உனக்காக .. எல்லாம் உனக்காக ..

ஐயா! மாட்டேன். என்னால் இது முடியாது.

கோபம், ஆசிரியர் நிக்கோலஸ் தில்லனுக்கு (Nicholas Dhillon).

ஏன் முடியாது?

என் அப்பாவை எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில்லை…

ஒவ்வொரு மாணவனையும் தன் தந்தையைப்பற்றி கொஞ்சம் எழுதிக் காட்டச் சொல்லியிருந்தார் அன்று. அதற்குக் கிடைத்த ஒரு சிறுவனின் பதில் இது. திடுக்கிட்ட ஆசிரியர், மற்ற சிறுவர்கள் பதற்றத்தோடு திரும்பிப் பார்க்க,  அவனை நெருங்கினார். மெல்ல அவன் தலையை வருடிக்கொடுத்தார். மிருதுவாக, அழுத்தமாகச் சொன்னார்: ‘இதைப்பற்றி அதிகம் மனதை வருத்திக்கொள்ளாதே. இது ஒரு தடையாக இருக்கக்கூடாது உன் வாழ்வில்..” என்றார் எச்சரிக்கும் தொனியில்.

தன் பள்ளி ஆசிரியரை பிற்காலத்தில் நினைவில் கொள்கிறான், இப்போது வளர்ந்துவிட்டிருக்கும் அந்த இளைஞன். ஆசிரியரை மட்டுமா? அவன் அம்மா? சாதாரண மனுஷியா அவள்? அவளன்றி இன்று, நின்று பேசுவானா அவன்?

அமெரிக்க வெளிக்குக் கீழே, கரீபியத் தீவுகளின் (Carribean Islands) சிறுநாடுகளில் ஒன்றான ஜமைக்கா. எங்கோ ஒரு கிராமத்தில் வர்ணத்தையே பார்த்திராத தகரம். அதை வளைத்தும், நிமிர்த்தும் ஓருவாறு ‘கட்டப்பட்ட’ வீடு. எத்தனை மழை  இரவுகள். நாலாபுறமும் தண்ணீர் வழிய, அம்மாவின் படுக்கை நனைந்துவிடாது, அதை ’வீட்டின்’ நடுவில் இழுத்துப்போட்டுத் தூங்கவைத்திருக்கிறான். அவளும் எத்தனை மறுத்திருக்கிறாள். ’நாளைக்கு பள்ளி செல்லவேண்டும். நீ தூங்கு கொஞ்சமாவது’ என்று. அவளுக்கும் ஓய்வு வேண்டுமே. அடுத்த நாளும் வேலைக்குச் செல்லவேண்டாமா அவள்? பாத்திரம் தேய்க்கணும், துணி தோய்க்கணும், இன்னும் ஏகப்பட்ட எடுபிடி வேலைகளை மற்றவர்களுக்கு செய்தால்தானே இந்த வீட்டில் அடுப்பு  சூடாகும்? தட்டில் ஏதாவது விழும்.. பசி கொஞ்சமாவது தணியும்? என் அம்மா முழித்துக்கொண்டிருக்க, நான் தூங்குவதா? எப்படியெல்லாமோ வாதாடி அவளைக் கண்ணயர வைத்துவிட்டு, நீண்ட இரவுகளில் கூரையின் சொட்டும் மழைநீரைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான். மற்ற அம்மாக்களைப் போலல்லாது, இவ்வளவு கஷ்டப்படுகிறாளே இவள்.. என்று தீரும், விலகும் இந்தத் துன்பம். அம்மா.. நான் ஏதாவது செய்வேன் உனக்கு ஒரு நாள். நீ மேலும், மேலும் கஷ்டப்படாது பார்த்துக்கொள்வேன்…

அங்கே ஒரு தொலைக்காட்சி சேனல் தன்னை அணுகியபோது, அந்த அம்மா வேதனை நினைவுகளை வலியுடன் மீட்கிறாள். காதலியாக ஒருவனுக்கு இருந்தவள், ஒருநாள் கர்ப்பமானாள். அறிந்த அவன் அதிர்ந்தான். சொன்னான். ’நிறுத்து இதை உடனே. போய் அபார்ஷன் செய்துகொள்!’ திடுக்கிட்டது அவளது மென்மையான பெண்மை. ’முடியாது!’ என்றது தீர்க்கமாக. கோபத்தில் எரிந்து விழுந்தான். போனான். போயே விட்டான். ஏழை. தான் விரும்பியவனைத் தவிர வேறு உலகறியாத பெண். துணையேதுமின்றி அபலையானாள். வீடுகளில் வேலை செய்வது, வயிற்றைக் கழுவுவது இப்படிச் சென்றது கொடுங்காலம். இந்த ஒரு மாதம் போய் விடட்டும் எப்படியாவது.. இன்னும் ஒரு மாதம். இதோ இந்த மாதந்தான்… அப்பாடா, பெத்துட்டேன் என்று தனக்கென வந்து பிறந்த உயிரை ஆசையோடு பார்த்தாள். ஏதோ கொடுத்தாள், ஊட்டிவிட்டாள், வளர்த்தாள், அவளுக்குத் தெரிந்தபடி, வாய்த்தபடி..

அம்மா.. அம்மா என்றவாறு வளர்ந்து உருகும் தன் பையன் ஒரு நாள் கையில் ஏதோ பிடித்தபடி பள்ளியிலிருந்து வருவதைப் பார்த்தாள். கிரிக்கெட் பேட்! அம்மாவைப் பார்த்து மட்டையைத் தூக்கியவாறு சிறுவன் சொன்னான்: ”அம்மா உனக்கு நான் கிரிக்கெட் ஆடி சம்பாதித்துப் போடுவேன். ஒரு இடத்தில் அமைதியாக உன்னை உட்காரவைத்து சாப்பிட வைப்பேன்..” அந்தத் தாய் கண்கலங்க நினைவு கூர்கிறாள். ”எனக்குக் கோபம் வரவில்லை. நம்பிக்கை வந்தது. இவன் செய்வான்.. செய்யக்கூடியவன்தான் இந்தப் பிள்ளை! என் மகன்….”

ஜமைக்கா, ட்ரினிடாட், பார்படோஸ் போன்ற கரீபிய உலகின் பொருளாதார வளர்ச்சியில்லாத சிறுசிறு நாடுகளில், நம்நாட்டிலும், பிற வளர்ந்த நாடுகளிலும் காணப்படும் பெருவணிகம் என்று ஏதுமில்லை. சிறுதொழில்கள் உருப்படியாக நடத்தப்பட்டாலே பெரும் விஷயம் அங்கெல்லாம்.  மக்கள் நலம் சார்ந்த, ஏழைகளுக்கு உதவும் திட்டங்களெல்லாம் அரசாங்கங்களிடம் இல்லை அங்கே.  சினிமா என்கிற தொழிலோ அதுசார்ந்த கொழுத்த பணக்காரர்களான ஸ்டார்களோ இல்லை. கொஞ்சம் வசதியானவர்கள், பணக்காரர்கள், புகழ்பெற்றவர்கள் என்றால், அவர்கள் அங்கே கிரிக்கெட் ஆட்டக்காரர்களாகத்தான் இருக்க முடியும் என்கிற விசித்திர நிலை, கிட்டத்தட்ட. அத்தகைய பின்புலத்தில், கரீபியச் சிறுவர்கள் ’நான் ஒருநாள் பெரிய கிரிக்கெட்டராக வருவேன், பெரும் பணம் சம்பாதிப்பேன், என்னைப்பற்றி மற்றவர்கள் பெருமையாகப் பேசுவார்கள்..’ என்றெல்லாம் கற்பனை செய்வது சகஜம்.

அன்று அந்தத் தாயின் முன் அப்படிக் கிரிக்கெட் மட்டையை உயர்த்திய அந்தச் சிறுவனின் வாழ்க்கை எளிதாக அமைந்துவிடவில்லை. பல சங்கடங்கள், போட்டிகள், தடைகள். சோதனைகள். ஒவ்வொரு முறை மனம் வெதும்பியபோதும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறான். ’நான் இதை எனக்காகப் பிரதானமாகச் செய்யவில்லை. அந்தப் பெண்ணிற்காக, என் தாய்க்காக செய்துகொண்டிருக்கிறேன். என் தங்கைக்குமாகவும்..’ சிபிஎல் என்கிற கரீபியன் ப்ரிமியர் லீக்  டி-20 கிரிக்கெட்டில் விளையாடி கொஞ்சம் பெயரும் வாங்கிவிட்டான். வெஸ்ட் இண்டீஸுக்காகத் தேர்வாகி ஆடியுமிருக்கிறான் சில ஆட்டங்கள். ஐபிஎல்-இல் டெல்லி அணிக்காக நேற்று மட்டையைப் பிடித்தவன், தன் அம்மாவை நினைத்தானோ.. அப்பாவை நினைத்தானோ.. என்ன நடந்ததோ அவன் மனதில். கிரிக்கெட் மைதானத்தில் பொறி பறந்தது. எதிரணியை துவம்சம் செய்து சிக்ஸர்களாகப் பறக்கவிட்டான். அவுட் ஆகாது மும்பை மைதானத்தில் கம்பீரமாக நின்றான். கைதட்டல்களுக்கிடையே பெவிலியன் திரும்பினான் ரோவ்மன் பவல் (Rovman Powell).

எது எப்படி இருப்பினும், தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டான் பிள்ளை. தன் மகன் கட்டிய வசதியான வீட்டில் அம்மா உட்கார்ந்து, சற்றே நிம்மதியாகத் தன் கடைசிகாலத்தை அனுபவிக்குமாறு செய்துகொடுத்திருக்கிறான். அப்பாவைப்பற்றி அவன் எப்படி நினைக்கிறான் என்பது தனிமனிதனாக அவன் யாரென்று கொஞ்சம் சொல்கிறது: ” தேடுதலை நிறுத்திவிட்டேன். விந்தை விதைத்தவனுக்கும் நன்றி. அவனன்றி நான் இங்கே வந்திருக்கமுடியாதல்லவா…”

**

இந்திய டி-20 கிரிக்கெட்: தமிழ்நாடே ராஜா !

டி-20 வகைக் கிரிக்கெட்டில் இளம் வீரர்களின் திறமையை வளர்க்க, கொண்டாட என தேசீய அளவில், சையது முஷ்டாக் அலி கோப்பை (SMA Trophy) இந்திய கிரிக்கெட் போர்டினால் 2007-ல் (ஐபிஎல்- இன் அதிரடி ஆரம்பத்திற்கு முன்னால்) தொடங்கப்பட்டது. முதல் ட்ராஃபியை தமிழ்நாடு ஜெயித்தது – இதே தினேஷ் கார்த்திக்தான் (அப்போது 22 வயது) கேப்டன்!

2021-ஆம் வருட சையது முஷ்டாக் அலி ட்ராஃபிக்கான இறுதிப் போட்டி நேற்று இரவு (31-1-21) அகமதாபாதில் நடந்தது. பரோடா அணியை செமயாக துவைத்தெடுத்து,  தமிழ்நாடு அணி கோப்பையைக் கைப்பற்றியது. (2020 கோப்பையை ஒரு ரன்னில் கர்னாடகாவிடம் தோற்றிருந்தது தமிழ்நாடு)

தமிழ்நாட்டின்  மகத்தான வெற்றியில் சில கவனிக்கத்தக்க அம்சங்கள். க்ரூப் ஸ்டேஜிலிருந்து இறுதி ஆட்டம் வரை தமிழ்நாடு எந்த அணியிடமும் தோற்கவில்லை. இத்தனைக்கும் டெல்லி, மும்பை, கர்னாடகா, குஜராத், பிஹார், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற வலிமையான அணிகள் ஆடிய டூர்னமெண்ட் இது. ஆச்சரியம் ஊட்டிய இன்னொரு விஷயம்: இப்போது சர்வதேச வெளியிலும் பெயர்பெற்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய முன்னணி வீரர்கள், தமிழ்நாட்டிற்காக இந்தப் போட்டிகளில் (வெவ்வேறு காரணங்களால்) ஆட முடியவில்லை: ஆர். அஷ்வின், முரளி விஜய், விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன். ஐந்து முக்கிய வீரர்கள், கிட்டத்தட்ட பாதி டீம் ஆடாத நிலையில், புதுமுகங்கள் சிலருடன் தினேஷ் கார்த்திக் களத்தில் இறங்கி, தேசீய அளவில் தமிழ்நாட்டை வேகமாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். சிறப்பான தலைமைப் பண்பு, கள வியூகங்கள், இளம் வீரர்கள் அதகளம் .. தமிழ்நாட்டின் கையில் இந்திய டி-20 கோப்பை.

சாய் கிஷோர்

இறுதிப்போட்டியில் பந்து வேகமாக எகிறியும், கூராகத் திரும்பியும் கூத்தடித்த அஹமதாபாதின் சர்தார் பட்டேல் மைதானத்தில், முதலில் ஆடிய பரோடாவின் இன்னிங்ஸில் முதல் 13 ஓவர்களை ஸ்பின்னர்களிடம் கொடுத்து எதிரணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் தமிழ்நாடு கேப்டன். திணறித் தத்தளித்தது பரோடா. ஐபிஎல் பெங்களூர் அணிக்காக வீசும் வாஷிங்டன் சுந்தரைப்போல் சிக்கனம் காட்டிய லெக்-ஸ்பின்னர் சாய் கிஷோர், 4 ஓவர்களில் வெறும் 11 ரன்களே கொடுத்து, பரோடா பேட்ஸ்மன்களை நெருக்கினார். இந்த வருட டி-20 போட்டிகளில்,  ஒரு மேட்ச்சிலும் ஆடாத ஃபிங்கர் ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த்தை திடீரென ஃபைனலில் நுழைத்து, 4 ஓவர் கொடுத்து, பரோடா பேட்ஸ்மன்களை குழப்போ குழப்பென்றுக் குழப்பிக் கலக்கினார் கார்த்திக். சித்தார்த்தின் சுழலில் 4 எதிரி விக்கெட்டுகள் பொத்துப்பொத்து என விழுந்தன. 9-ஆவது ஓவரிலேயே 36 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது பரோடா.  ஆல்ரவுண்டர்கள் ஹர்தீக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா இந்தத் தொடரில் ஆடாததும் பரோடாவைப் பலவீனப்படுத்தியிருந்தது. இத்தகு களநிலையில்,  120/9 என்கிற ஸ்கோர் மோசமில்லை. விஷ்ணு சோலங்கி  நன்றாக ஆடி 49 ரன் என டாப்-ஸ்கோர் கொடுத்தார். அதித் ஷேத் (Athit Sheth) 29. தமிழ்நாடு ஆடுகையில் துவக்க ஆட்டக்காரர் செழியன் ஹரி நிஷாந்த் 35, பாபா அபராஜித் 29 நாட்-அவுட், தினேஷ் கார்த்திக் 22 என விளாசி வென்றனர். ஸ்பின்னர் சித்தார்த் ஆட்ட நாயகன்.

சித்தார்த்

தமிழ்நாட்டின் வெற்றிக்கு சிறப்புப் பங்களிப்பு செய்த வீரர்கள் என இவர்களைக் குறிக்கவேண்டும்: ஸ்பின்னர்கள் சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், முருகன் அஷ்வின் (எழுத்தாளர் இரா.முருகனின் மைந்தன்), ஆல்ரவுண்டர் சோனு யாதவ், பேட்ஸ்மன்கள் நாராயணன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், அருண் கார்த்திக், ஷாருக் கான்.

வரப்போகிறது பிப்ரவரி 18-ல், சென்னையில் ஐபிஎல் ஏலம். ஏற்கனவே ஐபிஎல் அணிகளில், தமிழ்நாட்டின் சாய் கிஷோர், ஜெகதீசன் (சி.எஸ்.கே), முருகன் அஷ்வின் (பஞ்சாப்), தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, சித்தார்த் (கொல்கத்தா). ஆர்.அஷ்வின் (டெல்லி), நடராஜன்  (ஹைதராபாத்) வாஷிங்டன் சுந்தர் (பெங்களூர்) என இடம்பிடித்திருக்கின்றனர். இந்த  வருடம் தமிழ்நாட்டின்  ஷாருக் கான், ஹரி நிஷாந்த் போன்றோருக்கு ஐபிஎல்-அணிகளில் வாய்ப்புக் கிடைக்குமா?  பார்க்கவேண்டும்.

அதற்கு முன், ஃபிப்ரவரி 5-ல்  ஆரம்பிக்கிறது சென்னையில் – இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடர். 

**

கொரோனா கால கிரிக்கெட் !

கொரோனா காலத்தில் எதையும் நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கலாம். ஆனால் எதையும் ‘செய்துவிட’ முடியாது இஷ்டத்துக்கு! லாக்டவுன் கொல்கிறது ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு பிரிவினிரையும். ஆனால் இதைவிட்டால் உயிர்தப்பிக்க வேறு உபாயம் தெரியவில்லை என்கிற விசித்திர நிலையில் உலகம்.

தீநுண்மியின் தீவிர விளையாட்டைப் பார்த்து, அனுபவித்து வரும் பதற்ற நிலையில், மனிதர்களின் விளையாட்டை எப்படி ஆரம்பிப்பது? லாக்டவுன் தளர்த்தியாச்சு என்கிற தைரியத்தில் டென்னிஸ் ஆடுகிறேன் என்று ஆரம்பித்து  நோவாக் யொகோவிச் (Novak Jokovich) சமீபத்தில் வைரஸில் சிக்கி அவஸ்தைப்பட்டது ஞாபகமிருக்கிறதா? கூடவே அவரது மனைவியும்! இருவரும் ‘கோவிட்-பாஸிட்டிவ்’ ஆக இருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்பது அவர்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்!

இத்தகு சூழலில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கிலாந்தில். பாராட்டுவதா, பயப்படுவதா – தெரியவில்லை. சுமார் 100 நாள் இடைவெளிக்குப்பின் உலகம் ’லைவ்’ கிரிக்கெட்டை டிவி-மூலமாகவாவது ‘பார்க்க’ ஒரு வாய்ப்பு. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் அழைப்பின் பேரில், வெஸ்ட் இண்டீஸ் டீம் இங்கிலாந்து சென்றிருக்கிறது. முதலில் 14 நாள் ‘ஹோம் க்வாரண்டைனில்’ இருந்துவிட்டு,  இப்போது முதல் டெஸ்ட் மேட்ச்சை ஆடிவருகிறது. மூன்று டெஸ்ட் மேட்ச்சுகள், பின்னர் ஒரு-நாள் போட்டிகள் என ஜூலை-ஆகஸ்டுக்கான ஏற்பாடு.

’சோனி-சிக்ஸ்’ சேனலில் கண்டு ‘களித்து’வருகிறேன். ஆளில்லா மைதானத்தில் ஒரு பாப்புலர் ஸ்போர்ட்! ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு சமூக வலைதளங்களில். அவர்களும் என்னதான் செய்வார்கள் ? டிவி-யில் மட்டுமாவது கிரிக்கெட் பார்க்க வாய்ப்பு கிடைத்ததே என்கிற பரிதாப நிலை!

Players taking a knee before the start of play
(Pic courtesy : ESPN)

இங்கிலாந்துக்கு புது கேப்டன் – பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). வெஸ்ட் இண்டீஸுக்கு ஜேஸன் ஹோல்டர் (Jason Holder) கேப்டன். முதல் போட்டி இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் – ‘ரோஸ் பௌல்’ (Rose Bowl) மைதானத்தில் இரண்டு நாளாகப் போய்க்கொண்டிருக்கிறது. போட்டி ஆரம்பமாகுமுன் இருதரப்பு வீரர்களும், அம்பயர்களும் மைதானத்தில் ’ஒருகால் முட்டி போட்டு’, உலகின் ‘கறுப்பின’ மக்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். குறிப்பாக சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆவேச முஷ்டி உயர்த்தல் காணக்கிடைத்தது.  துவக்க நாளன்று, கையில் கறுப்பு பேண்ட் அணிந்து ஆடினார்கள் வீரர்கள்.  அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு எதிரான போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து (குறிப்பாக ஜார்ஜ் ஃப்லாய்ட் (George Floyd) என்பவரின் போலீஸ் ‘கொலை’) சமீபகாலத்தில் நிறைய போராட்டங்கள் நடந்தன. வெளிநாடுகளிலும் எதிரொலித்தன. BLM (‘Black Lives Matter’) எனும் இயக்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகிறது.

இப்போது கிரிக்கெட்டுக்கு வருவோம். கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை, ஐசிசி-யின் அனில் கும்ப்ளே தலைமையிலான டெக்னிகல் கமிட்டி அறிவித்தது. அதன்படி, வீரர்கள் விக்கெட் எடுக்கையில், கேட்ச் பிடிக்கையில் என குதூகலமாக ஒருவரையொருவர் கட்டிக்கொள்ளக்கூடாது! பந்துவீச்சாளர்கள் ‘வழக்கம்போல்’ கையில் எச்சில்துப்பி பந்தை பாலிஷ்  போடுகிற வேலையே கூடாது போன்ற சில கட்டுப்பாடுகள். டாஸ் வென்ற இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 204 ரன்னில் சுருண்டது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸின் ஷனன் கேப்ரியல் (Shanon Gabriel), ஜேஸன் ஹோல்டர் (Jason Holder)ஆகியோரின் துல்லிய ‘வேக’த் தாக்குதலற்கு இங்கிலாந்து ஈடுகொடுக்கமுடியாமல் ஒடுங்கியது. வெஸ்ட் இண்டீஸ் வழக்கத்துக்கு மாறாக நேற்று மிகவும் பொறுப்புடன் விளையாடி முதல் இன்னிங்ஸில் 318 எடுத்தது. துவக்க ஆட்டக்காரர் க்ரெய்க் ப்ராத்வெய்ட் (Kraig Brathwaite) 65 ரன், ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 47, ஷேன் டௌரிச் (Shane Dowrich) 61 என முக்கிய பங்களிப்பு. போட்டி தொடர்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் ‘வைரஸில்’ சிக்கிவிடாமல் அமைதியாக ஆட்டமாட,  ஆண்டவன் அருள்புரிவானாக.

படம். நன்றி: இந்தியா டிவி நியூஸ்.

**

டெஸ்ட் க்ரிக்கெட்:  முதலாட்டம் – மயங்க் அகர்வால்

நான்கு டெஸ்ட் தொடரில் ஆளுக்கொன்று ஜெயித்துவிட்டு ஒன்றைப்பார்த்து ஒன்று முறைத்துக்கொண்டு, மெல்பர்னில் (Melbourne) தற்போது 3-ஆவது டெஸ்ட் (Boxing Day Test -Dec 26-30)  விளையாடுகின்றன இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்.

முரளி விஜய், கே.எல். ராஹுல் மீது காட்டிய பொறுமை போய்விட்டது இந்திய அணிக்கு. போட்டிபோட்டுக்கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த இருவரும்  வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.  கர்னாடகாவின்(also in IPL 2019- King’s XI Punjab) மயங்க் அகர்வால் இந்தியாவுக்காக முதன்முதலாக ஆட,  தொடரின் 3-ஆவது டெஸ்ட்டில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறார்.  (இதற்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் சேர்க்கப்பட்டும், ஆட வாய்ப்பு கிட்டவில்லை).  இதுவரை  பேட்டிங் வரிசையில், ஆறாம் நம்பரில் ஆடிய  ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வாலுடன் துவக்க ஆட்டக்காரராக முதன்முதலாக இறங்கியிருக்கிறார் இந்த மேட்ச்சில். பொறுமையாக 66 பந்துகள் நின்று  ஆடிய விஹாரி, 8 ரன்னில் வெளியேறினார். அவரைக் குறைசொல்வதற்கில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு செம டைட், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அதிதுல்லியம். குறிப்பாக விஹாரியைத் தூக்கிய பாட் கம்மின்ஸ் (Pat Cummins). ஃபீல்டிங் வழக்கம்போல ஷார்ப்.

ஆனால் மறுமுனையில், டெஸ்ட் வெளியில் தனது முதலாவது ஆட்டத்தை ஆடிய மயங்க் அகர்வால் மசிந்துகொடுக்கவில்லை. இயற்கையாகவரும் அதிரடி ஆட்டத்தைக் குறைத்து, வலிமையான தடுப்பாட்டம் காட்டினாலும், அவ்வப்போது பௌண்டரிகளைத் தெறிக்கவிட்டார். குறிப்பாக 44 ரன்னில் இருந்தபோது, நேதன் லயனின் (Nathan Lyon) ஆஃப் ஸ்பின்னை மிட்-ஆஃபில் தூக்கி அடித்தது, அடுத்த பந்தை straight drive-ஆக தரையில் கோடுபோட்டு பௌண்டரிக்கு அனுப்பியது அசத்தல் பேட்டிங்.  ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான பௌலரான நேதன் லயனை,  அவர் கேஷுவலாகக் கவனித்தது எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.  161 பந்துகளில் 8 பௌண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன் எடுத்து  மயங்க்  வெளியேறியபோது, மெல்பர்னின் எண்ணற்ற இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் போர்டிடமிருந்தும் அப்பாடா என்கிற பெருமூச்சையும் அது வரவழைத்திருக்கும். இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் துவக்க ஆட்டக்காரர் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் முதல் அரைசதம் இது.

உண்மையில் ஆஸ்திரேலியாவில் துவக்க ஆட்டக்காரராக தூள்கிளப்பப்போகிறவர் ப்ரிதிவி ஷாதான் என எதிர்பார்ப்பு இருந்தது ஆரம்பத்தில். ஆனால், துரதிருஷ்ட வசமாக பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்கையில், அவர் கால்மடங்கி காயம்பட்டு குணமாக காலம்பிடிப்பதால், இந்தியாவுக்குத் திருப்பப்பட்டுள்ளார். ’நமக்கும் வாய்ப்பு வருமா அல்லது ரஞ்சி, இந்தியா ‘ஏ’ அணிகளோடு நம் சகாப்தம் முடிந்துவிடுமா’ என மயங்கிக்கிடந்த மயங்க் அகர்வாலைக் கவனித்த காலம், பிடித்துத் தூக்கி மெல்பர்னில் இறக்கிவிட்டது.  இந்திய ரஞ்சித் தொடர்களிலும் லிஸ்ட் ‘ஏ’ மேட்ச்சுகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக சாத்து சாத்து என்று சாத்திவரும் வலதுகை பேட்ஸ்மன். ஸ்ட்ராங் டெக்னிக் மற்றும் நேரத்துக்கேற்றபடி ஸ்விட்ச் செய்து அதிரடி காட்டும் திறமையுடையவர். ஆஸ்திரேலியாவில் முக்கியமானதொரு போட்டியில் அவரது பேட்டிங் அரங்கேற்றம் நிகழ்ந்திருப்பதும், சிறப்பாகத் தன் முதல் இன்னிங்ஸை விளையாடியிருப்பதும் மங்களகரம். மயங்க் மேலும் நன்றாக ஆடி, நாட்டிற்காக சாதிப்பார் என நம்புவோம்.

Picture courtesy: Internet

**

சொல்வனத்தில் டாம் ஆல்ட்டர்


(படம்: இணையம். நன்றி)

டாம் ஆல்ட்டர் (Tom Alter) : பிரபல பாலிவுட் நடிகர், ஹிந்தி தியேட்டர் பர்சனாலிட்டி, கிரிக்கெட் பத்தி எழுத்தாளர் என விதவிதமான முகங்கள்.. அவரைப்பற்றிய என் கட்டுரை ஒன்று (டாம் ஆல்ட்டர் என்றொரு கலைஞர்) நடப்பு ‘சொல்வனம்’ இணைய இதழில் வெளியாகியுள்ளது. வாசிக்க அன்பர்களை அழைக்கிறேன்.

லிங்க்: http://solvanam.com/?p=50753

நன்றி : சொல்வனம் இணைய இதழ்

அது இல்லாத நாள்

காலைக் காப்பியே கசக்குமாறு
கதையை ஆரம்பித்துவைத்தான் பையன்
அப்பா! போயிடுத்து.. ஃபோன் பண்ணு!
ஃபோன் போட்டால்மட்டும்
புறப்பட்டு வந்துவிடுமா ?
இட்லி சட்னி மிளகாய்ப்பொடி
இதமேதும் தரவில்லை வாய்க்கு
பேப்பர்க்காரனும் இன்னும் வரவில்லை
ஞாயிறில்கூட என்னய்யா அவசரம்
பேப்பர் போடறவனுக்கும்தானே ஞாயிறு
படிக்கிறவனுக்குத்தான் எல்லா சுகமுமா
உழைப்பாளி வர்க்கத்தின் தூரத்துக் குரல்
உடம்பில் சூட்டைப் பரப்புகிறது
ஒன்றும் சொல்வதற்கில்லை
உண்பதற்குத் தவிர வேறெதற்கும்
வாய் திறவாதிருப்பது சாலச்சிறந்தது
காலையிலேயே இப்படி ஆகிப்போச்சே
கலங்கித் தவிக்கிறது போக்கற்ற மனம்
வெளியிலே ஒரு ரவுண்டு
வாக் போய்வரலாமென்றால்
வந்துபார் வெளியில் என்றே
வேஷ்டியை வரிந்துகட்டி
முஷ்டியை உயர்த்தும் வெயில்
இதுக்குல்லாம் பயந்தால் முடியுமா
எதுக்கும் துணிந்தவனைப்போல்
இறங்கிவிடலாம் என்றால் நகரின்
குண்டுகுழிச் சாலைகளோ
நண்டு புகுந்தோடத்தான் லாயக்கு
மதிய உணவு கழிந்தபின்னும் மிக
மந்தமாக நகருதே பொழுது
கிரிக்கெட் இருக்கிறது ஆனால்
இருபது ஓவர் மேட்ச் என்றால்
இரவில்தானே காட்டுவார்கள்
செய்வதறியாக் கையறுநிலையில் – மேலும்
பெய்யும் மழை சென்னையில் என்றார்
ஐராவதம்–அடுத்த ப்ளாக் அழகியின் அப்பா
பகலைக் கடக்கமுடியாப் பதற்றத்தில்
வார இதழ்களையாவது
வாசித்துவைப்போமென்றால்
வாயெல்லாம் பல்லாய்
வதைக்கும் மூஞ்சிகள்
அலுத்துப்போன அரசியல்வாதிகள்
உலுத்துப்போன சித்தாந்தங்கள்
போகமாட்டேன் என்கிறதே பொழுது
போன சனியன் எப்போதுதான் வரும்
இண்டர்நெட் இல்லாத நாளும் ஒரு நாளா

**

டெஸ்ட் கிரிக்கெட்

`காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?` என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை ஒன்று, பிரபல இணைய இதழான `சொல்வன`த்தின் நடப்பு இதழில் (இதழ் : 157, 20-9-16) வெளியாகியுள்ளது. இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன் கிரிக்கெட் ப்ரேமிகளுக்காக:

http://solvanam.com/?p=46607

நன்றி: சொல்வனம்

**

கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறும் இந்தியா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும், இந்தியா ஆஸ்திரேலியா ஒரு-நாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இந்தியாவுக்கான ரிசல்ட்: 0.

சமீபத்தில்தான் தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் வென்ற டீம் இது. திடீரென என்னவாயிற்று இந்திய அணிக்கு? ஏனிந்தத் தடுமாற்றம்? பேட்டிங் சரியில்லையா? அப்படியும் சொல்வதற்கில்லை. துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண் வழக்கம்போல் சோபிக்கவில்லை.அவர் ஜாதகம் அப்படி. ஆனால் ரோஹித் ஷர்மா பிரமாதமாக ஆடினார். இரண்டு ஆட்டத்திலும் அபார சதம் அடித்துள்ளார். விராட் கோஹ்லியும், அஜின்க்யா ரஹானேயும் நன்றாக விளையாடிவருகின்றனர். இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா 300-ஐத் தாண்டியது. பின்னே என்னதான் பிரச்சினை? வழக்கமான பிரச்சினைதான். நமது பௌலிங் வெளி நாட்டில் எடுபடவில்லை. அடித்து நொறுக்கிவிட்டார்கள் ஆஸ்திரேலியர்கள்.

முதல் மேட்ச்சில், இந்தியாவின் புதிய இடது கை வேகப்பந்துவீச்சாளரான பஞ்சாபின் பரிந்தர் ஸ்ரன் (Barinder Sran) தனது முதல் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசினார். 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். அடுத்த பக்கத்தில் அவருக்கு அஷ்வின் துணையிருந்தார். ஆனால் மற்ற பௌலர்கள் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் 310 என்கிற இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் அடைந்து வென்றது. இரண்டாவது போட்டியிலும், இந்திய பௌலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களிடம் உதை வாங்கினர். ஸ்பின்னர்கள் கொஞ்சம் நன்றாகப் பந்துபோட்டிருக்கலாம் என்று அழுகிறார் கேப்டன் தோனி. உண்மைதான். ஆனால் யார்தான் சரியாகப் பந்து போட்டார்கள்? அனுபவம் நிறைந்த இஷாந்த் ஷர்மா 5 ஒய்டுகளை வாரி வழங்குகிறார். ஒரு விக்கெட் சாய்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அவருக்கு. இந்த மாதிரியான `அனுபவ வீரர்களை` வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா போன்ற, (ச்)சாம்ப்பியன் அணியை வெல்லமுடியுமா?

இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகிய, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பதிலாக, ரன்களை தானம் செய்யும் துல்லியமற்ற பௌலர்கள் இருக்கையில், வெற்றி என்பது கேப்டனின் பகல் கனவாகத்தான் போய்முடியும். இந்திய கேப்டன் இந்நிலையில் என்னதான் செய்வது? முதலில் பேட்டிங் செய்கிற அணி 300 ரன்கள் அடித்தால் போதும்; ஜெயித்துவிடலாம் என நினைத்த காலம் மலையேறிவிட்டது. இதனை இந்திய அணியினர் இனியாவது உணரவேண்டும். இந்திய அணிக்கு பேட்டிங்தான் ஓரளவுக்கு பலம். இனிவரும் போட்டிகளில் இந்தியா முதலில் பேட் செய்ய நேர்ந்தால், குறைந்தபட்சம் 340 ரன்களாவது எடுக்கவேண்டும். அப்போதுதான் வெற்றியைப்பற்றிக் கற்பனையாவது செய்யமுடியும்.

ஃபார்மில் வர சிரமப்படும் ஷிகர் தவனை உடனடியாகத் தியாகம் செய்வது, இந்திய அணிக்கு நல்லது. அவருக்கு பதிலாக நாளைய போட்டியில் (17-1-16), பஞ்சாபின் குர்கீரத் சிங் மான்(Gurkeerat Singh Mann) (பேட்டிங் ஆல்ரவுண்டர்) சேர்க்கப்படுவது உசிதமாக இருக்கும். இதனால் தோனிக்கு, ஒரு பேட்ஸ்மன் + ஒரு பௌலர் உபரியாகக் கிடைக்கும்.

நீங்களும் நானும் தவித்தால் போதுமா? உண்மையில் என்ன நடக்கப் போகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம் !

**

கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு அப்பால்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாட்களில் அதிரடியாக வென்றுவிட்டது கோஹ்லி தலைமையிலான இந்தியா. மொஹாலி ஆடுகளம் சுழல்பந்துவீச்சுக்கு படுசாதகமாக இருந்ததுதான் காரணம். எனினும் தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் (de Villiers), ஆம்லா, டூ ப்ளஸீ(du Plessis) போன்ற ஜாம்பவான்கள் இருக்கையில், போட்டி மூன்று தினங்களுக்குள் முடிந்துவிடும் என யாரும் நினைக்கவில்லை.

என்னதான் நடந்தது? தென்னாப்பிரிக்கா இதனை எதிர்பார்க்கவில்லையா? அதிர்ச்சிகளை நிச்சயமாக எதிர்பார்த்துத்தான் மொஹாலி மைதானத்தில் இறங்கியது. ஆல்ரவுண்டர் டூமினி(Duminy) (ஸ்பின்னரும் கூட) காயத்தினால் ஆடாதது தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம். ஆனால், அந்த அணியில் இம்ரான் தாஹிர் தவிர, ஆஃப் ஸ்பின்னர் ஹார்மர், இடதுகை ஸ்பின்னர் டீன் எல்கார் (Dean Elgar) ஆகியவர்கள் இந்திய மைதானத்தின் நிலையைக் கருத்தில்கொண்டே சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் மொத்தம் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களே வீழ்த்தினார்கள். இது தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களின் குறிப்பிடத்தக்க சாதனை என்பதை மறுக்கமுடியாது.

இந்தியாவின் 201(முதல் இன்னிங்ஸ்), 200(இரண்டாவது இன்னிங்ஸ்) ஒன்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னே, பிரமாதமான, சவாலான ஸ்கோர்கள் இல்லை. ஆனால், முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஆம்லா, டிவில்லியர்ஸ், எல்கார் தவிர வேறு யாரும் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து இந்திய சுழலைச் சரியாக சமாளித்து விளையாட முடியவில்லை. அஷ்வின் 5 விக்கெட்டுகளை சாய்க்க, தென்னாப்பிரிக்கா 184-ல் மூட்டையைக் கட்டியது. மூன்றாவது நாளன்று தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா 218 என்ற இலக்கை வைத்தது.

டென்ஷனும், எதிர்பார்ப்புகளும் ஏற, பௌலிங்கை ஆஃப் ஸ்பின்னர் அஷ்வினை வைத்துத் துவக்கியது இந்தியா. மைதானத்தின்மீது கோஹ்லிக்கு அவ்வளவு நம்பிக்கை! தென்னாப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரராக பௌலர் ஃபிலாண்டர்(Philander)-ஐ அனுப்பியது. அஷ்வினையும், ஜடேஜா, மிஷ்ராவையும் கூட மொஹாலியில் தடுத்து ஆடுவது கடினம். ஆகவே, அடித்துத் துரத்த ப்ளான்! ஆனால் சட்டியில் பருப்பு வேகவில்லை. தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் இந்திய ஸ்பின்னர்களின் இடைவிடாத தாக்குதலில் (குறிப்பாக ஜடேஜா-5 விக்கெட்) நிலைகுலைந்தன. ஆம்லாவும், டி வில்லியர்ஸும் போராட முயன்று காலியானார்கள். தென்னாப்பிரிக்கா எதிராட்டம் ஆடமுடியாமல் 109-ல் சுருண்டுவிட்டது. ஒரு-நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இந்தியாவைச் சாய்த்த தென்னாப்பிரிக்காவுக்கு, முதல் டெஸ்ட்டில் சரியான அடி.

இந்த வெற்றியினால் இந்தியா பெரிய டீம் என விஸ்வரூபம் எடுத்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை. வெற்றியின் ஊடேயும், இந்திய பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இயங்கவில்லை என்கிற நிதர்சனம் கண்முன்னே நின்று கலக்கம் தருகிறது. முரளி விஜய் மற்றும் புஜாரா மட்டுமே நிலைத்து நம்பிக்கையுடன் விளையாடிய வீரர்கள். கேப்டன் கோஹ்லி, ரஹானே, ஷிகர் தவன்(Shikar Dhawan) (இரண்டு இன்னிங்ஸிலும் பூஜ்யம்) – இவர்கள் தந்தது பெரும் ஏமாற்றமே. இந்த ஸ்திரமற்ற இந்திய பேட்டிங் அடுத்த டெஸ்ட்டில் (பெங்களூர்) என்ன செய்யும்? தொடரில் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆதலால், சில மாறுதல்கள் அணியில் தேவைப்படுகின்றன.

இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவன் ஃபார்மில் இல்லை என்பது மொஹாலியில் நன்றாகவே தெரிந்தது. அடுத்த டெஸ்ட்டில், அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் ரிசர்வ் துவக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராஹுல் சேர்க்கப்பட்டால் அணிக்கு பலமுண்டாகும். அதேபோல், விக்கெட்கீப்பர் சாஹாவின் விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங்கும் முதல் டெஸ்ட்டில் சோபிக்கவில்லை. அவருடைய இடத்தில் ரிசர்வ் விக்கெட் கீப்பர் நமன் ஓஜா பெங்களூரில் ஆடுவது நல்லது. வேறு எந்த மாறுதலும் தேவையில்லை எனத் தெரிகிறது. அடிபட்ட நாகம் போலிருக்கிறது தென்னாப்பிரிக்கா. போதிய மாற்றங்கள் அவர்கள் அணியிலும் செய்யப்படும். டூமினி அனேகமாக அடுத்த மேட்ச்சில் ஆடுவார். மிகுந்த முனைப்புடன் தென்னாப்பிரிக்கா பெங்களூரில் நுழையும்.

இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய ஆட்டக்காரர்கள், குறிப்பாக பேட்ஸ்மன்கள் எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதைப் பொறுத்திருக்கும் நமது வெற்றி வாய்ப்பு. முதல் மேட்ச்சில் வென்றுவிட்டோம் என்கிற இறுமாப்பில் சாய்ந்து உட்கார, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்னும் போகவேண்டிய தூரம் பாக்கியிருக்கிறது.
**

கிரிக்கெட்: இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்ட்-ஒரு முன்னோட்டம்

பஞ்சாபின் மொஹாலி (Mohali) மைதானத்தில் இன்னும் சிலமணி நேரத்தில், தொடங்கவிருக்கிறது இந்தியா-தென்னாப்பிரிக்காவுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர். இது 4 மேட்ச்சுகள் கொண்டது. விராட் கோஹ்லி (Virat Kohli) தலைமை தாங்கும்-இந்தியாவில் ஆடப்படும்-முதல் டெஸ்ட் தொடர்.

இந்தியாவில் ஆட வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி, வலிமையானதாக, இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தலைமை தாங்குவது ஹஷிம் ஆம்லா(Hashim Amla). அருமையான ஆட்டக்காரர். கூடவே இருக்கிறார்கள் – எதிரணியைக் கதி கலங்கவைக்கும் டி வில்லியர்ஸ் (AB de Villiers) மற்றும் ஃபாஃப் டூ ப்ளஸீ (Faf du Plessis), குய்ண்டன் டி காக் (Quinton de Cock) போன்ற பேட்ஸ்மென்கள். இவர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது இந்திய பௌலர்களுக்கு முன் அமர்ந்திருக்கும் சவால். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் –டேல் ஸ்டேன்(Dale Steyn), ஃபிலாண்டர் (Philander), மார்னீ மார்க்கெல் (Mornie Morkel), ஆபாட் (Abbot) ஆகியோர்- திறமையானவர்கள், எதிரணியின் விக்கெட்டுகளைக் கெல்லி எறிவதில் சூரர்கள். ஃபீல்டிங்? கேட்க வேண்டியதில்லை. டாப் க்ளாஸ்!

இத்தகைய எதிரிக்கு எதிராகத்தான் இந்திய அணியை முனைப்படுத்தி விளையாடும் நிலையில் இருக்கிறார் விராட் கோஹ்லி. கோஹ்லி –டெஸ்ட் விளையாட்டைப்பொறுத்தவரை- தோனி(Dhoni)-யிடமிருந்து வேறுபட்ட சிந்தனைகளும். விளையாட்டு வியூகங்களும் உள்ளவர். அதன்படி, அவர் 5 பௌலர்கள், 6 பேட்ஸ்மன்களோடு களமிறங்குவார் எனத் தோன்றுகிறது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக அனேகமாக முரளி விஜய்யும், ஷிகர் தவனும் (Shikar Dhawan) இறக்கப்படுவார்கள் என நினைக்கலாம். இதே மைதானத்தில்தான் போனவருடம், ஷிகர் தவன் ஆஸ்திரேலிய பௌலர்களை துவம்சம் செய்தார். இப்போது என்ன செய்வாரோ? கோஹ்லி, ரஹானேயோடு, புஜாரா-வும்(Pujara) அணியில் சேர்க்கப்படலாம் என்பது பெரும்பாலானோரின் யூகம். ஸ்ரீலங்காவுக்கு எதிராக கடைசி டெஸ்ட்டில் இறங்கி சதமடித்து, இந்திய வெற்றிக்கு வழிவகுத்த புஜாராவை நீக்குதல் பேட்டிங் தற்கொலைக்குச் சமானமாகும்.

பௌலிங்கில், அஷ்வின் அணிக்கு திரும்பியிருக்கிறார் என்பது கோஹ்லிக்குக் குஷியூட்டும் விஷயம். உலகின் தற்போதைய சிறந்த ஆஃப் ஸ்பின்னர் தன் அணியில் இருப்பது எந்தக் கேப்டனுக்குத்தான் சந்தோஷம் தராது? கூடவே, ஜடேஜாவும், மிஷ்ராவும் இறக்கப்படலாம். ஜடேஜா, அஷ்வின் இருவரிடமும், பௌலிங்கோடு, பேட்டிங் திறமையையும் எதிர்பார்ப்பார் கோஹ்லி. இஷாந்த் ஷர்மா ஒரு-டெஸ்ட்போட்டித் தடையை அனுபவித்துவருவதால், இந்த மேட்ச்சில் விளையாடமாட்டார். கோஹ்லி, அனேகமாக வருண் ஆரோன், உமேஷ் யாதவ் இருவரையும் வேகப்பந்து வீச அழைப்பார் எனலாம். இருவரின் வேகமும் 145 கி.மீ.க்கு நெருக்கத்தில் இருந்தாலும், எவ்வளவு துல்லியமாக, லைன்-லென்க்த்(line and length)-ஆகப் பந்து வீசுவார்கள் என்பதைப் பொறுத்தே விக்கெட்டுகள் விழும். அல்லது எதிரணிக்கு ரன்கள் தாரை வார்க்கப்படும்.

ஸ்டேன் & கோ.-வின் ஆவேசப் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மன்கள் எப்படிச் சமாளிப்பார்கள் என்பதே இந்தத் தொடர் முழுதும் நீடிக்கவிருக்கும் சஸ்பென்ஸ்/எதிர்பார்ப்பு. தென்னாப்பிரிக்காவிடம் உள்ள ஒரே டெஸ்ட்-தரம் வாய்ந்த ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் (Imran Tahir). மைதானம் சுழலுக்கு சாதகமாக அமைந்தால், இந்திய பேட்ஸ்மன்களுக்கு தாஹிர் கூடுதல் தலைவலி.

இது நவம்பர் முதல்வாரம். பஞ்சாபில் காலை நேரப் பனி, பார்வையை மங்கவைக்கும். மைதானத்தைக் குளிர்விக்கும். கூடவே, வேகப்பந்து வீச்சைச் சந்திக்கும் பேட்ஸ்மென்களுக்கு அதிகமாகவே குளிரெடுக்க வைக்கும். தென்னாப்பிரிக்கா முதலில் பௌலிங் செய்தால், இந்திய பேட்ஸ்மன்கள் அதிஜாக்ரதையாக ஆடவேண்டிவரும்.

இந்தியர்கள் தீபாவளிப்பட்டாசுகளைக் கொளுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். டெல்லியில் ஏற்கனவே வெடிச்சத்தங்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. பஞ்சாப்-மொஹாலியில் அடுத்த 5 நாட்களில், இரண்டு அணி வீரர்களில், யார், யாரின் பட்டாசு பெருஞ்சத்தம் போட்டு வெடிக்கும், யாருடையது நமுத்துப்போய்ப் பிசுபிசுக்கும் என்பது விரைவிலேயே தெரியவரும்!

**