சூப்பர்கிங்ஸின் சூப்பர் வெற்றி, மற்றும்..

ஏகப்பட்ட சாலைமறியல்கள், அடிதடிகள், காவல் நெருக்கடிகளைத்தாண்டியும், நேற்று(10-4-18) சேப்பாக் மைதானம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது என்றே தோன்றியது. மங்களகர மஞ்சள், ப்ரகாசம் காட்டியிருந்தது எங்கும். இப்படி ஒரு ரசிகர்கூட்டம் ஆவேசமாகக் குஷிப்படுத்துகையில், பெரும் உத்வேகத்துடன்தானே மைதானத்தில் இறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்? கேதார் ஜாதவ் இல்லாததால் சாம் பில்லிங்ஸை (Sam Billings) மிடில் ஆர்டரில் இறக்கியது சென்னை. இருந்தும், இப்படி ஒரு பயங்கர மாஸ் காட்டும் இந்த அணி என நான் நினைக்கவில்லைதான். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிரமாத ஸ்கோரான 202-க்குப் பின்.

முதலில் ஆடிய தினேஷ் கார்த்திக்கின் கல்கத்தா அணியும், தன் சொந்த மைதானத்தில் இரண்டு வருடங்களுக்குப்பின் இறங்கும் சிஎஸ்கே கடுமையாக விளையாடும் என எதிர்பார்த்தே இறங்கியிருந்தது. மஞ்சள் சட்டைகள் மடக்கிவிடுவார்கள் என்பதால், ஆரம்ப விக்கெட்டுகளுக்குப்பின் உஷாராக விளையாடியது கல்கத்தா. மிடில் ஆர்டரில் உத்தப்பா, கார்த்திக் மற்றும் நேற்றைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல். தோனியின் பந்துவீச்சாளர்கள், ஆரம்பத்திலிருந்தே கல்கத்தா வீரர்களை செட்டில் ஆக விடவில்லை. கொத்து கொத்தென்று கொத்தி விக்கெட்டுகளைத் தூரப்போட்டார்கள். திடீரென்று 89/5 என்று அலறியது கல்கத்தா ஸ்கோர். கல்கத்தா ரசிகர்களின் முகம் வாடிப்போய்விட்டது. மிஞ்சி மிஞ்சிப்போனால் 150-155-ஐ நெருங்கலாம். ஊதித்தள்ளிவிடலாம் மேட்ச்சை என தோனி&கோ நினைத்திருந்த நேரம். 7-ஆம் ஆளாக கல்கத்தாவுக்கு வந்திறங்கினார் ஆந்த்ரே ரஸ்ஸல். ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடையிலிருந்து ஒருவழியாக மீண்டு வந்திருந்த ரஸ்ஸல், சில விஷயங்களை நிரூபிக்கக் காத்திருந்தார் போலும். சேப்பாக் அதற்கான வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது. என்ன ஒரு ஆட்டம்! முதல் மேட்ச்சில் ப்ராவோ, அப்புறம் கே.எல்.ராஹுல், பின்னர் சுனில் நாராய்ண், இப்போது இந்த ரஸ்ஸல்! அவர் விளாசிய 11 சிக்ஸர்களில் ஒன்று மைதானக் கூரைக்கு மேலே பறந்து ரசிகர்களை அண்ணாந்து பார்க்கவைத்தது. 102 மீட்டர்ஸ். காணாமற்போனது பந்து. இப்படி அதகளமாக ஆடி கொல்கத்தாவை 202-க்குத் தூக்கி நிறுத்தினார் கல்கத்தாவின் ஹீரோ. மைதானத்தில் ஒரே மஞ்சளாகப் பூத்திருந்தாலும், ஒருபகுதியில் கல்கத்தாவின் வயலட் கூட்டமுமிருந்தது. அதில் விஐபி பகுதியில் தன் பரிவாரத்துடன் அமர்ந்திருந்த கல்கத்தா அணி உரிமையாளருமான நடிகர் ஷா ருக் கான், ரஸ்ஸலை ஏதோ தேவதூதனை பார்ப்பதுபோல் பார்த்துக் கையசைத்தார். சென்னை காலி என்று அவரும் நினைத்திருப்பார் !

203 என்பது இலக்கு. தோனியின் சென்னைக்கு இது ஒரு வாழ்வா சாவா போட்டியாகத் தெரிந்திருக்கவேண்டும். செய் அல்லது செத்து மடி! இப்படியான மனநிலையில் சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் ஆரம்பத்திலேயே தூள்கிளப்பினார்கள். ஆறே ஒவர்களில் ஸ்கோர் 75. என்ன ஆச்சு சென்னைக்கு? ஏதாவது பூதம் கீதம் புகுந்துகொண்டதா! ஒன்றிரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும், ரன் –ரேட்டை உயர்த்தியே வைத்திருந்தது சென்னை. தினேஷ் கார்த்திக் கல்கத்தா பௌலர்களை வேகவேகமாக சுழற்றிப்பார்த்தார். அவர்களும் அவ்வப்போது நன்றாக வீசியும் சென்னையிடம் பாச்சா பலிக்கவில்லை. இந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் சாம் பில்லிங்ஸ். முன்பு டெல்லி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர். ரஸ்ஸல் போட்ட ஆட்டத்திற்கு சென்னையிலிருந்து யாராவது ஒருவர் பதில் சொல்லியாக வேண்டுமே! அந்த வேலையை இவர் தன் கையிலெடுத்துக்கொண்டார். எதிரே தோனி நிதானம் காட்டுகையில், காட்டடியில் இறங்கினார் பில்லிங்ஸ். 23 பந்துகளில் 56 (5 சிக்ஸர்கள்) எனத் தூள்கிளப்பியது அவருடைய பேட். மைதானத்தின் மஞ்சள்சட்டைகள் எழுந்தாடின. ஆர்ப்பரித்தன. 19-ஆவது ஓவரில், டாம் கர்ரனிடம் பில்லிங்ஸ் விழுந்துவிட்டாலும், சென்னையில் உயிர் இன்னுமிருந்தது. கடைசி ஓவர் சிக்ஸரைக் காண்பித்து ’சுபம்’ போட்டுவைத்தார் ரவீந்திர ஜடேஜா. இன்னுமொரு மகத்தான சிஎஸ்கே வெற்றி, மஞ்சள் கொண்டாட்டம்.

குழப்பம் ஏற்படுத்தவேண்டுமென்றே சில தரப்பினர்களால் கிளப்பப்பட்ட சர்ச்சைகள், மறியல்கள், பேடித்தனமான மிரட்டல்களுக்கு மத்தியில், க்ரிக்கெட் எனும் அபாரமான விளையாட்டின் வெற்றி. உன்னத க்ரிக்கெட் ரசனைக்குப் பேர்போன சென்னையின் வெற்றி.

** .

சென்னையில் ஆடும் தோனியின் சிஎஸ்கே – ஐபிஎல்

சென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா?

கல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர்? கொஞ்சமும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து
கோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்!

பேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.

சென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி? முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா? சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே! பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா?
சென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில்? முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்?

இதற்கிடையே – ஏய்! ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை! –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்!

**

க்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.

முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.

பதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள்! ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.

மூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன்! ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ! அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.

விடாது போராடிய பாண்ட்யா-கேதார்:
அடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ!. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா? பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.

3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது?

**

ICC World T-20 : வெஸ்ட் இண்டீஸ் உலக சேம்பியன் !

கல்கத்தாவில் நேற்று(3-4-2016) கடைசி ஓவர் க்ளைமாக்ஸில், கதையை மாற்றி எழுதிவிட்டது வெஸ்ட் இண்டீஸ். ஜெயித்துவிடுவோம் என்கிற இறுமாப்பு காட்டிய இங்கிலாந்தை நொறுக்கி, கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தியா விளையாடாத இறுதிப்போட்டியானாலும், ஈடன் கார்டன்ஸில்(Eden Gardens) ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்திய ரசிகர்களில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீஸின் ஆதரவாளர்களே என்பது கண்கூடாகத் தெரிந்தது. இதே மைதானத்தில் பகலில், மகளிருக்கான உலகக்கோப்பையை முதன்முதலாக வென்றிருந்தது வெஸ்ட் இண்டீஸ். பெண்கள் அணியும் தங்கள் ஆடவர் அணியை உசுப்பேற்ற உடன் இருந்தனர். இங்கிலாந்து டீமின் குடும்பத்தினர், நண்பர்கள் என பெரிய குழாம் ஒன்று கொடியசைத்துக் கூச்சலிட்டு இங்கிலாந்து அணியை குஷிப்படுத்திக்கொண்டிருந்தது.

டாஸ்(toss) வெல்வதில் மன்னரான வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி (Darren Samy) இந்த முறையும் வென்று, இங்கிலாந்தை உள்ளே அனுப்பினார். முதல் ஓவர் போட்டது லெக்-ஸ்பின்னர் சாமுவேல் பத்ரீ(Samuel Badree) (சென்னை சூப்பர் கிங்ஸ்). நேராகத் தாக்கும் துல்லியம், பந்தை எகிறவிடாமல் தேய்த்துச் செல்லவைக்கும்(skidding) லாவகம் உடையவர். இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்து ஓபனர் ஜேஸன் ராய் (Jason Roy) க்ளீன் –போல்ட்(clean bowled). ஆந்த்ரே ரஸ்ஸல் (Andre Russel) ஒரு விக்கெட் சாய்க்க, அடுத்த ஓவரில் கேப்டன் ஆய்ன் மார்கனை (Eoin Morgan) வீழ்த்தினார் பத்ரீ. 23 ரன்களுக்கு 3 விக்கெட். ஆட்டம் கண்டது இங்கிலாந்து.

இங்கிலாந்தின் விக்கெட்டுகள் சரமாரியாக விழுந்துகொண்டிருக்க, ஜோ ரூட்(Joe Root-54 ரன்கள்) சிறப்பாக எதிர்த்தாக்குதல் நடத்தினார். துணையாக ஆடியவர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்(Jos Butler-36 ரன்கள்). இருவருடைய வீர சாகசங்களுக்கும் விரைவில் ஒரு முடிவுகட்டினார் கார்லோஸ் ப்ராத்வேய்ட் (Carlos Brathwaite). டுவேன் ப்ராவோவும் சிறப்பாக வீச, இருவரும் ஆளுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்து, இங்கிலாந்தை 155 ரன்னில் நிறுத்தி மூச்சிறைக்கவைத்தனர்.

156 கோப்பைக்கான இலக்கு. வெஸ்ட் இண்டீஸின் பதில்? படுமோசமான ஆரம்பம். ஜோ ரூட் வீசிய 2-ஆவது ஓவரிலேயே, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கேல் (Chris Gayle), சார்ல்ஸ் ஜான்சன் ஆகியோரின் கதை முடிந்தது. அடுத்துவந்த லெண்டல் சிம்மன்ஸ்(இந்தியாவுக்கு எதிராக பொளந்து தள்ளிய ஆசாமி) டக் (duck) அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் 11 ரன்களுக்கு 3 விக்கெட் எனத் தத்தளித்தது. மிடில் ஆர்டரில், மார்லன் சாமுவேல்ஸ் மிகுந்த பொறுப்புடன் ஆட, ப்ராவோ துணையாட்டம். ரன்கள் சேர்ந்தன. ஆனால் ரன்விகிதம் மிக மோசமாக இருந்தது. 25 எடுத்திருந்த ப்ராவோ 14-ஆவது ஓவரில் சாய, 16-ஆவது ஓவர் மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதிரடி ரஸ்ஸல், கேப்டன் சேமி இருவரும் இங்கிலாந்தின் பௌலிங்கைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் விழுந்தனர். சாமுவேல்ஸ் மட்டும், வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர்களிடம் காணப்படாத அதீத பொறுமையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் எகிறும், தேவைப்படும்-ரன்விகிதத்தை (asking rate) அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது மலைபோல் உயர்ந்து வெஸ்ட் இண்டீஸின் கழுத்தை நெருக்கியது. ஜெயித்துவிடுவோம் என்கிற நிலை இங்கிலாந்துக்கு போதை ஏற்றியது. அப்போது சாமுவேல்ஸுடன் ஜோடி சேர்ந்தது ஒரு கத்துக்குட்டி. கார்லோஸ் ப்ராத்வேய்ட். அனுபவம் இல்லாத 6 ½ அடி உயர ஆல்ரவுண்டர். 19-ஆவது ஓவரை இங்கிலாந்தின் க்றிஸ் ஜார்டன் (Chris Jordan) அருமையாகப்போட்டு அதிக ரன் கொடுக்காமல் முடித்துவிட, இங்கிலாந்து உலகக்கோப்பையை மனதில் ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டது!

கடைசி ஓவர். 19 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ். இல்லை என்றால் இங்கிலாந்து உலக சேம்பியன். 20-ஆவது ஓவரை வீசியது இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes). ரன் கொடுப்பதில் கஞ்சன். விக்கெட்டும் எடுத்துவிடக்கூடிய பேர்வழி. சாமுவேல்ஸ் 85 ரன் எடுத்து நின்றார் எதிர்பக்கத்தில். பந்தை எதிர்கொண்டவர் ப்ராத்வேய்ட். இங்கிலாந்து ரசிகர்களின் முகத்தில் வெற்றி ஜொலிப்பு. வெஸ்ட்-இண்டீஸ் ரிசர்வ் ப்ளேயர்கள், கோச்சுகள், வெஸ்ட்-இண்டீஸின் மகளிர் அணி மற்றும் இந்திய ரசிகர்களின் முகத்தில் கிலி. முதல் பந்தை ஸ்டோக்ஸ் யார்க்கராக முயற்சித்து லெக்-ஸ்டம்ப்பின் கீழ் வேகமாக இறக்கினார். அதற்காகவே காத்திருந்தது ப்ராத்வேய்ட்டுக்குள் உட்கார்ந்திருந்த பெரும் பூதம் ஒன்று. கண் இமைக்கும் நேரத்தில், லெக்-சைடில் ஒரு அசுரத் தூக்கல். ஸ்டேடியத்தின் வரிசைகளில் போய் தொப்பென்று விழுந்த பந்து சிக்ஸர் என அலறியது! அடுத்த பந்து கூர்மையான யார்க்கர். லாங்-ஆன் திசையில் சீறி சிக்ஸரானது! வெஸ்ட்-இண்டீஸ் உயிரூட்டப்பட்டுவிட்டது! அதிர்ந்துபோன ஸ்டோக்ஸ், மூன்றாவது பந்தை நன்றாகத்தான் போட்டார். பந்தின் குணநலன்களை ஆராயும் மனநிலையில் ப்ராத்வேய்ட் இல்லை. தூக்கினார் மீண்டும். இப்போது லாங்-ஆஃப்-இல் தெறித்தது சிக்ஸர். மூன்றே பந்துகளில் 18 ரன்கள். திடீரென்று, இங்கிலாந்து குற்றுயிரும், குலைஉயிருமாய்ப் புரண்டது. சீட்டின் நுனியிலிருந்த வெஸ்ட்-இண்டீஸ் ரசிகர்கள் காற்றில் மிதந்தனர். வெற்றிக்கு இன்னும் ஒரே ரன் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு! க்றிஸ் கேய்ல், ப்ராவோ, சேமி, ரஸ்ஸல் முதான வெஸ்ட்-இண்டீஸ் வீரர்கள் வரிசையாகக் கைகோத்துக்கொண்டு மைதான விளிம்பில். கொண்டாட்டப் பாய்ச்சலுக்குத் தயாராக நின்றனர். நிலைகுலைந்த ஸ்டோக்ஸ் நடுங்கிக்கொண்டே வீசினார் நாலாவது பந்தை. மீண்டும் லெக்-சைடில் மின்னல்காட்டியது சிக்ஸர். கடைசி ஓவரின் நான்கு பந்துகள் : 6,6,6,6. ப்ராத்வேய்ட் புதிய கரீபியன் ஹீரோ. யாரிந்த கார்லோஸ் ப்ராத்வேய்ட்? கூகிள் வேகமாகத் தேடிக் கண்டது. கிரிக்கெட்டுக்கு பார்படோஸின்(Barbados) புதிய அன்பளிப்பு. IPL-ல் டெல்லி டேர்டெவில்ஸ் (Delhi Daredevils) அணி. ட்விட்டர் சிதறிப் பரவியது.

கல்கத்தாவின் நெடிய இரவு. கரீபியப் பிரதேசத்தில்(Carribean region) களிப்பான காலைப்பொழுது. உலகக்கோப்பையோடு காமிராவுக்கு காட்சி அளித்தபின், ஈடன் கார்டன்ஸில் சட்டையைக் கழட்டிவிட்டு உல்லாச நடனம் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். இங்கிலாந்தில் சட்டையைக் கழற்றிச் சுழற்றிய இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மைதானத்தில் சிரிப்புடன் ரசித்திருந்தார்.

2016 ஒரு மறக்கமுடியாத வருடம் வெஸ்ட் இண்டீஸுக்கு. கைக்கு வந்தன கிரிக்கெட்டின் மூன்று உலகக்கோப்பைகள்! முதலில் Under-19 ICC T-20 World Cup. இரண்டாவதாக நேற்று மாலையில் ICC World T-20 Cup for Women. மூன்றாவதாக இரவில் டேரன் சேமியின் வீரர்கள் வென்ற ICC World T-20 Cricket Cup. Fabulous, memorable victories. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மறுமலர்ச்சி. வாழ்த்துக்கள் !

**

உலகக்கோப்பை : இந்தியாவை நிறுத்திய வெஸ்ட் இண்டீஸ் !

இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவை வெஸ்ட் இண்டீஸ் நேற்று (31-3-16) தகர்த்துவிட்டது. மும்பையில் நடந்த கடுமையான செமி ஃபைனல் போட்டியில் இந்தியாவின் 192-என்கிற ஸ்கோரை அனாயாசமாகத் தாண்டி, ஃபைனலில் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்.

க்றிஸ் கேய்ல் vs விராட் கோஹ்லி, அஷ்வின் vs சாமுவேல் பத்ரீ என்றெல்லாம் ரசிகர்கள் கற்பனை செய்திருந்தார்கள். கதை எப்படியோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்தது. Typical T-20 !

முக்கியமான டாஸைத் தோற்ற இந்தியா, முதல் பேட்டிங் செய்யவேண்டியிருந்தது. ஆனால் ஆச்சரியமாக ரோஹித் ஷர்மா விழித்திருந்தார். முதல் 6 ஓவர் பவர்-ப்ளேயில் ரோஹித்தின் அட்டகாசம்! 3 பௌண்டரி, 3 சிக்ஸர். 31 பந்துகளில் 43 ரன்கள்.சாமுவேல் பத்ரீயிடம் ரோஹித் விழுந்தவுடன் இறங்கினார் கோஹ்லி. கோஹ்லியும், ஷிகர் தவனுக்கு பதிலாக இறங்கியிருந்த ரஹானேயும் பொறுப்புடன் ஓடி, அவ்வபோது பௌண்டரி ஆடி ரன் சேர்த்தனர். ர்ஹானே 40 ரன்களில் அவுட்டாக, தோனி இறங்கி கோஹ்லியுடன் சேர்ந்து ஆடினார். டெத்-ஓவர்களில்(death-overs) கோஹ்லி 16 பந்துகளில் 45 ரன் விளாசினார். 47 பந்துகளில் 89 நாட்-அவுட். ஒரே ஒரு சிக்ஸர்! Masterclass. இந்தியா 192-ஐத் தொட்டது.

பொதுவாக ரன்கள் குவியும் மும்பை மைதானத்தில் 192 என்பது நல்லதொரு ஸ்கோர்தான். ஆனால் இந்தியாவின் பௌலிங்கும் ஃபீல்டிங்கும் மிகக் கறாராக இருந்திருக்கவேண்டும். அதிரடி வெஸ்ட் இண்டீஸை அடக்குவது கஷ்டம். க்றிஸ் கேய்லை குறிவைத்த இந்தியா இரண்டாவது ஓவரில் அவரைச் சாய்த்தது. ஜஸ்பிரித் பும்ரா தன் யார்க்கரால் அவரை க்ளீன்-போல்ட்(clean-bowled) செய்து ரசிகர்களைக் குதிக்க வைத்தார். ஆனால் இன்னொரு ஓபனரான சார்ல்ஸ் ஜான்சன் சிறப்பாக ஆடினார். 3-ஆவதாக இறங்கிய சாமுவேல்ஸ் விரைவிலேயே வீழ்ந்தார். இந்தியர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. அடுத்து வந்தவர்தான் இந்தியாவுக்கு சனியனாக மாறினார். லெண்டல் சிம்மன்ஸ் (Lendl Simmons). ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதே பிட்ச்சில் ஐபிஎல். ஆடிய அனுபவம் உண்டு. மும்பை என்றால் அவருக்கு வெல்லக்கட்டி! கேய்ல் செய்யவேண்டிய வேலையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் இந்திய பௌலிங்கை துவம்சம் செய்ய ஆரம்பித்தார் சிம்மன்ஸ். சார்ல்ஸ் ஜான்சனும் சேர்ந்துகொண்டார். Effortless pulls and fiery hooks. பௌண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்க ஆரம்பித்தன. இந்திய ஃபீல்டர்கள் தடுமாறினர். தோனியின் தலைவேதனை ஆரம்பித்தது.

இக்கட்டான இந்த நிலையில் அஷ்வின் பந்துபோட்டார். அவருடைய முதல் ஓவரிலேயே சிம்மன்ஸ் விழுந்திருக்கவேண்டும். ஆஃப் சைடில் ப்ரமாதமாக லோ-கேட்ச் பிடித்தார் பும்ரா. அம்பயரின் செக்-அப்பில் அது நோ-பால் எனத் தெரிந்தது! ஸ்பின்னரான அஷ்வினிடமிருந்து மேட்ச்சின் ஒரு முக்கியமான தருணத்தில் விக்கெட் எடுத்த பந்து நோ-பால்! தோனியின் முகத்தில் ஈயாடவில்லை. அப்போதே பிடித்தது அனர்த்தம். துரதிருஷ்டத்தின் கோணல் வாய், இந்தியாவைப் பார்த்துச் சிரித்தது.

ஆஷிஷ் நேஹ்ரா மட்டுமே சிக்கனமாக பந்துபோட்டார். கோஹ்லிக்கு ஓவர் கிடைக்க முதல் பந்திலேயே ஜான்சனை வீழ்த்தினார்! மிடில்-ஓவர்களை வீசிய ஜடேஜா செம்மையாக அடி வாங்கினார். ஹர்தீக் பாண்ட்யா ஷார்ட் பிட்ச் பந்துகளைத் தெளித்தார். சிம்மன்ஸும் ஆந்த்ரே ரஸ்ஸலும் அட்டகாசமாக ஆடினர். ஸ்கோர் சீறியது. பாண்ட்யாவின் கடைசி ஒவரின்(15), கடைசி பந்தில் அஷ்வினின் ஷார்ப் கேட்ச். விக்கெட் விழுந்தது – அதாவது, அப்படி நினைத்து ரசிகர்கள் எம்பிக் குதித்தார்கள். ஆனால் அதுவும் ஒரு நோ-பால்! செமி-ஃபைனலில் பௌலிங் இப்படி இருந்தால், நாம் ஃபைனலுக்குப் போக ஆசைப்படலாமா?

நம்பிக்கை போய்விட்டது. வெஸ்ட் இண்டீஸ் ஜெயிக்க 20 ரன்கள். வேறுவழியின்றி, 19 ஓவரை ஜடேஜாவிடம் தோனி கொடுக்க, சிம்மன்ஸ், ரஸ்ஸல் ஆவேசம் காட்டினர். கடைசி ஓவர். 8 ரன்கள். அஷ்வினுக்கு ஓவர் தரப்பட்டிருக்க வேண்டும். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக கோஹ்லியிடம் தந்தார் தோனி. அவர் என்ன செய்வார், பாவம்! அவர் ஒரு ரெகுலர் பௌலர் கூட இல்லை. விண்ணை முட்டிய சிக்ஸரில், இந்தியாவின் கதையை முடித்தார் ரஸ்ஸல். 7 பௌண்டரி, 5 சிக்ஸர்களுடன் நாட்-அவுட்டாக இருந்தார் சிம்மன்ஸ். ரஸ்ஸல் 20 பந்துகளில் 43 நாட்-அவுட். India – simply outplayed and outsmarted by the West Indies.

ஏப்ரல் 3-ஆம் தேதி கல்கத்தா ஃபைனலில், இங்கிலாந்தை சந்திக்கிறது வெஸ்ட் இண்டீஸ். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை உருவாக்கிய, கிரிக்கெட்டை உயிர்நாதமாகக் கொண்ட சிறு கரீபிய நாடுகள்(Carribean countries) குதூகலித்து மகிழும். எண்ணற்ற வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் பீர் அடிப்பார்கள். பாடுவார்கள். ஆடி மகிழ்வார்கள். வாழ்த்துவோம்!

**

உலகக்கோப்பை : பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா

19-3-2016 அன்று கல்கத்தாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையில், இந்தியா பாகிஸ்தானை மீண்டும் சாய்த்தது. உலகக்கோப்பை போட்டிகளில் (ஒரு-நாள் கோப்பை தொடர் உட்பட), பாகிஸ்தானுக்கு எதிராக இது இந்தியாவின் 11-ஆவது வெற்றி. ஒரு அபூர்வமான சாதனை.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பாகிஸ்தானை முதலாவது பேட்டிங் செய்யச் சொன்னார். காலையில் கல்கத்தாவில் பெய்த மழையினால் பிட்ச்சில் ஈரப்பதன் இருந்தது. மேட்ச் 18-ஓவராகக் குறைக்கப்பட்டது. மைதானத்தில் இருந்த குளிர்ச்சி வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் துணைபோகும் என்பது கணிப்பு. பாகிஸ்தானின் துவக்க வீரர்கள் வெகு ஜாக்ரதையாகத்தான் துவங்கினர். இந்திய பௌலிங்கை தொடங்கிய ஆஷிஷ் நேஹ்ராவும் அஷ்வினும் பிட்ச்சின் வேகம், திருப்பம் ஆகியவற்றை மனதில் கொண்டு சிறப்பாக வீசினர். ரன்கள் வர அடம் பிடித்தன. சிங்கிள், இரண்டு ரன்கள் என ஸ்கோரை மெதுவாக எடுத்துச்செல்கையில் சுரேஷ் ரெய்னாவிடம் வீழ்ந்தார் ஷர்ஜீல் கான். 38-க்கு ஒரு விக்கெட். இந்தியாவுக்கு எதிராக சாதித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் தன்னை முன்னே கொண்டு வந்தார் பாக். கேப்டன் ஷஹீத் அஃப்ரீதி. ஹர்தீக் பாண்ட்யாவின் பௌலிங்கை அவர் தாக்க முயற்சிக்கையில், கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்தவர்களில் ஷோயப் மாலிக், உமர் அக்மல் இந்திய வேகப்பந்துவீச்சிற்கு எதிராகத் தாக்குதல் செய்தனர். 13, 14 –ஆவது ஓவர்களில் (பாண்ட்யா, பும்ரா) ரன்கள் வேகமாக வர ஆரம்பித்தன. ஆனால் பாகிஸ்தானின் சாகசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. நேஹ்ராவிடம் மாலிக் சரணடைய, ப்ரமாதமாக ஸ்பின் செய்த ஜடேஜாவிடம் அக்மல் வீழ்ந்தார். பாகிஸ்தானின் எதிர்ப்புக் கதை இத்தோடு முடிவடைந்தது. இந்திய பௌலர்களின் சாதுர்யமான பந்துவீச்சில், 18 ஓவர்களில் திக்கித் திணறி 118 ரன்கள் தான் முடிந்தது பாகிஸ்தான் அணியினால்.

119 என்கிற இலக்கு பார்க்க எளிதாகத் தோன்றினாலும் இந்த மாதிரி குறைந்தபட்ச ஸ்கோரை எட்ட முனைகையில்தான் இந்தியா பரிதாபமாகத் தன் முதல் மேட்ச்சைத் தோற்றது. இந்தியர்கள் அதை நினைவில் வைத்திருந்தனர். ஸ்பின் எடுக்கும் பிட்ச்சில் அதிக கவனம் தேவைப்பட்டது. இருந்தும், ரோஹித் ஷர்மா ஏதோ ரஞ்சி ட்ராஃபி மேட்ச் விளையாடுவது போல் அலட்சியம் காண்பிக்க, 10 ரன்களில் அவர் ஆமீரிடம் அவுட் ஆனார். விராட் கோஹ்லி களமிறங்கி ஜாக்ரதையாகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். முகமது சமியின் வேகப்பந்துவீச்சு அதி துல்லியமாக இருந்தது. தடுமாறிய ஷிகர் தவன் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சமியின் அடுத்த பந்து ரெய்னாவின் பெயில்களைப் பறக்கவிட்டது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட். 23 -க்கு 3 விக்கெட் இழப்பு. நிலைமை திடீரென மோசமானது இந்தியாவுக்கு. பாகிஸ்தான் உற்சாகத்தில் உயிர்பெற்றது. அடுத்து யுவராஜ் சிங். கோஹ்லியும் யுவராஜும் நிலைமையை சீர்செய்வதில் கவனம் செலுத்தினர். மேற்கொண்டு நஷ்டம் ஏற்படாமல் சிங்கிள், இரண்டு என பந்துகளை இடது, வலதாக வேகமாகத் தட்டிவிட்டு ஓடினர். அவ்வப்போது கோஹ்லியின் பௌண்டரி. இந்த ஜோடி நிலைத்துவிடும் போலிருக்கிறதே என்கிற பதற்றம் பாகிஸ்தானிடம் தெரிந்தது.

குழம்பி இருந்த பாக். கேப்டன் அஃப்ரீதி பௌலிங்கை வேகமாக மாற்றினார். தானே ஸ்பின் போட்டார். ஷோயப் மாலிக்கை ஸ்பின் போட அழைத்தார். மாலிக்கின் அந்த ஓவரில் கோஹ்லி அடக்கி வைத்திருந்த ஆவேசத்தைத் திறந்துவிட்டார். ஒரு சூப்பர் சிக்ஸர். இந்திய ரசிகர்கள் தவ்விக் குதிக்க அடுத்த பந்து பாய்ந்து பௌண்டரியை முத்தமிட்டது. தலையைச் சொறிந்த அஃப்ரீதி, அடுத்த ஓவரை வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸிடம் கொடுத்தார். முதல்பந்தை எதிர்கொண்ட யுவராஜ், அனாயசமாக ரியாஸை சிக்ஸருக்குத் தூக்கினார். அந்த ஓவரில் ரன்கள் வேகமாக வந்தன. அதே ஓவரின் கடைசிபந்தில் மேலும் ஒரு சிக்ஸருக்காக அவசரம் காட்டிய யுவராஜ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 23 பந்துகளில் 24 ரன்கள். பாகிஸ்தான் கதையின் முடிவுரையை எழுத இறங்கினார் கேப்டன் தோனி. சூடுபிடித்திருந்த கோஹ்லி பௌண்டரிக்கு பந்தை விரட்ட, இலக்கு நெருங்கியது. ஒரு ஹிமாலய சிக்ஸர், ஒரு சிங்கிள் எனப் பாகிஸ்தானைப் பணியவைத்தார் தோனி. 7 பௌண்டரி, ஒரு சிக்ஸருடன் ப்ரமாதமான ஆட்டம் காண்பித்த கோஹ்லி 55 ரன்களுடன் இறுதிவரை அவுட் ஆகாதிருந்தார். பேட்டரி சார்ஜாகியிருந்த இந்திய ரசிகர்கள் பறக்காத குறையாகத் துள்ளினர்.

இந்தியாவுக்கெதிராக உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு இன்னுமொரு துயர் தரும் தோல்வி. என்ன செய்வது – பாதுகாப்பு என்று சாக்குபோக்கு சொல்லி, தர்மசாலா மைதானத்தைத் தவிர்த்து, பாகிஸ்தான் ஆசையாகக் கேட்டுவாங்கிய கல்கத்தா மைதானம் அதற்கு ராசியாக அமையவில்லை.

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens, Calcutta) மைதானம் நிரம்பி நுரைத்திருந்தது. சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலியுடன் வந்து இந்திய அணிக்கு உசுப்பேத்திக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் மற்றும் முகேஷ்-ட்டினா அம்பானி தம்பதிகள் இந்தியக் கொடியை உல்லாசமாக அசைத்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் பகுதியிலிருந்து திடீரென முளைத்த வானவேடிக்கைள் கல்கத்தாவின் இரவு வானத்தில், பாகிஸ்தானுக்கெதிராக இந்தியாவின் கிரிக்கெட் ஆளுமையை ப்ரகாசமாக எழுதிவைத்தன.

**