விராட் கோஹ்லி 149 !


இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston, Birmingham) இந்தியா விளையாடிவரும் தொடரின் முதல் டெஸ்ட் மேட்ச்சின் இரண்டாவது நாள்தான் நேற்று. இனி என்னென்ன வரப்போகின்றன என்பதற்கான அறிகுறிகள், அதற்குள்ளாகவே தென்பட ஆரம்பித்துவிட்டன.

2014-ல் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில், தோனியின் தலைமையில் ஆடிய இந்தியா 1-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. ஆண்டர்சன் (Anderson), ப்ராட்(Broad) போன்றோரின் ஸ்விங் பௌலிங்கைத் தாங்கமாட்டாமல் ஏற்பட்ட தலைக்குனிவு. முரளி விஜய்யைத் தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மனின் சராசரியும் 40 ஐத் தாண்டவில்லை. அந்தத் தொடரில், நடப்புக் கேப்டனான விராட் கோஹ்லியின் பேட்டிங் சராசரி 13.40. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஆண்டர்சன் திரும்பத் திரும்ப கோஹ்லியை அவுட்டாக்கி அவரது மானத்தை வாங்கிவிட்டார் அப்போது. இத்தகைய நினைவுகளோடுதான் இந்தமுறை இங்கிலாந்தில் நுழையவேண்டியிருந்தது கோஹ்லிக்கு.

இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸிற்கு பதிலாக இந்தியா நேற்று பேட்டிங் செய்தது. கோஹ்லி ஆடவந்தபோது, இந்தியாவின் நிலை பரிதாபம். முதலில் விஜய்யும், ராகுலும், பிறகு தவணும் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டிருந்தார்கள். 59 க்கு 3 விக்கெட். கோஹ்லியைக் கடித்துத் தின்னத் துடித்துக்கொண்டிருக்கும் ஆண்டர்சன். ஒரு பக்கம் ரன்கள் ஏற மறுக்க, இந்திய மிடில் ஆர்டர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்துகொண்டிருந்தன. 3 ஸ்லிப்புகள், கலி (Gully) என்று நிறுத்திவைத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வேகத்தாக்குதல் நடத்தி கோஹ்லியைத் திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தார் அவரது பரம வைரி ஆண்டர்சன். போறாக்குறைக்கு 20 வயதுப் பொடியன் ஒருவன் 3 இந்திய விக்கெட்டுகளை அனாயாசமான ஸ்விங்கில் சுருட்டி, அவன்பாட்டுக்கு வித்தை காண்பித்துக்கொண்டிருந்தான். ஸாம் கர்ரன் (Sam Curran). ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) வேறு இடையே புகுந்து கலக்கிக்கொண்டிருக்க இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. கார்த்திக் அவுட் ஆகையில் இந்திய ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 100 என வயிற்றில் புளியைக் கரைத்தது. விராட் கோஹ்லி தனி ஒரு மனிதனாக எதிர்த்து நிற்பதாகவே தோன்றியது. மூழ்கும் கப்பலின் அப்பாவிக் கேப்டனா?

ஏற்கனவே முடிவுகட்டியே வந்திருந்தார் போலும் கோஹ்லி. விஜய் பாணியில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சீறி எழும் ஆண்டர்சன் பந்துகளை அடிக்காது பின்பக்கம் போகவிட்டார். இடையிடையே ஏதோ தொடப்போய் ஸ்லிப்பிற்கு கேட்ச் பறந்தது. ஆனால், கோஹ்லிக்கோ இந்தியாவுக்கோ அப்போது நல்ல நேரமாக இருந்திருக்கிறது. தொடை உயரத்தில் வந்த கேட்ச்சைப் பிடித்து நழுவவிட்டார் டேவிட் மலான் (David Malan). பிழைத்தார் கோஹ்லி. அதற்குப்பின் வெகுநேரம் கோஹ்லியின் ஸ்கோர் 21-ஐவிட்டு நகர்வேனா என்று அடம்பிடித்தது. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா கொஞ்ச நேரம் கோஹ்லிக்கு கம்பெனி கொடுத்தார். அவர் போனதும் வந்த அஷ்வினை, காலந்தாழ்த்தாது காலி செய்தார் ஆண்டர்சன். 169-க்கு 7 விக்கெட். ம்ஹூம்! தேறாது இந்தியா என்று தெரிந்துவிட்டது. ஆனால் கேப்டன் விடுவதாக இல்லை. தடுத்தாடியும், நெருக்கித்தள்ளியும் சிங்கிளும், இரண்டுமாக ஓடிக்கொண்டிருந்த கோஹ்லிக்கு கூட ஆடுவது இருக்கட்டும், ஓடக்கூட ஆளில்லை என்றே தோன்றியது. ஏனெனில் இனி வந்தவர்கள் பேட்ஸ்மன்கள் என்று சர்வதேசத் தரத்தில் சொல்ல லாயக்கற்றவர்கள். இந்தியக் கணக்குப்படியேகூட வெறும் பௌலர்கள். முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இந்தியாவின் 9, 10, 11-ல் வரும் காகிதப் புலிகள். இவர்களை வைத்துக்கொண்டா கோஹ்லி மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்?

ஷமி விரைவிலேயே வெளியேறிவிட்டார். பின் வந்த இஷாந்த் நிற்பதற்கே தடுமாறினார். தைரியப்படுத்தி, தட்டிக்கொடுத்து, சீறும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சுக்கு பலியாக்கிவிடாமல் அவரைப் பாதுகாத்து, தானே நிறையப் பந்துகளை எதிர்கொண்டு சாமர்த்தியம் மிகக் காட்டி ஆடினார் கோஹ்லி. இந்த சமயத்தில், ஒரு பக்கமாக கோஹ்லியின்மீது ஆண்டர்சனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தவாறே இருந்தது. எப்படியாவது கோஹ்லியைத் தூக்கி வெளியே வீசாமல் ஆண்டர்சனும் போவதாக இல்லை. இன்னொரு பக்கம் ஸ்டோக்ஸ் தன் இன்–ஸ்விங்கர்களைத் தெளித்துக்கொண்டிருந்தார். இக்கட்டான நிலையிலும், சந்தடிசாக்கில் அவ்வப்போது பௌண்டரி விளாசியதில், கோஹ்லியின் ஸ்கோர் 70, 80 என மேலேறி வந்துகொண்டிருந்தது. ஆயினும், ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் 287 என்கிற முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கெதிராக, இந்தியாவால் 187 கூட எடுக்க முடியாது எனவே தோன்றியது. இஷாந்தைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தானும் அவுட்டாகிவிடாமல் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆடிய கோஹ்லி, இந்தியாவின் ஸ்கோரை 200-க்கும் தாண்டிக் கொண்டுவந்துவிட்டார். இரண்டு எல்பிடபிள்யூ-க்களில் டிஆர்எஸ்-இல் தப்பித்த இஷாந்த், ரஷீத்தின் பந்தில் வெளியேறினார். அதுவும் உண்மையில் அவுட் இல்லை என ரீப்ளேயில் தெரிந்தது. இந்திய ஸ்கோர் 217. 9 விக்கெட்டுகள் காலி. இருந்தும், கோஹ்லி இன்னும் போய்த்தொலையவில்லையே என இங்கிலாந்தின் எரிச்சல் எகிறியது. தொண்ணூறை நெருங்கிவிட்டிருந்தார் இந்தியக் கேப்டன். சதம் கூட அடித்துவிடுவாரோ?

இந்தியாவின் கடைசி ஆளாக, கையில் மட்டையுடன் வந்து நின்றார் உமேஷ் யாதவ். யாதவிடம் போய்ப்பேசித் தட்டிக்கொடுத்தார். பதற்றத்தைத் தணிக்க முயற்சித்தார் கோஹ்லி. இந்தியக் கேப்டனுக்கு, தான் பொறுப்பாக ஆடுவதோடல்லாமல், வேறென்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது மைதானத்தில்? ஃபீல்டர்கள் எனும் பெயரில், கொத்தித் தின்ன இங்கிலாந்துக் கழுகுகள் விழித்துக் காத்திருந்தன. அவர்களுக்குத் தேவை இன்னும் ஒருவிக்கெட். யார் அவுட்டாகித் தொலைந்தால்தான் என்ன? இந்தப் பதற்றத்துக்கு நடுவே இரண்டு பௌண்டரிகளைப் பறக்கவிட்டு, கோஹ்லி சதம் கடந்தார். இந்திய ரசிகர்கள்-அதில் சிலர் கொடி பறக்கவிட்டுக்கொண்டிருந்த சீக்கிய இளைஞர்கள், குழந்தைகள் குதூகலித்தனர். அவர் சதத்தைக் கொண்டாடினாரே தவிர, கவனமெல்லாம் உமேஷை வைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் ஓட்ட வேண்டும். இங்கிலாந்தின் ஸ்கோரை நெருங்கிவிடவேண்டும் என்கிற சிந்தனைதான். கோஹ்லியை விட்டுவிட்டு, உமேஷை உற்றுப் பார்த்தது இங்கிலாந்து. இதை அறிந்திருந்த கோஹ்லி ஒவ்வொரு ஓவரிலும் முதல் நாலைந்து பந்துகளைத் தானே ஏற்று ஆடினார். ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் சிங்கிள்களை எடுக்கவில்லை. எங்கே உமேஷ் வந்து இந்தப் பக்கம் நிற்க, அவரை ஓரிரண்டு பந்துகளிலேயே காலி செய்துவிடுவார்களோ என்கிற பதற்றம். ஓவரின் ஐந்தாவது அல்லது கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து அடுத்த பக்கம் ஓடுவார் கோஹ்லி. அடுத்த ஓவரையும் தானே எதிர் கொள்வார். இப்படி கயிற்றின்மேல் வித்தை காண்பித்துக்கொண்டிருந்தார் அவர். இடையிடையே லூஸாக வந்த பந்துகள் அவர் மட்டையை வேகமாகச் சந்தித்து பௌண்டரிக்குப் பறந்தன. அணிக்கு ரன்னும் சேர்த்தாக வேண்டுமே, நின்றால் போதுமா?

இப்படியாகத்தானே, ஒரு சாகஸ ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய ஸ்கோரை, 274 வரை கொண்டு வந்து, இங்கிலாந்தைத் திணறவைத்துக் காட்டினார் கோஹ்லி. 149 எனும் இங்கிலாந்துக்கெதிரான தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரில் அவுட்டானார் இந்தியக் கேப்டன். நிச்சயமாக கோஹ்லியின் அதிஜோரான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது கருதப்படும். துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் பேர்போன ஒரு தலைவனின் பங்களிப்பு. உமேஷ் யாதவுடனான, பத்தாவது விக்கெட்டுக்கு அவர் கொடுத்த பார்ட்னர்ஷிப் 57 ரன்கள். அதில் உமேஷின் பங்கு 1 ரன். மிச்சமெல்லாம் கோஹ்லியின் சர்க்கஸ்!

தொடர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியிலேயே இன்னும் 3 நாட்கள் பாக்கி. மேலும் மேலும் விரியும். காட்சிகள் அரங்கேறும். கேப்டனின் இந்த ஒப்பற்ற ஆட்டத்திலிருந்து நமது மற்ற வீரர்கள் ஏதாவது கற்றுக்கொண்டார்களா என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

**

ஐபிஎல்: சென்னையின் சூப்பர் சாகஸம்

2018-க்கான ஐபிஎல் கோப்பையை வென்று வாகை சூடிவிட்டது தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றி, இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில், இவ்வளவு எளிதாகக் கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாரகள். தோனிக்கு, மட்டையுடன் மைதானத்தில் இறங்கும் வாய்ப்பே இல்லாது செய்துவிட்டார் ஷேன் வாட்ஸன்.

முன்னதாக தோனி டாஸ் வென்று, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை உள்ளே அனுப்பியபோது, அவர்கள் சரியாக விளையாடி 180-185 –ஆவது எடுத்தால்தான் சென்னைக்கு சவால் விட ஏதுவாக இருக்கும் எனத் தோன்றியது. தேவையில்லாத ஆரம்ப ரன்–அவுட்டுக்குப்பின் கேப்டன் வில்லியம்சனும், ஷிகர் தவனும் (Shikar Dhawan) ஜாக்ரதை காட்டினார்கள். தவன் ஜடேஜாவிடம் விழுந்தவுடன், இனியும் காத்திருந்து ப்ரயோஜனம் இல்லையென்று, வில்லியம்ஸன் தன் அதிரடியை ஆரம்பித்தார். குறிப்பாக சென்னையின் டுவெய்ன் ப்ராவோவைத்(Dwayne Bravo) தாக்குதாக்கென்று தாக்கினார். அவர் பெரிய இன்னிங்ஸ் கொடுக்கப்போகிறார் எனத் தோன்றிய வேளையில், ஸ்பின்னர் கரன் ஷர்மாவின் வைட்(wide) டெலிவரியை முன்னால் வந்து தாக்க முற்பட்டு, பந்தை இழந்து, விக்கெட்டையும் தோனியின் ஸ்டம்பிங்கில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய யூசுஃப் பட்டான் உடனே காரியத்தில் இறங்கி மளமளவென ரன் குவித்தார். ஷகிபுல் ஹஸனும் (Shakib-ul-Hassan) கைகொடுக்க, ஹைதராபாத் எக்ஸ்ப்ரெஸ் வேகமெடுத்தது. ஆனால் ஹஸன் ப்ராவோவிடம் வீழ, அடுத்துவந்த ஹூடாவைப் போடா என்று விரட்டிவிட்டார் லுங்கி இங்கிடி (Lungi Ngidi). ஆனால் மறுமுனையில் ஆவேசத்தில் இருந்த பட்டானுடன், கார்லோஸ் ப்ராத்வெய்ட்டும்(Carlos Brathwaite) சேர்ந்து ரன்களை உயர்த்த, ஒருவழியாக 178 என்ற கௌரவமான ஸ்கோரில் வந்து நின்றது ஹைதராபாத்.

179 என்பது வெற்றிக்கான பெரிய டார்கெட் இல்லை சிஎஸ்கே-வுக்கு. ஊதிவிடுவார்கள் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஹைதராபாதுக்கு எதிரான சென்னையின் ட்ராக் ரெக்கார்டும் அப்படித்தானே. இருந்தும் துவக்க ஆட்டக்காரர்களான வாட்ஸனும், டூப்ளஸியும் (du Plessis), ரிஸ்க் எடுக்காது, மெதுவாக ஆடினர். டூப்ளஸி சீக்கிரம் வீட்டுக்கு ஓடிவிட, ரெய்னா சேர்ந்துகொண்டார் வாட்ஸனுடன். விரைவிலேயே மும்பையின் வான்கடே மைதானத்தில் மஞ்சள் சட்டைகள் நாட்டியம் ஆடத் தொடங்கிவிட்டன! படபட-ரெய்னா 34 ரன்களில் வெளியேறுகையில், அடுத்தமுனையில் வெடித்துக்கொண்டிருந்தார் வாட்ஸன். 13-ஆவது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, பேயாட்டம் போட்டார். 3 சிக்ஸர், 2 பௌண்டரி. நமக்கு கப் இல்லை என்பது அந்த ஓவரிலேயே ஹைதராபாதிற்குப் புரிந்துவிட்டது. அதற்குப்பின் பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் போதுமென்ற சாதாரண நிலைதான் சென்னைக்கு. 51 பந்தில் செஞ்சுரி அடித்து வாட்ஸன் அதகளம் செய்கையில், அடுத்தபக்கத்தில் டென்ஷனின்றி ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார் அம்பத்தி ராயுடு. ராயுடுவுக்கும் வேலைவைக்காமல், தோனியும் மைதானத்தில் மற்றவர்களோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தால் போதும் எனும் வகையில் வாட்ஸன் கிட்டத்தட்ட தனிஒருவனாக ஆடி, சென்னையின் கையில் மீண்டும் ஐபிஎல் கோப்பையைத் தூக்கி வைப்பார் என்பது யாரும் எதிர்பாராததுதான்.

டேவிட் வார்னர் இல்லாத நிலையில், ஹைதராபாத் அணிக்கு சிறப்பான தலைமை தந்தார் கேன் வில்லியம்ஸன். ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கௌல் போன்ற பௌலர்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு அணியை ஃபைனல்வரை கொண்டுவந்து நிறுத்திய பெருமை வில்லியம்ஸனையே சாரும். பேட்டிங்கிலும் உச்சம் தொட்டு ஆரஞ்சு கேப்பையும் வென்றார்.

முந்தைய மேட்ச்சில் 10 பந்துகளில் 34 ரன்கள், 3 விக்கெட் என ஹைதராபாதிற்காக ஒற்றையாளாகத் தாண்டவமாடிய ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டர் ரஷீத்கான், இறுதிப்போட்டியில் தன் கனவைக் கலைக்கும் அளவுக்கு குளறுபடி ஏதும் செய்யாதிருக்க, அவரை அதிகவனமாகக் கையாண்டது சிஎஸ்கே. அவரை எதிர்த்து ரன் எடுக்க முனையவுமில்லை. விக்கெட் எதையும் அவரிடம் இழக்கவும் இல்லை! அதேபோல் சென்னை அணியால் மிகவும் மதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஹைதராபாதின் புவனேஷ்வர் குமார். இவருக்குரிய மரியாதையைக் கொடுத்தே கவனமாக ஆடிய சென்னை வீரர்கள், இவருக்கும் ஒரு விக்கெட்கூட விழாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.

இரண்டு வருடங்களுக்குப்பின் பெரும் உத்வேகத்துடன் ஐபிஎல்-லுக்குத் திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ், தன் புகழ் மங்காதவாறு விளையாடியது ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தியது. குறிப்பாக சென்னையின் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் பேட்டிங்கில் அசத்தோ அசத்தென அசத்தி, தோனியின் சுமையை வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். ஆரம்ப மேட்ச்சுகளில் டெத்-ஓவர்களில்(death overs) சிறப்பாக வீசினார் டுவெய்ன் ப்ராவோ. சுரேஷ் ரெய்னா, டூப்ளஸி போன்றோரின் திறமைமிகு பேட்டிங்கும், அவ்வப்போது சென்னையைத் தூக்கி நிறுத்தியது. பௌலிங்கில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) தூள்கிளப்பினார். புது வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹர் (Deepak Chahar) முந்தைய போட்டிகள் பலவற்றில், கட்டுப்பாட்டுடன் வீசினார். ஸ்பின்னர்களில் ரவீந்திர ஜடேஜா ப்ரமாதம். ட்வீட்டரில் அடிக்கடி லொடலொடத்த ஹர்பஜன் சிங்கினால், பந்தை வைத்துக்கொண்டு மைதானத்தில் ஒன்றும் பெரிசாக செய்யமுடியவில்லை என்பதைக் கண்டுகொண்ட தோனி கடந்த போட்டியில் அவருக்கு ஒரு ஓவரும் தரவில்லை. இந்தப்போட்டியில் அவரைத் தூக்கியேவிட்டார்!

எதிர்பார்த்ததுபோலவே கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை அழகாக முன்னின்று வழிநடத்தியதோடு, இறுதியில் ஐபிஎல் கோப்பையை வென்றும் காட்டிவிட்டார். அணி நிர்வாகத்தின் வெற்றிக் கனவு ஒருபுறமிருக்க, தோனியும், தன் விமரிசகர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்ப எண்ணி, இந்த ஐபிஎல்-ஐ தன் பர்சனல் இலக்காகக் கொண்டு ஆடியிருக்கக்கூடும். 2019—ல் இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான, தோனியின் மன, உடல் அளவிலான ஆயத்த முயற்சிகளில் முதலாவதாகும் இது. அடுத்தாற்போல் வரவிருக்கிறது இங்கிலாந்தில் ஜூலையில் இந்தியா ஆடவிருக்கும் ஒரு-நாள் கிரிக்கெட் தொடர்…

**