து இலக்கைத் துரத்தி ஜெயிப்பதே வழக்கமாகிப்போன அமீரகக் கிரிக்கெட் கதைகளின் தொடர்ச்சியாக, நேற்றும் அதுவே நிகழ்ந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று நியூஸிலாந்தை உள்ளே அனுப்ப, ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, பின்னர் கேப்டன் வில்லியம்சன் (85) அதிரடி காட்ட, ஸ்கோரை வேகமாக உயர்த்திய நியூஸிலாந்து 172 எடுத்து கோப்பைக்கான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.

முதல் டி-20 கோப்பைக்காக ஏங்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெகு  உற்சாகமாக இலக்கை எதிர்கொண்டதாகத் தோன்றியது. ஃபிஞ்ச் எளிதில் விழுந்துவிட்டாலும், டேவிட் வார்னர் தன்னை விமர்சித்தவர்களுக்கு ஆவேச பதிலடி தருவதுபோல் அபாரமாகத் தாக்கி ஆடினார். ஃபிஞ்ச் அவுட்டானபின், பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக, வழக்கமான ஸ்மித்திற்கு பதிலாக மிட்செல் மார்ஷை அனுப்பிய கோச் ஜஸ்டின் லாங்கரின் யுக்தி சரியான சமயத்தில் கைகொடுத்தது. வார்னரோடு சேர்ந்து நியூஸிலாந்து பௌலிங்கை ஒரு கை பார்த்தார் மார்ஷ். இவரும் அதுவரை முக்கிய பங்களிப்பு ஏதும் தரமுடியாமல், விமர்சனத்துக்கு உள்ளாகி நொந்துபோயிருந்தார்! அடிபட்ட புலிகளாய் வார்னரும், மார்ஷும் சீற, ரன்கள் வேகமாக எகிறின. வார்னர் அரைசதத்துக்குப் பின் வெளியேற்றப்பட்டுவிட்டாலும், அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் தன் கைவரிசையைக் காட்ட, இலக்கு எளிதில் வீழ்த்தப்பட்டது. திரளான ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஆரவாரத்தின் பின்னணியில், முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் கைக்கு வந்தது டி-20 உலகக்கோப்பை. 8 விக்கெட் வித்தியாச வெற்றி. 50 பந்துகளில் 77 விளாசி நாட் அவுட்டாக கம்பீரம் காட்டிய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் ஆனார். டேவிட் வார்னர் தொடர் நாயகன்.

ஃபைனலுக்கு முன்னான, முன்னாள் வீரர்களின் வெற்றிக் கணிப்புகளில், இந்தியாவின் ஹர்பஜன் சிங் இப்படிச் சொல்லியிருந்தார்: ’மனசு சொல்லுது நியூஸிலாந்துதான் ஜெயிக்கும்னு. புத்தி என்னடான்னா, ஆஸ்திரேலியாதான் சாம்பியன்ங்கறதே!..’ என்னே, சர்தார்ஜியின் புத்திசாலித்தனம்!

வார்னரை ஐபிஎல் கேப்டன்சியிலிருந்து இந்த வருடம் தூக்கியிருந்த ’சன் ரைசர்ஸ் ஹைதரபாத்’ அணி நிர்வாகம், நகத்தை கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததோ என்னவோ? 2022-ல் வரவிருக்கும் இரு புதிய ஐபிஎல் அணிகளில் ஒன்றிற்கு டேவிட் வார்னர் தலைமை தாங்கும் வாய்ப்புண்டு எனத் தெரிகிறது.

அடுத்த மாதம் வரவிருக்கும் ‘ஆஷஸ்’ டெஸ்ட் தொடரில் வலிமையான இங்கிலாந்தை சந்திக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் உத்வேகம் தருவதாக   அமைந்த திடீர் டானிக், இந்த உலகக்கோப்பை வெற்றி. ஆனால், ’டெஸ்ட்’ கதையே வேறயாச்சே.. என்ன நடக்குமோ..

**  

கொட்டவா.. இன்னும் கொட்டவா ?

வருஷத்தில் பாதிநாள் தண்ணீர் தண்ணீர் என்று தவிக்கிறோம். மீதி நாட்களில், தண்ணீரில் மூழ்கியே செத்துவிடுகிறோம் !

இது என்ன, ஏதாவது புதுப்பட வசனமா? இல்லை சஞ்ஜிப் பானர்ஜியும், ஆதிகேசவலுவும் சேர்ந்து அலறிவைத்தது. எந்தத் தேள் கொட்டியது? யார் இந்த மஹானுபாவர்கள்? மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜுகள்தான். பொறுக்கமுடியவில்லை போலிருக்கிறது. வாயிலிருந்து கொட்டிவிட்டது வார்த்தை. ஹைகோர்ட்டு வளாகத்திலும் தண்ணி புகுந்துவிட்டதோ என்னவோ? ஆக்‌ஷன் எடுக்காவிட்டால்.. நீதி அரசர்கள் சென்னை கார்ப்பரேஷனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். கார்ப்பரேஷன் என்பதென்ன, பொட்டிக்கடைதானே.. பெருவணிகமான அரசுக்கு எச்சரிக்கை விடுத்துப்பார்ப்பதுதானே?

In Chennai, rains stop, but problems continue to persist - Rediff.com India  News

சமூகநீதிக்குப் பேர்போன அரசு என்ன சொல்கிறது? ’சமரசம் உலாவும் இடம்.. நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே..!’ – என வெள்ளக்காடாய் மாறிவிட்ட சென்னையின் கோலாகலத்தைப் பார்த்து, கோவிந்தராஜன் மாதிரிப் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறதா? அது சொன்னது இது: மழையோ, வெள்ளமோ எங்களுக்கு அதெல்லாம் தெரியாது; முன்னாடி ஆண்டவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்..

கொட்டிக்கொட்டிப் பேசி.. கதிகலங்கவைக்கும் வானம்.

கார் மிதக்குது, கட்டடம் மிதக்குது,  ஊரே மிதந்து ஓடமா ஆடுது.

இப்படியே போனா..

விடிஞ்சிரும் !

**