தென்னாப்பிரிக்காவை ‘வெள்ளையடித்த’ இந்தியா

இவ்வளவு பரிதாப டெஸ்ட் தொடர் தோல்வியை, தென்னாப்பிரிக்கா அந்நிய மண்ணில் இதுவரை சந்தித்ததில்லை. உண்மையில், வெளிநாட்டுத் தொடர்களை நன்றாகவே ஆடும் அணி என்கிற நல்லபெயர் கொஞ்சகாலம் அதற்கு இருந்திருக்கிறது. இந்தியா வந்து, ஆடமுடியாமல் தடுமாறி, இப்படித் தலைகுப்புற விழுவோம் என அவர்களே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இந்தத் தொடரில் இந்தியாவிடம் இரண்டாவது ஃபாலோ-ஆன் வாங்கி இறுதியில்,  0-3 whitewash ! இந்த அணி நாடு திரும்பி, தங்களின் கிரிக்கெட் போர்டுக்கு என்ன பதில் சொல்லுமோ?

தென்னாப்பிரிக்க டாப்-ஆர்டர் பேட்ஸ்மன்கள், கொஞ்சம் க்ரீஸில் நின்று,, ஓடி, ஆடி ரன் சேர்த்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்காது. இந்திய பௌலர்கள் அப்படி ஒன்றும் சூப்பர் ஸ்டார்களாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்கர்கள் எதிர்பார்த்து மிரண்டது இந்திய ஸ்பின்னர்களை.  ஆனால், விக்கித்திக்கி விளையாடமுடியாமல் நொறுங்கியது வேகப் பந்துவீச்சாளர்களிடம்! குறிப்பாக முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தென்னாப்பிரிக்கர்களை துவைத்துக் காயப்போட்டுவிட்டார்கள். இதை கோஹ்லியே எதிர்பார்த்திருந்திருக்கமாட்டார்! ஏனெனில் இந்தியாவுக்கு ஆடவரும் வெளிநாட்டு அணிகளுக்கு, வேகப்பந்துகள் ஒரு பிரச்னையே கிடையாதே. இந்திய பிட்ச்சுகள் வேகப்பந்துவீச்சுக்குத் தோதானதாக என்றும் இருந்ததில்லையே.

ராஞ்சியில் நான்காவது நாளான இன்று (22/10/19), மிச்சமிருந்த இரண்டு விக்கெட்டுகளுடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் சோகக்கதையை முடிக்க, இந்தியர்களுக்கு இரண்டு ஓவர்களே போதுமானதாக இருந்தது. முதல் ஓவர் ஷமியின் மெய்டன். இரண்டாவது ஓவர் இடதுகை சுழல்வீச்சாளர் ஷாபாஸ் நதீம். அவருடையை கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டும் காலி! தென்னாப்பிரிக்காவிற்கு நேரமே சரியில்லை என்பதைக் கடைசி விக்கெட் விழுந்த விதம் மேலும் உறுதி செய்தது. நதீமின் அந்த ஓவரின் கடைசி பந்து விக்கெட் எடுக்கும் பந்தே இல்லை. அதை அவர்களது கடைசி பேட்ஸ்மன் லுங்கி இங்கிடி ஒரு க்ராஸ்-பேட் ஷாட் அடிக்கிறார். Powerful shot. ஆனால் பந்து என்ன செய்தது? பௌலருக்கு இடது புறமாகப் பாய்ந்த பந்து, நேராக எதிரே நின்ற ஆன்ரிக் நோர்த்யாவின் கையில் பட்டுத் தெறித்துத் திரும்பியது – பௌலர் நதீம் நின்ற திசையில்! கணநேர எதிர்பார்ப்பில் கையேந்த, அந்த rebound நதீமின் கையில் லட்டுபோல் இறங்கியது. Ngidi.. caught and bowled Nadeem ! தென்னாப்பிரிக்கா 133-ல் ஆல் அவுட். அதன் ’டெஸ்ட்’ போராட்டம் அதிரடியாக முடிவுக்கு வந்தது. இன்னிங்ஸின் டாப் ஸ்கோர் 30. நேற்று (21/10/19) எல்கருக்கு (Dean Elgar) உமேஷ் யாதவின் பௌன்ஸரில் காதுக்குமேல் பட்ட அடியினால், அவர் சுருண்டு கீழே விழ, மெடிக்கல் ஸ்டாஃப் அவரை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.  அவருக்கு பதிலாக concussion substitute -ஆக வந்த டி ப்ருய்ன் (T. de Bruyn) எடுத்த ரன்கள், அந்த 30.

சில நிமிடங்களில், ‘Freedom Trophy’ என அழைக்கப்படும் ‘காந்தி-மண்டேலா’ கோப்பை விராட் கோஹ்லியின் கையில் ! கோஹ்லிக்கு அவருடைய ஸ்டாரோ, அல்லது தர்ம பத்தினி அனுஷ்கா ஷர்மாவின் ஸ்டாரோ – ஏதோ ஒன்று வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது, சந்தேகமில்லை. ஆனால் இப்படிச் சொல்லி தென்னாப்பிரிக்கக் கேப்டன் டூ ப்ளஸீயைத் தேற்றமுடியாது!

சுருக்கமாக ஸ்கோர்: இந்தியா: 497/9 (ரோஹித் 212, ரஹானே 115, ஜடேஜா 51)

தென்னாப்பிரிக்கா 1st Innings  :   162 (ஹம்ஸா 62, லிண்ட(Linde) 37)

2nd Innings :  133 (டி ப்ருய்ன் 30)

தொடரில் இந்தியாவுக்கு மூன்று இரட்டைச் சதங்கள். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மயங்க் அகர்வால், விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா – விளாசித் தூள்கிளப்பி,  ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்கள்.

இந்த மேட்ச்சில் சொல்லிவைத்தாற்போல் ஆளுக்கு ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள் முகமது ஷமியும், உமேஷ் யாதவும். ஸ்விங் மற்றும் துல்லியம் எதிரிகளைப் புரட்டிப்போட்டது. அஷ்வின், ஜடேஜா, நதீம் ஆகிய ஸ்பின்னர்கள் இவர்களுக்கு second fiddle-தான் வாசித்தார்கள். ( தென்னாப்பிரிக்காவுக்கு டேல் ஸ்டெய்ன் இல்லாததுபோல், இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா  அணியில் இல்லை. ) இருந்தும் ஏன் துவண்டது தென்னாப்பிரிக்கா என்பது இப்போதைய million dollar question.

100-க்கும் மேல் first class matches விளையாடிய அனுபவத்தோடு, தாமதமாக வாய்ப்புப் பெற்றுத் தன் முதல் டெஸ்ட் ஆடிய ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமுக்கு போட்டியில் 4 விக்கெட்டுகள். மனுஷன் நன்றாக சுழற்றினார் பந்தை. இந்திய டீமுக்கு நல்லதொரு சேர்ப்பு. இந்த மேட்ச்சில் 212 அடித்தார் ரோஹித். இரண்டு சதங்களை முதல் மேட்ச்சில் சாத்தியிருந்தார். அவருக்கே இரண்டு விருதுகளும் – ஆட்டநாயகன், தொடர் நாயகன். குறைந்த ஓவர் போட்டிகளில் ‘ஹிட்மேன்’ என ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ரோஹித், டெஸ்ட் அரங்கிலும் நான் சளைத்தவனில்லை எனக் காண்பித்துவிட்டார். ரோஹித்தைக் குறை சொல்லியே பொழுதுபோக்கும் பத்திரிக்கையாளர்கள் /விமரிசகர்கள் இந்தப் புள்ளியில் விலகிக்கொள்ளவும்.. வேறுபக்கமாக ஓடிவிடவும் !

**

கிரிக்கெட் : பூனேயில் இன்னிங்ஸ் வெற்றி

 

வெஸ்ட் இண்டீஸ் மாதிரி விளையாடியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. டெஸ்ட் அரங்கில் அதிர்ச்சி. அந்த அணியில் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் (Dale Steyn), ஹஷிம் ஆம்லா போன்ற ஜாம்பவான்கள் தற்போது இல்லை என்பது பலவீனம்தான். இருந்தும், உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாயிற்றே.. ஒரு பிடி பிடிக்கவேண்டாம்? எதிர்த்து ஒரு முறை, முறைக்கவேண்டாம்? இப்படியா நான்காவது நாளிலேயே சரண்டர் ஆகி வழிவது? எங்க கோஹ்லிக்கு இனி, கால் தரையிலேயே படாதே!

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா சோர்வு தரும்  வகையில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்குத் திரும்பிய உமேஷ் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். மிடில் ஆர்டராவது டீமைத் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். கேப்டன் டூ ப்ளஸீ (64) சமாளிக்கப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் 9, 10 வரிசை-நிலைகளில் வந்த கேஷவ் மஹராஜும், வெர்னன் ஃபிலாண்டரும், நிதானமாக ஆடி நூறு ரன் பார்ட்னர்ஷிப் கொடுத்து தென்னாப்பிரிக்கா 250-ஐத் தாண்டவைத்தார்கள். கேஷவ் டாப் ஸ்கோர் 72. இங்கே எழுந்தது கேள்வி. பௌலர்களால் இப்படி ஆடமுடிகிறதென்றால், தென்னாப்பிரிக்க ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள் என்ன செய்தார்கள் ?

நான்காவது நாள் (13/10/19), இந்திய கேப்டன் ’ஃபாலோ ஆன்’ (follow on) கொடுக்க, தென்னாப்பிரிக்கா தன் இரண்டாவது இன்னிங்ஸை சேர்த்து ஆடும்படி ஆனது. இப்போதாவது  தென்னாப்பிரிக்கா, கொஞ்சம் ஆட்டம், கொஞ்சம் கட்டை என்று போக்குக் காண்பித்து, க்ரீஸில் நின்று பொழுதைப் போக்கி, ஆட்டத்தின் முடிவை ஐந்தாவது நாளுக்குக் கொண்டுபோகலாமே? டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் கொஞ்சம் அடித்துத் திறமையைக் காண்பிக்கலாம்.. ம்ஹூம். எல்கர் – 48 தான் டாப் ஸ்கோர். தென்னாப்பிரிக்கர்கள், இந்திய ஸ்பின்னர்களிடம் திணறியதோடு, வேகப்பந்துவீச்சாளர்களிடமும் சிக்கி விழித்தார்கள். வரிசையாக விழுந்து, வீட்டுக்கு ஓடினார்கள். உமேஷ், ஜடேஜா – தலா 3 விக்கெட், அஷ்வின் 2 எனச் சாய்க்க, தென்னாப்பிரிக்கா 189-ல் ஆல்-அவுட். மோசமான இன்னிங்ஸ் தோல்வி.  இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி. 19 அக்டோபரில் ராஞ்சியில் (Ranchi, Capital of Dhoni’s Jharkhand!) துவங்கும்.

இந்தியாவின் தரப்பில், ரசிகர்கள் பார்க்க வந்திருந்த ரோஹித், க்ளிக் ஆகவில்லை. இளம் மயங்க் அகர்வால் சதமடித்துச் சிரித்தார். கேப்டன் கோஹ்லியின் 254 நாட் அவுட் masterclass. இது கோஹ்லியின் 7-ஆவது இரட்டைச்சதம். கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. அன்றிருந்த ஃப்ளோவில் அவர் நினைத்திருந்தால் இன்னும் ஒரு மணிநேரம் இந்திய பேட்டிங்கை நீட்டித்து, தன் தனிப்பட்ட ஸ்கோராக 300-ஐ எட்டி, சாதனை படைத்திருக்கலாம். ’முச்சதம்’ விளாசுவதற்கான வாய்ப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்காது என்பது, கிரிக்கெட்டின் சுமார் 150 வருட சரித்திரத்தைப் பார்த்தால் புரியும். ஆனால்  தன்னோடு ஆடிக்கொண்டிருந்த ஜடேஜாவின் சதத்திற்காக காத்திருந்த கோஹ்லி, ஜடேஜா 91-ல் அசட்டுத்தனமாகத் தூக்கி கேட்ச் கொடுத்து காலியானவுடன், இந்தியாவின் ஸ்கோர் 601 என்கிற நிலையில் உடனே டிக்ளேர் செய்துவிட்டார். கோஹ்லியின் வாய்தான் அகலம் என்று நினைத்துவிடக்கூடாது! மனமும் பெரிசுதான்…

Saha catches one-handed in Pune

பூனே ஆட்டத்தில், வ்ருத்திமான் சாஹா பிரமாதம். குறிப்பாக அவர் இந்திய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்தவிதம் (Saha is a great keeper for spinners: Ashwin), உமேஷ் பௌலிங்கில் லெக்-ஸைடில் பாய்ந்து தூக்கிய கேட்ச்சுகள் – விமரிசகர்களை தாராளமாகப் பாராட்டவைத்திருக்கிறது. ஏற்கனவே ஒரு டெஸ்ட்டில் (Cape Town, 2018) அதிகபட்ச கேட்ச்சுகள்(10) பிடித்த  ரெகார்டு அவரிடம்தான் இருக்கிறது. ஹனுமா விஹாரியின் இடத்தில், அணிக்குத் திரும்பிய உமேஷ் யாதவின் வேகப்பந்து வீச்சும் ஒரு ப்ளஸ்.

இதை எழுதிக்கொண்டிருக்கையில், செய்தி. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் ஆடமாட்டார். ஃபீல்டிங்கின்போது ஏற்பட்ட தோள்ப்பட்டைக் காயத்தினால் திருப்பி அனுப்பப்படுகிறார். அவர் இடத்தில் வருகிறார் 27-வயதான ஜார்ஜ் லிண்ட் (George Linde). ஸ்பின் -ஆல்ரவுண்டர். ராஞ்சியில் ஆடுவாரா? பொறுத்திருங்கள்…

**

 

விராட் கோஹ்லி 149 !


இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston, Birmingham) இந்தியா விளையாடிவரும் தொடரின் முதல் டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது நாள்தான் நேற்று. இனி என்னென்ன வரப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள், அதற்குள்ளாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

2014-ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், தோனியின் தலைமையில் ஆடிய இந்தியா 1-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆண்டர்சன் (Anderson), ப்ராட்(Broad) போன்றோரின் ஸ்விங் பௌலிங்கைத் தாங்கமாட்டாமல் ஏற்பட்ட தலைக்குனிவு. முரளி விஜய்யைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மனின் சராசரியும் 40 ஐத் தாண்டவில்லை. அந்தத் தொடரில், நடப்புக் கேப்டனான விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 13.40. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் திரும்பத் திரும்ப கோஹ்லியை அவுட்டாக்கி அவரது மானத்தை வாங்கிவிட்டார் அப்போது. இத்தகைய நினைவுகளோடுதான் இந்தமுறை இங்கிலாந்தில் நுழையவேண்டியிருந்தது கோஹ்லிக்கு.

இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸிற்கு பதிலாக இந்தியா நேற்று பேட்டிங் செய்தது. கோஹ்லி ஆடவந்தபோது, இந்தியாவின் நிலை பரிதாபம். முதலில் விஜய்யும், ராகுலும், பிறகு தவணும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்கள். 59 க்கு 3 விக்கெட். கோஹ்லியைக் கடித்துத் தின்னத் துடித்துக்கொண்டிருக்கும் ஆண்டர்சன். ஒரு பக்கம் ரன்கள் ஏற மறுக்க, இந்திய மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்துகொண்டிருந்தன. 3 ஸ்லிப்புகள், கலி (Gully) என்று நிறுத்திவைத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகத்தாக்குதல் நடத்தி கோஹ்லியைத் திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தார் அவரது பரம வைரி ஆண்டர்சன். போறாக்குறைக்கு 20 வயதுப் பொடியன் ஒருவன் 3 இந்திய விக்கெட்டுகளை அனாயாசமான ஸ்விங்கில் சுருட்டி, அவன்பாட்டுக்கு வித்தை காண்பித்துக்கொண்டிருந்தான். ஸாம் கர்ரன் (Sam Curran). ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வேறு இடையே புகுந்து கலக்கிக்கொண்டிருக்க இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. கார்த்திக் அவுட் ஆகையில் இந்திய ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 100 என வயிற்றில் புளியைக் கரைத்தது. விராட் கோஹ்லி தனி ஒரு மனிதனாக எதிர்த்து நிற்பதாகவே தோன்றியது. மூழ்கும் கப்பலின் அப்பாவிக் கேப்டனா?

ஏற்கனவே முடிவுகட்டியே வந்திருந்தார் போலும் கோஹ்லி. விஜய் பாணியில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சீறி எழும் ஆண்டர்சன் பந்துகளை அடிக்காது பின்பக்கம் போகவிட்டார். இடையிடையே ஏதோ தொடப்போய் ஸ்லிப்பிற்கு கேட்ச் பறந்தது. ஆனால், கோஹ்லிக்கோ இந்தியாவுக்கோ அப்போது நல்ல நேரமாக இருந்திருக்கிறது. தொடை உயரத்தில் வந்த கேட்ச்சைப் பிடித்து நழுவவிட்டார் டேவிட் மலான் (David Malan). பிழைத்தார் கோஹ்லி. அதற்குப்பின் வெகுநேரம் கோஹ்லியின் ஸ்கோர் 21-ஐவிட்டு நகர்வேனா என்று அடம்பிடித்தது. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா கொஞ்ச நேரம் கோஹ்லிக்கு கம்பெனி கொடுத்தார். அவர் போனதும் வந்த அஷ்வினை, காலந்தாழ்த்தாது காலி செய்தார் ஆண்டர்சன். 169-க்கு 7 விக்கெட். ம்ஹூம்! தேறாது இந்தியா என்று தெரிந்துவிட்டது. ஆனால் கேப்டன் விடுவதாக இல்லை. தடுத்தாடியும், நெருக்கித்தள்ளியும் சிங்கிளும், இரண்டுமாக ஓடிக்கொண்டிருந்த கோஹ்லிக்கு கூட ஆடுவது இருக்கட்டும், ஓடக்கூட ஆளில்லை என்றே தோன்றியது. ஏனெனில் இனி வந்தவர்கள் பேட்ஸ்மன்கள் என்று சர்வதேசத் தரத்தில் சொல்ல லாயக்கற்றவர்கள். இந்தியக் கணக்குப்படியேகூட வெறும் பௌலர்கள். முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இந்தியாவின் 9, 10, 11-ல் வரும் காகிதப் புலிகள். இவர்களை வைத்துக்கொண்டா கோஹ்லி மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்?

ஷமி விரைவிலேயே வெளியேறிவிட்டார். பின் வந்த இஷாந்த் நிற்பதற்கே தடுமாறினார். தைரியப்படுத்தி, தட்டிக்கொடுத்து, சீறும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு பலியாக்கிவிடாமல் அவரைப் பாதுகாத்து, தானே நிறையப் பந்துகளை எதிர்கொண்டு சாமர்த்தியம் மிகக் காட்டி ஆடினார் கோஹ்லி. இந்த சமயத்தில், ஒரு பக்கமாக கோஹ்லியின்மீது ஆண்டர்சனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தவாறே இருந்தது. எப்படியாவது கோஹ்லியைத் தூக்கி வெளியே வீசாமல் ஆண்டர்சனும் போவதாக இல்லை. இன்னொரு பக்கம் ஸ்டோக்ஸ் தன் இன்–ஸ்விங்கர்களைத் தெளித்துக்கொண்டிருந்தார். இக்கட்டான நிலையிலும், சந்தடிசாக்கில் அவ்வப்போது பௌண்டரி விளாசியதில், கோஹ்லியின் ஸ்கோர் 70, 80 என மேலேறி வந்துகொண்டிருந்தது. ஆயினும், ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கெதிராக, இந்தியாவால் 187 கூட எடுக்க முடியாது எனவே தோன்றியது. இஷாந்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தானும் அவுட்டாகிவிடாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆடிய கோஹ்லி, இந்தியாவின் ஸ்கோரை 200-க்கும் தாண்டிக் கொண்டுவந்துவிட்டார். இரண்டு எல்பிடபிள்யூ-க்களில் டிஆர்எஸ்-இல் தப்பித்த இஷாந்த், ரஷீத்தின் பந்தில் வெளியேறினார். அதுவும் உண்மையில் அவுட் இல்லை என ரீப்ளேயில் தெரிந்தது. இந்திய ஸ்கோர் 217. 9 விக்கெட்டுகள் காலி. இருந்தும், கோஹ்லி இன்னும் போய்த்தொலையவில்லையே என இங்கிலாந்தின் எரிச்சல் எகிறியது. தொண்ணூறை நெருங்கிவிட்டிருந்தார் இந்தியக் கேப்டன். சதம் கூட அடித்துவிடுவாரோ?

இந்தியாவின் கடைசி ஆளாக, கையில் மட்டையுடன் வந்து நின்றார் உமேஷ் யாதவ். யாதவிடம் போய்ப்பேசித் தட்டிக்கொடுத்தார். பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தார் கோஹ்லி. இந்தியக் கேப்டனுக்கு, தான் பொறுப்பாக ஆடுவதோடல்லாமல், வேறென்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது மைதானத்தில்? ஃபீல்டர்கள் எனும் பெயரில், கொத்தித் தின்ன இங்கிலாந்துக் கழுகுகள் விழித்துக் காத்திருந்தன. அவர்களுக்குத் தேவை இன்னும் ஒருவிக்கெட். யார் அவுட்டாகித் தொலைந்தால்தான் என்ன? இந்தப் பதற்றத்துக்கு நடுவே இரண்டு பௌண்டரிகளைப் பறக்கவிட்டு, கோஹ்லி சதம் கடந்தார். இந்திய ரசிகர்கள்-அதில் சிலர் கொடி பறக்கவிட்டுக்கொண்டிருந்த சீக்கிய இளைஞர்கள், குழந்தைகள் குதூகலித்தனர். அவர் சதத்தைக் கொண்டாடினாரே தவிர, கவனமெல்லாம் உமேஷை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஓட்ட வேண்டும். இங்கிலாந்தின் ஸ்கோரை நெருங்கிவிடவேண்டும் என்கிற சிந்தனைதான். கோஹ்லியை விட்டுவிட்டு, உமேஷை உற்றுப் பார்த்தது இங்கிலாந்து. இதை அறிந்திருந்த கோஹ்லி ஒவ்வொரு ஓவரிலும் முதல் நாலைந்து பந்துகளைத் தானே ஏற்று ஆடினார். ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் சிங்கிள்களை எடுக்கவில்லை. எங்கே உமேஷ் வந்து இந்தப் பக்கம் நிற்க, அவரை ஓரிரண்டு பந்துகளிலேயே காலி செய்துவிடுவார்களோ என்கிற பதற்றம். ஓவரின் ஐந்தாவது அல்லது கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த பக்கம் ஓடுவார் கோஹ்லி. அடுத்த ஓவரையும் தானே எதிர் கொள்வார். இப்படி கயிற்றின்மேல் வித்தை காண்பித்துக்கொண்டிருந்தார் அவர். இடையிடையே லூஸாக வந்த பந்துகள் அவர் மட்டையை வேகமாகச் சந்தித்து பௌண்டரிக்குப் பறந்தன. அணிக்கு ரன்னும் சேர்த்தாக வேண்டுமே, நின்றால் போதுமா?

இப்படியாகத்தானே, ஒரு சாகஸ ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய ஸ்கோரை, 274 வரை கொண்டு வந்து, இங்கிலாந்தைத் திணறவைத்துக் காட்டினார் கோஹ்லி. 149 எனும் இங்கிலாந்துக்கெதிரான தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரில் அவுட்டானார் இந்தியக் கேப்டன். நிச்சயமாக கோஹ்லியின் அதிஜோரான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது கருதப்படும். துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் பேர்போன ஒரு தலைவனின் பங்களிப்பு. உமேஷ் யாதவுடனான, பத்தாவது விக்கெட்டுக்கு அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப் 57 ரன்கள். அதில் உமேஷின் பங்கு 1 ரன். மிச்சமெல்லாம் கோஹ்லியின் சர்க்கஸ்!

தொடர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியிலேயே இன்னும் 3 நாட்கள் பாக்கி. மேலும் மேலும் விரியும். காட்சிகள் அரங்கேறும். கேப்டனின் இந்த ஒப்பற்ற ஆட்டத்திலிருந்து நமது மற்ற வீரர்கள் ஏதாவது கற்றுக்கொண்டார்களா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

**

ஒருநாள் கிரிக்கெட்: தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என்று விராட் கோஹ்லியின் தலைமையில் வென்ற இந்தியா, மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஒரு-நாள் தொடரை அக்டோபர் 16-ல், ஹிமாச்சல் பிரதேஷின் தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. டெஸ்ட் தொடரிலிருந்து மாறுபட்ட அணி, தோனிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மேட்ச்-வின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இல்லை. அவரோடு முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி வீரர்களும் ஓய்வுகொடுக்கப்பட்டனர். அவர்களின் இடத்தில் அமித் மிஷ்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோரை சேர்த்தது இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு. ஹர்திக் பாண்ட்யா தன் முதல் ஒரு-நாள் மேட்ச்சை இந்தியாவுக்காக ஆடினார். அதிரடி சுரேஷ் ரெய்னா வைரல் ஜுரத்தில் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டதால், கேதார் ஜாதவ் (யாதவ் அல்ல, ஜாதவ்!) சேர்க்கப்பட்டார்.

அஷ்வினின் சூப்பர் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் டெஸ்ட் தொடரில் மூச்சுத் திணறிய நியூஸிலாந்து, ஒரு-நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என இரு தரப்பிடமிருந்தும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், நியூஸிலாந்தின்` ஒரு-நாள், டி-20 போட்டி` செயல்பாடுகள் கடந்த ஒருவருடமாக மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததே காரணம். அப்போது நியூஸிலாந்தின் சூப்பர்ஸ்டார் ப்ரெண்டன் மெக்கல்லம் (Brendon McCullum) பேயடியாக எதிரி பௌலர்களை இஷ்டத்துக்கும் போட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் இப்போது அணியில் இல்லை. இந்த சூழலில், தர்மசாலாவின் அழகுவண்ண மைதானத்தில் நியூஸிலாந்து காட்டிய ஆட்டம்தான் என்ன?

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து உற்சாகமாகத்தான் ஆரம்பித்தது. உமேஷ் யாதவ்வின் முதல் ஓவரில் கவனமாக இருந்த மார்ட்டின் கப்ட்டில் (Martin Guptill), இரண்டாவது ஓவரில் குஷியானார். பும்ரா வீசவேண்டியது இரண்டாவது ஓவர். ஆனால் இந்தியாவுக்காகத் தன் முதல் ஒரு-நாள் போட்டி விளையாடும் ஹர்தீக் பாண்ட்யாவிடம்(Hardik Pandya) அதைக் கொடுத்து நியூஸிலாந்தை `டீஸ்` பண்ணினார் கேப்டன் தோனி. ‘புதுப்பயல் வந்துருக்கான்.. பார்த்துறவேண்டியதுதான் ஒரு கை!’ – என விளாசிய கப்ட்டில், மூன்று பௌண்டரிகளை விறுவிறுவென அடித்தார். ஆனால் ஆஃப் ஸ்டம்ப்பிற்கு நேராகத் தோன்றி, உள் திரும்பி இறங்கிய ஒரு வேகப்பந்தில் கப்ட்டிலை அசரவைத்தார் பாண்ட்யா. காலை நகர்த்தாது ஆஃப் சைடில் கட் செய்த கப்ட்டிலை, வயிற்றோடு சேர்த்துப் பிடித்தார் இரண்டாவது ஸ்லிப்பிலிருந்த ரோஹித் ஷர்மா. ஷர்மாவுக்கு வயிற்றில் வலி. அவுட்டான கப்ட்டிலுக்கோ முகத்தில் கிலி! பாண்ட்யாவின் முதல் ஒரு-நாள் விக்கெட். அடுத்த பக்கத்தில் ஆடிய டாம் லேத்தம் (Tom Latham) பந்துகளைத் தேர்வு செய்து உஷாராக ஆடியதால், நியூஸிலாந்துக்கு நம்பிக்கை தந்தார்.
அருமையாக வீசிய உமேஷ் யாதவ், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Willamson), முன்னாள் கேப்டன் ராஸ் டேய்லர்(Ross Taylor) இருவரையும் ஒருவர் பின் ஒருவராகத் தூக்கினார். ஹர்திக் பாண்ட்யா அவ்வப்போது தொளதொள பந்துகளைப் போட்டதால் ரன்களை விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஆனால் தோனிக்கு அவர் மேல் அசராத நம்பிக்கை. தொடர்ந்தார். அடுத்து வந்த ஓவர்களில் அதிரடி ஆட்டக்காரரான கோரி ஆண்டர்சன்(Corey Anderson) மற்றும் லூக் ரோன்க்கி (Luke Ronchi) இருவரையும் அருமையான பந்துகளால் விழுங்கி ஏப்பம் விட்டார் பாண்ட்யா. ஆண்டர்சன் முன்னேறி விளாசிய பந்தை, ஆஞ்சனேயர் போல் ஆகாசத்தில் எழும்பி லபக்கினார்.. யாரப்பா இந்த சூப்பர்மேன்? ஓ, நம்ம உமேஷ் யாதவ்! இப்படியெல்லாம்கூட கேட்ச் பிடிப்பாரா இவரு! முதல் மேட்ச்சிலேயே 3 விக்கெட் அள்ளிய பாண்ட்யா, கேப்டன் தன் மேல் வைத்த நம்பிக்கை சரியானதுதான் என நிரூபித்தார்.

பௌலிங்கை இப்போது மாற்றிய தோனி, சுழல் வீரர்களான கேதார் ஜாதவ், அக்‌ஷர் பட்டேல், மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) ஆகியோரைப் புகுத்த, நியூஸிலாந்திற்கு மேலும் சோதனை வளர்ந்தது. லேத்தமைத் தவிர வேறு எந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மனும் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியவில்லை. ஜாதவ்-வின் அடுத்தடுத்த பந்துகளில் நீஷம் மற்றும் சாண்ட்னரின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நியூஸிலாந்துக்கு விழி பிதுங்கியது. அமித் மிஷ்ராவின் லெக்-ஸ்பின்னை லேத்தம் மற்றும் டக் ப்ரேஸ்வெல் (Doug Bracewell) கவனமாக ஆடினார்கள். ப்ரேஸ்வெல்லைக் கேட்ச் கொடுக்கவைத்து மிஷ்ரா வெளியேற்றியபின், 10-ஆவது ஆட்டக்காரராக இறங்கினார் டிம் சௌதீ (Tim Southee). பேட்டிங் திறமைகொண்ட வேகப்பந்துவீரர். இறங்கிய உடனேயே தன் வேலையை ஆரம்பிக்க, பௌண்டரிகள், சிக்ஸர்கள் எனத் தூள் பறந்தது. நியூஸிலாந்து ரசிகர்கள் முகத்தில் பிரகாசம். ஒரு-நாள் போட்டியில் தன் முதல் அரைசதத்தை 40 பந்துகளில் கடந்தார் சௌதீ. டென்ஷனில் விளையாடிக்கொண்டிருந்த லேத்தமின் முகமும் மலர்ந்தது. ஆனால் 55 ரன்னில் சௌதீயையும், ஒரே ரன்னில் இஷ் சோதியையும் மிஷ்ரா வெளியேற்றினார். லேத்தம் திறமையான ஆட்டத்தில் 79 ரன்னெடுத்து நாட்-அவுட்டாக நிற்க, 190 ரன்களில் தன் சோகக்கதையை 44-ஆவது ஓவரிலேயே முடித்துக்கொண்டது நியூஸிலாந்து.

ஜெயிப்பதற்கு 191 என்கிற இலக்கு இந்தியாவுக்கு ஒன்றுமில்லை. ரோஹித் ஷர்மாவும், அஜின்க்யா ரஹானேயும் ஆட்டத்தைத் துவக்கினார்கள். ஆனால் இருவரும் ப்ரேஸ்வெல் மற்றும் நீஷம் ஆகியோரின் துல்லிய வேகத்துக்கு பலியாகினர். 3-ஆம் நம்பரில் இறங்கிய துணைக்கேப்டன் விராட் கோஹ்லி நியூஸிலாந்து பௌலிங்கை அலட்சியமாக எதிர்கொண்டார். அவர் ஒருபக்கம் ஷாட்டுகளை விளையாட, மறுபக்கத்தில் அதிகம் நிலைக்கமுடியாத மணிஷ் பாண்டேயும் , தோனியும் பெவிலியன் திரும்பினர். கேதார் ஜாதவ்வின் துணையோடு 32-ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டினார் கோஹ்லி. கோஹ்லியின் அருமையான இன்னிங்ஸில் 9 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர், தர்மசாலாவில் நிறையக் குவிந்திருந்த இளம் ரசிகர்களை சீட்டிலிருந்து எகிறவைத்தன.

ஆட்டநாயகனாகத் தேர்வானார் ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா. தொடரின் முதல் மேட்ச் எளிதாகக் கைக்கு வந்ததில் தோனிக்கு ஒரே சந்தோஷம். 20-ஆம் தேதியில் அடுத்த போட்டிக்காக ஆவலாகிறது டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம். கோஹ்லியின் சொந்த ஊர். கோட்லாவில் ஏதாவது ஸ்பெஷலாக செய்யும் உத்தேசமுண்டா கோஹ்லிஜி?

**