தோல்விக்கு அடுத்த நாள் . .

பயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ.

இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு? என்னவோ ஒரு எழவு.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலை. அவ்வளவுதான். கொண்டுவா அந்த ப்ளாக் காஃபியை. ப்ரவுன்-ப்ரெட் சாண்ட்விச், டபுள், ட்ரிபிள்-எக் ஆம்லெட், சிக்கன் நக்கிட்ஸ் (chicken nuggets).. கொத்திக்கொத்தி உள்ளே தள்ளு. இந்தமாதிரிக் கொத்திக் கிழித்து சாப்பிட்டிருக்கணும் இந்த இங்கிலீஷ்காரனுங்களை.. ம்ஹூம். தப்பிச்சிட்டானுங்க. இப்போ ஒன்னும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இன்னும் நாலு இருக்கிறது. பாத்துடுவோம் ஒரு கை. இவனுங்களுக்கு நம்ம கையிலதான் சாவு. அதுல சந்தேகமில்ல..

இப்படி இருக்குமோ இன்றைய இந்திய அணியின் மூடு? நல்ல வேளையாக, துவண்டுபோய் மூலையில் உட்கார்ந்துவிடும் அணியல்ல இது. கேப்டனும் ஒரு சூப்பர்-எனர்ஜி கில்லி. காலையிலேயே அணியை நெட் ப்ராக்டீஸுக்கு இழுத்துப்போயிருப்பார். கொஞ்சம் ரிஃப்ளெக்ஷன், ரீ-க்ரூப்பிங் தேவைப்படுகிறது. இருக்கிறது இன்னும் மூன்று, நான்கு நாள் இடைவெளி. வந்துவிடலாம் மீண்டு. அடுத்த டெஸ்ட் லண்டனின் லார்ட்ஸில் (Lord’s, London). கவாஸ்கர், வெங்க்சர்க்கார், விஷ்வனாத், அஜருத்தீன், கங்குலி, திராவிட், ரஹானே என இந்தியர்கள் ஏற்கனவே நொறுக்கியிருக்கும் மைதானம்தான். பார்ப்போம் இந்தமுறை என்ன காத்திருக்கிறதென்று. கோஹ்லியைத் தாண்டியும் யாராவது ஒரு இந்திய பேட்ஸ்மன் அடித்து நொறுக்காமலா லார்ட்ஸ் டெஸ்ட் முடிவடையும்?

தோல்வி முடிவிலும் சில வலுவான ப்ளஸ்கள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு இடுப்புவலி கொடுத்த கோஹ்லியின் அபார ஃபார்ம். அஷ்வினின் புதுப்பந்துச் சுழல் தாக்குதல், 7 விக்கெட் அதிரடி. ஏனோதானோ எனப் போட்டுக் குழப்பும் அல்லது ரன்களை எதிரணிக்கு தாரைவார்க்கும் இஷாந்த் ஷர்மா, இந்தமுறை காட்டிய முனைப்பான பந்துவீச்சு. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சாய்த்த 5 விக்கெட்கள். மாறித்தானிருக்கிறார் மனிதர். இங்கிலாந்து கௌண்ட்டியான ஸஸ்ஸெக்ஸில் (Sussex) விளையாடிய அனுபவம் பந்துவீச்சை மெருகேற்றியிருக்கிறது.(பௌலிங் கோச் பாரத் அருணுக்கும் கொஞ்சம் பங்குண்டு). புவனேஷ்வரும், பும்ராவும் (Jasprit Bumrah) காயத்தில் தோய்ந்துகிடக்கிறார்கள். வேகப்பந்துவீச்சில், அடுத்த மேட்ச்சிலும் இஷாந்த், உமேஷ், ஷமிதான் இந்தியத் தாக்குதலை வழிநடத்தவேண்டியிருக்கும்.

புஜாராவை பெஞ்சில் உட்காரவைத்தது தவறு என்று பெரும்பான்மையோர் முணுமுணுக்கிறார்கள். நானும்தான். (ச்)செத்தேஷ்வர் புஜாரா (Cheteshwar Pujara) இப்போது நல்லதொரு டச்சில் இல்லை என்றாலும், எதிரணியின் பௌலர்களைக் கட்டைபோட்டு அசரவைக்கும் திறனுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட். அடுத்த மேட்ச்சுக்குக் கூப்பிடுவார்களா? அழைக்கப்பட்டால், ஷிகர் தவன், அல்லது கே.எல்.ராஹுல்- இருவரில் ஒருவருக்கு உட்கார பெஞ்ச் கிடைக்கும். எப்போதும் நின்று விளையாடும் முரளி விஜய்யும், ரஹானேயும் கூடத்தான் முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை? இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் – யாராவது ஒருவர் உள்ளே வந்தால் பௌலிங் டெபார்ட்மெண்ட் வலுப்பெறும் எனத் தோன்றுகிறது. இவர்களை இஷ்டத்துக்கும் தூக்கி அடிக்க இங்கிலீஷ்காரர்களால் முடியாது. ஆனால் பதிலாக, ஹர்தீக் பாண்ட்யாவை எடுக்கவேண்டிவருமே? ம்ஹூம்..அது சரிப்படாது. யாரைப் போடுவது, யாரைத் தூக்குவது? இந்தியக் கேப்டனாய் இருப்பதைவிட பிஹாரின் முதல்வராக இருந்துவிடலாம் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டதோ கோஹ்லிக்கு ?

*

மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா?

இங்கிலாந்தில் விமரிசையாக நடந்துவரும் மகளிர்க்கான க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதியாட்டம் இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் நடக்கவிருக்கிறது. (முந்தைய பதிவொன்றில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜைப்பற்றிப் பார்த்திருந்தோம்). ஆரம்ப மேட்ச்சில் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிரணி, நிதானம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டியாக அடித்து ஆடி, செமிஃபைனலுக்கு வந்து சேர்ந்தது. செமிஃபைனலில் எதிர் நின்றதோ நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா. ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றிருந்த அணி. இந்தியக் கேப்டன் மித்தாலி ராஜின் உழைப்பு, ஊக்குவிப்பு, தலைமைப்பண்பென பல காரணங்கள்; கூடவே அந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌரின் அட்டகாச விளாசல், இந்திய பௌலர்களின் கடும் தாக்குதல் என எல்லாம் சேர்ந்ததால், பூதாகாரமாக எதிர்த்து நின்ற ஆஸ்திரேலியாவை இந்தியா ஊதித்தள்ளிவிட்டது. (இதே ஆஸ்திரேலியா, லீக்-போட்டியில் இந்தியாவை எளிதாகத் தோற்கடித்திருந்தது.)

இந்திய மகளிர் அணி இப்போது உலகக்கோப்பையின் இறுதி போட்டியின் நுழைவாசலில், பளபளக்கும் உலககோப்பையில் கண்வைத்து நிற்கிறது. திடீர்ப்புயலென விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்தியாவை எதிர்த்துப் போட்டிபோடவிருப்பது ஹீதர் நைட்(Heather Knight) தலைமையிலான வலிமையான இங்கிலாந்து. கேப்டன் நைட்டோடு, டேமி பூமான் (Tammy Beaumont) , நத்தாலீ ஸிவர் (Natalie Sciver) போன்ற திறமை, அனுபவம் கொண்ட பேட்ஸ்மன்களைக்கொண்ட அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் ஆச்சரியமாகத் தோற்ற இங்கிலாந்து, அதற்குப் பிறகான ஏழு போட்டிகளில் வரிசையாக வென்று ஒரு கம்பீரத்துடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இதுவரை நான்கு முறை உலக சேம்பியனாக இருந்துள்ளது இங்கிலாந்து என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

க்ரிக்கெட் விளையாட்டில் – அதுவும் வித்தியாசமான திறன், ஸ்டைல், வியூகம் கொண்ட இரு அணிகள் ஃபைனலில் மோதுகையில் – முடிவைத் தடாலடியாக யூகிக்கமுயல்வது அசட்டுத்தனமாய் முடியும். இந்தப் போட்டியின் முடிவு எந்தவொரு அணிக்கும் சாதகமாகலாம் என்கிறது நிதர்சனம். இன்று எந்த அணி அதிசிறப்பாக ஆடி, எதிரியை வியூகத்தாலும் வெல்கிறதோ அதற்கே கோப்பை எனலாம். நியூஜிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிராக திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்ததுபோல், இந்திய அணியின் கேப்டனும், ஒவ்வொரு வீராங்கனையும், இந்திய வெற்றிக்காக உயிர்கொடுத்து ஆடினால் – since cricket is quite clearly a team game – இந்தியா கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சாத்தியம் வலுப்பெறும். பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் – இந்த ஞாயிறு இந்தியாவுக்கு எதைத் தரப்போகிறதென்று. இதற்குமுன் 2005-ல் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழக்க நேர்ந்தது.அந்த இந்திய அணியில் விளையாடிய சீனியர் வீராங்கனைகளாக மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி இருவர் மட்டுமே இந்திய அணியில் இருக்கின்றனர். மற்றவர்களில் பெரும்பாலானோர் 19 வயதிலிருந்து 25 வயதுவரையிலான புதியவர்கள்.

பூனம் யாதவ், ஸ்ம்ருதி மந்தனாவின் துவக்க பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தால், நல்லதொரு ஸ்கோரை இந்தியா நிறுத்த வாய்ப்புண்டு. மிடில்-ஆர்டரில் ஹர்மன்ப்ரீத் கௌர், மித்தாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா ஆகியோரின் தீர்க்கமான பங்களிப்பு இன்று மிக அவசியம். நியூஸிலாந்திற்கெதிராக, தன் முதல் போட்டியிலேயே அதிரடி பௌலிங் போட்டுக்கலக்கிய சுழல்வீராங்கனை ராஜேஷ்வரி கெயக்வாட்(Rajeshwari Gayakwad) இன்று விளையாடுவாரா? அல்லது பௌலிங் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, பாகிஸ்தானுக்கெதிராக ஐந்து விக்கெட் எடுத்து மிரட்டிய இடதுகை பந்துவீச்சாளர் ஏக்தா பிஷ்த் (Ekta Bisht), மிடில் ஓவர்களில் தடாலடியாகப் பந்துவீசும் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா (Deepti Sharma), மற்றும் பூனம் யாதவ் (Poonam Yadav)-ஆகியோரைச் சுற்றி இருக்குமா என்பது மித்தாலி ராஜ் வகுக்கப்போகும் வியூகத்திலிருந்துதான் தெரியவேண்டும். உலகக்கோப்பையை வெல்வதற்கான தகுதிகளுடன், உத்வேகத்துடனும் நிற்கிறது மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா. ஜெய் ஹிந்த் !

**