ASIA CUP 2023 பாகிஸ்தானை தூக்கிக் கடாசிய இந்தியா

நேற்று  கொழும்பு மைதானத்தில் ஆசியகோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 போட்டியில், டாஸ் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்யச்சொன்னார் பாக் கேப்டன் பாபர் ஆஸம். அவ்வளவுதான். ஏன் அப்படிச் சொல்லித் தொலைத்தேன் என்று சில நிமிஷங்களுக்குள்ளேயே அவர் தலையில்  அடித்துக்கொண்டிருப்பார்.. ஜாடிக்குள்ளிருந்து பூதம் புறப்பட்டதுமாதிரி கிளம்பி, பாகிஸ்தானின் ஆகச்சிறந்த பௌலர்களை துவம்சம் செய்துவிட்டார்கள் இந்திய முன்னணி பேட்ஸ்மன்கள். விளைவு  இந்தியாவின் ஹிமாலய ஸ்கோரான 356 / 2. வெறும் 2 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தமுடிந்தது பாகிஸ்தானால்.  அதுவும் ஆட்டத்தை ஆரம்பித்த ரோஹித், கில்  (Gill) இருவரும் தலா அரைசதம் சாத்தியபின்.

KL Rahul – Back with a bang !

3,4 பேட்டிங் வரிசைக் கிரமத்தில் இறங்கிய கோஹ்லியும், கே.எல். ராஹுலும் அசடுகள் போல்தான் மெதுவாக ஆரம்பித்தார்கள். பின்னால் சூடேறி, பாக் வேகப்பந்துவீச்சாளர்களையும், ஸ்பின்னர்களையும் ஓட, ஓட விரட்டிவிட்டார்கள். ஒருகட்டத்தில் ஷஹின் ஷா அஃப்ரீதி, ஹாரிஸ் ராஃப், நஸீம் ஷா என்று பாகிஸ்தானின் டாப் பௌலர்கள் கையில் அடி, காலில் அடி என்று பெவிலியனுக்கு ஓடவே விரும்பியது செம தமாஷாக இருந்தது!

இந்த ஆபரேஷன் மர்டரில், விராட் கோஹ்லியும், காயத்திலிருந்து நீண்டநாள் விலக்கத்தின் பின் திரும்பியிருந்த ராஹுலும் ஆளுக்கொரு சதம் அடித்து இந்திய ரசிகர்களுக்கு போதையேற்றினார்கள். (கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 13000 ரன்களை வேகமாகக் கடந்து சாதனை) இந்தியாவின் முதல் இரண்டு பேட்ஸ்மன்கள் தலா அரைசதம், அடுத்து வந்த இருவர் ஆளுக்கொரு சதம். ஆஹா.. இப்படி இதற்கு முன் பாகிஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா காண்பித்திருக்கிறதா!

357 என்கிற இலக்கு எந்த ஒரு அணிக்கும் வயித்துக்கடுப்பைத்தான் வரவழைத்திருக்கும்.  வெகுநாள் இடைவெளிக்குபின் அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் துல்லிய ஸ்விங்கர்களில் தலைசுற்ற ஆரம்பித்தது பாகிஸ்தானுக்கு. எப்படியோ க்ரீஸில் நின்றாலே போதும் என்கிற நிலை. சிராஜும் நன்றாகவே வீசினார். பாகிஸ்தானின் டாப் பேட்ஸ்மன்கள் சிக்கிக்கொண்டு விழிக்க, இடது கை சுழல்வீரரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. நீ உன் வேலயக் காட்டு ! சக்ரவியூகம்தான். குல்தீப்பின் சுழலில் சிதறி, கதறி ஒவ்வொருத்தராக பெவிலியனுக்கு ஓடிவிட்டார்கள் பாகிஸ்தானிகள். சூப்பர் லெக்-ஸ்பின் 5 விக்கெட்டுகளை அவருக்குக் கொடுத்தது. (அடுத்த மாதம் இந்தியாவில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பையில் குல்தீப் கவனத்திற்கு வருவார்.)

அடிபட்ட மரவட்டைபோல சுருண்டு விழுந்தது பாகிஸ்தான். முக்கி, முனகி 128 தான் அவர்களால் முடிந்தது. காயம் காரணமாக இரண்டு பௌலர்கள் பேட்டிங் செய்யமுடியவில்லை என்றார்கள். இந்தியாவின் 258 வித்தியாசத்தில் அபார வெற்றி, பாகிஸ்தானை நொந்துபோக வைத்திருக்கும்.

இதை எழுதுகையில் இந்தியாவுக்கு எதிராக இன்றைய போட்டியில் இளம் ஸ்ரீலங்கா இடதுகை ஸ்பின்னர் துனித் வெல்லாலகே (Dunith Wellalage) பின்னிப் பெடலெடுத்துவிட்டார். இந்தியாவின் டாப் 5 வீரர்களை சுருட்டி எறிந்துவிட்டார். திணறுகிறது இந்தியா! இன்று ஸ்க்ரிப்ட் மாறுகிறதோ என்னவோ. கிரிக்கெட் ..ஹ்ம்… a magical game of uncertainties…

**

கிரிக்கெட்: சென்னை கொடுத்த அடி!

டெஸ்ட் ரிசல்ட் எதிர்பார்த்தபடி. இரண்டாவது டெஸ்ட்டும் இதே மைதானத்தில்தான், மூன்றே நாட்களில். கோஹ்லி&கோ.வுக்கு அடுத்த போட்டியில் எதைக் கவனிக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று புரிந்ததா? கோஹ்லி டாஸ் வெல்வது என்பது, ஆண்டவனின் கையில்கூட இல்லை என்பதால் அதை விட்டுவிடலாம்.

மேட்ச் முடிந்ததும் முரளி கார்த்திக்கோடு அளவளாவுகையில் கேப்டன் கோஹ்லி என்ன சொன்னார்? சப்போர்ட் ஸ்பின்னர்ஸ் போதுமான அளவுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்தியா தன் body language- ஐ முன்னேற்றிக்கொள்ளவேண்டும்! ஓ.. புரிகிறது. கோஹ்லி மாதிரி, முகத்தில் உணர்வு ஜாலங்கள், கைகால்களின் மூலம் சேஷ்டைகள்.. இதை மைதானத்தில் கொண்டுவந்தால் போதும். மேட்ச் நம் கைக்குவந்துவிடும். எதிரி காலி. அடடா.. என்ன ஒரு வியூகம்.

ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சப்போர்ட் ஸ்பின்னர்களின் முயற்சி போதவில்லை என்கிறார் கேப்டன். புது ஸ்பின்னர்கள் – நதீம், சுந்தர் – இவர்களை உடனே ரவீந்திர ஜடேஜாவுடன் ஒப்பிடக்கூடாது. ஜடேஜாவின் திறன், உழைப்பு, அனுபவம் ஒப்பிடமுடியாதது. நதீமும், சுந்தரும் இப்போதுதான் டெஸ்ட் உலகில் நுழைந்திருக்கிறார்கள்.  புதியவர்களைத் தட்டிக்கொடுப்பது, உற்சாகப்படுத்தவேண்டியது கேப்டனின் கடமை. தோல்விக்கு அவர்களைக் குறைசொல்லித் தப்பிக்கப் பார்ப்பது கோமாளித்தனம். நதீமும் சுந்தரும் டெஸ்ட்டின் எந்தெந்த நாட்களில் பந்து வீசினார்கள்? பிட்ச் சாதுவாக இருந்த, எதிரணி பேட்டிங் செய்ய ஏதுவாக இருந்த முதல் இரண்டு நாட்களில். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில், அஷ்வினே 51 ஓவர் போட்டுத்தான் 3 விக்கெட்டுகளைத் தூக்கமுடிந்தது. கிட்டத்தட்ட எல்லா பௌலர்களுமே ஓவருக்கு 4 ரன்னுக்குமேல் கொடுத்தார்கள். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பௌன்சர் போடும் தைர்யமே வரவில்லை. பேட்ஸ்மனுக்கு ஒத்துழைத்த பிட்ச்சின் ஆரம்ப நாட்கள், இங்கிலாந்து டாஸ் வென்றதால் அவர்களுக்கு சாதகமானது என்பதுதானே பிரதான உண்மை. இது கோஹ்லியின் தலைக்குள் போகவில்லையோ?

இஷாந்த், பும்ரா, அஷ்வின் ஆகியோர்,  பௌலர்களுக்கு மோசமான பிட்ச்சில் அருமையாக உழைத்தார்கள். சில விக்கெட்டுகள் கிடைத்தன. குறிப்பாக அஷ்வின், 75 டெஸ்ட் விளையாடிய அனுபவமுள்ள ஸ்பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் தூள்கிளப்பினார். சப்போர்ட் ஸ்பின்னர்களைக் குறைசொல்லும் கோஹ்லி, இங்கிலாந்து போட்டுச்சாத்திய முதல் இன்னிங்ஸில், முதல் இரண்டு நாட்கள், ஸ்பின்னர்களுக்கு கொடுத்த ஓவர்கள் எப்படி? இதோ:

அஷ்வின் ; 51.5 ஓவர்கள் : விக்கெட் 3.

நதீம்      : 44 ஓவர்கள். விக்கெட் 2.

சுந்தர்     : 26 ஓவர்கள் விக்கெட் 0.

Nadeem bowls

இப்படி சார்ட் பார்த்தால் போதாது. புரியாது. கொஞ்சம் விளக்குவோம். ஷாபாஸ் நதீம் அணியில் வந்தது அக்‌ஷர் பட்டேல் (genuine allrounder) காயம் காரணமாக இடம்பெற முடியாததால். குல்தீப் யாதவையும் அலட்சியம் செய்து ஷாபாஸ் நதீமைக் கொண்டுவந்தது கோஹ்லிதான்.  அக்‌ஷர், குல்தீப் அளவுக்குத் திறனானவர் இல்லை நதீம். கொஞ்சம் நம்பிக்கை இல்லாதவர்போலவும் பௌலிங் செய்கையில் காணப்பட்டார் என்கிறார் மஞ்ச்ரேகர். அதற்காக அனுபவக் குறைவான வீரரைத் தாக்கமுடியாது.

வாஷிங்டன் சுந்தர், அத்தகைய dead pitch-லும் சுமாராக ஆஃப்ஸ்பின் வீசினார். அவரின் ஓவரில் ஒரு நிச்சய எல்.பி.டபிள்யூ.  தரப்படவில்லை. DRS வாய்ப்புகள் மிச்சமில்லாததால் இந்தியாவால் அப்பீல் செய்யமுடியவில்லை! மேலும் சுந்தரின் இன்னொரு ஓவரில் மிட்-ஆனில் ரோஹித் ஒரு லாலிபாப் கேட்ச்சை நழுவவிட்டு அசடுவழிந்தார். இது சப்போர்ட் ஸ்பின்னரின் குற்றமல்லவே! இவை கிடைத்திருந்தால் சுந்தருக்கும் 2 விக்கெட்டுகள் 26 ஓவர்களிலேயே கிடைத்திருக்கும்தான். இரண்டாவது இன்னிங்ஸில் – அஷ்வினுக்கு 17.3 ஓவர், நதீமுக்கு 14 ஓவர் கொடுக்கப்பட்டன. சுந்தருக்கு கோஹ்லி கொடுத்தது ஒரே ஓவர். அதில் ஒரு ரன் கொடுத்தார் அவர். பேட்டிங்கும் செய்யவேண்டும் என்பதால் அதிக ஓவர்களை சுந்தருக்குக் கொடுக்கவில்லைபோலும். தவறில்லை.

Sundar & Pant

ஆட்டத்தின் இன்னொரு பக்கத்தை கவனிப்போம். முதல் இன்னிங்ஸில் இந்திய ஸ்கோர், இங்கிலாந்தின் ஸ்கோருக்கு (578) அருகிலாவது வந்திருக்கவேண்டும். 500-ஐ நெருங்கமுடியாவிட்டாலும், 450- க்குப் பக்கத்திலாவது வந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு டாப்-ஆர்டர் பேட்டிங் சரியாக இயங்கவேண்டுமே. என்ன நடந்தது? ரோஹித் 6, ஷுப்மன் கில் 29, கோஹ்லி 11, ரஹானே 1. கில் (Gill)-ஐத் தவிர்த்து, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருந்தலைகளின் பேட்டிங் லட்சணம். இந்திய முதல் இன்னிங்ஸ் 73/4 எனத் தத்தளித்தது ஒரு கட்டத்தில். ரிஷப் பந்த்-உம், வாஷிங்டன் சுந்தரும் அடிக்காவிட்டால் ஸ்கோர் 200-ஐத் தாண்டுவதற்கே முக்கியிருக்கும். சென்னை பிட்ச்சில் -கடைசி நாளில்- பேட் செய்வது எளிதல்ல. பௌலர்களுக்கு சாதகமாக மாறிவிட்ட பிட்ச். Anderson’s reverse swing at its best. கில், ரஹானே,  பந்த் எனத் தலைகள் உருண்டன. இரண்டு இன்னிங்ஸிலும் batting flops : ரோஹித் , ரஹானே . (ராஹுல், ஆஹா.. நாம் நுழைந்துவிடவேண்டியதுதான் என எண்ணியிருப்பாரோ?)

கோஹ்லி, இந்தியாவின் கேப்டன், இதையெல்லாம் புரிந்துகொள்கிறாரா? இல்லை, சப்போர்ட் ஸ்பின்னர்களின் சப்போர்ட் கிடைக்காததால்தான் தோல்வி எனச் சொல்லி அடுத்த மேட்சிலும் ஜகா வாங்கப்போகிறாரா? நிபுணர் சாஸ்திரி வாயைத் திறக்கக் காணோமே?

**

உலகக்கோப்பை: இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான்

 

இருதரப்பிலும் ரசிகர்கள் துடிப்புடன் காத்திருந்து அனுபவித்த, மேன்செஸ்டரில் நேற்று (16-6-19) ஆடப்பட்ட உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் முன் பாகிஸ்தான், கல்லின் கீழ் கண்ணாடியென நொறுங்கியது. உலகக்கோப்பை வெற்றி ஸ்கோர் 7-க்கு 7. India in seventh heaven !

‘அப்பாக்கள் தின’த்தன்று நடந்த மேட்ச் பற்றி அமுல் விளம்பரம் !

ஏகப்பட்ட hype-உடன் அரங்கேறிய போட்டியின் சில அம்சங்கள்:

டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அனுப்பிய பாகிஸ்தானுக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. 34 பந்துகளில் அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பைப் போட்டிகளில் தன் இரண்டாவது சதத்தை விளாசினார் (140).  பாக். ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு, எதிரி பௌலர்களை புரட்டி எடுத்துவிட்டார் ரோஹித். முகமது ஆமீர் மட்டும் ஒரு விதிவிலக்கு. முதன்முறையாக ரோஹித்துடன் ஒரு-நாள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ராஹுல் அரைசதமடித்து வெளியேறினார், 77 ரன் எடுத்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோஹ்லி,  ஆமீரின் பந்துவீச்சில், தான் காட்-பிஹைண்ட் ஆகிவிட்டதாக நினைத்துத் தானாகவே வெளியேறிவிட்டார். அம்பயருக்கே ஒருகணம் ஒன்றும் புரியவில்லை! இந்தக்காலத்தில் இப்படி ஒரு அசடு! ரீப்ளேயில் அவர் அவுட் இல்லை எனத் தெரிந்தது. நான்காவதில் வந்த பாண்ட்யா 26, தோனி 1 என நடையைக்கட்ட, உலக்கோப்பையில் முதல் மேட்ச் ஆடவந்த விஜய் ஷங்கரும், கேதார் ஜாதவும் கொஞ்சம் சேர்த்து, இந்திய ஸ்கோரை 336 எனக் காண்பித்தார்கள். இடையிலே, வருண பகவான் வந்து பார்த்துவிட்டுப் போனார்!

பாகிஸ்தானுக்கு வெல்ல, 337 தேவை. மழை திரும்பும் பயமுறுத்தலும் இருந்தது. பாகிஸ்தான் பேட் செய்கையில், ஐந்தாவது ஓவரிலேயே தொடையை இழுத்துப்பிடிக்க, நொண்டிக்கொண்டே பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார் இந்தியாவின் பிரதான பௌலர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார். அவருடைய ஓவரில் இருந்த மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி ஓவரை முடிக்கவென, ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரை அழைத்தார் கோஹ்லி. என்ன ஆச்சரியம்! உலகக்கோப்பையில் வீசிய தன் முதல் பந்திலேயே பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் -ஐ தூக்கிக் கடாசிவிட்டார் ஷங்கர். கோஹ்லிக்கே தன் கண்ணை நம்பமுடியவில்லை. அடுத்த முனையில் வீசிக்கொண்டிருந்த இந்தியாவின் டாப் பௌலரான பும்ராவுக்கே இன்னும் விக்கெட் விழவில்லை..

பாண்ட்யாவும் ஷங்கரும் கொஞ்சம் வீசியபின், இடதுகை ரிஸ்ட்-ஸ்பின்னரான குல்தீப் யாதவிடம் பந்தைக் கொடுத்தார் இந்தியக் கேப்டன். நூறு ரன் பார்ட்னர்ஷிப் போட்டு அப்போது அருமையாக ஆடிக்கொண்டிருந்த பாபர் ஆஸம் (Babar Azam) மற்றும் ஃபக்ர் ஸமன் (Fakr Zaman) ஆகிய பாக் நட்சத்திர வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தினார் யாதவ். பாகிஸ்தான் அதிர்ந்தது. இருந்தும் இன்னும்  அவர்களிடம் இருக்கிறார்களே வீரர்கள்..

முகமது ஹஃபீஸ், விக்கெட் எடுக்க முயன்ற யஜுவேந்திர சாஹலை சிக்ஸருக்குத் தூக்கி ஏதோ சொல்லமுயன்றார். ஆனால் அந்தப்பொழுது வேறோன்றைச் சொன்னது. திரும்பவும் அழைக்கப்பட்ட ஹர்தீக் பாண்ட்யா, அடுத்தடுத்த பந்துகளில் ஹஃபீஸையும், ஷோயப் மாலிக்கையும் பிடுங்கி எறிந்தார். 18 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ,  பாக். ரத்த அழுத்தம் எகிறியது. புவனேஷ்வர் குமார் இல்லாத நிலையில், கோஹ்லிக்கு வேறு வழியில்லை. வாப்பா.. விஜய் ஷங்கர்! ஷங்கரின் மீடியம்-பேஸ் (medium pace) தொடர்ந்தது. தன் ஐந்தாவது ஓவரில், முன்னே வந்து ஆட முயன்ற பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதின் பின்னே, சிவப்பு விளக்கு எரியவைத்தார் ஷங்கர். ஸ்கோர் 35-ஆவது ஓவரில் 166/6. பாக். முதுகெலும்பில் விரிசல்! பச்சை-வெள்ளைக் கொடிகள் பறப்பதை நிறுத்திக்கொண்டன. பாரத் ஆர்மியின் மேளதாளம்.. பாக். ரசிகர்களில் சிலர் மெல்லக் கழண்டுகொண்டார்கள்.

திரும்பி வந்த மழை, ஆட்டத்தை  நிறுத்தியது. மழை ஒருவழியாக நின்று, சென்று, ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது , டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி, 40 ஓவர்களில் 302 எடுத்தால்தான் வெற்றி என்கிற மோசமான நிலை பாகிஸ்தானுக்கு. இந்திய பௌலர்களின் இறுக்கமான பந்துவீச்சினால் ஏற்கனவே ரன்விகிதம் குன்றிப்போயிருந்தது. இறுதியில் 212/6 ரன்களே முடிந்தது.  89 ரன் வித்தியாசத்தில், பலமாக அடிவாங்கி வீழ்ந்தது பாகிஸ்தான். இந்தியாவின் கையில், இன்னுமொரு மோசமான தோல்வி. பாகிஸ்தானில் ஏகப்பட்ட டிவி- செட்டுகள் உடைந்து நொறுங்கியதாகக் கேள்வி.. ’அப்பாக்கள் தின’த்தன்றா இப்படியெல்லாம் செய்வது !

**

கிரிக்கெட்: நான்காவது டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா ?

.

இங்கிலாந்துக்கெதிரான நாலாவது டெஸ்ட் மேட்ச் நாளை (30-8-1918) தொடங்குகிறது. தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான 18-பேர் கொண்ட அணியிலிருந்து, இந்திய கிரிக்கெட் போர்டின் தேர்வுக்கமிட்டி இரண்டு பேர்களை தூக்கிவிட்டார்கள் -துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்.

முதல் இரண்டு போட்டிகளில் பிட்ச்சுகள் இருந்த லட்சணம், ஒவ்வொரு நாளிலும் விடாது விரட்டிய மழை, நம் வீரர்கள் (விராட் கோலி தவிர்த்து) விளையாடிய அழகு என்றெல்லாம் தோல்விக்கான காரணங்களை முழுதுமாக ஆராய்ந்தால் உண்மையான படம் தேர்வுக்கமிட்டிக்குத் தெரிந்திருக்கும். அப்படியில்லாமல், தோல்விக்கு என்னவோ அவர்தான் காரணம் என்பதுபோல், இந்தியாவின் நம்பர் 1 துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய்யை மூன்றாவது டெஸ்ட்டிலிருந்து நீக்கியதோடு, மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலிருந்தும் அவரைக் காவு வாங்கியிருப்பது சரியில்லை. ட்ரெண்ட் ப்ரிட்ஜ் (Trent Bridge)-ல் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் அவர் ஆடியிருந்தால், பிட்ச் பேட்ஸ்மன்களுக்கு சரியான ஆடுகளமாக அமைந்திருக்கையில், மற்றவர்களைப்போல் அவரும்தான் அடித்திருப்பார். நல்ல பிட்ச்சில் வாய்ப்பு தராமல், தொடரிலிருந்தே ஒருவழியாகக் கழட்டிவிட்டதுபோல் தோன்றுகிறது. குல்தீப் யாதவையும் அவருக்கு ஒத்துவராத பிட்ச்சில் ஆடச்செய்து, இப்போது ஒரேயடியாகத் தூக்கிவிட்டார்கள். என்ன லாஜிக் இது ?

சரி, உள்ளே வந்திருக்கும் இளம் வீரர்கள்? துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா (Prithvi Shaw) மற்றும் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மனான ஹனுமா விஹாரி (Hanuma Vihari). (இன்னும் கொஞ்ச நாட்களில் நமது தமிழ் மீடியா அவரது பெயரை ஹனுமான் விகாரி என்றோ அல்லது அனுமார் விகாரி என்றோ குறிப்பிடலாம். அதிர்ச்சியடையாதீர்கள்! எல்லாம் அனுமார் செயல் என்று பொறுத்துக்கொள்ளுங்கள். நாம் கவனிக்கவேண்டியது கிரிக்கெட்டை!) இருவரும் திறனான பேட்ஸ்மன்கள் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல்தர (First Class matches) மற்றும் லிஸ்ட்-ஏ போட்டிகளில் இந்திய மற்றும் வெளி நாட்டணிகளுக்கெதிராக விளாசியவர்கள். வாய்ப்பு கிடைத்தது சரிதான்.

இருவரில் ஒருவரான 24-வயது ஹனுமா விஹாரி இந்திய ரஞ்சி ட்ராஃபி போட்டிகளில் ஆந்திராவுக்காக நல்ல சராசரியுடன் அருமையாக ஆடிவருபவர். ஐபிஎல் –இல் பெரிதாக சோபிக்கவில்லை எனினும் கடந்த சில வருடங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டணிகளுக்கெதிராக சிறப்பான திறமை காட்டி ஆடிவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன். ஒருவேளை, கோஹ்லி காயம் காரணமாக ஆடமுடியாது போனால், அவருக்குப் பதிலாக இருப்பில் இருக்கட்டும் என இவர் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (அணியின் பெஞ்சில் கருண் நாயரும் உட்கார்ந்திருக்கிறார்).

இரண்டாவது புதுமுகமான ப்ரித்வி ஷா மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் எனத் தோன்றுகிறது. சிறுவனாக, பள்ளிக்கூடக் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் சாதனைகளை நிகழ்த்தி தூள் கிளப்பியவர். எட்டு வயது சிறுவனாக இருக்கும்போது மும்பையில், சச்சின் டெண்டுல்கரால் கவனித்துக் குறிப்பிடப்பட்ட இளம் புயல். வரனாக வந்திருக்கும் திறன் (Prodigious talent) என்பதாக வர்ணிக்கப்படும் 18 வயது ஷா, வேகப்பந்துகளை லாவகமாக, துல்லியமாக ஆஃப் சைடில் திருப்புதல், அழகான கவர் ட்ரைவ்கள் என சிறப்புத்திறன் காண்பித்துவருபவர். இந்தியாவின் Under-19 உலகக்கோப்பை அணியின் கேப்டனாகத் தலைமை தாங்கி கோப்பையை வென்றுகொடுத்தவர். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக (சதம்-188 ரன்) என அபாரமாக ஆடிய பேட்ஸ்மன். ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காகவும், அதிரடி டி-20 ஆட்டமான ஐபிஎல்-இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் கடந்த சீசனில் நன்றாக விளையாடியிருக்கிறார் என்பதும் அவரது பலம். சில வல்லுனர்களால் டெண்டுல்கர், கோஹ்லிக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய திறன்மிகு பேட்ஸ்மன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஷா. ஒரேயடியாக காத்திருக்க வைக்காமல், 18 வயதிலேயே, நல்ல ஃபார்மில் இருக்கையில், அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்படி ப்ரித்வி ஷாவை புத்திசாலித்தனமாக 18-பேர் கொண்ட அணியில் சேர்த்துவிட்டு, கடைசியில், நாளை துவங்கவிருக்கும் 4-ஆவது டெஸ்ட்டிலோ, கடைசி டெஸ்ட்டிலோ அவரை ஆட விடாமல் வேடிக்கை பார்க்கும்படி பெஞ்சில் உட்காரவைத்தால், அது அடிமுட்டாள்தனமாக இருக்கும். தவன் அல்லது ராஹுல் – இருவரில் ஒருவரது இடத்தில் நாளைய டெஸ்ட்டில் ப்ரித்வி ஷா விளையாடவேண்டும். அதுதான் அணிநலனுக்கான சிறந்த முடிவாக இருக்கும். கோஹ்லி செய்வாரா?

நாளைய டெஸ்ட்டில் இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது பச்சை நிற பிட்ச்! தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கில் ஆடியதுபோல் 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இறங்குவாரா கோஹ்லி? அல்லது, அஷ்வின் அல்லது ஜடேஜா என ஒரு ஸ்பின்னரையாவது கைவசம் வைத்துக்கொண்டு உள்ளே வருவாரா? பார்ப்போம்..

*

தோல்விக்கு அடுத்த நாள் . .

பயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ.

இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு? என்னவோ ஒரு எழவு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை. அவ்வளவுதான். கொண்டுவா அந்த ப்ளாக் காஃபியை. ப்ரவுன்-ப்ரெட் சாண்ட்விச், டபுள், ட்ரிபிள்-எக் ஆம்லெட், சிக்கன் நக்கிட்ஸ் (chicken nuggets).. கொத்திக்கொத்தி உள்ளே தள்ளு. இந்தமாதிரிக் கொத்திக் கிழித்து சாப்பிட்டிருக்கணும் இந்த இங்கிலீஷ்காரனுங்களை.. ம்ஹூம். தப்பிச்சிட்டானுங்க. இப்போ ஒன்னும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இன்னும் நாலு இருக்கிறது. பாத்துடுவோம் ஒரு கை. இவனுங்களுக்கு நம்ம கையிலதான் சாவு. அதுல சந்தேகமில்ல..

இப்படி இருக்குமோ இன்றைய இந்திய அணியின் மூடு? நல்ல வேளையாக, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடும் அணியல்ல இது. கேப்டனும் ஒரு சூப்பர்-எனர்ஜி கில்லி. காலையிலேயே அணியை நெட் ப்ராக்டீஸுக்கு இழுத்துப்போயிருப்பார். கொஞ்சம் ரிஃப்ளெக்ஷன், ரீ-க்ரூப்பிங் தேவைப்படுகிறது. இருக்கிறது இன்னும் மூன்று, நான்கு நாள் இடைவெளி. வந்துவிடலாம் மீண்டு. அடுத்த டெஸ்ட் லண்டனின் லார்ட்ஸில் (Lord’s, London). கவாஸ்கர், வெங்க்சர்க்கார், விஷ்வனாத், அஜருத்தீன், கங்குலி, திராவிட், ரஹானே என இந்தியர்கள் ஏற்கனவே நொறுக்கியிருக்கும் மைதானம்தான். பார்ப்போம் இந்தமுறை என்ன காத்திருக்கிறதென்று. கோஹ்லியைத் தாண்டியும் யாராவது ஒரு இந்திய பேட்ஸ்மன் அடித்து நொறுக்காமலா லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடையும்?

தோல்வி முடிவிலும் சில வலுவான ப்ளஸ்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு இடுப்புவலி கொடுத்த கோஹ்லியின் அபார ஃபார்ம். அஷ்வினின் புதுப்பந்துச் சுழல் தாக்குதல், 7 விக்கெட் அதிரடி. ஏனோதானோ எனப் போட்டுக் குழப்பும் அல்லது ரன்களை எதிரணிக்கு தாரைவார்க்கும் இஷாந்த் ஷர்மா, இந்தமுறை காட்டிய முனைப்பான பந்துவீச்சு. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சாய்த்த 5 விக்கெட்கள். மாறித்தானிருக்கிறார் மனிதர். இங்கிலாந்து கௌண்ட்டியான ஸஸ்ஸெக்ஸில் (Sussex) விளையாடிய அனுபவம் பந்துவீச்சை மெருகேற்றியிருக்கிறது.(பௌலிங் கோச் பாரத் அருணுக்கும் கொஞ்சம் பங்குண்டு). புவனேஷ்வரும், பும்ராவும் (Jasprit Bumrah) காயத்தில் தோய்ந்துகிடக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில், அடுத்த மேட்ச்சிலும் இஷாந்த், உமேஷ், ஷமிதான் இந்தியத் தாக்குதலை வழிநடத்தவேண்டியிருக்கும்.

புஜாராவை பெஞ்சில் உட்காரவைத்தது தவறு என்று பெரும்பான்மையோர் முணுமுணுக்கிறார்கள். நானும்தான். (ச்)செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இப்போது நல்லதொரு டச்சில் இல்லை என்றாலும், எதிரணியின் பௌலர்களைக் கட்டைபோட்டு அசரவைக்கும் திறனுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அடுத்த மேட்ச்சுக்குக் கூப்பிடுவார்களா? அழைக்கப்பட்டால், ஷிகர் தவன், அல்லது கே.எல்.ராஹுல்- இருவரில் ஒருவருக்கு உட்கார பெஞ்ச் கிடைக்கும். எப்போதும் நின்று விளையாடும் முரளி விஜய்யும், ரஹானேயும் கூடத்தான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை? இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் – யாராவது ஒருவர் உள்ளே வந்தால் பௌலிங் டெபார்ட்மெண்ட் வலுப்பெறும் எனத் தோன்றுகிறது. இவர்களை இஷ்டத்துக்கும் தூக்கி அடிக்க இங்கிலீஷ்காரர்களால் முடியாது. ஆனால் பதிலாக, ஹர்தீக் பாண்ட்யாவை எடுக்கவேண்டிவருமே? ம்ஹூம்..அது சரிப்படாது. யாரைப் போடுவது, யாரைத் தூக்குவது? இந்தியக் கேப்டனாய் இருப்பதைவிட பிஹாரின் முதல்வராக இருந்துவிடலாம் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டதோ கோஹ்லிக்கு ?

*

க்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்

இரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி, இந்தியாவை வெற்றிமேடையில் ஏற்றிவிட்டார். தொடர் 2-1 என்று இந்தியாவின் கணக்கில் வர, பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி (Border-Gavaskar Trophy) ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்கப்பட்டது.

தரம்ஷாலா மேட்ச்சை ஜெயித்தால்தான் தொடர் என்கிற நிலையில் இரு அணிகளும் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் பக்கமே முள் சாய்ந்திருப்பதாய்த் தோன்றியது. காயம் காரணமாக விராட் கோஹ்லி ஆடமாட்டார் என்பதே ஸ்மித்தை ஏகமாகக் குஷிப்படுத்தியது. தொலஞ்சான்யா! டாஸையும் வென்றது ஆஸ்திரேலியா. தரம்ஷாலா பிட்ச் இதுவரை அமைந்த பிட்ச்சுகளில் அருமையானதாகத் தோன்றியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா வேகவேகமாக ரன் எடுத்தது. விக்கெட்டுகளும் விழுந்துகொண்டிருந்தன. இதுவரை தொடரில் ஃபார்ம் காண்பிக்காத டேவிட் வார்னர் அரைசதத்தைப் பூர்த்திசெய்தார். சர்ச்சைகள் ஒருபுறமிருக்க பேட்டிங்கில் பின்னி எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். இன்னுமொரு சதம் இந்தத்தொடரில். 144-க்கு 1 விக்கெட் என ஆஸ்திரேலியா கம்பீரமாக முன்னேறியது.

லஞ்சுக்குப் போகுமுன்தான் ரஹானேக்கு முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவின் முகம் நினைவில் வந்ததுபோலும். கொஞ்சம் போடச்சொன்னார். லஞ்ச்சில் என்ன சாப்பிட்டாரோ! குல்தீப் வெகுவாக மாறிவந்திருந்தார். அவரது சினமன்(chinaman) பந்துகள் ஆஸ்திரேலியர்களிடம் விளையாட ஆரம்பித்தன! முதலில் ஆபத்தான வார்னரைத் தூக்கி எறிந்து ஆர்ப்பரித்தார். தொடர்ந்து ஹாண்ட்ஸ்காம்ப்(Peter Handscomb), மேக்ஸ்வெல், கம்மின்ஸ் (Cummins) என ஒவ்வொருவராக குல்தீப்பின் ஜாலத்தில் சரிந்தார்கள். ஒருவழியாக 300 வந்து ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை இரண்டாவது, மூன்றாவது நாட்களில் ஆடியதால் ஆஸ்திரேலிய பௌலர்களைக் கையாள்வதில் சிக்கல் எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்தத் தொடர் முழுதும் சிறப்பாக ஆடிவரும் கே.எல்.ராஹுல் மீண்டும் ஒரு அரைசதம் எடுத்துக் கைகொடுத்தார். அருமையாக ஆடிய புஜாராவும் அரைசதம். ஆஸ்திரேலிய ஸ்கோரை எப்படியும் தாண்டிவிட மிகவும் மெனக்கெட்டது இந்தியா. ஃபார்மில் இல்லாத கேப்டன் ரஹானே 46 எடுத்தார். பின் வந்த விக்கெட்கீப்பர் சாஹாவும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பெரிதும் உழைத்தார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஓவராக அவரைச் சீண்ட, கம்மின்ஸ் எகிறும் வேகப்பந்துகளினால் ஜடேஜாவைத் தாக்கப் போர்மூண்டது! சூடாகிவிட்ட ஜடேஜா தான் ஒரு ராஜ்புட் என்பதை வீரமாய் விளக்கினார் ! அடுத்தடுத்த கம்மின்ஸ் பந்துகளை பௌண்டரி, சிக்ஸர் எனச் சீறவிட்டு பெவிலியனில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த கோஹ்லியையும், ரசிகர்களையும் குஷிப்படுத்தினார். சாஹா 31, ஜடேஜா 63 என அசத்தினர், சிறப்பாக வீசிய ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயனுக்கு 5 விக்கெட்டுகள். இந்தியா எடுத்த 332 ஆஸ்திரேலியாவின் மனதில் கிலியை உண்டுபண்ணியிருக்கவேண்டும்.

தொடரைக் கோட்டைவிட்டுவிடக்கூடாதே என்கிற அழுத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா ஆரம்பித்தது. உமேஷ் யாதவ் வேகத்தினாலும், ரிவர்ஸ் ஸ்விங்கினாலும் ஆஸ்திரேலியர்களை அதிரவைத்தார். ரென்ஷா, வார்னர் இருவரையும் அதிரடியாக வெளியேற்றினார். நிதான ஆட்டத்திற்குப் பேர்போன ஆஸ்திரேலியக் கேப்டனை பீதி கவ்வியது. புவனேஷ்குமாரின் ஸ்விங் பௌலிங்கிற்கு உடனே பலியாகி ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைத்தார் ஸ்மித். மேக்ஸ்வெல்லின் அதிரடி 45-ஐத் தவிர சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை. 137 ரன்களில் பரிதாபமாக இந்தியாவிடம் சரண் அடைந்தது ஆஸ்திரேலியா. இந்திய பௌலர்களின் உத்வேகப்பந்துவீச்சு மிகவும் பாராட்டுக்குரியது. உமேஷ், ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ரன் அதிகமாகக் கொடுத்துவிடக்கூடும் என்கிற பயத்தில் ரஹானே அவருக்கு ஐந்து ஓவருக்குமேல் தரவில்லை.

இந்தியாவுக்கு இலக்கு 106. இத்தகைய சிறிய இலக்குகள் 4-ஆவது நாளில் பெரும் ப்ரச்சினையை பேட்டிங் அணிக்குத் தரவல்லது. இதுவோ இறுதிப் போட்டி. தொடரின் தலையெழுத்தை நிறுவப்போவது. எனவே இந்தியா இலக்கை நோக்கி வழிமேல் விழிவைத்து நகர்ந்தது. இருந்தும் முரளி விஜய் தடுமாறி கம்மின்ஸிடம் வீழ, அதே ஓவரில் இந்தியாவின் Mr.Dependable-ஆன புஜாரா ரன்–அவுட் ஆகிவிட, 46-க்கு இரண்டு விக்கெட்டுகள்; இந்தியாவுக்குத் தலைவலி ஆரம்பித்துவிட்டதோ எனத் தோன்றியது, ஆனால் ராஹுல் தன் நிதானத்தை இழக்காது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடிசேர்ந்த ரஹானேயை முகத்துக்கெதிரே எகிறும் வேகப்பந்துகளினால் மிரட்டப் பார்த்தார் கம்மின்ஸ். ஆனால் தடுத்தாடி, தடுமாறிவிழும் மனநிலையில் ரஹானே இல்லை. கம்மின்ஸின் எகிறும் பந்துகளை விறுவிறு பௌண்டரிகளாக மாற்றினார். போதாக்குறைக்கு, கம்மின்ஸின் 146 கி.மீ. வேகப்பந்தொன்றை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு அனுப்பி ரசிகர்களுக்கு போதையூட்டினார் ஒல்லி உடம்பு ரஹானே! ஆஸ்திரேலியா நிலைகுலைந்தது. இந்தத் தொடர் நமக்கில்லை என்று அதற்குப் புரிந்துவிட்டது. ராஹுல் தன் ஆறாவது அரைசதத்தைப் பூர்த்திசெய்து வெற்றி ரன்களையும் எடுத்தவுடன், மைதானத்தில் ஆட்டம் ஆடி, கோஹ்லி அங்கில்லாத குறையை ரசிகர்களுக்காக நிவர்த்தி செய்தார். வெற்றிக்கு அடையாளமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் பிடுங்கி எடுத்துக்கொண்டு அமைதியாக நடந்தார் அஜின்க்யா ரஹானே. இளம் ரசிகர்களின் கூச்சல், ஆரவாரத்தில் தரம்ஷாலா அதிர்ந்து எழுந்தது. கோஹ்லி மைதானத்துக்குள் ப்ரவேசித்து வீரர்களோடு கைகுலுக்கி மகிழ்ந்தார். தொடரின் விதியை நிர்ணயித்த தரம்ஷாலா மேட்ச்சில் ரஹானே காட்டிய அமைதியான ஆனால் அழுத்தமான தலைமை மறக்க இயலாதது.

இத்தொடர் பற்றிய முதல் கட்டுரையில் நான் கூறியபடி இது ஒரு அபாரத் தொடராக நடந்துமுடிந்தது. இருதரப்பிலிருந்தும் அபரிமித ஆட்டத் திறமைகளின் வெளிப்பாடுகள், மைதானத்துக்குள்ளும் வெளியேயும் அதிரடிச் சச்சரவுகள் என ரசிகர்களையும், விமர்சகர்களையும் இறுதிவரை சீட்டின் நுனியில் வைத்திருந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்மித்தின் DRS தப்பாட்டம்பற்றி பெங்களூரில் விராட் கோஹ்லி வீசிய குண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும், ஏன் ஐசிசி-யையும்கூட அதிரவைத்தது. பதிலாக, தன் மூளை ஒருகணம் மழுங்கிவிட்டதாகவும் அது தவறுதான் என்றும் ஸ்மித் வழிந்த கோலாகலக் காட்சி அரங்கேறியது! ஹேண்ட்ஸ்காம்ப் தனக்கு DRS-பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை எனத் தன் கேப்டனோடு ஒத்து ஊதி ஹாஸ்யத்தை அதிகப்படுத்தினார். இந்தியக் கிரிக்கெட் வாரியம் வீடியோ ரெகார்டிங்கோடு ஸ்மித்திற்கு எதிராக ஐசிசி-யிடம் குற்றம்சாட்டப்போய், திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் இந்தியாவிடம் உடனடியாகப்பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு நேர்ந்தது. விவ் ரிச்சர்ட்ஸ், டேல் ஸ்டெய்ன், டூ ப்ளஸீ ஆகியோரிடம் தனது ஆவேச அதிரடிகளுக்காகப் பாராட்டுப்பெற்றார் கோஹ்லி. நேர்மாறாக, ஆஸ்திரேலியா மீடியா விராட் கோஹ்லியை அவமதிப்பதில், குறைசொல்வதில் முனைப்பு காட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியவீரர்களை மைதானத்தில் வார்த்தைகளால் சீண்டுவது, பழித்துக்காட்டுவது கடைசிப் போட்டிவரை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தோல்விபயம் தங்களைப் பற்றிக்கொள்ள என்ன செய்வதெனத் தெரியாதுவிழித்த ஸ்மித் குழுவினர் எப்பாடுபட்டாகிலும் இந்தியர்களின் ஆட்டகவனத்தைக் குலைக்க முற்பட்டனர். விளைவு தரம்ஷாலாவின் இந்திய முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பேட்டிங்கின்போது ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் மேத்யூ வேட் (Mathew Wade) விஷம வார்த்தைகளினால் ஜடேஜாவின் கவனம் கலைக்கமுயன்றது, முரளிவிஜய்யின் லோ-கேட்ச் அனுமதிக்கப்படாதபோது பெவிலியனில் உட்கார்ந்திருந்த ஸ்மித் விஜய்யை கெட்டவார்த்தைகளால் திட்டி, டெலிவிஷன் கேமராவில் சிக்கியது என ஒரே ரணகளம். தொடரின் இறுதியில் தன்னுடைய சில நடத்தைகளுக்காக மன்னிப்புக் கேட்டார் ஸ்மித். ’‘ஆஸ்திரேலிய வீரர்கள் எனது நண்பர்கள் என ஆரம்பத்தில் நான் சொன்னது உண்மைதான். ஆனால் அது இப்போது மாறிவிட்டது; இனி நான் அப்படிச்சொல்வதை நீங்கள் கேட்க வாய்ப்பில்லை !’’ என்று மனதில் உள்ளதைப் போட்டுடைத்தார் கோஹ்லி. மொத்தத்தில் பெரும் ஆர்வத்தை உலகெங்குமுள்ள க்ரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே கிளர்ந்தெழவைத்த டெஸ்ட் தொடர் இது. Most riveting Test series ever played in recent times.

2016-17 க்ரிக்கெட் சீஸன் இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோஹ்லி, முரளி விஜய், கே.எல்.ராஹுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 6 அரைசதங்களை எடுத்து அசத்தினார்கள். கோஹ்லி 3 இரட்டை சதங்களையும், புஜாரா ஒரு இரட்டை சதத்தையும் விளாசி முத்திரை பதித்தனர். இங்கிலாந்துக்கெதிராக சென்னையில் கருண் நாயர் அடித்த முச்சதமும் இந்த சீஸனின் மகத்தான அம்சங்களில் ஒன்று. பௌலிங்கில் உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜாவின் பங்களிப்பு மகத்தானது. தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜா முதன்முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப்பெற்றுள்ளார். அஷ்வினுக்கு இரண்டு ஐசிசி விருதுகள். இந்திய அணி அபாரமாக டெஸ்ட்டுகளை ஆடி 4 தொடர்களைக் கைப்பற்றிய காலமாக இது பேசப்படும். இனி வெளிநாட்டு மைதானங்களிலும் தன் திறமை காட்ட இது அணியினை உற்சாகப்படுத்தும். எனினும், அதற்கு இன்னும் நாளிருக்கிறது. அதற்குள் கொஞ்சம் ஐபிஎல் ஆடலாம் !

**