கொரோனா கால கிரிக்கெட் !

கொரோனா காலத்தில் எதையும் நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கலாம். ஆனால் எதையும் ‘செய்துவிட’ முடியாது இஷ்டத்துக்கு! லாக்டவுன் கொல்கிறது ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு பிரிவினிரையும். ஆனால் இதைவிட்டால் உயிர்தப்பிக்க வேறு உபாயம் தெரியவில்லை என்கிற விசித்திர நிலையில் உலகம்.

தீநுண்மியின் தீவிர விளையாட்டைப் பார்த்து, அனுபவித்து வரும் பதற்ற நிலையில், மனிதர்களின் விளையாட்டை எப்படி ஆரம்பிப்பது? லாக்டவுன் தளர்த்தியாச்சு என்கிற தைரியத்தில் டென்னிஸ் ஆடுகிறேன் என்று ஆரம்பித்து  நோவாக் யொகோவிச் (Novak Jokovich) சமீபத்தில் வைரஸில் சிக்கி அவஸ்தைப்பட்டது ஞாபகமிருக்கிறதா? கூடவே அவரது மனைவியும்! இருவரும் ‘கோவிட்-பாஸிட்டிவ்’ ஆக இருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்பது அவர்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்!

இத்தகு சூழலில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கிலாந்தில். பாராட்டுவதா, பயப்படுவதா – தெரியவில்லை. சுமார் 100 நாள் இடைவெளிக்குப்பின் உலகம் ’லைவ்’ கிரிக்கெட்டை டிவி-மூலமாகவாவது ‘பார்க்க’ ஒரு வாய்ப்பு. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் அழைப்பின் பேரில், வெஸ்ட் இண்டீஸ் டீம் இங்கிலாந்து சென்றிருக்கிறது. முதலில் 14 நாள் ‘ஹோம் க்வாரண்டைனில்’ இருந்துவிட்டு,  இப்போது முதல் டெஸ்ட் மேட்ச்சை ஆடிவருகிறது. மூன்று டெஸ்ட் மேட்ச்சுகள், பின்னர் ஒரு-நாள் போட்டிகள் என ஜூலை-ஆகஸ்டுக்கான ஏற்பாடு.

’சோனி-சிக்ஸ்’ சேனலில் கண்டு ‘களித்து’வருகிறேன். ஆளில்லா மைதானத்தில் ஒரு பாப்புலர் ஸ்போர்ட்! ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு சமூக வலைதளங்களில். அவர்களும் என்னதான் செய்வார்கள் ? டிவி-யில் மட்டுமாவது கிரிக்கெட் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்கிற பரிதாப நிலை!

Players taking a knee before the start of play
(Pic courtesy : ESPN)

இங்கிலாந்துக்கு புது கேப்டன் – பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). வெஸ்ட் இண்டீஸுக்கு ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) கேப்டன். முதல் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் – ‘ரோஸ் பௌல்’ (Rose Bowl) மைதானத்தில் இரண்டு நாளாகப் போய்க்கொண்டிருக்கிறது. போட்டி ஆரம்பமாகுமுன் இருதரப்பு வீரர்களும், அம்பயர்களும் மைதானத்தில் ’ஒருகால் முட்டி போட்டு’, உலகின் ‘கறுப்பின’ மக்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். குறிப்பாக சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆவேச முஷ்டி உயர்த்தல் காணக்கிடைத்தது.  துவக்க நாளன்று, கையில் கறுப்பு பேண்ட் அணிந்து ஆடினார்கள் வீரர்கள்.  அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து (குறிப்பாக ஜார்ஜ் ஃப்லாய்ட் (George Floyd) என்பவரின் போலீஸ் ‘கொலை’) சமீபகாலத்தில் நிறைய போராட்டங்கள் நடந்தன. வெளிநாடுகளிலும் எதிரொலித்தன. BLM (‘Black Lives Matter’) எனும் இயக்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகிறது.

இப்போது கிரிக்கெட்டுக்கு வருவோம். கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை, ஐசிசி-யின் அனில் கும்ப்ளே தலைமையிலான டெக்னிகல் கமிட்டி அறிவித்தது. அதன்படி, வீரர்கள் விக்கெட் எடுக்கையில், கேட்ச் பிடிக்கையில் என குதூகலமாக ஒருவரையொருவர் கட்டிக்கொள்ளக்கூடாது! பந்துவீச்சாளர்கள் ‘வழக்கம்போல்’ கையில் எச்சில்துப்பி பந்தை பாலிஷ்  போடுகிற வேலையே கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள். டாஸ் வென்ற இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 204 ரன்னில் சுருண்டது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel), ஜேஸன் ஹோல்டர் (Jason Holder)ஆகியோரின் துல்லிய ‘வேக’த் தாக்குதலற்கு இங்கிலாந்து ஈடுகொடுக்கமுடியாமல் ஒடுங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வழக்கத்துக்கு மாறாக நேற்று மிகவும் பொறுப்புடன் விளையாடி முதல் இன்னிங்ஸில் 318 எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் க்ரெய்க் ப்ராத்வெய்ட் (Kraig Brathwaite) 65 ரன், ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 47, ஷேன் டௌரிச் (Shane Dowrich) 61 என முக்கிய பங்களிப்பு. போட்டி தொடர்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் ‘வைரஸில்’ சிக்கிவிடாமல் அமைதியாக ஆட்டமாட,  ஆண்டவன் அருள்புரிவானாக.

படம். நன்றி: இந்தியா டிவி நியூஸ்.

**

கிரிக்கெட் உலகக்கோப்பை, 2019 :  இந்திய அணித் தேர்வுகள்

கிரிக்கெட் உலகின் முக்கிய பத்து  நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்தில் ஆரம்பிக்கவிருக்கிறது, மே இறுதியில். அதற்கான தயார்நிலைக்காக, பங்கேற்கும் நாடுகள் தங்களுக்குள் ஒருநாள் போட்டித் தொடர்களை விமரிசையாக ஆடிவருகின்றன. இதுவரை கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத நாடுகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகியவை, போர்க்காலநடவடிக்கைபோல் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டிருக்கின்றன. நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியா, வார்னர்-ஸ்மித் சர்ச்சை/தடைக்குப் பின் வெகுவாக ஆட்டம் கண்டிருக்கிறது எனினும், ஒரு-நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒன்றும் சொல்வதற்கில்லை. செலக்‌ஷன் பாலிட்டிக்ஸில் சிக்கிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் நிலையும் மோசம்.  அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன வெஸ்ட் இண்டீஸ், எப்போதும்போல ஹாயாக இருக்கிறது.. பாகிஸ்தான் சமீபத்திய தொடர்களில் கொஞ்சம் ஜெயித்தும், கொஞ்சம் தோற்றும், ஒரேயடியாக வாயடி அடித்துக்கொண்டும் திரிகிறது. சிலநாட்கள் முன்பு, அதன் முன்னாள் வீரர் மொய்ன் கான், உலக்கோப்பைத் தொடரில் இந்தியாவை வென்று சரித்திரம் படைப்போம் என்றிருக்கிறார். கவனியுங்கள் – உலகக்கோப்பையை வென்றல்ல. பங்களாதேஷ் சமீப காலத்தில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. புதிதாக இந்த முறை உலகக்கோப்பை வட்டத்துக்குள் வந்திருக்கும் ஆஃப்கானிஸ்தான், ஆர்வத்துடன் கவனிக்கப்படவேண்டிய அணி. பெரிய அணிகளில் எதனையும் கவிழ்க்கும்  திறன் உடையது. கிரிக்கெட் உலகின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு விதமாக உலகக்கோப்பை ஃபீவர் சூடேற்றிக்கொண்டிருக்கிறது.
சரி, இந்தியாவின் தயார்நிலை எப்படியிருக்கிறது? ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மண்ணில் சமீபத்தில் அது ஒருநாள் தொடர்களை வென்றிருக்கிறது என்பது ஒரு உற்சாகத்தை அணியினரிடையே ஏற்படுத்தியுள்ளது. மனோபலம், தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம்தான். இருந்தும் உலகக்கோப்பை என்று வரும்போது,  ஓரிரு கடும்போட்டிகளிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடும்.
தன்னைக் கூர்மையாக்கிக்கொள்ளவென மார்ச் மாதத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கெதிராக இன்னுமொரு தொடர் விளையாடவிருக்கிறது. இது நடக்கவிருப்பது இந்தியாவில். ஆதலால் நமது ஆட்டக்காரர்கள் பிரமாத ஸ்கோரை நிறுவி, சூரப்புலிகளாகத் தெரிவார்கள்தான். உலகக்கோப்பை நடக்கப்போவதோ பந்து அதிரடியாக ஸ்விங்காகித் தெறிக்கும் இங்கிலாந்தில். இந்தப் பாச்சா அங்கே பலிக்காது. இருப்பினும் பயிற்சி எனும் நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கும்?  யார் யார் உள்ளே, யார் யார் வெளியே என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு இப்போது. அனேகமாக பதினைந்து பேர் கொண்ட அணி,  தேர்வுக்கமிட்டியால் தேர்வு செய்யப்படும். காயம் மற்றும் வேறு வம்புகளில் சிக்காதிருந்தால், முதல் பத்து வீரர்கள் அனேகமாக உறுதியாக உள்ளே வருவார்கள் எனலாம். அவர்கள் இவர்கள்:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் ஆகியோர். இவர்களோடு பேட்டிங் வரிசையில் நான்காவதாக வர, அனேகமாக ஹைத்ராபாதின் (சென்னை சூப்பர் கிங்ஸ்) அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படுவார் எனவும்  எதிர்பார்க்கலாம். அந்த வரிசைநிலையில் வந்து, பந்துவீச்சு எப்படியிருப்பினும் நிலைமைக்கேற்ப, நிதானமாக அல்லது தாக்கி ஆடும் திறன் அவருக்குண்டு.
மேலே குறிப்பிட்ட முதல் பத்தில், கடைசி ஆறு வீரர்கள் இந்திய அணியின் பௌலிங் துறையைத் திறம்படக் கவனித்துக்கொள்வார்கள். நம்பலாம். BCCI மேலும் ஒன்றிரண்டு ஆல்-ரவுண்டர்களை அணியில் சேர்க்கப் பார்க்கும். ஆரம்ப விக்கெட்டுகள் ஒரேயடியாக சரிந்தால் நின்று ஆட, தேவைப்பட்டால் எகிறிப் பாய, மிடில் ஆர்டரில் ஸ்கோரை வேகமாக ஏற்றும் திறன் வாய்ந்தவர்களாக மேலும் இரண்டு பேட்ஸ்மன்களாவது ரிசர்வில் அவசியம் இருக்கவேண்டும். தோனியைத் தாண்டியும் ஒரு ஃபினிஷர் – ஆறாவது அல்லது ஏழாவது என்கிற பேட்டிங் வரிசையில் இருப்பதே அணிக்கு வலு சேர்க்கும். இந்த நிலைகளில் யார் யாருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்பதே தலையைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் கேள்விகள்.
ஹர்திக் பாண்ட்யாவைத் தவிர, மேலும் ஆல்ரவுண்டர்கள் இந்திய உலகக்கோப்பை  அணியில் வேண்டும்  எனில், அதற்காக மூன்று வீரர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள். கேதார் ஜாதவ்(மஹாராஷ்ட்ரா) , விஜய் ஷங்கர்(தமிழ்நாடு), க்ருனால் பாண்ட்யா(மும்பை)  ஆகியவர்கள். இவர்களில், ஜாதவ் ஆறாவது, ஏழாவது நிலைகளில் வந்து ஆடி, ஏற்கனவே தன்னை நிரூபித்துள்ளார். ஸ்பின் பௌலிங் போட்டு விக்கெட்டைத் தூக்கும் திறனுமுண்டு. விஜய் ஷங்கர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர். முதன்மையாக, நல்லதொரு பேட்ஸ்மன். சமீபத்திய நியூஸிலாந்து தொடரில் இது தெரிந்தது.  மீடியம்-பேஸ் பௌலிங் அவ்வப்போது போட்டு எதிரியின் ரன் விகிதத்தைக் குறைக்கமுடியும். திறன்மிகு ஃபீல்டர் என்பது இன்னுமொரு ப்ளஸ். ஹர்திக்கின் அண்ணாவான க்ருனால் பாண்ட்யா, ஸ்பின் பௌலிங்-ஆல்ரவுண்டர். கீழ்வரிசையில் அதிரடி பேட்டிங்கிற்கு (மும்பை இந்தியன்ஸ்) பேர்போனவர். உள்ளே வரும் தகுதி இவருக்கும் உண்டு. மேற்சொன்ன மூவரில் ஒரேயொரு ஆல்ரவுண்டரைத்தான் தேர்வு செய்வார்கள் எனில், பெரும்பாலும் கேதார் ஜாதவ் தேர்வுசெய்யப்படவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால்,  விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு  கிடைக்கலாம். கிரிக்கெட் போர்டின் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாதிற்கு இப்போதெல்லாம் ஏகப்பட்ட தலைவலி!
மாறும் நிலைமை மற்றும் களவியூகத்தின்படி திடீரென இறக்க, இன்னும் இரண்டு மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், அணிக்கு அவசியம் தேவை. இங்கே காட்சி தருபவர்கள் டெல்லியின் ரிஷப் பந்த், தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக், கர்னாடகாவின் கே.எல்.ராஹுல் மற்றும் மும்பையின் அஜின்க்யா ரஹானே. இங்கிலாந்து தொடரில் ஸ்பின், பேஸ் (pace) என எதனையும் அடித்து அதிரடி காண்பித்த ரிஷப் பந்த் தேர்வாகும் வாய்ப்போடு நிற்கிறார். ஒரு ஸ்பெஷல் டேலண்ட்  எனவே வல்லுனர்களால் பார்க்கப்படுகிறார், இருபத்தோரு வயதாகும் பந்த். முக்கியமான போட்டிகளில் பந்த், ஒரு பத்து ஓவர் விளையாடினாலே போட்டியின் திசை மாறிவிட வாய்ப்புண்டு. இவர் அணியில் நிச்சயம் வேண்டும். கடந்த ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் ஆக்ரோஷம் காண்பித்தும், ஸ்ரீலங்காவில் லாவகமாக ஃபினிஷ் செய்தும் வெற்றியைக் கொணர்ந்த  தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில்   இருக்கவேண்டியவர். இந்தியாவின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா கார்த்திக்கை துவக்க ஆட்டக்காரராகவும் இறக்கலாம்-ஏனெனில் முன்பு இங்கிலாந்தில்  துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடிய அனுபவம் அவருக்குண்டு என்கிறார். ஆனால் தேர்வுக்குழுக்காரர்கள் என்ன நினைக்கிறார்களோ? ராஹுலையோ, ரஹானேயையோ உள்ளே சேர்த்துவிட்டு, இவ்வளவு நாளும் உழைத்துக் காத்திருக்கும் கார்த்திக்கைக் கழட்டிவிட்டுவிடுவார்களோ? ஒன்றும் சொல்வதற்கில்லை.
**

கிரிக்கெட்: நான்காவது டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா ?

.

இங்கிலாந்துக்கெதிரான நாலாவது டெஸ்ட் மேட்ச் நாளை (30-8-1918) தொடங்குகிறது. தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான 18-பேர் கொண்ட அணியிலிருந்து, இந்திய கிரிக்கெட் போர்டின் தேர்வுக்கமிட்டி இரண்டு பேர்களை தூக்கிவிட்டார்கள் -துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.

முதல் இரண்டு போட்டிகளில் பிட்ச்சுகள் இருந்த லட்சணம், ஒவ்வொரு நாளிலும் விடாது விரட்டிய மழை, நம் வீரர்கள் (விராட் கோலி தவிர்த்து) விளையாடிய அழகு என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை முழுதுமாக ஆராய்ந்தால் உண்மையான படம் தேர்வுக்கமிட்டிக்குத் தெரிந்திருக்கும். அப்படியில்லாமல், தோல்விக்கு என்னவோ அவர்தான் காரணம் என்பதுபோல், இந்தியாவின் நம்பர் 1 துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யை மூன்றாவது டெஸ்ட்டிலிருந்து நீக்கியதோடு, மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலிருந்தும் அவரைக் காவு வாங்கியிருப்பது சரியில்லை. ட்ரெண்ட் ப்ரிட்ஜ் (Trent Bridge)-ல் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் அவர் ஆடியிருந்தால், பிட்ச் பேட்ஸ்மன்களுக்கு சரியான ஆடுகளமாக அமைந்திருக்கையில், மற்றவர்களைப்போல் அவரும்தான் அடித்திருப்பார். நல்ல பிட்ச்சில் வாய்ப்பு தராமல், தொடரிலிருந்தே ஒருவழியாகக் கழட்டிவிட்டதுபோல் தோன்றுகிறது. குல்தீப் யாதவையும் அவருக்கு ஒத்துவராத பிட்ச்சில் ஆடச்செய்து, இப்போது ஒரேயடியாகத் தூக்கிவிட்டார்கள். என்ன லாஜிக் இது ?

சரி, உள்ளே வந்திருக்கும் இளம் வீரர்கள்? துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா (Prithvi Shaw) மற்றும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான ஹனுமா விஹாரி (Hanuma Vihari). (இன்னும் கொஞ்ச நாட்களில் நமது தமிழ் மீடியா அவரது பெயரை ஹனுமான் விகாரி என்றோ அல்லது அனுமார் விகாரி என்றோ குறிப்பிடலாம். அதிர்ச்சியடையாதீர்கள்! எல்லாம் அனுமார் செயல் என்று பொறுத்துக்கொள்ளுங்கள். நாம் கவனிக்கவேண்டியது கிரிக்கெட்டை!) இருவரும் திறனான பேட்ஸ்மன்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல்தர (First Class matches) மற்றும் லிஸ்ட்-ஏ போட்டிகளில் இந்திய மற்றும் வெளி நாட்டணிகளுக்கெதிராக விளாசியவர்கள். வாய்ப்பு கிடைத்தது சரிதான்.

இருவரில் ஒருவரான 24-வயது ஹனுமா விஹாரி இந்திய ரஞ்சி ட்ராஃபி போட்டிகளில் ஆந்திராவுக்காக நல்ல சராசரியுடன் அருமையாக ஆடிவருபவர். ஐபிஎல் –இல் பெரிதாக சோபிக்கவில்லை எனினும் கடந்த சில வருடங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டணிகளுக்கெதிராக சிறப்பான திறமை காட்டி ஆடிவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன். ஒருவேளை, கோஹ்லி காயம் காரணமாக ஆடமுடியாது போனால், அவருக்குப் பதிலாக இருப்பில் இருக்கட்டும் என இவர் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (அணியின் பெஞ்சில் கருண் நாயரும் உட்கார்ந்திருக்கிறார்).

இரண்டாவது புதுமுகமான ப்ரித்வி ஷா மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் எனத் தோன்றுகிறது. சிறுவனாக, பள்ளிக்கூடக் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் சாதனைகளை நிகழ்த்தி தூள் கிளப்பியவர். எட்டு வயது சிறுவனாக இருக்கும்போது மும்பையில், சச்சின் டெண்டுல்கரால் கவனித்துக் குறிப்பிடப்பட்ட இளம் புயல். வரனாக வந்திருக்கும் திறன் (Prodigious talent) என்பதாக வர்ணிக்கப்படும் 18 வயது ஷா, வேகப்பந்துகளை லாவகமாக, துல்லியமாக ஆஃப் சைடில் திருப்புதல், அழகான கவர் ட்ரைவ்கள் என சிறப்புத்திறன் காண்பித்துவருபவர். இந்தியாவின் Under-19 உலகக்கோப்பை அணியின் கேப்டனாகத் தலைமை தாங்கி கோப்பையை வென்றுகொடுத்தவர். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக (சதம்-188 ரன்) என அபாரமாக ஆடிய பேட்ஸ்மன். ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காகவும், அதிரடி டி-20 ஆட்டமான ஐபிஎல்-இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் கடந்த சீசனில் நன்றாக விளையாடியிருக்கிறார் என்பதும் அவரது பலம். சில வல்லுனர்களால் டெண்டுல்கர், கோஹ்லிக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய திறன்மிகு பேட்ஸ்மன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஷா. ஒரேயடியாக காத்திருக்க வைக்காமல், 18 வயதிலேயே, நல்ல ஃபார்மில் இருக்கையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்படி ப்ரித்வி ஷாவை புத்திசாலித்தனமாக 18-பேர் கொண்ட அணியில் சேர்த்துவிட்டு, கடைசியில், நாளை துவங்கவிருக்கும் 4-ஆவது டெஸ்ட்டிலோ, கடைசி டெஸ்ட்டிலோ அவரை ஆட விடாமல் வேடிக்கை பார்க்கும்படி பெஞ்சில் உட்காரவைத்தால், அது அடிமுட்டாள்தனமாக இருக்கும். தவன் அல்லது ராஹுல் – இருவரில் ஒருவரது இடத்தில் நாளைய டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா விளையாடவேண்டும். அதுதான் அணிநலனுக்கான சிறந்த முடிவாக இருக்கும். கோஹ்லி செய்வாரா?

நாளைய டெஸ்ட்டில் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது பச்சை நிற பிட்ச்! தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் ஆடியதுபோல் 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இறங்குவாரா கோஹ்லி? அல்லது, அஷ்வின் அல்லது ஜடேஜா என ஒரு ஸ்பின்னரையாவது கைவசம் வைத்துக்கொண்டு உள்ளே வருவாரா? பார்ப்போம்..

*

தோல்விக்கு அடுத்த நாள் . .

பயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ.

இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு? என்னவோ ஒரு எழவு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை. அவ்வளவுதான். கொண்டுவா அந்த ப்ளாக் காஃபியை. ப்ரவுன்-ப்ரெட் சாண்ட்விச், டபுள், ட்ரிபிள்-எக் ஆம்லெட், சிக்கன் நக்கிட்ஸ் (chicken nuggets).. கொத்திக்கொத்தி உள்ளே தள்ளு. இந்தமாதிரிக் கொத்திக் கிழித்து சாப்பிட்டிருக்கணும் இந்த இங்கிலீஷ்காரனுங்களை.. ம்ஹூம். தப்பிச்சிட்டானுங்க. இப்போ ஒன்னும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இன்னும் நாலு இருக்கிறது. பாத்துடுவோம் ஒரு கை. இவனுங்களுக்கு நம்ம கையிலதான் சாவு. அதுல சந்தேகமில்ல..

இப்படி இருக்குமோ இன்றைய இந்திய அணியின் மூடு? நல்ல வேளையாக, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடும் அணியல்ல இது. கேப்டனும் ஒரு சூப்பர்-எனர்ஜி கில்லி. காலையிலேயே அணியை நெட் ப்ராக்டீஸுக்கு இழுத்துப்போயிருப்பார். கொஞ்சம் ரிஃப்ளெக்ஷன், ரீ-க்ரூப்பிங் தேவைப்படுகிறது. இருக்கிறது இன்னும் மூன்று, நான்கு நாள் இடைவெளி. வந்துவிடலாம் மீண்டு. அடுத்த டெஸ்ட் லண்டனின் லார்ட்ஸில் (Lord’s, London). கவாஸ்கர், வெங்க்சர்க்கார், விஷ்வனாத், அஜருத்தீன், கங்குலி, திராவிட், ரஹானே என இந்தியர்கள் ஏற்கனவே நொறுக்கியிருக்கும் மைதானம்தான். பார்ப்போம் இந்தமுறை என்ன காத்திருக்கிறதென்று. கோஹ்லியைத் தாண்டியும் யாராவது ஒரு இந்திய பேட்ஸ்மன் அடித்து நொறுக்காமலா லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடையும்?

தோல்வி முடிவிலும் சில வலுவான ப்ளஸ்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு இடுப்புவலி கொடுத்த கோஹ்லியின் அபார ஃபார்ம். அஷ்வினின் புதுப்பந்துச் சுழல் தாக்குதல், 7 விக்கெட் அதிரடி. ஏனோதானோ எனப் போட்டுக் குழப்பும் அல்லது ரன்களை எதிரணிக்கு தாரைவார்க்கும் இஷாந்த் ஷர்மா, இந்தமுறை காட்டிய முனைப்பான பந்துவீச்சு. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சாய்த்த 5 விக்கெட்கள். மாறித்தானிருக்கிறார் மனிதர். இங்கிலாந்து கௌண்ட்டியான ஸஸ்ஸெக்ஸில் (Sussex) விளையாடிய அனுபவம் பந்துவீச்சை மெருகேற்றியிருக்கிறது.(பௌலிங் கோச் பாரத் அருணுக்கும் கொஞ்சம் பங்குண்டு). புவனேஷ்வரும், பும்ராவும் (Jasprit Bumrah) காயத்தில் தோய்ந்துகிடக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில், அடுத்த மேட்ச்சிலும் இஷாந்த், உமேஷ், ஷமிதான் இந்தியத் தாக்குதலை வழிநடத்தவேண்டியிருக்கும்.

புஜாராவை பெஞ்சில் உட்காரவைத்தது தவறு என்று பெரும்பான்மையோர் முணுமுணுக்கிறார்கள். நானும்தான். (ச்)செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இப்போது நல்லதொரு டச்சில் இல்லை என்றாலும், எதிரணியின் பௌலர்களைக் கட்டைபோட்டு அசரவைக்கும் திறனுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அடுத்த மேட்ச்சுக்குக் கூப்பிடுவார்களா? அழைக்கப்பட்டால், ஷிகர் தவன், அல்லது கே.எல்.ராஹுல்- இருவரில் ஒருவருக்கு உட்கார பெஞ்ச் கிடைக்கும். எப்போதும் நின்று விளையாடும் முரளி விஜய்யும், ரஹானேயும் கூடத்தான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை? இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் – யாராவது ஒருவர் உள்ளே வந்தால் பௌலிங் டெபார்ட்மெண்ட் வலுப்பெறும் எனத் தோன்றுகிறது. இவர்களை இஷ்டத்துக்கும் தூக்கி அடிக்க இங்கிலீஷ்காரர்களால் முடியாது. ஆனால் பதிலாக, ஹர்தீக் பாண்ட்யாவை எடுக்கவேண்டிவருமே? ம்ஹூம்..அது சரிப்படாது. யாரைப் போடுவது, யாரைத் தூக்குவது? இந்தியக் கேப்டனாய் இருப்பதைவிட பிஹாரின் முதல்வராக இருந்துவிடலாம் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டதோ கோஹ்லிக்கு ?

*

விராட் கோஹ்லி 149 !


இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston, Birmingham) இந்தியா விளையாடிவரும் தொடரின் முதல் டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது நாள்தான் நேற்று. இனி என்னென்ன வரப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள், அதற்குள்ளாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

2014-ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், தோனியின் தலைமையில் ஆடிய இந்தியா 1-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆண்டர்சன் (Anderson), ப்ராட்(Broad) போன்றோரின் ஸ்விங் பௌலிங்கைத் தாங்கமாட்டாமல் ஏற்பட்ட தலைக்குனிவு. முரளி விஜய்யைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மனின் சராசரியும் 40 ஐத் தாண்டவில்லை. அந்தத் தொடரில், நடப்புக் கேப்டனான விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 13.40. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் திரும்பத் திரும்ப கோஹ்லியை அவுட்டாக்கி அவரது மானத்தை வாங்கிவிட்டார் அப்போது. இத்தகைய நினைவுகளோடுதான் இந்தமுறை இங்கிலாந்தில் நுழையவேண்டியிருந்தது கோஹ்லிக்கு.

இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸிற்கு பதிலாக இந்தியா நேற்று பேட்டிங் செய்தது. கோஹ்லி ஆடவந்தபோது, இந்தியாவின் நிலை பரிதாபம். முதலில் விஜய்யும், ராகுலும், பிறகு தவணும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்கள். 59 க்கு 3 விக்கெட். கோஹ்லியைக் கடித்துத் தின்னத் துடித்துக்கொண்டிருக்கும் ஆண்டர்சன். ஒரு பக்கம் ரன்கள் ஏற மறுக்க, இந்திய மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்துகொண்டிருந்தன. 3 ஸ்லிப்புகள், கலி (Gully) என்று நிறுத்திவைத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகத்தாக்குதல் நடத்தி கோஹ்லியைத் திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தார் அவரது பரம வைரி ஆண்டர்சன். போறாக்குறைக்கு 20 வயதுப் பொடியன் ஒருவன் 3 இந்திய விக்கெட்டுகளை அனாயாசமான ஸ்விங்கில் சுருட்டி, அவன்பாட்டுக்கு வித்தை காண்பித்துக்கொண்டிருந்தான். ஸாம் கர்ரன் (Sam Curran). ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வேறு இடையே புகுந்து கலக்கிக்கொண்டிருக்க இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. கார்த்திக் அவுட் ஆகையில் இந்திய ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 100 என வயிற்றில் புளியைக் கரைத்தது. விராட் கோஹ்லி தனி ஒரு மனிதனாக எதிர்த்து நிற்பதாகவே தோன்றியது. மூழ்கும் கப்பலின் அப்பாவிக் கேப்டனா?

ஏற்கனவே முடிவுகட்டியே வந்திருந்தார் போலும் கோஹ்லி. விஜய் பாணியில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சீறி எழும் ஆண்டர்சன் பந்துகளை அடிக்காது பின்பக்கம் போகவிட்டார். இடையிடையே ஏதோ தொடப்போய் ஸ்லிப்பிற்கு கேட்ச் பறந்தது. ஆனால், கோஹ்லிக்கோ இந்தியாவுக்கோ அப்போது நல்ல நேரமாக இருந்திருக்கிறது. தொடை உயரத்தில் வந்த கேட்ச்சைப் பிடித்து நழுவவிட்டார் டேவிட் மலான் (David Malan). பிழைத்தார் கோஹ்லி. அதற்குப்பின் வெகுநேரம் கோஹ்லியின் ஸ்கோர் 21-ஐவிட்டு நகர்வேனா என்று அடம்பிடித்தது. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா கொஞ்ச நேரம் கோஹ்லிக்கு கம்பெனி கொடுத்தார். அவர் போனதும் வந்த அஷ்வினை, காலந்தாழ்த்தாது காலி செய்தார் ஆண்டர்சன். 169-க்கு 7 விக்கெட். ம்ஹூம்! தேறாது இந்தியா என்று தெரிந்துவிட்டது. ஆனால் கேப்டன் விடுவதாக இல்லை. தடுத்தாடியும், நெருக்கித்தள்ளியும் சிங்கிளும், இரண்டுமாக ஓடிக்கொண்டிருந்த கோஹ்லிக்கு கூட ஆடுவது இருக்கட்டும், ஓடக்கூட ஆளில்லை என்றே தோன்றியது. ஏனெனில் இனி வந்தவர்கள் பேட்ஸ்மன்கள் என்று சர்வதேசத் தரத்தில் சொல்ல லாயக்கற்றவர்கள். இந்தியக் கணக்குப்படியேகூட வெறும் பௌலர்கள். முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இந்தியாவின் 9, 10, 11-ல் வரும் காகிதப் புலிகள். இவர்களை வைத்துக்கொண்டா கோஹ்லி மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்?

ஷமி விரைவிலேயே வெளியேறிவிட்டார். பின் வந்த இஷாந்த் நிற்பதற்கே தடுமாறினார். தைரியப்படுத்தி, தட்டிக்கொடுத்து, சீறும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு பலியாக்கிவிடாமல் அவரைப் பாதுகாத்து, தானே நிறையப் பந்துகளை எதிர்கொண்டு சாமர்த்தியம் மிகக் காட்டி ஆடினார் கோஹ்லி. இந்த சமயத்தில், ஒரு பக்கமாக கோஹ்லியின்மீது ஆண்டர்சனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தவாறே இருந்தது. எப்படியாவது கோஹ்லியைத் தூக்கி வெளியே வீசாமல் ஆண்டர்சனும் போவதாக இல்லை. இன்னொரு பக்கம் ஸ்டோக்ஸ் தன் இன்–ஸ்விங்கர்களைத் தெளித்துக்கொண்டிருந்தார். இக்கட்டான நிலையிலும், சந்தடிசாக்கில் அவ்வப்போது பௌண்டரி விளாசியதில், கோஹ்லியின் ஸ்கோர் 70, 80 என மேலேறி வந்துகொண்டிருந்தது. ஆயினும், ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கெதிராக, இந்தியாவால் 187 கூட எடுக்க முடியாது எனவே தோன்றியது. இஷாந்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தானும் அவுட்டாகிவிடாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆடிய கோஹ்லி, இந்தியாவின் ஸ்கோரை 200-க்கும் தாண்டிக் கொண்டுவந்துவிட்டார். இரண்டு எல்பிடபிள்யூ-க்களில் டிஆர்எஸ்-இல் தப்பித்த இஷாந்த், ரஷீத்தின் பந்தில் வெளியேறினார். அதுவும் உண்மையில் அவுட் இல்லை என ரீப்ளேயில் தெரிந்தது. இந்திய ஸ்கோர் 217. 9 விக்கெட்டுகள் காலி. இருந்தும், கோஹ்லி இன்னும் போய்த்தொலையவில்லையே என இங்கிலாந்தின் எரிச்சல் எகிறியது. தொண்ணூறை நெருங்கிவிட்டிருந்தார் இந்தியக் கேப்டன். சதம் கூட அடித்துவிடுவாரோ?

இந்தியாவின் கடைசி ஆளாக, கையில் மட்டையுடன் வந்து நின்றார் உமேஷ் யாதவ். யாதவிடம் போய்ப்பேசித் தட்டிக்கொடுத்தார். பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தார் கோஹ்லி. இந்தியக் கேப்டனுக்கு, தான் பொறுப்பாக ஆடுவதோடல்லாமல், வேறென்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது மைதானத்தில்? ஃபீல்டர்கள் எனும் பெயரில், கொத்தித் தின்ன இங்கிலாந்துக் கழுகுகள் விழித்துக் காத்திருந்தன. அவர்களுக்குத் தேவை இன்னும் ஒருவிக்கெட். யார் அவுட்டாகித் தொலைந்தால்தான் என்ன? இந்தப் பதற்றத்துக்கு நடுவே இரண்டு பௌண்டரிகளைப் பறக்கவிட்டு, கோஹ்லி சதம் கடந்தார். இந்திய ரசிகர்கள்-அதில் சிலர் கொடி பறக்கவிட்டுக்கொண்டிருந்த சீக்கிய இளைஞர்கள், குழந்தைகள் குதூகலித்தனர். அவர் சதத்தைக் கொண்டாடினாரே தவிர, கவனமெல்லாம் உமேஷை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஓட்ட வேண்டும். இங்கிலாந்தின் ஸ்கோரை நெருங்கிவிடவேண்டும் என்கிற சிந்தனைதான். கோஹ்லியை விட்டுவிட்டு, உமேஷை உற்றுப் பார்த்தது இங்கிலாந்து. இதை அறிந்திருந்த கோஹ்லி ஒவ்வொரு ஓவரிலும் முதல் நாலைந்து பந்துகளைத் தானே ஏற்று ஆடினார். ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் சிங்கிள்களை எடுக்கவில்லை. எங்கே உமேஷ் வந்து இந்தப் பக்கம் நிற்க, அவரை ஓரிரண்டு பந்துகளிலேயே காலி செய்துவிடுவார்களோ என்கிற பதற்றம். ஓவரின் ஐந்தாவது அல்லது கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த பக்கம் ஓடுவார் கோஹ்லி. அடுத்த ஓவரையும் தானே எதிர் கொள்வார். இப்படி கயிற்றின்மேல் வித்தை காண்பித்துக்கொண்டிருந்தார் அவர். இடையிடையே லூஸாக வந்த பந்துகள் அவர் மட்டையை வேகமாகச் சந்தித்து பௌண்டரிக்குப் பறந்தன. அணிக்கு ரன்னும் சேர்த்தாக வேண்டுமே, நின்றால் போதுமா?

இப்படியாகத்தானே, ஒரு சாகஸ ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய ஸ்கோரை, 274 வரை கொண்டு வந்து, இங்கிலாந்தைத் திணறவைத்துக் காட்டினார் கோஹ்லி. 149 எனும் இங்கிலாந்துக்கெதிரான தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரில் அவுட்டானார் இந்தியக் கேப்டன். நிச்சயமாக கோஹ்லியின் அதிஜோரான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது கருதப்படும். துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் பேர்போன ஒரு தலைவனின் பங்களிப்பு. உமேஷ் யாதவுடனான, பத்தாவது விக்கெட்டுக்கு அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப் 57 ரன்கள். அதில் உமேஷின் பங்கு 1 ரன். மிச்சமெல்லாம் கோஹ்லியின் சர்க்கஸ்!

தொடர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியிலேயே இன்னும் 3 நாட்கள் பாக்கி. மேலும் மேலும் விரியும். காட்சிகள் அரங்கேறும். கேப்டனின் இந்த ஒப்பற்ற ஆட்டத்திலிருந்து நமது மற்ற வீரர்கள் ஏதாவது கற்றுக்கொண்டார்களா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

**

மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா?

இங்கிலாந்தில் விமரிசையாக நடந்துவரும் மகளிர்க்கான க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதியாட்டம் இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் நடக்கவிருக்கிறது. (முந்தைய பதிவொன்றில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜைப்பற்றிப் பார்த்திருந்தோம்). ஆரம்ப மேட்ச்சில் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிரணி, நிதானம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டியாக அடித்து ஆடி, செமிஃபைனலுக்கு வந்து சேர்ந்தது. செமிஃபைனலில் எதிர் நின்றதோ நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா. ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றிருந்த அணி. இந்தியக் கேப்டன் மித்தாலி ராஜின் உழைப்பு, ஊக்குவிப்பு, தலைமைப்பண்பென பல காரணங்கள்; கூடவே அந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌரின் அட்டகாச விளாசல், இந்திய பௌலர்களின் கடும் தாக்குதல் என எல்லாம் சேர்ந்ததால், பூதாகாரமாக எதிர்த்து நின்ற ஆஸ்திரேலியாவை இந்தியா ஊதித்தள்ளிவிட்டது. (இதே ஆஸ்திரேலியா, லீக்-போட்டியில் இந்தியாவை எளிதாகத் தோற்கடித்திருந்தது.)

இந்திய மகளிர் அணி இப்போது உலகக்கோப்பையின் இறுதி போட்டியின் நுழைவாசலில், பளபளக்கும் உலககோப்பையில் கண்வைத்து நிற்கிறது. திடீர்ப்புயலென விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்தியாவை எதிர்த்துப் போட்டிபோடவிருப்பது ஹீதர் நைட்(Heather Knight) தலைமையிலான வலிமையான இங்கிலாந்து. கேப்டன் நைட்டோடு, டேமி பூமான் (Tammy Beaumont) , நத்தாலீ ஸிவர் (Natalie Sciver) போன்ற திறமை, அனுபவம் கொண்ட பேட்ஸ்மன்களைக்கொண்ட அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் ஆச்சரியமாகத் தோற்ற இங்கிலாந்து, அதற்குப் பிறகான ஏழு போட்டிகளில் வரிசையாக வென்று ஒரு கம்பீரத்துடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இதுவரை நான்கு முறை உலக சேம்பியனாக இருந்துள்ளது இங்கிலாந்து என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

க்ரிக்கெட் விளையாட்டில் – அதுவும் வித்தியாசமான திறன், ஸ்டைல், வியூகம் கொண்ட இரு அணிகள் ஃபைனலில் மோதுகையில் – முடிவைத் தடாலடியாக யூகிக்கமுயல்வது அசட்டுத்தனமாய் முடியும். இந்தப் போட்டியின் முடிவு எந்தவொரு அணிக்கும் சாதகமாகலாம் என்கிறது நிதர்சனம். இன்று எந்த அணி அதிசிறப்பாக ஆடி, எதிரியை வியூகத்தாலும் வெல்கிறதோ அதற்கே கோப்பை எனலாம். நியூஜிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிராக திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்ததுபோல், இந்திய அணியின் கேப்டனும், ஒவ்வொரு வீராங்கனையும், இந்திய வெற்றிக்காக உயிர்கொடுத்து ஆடினால் – since cricket is quite clearly a team game – இந்தியா கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சாத்தியம் வலுப்பெறும். பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் – இந்த ஞாயிறு இந்தியாவுக்கு எதைத் தரப்போகிறதென்று. இதற்குமுன் 2005-ல் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழக்க நேர்ந்தது.அந்த இந்திய அணியில் விளையாடிய சீனியர் வீராங்கனைகளாக மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி இருவர் மட்டுமே இந்திய அணியில் இருக்கின்றனர். மற்றவர்களில் பெரும்பாலானோர் 19 வயதிலிருந்து 25 வயதுவரையிலான புதியவர்கள்.

பூனம் யாதவ், ஸ்ம்ருதி மந்தனாவின் துவக்க பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தால், நல்லதொரு ஸ்கோரை இந்தியா நிறுத்த வாய்ப்புண்டு. மிடில்-ஆர்டரில் ஹர்மன்ப்ரீத் கௌர், மித்தாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா ஆகியோரின் தீர்க்கமான பங்களிப்பு இன்று மிக அவசியம். நியூஸிலாந்திற்கெதிராக, தன் முதல் போட்டியிலேயே அதிரடி பௌலிங் போட்டுக்கலக்கிய சுழல்வீராங்கனை ராஜேஷ்வரி கெயக்வாட்(Rajeshwari Gayakwad) இன்று விளையாடுவாரா? அல்லது பௌலிங் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, பாகிஸ்தானுக்கெதிராக ஐந்து விக்கெட் எடுத்து மிரட்டிய இடதுகை பந்துவீச்சாளர் ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), மிடில் ஓவர்களில் தடாலடியாகப் பந்துவீசும் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா (Deepti Sharma), மற்றும் பூனம் யாதவ் (Poonam Yadav)-ஆகியோரைச் சுற்றி இருக்குமா என்பது மித்தாலி ராஜ் வகுக்கப்போகும் வியூகத்திலிருந்துதான் தெரியவேண்டும். உலகக்கோப்பையை வெல்வதற்கான தகுதிகளுடன், உத்வேகத்துடனும் நிற்கிறது மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா. ஜெய் ஹிந்த் !

**

க்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.

முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.

பதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள்! ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.

மூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன்! ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ! அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.

விடாது போராடிய பாண்ட்யா-கேதார்:
அடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ!. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா? பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.

3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது?

**

க்ரிக்கெட்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ !

ஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

முதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய இங்கிலாந்தின் க்றிஸ் வோக்ஸினால் (Chris Woakes) பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா 25, மூணு விக்கெட் காலி! இந்த நேரத்தில், அந்தக் காலத்திய கனவு ஜோடி களத்தில் இறங்கியது. யுவராஜ் சிங்-எம்.எஸ்.தோனி! ரசிகர்களிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஏனோதானோவென 30, 40 அடித்து இவர்களும் மூட்டை கட்டிவிடுவார்கள் என்கிற நினைப்புதான் மேலோங்கியிருந்தது. இந்தியா 300-ஐத் தொட்டுவிடுமா? தொட்டாலும் போதுமா இங்கிலாந்தை வீழ்த்த? விடைதெரியாக் கேள்விகள் காற்றில் மிதந்தன.

யுவராஜிற்கு இதுவே கடைசி சான்ஸ். இதில் அல்ப ஸ்கோரில் வீழ்ந்தால் அடுத்த மேட்ச்சில் இல்லை. இனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. வாழ்வா, சாவா? இன்று நான் என்ன செய்யப்போகிறேன்? பஞ்சாப் வீரரின் மூளை கதகதத்து விடை தேடியது. வழக்கத்துக்கு மாறாக ஜாக்ரதையான ஆட்டம். அடுத்த முனையிலோ, அதைவிட மிதமாகன ஆட்டத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் கேப்டன் தோனி. இங்கிலாந்தின் குஷி வெளிச்சம் காட்டியது: ஃபார்மில் இல்லாத இவர்கள் எந்த நிலையிலும் அவுட் ஆகிவிடுவார்கள் !

ஆனால், கட்டக்கின் மாலைப்பொழுது வேறொரு கதை எழுத ஆரம்பித்திருந்தது. காலம் யுவராஜ், தோனியை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்து காட்ட விரும்பியதுபோலும். அரைசதத்தை நிதானமாகக் கடந்த யுவராஜ், தன் வழக்கமான ஷாட்டுகளுக்குத் திரும்பினார். தோனியும் அவ்வப்போது விளாசிப் பார்த்தார். 30 டிகிரி மிதமான வெப்பத்தில், கட்டக் கூட்டம் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்க்ரீம் ஏந்தி உற்சாகமாகி, எதிர்பார்க்க ஆரம்பித்தது: பெரிசுகள் ரெண்டும் இன்னிக்கு ஏதோ செய்யப்போறதுகள் !

அதிரடிக்குத் திரும்பிய யுவராஜ் முன்னேறி, வெகுநாட்களுக்குப்பின் சதம் கண்டார். மேலே நிமிர்ந்து சிலநொடிகள் ஆகாசத்தைப் பார்த்தார். தோனி அருகில் வந்து தட்டிக்கொடுக்க, தன் மார்பில் டார்ஜான் போல பேட்டினால் குத்திப் பெருமைப்பட்டு க்ரீஸுக்குத் திரும்பினார் யுவராஜ். (கைதட்டிப் பாராட்ட அவரது இளம் மனைவி ஏனோ மைதானத்தில் இல்லை!) பழைய யுவராஜ் கம்பீரமாய் ப்ரசன்னமாகியிருக்க, இங்கிலாந்து திடுக்கிட்டது. இதுவரை பொறுமையாக ஆடிய தோனியும் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். பௌலர்கள் வேகவேகமாக மாற்றப்பட்டனர். ஃபீல்டர்கள் இந்தக்கோடிக்கு அந்தக்கோடி எனப் பறந்தனர். பலனில்லை. பார்ட்னர்ஷிப் 200 ரன்களைக் கடந்து இங்கிலாந்தைக் கலவரமாக்கியது.

45-ஆவது ஓவரில் இந்தியா 300-ஐத் தாண்டி சீறியது. ப்ரமாதமாக ஆடிய யுவராஜ் 150 ரன்களில் அவுட்டானார். தோனி 134 ரன்கள் (6 சிக்ஸர்கள்) எடுத்து ஸ்கோரை வெகுவாக ஏற்றிவிட்டார். பிறகு வந்த கேதார் ஜாதவ் (22), அவுட் ஆகாமல் இருந்த ஹர்தீக் பாண்ட்யா(19), ரவீந்திர ஜடேஜா(16) என பௌண்டரி, சிக்ஸராகப் படபடக்க, இந்தியா சற்றும் எதிர்பாராவிதமாக ஸ்கோரை 381 க்கு 6 விக்கெட் என உயர்த்தி, ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

கட்டக்கின் பிட்ச் பேட்ஸ்மன்களின் சொர்க்கம். பௌலர்களின் நரகம். சிறிய மைதானமாதலால் இங்கிலாந்து சவாலை ஏற்று சிறப்பாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் (82), ஜோ ரூட் (54) மூலம் எகிற ஆரமபித்தது இங்கிலாந்து. ரன் சராசரியை 7-க்கு அருகில் ஆரம்பத்திலிருந்தே வைத்திருந்து போராடியது. இங்கிலாந்து கேப்டன் ஆய்ன் மார்கன் (Eoin Morgan) சிறப்பான எதிர்ப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது அவரிடமிருந்து ஆக்ரோஷமான ஷாட்டுகள் பௌண்டரி, சிக்ஸர் எனப் பதம் பார்த்தன. இங்கிலாந்தின் நம்பிக்கை வளர்ந்தது. ஆல்ரவுண்டர் மோயின் அலி தன் பங்கை சிறப்பாகச் செய்து ரன் வேகத்தை மேலேற்றினார். அவர் 55 ரன்னில் அவுட்டானதும் இங்கிலாந்து தடுமாற ஆரம்பித்தது. ஆயினும் மார்கன் நம்பிக்கை இழக்காது இந்திய பௌலர்களைத் தொடர்ந்து தாக்கினார். 82 பந்துகளில் சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் 49-ஆவது ஓவரில் ரன் –அவுட் ஆனார். லியாம் ப்ளன்கெட் ( Liam Plunkett) சிறப்பாக ஆடியும், டெத் ஓவர்களில் (death overs) பந்துவீசிய புவனேஷ்வர் குமாரும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் வெகு பிரயாசைப்பட்டு இங்கிலாந்தை இலக்கை நெருங்கவிடாமல் தடுத்துவிட்டனர். இறுதியில் கோஹ்லியின் இந்தியா 15 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது. இடையிடையே நெருக்கடியில் இருந்த கட்டக் ரசிகர் கூட்டம், நிம்மதிப்பெருமூச்சு விட்டது !

இங்கிலாந்திடம் இந்திய பௌலர்கள் செம்மையாக அடிவாங்கிக்கொண்டிருந்தவேளையில், ரவீந்திர ஜடேஜா மிகவும் பிரமாதமாக வீசி 45 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வின் 63 ரன் கொடுத்தாலும், 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஷ்வருக்கு ஒன்று; பும்ராவுக்கு இரண்டு விக்கெட்டுகள். இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவர்களை பெண்டெடுத்துவிட்டார்கள் இந்திய பேட்ஸ்மன்கள். யுவராஜ் எதிர்பார்த்தபடி ஆட்டநாயகனானார்.

கோஹ்லி & கோ., கல்கத்தாவில் தொடரின் இறுதி போட்டியை 22 ஜனவரியில் விளையாடவிருக்கிறது. கே.எல்.ராஹுல், ஷிகர் தவன் ஆகியோர் அங்கே ஏதேனும் செய்யும் உத்தேசமுண்டா ?

**

க்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி !

நேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… இது பேட்டிங் பிட்ச்சுதான் ஆடு !’ என்று அதற்குள் பாட்டு கிளம்பியிருக்கவேண்டும். இந்தியாவின் பலம் எனக் கருதப்பட்ட அஷ்வின், ஜடேஜா ஸ்பின் ஜோடியை இங்கிலாந்தின் பேட்ஸ்மன்கள் அனாயாசமாக துவம்சம் செய்தார்கள். ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராய், ஜடேஜாவின் ஸ்பின் ஆகாத ஒரு நேர்ப்பந்தை தாக்க முன்னே பாய, பந்து டிமிக்கி கொடுத்து தோனியிடம் தஞ்சமாகி ஸ்டம்ப் செய்யவைத்தது. ராய் 73. முதலில் மெதுவாகத் துவங்கினாலும், ஜோ ரூட் ஸ்கோரை சீராக உயர்த்த ஆரம்பித்தார். சுவாரஸ்ய மிகுதியால், ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தை மிட்விக்கெட்டுக்குத் தூக்கப்போக, ஹர்தீக் பாண்ட்யாவின் அருமையான கேட்ச்சில் 78 ரன்னில் காலியானார். இந்திய பௌலர்கள் தடுமாறிக்கொண்டிருக்கையில், பாண்ட்யா மட்டும் சிறப்பாக வீசினார். கேப்டன் மார்கனையும், பட்லரையும் விரைவில் தூக்கி வீசி, இங்கிலாந்து மிடில் ஆர்டரைக் குலைத்தார். 300 க்குள் இங்கிலாந்தை நிறுத்திவிடலாம் என கோஹ்லி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். வெங்கலக் கடையில் யானை புகுந்ததுபோல கிடுகிடுத்து 5 சிக்ஸர்களை விளாசி 40 பந்துகளில் 62 எடுத்தார். இங்கிலாந்து ஸ்கோர் 350-ஐ எட்டிவிட, கோஹ்லியின் முகத்தில் சிந்தனைக்கோடுகள்.

351-ஐத் துரத்த எத்தனித்த இந்தியாவின் ஆரம்பமே அபத்தம். துவக்க வீரர்கள் எப்போது வந்தார்கள், போனார்கள் என்றே தெரியவில்லை. கோஹ்லி 3-ஆம் நம்பரில் இறங்கி நிலைமையைச் சீர் செய்ய முனைந்தார். ஆனால், மறுபக்கம் பெரிசுகளான யுவராஜ் சிங்கும், தோனியும் அசட்டுத்தனமாக ஆடி அவுட்டாகிச் செல்வதை வேதனையுடன் பார்க்கவேண்டிவந்தது. இந்தியா சரிய, ஸ்கோர் 63. இழப்பு 4 விக்கெட்டுக்கள். ம்ஹூம்..! உருப்புடுகிற வழியாகத் தெரியவில்லை.

ஆனால் அடுத்து இறங்கிய கேதார் ஜாதவ் எதிர்பாராத வகையில், கோஹ்லியின் வெற்றி முனைப்புக்கு உறுதுணையாக ஆனது ஆச்சரியம். விராட் கோஹ்லி வேகம் காட்ட, கேதார் ஜாதவ் பொறுமையாக ஆடித் துணையிருப்பார் என நம்பிக்கை பிறந்த நிலையில், கேதார் தன் கேப்டனையும் அதிரடியில் மிஞ்சி புனே ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைத்தார். விராட்டும், கேதாரும் பட்டாசு கிளப்ப, இந்திய ஸ்கோர் சீறிப்பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத இங்கிலாந்து குழம்பிக் கிறுகிறுத்தது. 5-ஆவது விக்கெட்டிற்கு 200 ரன் அதிரடியாக சேர்க்கப்பட்டது. தன் 27-ஆவது சதத்தைக் கடந்து 122 ரன்(5 சிக்சர்கள்) எடுத்திருக்கையில், அசால்ட்டாக அடித்த ஒரு ஷாட் மிட்-ஆஃபில் லட்டு மாதிரி இறங்க, கேட்ச் கொடுத்து தலையைச் சிலுப்பிக்கொண்டு வெளியேறினார் இந்தியக் கேப்டன்.

இங்கிலாந்தின் நம்பிக்கை திரும்பிவரும்போல் இருந்தது. அடுத்துவந்த ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா நிலைமையைப் புரிந்துகொண்டு நிதானமானார். எதிர்முனையில், கேதார் ஜாதவ் தன் புயல் சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால் காலில் ஏற்பட்ட சுளுக்கு அவரை நொண்டவைத்து நோகவைத்தது. ஓடுவதற்கு சிரமப்பட்டு பந்தை அவ்வபோது தூக்கி அடித்து ரன் சேர்த்தார். அப்படி ஒரு முயற்சியில் 120 ரன்னில்(4 சிக்சர்கள்) கேட்ச் கொடுத்து கேதார் அவுட் ஆனதும், இங்கிலாந்தின் முகம் மலர்ந்தது.

ஆனால் அசராத பாண்ட்யா, கழுகுபோல் மறுமுனையில் காத்திருந்தார். அவ்வப்போது பௌண்டரி விளாசி இந்தியாவை வெற்றி நோக்கி செலுத்துவதில் மும்முரமாயிருந்தார். இந்த நிலையில் ஜடேஜா ஒரு சாதாரணப்பந்திலேயே கேட்ச் ஆகி விழுந்தார். 7 விக்கெட்டுகள் காலி. அஷ்வின் மைதானத்தில் இறங்குகையில், ஜெயிக்க சொற்ப ரன்களே தேவைப்பட்டது. எனினும் க்ரிக்கெட்டில் ஒன்றையும் நம்பமுடியாதே என்கிற கவலை ரசிகர்களில், குறிப்பாகப் பெண்முகங்களில் படபடப்பாய்த் தெரிந்தது. அஷ்வினும் பாண்ட்யாவும், ரிஸ்க் எடுக்காமல் சிங்கில்களாகத் தட்டி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தனர். 7 ரன் தான் தேவை என்கிற நிலையில் 48-ஆவது ஓவரின் கடைசி பந்தை திடீரென சிக்ஸருக்குத் தூக்கி ஆரவாரத்தை ஆரம்பித்துவைத்தார் பாண்ட்யா. அடுத்து வந்த 49-ஆவது பந்தின் முதல் பந்தை மொயின் அலி வீச, அஷ்வின் ’என்னாலும் முடியும் தம்பி!’ என்றார். பந்து உயர்ந்து ஸ்டேடியத்துக்குள் சீறியது; இந்தியா வென்றது.

மஹாராஷ்ட்ராவின் ரஞ்சி கேப்டன் கேதார் ஜாதவ், புனே ரசிகர்களோடு சேர்ந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த தன் வயசான பெற்றோர்முன் ஆட்ட நாயகன் விருதை வென்றது சந்தோஷம்.

விராட் கோஹ்லி இந்திய ஒரு-நாள் க்ரிக்கெட் அணிக்கு கேப்டனானபின் விளையாடிய முதல் போட்டியும் வெற்றியாக முடிந்தது. 2016-ல் ஆரம்பித்த கோஹ்லியின் சுக்ர திசை தொடர்கிறது எனத் தெரிகிறது !

**

கோஹ்லியின் கீழ் தோனி !

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில்.

இந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் இருப்பது பொருந்தி வரவில்லை. டெஸ்ட் கேப்டனான விராட் கோஹ்லியும் ஒரு-நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைமையை ஏற்கப் போதிய பக்குவம் அடைந்துவிட்டதால், நான் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டேன் என்றார் இந்தியாவின் முன்னாள் கேப்டன். தோனியின் இந்திய கிரிக்கெட் அணித் தலைமை சகாப்தம் இவ்வாறாக முடிவடைந்தது. இந்தியாவின் மறக்கமுடியாத, மக்கள் மனதில் இடம்பெற்ற கேப்டன் தோனி என்பதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கமுடியாது. அவரது தலைமைப்பண்புகளும், பக்குவமும், வெற்றி வியூகங்களும் வெகுநாட்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களால் ஸ்லாகிக்கப்படும்.

விராட் கோஹ்லியோ முற்றிலும் வித்தியாசமான மனிதர். தோனியிடம் காணப்பட்ட குளிர்ச்சியான சுபாவம் அரவே இல்லாதவர். ஆதலால் தோனியிலிருந்து வெகுவாக விலகிய பிம்பம் உடையவர். டெஸ்ட் கேப்டனாக அவரது உணர்ச்சிக்கொந்தளிப்புகள், வியூகங்கள், அணியைக் கையாளும் விதம், குறிப்பாக அனுபவமற்ற இளம் வீரர்களில் முகிழ்த்து நிற்கும் திறமையை ஊக்குவிக்கும் திறன் ஆகியவை ஏற்கனவே கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களின் கவனத்துக்கு வந்துவிட்டவை. கூடவே, கடுமையான போட்டி மனப்பான்மை கொண்ட கோஹ்லி எந்த எதிரணியையும் வெகுவாக சோதிக்கும், திகைக்கவைக்கும் இயல்புகள் கொண்ட ஒரு கேப்டன். ஒரு-நாள் மற்றும் டி-20 வகைக்கிரிக்கெட்டில் அவரது கூரிய, ஆக்ரோஷத் தலைமைத் திறன் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

கோஹ்லிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு-நாள் இந்திய அணி, திறமையான வீரர்களோடு சர்வதேச விளையாட்டுக்கு திரும்பிவரும் சில வீரர்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக மிடில் ஆர்டர் அதிரடி யுவராஜ் சிங். ரஞ்சி ஃபார்மை வைத்து சர்வதேசக் கிரிக்கெட்டில் ஒருவரின் விளையாட்டு எப்படி இருக்கும் என கணிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எப்படி இருப்பினும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து கோஹ்லி யுவராஜை முதல் போட்டியில் ஆடவிடுவார் என எதிர்பார்க்கலாம். இதே போன்று ஷிகர் தவன், கே.எல்.ராஹுல்-உடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கவாய்ப்பு உள்ளது. முன்னால் கேப்டன் தோனி அனேகமாக நம்பர் 4-ல் கோஹ்லிக்கு அடுத்தபடியாக இறங்குவார் எனத் தோன்றுகிறது. தோனியின் அனுபவ பேட்டிங் பலம் சேர்க்கும். 5-ஆவதில் யுவராஜ் என்றால், 6-ஆவது இடம் மிகவும் முக்கியமானது. இந்த இடத்தில் மனீஷ் பாண்டே ஆடுவது அணிக்கு-ஒருவேளை விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பட்சத்தில்- ஒரு ஸ்திரத்தன்மையைத் தரும். ஸ்பின் போடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான கேதார் ஜாதவ் ஒருவேளை கோஹ்லியின் கணக்கில் நுழையக்கூடும். 7, 8, 9-ஆவது இடங்களில் ஹர்தீக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இறங்குவதே உசிதம். ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சைக் கவனித்துக்கொள்வார்கள் என யூகிக்கவேண்டியிருக்கிறது.

யுவராஜ் சிங்கின் ஸ்பின் திறன் கோஹ்லிக்கு இந்தத் தொடரில் உதவலாம். டெஸ்ட் தொடரைப்போலவே, ஒரு-நாள், டி-20 போட்டிகளிலும் அஷ்வின் கோஹ்லியின் வெற்றி வியூகத்தில் முதலிடம் வகுப்பார் என்றே தெரிகிறது. அமித் மிஷ்ரா முதல் மேட்ச்சில் இருப்பாரா என்பது சந்தேகமே. இந்த ஒரு-நாள் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்கள் அஜின்க்யா ரஹானே, அம்பத்தி ராயுடு இல்லாதது ஆச்சரியம்.

கடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து இந்தியாவில் படுதோல்வி கண்டதால், இங்கிலாந்தின் ஒரு-நாள் கதையும் அதே கோட்டில் செல்லும் என எதிர்பார்ப்பது அசட்டுத்தனம். மார்கன் தலைமையில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), பேர்ஸ்டோ (Jonny Bairstow), பட்லர் என பேட்டிங் ஆழம் நிறைந்த அணி இது. பயிற்சிப் போட்டியில் 93 அடித்த சாம் பில்லிங்ஸையும் (Sam Billings) இங்கே குறிப்பிடவேண்டும். ஸ்பின் ஆல்ரவுண்டர்களான மோயின் அலியும், ஆதில் ரஷீத்தும்(Adil Rashid) வேகபந்துவீச்சாளர்களுக்குத் துணைநின்று இந்திய பேட்ஸ்மன்களைத் திணற அடிக்க முயல்வார்கள். அவர்களது முயற்சிகள் எப்படி இருப்பினும், இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு முன், மிகவும் திறமையான ஃபீல்டிங் அணி என்பது உண்மை. இந்திய ஃபீல்டிங்கில் ரவீந்திர ஜடேஜா, மனீஷ் பாண்டே, ஹர்தீக் பாண்ட்யாவைத் தவிர்த்துக் குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை. யுவராஜின் ஃபீல்டிங் காலம் மலையேறி வருடங்களாகிவிட்டது.

கேப்டனாகப் பொறுப்பேற்றபின், இந்தியாவிற்கான தன் முதல் ஒரு-நாள் தொடரைக் கைப்பற்ற கோஹ்லி நிறைய முனைவார். உழைக்கவேண்டிவரும். தோனி, யுவராஜ் போன்ற சீனியர்களின் ஒத்துழைப்பும் அவசியம். மொத்தத்தில், அணியில் மிகச்சரியான காம்பினேஷன் அமைப்பதிலேயே பாதி வெற்றி கைக்குள் வந்துவிடும் எனத் தோன்றுகிறது. வெற்றிமுகம் காண்பாரா விராட் கோஹ்லி?
**